
மக்களவையில் இஸ்லாமியர்களின் சொத்தை அபகரிக்கும் சட்டத்தை இயற்றிய கையோடு, மாணவர்களின் உயிர் பறிக்கும் நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஒன்றிய பாஜக அரசு நிராகரித்துள்ளது. நமது கல்வி நிதியை மட்டுமல்லாது கல்வி உரிமையையும் பறித்து வைத்துக்கொள்ளும் பாஜகவின் தமிழர்கள் மீதான பாகுபாடு மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
ஒட்டுமொத்த தமிழர்களும் நீட் எதிர்ப்பு நிலையில் இருந்த போதும், நீட் வேண்டாமென தீர்மானம் இயற்றி தமிழ்நாடே நிராகரிக்கும் போதும், நீட் தேர்வு நடத்துவதில் பின்வாங்கப் போவதில்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கிறது மோடி அரசு. இதற்கான பின்னணி காரணங்களாக பல்லாயிரம் கோடிகள் புழங்கும் பயிற்சி நிறுவனக் கொள்ளையும், அதற்கு தூணாக பாஜக நிற்பதும் பற்றி தொடர்ந்து தமிழ்நாடு அம்பலப்படுத்துகிறது. நீட் தேர்வு வினாத்தாள் மோசடி, ஆள் மாறாட்ட மோசடி, மருத்துவ சீட்டுக்கான சேர்க்கையில் மோசடி, பண மோசடி என பல மோசடிகள் விரிவாக அம்பலமாகிக் கொண்டிருப்பதும் தொடர்கிறது.
நீட் தேர்வின் அடிப்படைக் கட்டமைப்பிலே பல குளறுபடிகளும், மோசடிகளும் இருப்பதைக் குறித்தான விவாதங்கள் பல அறிவுசார் தளங்களில் நடைபெறுகிறது. வெகுமக்களை எளிதில் சென்று சேரக்கூடிய திரைத்துறையில் இதற்கான படைப்பு தேவை என்பதை உணர்ந்து இயக்குநர் எஸ்.பி. சுப்புராமன் அவர்கள் இயக்கிய படமே ‘அஞ்சாமை’. நீட் தேர்வு மூலம் ஒரு சாமானிய நடுத்தர குடும்பத்தில் உருவாகும் வாழ்வியல், உளவியல் நெருக்கடிகளை எடுத்துக் காட்டும் படமாகவும், அதற்கான சட்டப் போராட்டத்தை எடுத்துக் கூறும் படமாகவும் 2024ம் ஆண்டு அஞ்சாமை திரைப்படம் வெளிவந்தது.
இப்படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே அரசாங்கத்தின் மேல் புகார் கொடுக்க ’அருந்தவம்’ என்னும் ஒரு மாணவன் வருகிறான். அதைக் கேட்டு காவலர்கள் அதிர்கிறார்கள். ஒரு நேர்மையான காவல் அதிகாரி அவன் கதைகளை கேட்கிறார். அவன் புகாரின் நியாயம் உணர்ந்து அந்த காவல் அதிகாரி அம்மாணவனின் அப்பா இறப்பதற்குக் காரணமான அரசு, அதிகார மட்டங்களைச் சார்ந்த அனைவர் மீதும் FIR (முதல் தகவல் அறிக்கை) பதிய உத்தரவிடுகிறார். அதனால் உருவாகும் உயரதிகாரிகளின் நிர்ப்பந்தத்தால் பதவியை உதறி விடுகிறார். பின்னர் அவர் அந்த மாணவனின் வழக்கை ஏற்று நடத்தும் வழக்கறிஞராக மாறுகிறார்.

நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் தன் மகனை சேர்க்கும் தந்தையின் இழப்புகள், அந்த இழப்புகளால் அவருக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள், நீட் தேர்வெழுதும் மையமாக மகனுக்கு கொடுக்கப்பட்ட ஜெய்ப்பூர் வரை செல்லும் நிலையில் அவருக்குள் ஏற்படும் உடல் மற்றும் உள் அளவிலான சோர்வுகள், பதட்டங்கள், அதனால் அவருக்கு நேரும் மரணம் என காட்சியமைப்புகள் முதல் பாதி வரை விரிகின்றன.
நீட் தேர்வு கொன்ற அனிதாவின் மரணம் குறித்த செய்தியைப் பார்க்கும் போது, நீட் தேர்வு எழுதச் செல்லும் ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோர்களுக்கும் ஏற்படும் பரிதவிப்புகளை, நீட் பயிற்சி நிறுவனத்திற்கான கட்டணத்திற்காக தனது நிலத்தை அடகு வைக்கும் போது பிள்ளைகளின் மருத்துவக் கனவுக்காக கடன் வாங்கும் பல அப்பாக்களின் மன உளைச்சல்களை, எங்கோ ஒரு வடநாட்டு மூலையில் பயிற்சி மையம் கொடுத்து அலைக்கழிக்கப்படும் பிள்ளைகளின், பெற்றோர்களின் பதட்டங்களை இப்படத்தில் வரும் ஒரு அப்பா கதாபாத்திரத்தின் ஊடாக உணர்த்தி விடுகிறார் இயக்குனர்.
இப்படத்தின் கடைசி 40 நிமிட நீதிமன்றக் காட்சிகளே, நீட் தேர்வினால் மாணவர்களுக்கு நேர்ந்த அநீதியை அம்பலப்படுத்தும் காட்சிகளாக இருந்தன. அருந்தவம் தனது தந்தையான ’சர்க்கார்’ சாவிற்கு அரசாங்கமே காரணம் என கொடுக்கப்பட்ட புகார் நீதிமன்றம் வருகிறது. விசாரணையும் நடக்கிறது. நீதிமன்ற விசாரணையில் வழக்கறிஞர் கேட்கும் நறுக்கான வசனங்கள் சிறப்பானவை.
“மாணவர்களைக் கொன்று கொண்டிருந்த மருத்துவ நீட் தேர்வு இப்பொழுது பெற்றவர்களையும் கொல்ல ஆரம்பித்திருக்கிறது” என வழக்கறிஞர் வாதாடும் காட்சியில், உண்மையில், மாணவர்களின் தந்தைகள் இறந்து போன சம்பவங்களே வசனமாக வைக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.
இன்று வரை தமிழ்நாட்டில் மட்டும் 30-க்கும் அதிகமான, பள்ளிப் படிப்பில் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் இத்தேர்வினால் தற்கொலை செய்திருக்கின்றனர். இந்த 2025 வருடத்தின் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 3 மாணவிகள் நீட் தேர்வின் அழுத்தத்தால் தற்கொலை செய்துள்ளனர். ராஜஸ்தானில் உள்ள கோட்டா எனும் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்கள் 50 பேருக்கும் மேல் தற்கொலை செய்துள்ளனர். தமிழ்நாட்டில் மாணவர்களின் நீட் தேர்வுக்காக அலைகழிப்புகளுக்கு ஆளான அப்பாக்களுக்கும் மரணம் சம்பவித்தது.

திருத்துறைப் பூண்டி மாணவனான கஸ்தூரி மகாலிங்கத்திற்கு கேரளாவில் தேர்வு மையத்தை கொடுத்ததால் அலைக்கழிப்புக்கு ஆளான தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணம் அடைந்தார். பண்ருட்டியை சார்ந்த சீனிவாசன் என்பவர் தனது மகள் சுவாதியை புதுச்சேரி மையத்துக்கு அழைத்து வந்த அலைக்கழிப்பால் மாரடைப்பில் மரணம் அடைந்தார். சிவகங்கையை சேர்ந்த கண்ணன் மதுரையின் தேர்வு மையத்திற்கு தனது மகளை அழைத்துச் சென்று வரும் வழியில் மாரடைப்பால் மரணம், பல்லாவரத்தில் மாணவர் ஜெகதீசன் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள, அடுத்த நாளே அவர் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். பத்திரிக்கை செய்திகளில் பதிவான மரணங்கள் மட்டுமே இவை. நீட் தேர்வு உருவாக்கிய மன உளைச்சலால் அதற்குப் பிறகான நாட்களில் இறந்து போனவர்கள் பற்றி செய்திகளில்லை.
தேர்வு மையத்தின் உள்ளே செல்லும் முன்பு மாணவர்களின் சட்டையைக் கிழித்து, மாணவிகளின் உள்ளாடை வரை அவிழ்க்கச் செய்து, துப்பட்டாவை எடுத்து விட்டு, தலைவிரி கோலமாக்கி, பெருங்குற்றவாளிகளைப் போல சோதனைகளை செய்து, அவர்களை உளவியலாக பாதிப்புக்குள்ளாக்கி, தேர்வு அறைக்கு அனுப்பிய காட்சிகள் யாவும் அனைவரும் செய்திகளில் பார்த்து அதிர்ந்தவையே. அவைகளை எல்லாம் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
நீதிமன்ற விசாரணைக்கு நீட் தேர்வு மையம் ஒதுக்கும் அதிகாரி, கல்வி அமைச்சர், ரயில்வே அதிகாரி, மாணவர்கள் மீதான சோதனைக்கு காரணமான அதிகாரி, நீட் தேர்வு இயக்குநர் ஆகியோர் அழைக்கப்படுகின்றனர். அவர்களிடம் வழக்கறிஞர் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்பதும், அவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறுவதும் படத்தில் மட்டுமல்ல, உண்மையில் நீதிக்காக நடந்திருக்க வேண்டிய விசாரணை இவையாகத் தானிருந்திருக்க வேண்டும். மாணவர்களும், பெற்றோர்களும் நீட் வேண்டாம் என தெருவில் வந்திருக்க வேண்டும். ஆனால் டெல்லி அரசின் சர்வாதிகார விதிகளுக்குள் தங்களை சுருக்கிக் கொண்டு வளைந்து மக்கள் வாழப் பழகியதின் இயல்பினால், நீட் தேர்வில் தங்களுக்கு நடந்த அநீதியையும் கடந்து விட்டனர்.
இன்று நீட் தேர்வு தகுதி என்னும் அடைமொழியுடன் பல மோசடிகளுடன் நடைபெறுகிறது. பள்ளிக்கல்வி தகுதியற்றவையாக ஆக்கப்பட்டு விட்டது. நீட் தேர்வு நிறுவனத்தின் பல ஓட்டைகளினால் வினாத்தாள் கசிய விடப்பட்டு பல லட்சம் மாணவர்களின் உண்மையான தகுதிகள் நிராகரிக்கப்பட்டு, அடுக்கடுக்கான மோசடிகளால் உள் நுழைபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது.

சங்கல்ப் எனப்படும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி மையம் தொடர்ந்த வழக்கினில் நீட் நம் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டது. பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் நிறுவனமும் இணைந்து எடுக்கும் முடிவினை மாநிலத்தின் மீது உச்சநீதிமன்றமும் சுமத்தி விட்டது. 2013-ல் நீட் தேர்வு கூடாது என வந்த தீர்ப்புக்கு பின்பு 2016-ல் பாஜக அரசும், இந்திய இந்திய மருத்துவ கவுன்சிலும், சிபிஎஸ்இ பாடத்திட்ட நிறுவனமும் சேர்ந்து நீட் தேர்வு நடத்தத் தயார் என நீதிமன்றத்தில் அறிவிக்கும் அளவிற்கு பாடத் திட்டங்களை தயாரித்து வைத்திருந்த மறைமுக மோசடிகள் நடந்தேறின.
இன்னமும் நீதிமன்ற படிக்கட்டுகளில் நீட் தேர்வு விலக்கிற்கு நீதி கிடைக்கவில்லை என்பதைத்தான் இப்படத்தின் இறுதிக் காட்சியின் தீர்ப்பும் உணர்த்தியது. பாஜக அரசு ஆளும் வரை நீட்டுக்கு விலக்கும் கிடைக்காது என்பதைத் தான் மக்களவையில் நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டதும் உணர்த்துகிறது.
இப்படம் அமேசான் OTT தளத்தில் காணக் கிடைக்கிறது. நீட் தேர்வு கொடுமைகளை சந்தித்துக் கடந்தவர்களிடையில் அதைப் படைப்பாக்க வேண்டும் எனத் துணிந்து படமெடுத்த இயக்குநருக்கும், படக் குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும்.
நீட் தேர்வின் மூலம் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் பல்லாயிரம் கோடிக்கணக்கான ஊழல்கள், மாணவர்களின் மரணங்கள், பல மாநிலங்களில் நடைபெற்ற மோசடிகள், நீட் தேர்வு நடத்தும் நீட் தேர்வு நிறுவனத்தின் குளறுபடிகள் குறித்து மே 17 இயக்கக்குரலில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புகள் :