பெரியாரின் பார்வையில் காதல்

“Enjoyment without Responsibility” –  பொறுப்பைக் கடந்து காதலி. கற்பிதங்களால் திணிக்கப்பட்ட பொறுப்புகளைத் துறந்து, அதன் ஊடாக உருவாகும் ஆதிக்கங்களை அணுக விடாது, காதலை காதலர்கள் அனுபவியுங்கள் என்பதே இதன் விளக்கம். அடிமைத்தனம் வளர்க்கும் காரணிகளைத் தகர்த்து எறிந்து விட்டு காதலியுங்கள் என்கிறார் பெரியார். காதலை பல கோணங்களில் அலசிய அவரை இந்நாளில் நினைவு கூர்வதே பொறுத்தமானது. 

உலகின் உளவியல் நிபுணர்களே வியக்கும் ஆய்வாளராக வாழ்ந்தவர் பெரியார். அவர் எழுதிய கருத்துக்களை, நுனிப்புல் மேயும் அறிவிலிகளான மதவெறி சங்கிகள், போலித் தமிழ்த்தேசியவாதிகள், சாதியவாதிகள் போன்ற ஆதிக்க வெறியர்கள், தங்களின் ஆதாயத்திற்காக சில வரிகளை எடுத்துக் கொண்டு, அதன் ஊடாக, பெரியாரை கலாச்சார சீரழிவாளர் என  நிறுவ முயல்கின்றனர். ஆனால் பெரியார், தகாதவற்றை கலாச்சாரமாக திணித்து வைத்து, அதற்குள் காதலை அடக்கி வைத்திருப்பதை ‘காதல்’ என்கிற தலைப்பில் விளக்குகிறார்.

மற்றவர்களின் திருப்தியிலும், சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதற்கெல்லாம் “இது காதல் அல்ல, அது காதலுக்கு விரோதம், அது காம இச்சை, இது விபச்சாரம் என்பது போன்ற அதிகப்பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒருவித பொறுப்பும் இல்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப்பட்டவர்கள் கூற்றையும், கூறும் காதலையும் சற்று பார்த்துவிடலாம் என்றே இதைப் பற்றி எழுதலானோம்” – காதல் என்கிற தலைப்பை எடுத்ததற்கான நோக்கத்தையும் கூறிவிடுகிறார் பெரியார்.

“எப்படி இருந்தாலும், எந்த காரணத்திற்கு ஆனாலும், ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்றும் மூன்றாமவர்கள் யாராயினும் பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது” என்கிறார் பெரியார். குடும்பத்திலிருந்து சமூகம் வரையிலாக இருக்கும் எவரின் தலையீடும் அடுத்தவர் காதலில் இருக்கவேகூடாது என்று பெரியார் நூற்றாண்டுக்கு முன்பே எழுதுகிறார். எவருக்கும் அடுத்தவர்கள் காதலில் நுழைய உரிமை கிடையாது என்பதை அழுத்தந்திருந்தமாகக் கூறுகிறார். ஆனால் கலாச்சார அவதாரமெடுக்கும் சங்கி மதவெறியர்கள் சமூகத்திலும், ஆணவப் படுகொலை செய்யும் சாதிய வெறியர்கள் குடும்பத்திலும் இன்னும் நஞ்சாக வாழ்ந்து கொண்டு தானிருக்கின்றனர். 

பொறுப்பற்றவர்களின் அதிகப்பிரசங்கத்தனத்தையும், தலையீடையும் சாடும் பெரியார், அதே போல காதலர்களின் வாழ்க்கையின் பயணத்தின் தடைக்கல்லாக உணர்வும், அறிவும் தடம்மாறி அமைந்து விடக்கூடாது என்பதையும் ஆய்வுகளால் விழிப்பூட்டுகிறார்.  காதலை அறிவின்பாற்பட்டு உணரவும், உணர்வின்பாற்பட்டு அறியவும் ‘காதல்’ என்ற தலைப்பில் எழுதிய பெரியாரின் வார்த்தைகளே போதுமானதாகும். இருவருக்கிடையில் தோன்றும் காதலை தெய்வீகத் தன்மை, புனிதத் தன்மை எனக் கூறிவிட்டு, அதனுள்ளாக  அடிமைச் சங்கிலி எந்தெந்த வகைகளில் மாட்டப்படுகிறது என்பதையும் பெரியார் விளக்குகிறார்.

அன்பு, ஆசை, நட்பு என்பதைத் தவிர காதலுக்கான தனித்தன்மைகள் இல்லை என உறுதிபடக் கூறுகிறார்.“…. உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மையொன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் – பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பம் இல்லாமல், திருப்தி இல்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்க வேண்டும்” என்கிறார்.

வாழ்க்கையின் ஆரம்பத்தில் இன்பமாக ருசித்த காதல், சிறிது காலம் கழித்து தொல்லையாக மாறினால் அந்தக் காதலை முறித்து விடுவது பாவமல்ல, அதனை புனிதமானது என்று நினைத்துக் கொண்டு, அதிலிருந்து விடுபட முடியாத நிர்ப்பந்தத்துடன் வாழ வேண்டாம், அது பயனற்றது என கண்டிக்கிறார்.

மணவிலக்கு என்பதை பெருங்குற்றமாக ஒருவர் உளவியலும் குற்றவுணர்வாக நினைக்கும்  அளவுக்கு இருப்பதை விலக்கும் வகையில், “மனிதனுக்கு தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்பு கொள்வதும், பிரிவதும் இயற்கையாகும். பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்து விடுவதும், உறுதி ஏற்பட்ட பிறகு தவறுதலை திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவஞானம் இல்லாத போது கட்டுப்பட்டு விடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ள முயல்வதும் இயற்கை அல்லவா” என உளவியல் நிபுணராக பிரிதலுக்குரிய காரணங்களை கடக்க அறிவுறுத்துகிறார். இன்றைக்கு விவாகரத்து மூலமாக அவற்றையெல்லாம் எளிதாக கடக்கும் நிலையிலான சட்டங்கள் ஏற்பட்டு விட்டன. அன்றைய காலகட்டங்களில், குறிப்பாக பெண்கள் மணவிலக்கும் பெற முடியாத அளவுக்கு அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.

காதலின்றி வாழும் ஒரு வாழ்க்கையிலிருந்து விடுபட முடியாத அளவிலும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் மற்றும் மணவிலக்கு பெற்றவர்கள் வேறு ஒரு திருமணத்திற்கு  நுழைவதை தடுக்கும் வகையிலும் இருந்தவற்றையெல்லாம் பெரியார் பட்டியலிடுகிறார்.

“ இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள், “காதல் என்பது அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல” என்றும், “அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பது வேறு, காதல் வேறு” என்றும், அது “ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும்” என்றும், அதுவும் “இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்” என்றும், “அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை” என்றும், அதுவும் “ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரம் தான் இருக்க முடியும்” என்றும் அந்தப்படி “ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்த காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்த காதல் மாறவே மாறாது” என்றும், பிறகு “வேறொருவரிடத்தில் காதல் ஏற்பட்டு விட்டால், அது காதலாயிருக்க முடியாது; அதை விபச்சாரம் என்று சொல்ல வேண்டுமே ஒழிய, அது ஒருக்காலும் காதலாகாது” என்றும், மற்றும் “ஒரு இடத்தில் உண்மைக்காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரிடமும் காமமோ, விரகமோ, மோகமோ ஏற்படாது” என்றும் சொல்வதாக குறிப்பிடுகிறார்.

பெரியார் இவற்றைக் கூறிய காலம் என்பது, கைம்பெண் மறுமணம் என்பதை சமூகக்குற்றமாக கருதிய காலகட்டமாகும். சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து, அப்பெண் கைம்பெண் ஆகிவிட்டால் அந்தப் பெண்ணை வேறு மணம் புரிய விடாமல் தடுப்பதற்காக, சமூகத்தின் உளவியலில் புகுத்தப்பட்ட இவ்வகையான கற்பிதங்களை அன்றே வார்த்தை எறிகணைகளால் தகர்த்தவர் பெரியார். பெரியாரின் இந்த சிந்தனையே பாவேந்தர் பாரதிதாசனின் கவிவரிகளுக்கு காரணமானது.

“ வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள் மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ” – எனக் கேள்வியெழுப்பினார் பாவேந்தர். இன்று கைம்பெண் மறுமணம் என்பது இயல்பாகி விட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சமூகத்தில் மீது தாக்கம் செலுத்திய பலவகையிலான கற்பிதங்களை விளக்கி மணவிலக்கு பெற்றவர்களின் மறுமணம், கைம்பெண் மறுமணம் முதலியவற்றிற்கு தூண்டுகோலாக இருந்த பெரியாரைத்தான் நூற்றாண்டுகள் கழித்தும் ஆணாதிக்கம் அகலாத பிறவிகள் திட்டிக் தீர்க்கின்றனர்.

காதல் என்பதன் இலக்கணத்தை எவரோ புகுத்தி வைத்ததற்கேற்றபடி வற்புறுத்தி ஏற்றுக் கொள்வதையும் பெரியார் சாடுகிறார். அதற்கு உதாரணங்களாக, இப்படி இருந்தால்தான் பக்திமான் என்பதை ஏற்று விபூதி பூசிக் கொள்ளும் பக்திமான்கள், தூக்கத்தில் கால் ஆடுமே என்று சொன்னால் அதற்கேற்ப காலாட்டும் குழந்தைகள், கால் பார்த்து நடப்பது தான் கற்பு என்றதற்கேற்ப நடந்து கொள்ளும் பெண்கள் என இவற்றையெல்லாம் எடுத்துக்காட்டி,‘“ …. உண்மையில் காதலர்களானால் இப்படி அல்லவோ இருப்பார்கள் என்று சொல்லிவிட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்து விட்டால் அது போலவே காதலர்கள் என்பவர்களும் நடந்து தங்கள் காதலை காட்டிக் கொள்கிறார்கள், இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தை எல்லாம் போடுகிறார்கள்…” – என்பதன் மூலம் பாவனைகளைப் பூசிக் கொண்டு வாழும் அர்த்தமற்ற காதலை கண்டிக்கிறார். 

பெரியார் பொதுவாக எவராலோ எழுதப்பட்ட இலக்கண வரையறைப்படி காதல் என்கிற உணர்வினை அணுகியவரல்ல. “காதல் என்பது மன இன்பத்திற்கும், திருப்திக்குமே ஒழிய,   பாவனையாக அன்பு, ஆசை, நட்பு இருப்பதாகக் காட்டுவதற்கு அல்ல” என சுட்டிக் காட்டுவதன் மூலமாக இன்பமும், திருப்தியும் இல்லாவிட்டாலும், எவரோ வகுத்து வைத்தது என சகிப்புணர்வுடன் ஏற்றுக் கொள்வதையே சாடுகிறார் பெரியார். 

“காதல் என்பது ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ளல், நடவடிக்கை, யோக்கியதை, மனப்பான்மை, தேவை, ஆசை வழியில் உண்டாவதாகும். இவை மாறக்கூடியது. அப்படி மாறினால் அன்பு, ஆசை, நட்பு என்பவற்றால் ஏற்படும் காதலும் மாறுவது இயல்பு” – எனவும் தெளிவுபடுத்துகிறார்,

பெரியார் ஆதிக்கம் அற்ற, பகுத்தறியும் இனநலமும் நிறைந்திருக்கும் குடும்பம் என்கிற கட்டமைப்பு உருவாக வேண்டும் என கனவு கண்டவர். ஆணாதிக்கமும், சாதிய ஆதிக்கமும் குவிந்திருக்கும் குடும்பக் கட்டமைப்புகளையே எதிர்த்தவர். இன்றைய நிலையில் குடும்பம் என்பது ஆணாதிக்க விளைச்சலின் சிறு கருவி என்றால், சமூகமானது பெரிய எந்திரமாக  ஆணாதிக்கத்தை உற்பத்தி செய்கிறது. ஆனால் புராண, இதிகாச கற்பிதங்களால் சாதி, மத பாகுபாடுகள் உருவானதற்கு முன்பான அன்றைய தமிழ் சமூகத்தில் காதல் என்பது இயல்பானதாக இருந்தது. அதற்குப் பின்னரே பல அடக்குமுறைகளைப் புகுத்தினர்.

காதல் என்கிற பெயரால் தனி நபர்களின் மன விடுதலை அடக்கப்பட்டதே, பல்வேறு பிரச்சனைகளின் தோற்றுவாய் என்பதை பெரியாரைப் போல தமிழ் சமூகத்தில் உடைத்துப் பேசிய வேறெவரையும் காண்பது அரிது.

இறுதி வரை பெரியார் தனிமனிதரின் உளவியல் இன்பத்தை தருவதே காதலாயிருக்க முடியும் என்றே பேசுகிறார். ஆனால் சாதிய, மதவாத, போலித் தமிழ்த்தேசியவாத தற்குறிகள் அவர் உடலியல் இன்பத்தைப் பேசுவதாக திரித்து, இளைஞர்களின் மூளையை பாழ்படுத்தி பெரியாரைப் பற்றியான தப்பிதங்களை ஊட்டுகின்றனர். ஆதிக்கமற்ற, சமத்துவ சமூகம் அமையும் தொலைநோக்கையே பெரியார் கனவு கண்டார். 

தனிமனித உளவியல் முதற்கொண்டு சமூகத்தின் உளவியல் வரையிலாக, காதல் செலுத்தும் தாக்கம் குறித்து  ஆய்வுகள் செய்த பெரியாரின் பார்வை என்பது பரந்த நோக்கத்தில் அலசப்பட வேண்டியது. உளவியல் நிபுணர்கள் விவாதிக்கும் துறை சம்பந்தமானது. ஆணாதிக்க மூளைகளின் குரூரத்திற்கு எட்டாதது. போலித் தமிழ்த் தேசியவாதியான சீமானின் சிறு மூளை அறிய முடியாதது. 

ஆதிக்கம் அற்ற சுதந்திரமே காதலாக இருக்க முடியும். ஆதிக்கம் புகும் இடத்தில் விலகலே தீர்வாகும் என்கிற புரிதலையே ‘காதல்’ என்கிற தலைப்பில் பெரியார் எழுதியவைகளின் சாராம்சமாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »