அமெரிக்காவும், ஈரானின் அணு ஆயுத கூட்டு ஒப்பந்தமும்

அமெரிக்க தேர்தலில் தன்னை “ஏமாற்றி” தோல்வியடைய வைத்து தனது அதிபர் பதிவிக்காலத்தை முடிவுக்குத் தள்ளிவிட்டனர் என்று ஆற்றொணா துயரத்தில் உள்ளார் அதிபர் டொனால்டு டிரம்பு. இறுதி நாட்களில் தன் பெயர் நிலைக்க காரியம் செய்யவேண்டுமென நினைத்தாரோ என்னவோ, கடந்த வாரத்தில் தனது கேபினட் குழு ஆலோசனையில் ஈரான் மீது இராணுவ தாக்குதல் நடத்துவதற்கான ஆதரவு திரட்ட முடியாமல் தோல்வியுற்றார்.

நவம்பர் 28ம் தேதி, ஈரானின் அணு ஆராய்ச்சி தொழில்நுட்பத்தின் தந்தையாக கருதப்படும் மூத்த அணு விஞ்ஞானி மோக்சென் பக்ரிசாதே அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கடந்த சனவரி மாதம் ஈரானில் மிகவும் மதிக்கப்பட்ட ஈரானிய புரட்சி காவல்படையின் தளபதி காசெம் சுலைமானி அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தளபதி சுலைமானியின் படுகொலைக்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் படைதளம் மீது ஒரு அடையாள தாக்குதலை ஈரான் நடத்தியது. இதில் அமெரிக்க படையினருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில், தற்போதைய அணு விஞ்ஞானி பக்ரிசாதேவின் படுகொலை ஈரான் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் ஆட்சி புரியும் தீவிர தேசியவாத அரசால் நாட்டின் முக்கிய பிரமுகர்களை பாதுகாக்க முடியவில்லை என்று மக்களின் ஏளனத்திற்கு ஆளாகியுள்ளது. அமெரிக்காவின் ஒப்புதலுடன் இஸ்ரேல் தான் அணுவிஞ்ஞானி பக்ரிசாதேவை படுகொலை செய்துள்ளதாக ஈரான் அரசு குற்றம்சாட்டியது. இதற்கு ஈரான் தக்க பதிலடி அளிக்கும் என்றும் கூறியது.

உலகின் 2ம் பெரிய இயற்கை எரிவாயு புதைந்துள்ள ஈரானை ஏகாதிபத்திய அமெரிக்கா தனது பிடியில் கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அதேநேரம், பிராந்திய சக்தியாக ஈரான் வளருவதை விரும்பாத இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவும் அமெரிக்காவுடன் கைகோர்த்து ஈரானை கட்டுப்படுத்த முயல்கின்றன. இதற்கு எதிர்வினையாக லெபனானின் எசபொள்ளா ஆயுத குழுக்களை இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் புரிய ஆதரிக்கிறது. சவூதி அரேபியாவுக்கு எதிரான தாக்குதலுக்கு ஏமனில் உள்ள அவுத்தி பழங்குடியின ஆயுத குழுவை ஆதரித்து வருகிறது. இந்த போட்டியில் ஈரானின் ஆதிக்கத்தை அமெரிக்காவால் கட்டுப்படுத்த இயலாமல் போனதும் 2012ல் பொருளாதார தடை கொண்டு வருவதற்கான ஒரு காரணம். பிறகு, 2015 கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திட நேரிட்டது.

ஈரானின் அணு ஆயுத கூட்டு ஒப்பந்தம்

2015ல் பிரிட்டன், பிரான்சு, சீனா, ரசியா, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா கூட்டாக ஈரானுடன் ஆயுத உற்பத்திக்கான அணு செறிவூட்டல் கட்டுப்பாடு கூட்டு ஒப்பந்தத்தை (“Joint Comprehensive Plan of Action”) கையெழுத்திட்டன. ஒப்பந்த நிபந்தனைப்படி ஈரான் தனது அணு ஆராய்ச்சியை அணு ஆயுதங்கள் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடாது. மற்றும், சர்வதேச அணு ஆய்வாளர்களை சோதனைக்கு அனுமதிக்க வேண்டும் என்பவையாகும்.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக 2012 முதல் மேற்குலக நாடுகள் விதித்த கடும் பொருளாதார தடைகளால் ஈரான் நொடிந்து போனது. பணக்கார நாடுகளின் இந்த தடைகளை நீக்கிட ஈரான் 2015ல் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

 

[2015 சீனா, பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, ரசியா, அமெரிக்கா – ஈரான் கூட்டு ஒப்பந்தம். (pic:BBC)]

ஆனால், 2017ல் அதிபர் டிரம்ப் வந்தநாள் முதலே ஈரானுடன் அதிபர் ஒபாமா கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஈரானுக்கு சாதகமானது என்று கடுமையாக விமர்சித்தார். ஈரான் ஒப்பந்த விதிமுறைகளை மீறி அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக குற்றம்சாட்டி, 2018ல் ஈரானுடனான கூட்டு ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக ரத்து செய்தார். மேலும், ஈரான் மீதான தடைகளை முன்னிருந்ததைவிட கடுமையாக்கி ஈரானின் சர்வதேச சொத்துக்களையும் முடக்கினார். இதனால், ஈரான் முன்பைவிட மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளானது.

 

 

இன்றைய நெருக்கடி

இந்நிலையிலும், ஈரான் தனது அணு ஆயுத உற்பத்தி பணிகளை நிறுத்தவில்லை, இஸ்ரேல் மற்றும் சவுதிக்கு எதிராக சிரியா, லெபனான் மற்றும் ஏமன் நாடுகளில் தொடர்ந்து ஆயுத போராட்டக்குழுக்களை வளர்த்துவிடுவதையும் நிறுத்தவில்லை  என்று டிரம்ப் குற்றம்சாட்டினார். ஆனால், இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது ஈரான் – சீனா இருநாடுகளின் வலுத்து வரும் வணிக மற்றும் இராணுவ உறவுகள்.

மேற்குலகின் தடைகளால் நொறுங்கிப்போன ஈரானுக்கு சீனா ஆதரவு கரம் நீட்டியது. உலகின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் முதலிடத்தில் இருக்கும் சீனாவிற்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு மிகமலிவான கச்சா எண்ணெய் விநியோகம் தேவைப்படுகிறது. ஈரானால் இந்த மலிவான கச்சா எண்ணெய்யை வழங்கிடமுடியும். இதற்கு கைமாறாக, சீனா அடுத்த 25 ஆண்டுகளில் சுமார் ரூ.28 லட்ச கோடிகளை ஈரானின் வங்கி, தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், போக்குவரத்து, துறைமுகம் இன்னும் பலதுறைகளில் முதலீடு செய்யும்.

எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக, சீனாவின் “யூரேசியா” (மத்திய கிழக்காசியா மற்றும் ஐரோப்பா) சந்தையை தரைமார்கமாக சாலை மற்றும் ரயில் மூலமாக இணைக்கும் “பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்” திட்டத்தில் ஈரானின் நிலப்பரப்பு இன்றியமையாததாகும். இராணுவரீதியாகவும் சீனா ஈரானில் கால் பதித்துவிட்டது. சீனாவை ஒடுக்கும் அமெரிக்காவின் முயற்சிகளில் ஈரான் பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

ஆகையால், ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்பபோவதாக கூறி அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் இராணுவ தளவாடங்களை மத்திய கிழக்காசியாவில் குவித்து வந்தார்.

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா சட்டமன்றத்தின் ஆதரவு கிடைக்காமல் பின்னடைவை சந்தித்த வேளையில் தான் ஈரான் தளபதி சுலைமானி மீது ஆளில்லா விமான தாக்குதலை டிரம்ப் நடத்தினார். பதிலுக்கு ஈரான் தாக்குதலில் இறங்கினால் போர் நடத்த அமெரிக்கா தயாராக இருந்தது. ஏற்கனவே, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈரானுக்கு முழுவீச்சு போருக்கு செல்வது சாத்தியமில்லை. ஆகவே, நெருங்கி வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் சனநாயக கட்சி ஆட்சிக்கு வந்தால் 2015 ஒப்பந்தத்தை அமெரிக்கா மீண்டும் ஏற்றுக்கொள்ளும் என்று கணக்கு போட்டு ஈரான் பொறுமை காத்தது.

இச்சூழலில் தான் ஈரான் கணக்கு போட்டப்படி சனநாயக கட்சி ஆட்சியை பிடித்தது.

ஈரானுடனான அமெரிக்காவின் அணு ஆயுத ஒப்பந்தம் ஈரானை மத்தியகிழக்கு ஆசியாவில் மீண்டும் வலுபெறச்செய்யும் என்று இஸ்ரேல், சவூதி அரேபியா அஞ்சுகின்றன. இந்த ஒப்பந்தம் மீண்டும் உயிர்ப்பித்துவிடக்கூடாது என்பதில் இருநாடுகளும் உறுதியாக உள்ளன. ஆகவே, எப்பாடுபட்டாவது அமெரிக்கா – ஈரான் அணு ஒப்பந்தம் நிறைவேறாமல் தடுக்கும் பணியில் இறங்கி இருந்தன.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஈரானின் அணுவிஞ்ஞானி பக்ரிசாதேவின் புகைப்படத்தை பலமுறை பொது நிகழ்வுகளில் காட்டி இவரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார். நவம்பர் 23ம் தேதி இஸ்ரேல் பிரிதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பொம்பியோ சவூதி அரேபியா சென்று இளவரசர் மொகமது பின் சல்மானை சந்தித்தனர். அடுத்த 5 நாட்களில், நவம்பர் 28ம் தேதி, ஈரானின் அணுவிஞ்ஞானி பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய பிறநாடுகளும் அமெரிக்காவின் ஒருதலைபட்சமான நடவடிக்கை குறித்து பதிலளிக்காத சூழலில், தீவிர தேசியவாத ஈரானிய அரசு சட்டசபையில் அணு ஆயுத உற்பத்திக்கு தேவையான விகிதத்திற்கு அணு செறிவூட்டல் தொடங்குவோம் என்ற மசோதாவை இயற்றியது. இந்த மசோதா கூட்டு அணு ஒப்பந்தத்தை முன்னிருந்து நடத்திய ஈரானிய மிதவாதிகளிடையே அதிருப்தியை உருவாக்கியது. கூட்டு ஒப்பந்தத்தை காப்பாற்றும் நோக்கில் ஈரானிய அதிபர் அசான் ருகாணி புதன்கிழமையன்று இந்த மசோதாவை நிராகரித்துவிட்டார். கூட்டு ஒப்பந்தத்தை உயிர்பித்தால் தனது அரசியல் பொருளாதார செல்வாக்கை மீட்டெடுக்க முடியும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

அதே புதன்கிழமை, அமெரிக்க பத்திரிகையில் வெளியான புதிய அதிபர் ஜோ பைடன் “ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் ஈரான் 2015 நிபந்தனைகளை முற்றிலும் கடைபிடிக்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளார். இஸ்ரேல், சவூதி அரேபியா, ஈராக் போன்ற மத்திய கிழக்காசிய நாடுகளுடன் இணக்கமான உறவை பேணுவதற்கு ஈரான் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் புதிய முன்நிபந்தனைகள் ஈரானில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “2015 ஒப்பந்தத்தை அமெரிக்கா மீண்டும் ஏற்றுக்கொண்டு தடைகளை நீக்கினால் ஈரானும் ஒப்பந்த நிபந்தனைகளை கடைபிடிக்கும்” என்று ஈரானிய வெளியுறவு துறை அறிவித்துள்ளது.

 

[அமெரிக்காவிற்கு எதிராக ஈரானில் போராடும் மக்கள். திசம்பர் 3, 2020. (pic: Al Jazeera )]

2015 ஒப்பந்தத்தை முற்றிலும் மறுத்து வரும் இஸ்ரேல் மற்ற அரபு நாடுகள் இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை திருத்தி மிக கடுமையாக்காவிட்டால் இதை அனுமதிக்கமாட்டோம் என்று கூறி வருகின்றன. கடந்த மாதங்களில் ஈரானின் அணு ஆராய்ச்சி நிறுவனங்களில் தொடர்ந்து இஸ்ரேலின் உளவுப்பிரிவு மொசாத் பல வெடிவிபத்துகளை ஏற்படுத்தியதும் கவனிக்கத்தக்கது.

மறுபுறம், டிரம்ப் தனது பதவி காலத்திற்குள் பொருளாதாரத்தில் நொடிந்து போயுள்ள ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட கனவு காண்கிறார். அதன் விளைவாகவே, அமெரிக்காவின் துணையுடன் இந்த துணிச்சலான படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஈரானிய அரசு பலவீனமாக்கி உள்நாட்டு கிளர்ச்சியை உருவாக்கி ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தும் முயற்சிகளாகவே இவை நோக்கப்படும்.

கோவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உலக நாடுகள் மீளாத நிலையில் போர் சூழல் இந்த நெருக்கடியை மேலும் மோசமாக்கும். ஈரானில் இருந்து இந்தியா பெருமளவில் இயற்கை எரிவாயுவை மலிவான விலைக்கு இறக்குமதி செய்துவந்தது. மேலும், ஈரானில் சாபர் துறைமுகம், ரயில் தடம் அமைப்பது, எரிவாயு எடுக்கும் திட்டம் போன்ற முக்கிய திட்டங்களை அமெரிக்காவின் பொருளாதார தடையின் காரணமாக இந்தியா இழந்துள்ளது.

2015 கூட்டு ஒப்பந்தம் உயிர்ப்பித்திட இனியும் சாத்தியமில்லை என்ற புள்ளிக்கு ஈரானை நகர்த்துவதும், பொருளாதார சரிவால் வலுத்து வரும் உள்நாட்டு போராட்டங்கள் வலுப்பெற செய்வதும் ஈரானில் ஆட்சி மாற்றம் அல்லது மத்திய கிழக்காசியாவில் போர் மூள்வதற்கான அனைத்து சூழலையும் ஏற்படுத்தும். இதை கருத்தில் கொண்டே, அணுவிஞ்ஞானியின் படுகொலைக்கு சிறிது நேரத்திற்கு முன்னரே, அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நவம்பர் 28ம் தேதி பாரசீக வளைகுடா கடற்பகுதிக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. இத்தகைய சூழலில் அமெரிக்காவில ஜோ பைடன் பதவியேற்புக்கு பிறகு கூட ஈரானுடனான சுமூகமான உறவு நீடிக்குமா என்பது சந்தேகத்திற்குரியது தான் என்று ஈரான் அரசு கூறியிருக்கிறது.

Translate »