
தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 13 நாட்களாக நடத்திய போராட்டத்தை, தமிழ்நாடு அரசு நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி காவல் துறையைக் கொண்டு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ராம்கி என்ற ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு அம்மக்களுடைய கோரிக்கையை மறுப்பதோடு அடக்குமுறையுடன் கைது செய்தது. ராம்கி என்ற தனியார் நிறுவனத்தின் பின்னணி என்ன? இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக மேயர் தொடங்கி அமைச்சர் வரை ஏன் பேசுகிறார்கள்? தூய்மை பணியாளர்களுக்கு அறிவித்திருக்கும் நலத்திட்ட உதவிகள் அவர்களின் கோரிக்கைப் போராட்டத்தை திசை திருப்பும் நடவடிக்கையா? போன்றவற்றைக் குறித்து மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்களுடன் விகடன் தொலைக்காட்சி ஆகஸ்டு 15, 2025 அன்று நடத்திய சிறப்பு நேர்காணல்.
தோழர் வணக்கம்.
நிரூபரின் கேள்வி: தமிழக அரசு தூய்மை பணியாளர்களுடைய போராட்டத்தில் மிக கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய தேவை என்ன? ஏன் தனியார் மையத்தை இந்த அளவுக்கு ஆதரிக்கிறார்கள்? திமுக அரசும் தனியார் மையத்தை எதிர்த்த அரசுதான். இந்த விசயத்தில் ராம்கி என்ற ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட வேண்டிய தேவை என்ன? அதன் பின்னணி என்ன?

தோழரின் பதில்: தமிழ்நாடு அரசு தனியார் மயத்தை கொண்டு வந்து 25 வருடங்களாகி விட்டது. பல துறைகளிலும் கொண்டு வந்து விட்டார்கள். சென்னை மாநகராட்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவுடைய காலத்தில் தான் தனியார் மயம் கொண்டுவரப்பட்டது. ’ஒனிக்ஸ்’ என்ற நிறுவனத்தை கேள்விப்பட்டிருக்கோம். அதுவரைக்கும் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சியினுடைய பணியாளர்களாக (அரசு பணியாளர்களாக) இருந்தார்கள். சிங்கார சென்னையாக மாற்றுகிறோம் என்கிற பெயரில்தான் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு, பல நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டது.
அதற்குப் பிறகு ’ராம்கி’ என்ற நிறுவனத்திற்கு கோயம்பேட்டில் இருக்கக்கூடிய காய்கறிகள் குப்பைகளை அள்ளுவது என ஒப்பந்தம் கொடுத்தார்கள். அங்கு அது முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. தூய்மை பணி மேற்கொள்ளக்கூடிய பல இடங்களில், பணக்கார வீட்டுப் பகுதிகளில் நன்கு குப்பைகளை சேகரித்து சுத்தம் செய்வதும், ஏழை நடுத்தர மக்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் அப்படி எதுவுமே செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் வந்தது. அதையடுத்து கணக்கெடுத்துப் பார்த்த பொழுது ஒரு மண்டலத்தில் இருக்கக்கூடிய ஒன்பது குப்பை சேகரிக்கக்கூடிய மையங்களில் ஆறு மையங்களி முறையாக குப்பை சேகரிக்கப்படவில்லை என தெரிந்தது. இந்த ஆறு இடமும் ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் இருக்கக்கூடிய பகுதி.
இந்த ஒப்பந்தம் முடிவதற்கு முன் தூய்மை பணிகள் பற்றியான புகார்களை தெரிவிப்பதற்காக சென்னை மாநகராட்சி மற்றொரு சர்வே எடுக்கிறார்கள். 25 நாட்களில் கிட்டத்தட்ட 13000 புகார்கள் வந்தது. இந்த 13000 புகாரில் 5000/ 6000 புகார்கள் ராம்கி நிறுவனத்தின் மேல் மட்டுமே வந்தது. அப்பொது இந்த நிறுவனம் தொடர்ச்சியாக தவறாக முறைகேடாக செய்வது என்பது அம்பலமானது. இந்த இரண்டு புகார் செய்திகளும் மிக புகழ்பெற்ற ஆங்கில ஊடகத்திலே செய்திகளாக வெளிவந்த தகவல்கள்.
2018-ல் தென்சென்னையில் போடப்பட்ட ஒப்பந்தம் முடிகிறது. அதோடு விடவில்லை. 2020-லும் மேலும் ஏழு எட்டு மண்டலங்கள் வடசென்னையில் இருந்து இந்த நிறுவனத்திற்கே கொடுக்கிறார்கள். அதிமுக எடப்பாடியார் ஆட்சியில் கொடுக்கப்படுகிறது. அப்போதுதான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெரும் போராட்டத்தை நடத்துகிறார்கள். இந்த ராம்கி நிறுவனத்திடம் வடசென்னையை ஒப்படைத்த போது பெரிய போராட்டமாக நடந்தது. அதுவும் தேர்தலுக்கு இரண்டு மாதத்துக்கு முன்பு நடந்தது. அந்த சமயத்தில்தான் திமுக இந்த தொழிலாளர்களுடைய பணி தொடர்பான கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றுவோம் என வாக்குறுதியாக கொடுத்தது. அன்றைய எதிர்கட்சி தலைவராக இருந்த திரு ஸ்டாலின் அவர்கள் கொடுத்தார். அது அவர்களுடைய தேர்தல் வாக்குறுதியாகவும் இருந்தது. பணி சார்ந்த குறைபாடுகளை நீக்குவோம், நிவர்த்தி செய்வோம் என்றார்கள். ஆனால் எதுவுமே நடக்காமல் அப்படியே இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்பும் தொடர்ச்சியான போராட்டங்கள் அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தன. அடையாள போராட்டங்கள், கண்டன போராட்டங்கள், கவன ஈர்ப்பு போராட்டங்கள், கோரிக்கை போராட்டங்கள் என நடந்துக்கொண்டே இருந்தன. ஆனால் திமுக அரசு சென்னை மாநகராட்சி அதை தீர்க்க முயற்சிக்கவே இல்லை. மீதி இரண்டு மண்டலங்களையும் தனியார்மயம் ராம்கியிடம் ஒப்படைக்கிறோம் என முடிவு வரும் பொழுதுதான் பெரிய போராட்டமாக மாறுகிறது.
இதில் என்ன பிரச்சனை எனில், அரசு ஒப்பந்த ஊழியராக இருக்கும் பொழுதும் சரி, தனியார் ஒப்பந்த ஊழியராக இருக்கும் பொழுதும் சரி, இரண்டு இடத்தில் இருக்கும் பொழுதும் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை கூட கொடுக்காத நிலையில் தான் தனியார் நிறுவனமும் இருந்தது, சென்னை மாநகராட்சியும் இருந்தது. அந்த தொழிலாளர்கள் அவர்களின் தொழிற்சங்கமான உழைப்போர் உரிமை இயக்கம் வழக்கு நடத்தி, அரசாங்கத்தில் குறைந்தபட்ச கூலியாக நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு நாளைக்கு 700 ரூபாய் தரவேண்டும் என நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு நடத்தி அந்த உரிமையை வாங்கினார்கள். அதற்கு பிறகுதான் இவர்களுக்கு ரூ.15000-லிருந்து ரூ.23000 கூலி என்கின்ற அளவில் வந்தது.
இதில் விடுமுறை கிடையாது, மருத்துவ விடுப்பு எடுக்க முடியாது, பேறுகால விடுப்பு கிடையாது, பென்ஷன் கிடையாது, போனஸ் கிடையாது, ஒரு நாள் விடுப்பு எடுத்தால் சம்பளம் கிடையாது. இரண்டு/ மூன்று நாள் விடுப்பு எடுத்தால் சம்பளம் குறைவது மட்டுமல்ல, அந்த மூன்று நாள் குப்பையையும் நான்காவது நாளில் எடுத்தாக வேண்டும். அப்போது அந்த மூன்று நாள் குப்பைகளை அள்ளியதற்கான சம்பளம் கொடுக்க மாட்டார்கள். இந்த சென்னை மாநகராட்சி இப்படித்தான் அவர்களைக் கையாண்டது. தனியார் கம்பெனியும் கூட இப்படித்தான் கையாள்கிறது.
இப்படிப்பட்ட இடத்தில்தான் திமுக ராம்கியிடம் ஒப்படைத்துவிட்டு, இந்த தொழிலாளர்களை அங்கே போய் வேலை செய்யுங்கள் என்கிறார்கள். அரசாங்கம் தற்போது பணிக்கு திரும்புங்கள் என்கிறது. வேலையை விட்டு துரத்திவிட்ட பிறகு எப்படி பணிக்கு திரும்புங்கள் என எப்படி சொல்லுவீர்கள்? பணிக்கு போவதா இல்லையா என்பது தூய்மை பணியாளர்கள் விருப்பம்.

கேள்வி: திமுக என்ன சொல்கிறது எனில், அதிமுக ஆட்சி காலத்தில் தான் தனியார்மயம் கொண்டு வந்தார்கள் என்ற ஒரு தோற்றத்தை உண்டாக்குவது ஏன்?
பதில்: தனியார்மயம் ஒப்படைக்கக் காரணம் ஒன்றிய அரசினுடைய NULM திட்டம். அது காங்கிரஸ் கடைசி காலத்தில் கொண்டு வந்தது. அதை பாஜக எடுத்து செய்கிறார்கள். அந்த அடிப்படையில் நகர்ப்புற தொழிலாளர்களை தொழில் முனைவராக மாற்றுவது இத்திட்டம். அதாவது இவர்களுக்கு பயிற்சி கொடுத்து தொழில் முனைவராக மாற்றுவார்களாம். சுய நிதிக் குழுக்களை உருவாக்கி, தொழில் பயிற்சி தருகிறோம் சொல்லி, அந்த சுயநிதி குழுக்களுக்கு ஒப்பந்த ஊழியராக நிர்ணயம் செய்கிறார்கள். அடிப்படையில் (சட்டப்படி) பார்த்தால் தொழில் முனைவோராக, ஆனால் வேலைப்படி பார்த்தால் தினக்கூலிகளாக வைத்திருப்பது என்பதாக தெரிகிறது. இப்படியான தொழிலாளர்கள் விரோதமான ஒரு திட்டத்துக்குள்ளாக அன்றைக்கு அதிமுக ஆட்சி கொண்டு போனது. பிஜேபியை எதிர்க்கிறோம் என்று சொல்லக்கூடிய திமுக என்ன செய்ய வேண்டும்?, இதிலிருந்து தொழிலாளர்களை மீட்டெடுத்திருக்க வேண்டும். அரசாங்கத்தினுடைய பணியாளர்களாக அரசு பணியாளர்களாக மாற்றி இருக்க வேண்டும். அதை செய்யாமல் மேலும் இரண்டு மண்டலத்தை தனியாருக்கு கொடுக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொடுத்த மற்ற பத்து மண்டலத்தில் இருக்கக்கூடியவர்களையும் கைவிட்டுவிட்டு, புதிதாக இரண்டு மண்டலத்தையும் சேர்த்து கொடுக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று என்று கேட்கிறார்கள்.
கேள்வி: இங்கு மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் அந்த ராம்கி நிறுவனம் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அப்படியான சூழலில் திரும்ப திரும்ப இந்த பணியை ராம்கியிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை என்ன? அதுவும் மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) ஆரம்பித்து எல்லாருமே இந்த நிறுவனத்துக்கு இவ்வளவு ஒத்துழைப்பு கொடுக்க காரணம் என்ன?
அது விசாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது என நினைக்கிறேன். எதனால் இந்த தனியார் நிறுவனத்துக்கு இவ்வளவு சாதகமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒரு கேள்வியாக இன்றைக்கு இருக்கிறது. என்னவெனில், இந்த நிறுவனம் புதிது அல்ல, பல முறைகேடுகளை செய்துள்ளது. மிகப்பெரிய அளவுக்கு கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடை கொடுத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் பணம் கொடுத்த கம்பெனி. அது மூலமாக அங்கு ஒப்பந்தங்களை வாங்கினார்களா என்பது தெரியவில்லை. ராமகி நிறுவனர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பியாக இருக்கக்கூடிய ரெட்டி. இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பணக்கார எம்.பி, 2200 கோடி ரூபாய் சொத்து கொண்டவர்.
நாம் என்ன கேட்கிறோம் எனில், இந்த மாதிரி கார்ப்பரேட் கம்பெனிக்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்து பண்ண வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? NULM திட்டம் முடிந்துவிட்டால் அரசு ஒரு திட்டத்தை உருவாக்கி, ஒரு கூட்டுறவு சங்கமாக மாற்றி, அதற்கு நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டியது தானே. அவர்கள்தானே குப்பைகளை அள்ளப் போகிறார்கள். முதல் விசயம் இந்த குப்பை அள்ளக்கூடிய எந்திரம் இருந்தால் போதும், பெரிய எந்திரம் எதுவும் தேவையில்லை. ஏனெனில் 90% வேலை மனித உழைப்புதான். அவர்களுக்கான வண்டி வாகனங்கள் மட்டும் கிடைத்தால் போதும். அரசு கொடுக்கும் பணத்தில் தூய்மை பணியாளர்கள் நிர்வாகம் செய்வார்கள். அவங்களுக்குதான் இந்த பகுதி வேலை என்ன? எப்படி நிர்வகிக்க வேண்டும், எப்படி மேலாண்மை செய்ய வேண்டும் என தெரிகிறது. தொழில்முனைவராக மாற்ற வேண்டும் என சொல்லும் நீங்கள், கூட்டுறவு சங்கமாக மாற்றி கொடுத்தால் அந்த தூய்மை பணியாளர்கள் சம்பாதித்து போகட்டுமே. இந்த மாதிரி திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

இரண்டாவது முக்கியமான விசயம், இதில் வேலை செய்றவர்கள் பெரும்பாலும் பெண்கள், பட்டியல் சமூகத்தை சார்ந்த பெண்கள். காலம் காலமாக அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்ட பெண்கள். யோசித்து பாருங்கள், இவங்களுக்கு நடக்கக்கூடிய இதே அநீதிதான் சென்னையின் பிறமண்டல எல்லா தொழிலாளர்களுக்கும் நடக்கிறது. தமிழ்நாட்டில் பல ஊராட்சிகளில் சம்பளமே மாதம் ரூ. 2000 / 3000 / 4000. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மை பணி பண்ணக்கூடிய செவிலியர்களாக இருக்க கூடியவர்களுக்கு 18 வருஷமாக மாதம் ரூ.1500. ஒரு நாளைக்கு 50 ரூபாய் தான் அவர்களின் சம்பளம். அவ்வளவு சுரண்டல் நடக்கிறது. கிட்டத்தட்ட 3000 பெண்கள் நாளைக்கு ரூ.50 கூலிக்காக 18 வருஷமா வேலை பார்க்கிறார்கள். தூய்மை பணியில் இந்த தொழிலாளர்கள் பட்டியல் சமூகமாக இருக்கிறார்கள், கீழே ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள், குறிப்பாக பெண்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு வளர்ச்சியும் வாய்ப்பும் கொடுப்பது தானே சமூக நீதி, அதைத்தானே திமுக செய்ய வேண்டும், அதைத்தான் திராவிடம் பேசுகிறது. அதை தானே தந்தை பெரியார் பேசினார்.
ராம்கி முறையற்ற நிறுவனம். 3000 பேர் வேலை வைக்க வேண்டிய இடத்தில் 500/ 700/ 1000 பேர் வைக்கிறது. குப்பைத்தொட்டிகளை குறைத்து வைக்கிறது. முறையாக பிரிக்காமல் இருக்கிறது. இப்படி நிறைய விசயங்கள் அந்த கம்பெனி மேல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அது மட்டுமல்ல, ’அர்பேசர்’ என்கிற ஒரு பன்னாட்டு நிறுவனம், ’பிரீமியர்’ என்கிற தனியார் நிறுவனமும் இதில் ஈடுபடுகிறது. இருக்கிறது. அந்நிறுவனமும் குறைவான தொழிலாளர்கள், குறைவான கூலியுடன் தான் வேலை வாங்குகிறார்கள், விடுமுறை கிடையாது, பிஎஃப், ஊக்கத்தொகை என எதுவுமே கிடையாது. நேற்று திமுக தூய்மை பணியாளருக்கான நலத்திட்ட அறிவிப்பு செய்தது. அது இந்த இண்டு மண்டலத்துக்கு மட்டுமா பிற மண்டலத்துக்கும் சேர்த்தா என சொல்ல வேண்டும் அல்லவா? அப்படி ஏதேனும் சொல்லியதா?
கேள்வி: சென்னைக்கு மட்டும் முதற்கட்டமாக அறிமுகப்படுத்துறோம். பிறகு எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவோம் மாதிரி சொல்லிருக்கிறார்களே!
பதில்: என்ன செலவு இருக்கிறது? இறந்து போனால் பத்து லட்சம் தருகிறோம் என சொல்கிறீர்கள். தொழில் முனைவராக போனால் அதற்கு 30% கடன் தருகிறோம் சொல்கிறீர்கள். அந்த வட்டிக்கு அரசு பொறுப்படுத்து கொள்கிறோம் சொல்கிறீர்கள். வேறு என்ன செலவு செய்கிறார்கள்? பிஎஃப் & போனஸ் என்ற அடிப்படை விதிதானே. காலையில் சோறு போடுவதில் என்ன கடினம் வர போகிறது.
கேள்வி: தூய்மை பணியாளர்கள் என்ன சொல்கிறார்கள் எனில், எங்களுக்கு நிரந்தர வேலையை கொடுங்கள், நாங்களே சாப்பாடு வாங்கிக் கொள்கிறோம் என்கிறார்கள். மேலும் இந்த அறிவிப்பு திசை திருப்புகிற வகையில் உள்ளதா? என்ன காரணம்?
பதில்: தனியார் மயத்தை கைவிட போவது இல்லை என வெளிப்படையாக தெரிகிறது. தனியார் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு திமுக அரசு ஏன் சாப்பாடு போட வேண்டும்? ஏன் நட்ட ஈடு தர வேண்டும். ஏன் கடன் தர வேண்டும். இதற்கு பதில் சொல்ல சொல்லுங்கள். தனியாரிடம் ஒப்படைத்து விட்டீர்களே, ஏன் கம்பெனிக்காரன் தரட்டும். அரசு தருவது ஏன்? இதையெல்லாம் தனியார் கம்பெனிக்கு அரசு தர வேண்டும் தனியார் கம்பெனிக்காரன் லாபம் சம்பாதிக்கிறான். வெறும் 40/ 50 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை எடுத்துவிட்டு, இந்த கம்பெனி இன்றைக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் ஒப்பந்தத்தை எடுக்கக்கூடிய கம்பெனியாக 18 வருடத்தில் வளர்ந்துள்ளது. இதெல்லாம் மக்களுக்காகவா செய்கிறான். இலாபத்துக்குதானே செய்கிறான்.
கேள்வி: தனியார் நிறுவனத்தை வைத்து செய்தால் அரசுக்கு இந்த அளவுக்கு பணம் குறைவாக இருக்கும் என்பதை சொல்லவே இல்லையா?
பதில்: எவ்வளவு ரூபாய்க்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என்பதை இதுவரைக்கும் வெளிப்படையாக அறிவிக்கப்படவே இல்லை. நாம் என்ன கேட்கிறோம் எனில், அரசு நிர்வாகம் செய்வதை விட அதிக விலைக்குதான் தனியாரிடம் கொடுத்திருப்பார்கள். அதை ஏன் அரசாங்கமே நிர்வாகம் செய்ய முடியவில்லை? அதற்கு தானே ஐஏஎஸ் அதிகாரி இருக்கிறார். மற்ற அதிகாரிகள் எல்லாம் இருக்கிறார்கள். நிர்வாகம் பண்ண முடியவில்லையெனில் அதிகாரிகளை மாற்றுங்கள். இல்லையெனில் அவர்களை ஒப்பந்த ஊழியராக மாற்ற வேண்டியது தானே. அவங்களையெல்லாம் (அதிகார்களை) கேள்வி கேட்க ஆளில்லையெனில் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா! இன்றைக்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதற்காக தூய்மை பணியாளர்கள் 200 பேரைச் கூட்டிக் கொண்டு ஊர்வலம் போயிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. இதெல்லாம் அசிங்கமாக தெரியவில்லையா!
கேள்வி: ரிப்பன் மாளிகை அருகே போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாருமே முதலமைச்சரை சந்திக்கவில்லை. வேறு பல்வேறு சங்கங்களை அழைத்துக் கொண்டு போய் முதலமைச்சரை சந்திக்க வைத்துள்ளனர். பல்வேறு நலத்திட்ட உதவிகள் அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்தாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: எந்த சங்கங்கள் என வெளிப்படையாக சொல்ல வேண்டும். எந்த மண்டலம் என சொல்ல வேண்டும். தொழிலாளர்கள் மிக அச்சத்தில் இருக்கிறார்கள். என்ன நடக்கிறது எனில் பலதரப்பட்ட பேரிடம் நான் பேசுகிறேன். ஏம்மா நீங்கள் எல்லாம் பிற மண்டலத்தில் இருக்கிறவர்கள் தானே, இதே கோரிக்கைக்குதான் நீங்களும் நீண்ட நாளாக கடினப்படுறீர்கள் என்றேன். அதற்கு அவர்கள் ”எங்க சூப்பர்வைசர் வேலையை விட்டு நீக்கிவிடுவார்கள் சார், நாளைக்கு வேலை தர மாட்டாங்க சார், எங்களை யார் சார் வேலைக்கு வைப்பார்கள்” என கேட்கிறார்கள். எவ்வளவு அநியாயம் நடக்கிறது. இதைவிட பெரிய சமூக அநீதியாக என்ன இருக்க முடியும்? இவர்களுக்கு தானே எல்லாமே செய்ய வேண்டும். கை பிடித்து மேலே தூக்கி விட வேண்டும். அதை செய்யாமல் ஒரு நாடகமாக 200 பேரை கூப்பிட்டால் வரத்தான் செய்வார்கள். அவர்களுக்கு நாளை வேலை இருக்காது என்ற பயம் இருக்கத்தானே செய்யும்.

அமைச்சர் இந்த நாடகம் நடத்துவது ஏன்? தமிழ்நாட்டில் 2 லட்சம் தொழிலாளர் இருக்கின்றார்கள். முதலமைச்சரை பாராட்ட லட்சம் பேரா வந்தார்கள்? 200 பேரை தானே கூட்டிக் கொண்டு போனீர்கள். இந்த அறிக்கை லட்சம் தொழிலாளர்களுக்கானதாகவா இருந்திருக்கிறது? லட்சம் பேர் சந்தோசப்பட்டிருக்கிறார்களா, எதற்கு இந்த நாடகம்?. இதனை வெறுமனே முதலமைச்சரைக் குளிர்விப்பதற்காக அமைச்சர் நடத்தக்கூடிய நாடகமாக பார்க்கிறேன். உங்கள் அரசு அதிகாரிக்கு நிர்வாகம் செல்ல தெரியாததால்தான் அதற்கான தகுதியோ / செயல்திறனோ இல்லாத காரணத்தினால்தான் தனியாருக்கு கொடுத்தீர்கள். உங்கள் அதிகாரி மேலே நடவடிக்கை எடுக்க அமைச்சருக்கு துணிச்சல் இல்லை. அதனால்தான் வாய் பேச முடியாத, எதிர்த்து கேட்க முடியாத, சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட இந்த பெண்கள் மேல் உங்களுடைய எதிர்ப்பை காண்பிக்கிறார்கள்.
கேள்வி: இந்த விவகாரத்தில அமைச்சர் சேகர் பாபு இந்து அறநிலையத் துறை அமைச்சருக்கு என்ன பாத்திரம் என்கிற ஒரு கேள்வி எழுந்துள்ளது, தொடர்ச்சியாக அவர்தான் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார். அமைச்சர் கே.என், நேரு அவர்கள் பெரிதாக இல்லை என்கிற குற்றச்சாட்டு ஆரம்பத்திலிருந்து இருக்கிறது, ஏன்? இதில் சேகர்பாபு அக்கறை காட்ட வேண்டிய அவசியம் என்ன என்ற சந்தேகமும் இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: சென்னை மாநகராட்சியில் பணி செய்யவும் இல்லை, அது சேகர்பாபுவின் துறையும் கிடையாது. ஒன்று மேயர் பேசி இருக்க வேண்டும் அல்லது நகர்ப்புற சம்பந்தமான துறை பார்க்கக்கூடிய அமைச்சர் கே.என். நேரு அவர்கள் பேசி இருக்க வேண்டும். சேகர் பாபு அவர்களுக்கும், ராம்கி நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு என்பதை விசாரிக்க வேண்டும், ஏற்கெனவே இந்து அறநிலையத் துறையை முழுக்க இந்துத்துவாக மாற்றி வருகிறார், ஆர்.எஸ்.எஸ். தன்மையாக மாற்றி வருகிறார், இந்து அறநிலையத் துறையை முழுக்க முழுக்க சங்கித்தனமாக மாற்றி வருகிறார். அப்படிப்பட்டவரை கொண்டு வந்து இங்கு தீர்வு எப்படி கொடுக்க முடியும்? இவருக்கு இந்த துறை சம்பந்தமாக என்ன தெரியும்?
ஒன்றிய அரசு தர வேண்டிய நிதி கிடப்பில் இருக்கிறது. அப்போது பிஜேபியிடம் சண்டை போட்டு கேட்க வேண்டும். அதை கேட்காமல் விட்டு விட்டு தூய்மைப் பணியாளர்களை கொண்டு போய் தனியாரிடம் ஒப்படைக்கிறார்கள். NULM திட்டமே என்பது அரசாங்கமே பணம் கொடுத்து பயிற்சி கொடுத்துவிட்டு, போய் தனியாரிடம் ஒப்படைக்கக்கூடிய பிரைவேட் பப்ளிக் பார்ட்னர்ஷிப் (PPP) என்கிற மாடல். அந்த மாடல் அதிமுக, திமுக ஏற்றுக்கொண்டது. சமூக நீதி அடிப்படையில் பேசக்கூடிய திமுக, ஒரு பட்டியல் சமூகத்தை சேர்ந்த அதுவும் பெண்களாக இருக்கக்கூடியவர்களை சுரண்டக்கூடிய ஒரு திட்டத்தை ஏன் எதற்காக ஏற்றுக் கொண்டீர்கள்? பிறகெப்படி சமூக நீதி பேசுவீர்கள்? எப்படி தந்தை பெரியாரை பேசுவீர்கள்? திராவிடம் எப்படி பேசுவீர்கள்? இதைதான் நாங்கள் கேட்கிறோம். கொள்கைகளைப் பற்றியே பேசாமல் அதிமுக மாதிரி அனைத்தையும் கையாள்கிறதா திமுக என நாங்கள் கேட்கிறோம்.
கேள்வி: பல்வேறு மாநிலங்களில் ராம்கி நிறுவனத்தினுடைய செயல்பாடு அதிர்ச்சிக்குள்ளான வகையில் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சென்னை மாநகராட்சி, அதற்கான முன்னுதாரணங்கள் இருந்தும் கூட, பரிசீலிக்காமல் ஒப்பந்தம் கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறீர்களா?
பதில்: தெரிந்துதான் நடக்கிறது. இதனால்தான் அந்த நிறுவனத்தை கவனித்து வந்தோம். 10 நாட்கள் போராட்டத்திற்கு சென்றிருந்தோம். மாநகராட்சி உறுதியாக தனியார் மயம் நோக்கி சென்றபின் ராம்கி நிறுவனத்தின் ஆவணத்தை எடுத்து பொதுவெளியில் கேள்வி எழுப்பினோம். இந்த விசயம் விவாதத்துக்கு வரவே இல்லை. இதை முதன் முதலில் மே 17 இயக்கம் தான் அம்பலப்படுத்தியது.
நாம் என்ன கேள்வி கேட்கிறோம் எனில், கடந்த 25 வருடமாக தனியார் மயத்திடம் கொடுத்தீர்கள். இதில் பெரும்பாலும் ராம்கி நிறுவனத்திடம் தான் கொடுத்துள்ளீர்கள். அப்போது சென்னை மிக தூய்மையான இடம் என பெயர் வந்திருக்க வேண்டும். ஆனால் இந்திய அளவில் சென்று ஒரு வருடம் எடுத்த சர்வே படி பார்த்தால், இந்தியாவில் இருக்கக்கூடிய தூய்மையான 440 நகரங்களில் சென்னை நகரம் 199வது இடத்தில் இருக்கிறது. திருச்சி நகரம் சென்னையை காட்டிலும் முன்னிலையில் இருக்கிறது. அங்கு ராம்கியா வேலை பார்த்தது? ஏற்கனவே எட்டு மண்டலம், அதன்பிறகும் வேறு மண்டலத்தை கொடுப்பது, அர்பேசர், பிரீமியர், ராம்கி போன்ற மூன்று தனியார் நிறுவனத்திடம் கொடுத்து கூட, சிறப்பான 10 வது இடம் கூட வர முடியவில்லை. தூய்மையில் சிறந்த நகமாக இந்தியாவில் வர முடியவில்லை. இதற்கு அந்த தனியார் நிறுவனம் தோல்வி அடைந்துள்ளது என்பது தானே அர்த்தம். இதற்கு பதில் சென்னை மாநகராட்சி/ மேயர்/ சேகர்பு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதில் சொல்லுவார்களா?
இப்போது இதைத் தொடர்ந்து எங்களுக்கு இருக்கக்கூடிய கவலை என்னவெனில், ஆற்றங்கரையோரம் இருக்கும் 11,700 வீடுகளை இடிக்கப் போகிறார்கள். தூய்மைப்படுத்துகிறோம் என்ற பெயரில் அந்த மக்களை (கிட்டதட்ட ஒரு லட்சம் பேர்) அனாதை போல சாலையில் விடப் போகிறது அரசு. அது இன்னும் இரண்டு மாதத்தில் நடக்க இருக்கிறது. அதற்கும் நீதிமன்றத்தில் உத்தரவு வாங்குகிறார்கள். இந்த தொழிலாளர்களை விரட்டியதற்கு காரணம், இவர்கள் சார்பில் (அரசு சார்பில்) யாரோ ஒருவர் சமூக ஆர்வலர் என்ற பெயரில் வழக்கு போட்டு அதற்கு ஏற்றமாதிரி தீர்ப்பு வாங்குகிறார்கள். இது அநியாயம். இது ஏழை எளிய மக்கள் சென்னைக்குள் வசிக்க கூடாது. வசிக்கின்ற மக்களுக்கு முறையான வேலை தரக்கூடாது என்கிற எண்ணம். இதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.

கேள்வி: தூய்மைப் பணியாளர்களை கைவிட மாட்டோம் என முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆனால் அவருடைய அறிவிப்புகள் வழக்கமான ஒரு அறிவிப்பாகத்தான் இருக்கிறது. மேலும் தனியார் மயத்தைதான் ஆதரிக்கிறார்கள். போராடிய மக்களுக்கான ஒரு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. வெறும் நலத்திட்டங்களை மட்டும் அறிவிப்பதை எப்படி புரிந்துக்கொள்வது?
பதில்: இந்த தனியார் மயக் கொள்கை முதலாளிகளுக்கு சாதகமான கொள்கைதான். இதேதான் அனகாபுத்தூர் வீடுகள் இடிக்கும்போதும் அந்த பெரிய தனியார் நிறுவனத்திற்கு சாதகமாகத்தான் முடிவு எடுத்தார்கள். அங்கு(அனகாபுத்தூர்) கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை உருவாக்குவது எல்லாம் தனியார் கம்பெனிகளுக்கு தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. தனியார் கம்பெனிகளுக்கு சாதகமான கொள்கை முடிவை திமுக அரசு எடுத்துக்கொண்டே வருகிறது. முதலாளிகளுக்கு சாதகமாக முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்கள் ஏழை எளிய மக்களுக்கு விரோதமான கொள்கை முடிவுகளை எடுக்கிறார்கள். குறிப்பாக இது சென்னையில் அம்பலமாகி இருக்கக்கூடிய உண்மை. தூய்மைப் பணியாளர்களை கைவிட்டுவிட்டார்கள். அதுதான் உண்மை. இத்தனை லட்சம் தொழிலாளர்கள் கைவிடப்பட்டிருக்கிறார்கள.
அரசாங்கம் பணியை நிரந்தரம் செய்து தருவதில் என்ன கடினம்? தனியார் கம்பெனிக்கு நிறைய பணம் தருகிறீர்கள், அந்த பணத்தை அந்த மக்களுக்கு கொடுங்கள். அவர்கள் நன்றாக வேலை பார்க்க போகிறார்கள். அதிகாரிகள் வேலை செய்யாமல் இருந்தால் அதிகாரிகளை பணியை விட்டு தூக்குங்கள் அல்லது மாற்றிப் போடுங்கள். அதற்கு தானே அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒரு அமைச்சராக இருப்பவர் என்ன செய்ய வேண்டும். அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா? என பார்க்க வேண்டும் இதான் வேலை. ஒரு முதலமைச்சர் என்ன செய்ய வேண்டும் அமைச்சர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என பார்க்க வேண்டும். இது எதுவும் நடக்கவில்லை.
முதலமைச்சர் கீழ் இருக்கக்கூடிய காவல்துறை, சென்னை தலைநகரத்தில், இத்தனை ஊடகங்கள் இத்தனை பேர் பார்த்து கொண்டிருக்கக்கூடிய சமயத்திலே சமயத்திலேயேஇந்த போராட்டத்தை, அவ்வளவு வன்முறையாக அடித்துக் கலைக்கிறது, தோழர் வளர்மதி, தோழர் நிலவுமொழி போன்றவர்கள் எல்லாம் கடுமையாக தாக்கப்பட்டு இருக்கிறார்கள். தோழர் முத்துச்செல்வன் என்ன ஆனார் எனத் தெரியவில்லை. சென்னை தலைநகரத்துக்குள் காணாமல் போயிருக்கிறார்கள். போராடிய மக்களை வண்டிக்குள் அடித்துள்ளனர். எங்கள் அமைப்பு தோழர்களின் கையைக் கூட முறுக்கியுள்ளனர். அலைபேசியை பிடுங்கியுள்ளனர். இந்த வன்முறை ஏன் காவல்துறை செய்கிறது? கைது நடவடிக்கைக்கு இவ்வளவு வன்முறை தேவையா?
முதலமைச்சர் காவல்துறை செய்யும் தவறுகளுக்கு எந்த நடவடிக்கையும் நடவடிக்கையும் எடுக்க மாட்டார்களா? ஸ்டெர்லைட்டுக்கான அறிக்கை வந்திருக்கிறது, ஜல்லிக்கட்டில் செய்த வன்முறைக்கான அறிக்கை வந்திருக்கிறது, ஆனா குற்றம் செய்த காவல்துறை அதிகாரிகள் மேல் எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக வந்து நான்கு வருடம் ஆகிவிட்டது. இதன்பிறகும் எப்படி நல்ல ஒரு காவல் துறை உருவாக்கி கொடுப்பீர்கள் என கேட்கிறோம். தலைநகரத்தில் அவர் கண் முன் நடந்திருக்கிறது.
நிருபர்: தூய்மை பணியாளர்களுடைய போராட்டம் அடுத்த கட்டம் தொடர்கிறதா? அவர்கள் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் என தெரியவில்லை. தமிழக அரசும் தற்காலிக தீர்வாதான் இதை அறிவித்துள்ளது. ஆனால் இந்த போராட்டத்திற்கான தீர்வாக அறிவிக்கவில்லை. இந்த போராட்ட பிரச்சனையை திசை திருப்பும் வகையில்தான் இந்த நல திட்டங்கள் உள்ளது. தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் இந்த விவகாரத்தில என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள் என பார்க்கலாம். உங்களுடைய கருத்துக்கு நன்றி தோழர்.
தோழர் திருமுருகன் காந்தி: மிக்க நன்றி! இந்த தொழிலாளர்களுடைய சிக்கல் குறித்து மக்களிடத்தில் தெரிவிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த விகடனுக்கும், நிர்வாக ஆசிரியர்களுக்கும் மற்றும் இணைய தோழர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
தோழர் திருமுருகன் காந்தி ஆனந்த விகடன் பத்திரிக்கைக்கு தூய்மைப்பணியாளர் போராட்ட பின்னனி, தனியார்மய தோல்வி, சிக்கலுக்கான தீர்வு குறித்த விரிவான பேட்டி,
அவசியம் பாருங்கள். அனைவருக்கும் பகிருங்கள்.