கமலா ஹாரிஸை ஏன் கொண்டாட முடியாது!

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிறவெறிக்கு ஆதரவாகவும், குடியேறிகளுக்கு எதிராகவும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செயல்படுவதால், முற்போக்காளர்கள் மத்தியில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் கூட்டணிக்கு மாபெரும் ஆதரவு உள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று முற்போக்காளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமலா ஹாரிஸை கொண்டாடி வருகின்றனர்.

கமலா ஹாரிஸ் தந்தை ஜமைக்காவை சேர்ந்த கறுப்பினத்தவர் என்பதால் கறுப்பின பெண் என்றும், அவரது தாயார் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் தெற்காசியாவை சேர்ந்தவர் என்பதும், இந்த பின்னணியில் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் அவரை கருப்பினத்தவர்கள் முதற்கொண்டு பெண்ணியவாதிகள் வரை கொண்டாடி  வருகின்றனர். சிறுபான்மையினரின், குடியேறிகளின் பாதுகாவலர் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக இந்தியாவை சேர்ந்த ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பெருமைப்பட பேசிவருகின்றனர். இதற்கெல்லாம் தகுதியானவர் தானா கமலா ஹாரிஸ்?

கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பணக்கார பார்ப்பன குடும்பத்தின் வம்சாவளியை  சேர்ந்தவர். அவரது பெற்றோர் சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் போது தான் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். பிற கருப்பினத்தவர்கள் போன்றோ, குடியேறிகள் போன்றோ எந்தவித சமூக பிரச்சனைகளையும், பொருளாதார பிரச்சனைகளையும் சந்திக்காதவர் தான் கமலா ஹாரிஸ். ஏழ்மையை அறிந்திடாதவர். இப்படிப்பட்டவரை ஒரு சராசரி கருப்பினத்தவரோடோ, இல்லை குடியேறிவரோடோ ஒப்பிடவே முடியாது. அதற்கான எந்த தகுதியும் இல்லாதவர் என்பதை தான் அவரது கடந்தகால செயல்பாடுகளும் உணர்த்துகின்றன.

சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றிய போது, போதைப் பொருள் வழக்குகளில் மிகக்கடுமையாக நடந்துகொண்டார். ஆனால் ஒரு வழக்கிற்கு ஆதாரமாக கருதப்பட்ட ஒரு போதைப் பொருளின் தன்மையை மாற்றிய குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. தி ப்ரேக்ஃபாஸ்ட் கிளப் என்னும் வானொலி நிகழச்சியில் பங்கேற்ற போது மரிஜுவானா எனப்படும் கஞ்சா போன்ற போதை புகையிலையை புகைத்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். மரிஜுவானா பயன்படுத்தியாக கருப்பினத்தவர்களை மிக அதிக அளவில் கைது செய்யப்படுகின்றனர். கலிபோர்னியா மாகாண செனட்டராக இருந்த போது மரிஜுவானா பயன்பாட்டை சட்டரீதியாக அங்கீகரிப்பதை மறுத்துவிட்டார். அதே போல், அமெரிக்க வரலாற்றில் கறுப்பர்களை அதிகளவில் பாதித்த மரண தண்டனையை கமலா ஹாரிஸ் பலமுறை ஆதரித்து பேசியுள்ளார். எந்த ஒரு முற்போக்காளரும் மரண தண்டனையை ஆதரிக்கவே மாட்டார்கள்.

இரண்டு முறைக்கு மேல் சிறிய குற்றங்களை செய்தால் கூட ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் கலிபோர்னியா மாகாணத்தில் நடைமுறையில் இருந்தது. இதில் வெள்ளையர்களை காட்டிலும் 12 மடங்கு கருப்பினத்தவர்களே பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். இந்த சட்டத்தை மாற்றக்கூடிய சட்டத்திருத்தத்தையும் கமலா ஹாரிஸ் எதிர்த்தார். இச்சட்டத்தால் தவறுதலாக பாதிக்கப்பட்ட டேவிட் லார்சன் என்பவரை, பெரும்பான்மை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மாகாண வழக்கறிஞர் விடுவிக்க, அதன் மீது வழக்கு தொடர்ந்து அந்த இளைஞரை மீண்டும் சிறையில் அடைத்தார். இப்படியாக மக்களை பாதிக்கக்கூடிய கொடுஞ்சட்டங்களை ஆதரிப்பவர் எப்படி மனித உரிமைகளை காப்பவராக இருக்க முடியும்?

கத்தோலிக்க சபையில் பாலியல்ரீதியாக தொடர் பாதிப்புக்குள்ளான சிறுவர்களின் வழக்கில் மாவட்ட வழக்கறிஞராக ஒத்துழைப்பு வழங்க மறுத்துவிட்டவர் கமலா ஹாரிஸ். ஒரு திருநங்கை சிறைவாசி பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடையை உண்டாக்கியவர். இதனால் அந்த திருநங்கை ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்த சிறைவாசிகளால்  பாலியல் துன்புறுத்துதலுக்கு உள்ளானார். அரசு சிறையில் இருந்த சிறைவாசிகளை தனியார் சிறைக்கு மாற்றும் $730 மில்லியன் டாலர் திட்டத்தை அதிகாரம் இருந்தும் தடுக்காமல் விட்டவர். ஹைட் திருத்தம் எனப்படும் கருக்கலைப்பு திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கப்படுவதை இரண்டு முறை எதிர்த்துள்ளார் கமலா ஹாரிஸ். பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக அங்கீகரித்ததை எதிர்த்தார். இதனால் பாலியல் தொழிலாளிகளின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் கேள்விக்குறியானது. பாலியல் ரீதியான உரிமைகளை, சிறைவாசிகளின் உரிமைகளை மறுப்பது தீவிர வலதுசாரி சிந்தனையோட்டம் கொண்டவரிடமே இருக்கும்.

தகுந்த சான்றுகள் இல்லாமல் குடியேறிய பள்ளி சிறுவர்களை, அவர்கள் எவ்வித தவறுகள் செய்திருக்காவிட்டாலும் பெற்றோரிடமிருந்து பிரித்து நாட்டின் குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் கொள்கை முடிவை கமலா ஹாரிஸ் ஆதரித்தார். கட்டாயக்கல்வி அடிப்படையில் தகுந்த காரணங்கள் இல்லாமல் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இது ஒற்றை பெற்றோரை கொண்ட ஏழ்மையான கறுப்பின சிறுவர்களை மிக அதிகமாக பாதித்தது. சிறைச்சாலைகளை குறைத்து பள்ளிகளை அதிகமாக்க குரல் கொடுத்த செயற்பாட்டாளர்களை கிண்டல் செய்தார்.

ஹெர்பாலைஃப் என்னும் எம்.எல்.எம். நிறுவனத்தின் மீதான வழக்கை சரியாக விசாரிக்காமல் இருந்தார் என்றும், அந்நிறுவனத்தாருடன் தனிப்பட்ட முறையில் நட்புறவோடு இருந்தார் என்றும் அந்நிறுவனம் மக்களை சுரண்டுவதை அனுமதித்தார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது. அந்நிறுவனம் தொடர்புடைய நபர்களிடமிருந்து நிதி பெற்றதும் பின்னர் அம்பலமானது. சான் புருனோ என்னும் நகரில் 8 பேர் உயிரிழந்த எரிவாயு வெடிவிபத்திற்கு காரணமான பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் நிறுவனம் மீதான வழக்கை நடத்தவும் மறுத்துவிட்டார். அந்நிறுவனத்தின் ஆலோசகர்கள் தான் பிற்பாடு கமலா ஹாரிஸ் அதிபர் போட்டிக்கான பிரச்சாரத்தை நடத்தியவர்கள்.

டொனால்ட் ட்ரம்ப்பை நிறவெறியர் என்று இப்போது சொல்லும் கமலா ஹாரிஸ், 2011-2015 காலகட்டங்களில் ஆயிரக்கணக்கான டாலர்களை ட்ரம்ப்பிடம் இருந்தும், அவரது மகள் இவாங்கா ட்ரம்ப்பிடம் இருந்தும் நன்கொடையாக பெற்றுள்ளார். அதுதான் அவரது அரசியல் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. சிரியாவுக்கு எதிரான போரை அதிகரிக்கும் ட்ரம்ப்பின் முடிவை ஆதரித்துள்ளார். இராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் ட்ரம்ப்பின் முடிவு மீதான ஓட்டெடுப்புகளில் இரண்டு முறை ஆதரவாக வாக்களித்துள்ளார். அமெரிக்கா-ஈரான் போர் சூழல் உண்டாக காரணமாயிருந்த ஈரான் மீதான பொருளாதார தடை விதிக்கும் மசோதாவை கமலா ஹாரிஸ் இணைந்தே கொண்டுவந்துள்ளார். இஸ்ரேல் சார்புடைய ஒரு ஊடகம் நடத்திய விழாவில் அரசியல்வாதிகள் யாரும் பங்கேற்காத நிலையில், கமலா ஹாரிஸ் மட்டும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பங்கேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசியுள்ளார். பாலஸ்தீன பிரச்சனையை அவர் சார்ந்த ஜனநாயக கட்சியில் சிலர் இடதுசாரி தன்மையோடு அணுகும் வேளையில் தான் அவர் இப்படி பேசியுள்ளார்.

இவ்வாறாக கமலா ஹாரிஸின் கடந்த கால செயல்பாடுகள், அரசியல் நிலைப்பாடுகள் எதுவும் முற்போக்குத்தனமாக இருந்ததில்லை. கருப்பர்களுக்கு எதிரானதாகவும், கருப்பினத்தவர்கள் பாதிக்கப்படக்கூடிய வகையிலுமே அவரது கொள்கை செயல்பாடுகள் இருந்துள்ளன. கருப்பினத்தவர்களின் உரிமைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, குடியேறிகளுக்கு எதிராக, சிறைவாசிகளுக்கு எதிராக, LGBT எனப்படும் பாலின பேதமற்ற உறவை கொண்டவர்களின் உரிமைகளுக்கு எதிராக, மனித உரிமைகளுக்கு எதிராக, பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக, போர் மீது நாட்டம் கொண்டவராக, சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக செயல்படும் கமலா ஹாரிஸ், முற்போக்காளர்கள் ஆதரிப்பதற்கு எவ்வித தகுதியும், முற்போக்கு சிந்தனையும் கொண்டவரல்ல. இதனை எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும்படி சொன்னால், கமலா ஹாரிஸ் ஒரு பார்ப்பனியவாதி!

Translate »