நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் “ஜனநாயகம்”

சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வினை எதிர்த்து தமிழ்நாடு கடுமையாக போராடி வரும் நிலையில், நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஆண்டுதோறும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதுவரை நீட் தேர்விற்கு 12 பேர் பலியாகியுள்ள நிலையில் தற்போது, சென்னை குரோம்பேட்டையைச் சார்ந்த மாணவரான ஜெகதீஸ்வரன் என்பவரும் அவரது தந்தையும் பலியாகி இருப்பது தமிழ்நாட்டின் கூட்டு மனசாட்சியை உலுக்கியிருக்கிறது.

இரண்டுமுறை பயிற்சி மையத்துக்குப் பணம் செலுத்திப் படித்து, நீட்  தேர்வெழுதி 400 மதிப்பெண் எடுத்த நிலையிலும்  தனது மருத்துவ கனவு நிறைவேறவில்லை என்பதால் மனமுடைந்துபோன மாணவர் ஜெகதீஸ்வரன் ஆகஸ்டு 12, 2023 அன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதனையடுத்து, மகனை பிரிந்த துயரம் தாளாத அவரது தந்தை செல்வசேகர் ஆகஸ்டு 13, 2023 அன்று நள்ளிரவு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு காரணமாக தந்தை-மகன் உயிரை மாய்த்துள்ள இச்சம்பவம் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. தனது மகன் நீட் தேர்வின் காரணமாக தான் தற்கொலை செய்துகொண்டார் என்று ஜெகதீஸ்வரனின் தந்தை பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி நிறுவனங்களுக்கு (Coaching Centre) பல லட்சங்களையும் பயிற்சிக்கென பல ஆண்டுகளையும் செலவு செய்யத் தயாராக இருப்பவர்களுக்கே மருத்துவ கனவு என்கிற நிலையை நீட் எனும் நுழைவுத் தேர்வு உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் இதில் போட்டியிடும் அளவுக்கு காலச் சூழலோ பொருளாதார வசதியோ இல்லாமல் பிற படிப்புகளை தேர்ந்தெடுக்கும் நிலையும் இருக்கிறது. அதையும் மீறி போட்டியிடும் மாணவர்களும் அவர்களது குடும்பமும் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் தனியார் கல்லூரியில் சுமார் 25 இலட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் நிலையில், நம் பிஞ்சுகளின் கனவு பொய்த்து போகும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தன் இயலாமையை நினைத்து பெற்றோர் ஒருவரே தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் நம் கண்முன் நடந்திருக்கிறது.

இப்படி மருத்துவ படிப்பிலிருந்து நடுத்தர மற்றும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்படுவது எதிர்கால தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பினை கடுமையாக பாதிக்கக் கூடியதாக மாறும்.

மாணவர்களை சந்தைப்படுத்தும் நீட்

நீட் தேர்வென்பது மிகப்பெரிய வியாபாரமாக ஆகியிருக்கிறது. தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட நீட் பயிற்சி மையங்கள் இருக்கின்றன. நாளுக்கு நாள் அவை அதிகரித்தபடியே இருக்கின்றன. 2021-22 நிதிநிலை அறிக்கையில் திமுக அரசு உயர்கல்விக்கு ஒதுக்கிய நிதி 5340 கோடி ரூபாய். ஆனால், தமிழ்நாட்டின் நீட் பயிற்சி மையங்கள் ஆண்டு ஒன்றிற்கு ஈட்டும் வருமானம் 5750 கோடி ரூபாய். தமிழ்நாட்டின் உயர்கல்விக்கான ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம். ஆகையால், தனியார் பயிற்சி நிறுவனங்கள் செல்வாக்கு மிக்கவையாக உள்ளன.

கோடாவில் நீட்டிற்கான பயிற்சி கட்டணம்

இவையனைத்தும் மருத்துவக் கனவோடு இருக்கின்ற மாணவர்களிடமிருந்தும் அவர்களின் ஏழை எளிய நடுத்தர குடும்பத்திடமிருந்தும் கொள்ளையடிக்கப்படும் பணம்.  இது ஒருபுறமிருக்க, இந்த அதிகப்படியான படிப்புச் செலவு கூடவே மற்றொரு சீரழிவையும் கொண்டு வருகிறது. மிகப்பெரிய அளவில் பணம் செலவு செய்து போட்டித் தேர்வில் பயிற்சி பெற்று மருத்துவராகி வெளியேறும் மாணவர்களிடமிருந்து, கடந்த காலத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த, சமூகநீதி மருத்துவர்களோ சமூக நீதி மருத்துவ கட்டமைப்போ உருவாக வாய்ப்பில்லை என்பதுதான் அது.

மாணவர் ஜெகதீஸ்வரனின் இழப்பினையடுத்து அவரது நண்பர் ஒருவர் அளித்த பேட்டி மிக முக்கியமானது. அதில், ஜெகதீஸ்வரனை விடவும் குறைவான மதிப்பெண்களை பெற்றிருந்தாலும்  பணம் கொடுத்து தனியார் கல்லூரியில் மருத்துவ சீட்டைப் பெற முடியும் என்கிற குடும்ப பொருளாதார சூழல் தனக்கு இருந்தது.  அதனால் தனது மருத்துவ கனவு சாத்தியப்பட்டது. ஆனால், ஜெகதீஸ்வரனுடைய குடும்ப பொருளாதார நிலை அவ்வாறு இல்லாததால் அவர் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் அரசுக் கல்லூரியில் சேரமுடியாமலும் தனியார் கல்லூரியில் சேர்ந்துப் படிக்க பண வசதி இல்லாமலும் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். பணம் கொடுத்து மருத்துவ சீட்டினைப் பெறுபவர்கள் மருத்துவரான பின்னர் அந்தப் பணத்தை எடுக்கத்தான் பார்ப்பார்கள். அவர்களுக்குச் சேவை மனப்பான்மை எப்படி வரும்? என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மருத்துவம் என்பது ‘சேவை’ என்கிற மனப்பான்மை ஏழை எளிய கிராமப்புற நடுத்தர வர்க்க மாணவர்களால் உருவான ஒன்று. எந்த குழந்தையை கேட்டாலும், “நான் வளர்ந்து, மருத்துவராகி எல்லாருக்கும் இலவசமாக மருத்துவம் பார்ப்பேன்” என்று சொல்லும் ஊர் இது. ஆனால் இன்று பார்ப்பன கூட்டம், “மாணவர்களிடம் சாத்தியப்படாத கனவுகளை சொல்லி வளர்த்து பிறகு ஏமாற்றத்திற்கு தள்ளாதீர்கள்” என்று பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழ் குழந்தைகளின் மருத்துவ கனவுகளை சீரழிக்க நீட் தேர்வை கொண்டுவந்த பாஜக இந்துத்துவம் இன்று அவர்களின் ‘மருத்துவ கனவுகளை கைவிட சொல்லுங்கள்’ என்று சொல்கிறது.

பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் தன்னிறைவான மருத்துவ வசதி கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் இருக்கின்றது. கிராமப் புற ஏழை எளிய மற்றும் நடுத்தர சூழலில் வளர்ந்து மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களாலேயே இது சாத்தியப்பட்டு இருக்கின்றது. ஆனால் இவர்களை சந்தைக்கான நபர்களாக மாற்றும் வேலையை நீட் தேர்வு செய்கிறது.

ஒருபுறம் பயிற்சி மையங்களென்றால் மறுபுறம் பள்ளிகள். எட்டாம் வகுப்புவரை ட்யூசன் நடத்தக் கூடாது என்பது கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி விதியாக இருக்கிறது. ஆனால் நீட் தேர்விற்கு 6-ஆம் வகுப்பில் இருந்தே பல பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பதினொன்றாம் வகுப்பில் இருந்தே நீட்டிற்கான பயிற்சி கட்டணம் வசூலிப்பது மிகச் சாதாரணமாக ஆகியிருக்கும் நிலையில், அப்பள்ளிகளில், பதினொன்று பனிரெண்டாம் வகுப்புக் கல்வி என்பது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. மாணவர்கள் கல்விக் கற்பதற்கு பதிலாக போட்டித் தேர்விற்கு பயிற்சி பெறுபவர்களாக மாறுகிறார்கள். இது கல்வி எனப்படுவது என்ன என்பதை கேள்விக்கு உட்படுத்துகிறது.

தகுதியும் பார்ப்பனியம்

தற்போது உயிரிழந்த மாணவர் ஜெகதீஸ்வரன் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வில் 400 மதிப்பெண்கள் பெற்றவர். இருப்பினும் அவரால் மருத்துவக் கல்லூரியில் சேர இயலவில்லை. இந்நிலையில் மாநில பாடத்திட்டத்திலும், அரசுப் பள்ளியிலும், தமிழ் வழியிலும் பயின்ற மாணவர்களின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 600க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்வாகிய மாணவர்களை அழைத்து ஆகஸ்டு 12, 2023 அன்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.

அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரது தந்தை அம்மாசியப்பன், நீட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டி கோரிக்கை விடுத்தார்.

அவரது மகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார். ஆனாலும் தனது மகளைப் போல உரிய பயிற்சியை பெறமுடியாமல் பலரது மருத்துவக் கனவு சிதைக்கப்படுகிறது என்கிற காரணத்தால் ஆளுநரிடம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட அவர் கோரினார். ஆனால் அதற்கு பதிலளித்த ஆளுநர், தான் நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் ஒப்புதல் அளித்து கையெழுத்து இடப்போவதில்லை எனவும் அது மாணவர்களின் தகுதி திறனை கேள்விக்குள்ளாக்கும் எனவும் தெரிவித்தார். நீட்டிற்கு முன்னதாக மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையைவிட தற்போது அதிக அளவில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்றார்.

ஆளுநர் நடத்திய பாராட்டுவிழா 600க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்டதாகும்.  நீட் தேர்வில், அரசுப் பள்ளி மாணவர்களின் இந்த ஆண்டின் அதிகபட்ச மதிப்பெண்கள் 569.  அதனால், அக்கூட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் யாரும் இல்லை என்பது ஆளுநருக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

நீட்டிற்கு முன்பும் பின்பும் – ஏகே ராஜன் அறிக்கை

ஏ.கே .ராஜன் அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்படும் புள்ளிவிவரம் ஒன்றும் நீட் தேர்விற்கு பிறகான அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை பற்றி கூறுகிறது.

அதன்படி, நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதற்குப் பின்னர் அரசுப் பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை, நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட பிறகு மூன்றில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது. நீட் தேர்விற்கு முன்னர் வருடாவருடம் 500க்கும் மேற்பட்ட தமிழ்வழியில் படித்த மாணவர்கள் மருத்துவம் படித்துவந்த நிலையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டவுடன் 2017-18ல் 56ஆக குறைந்தது. 2020-21ல் தனியார் பள்ளியில் இருந்து 82 பேரும், அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 % இட ஒதுக்கீட்டின்படி 217 பேரும் என மொத்தமாக 299 பேர் மட்டுமே தமிழ்வழியில் கற்றவர்கள் தேர்வானார்கள். இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டும் முந்தைய நிலையிலிருந்து அது பாதிக்குப் பாதியைத்தான் நெருங்க முடிந்துள்ளது.

ஒரு மருத்துவரின் தகுதியை மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெறும் போதும் அவரது மருத்துவ பயிற்சி காலத்தின்போதும் கண்டறிவதுதான் சரியான வழிமுறையாக இருக்க முடியும். மாறாக ஆளுநர் சொல்வது போல மருத்துவப் படிப்பில் சேரும் போதே அவர்களது தகுதி திறனை நிர்ணயம் செய்வது என்பது பார்ப்பனிய வழிப்பட்ட தரநிர்ணயமாகும்.

நீட் தேர்வென்பது மருத்துவர் ஆவதற்கான தேர்வு கிடையாது. அது மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு. அப்படி மருத்துவம் படிப்பதற்கே தகுதி வேண்டும் என பேசிக் கொண்டிருக்கும் ஆளுநர், சமூகநீதிக்கு எதிரானது என்றாலும், குறைந்தபட்சம் நீட் பயிற்சிக் கூடங்கள் அனைத்தையும் ஒழித்துவிட்டு அனைத்து மாணவர்களையும் தனித் திறமையில் தேர்வெழுதச் சொல்வாரா என்கிற கேள்வியை முன் வைக்க வேண்டியிருக்கிறது. “தகுதி, திறமை பெறுவதற்கு தான் ஒருவன் பள்ளிக்கு பயிற்சிக்கு வருகிறான். ஆனால் படிக்கவும், பயிற்சி பெறவும் கூட தகுதி, தினம வேண்டுமென்றால் இது அயோக்கியத்தனம்” என்றவர் பெரியார். 100 ஆண்டுகளாக, பார்ப்பனர் அல்லாதாரின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பார்பனர்கள் செய்து கொண்டிருக்கும் சூழ்ச்சியின் மற்றொரு வெளிப்பாடே “நீட்”.

ஒன்றிய அரசின் முகவர்களால் சிதைக்கப் படும் மாநில உரிமை

கல்வி பொதுப் பட்டியலில் இருக்கின்ற காரணத்தால் கல்வி குறித்த சட்டங்களில் திருத்தம் செய்வதும் புதிதாக சட்டம் கொண்டுவருதலும்  மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்படாத நிலையில் இருக்கிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களை வஞ்சித்து வருகிறது ஒன்றிய அரசு.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிவிப்பின் போது தொடங்கிய எதிர்ப்பு மனநிலை, இன்றளவும் தொடர்ந்து நீடித்து வருகிறது. அன்றைய அதிமுக அரசு கிட்டத்தட்ட அனைத்து வழிகளிலும் நீட்டை ஒழிப்பதைத்  தடுத்து ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்பட்டது.  இன்றும் அதன் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

இந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் முக்கியமான மக்கள் கோரிக்கையாக நீட் எதிர்ப்பு எழுந்த நிலையில் திமுகவும் தனது முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நீட்டை ரத்து செய்ய முயற்சிக்கும் என கூறியது. ஆட்சிக்கு வந்ததும் நீதிபதி ஏ.கே. ராஜன் அவர்களின் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்து அதன் அறிக்கை ஜூலை 14, 2021 ல் வெளிவந்தது.

நீட் தேர்வென்பது மருத்துவக் கல்வியையும் மருத்துவக் கட்டமைப்பையும் சிதைக்கிறது என்கிற அடிப்படையில் அதனை ரத்து செய்யக் கோரிய அவ்வறிக்கை வெளிவந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நீட் ஒழிக்கப்படவில்லை. மாநில அரசின் அடிப்படை உரிமைக்கான கோரிக்கையினைப் பெற ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசின் தயவை நாட வேண்டியிருப்பதே அதற்கு காரணமாக இருக்கிறது.

ஒன்றிய அரசின் முகவராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுநர் ஜனநாயகத்துக்கு மீறிய நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை நீட் விலக்கு சட்ட மசோதாவை அளுநரிடம் அனுப்பியது.  ஆளுநர் அதை தன்னிடமே வைத்துக் கொண்டு காலம் தாழ்த்தி பின்னர் பெரும் நெருக்கடியை சந்தித்தப் பின்னர் திருப்பி அனுப்பினார். இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட மசோதாவையும் அதேபோல் காலம் தாழ்த்தி பின்னர் குடியரசு‌த் தலைவருக்கு அனுப்பினார். குடியரசுத் தலைவரும் அவருடைய பங்கிற்கு காலம் தாழ்த்தி ஜனநாயக விரோதமாக நடந்து கொண்டிருக்கிறார்.

இந்திய அளவில் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சிப் பெற்றோரேயாவர். இந்த பயிற்சி நிறுவனங்களில் முதல் மூன்று இடங்களில் இருப்பவை ஆகாஷ், ஆலன் மற்றும் ரெசோனன்ஸ் ஆகிய நிறுவனங்கள். இவை மூன்றும் பார்பனிய மற்றும் பனியா நிறுவனங்களாகும்.  மேலும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இதே பின்னணியில் களமிறங்கியிருக்கின்றன. ஒன்றிய அரசும் அதன் முகவர்களான ஆளுநரும் குடியரசுத் தலைவரும் இந்த பார்ப்பன பனியா கார்பரேட்களின் நலன்களில் அக்கறைக் கொண்டிருப்பதால்  ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் வஞ்சித்துவருகின்றனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை அளித்த பேட்டியில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நீட்டை ஒழிப்பதே தனது மகனின் இறப்பிற்கு கிடைக்கும் நியாயம் எனக் கூறியிருந்தார். கல்வி பொதுப்பட்டியலில் இருக்கின்ற நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கான ஜனநாயக கோரிக்கைக்காகக் கூட ஒன்றிய அரசையும் அதன் முகவர்களான ஆளுநரையும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்கிற தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாகவே நீட் தேர்வில் வெற்றியடைந்த மாணவியின் தந்தை அம்மாசியப்பன் மற்றும் மாணவர் ஃபயாசுதீனின் குரல் இன்று ஒலித்திருக்கிறது. அனிதா துவங்கி நீட் தேர்விற்கு பலியான ஒவ்வொருவரும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டியதன் அவசரத் தேவையை நமக்கு உணர்த்திச் சென்றிருக்கின்றனர்.

தமிழ்நாடு மக்களின் கூட்டு மனசாட்சியின் கூக்குரல் இந்தியாவின் நீதிமன்றங்களுக்கு கேட்க போவதில்லை!. சட்டப் போராட்டங்களை கடந்து அரசியல் தீர்வை நோக்கி நகர்வதே பயனளிக்கும் தீர்வாக அமையும். மாநில மக்களுக்கான உரிமைக்கு ஒருபோதும் எந்த ஒன்றிய அரசும் செவிசாய்த்ததில்லை என்பதுதான் கடந்தகால வரலாறு. ஒன்றிய தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் I.N.D.I.A (Indian National Democratic Inclusive Alliance) கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. நீட் விலக்கு, கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவருதல் ஆகியவை குறித்த வாக்குறுதியை இந்த கூட்டணியின் சார்பில் திமுக பெற வேண்டும். இது வரை நீட் எனும் பார்ப்பனிய பலிபீடத்தில் பலியிடப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதி மாணவர்களுக்கான அஞ்சலி மற்றும்  அரசியல் தீர்வாக இதுவே அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »