கேரளா கல்வித்துறையில் இந்துத்துவத்திணிப்பு

கேரளாவில் இருக்கிற ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் எம் எஸ் கோல்வாக்கர் பெயரை சூட்டுவதாக மத்திய அரசு மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்திருக்கிறது. ஒரு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிற்போக்குத் தன்மை உள்ள ஒருவரின் பெயரை சூட்டுவதா? என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

பிஜேபி 2014 ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து அரசு நிறுவனங்களுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயரை சூட்டுவதும், பாரம்பரியமான ஊர்களின் பெயர்களை மாற்றுவதுமான செயல்களை திட்டமிட்டு செய்கிறது. உதாரணமாக உத்திரபிரதேசத்தில் ஆட்சியை பிடித்த பிஜேபி, முதலில் கங்கை யமுனை, சரஸ்வதி என இந்த மூன்று ஆறுகளும் ஒன்றாக சங்கமிக்கும் சிறப்பு வாய்ந்த ’அலகாபாத்’ என்ற மாவட்டத்தின் பெயரை ‘பிரயக்ராஜ்’ என்று மாற்றிவிட்டது. தற்போது ஐதரபாத்தின் பெயரை மாற்றவேண்டுமென்று சமீபத்தில் தெலுங்கானாவில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது பிஜேபி வெளிப்படையாகவே பேசியது. அதேபோல கேரளாவில் இதற்கு முன்பாக 2017இல் ஆர்எஸ்எஸ் அமைப்பு மாநில அரசிடம் அனுமதி கேட்காமல் கேரளாவில் இயங்கும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்பது புத்தகங்களை வழங்கியிருந்தது. அந்த புத்தகங்களில் இந்துத்துவ பிற்போக்குக் கருத்துக்களை விதைக்கும் புத்தகங்களாக இருந்தது. இதற்கு பெற்றோர்களும் அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அது பாஜகவால் பின்வாங்கப்பட்டது.

தென்னிந்தியா முழுவதையும். ஆர்.எஸ்.எஸ் இன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மிகத் தீவிரமாக ஆர்எஸ்எஸ் பிஜேபி வேலை செய்து வருகிறது. அவர்களின் திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் பிஜேபி ஆட்சியை பிடித்து விட்டது ஆந்திராவில் கிட்டத்தட்ட அவர்களது கூட்டணி ஆட்சியை போல அமைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இயங்குகிறது. அவர்களது திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாத நெருக்கடியை கேரளாவில் சந்திக்கிறார்கள். ஆகவேதான் அங்கு இந்துத்துவ மதவெறி கருத்துக்களை விதைக்கும் வேலைகளை திட்டமிட்டு செய்கிறார்கள் அதன் ஒரு பகுதிதான் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பெயரை சூட்டுவதும், ஆர்எஸ்எஸ் கருத்துக்களை பள்ளிப் புத்தகங்களில் இணைப்பது போன்ற செயல்கள். இது போலவே சபரிமலை அய்யப்பன் கோவிலை மையப்படுத்தி பிரச்சனையை உருவாக்கி அதன்மூலம் இந்துத்துவத்திற்கு ஆள் சேர்க்கும் வேலையையும் பிஜேபி அரசு செய்ய முயன்று தோற்றுப் போனது.

இதுவெல்லாம் அவர்கள் தங்களது ஆக்டோபஸ் கரங்களை தென்னிந்தியாவில் அகல விரிப்பதற்கான வேலையே. இதுபோன்ற ஆர்எஸ்எஸ் பிஜேபி யின் சதித்திட்டங்களை புரிந்துகொண்டு அம்பலப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. தமிழகம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆர்எஸ்எஸ் பிஜேபியின் செயல் திட்டங்களுக்கு இரையாகி வருகிற இந்த காலகட்டத்தில் இதனை புரிந்து கொண்டு நாம் செயலாற்றினால் மட்டுமே இந்துத்துவ பாசிசத்திடமிருந்து நாம் தப்பிக்கலாம்.

Translate »