
அண்மையில் இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசாமல் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீனவர் நலனை புறக்கணித்திருக்கிறார்.
தமிழ்நாட்டு மீனவர்களைக் கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்யும் இலங்கை கடற்படைக்கு எதிராக தமிழர்கள் அனைவரும் கொந்தளிப்பான மனநிலையில் இருக்கின்றனர். மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பகுதியான கச்சத்தீவை மீட்பது ஒன்றே இதற்கு ஒரேத் தீர்வு எனும் நிலையில், கடந்த ஏப்ரல் 2,2025 அன்று கச்சத்தீவை மீட்க வேண்டும் எனும் தீர்மானம் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேறி இருக்கிறது. ஆனால் தனது இலங்கைப் பயணத்தில் கச்சத்தீவு குறித்து எந்த பேச்சுவார்தையையும் முன்வைக்காமல் நாடு திரும்பியிருக்கிறார் மோடி.
ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் உள்ள பாக் நீரிணை பகுதியில் கச்சத்தீவு இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ராமநாதபுரம் ஜமீனுக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது இத்தீவு. 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்து அரசு புள்ளி விவரங்கள் அனைத்தும் கச்சத்தீவு மீது தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன. தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அதிக மீன்வளத்தைக் கொடுத்த இடமாக கச்சத்தீவு வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது.

ஆனால் 1974-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் நாளன்று, தமிழ்நாட்டின் கருத்தை கேட்டுப்பெறாமல், நாடாளுமன்றத்திலும் முன்னறிவிப்பு தராமல் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் இந்திரா காந்தி கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தில் பாக் நீரிணைப் பகுதியில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன. கச்சத்தீவு இலங்கைக்குச் செல்லும் வகையில் எல்லை வரையறுக்கப்பட்டது. 1976ம் ஆண்டு போடப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் உள்ள மீனவர்கள் கச்சத்தீவை பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை மறுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகுதான் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவதும் சுடப்படுவதும் அதிகமானது.
தமிழ்நாட்டு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றால், சிங்கள கடற்படையால் தாக்கப்படுவது மட்டுமல்ல அவர்களின் படகுகளை உடைத்து, வலைகளை அறுத்து அராஜகம் செய்தது இலங்கை கடற்படை. மீன்களை மீண்டும் கடலில் வீசி அவர்கள் வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்கியது.
மீனவர்கள் குறைவாக எண்ணிக்கையில் மீன்பிடித்தாலும் அதிகமான எண்ணிக்கையில் கடலுக்கு சென்றாலும் தொடர்ந்து இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர். கடந்த 2018இல் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 2,500-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். 500க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீனவர்கள் மீன் பிடிக்காமல் வெறுங்கையுடன் திரும்பி வந்தனர். கச்சத்தீவு அருகே மீனவர்கள் பிடித்த மீன்களை இலங்கை கடற்படை எடுத்துச் செல்வதும், அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுவதும் தொடர்கதையானது. சிங்கள வெறியர்கள் தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்து தலைமன்னார் சிறையில் நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

இலங்கை ரோந்து படகு மோதி கொல்லப்பட்ட மீனவர் மலைச்சாமி, அக்டோபர் 2021ல் சித்தரவதை செய்து கொல்லப்பட்ட கோட்டைப்பட்டின மீனவர் ராஜ்கிரண் உட்பட இதுவரை 800க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். (மீனவர் ராஜ்கிரண் கொலைக்கு இலங்கை கடற்படை மீது வழக்கை பதிவு செய்ய வேண்டுமெனும் நீதிக்கான போராட்டத்தை மே பதினேழு இயக்கம் முன்னெடுத்தது. இதன் காரணமாக மீனவரின் உடல் மறுகூறாய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
2024-இல் மட்டும் 530 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024-2025ஆம் ஆண்டில் மட்டும் 82 மீன்பிடி படகுகளை இலங்கை பறித்துச் சென்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், கோடியக்கரை, தொண்டி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரையுள்ள கடற்கரையில் 7 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் தங்கள் உயிரைப் பயணம் வைத்து கொண்டுவரும் கடல் பொருள்களின் மூலம் ஒன்றிய அரசிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. ஆனால், இந்த மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டபோது ஒன்றிய அரசு பாராமுகம் காட்டியது. இருப்பினும் தொடர்ந்து பல போராட்டங்களை மீனவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.
அண்மையில் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 107 மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த பிப்ரவரி 28, 2025 அன்று ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். ராமேஸ்வரம் மட்டுமல்லாது பாம்பன், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,000 மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்கள் உயிர் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்டால் மட்டுமே, தமிழ்நாட்டின் மீனவர்களை பாதுகாக்க முடியும் எனும் சூழலில், கச்சத்தீவை மீட்கக் கோரி, சட்டமன்றத்தில் தமிழ்நாடு சட்டசபையில் 4-வது முறையாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முதல் முறையாக 21.08.1974-ல் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு சட்டசபையில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்காலத்தில் அக்டோபர் 3,1991 மற்றும் மே3, 2013 அன்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியின்போது டிசம்பர் 5, 2014 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் 2 ஏப்ரல், 2025 அன்று கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானம் என்பதை ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாகத்தான் நாம் பார்க்க வேண்டும். ஆனால் ‘மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியை மீட்க வேண்டும்’ எனும் நம் குரலை வழக்கம் போல் புறந்தள்ளி இருக்கிறது மோடி அரசு.
கடந்த ஏப்ரல் 4, 2025 அன்று மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற இந்திய பிரதமர் மோடி கச்சத்தீவு குறித்து வாய்திறக்கவில்லை. இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையே பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளைக் குறித்து மட்டுமே மோடியும் இலங்கை அதிபர் திசாநாயக்கவும் பேசி இருக்கின்றனர். தற்போது இலங்கை சிறையில் 97 மீனவர்கள் சிறையில் இருப்பதை இந்திய வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஒப்புக்கொண்ட நிலையில், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் எந்த நடவடிக்கையையும் ஒன்றிய பாஜக அரசு எடுக்கவில்லை. மோடி இலங்கை சென்றபோது நல்லெண்ண அடிப்படையில் 12 மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டது வெறும் கண்துடைப்பே. இன்னும் இலங்கை சிறையிலிருக்கும் பல மீனவர்களின் விடுதலை தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.
இதன்மூலம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நாடகமாடும் பாஜகவின் தமிழின விரோதம் வெளிப்பட்டிருக்கிறது. தமிழர் கடலாம் இந்திய பெருங்கடலை தன்னுடைய ராணுவ பலத்தைக் காட்டவும் தமிழர்களை ஒடுக்கவும் மட்டுமே பயன்படுத்துகிறது இனவெறி சிங்கள அரசு. இதற்குத் துணை போகும் வகையில் ராணுவ கூட்டுப் பயிற்சிகளுக்கு திட்டம் வகுக்கிறது ஒன்றிய பாஜக அரசு. கடந்த டிசம்பர் 2024இல் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சி விசாகப்பட்டினத்தில் நடந்தது. அண்மையில் கூட இந்திய கடற்படை போர்க்கப்பல் ஐஎன்எஸ் சஹ்யாத்ரி கொழும்பு சென்றிருக்கிறது. ஒருபுறம் இவ்வாறு ராணுவ நடவடிக்கைகளை செய்து கொண்டே மறுபுறம் கச்சத்தீவை புறக்கணித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

தொடர்ந்து தமிழின உரிமைகளை நசுக்கும் வகையில் செயல்படும் மோடியைக் கண்டித்து மே பதினேழு இயக்கம் 6/4/2025 அன்று மதுரையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இலங்கைப் பயணத்தை முடித்து விட்டு ராமேஸ்வரம் வந்த இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக மே பதினேழு இயக்கத் தோழர்களும் தோழமை அமைப்புகளும் கண்டனக் குரல் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த சிவகங்கை தமிழகமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் திண்டுக்கல் தமிழர் ஆட்சி கழக தோழர்களை காவல்துறை தடுத்து வைத்தது. போராட்டத்தில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் தோழர் பசும்பொன்பாண்டியன், தமிழர் ஆட்சி கழகத்தின் தோழர் எஸ்.ஆர்.பாண்டியன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தோழர் இசுமாயில், ஆதித்தமிழர் கட்சியின் தோழர் விடுதலைக்குமார், தந்தை பெரியார் தி.க.வின் தோழர் தமிழ்ப்பித்தன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் வேளீர் மக்கள் கட்சியின் தோழமைகள் பங்கேற்க ‘மோடியே வெளியேறு’ எனும் முழக்கத்துடன் போராட்டம் தொடங்கியது.
ஆர்ப்பாட்டத்தின்போது தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், “‘மோடி எதிர்ப்பு’ என்பது எங்கள் ரத்தத்தில் உறைந்திருக்கிறது. மோடியின் ஆட்சி தமிழர் விரோத ஆட்சியாக இருக்கிறது. இலங்கை அரசுடன் கைகோர்க்கும் மோடி விமானத்தை விட்டு இறங்கும்போதே தடுத்து நிறுத்துவோம். வக்பு வாரிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்த மோடிக்கு எதிராக, நீட் தேர்வை ரத்து செய்யாமல், தமிழ்நாட்டிற்கான வரிப்பங்கீட்டைக் கொடுக்காமல் வஞ்சிக்கும் மோடிக்கு எதிராக லட்சக்கணக்கில் தமிழர்கள் ஒன்றுதிரளும் காலம் வெகுதொலைவில் இல்லை. மோடியும் பாஜகவும் ஜல்லிகட்டுப் போராட்டத்தை மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றோம். “பாசிஸ்ட் மோடியே வெளியேறு! பாஜகவே வெளியேறு!!” எனும் முழக்கத்தோடு ஒட்டுமொத்த தமிழ்நாடும் களம் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று முழங்கினார். பின்னர் தோழர்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையால் அனைத்து தோழர்களும் கைது செய்யப்பட்டு தடுக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டின் மீனவர்களைக் கொலை செய்யும் இலங்கையை ‘நட்பு நாடு’ என்று கொண்டாடிக் கொண்டு, தமிழினத்தை வஞ்சிக்கும் மோடியின் வருகையை மே பதினேழு இயக்கம் போன்ற அமைப்புகளே தீவிரமாக எதிர்த்தன. பெரிய கட்சிகள் மோடிக்கு எதிர்ப்பு காட்டாத சூழலில் மே பதினேழு இயக்கமும் தோழமை அமைப்புகளும் பாசிச எதிர்ப்பில் சமரசமில்லாமல் போராடுகின்றன. 2014ம் ஆண்டில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே முதலில் எதிர்ப்பு தெரிவித்த அமைப்பு மே17 இயக்கமாகும். பிரதமர் வேட்பாளராக சென்னை வந்த போதே முதன்முதல் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது மே17 இயக்கம். கிட்டதட்ட 11 ஆண்டுகளாக பாசிசத்திற்கு எதிராக கருப்பு கொடியை உயர்த்துகிறது மே17 இயக்கம். ஈழத்தமிழர் மீது போலி அக்கறையைக் காட்டி அதே நேரத்தில் அவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு மீனவர்களுக்கு பெரும் அநீதியை இழைத்திருக்கிறது. பாஜகவின் இந்தப் போலித்தனத்தை மே பதினேழு இயக்கம் தொடர்ந்து அம்பலப்படுத்தும்.