தொழிற் பெண்டிர் – சங்க காலத்திலிருந்து இன்று வரை

பெண்கள் அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்றில் இருந்து பெண் விடுதலை என்பது இந்நூற்றாண்டு கண்ட விடியலாக இருக்கிறது. இந்தியாவின் வட மாநிலங்களில் இன்னமும் தொடர்கின்ற மூடப்பழக்க வழக்கம் மற்றும் பிற்போக்குத் தனங்களால் சரிபாதி பெண்களின் ஆற்றல் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டின் பெண்களின் விடுதலையைப் பற்றிப் பெரியார் முதற்கொண்ட முற்போக்காளர்கள் தொடர்ந்து பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்திய காரணத்தினால் பெண்கள்  கல்வியிலும் சிறந்து விளங்கி, தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் பங்களிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழர்களின் வரலாற்றைத் துண்டு துண்டாக பார்க்கும் போலித் தமிழ் தேசியவாதிகளும், இந்துத்துவத்தில் தமிழ் பண்பாட்டை கரைக்க நினைக்கும் சங்கிகளும் ஒளவையாரையும், சங்ககாலப் பெண்பாற் புலவர்களையும் சுட்டிக்காட்டி, அக்காலத்திலேயே பெண்கள் கல்வி கற்று சுதந்திரமாக வாழ்ந்தனர் என்று பேசுகின்றனர். முழுப் பொய்யை விட அரை உண்மை ஆபத்தானது என்னும் பழமொழிக்கு உரியவர்களான போலித் தமிழ்த் தேசியவாதிகள் இவ்வாறு பேசுகின்றனர். ஆனால் சங்க காலத்தில் இருந்து இன்றைய நிலை வரையான வரலாற்று உண்மையை வெளிப்படுத்த வேண்டியது தமிழ்த்தேசியத்தின் கடமையாக இருக்கிறது.   

சங்ககாலப் பெண்கள் கல்வியிலும், தொழில் முனைவோராகவும் சிறந்து விளங்கியவர்களாகவே இருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் எடுத்துக் கூறுவது உண்மையே. குயவர் மரபை சார்ந்த வெண்ணிக் குயத்தியாரும், குறவர் மரபைச் சார்ந்த குறமகள் இளவெயினி போன்ற 36 பெண்பாற் புலவர்களையும் பெற்றிருந்ததே சங்ககால தமிழ் சமூகம்.

கல்வி கேள்விகளில் மட்டுமல்ல, பண்டையத் தமிழர்களின் தொழில் வளர்ச்சியில் பெண்களின் பங்கும் மிகவும் இன்றியமையாததாக இருந்திருப்பதை சங்க இலக்கியங்கள் தெளிவாக காட்சிப்படுத்துகின்றன. மதுரை மாநகரில் இரவு பகல் பாராமல் நாளங்காடி, அல்லங்காடி எனப் பெயர் கொண்டு நடந்த தொழில் வணிகத்தில் மதுரை மாநகர்ப் பெண்கள் ஈடுபட்டதை மதுரைக் காஞ்சி சிறப்புற எடுத்துரைக்கிறது. 

“…பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து,
நொடை நவில் நெடுங்கடை அடைத்து மடமதர்
ஒள்ளிழை மகளிர் பள்ளி அயர..”

– இப்பாடல், மதுரைப் பெண்கள் பண்டங்களைக் கூவிவிற்கும் தம் நெடிய கடையை, தட்டியைத் தூக்கி நிறுத்தும் கட்டையைச் சாய்த்துவிட்டு, பெண்கள் தூங்கச் செல்வதைக் குறிக்கிறது. பெண்களின் இயல்பாக வாழ்க்கை முறையாகவே இந்த வணிக நடைமுறை இருந்திருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. ஆண்கள் கடல் கடந்து வணிகம் பார்த்து வர சென்றிருந்தாலும், கணவனை இழந்த பெண்களாக இருந்தாலும் குடும்ப தேவைக்காக பொருள் ஈட்டும் சுயமரியாதை கொண்டவர்களாக, துணிவுடன்  சங்ககாலப் பெண்கள் வாழ்ந்து வந்ததையே இவ்வரிகளின் மூலம் அறிய முடிகிறது.

‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றார் வள்ளுவர். முதன் முதலில் உழவுத் தொழிலில் ஈடுபட்டவர்கள் பெண்களே என்கிறார்கள் ஆய்வாளர்கள். குறிஞ்சி நிலங்களில் உழவுத் தொழிலில் பெரிதும் ஈடுபட்டவர்களாக பெண்களை இருந்திருக்கின்றனர். இவர்கள் உழத்தியர், கடைச்சியர் என அழைக்கப்பட்டிருக்கின்றனர். பயிர் தொழில் மட்டுமல்லாது காவல் காக்கும் வேலையும் செய்தனர்.  

ஓரிடத்திலிருந்து செய்யும் தொழில்கள் மட்டுமல்ல, பல இடங்களுக்குச் சென்று உப்பு விற்பனையும் செய்துள்ளனர். உப்புத் தொழில் செய்பவர்களை உமணர்கள் என்று அழைப்பர். தமிழர்களின் செவ்வியல் நூலான பெரும்பாணாற்றுப் படையில் ‘உமண மகளிர் ஓட்டும் வண்டி’ என்றே பாடல்கள் உள்ளன.

“…நாடக மகளிர் ஆடு களத்து எடுத்த

விசி வீங்கு இன் இயம் கடுப்பக் களிறு பிணித்து,

காடி வைத்த கலனுடை மூக்கின்

மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்ப…”

– நாடகப் பெண்கள் ஆடுகளத்துக்கு எடுத்து வந்த இறுக்கி கட்டப்பட்ட இனிய இசை தரும் மத்தளம் போல கயிற்றால் கட்டிய ஊறுகாய் ஜாடி வைத்த வண்டியின் முன்புறத்தில், குழந்தையை மடியில் சுமந்தபடி அமர்ந்திருக்கும் உமணப் பெண் வண்டியை இழுத்துச் செல்லும் எருதினை முதுகில் அடித்து ஓட்ட.. எனப் பொருள் தரக்கூடிய இவ்வரிகள் கையில் குழந்தையுடன் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று உப்பு பெற்ற பெண்ணை சுட்டிக் காட்டுகிறது.

இவ்வாறு உப்பு விற்க செல்லும் ஒரு பெண், அதற்கு கைம்மாறாக வேறு ஒரு பொருளை வாங்கும் பண்டமாற்று முறையே அன்று இருந்தது. அப்பெண் வேறு ஊருக்கு சென்று அந்த ஊரில் கட்டுப்படியாகவும் மாற்றுப் பொருளை வாங்குவதற்கு ஒப்ப வணிகம் செய்திருக்க வேண்டும். அப்படியானால் சங்க காலப் பெண்கள் இயல்பாகவே துணிச்சலும் திறமையும் கொண்டவர்களாக இருந்திருப்பதையே இவை காட்டுகின்றன. 

நெய்தல் நில சமூகத்தில் பெண்களின் பங்கே அதிகமானதாக இருந்திருக்கிறது. கடலுக்குச் சென்று ஆண்கள் பிடித்து வரும் மீன்களை சந்தைப்படுத்தி, உலர்த்தி, அதை பக்குவப்படுத்தும் திறனில் பெண்களே அதிகம் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணின் கணவன் சுறாவினால் காயப்பட்டு மரணித்த போது, அப்பெண் உப்பு வயலுக்கு சென்று குடும்பத்தைக் காப்பாற்றியதைக் குறிப்பிடுகிறது ‘…வயசுறாய் வெறித்த …’ என்னும் குறுந்தொகை பாடல். அண்ணன் கொண்டு வந்த மீனை தங்கை விற்பனைக்கு எடுத்துச் செல்வதைக் குறித்து ‘ …ஓங்குதிரைப் பரப்பின் … ‘ என்னும் அகநானூற்றுப் பாடல் தெரிவிக்கிறது. நெய்தல் நிலப் பெண்ணின் நேரடியான மீன் சார்ந்த தொழில்கள் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களித்தது.

ஆயர்குலப் பெண்களும், தங்கள் தேவைகளுக்கு மோர் விற்பதையும் இந்நூல் பேசுகிறது.

“…புகழ் வாய்க் குழிசி பூஞ் சுமட்டு இரீஇ

நாள் மோர் மாறும் …”

– ஆயர் குலப் பெண், புள்ளி புள்ளியாய் திரித்திருக்கும் வாயுடைய மோர்ப் பானையை மெல்லிய சும்மாட்டின் மீது நிறுத்தி புதிய மோரினை விற்பாள் என்பது பொருளாகும். மோர் விற்கும் தொழில் செய்திருந்தால், கறவை மாடுகளை அவள் வீட்டில் பராமரித்திருக்க வேண்டும். பல மாடுகளை வளர்த்து மேய்ச்சலில் ஈடுபட்டிருக்க வேண்டும். பால், தயிர், வெண்ணெய் போன்றவை சார்ந்த பல பொருள்களின் விற்பனையாளராக அப்பெண் இருந்திருக்க வேண்டும். சங்க காலப் புலவர் ஒருவர் எழுதியிருக்கும், ஒரு பெண் மோர் கடையும் பாடலால், அக்கால சூழலில் வாழ்ந்த பெண்களின் பல்தொழில் திறமையும் அறியமுடிகிறது.

உணவு சார்ந்த தொழில் மட்டுமல்ல, பெண்கள் உற்பத்தி சார்ந்த ஆடைத் தொழிலிலும் ஈடுபட்டு தொழில் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். இவ்வாறு தொழில் செய்தவர்கள் பருத்திப் பெண்டிர் என அழைக்கப்பட்டனர்.

.. பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து ….” – இரவில் பூனையின் சத்தத்தை கேட்ட பருத்தியில் நூல் நூற்றுக் கொண்டிருந்த ஒரு பெண் விளக்கினை எடுத்து வந்தாள். இந்த நற்றிணைப் பாடல் பஞ்சிலிருந்து நூலாக்குவதை செய்யும் பெண்களைக் குறிக்கிறது.

“ … ஆளிற் பெண்டிர் தாளிற் செய்த

நுணங்கு நுண் பனுவல் ..’

– இந்த புறநானூற்றுப் பாடல் கணவனை இழந்த கைம்பெண்கள் பருத்திப் பஞ்சிலிருந்து நூல் நூற்கும் தொழில் செய்ததை எடுத்துரைக்கிறது. பஞ்சு, நூல், ஆயத்த ஆடைகள் என தையற் பெண்டிர் வரை பெண்கள் ஈடுபட்ட தொழில்கள் சங்கப்பாடல்கள் மூலம் அறியப்படுகின்றன.

இவ்வாறு, தொல் தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கும் சங்க இலக்கியங்கள்  மூலமாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தொழில் முனைவோர்களாக வாழ்ந்த பெண்களைப் பற்றி அறிய முடிகிறது. இவ்வளவு சுதந்திரமாக கல்வி கற்று தொழில் முனைவோர்களாக வாழ்ந்த பெண்கள், பெண் விடுதலை கோரும் அளவுக்கான நிலை ஏன் ஏற்பட்டது, வெண்ணிக் குயத்தியரும், குறமகள் குறிஎயினி, இளவெயினியும் பெண்பாற் புலவர்களாகக் கொண்டு வாழ்ந்த சமூகத்தில் பெண் விடுதலை என்கின்ற நிலை ஏன் வந்தது என்பதை போலித் தமிழ் தேசியவாதிகள் புறக்கணித்து செல்கின்றனர்.  

சங்ககாலப் பெண்களின் உழைப்பும், உற்பத்திப் பொருளாக மாற்றும் ஆற்றலும், அதனை விற்பனைக்கு கடத்தும் திறனும் என வாழ்ந்த வாழ்வியல்,  உயர்வான மதிப்பு, ஊக்கம் தரும் உழைப்பு, பாகுபாடு காட்டாத தொழில் என மேன்மையான வாழ்வு வாழ்ந்த பெண்களின் நிலை தாழ்வானதற்கு காரணம் என்ன என்பதில் தான் மீதி உண்மையும் அடங்கியிருக்கிறது. 

சங்க காலத்திற்கு பின்பாக வந்த பேரரசுகள், அவர்களுக்கு குருவாக மாறிய பார்ப்பனர்கள், பார்ப்பனர்கள் கொண்டு வந்த மனுசாஸ்திரம், அதன் பின்னர் உருவான பக்தி இயக்கங்கள் என அனைத்தும் பெண்களை அடிமையாக்கும் ஆயுதங்களாக தொடர்ந்து வந்தன. இந்த சீர்கேடுகளால், சங்க காலத்தில் கல்வி கற்று, வணிகத் திறமையுடன் வாழ்ந்த பெண்கள், படிப்படியாக குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற சிந்தனைப் போக்காக பின்னர் வந்த காலங்களில் மாறிப் போனது. பெண்களைச் சுற்றி கட்டமைத்த இந்த பிற்போக்குத்தனங்கள் யாவும் ஆரியர் வருகைக்குப் பின்பே கட்டமைக்கப்பட்டன.

ஐவகைத் திணை சார்ந்து தமிழர்கள் செய்த தொழில் வகைமைகள் மனு சாஸ்திரத்தினால் சாதிகளாக பிரித்துப் பார்க்கப்பட்டன. ஏற்றத்தாழ்வுகள் வந்தன. கடல் சார்ந்த வணிகம் குறுகியது. பெண்கள் வீட்டிலிருந்தே வேலைகள் செய்ய ஆண்களே வணிகம் செய்யலாயினர். அடித்தட்டுப் பெண்களே வறுமையின் காரணமாக உயர்சாதியினர் மற்றும் இடைநிலை சாதியினருக்கு சேவகம் செய்யும் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். பண்ணைத் தொழில் செய்யும் பெண்கள் ஏளனமாக பார்க்கப்பட்டனர். உழைப்பு சுரண்டப்பட்டது. உடல் ரீதியாகவும் பாலியல் சுரண்டல்கள் நடந்தன.

வெண்ணிக் குயத்தியார், குறமகள் குறிஎயினி, குறமகள் இளவெயினி போன்ற பெண்பாற் புலவர்களின் சமூகங்களான குயவர்களும், குறவர்களும் ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்தவர்களாக இன்று மாற்றப்பட்டதற்கு, பார்ப்பனியத்தின் மனு சாஸ்திரம் கட்டமைத்த வருணாசிரம பாகுபாடு சாதியன்றி வேறென்ன காரணமாக இருக்க முடியும்? சாதியின் பேரால் இன்று பெண்கள் மீது மோசமான ஒடுக்கு முறைகளிலிருந்து ஆணவப் படுகொலைகள் வரை தொடர்வதற்கு காரணமாக ஆரியமும், ஆரியம் கொண்டு வந்த சாதியக் கட்டமைப்பும் தான் காரணமாக இருக்கிறது.

ஆரிய சிந்தனைக்கு மாற்றாக ஒரு சமூகத்தையே புரட்டிப்போட்ட திராவிட சிந்தனை சங்க காலக் கண்ணாடியாம் சங்க இலக்கியத்தை மீட்டெடுத்து வந்து தமிழர் கைகளில் ஒப்படைத்தது. சங்க கால தமிழர்களின், பெண்களின் வாழ்வியலை அறிய வைத்தது. இன்று தமிழ்ச்சமூகப் பெண்கள் தொழிற் முனைவோர்களாக, உயர் பணியாளர்களாக பல வளர்ச்சியைப் பெற்றிருக்கிறார்கள்.

பெண்கள் நவீன வளர்ச்சியுடன் வாழ்ந்தாலும், தமிழர்களின் பண்பாட்டில் ஊடுருவிய ஆரியத்திடம் இருந்து இன்னமும் தமிழர்கள் மீள முடியவில்லை. ஆரியத்துடன் சேர்ந்த இன்றைய முதலாளித்துவ சிந்தனையும், பெண்களின் உழைப்பை சுரண்டிக் கொண்டிருக்கும் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது. இரண்டும் இணைந்து படித்தவர்களிடம் மூளைச் சுரண்டலை நடத்தி உளவியலை பதட்டங்களால் நிரப்புகிறது. உழைப்புக்கேற்ற ஊதியமே, ஓய்வையோ மறுக்கிறது. இந்தக் கட்டமைப்பு உடைக்கப்பட வேண்டும்.

தற்சார்பு தொழில் செய்த சங்க காலப் பெண்கள் உரிமையுடனும், வீரத்துடனும் வாழ்ந்தனர். ரசியப் பெண்கள் போராட்டத்தினால அடைந்த பணி உரிமைகள் இன்றும் தொடர்கின்றன. இவை அனைத்தையும் உள்வாங்கிய பெண்களாய் இன்றைய பெண்களும் மாற வேண்டும்.

இன்றைய பெண்கள் சங்க காலப் பெண்களின் ஆற்றலையும்  திறனையும் உள்வாங்கிக் கொள்ள, அக்காலத் தமிழர்களின் பொருண்மியங்களை விளங்கிக் கொள்ள, மார்ச் 15, 16- ஆம் தேதிகளில் தமிழ்த் தேசியப் பெருவிழாவை, தமிழர்களின் பல துறைகளை ஆய்ந்த தமிழறிஞர்கள் கொண்டு மே பதினேழு இயக்கம் நடத்துகிறது. அனைவரும் வருக, குறிப்பாக பெண்கள் கலந்து கொள்ள வேண்டிய முக்கியமான நிகழ்வாக இப்பெருவிழா நடக்க இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »