தென்னிந்திய வர்த்தகத்தை சூறையாடும் அமெரிக்க வரி- அமைதியாய் மோடி

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு எதிரொலியால் தூத்துக்குடியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 500 டன் மீன் உணவுகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. திருப்பூரிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் ஜவுளித் துறையில் சுமார் 15 ஆயிரம் கோடி இழப்பிற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. குசராத்தி பனியா மார்வாடி பெரு நிறுவனங்களுக்காக, சிறுகுறு  நிறுவனங்களை, தென்னிந்தியா சார்ந்த வர்த்தகத்தை நட்டத்திற்குள் தள்ளியிருக்கிறாரா மோடி என்கிற கேள்வியை, இந்தியாவின் மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு எழுப்பியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவிக்கு வந்த நாளிலிருந்து உலக நாடுகளிடையே கடும் வரிகளை விதித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதனை அமெரிக்காவின் வர்த்தகப் போர் என்று பொருளாதார நிபுணர்கள் வரையறுக்கினறனர். இந்தியாவையும் ரசியாவிடமிருந்து பெட்ரோல், டீசல் தயாரிக்கப் பயன்படும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யக்கூடாதென நிர்ப்பந்தித்தார். இதனை ஏற்க மறுத்ததால், ஆகஸ்ட் 27, 2025 முதல் 50% வரியை விதித்திருக்கிறார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே 27% அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 2% ஆகும். 

ஜவுளிப் பொருட்கள், அரிசி, மீன்கள், மசாலா, பால் முதலான உணவுப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், தோல் பொருட்கள், ரப்பர், மரப் பொருட்கள், கண்ணாடி, செராமிக் என பெரும்பாலும் சிறுகுறு நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் உற்பத்திப் பொருட்களுக்கு இந்த 50% வரிவிதிப்பு பொருந்தும். இந்த வரி விதிப்பினால் இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தகம் சுமார் 60 பில்லியன் டாலர் (5 லட்சம் கோடி) அளவில் பாதிக்கப்படும் என ‘உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி மையம் (GTRI)’ தெரிவிக்கிறது. இந்த சந்தையை வேறு நாடுகள் கைப்பற்றும் வாய்ப்புள்ளதாகவும் இது கூறுகிறது. வேலை வாய்ப்புகளை அதிகப்படியாக வழங்கும் சிறுகுறு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாவதால், இதை நம்பியிருக்கும் லட்சக்கணக்கானத் தொழிலாளர்களின் வாழ்வாதார நிலை கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

ஜவுளித் துறை ஓங்கியிருக்கும் கொங்கு மண்டலப் பகுதிகள் குறிப்பாக திருப்பூரில் மட்டும் சுமார் 15,000 கோடி இழப்பு ஏற்படப் போவதாகவும், சுமார் 3000-க்கும் மேற்பட்ட சிறுகுறு பின்னலாடை நிறுவனங்கள் மூடப்படும் எனவும், 5 லட்சம் சாமானிய தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்திப்பார்கள் எனவும் ஜவுளித்துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். திருப்பூர், குஜராத்தின் சூரத், நொய்டா போன்ற சிறுகுறு ஜவுளி நிறுவன உற்பத்தியாளர்கள் இழப்புகளை சந்திக்க வேண்டியிருப்பதால், பெரும்பாலான நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டதாக ‘இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO)‘ கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டியும் சேர்ந்து 40%-த்திற்கும் அதிகமான நிறுவனங்களை மூடச் செய்தது. மீதமுள்ள 60%-லும் 30% நிறுவனங்களே பின்னலாடைத் தொழிலில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றன. மேலும், வங்கதேசத்திலிருந்து இறக்குமதி ஆகும் பின்னலாடைக்கான வரி 2017 முன்பு வரை 12% ஆக இருந்தது. ஆனால் அதை மோடி அரசு நீக்கியதால் ஆடை இறக்குமதி அதிகமாகி, அதன் மூலமும் இழப்பு ஏற்பட்டது. இப்போது 50% வரிவிதிப்பினால் எதிர்கொள்ளப் போகும் இழப்பும் சேர்ந்து சிறுகுறு நிறுவனங்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், அமெரிக்காவின் கூடுதலான வரிவிதிப்பைத் தொடர்ந்து உடனடியாக தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 500 டன் மீன்கள் வரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கடல் பகுதிகளான தென்னிந்தியாவே அதிக அளவில் மீன் ஏற்றுமதி செய்பவை. மீன் உற்பத்தியில் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு எறால் ஏற்றுமதி 30 ஆயிரம் டன் வரை  நடைபெறுகிறது. சுமார் இரண்டாயிரம் கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மீன் ஏற்றுமதியில் வேறு சந்தையை அடையும் வரை கெட்டுப் போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். குளிர்பதன வசதிகள் அதிகமாக வேண்டும். கடல் வழி மாறும் போது அதிக செலவினங்கள் ஏற்படும். ஒவ்வொரு சந்தைக்கு ஏற்ற தனித்துவமான தரம் மற்றும் சான்றிதழ் போன்ற ஒழுங்குமுறைகள் மாற்றப்பட வேண்டும் என பல சிக்கல்களை சந்திக்க வேண்டும். இதனை நம்பியிருக்கும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வேறு சந்தையை கிடைக்கும் வரை பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.  

தென்னிந்திய வர்த்தகமும், சிறுகுறி நிறுவன உற்பத்தி பொருட்களும் பாதிக்கப்பட்ட சூழலில், பெரு நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் அரிய வகைக் கனிமங்கள், செமி கண்டக்டர் எனப்படும் குறைக் கடத்திகள், லேப்டாப், ஐ போன், கணிப்பொறி போன்ற மின்னணு பொருட்கள், தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த நகைகள், பெட்ரோலியப் பொருட்கள், ஜெனரிக் மருந்துகள், இரசாயனங்கள், இலகு ரக லாரிகள்  போன்ற பொருட்களுக்கு இந்த 50% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பாக்ஸ்கான் செமிகண்டக்டர் லிமிடெட், டாடா எலக்ட்ரானிக்ஸ், விப்ரோ, சாம்சங்,  மற்றும் அதானி, அம்பானியின்  எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பெட்ரோலியம், எரிவாயுக்கள், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், கச்சா எண்ணெய், சோலார் பொருட்கள் எதற்கும் வரி இல்லை. மேலும் TCS, இன்போசிஸ், HCL போன்ற ஐடி சேவைகள், டாக்டர்.ரெட்டிஸ்(Dr.Reddys), சன் ஃபார்மா(Sun Pharma), சிப்லா(cypla) போன்ற மருந்து நிறுவனங்களுக்கும் இந்த வரிவிதிப்பு இல்லை.

இந்தியாவின் இரு மிகப்பெரிய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்) மற்றும் கௌதம் அதானி (அதானி குரூப்) ஆகியோரின் நிறுவனங்கள், பெட்ரோல் (கேசோலின்), டீசல் மற்றும் பிற உற்பத்தியான எண்ணெய் தயாரிப்புகளின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரசியாவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து, அதை பெட்ரோலியமாக ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்த நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டுகின்றன. இந்தியாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதி 2025-ல் மட்டும் $80 பில்லியன் (₹6.7 லட்சம் கோடி), அதில் அம்பானி-அதானி நிறுவனங்கள் 30-40% பங்கு வகிக்கின்றன. 

அம்பானி ஜாம் நகரில் உள்ள ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் மூலமாக பெரும் லாபம் ஈட்டுவதற்காகவே மோடி அமெரிக்காவின் வலியுறுத்தல்களை ஏற்கவில்லை என்பதும் பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

பெஞ்ச் மார்க் (Benchmark) எனப்படும் உலகளாவிய சந்தை மதிப்பு விலை, ஒரு பேரலுக்கு சுமார் $80 (ரூ6720) என இருக்கும் போது, ரஷ்ய கச்சா எண்ணெய் $4 (ரூ336) தள்ளுபடியில் விற்கப்பட்டது. இதனால் பெரும் பயன் அடைந்தது ரிலையன்ஸ் அம்பானி நிறுவனம். கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோலியமாக அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கு விற்ற வகையில் இந்நிறுவனத்திற்கு 2022- 25 வரையான லாபம் மட்டுமே சுமார் 60 ஆயிரம் கோடி (ஆதாரம் – Reuters). அம்பானி பெட்ரோலியத்தினால் லாபம் ஈட்ட,  அதானி நிறுவனங்கள் பெட்ரோலியத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் LNG, CNG வாயுக்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தயாரிப்புகளால் லாபம் ஈட்டுகிறது. இவை எவற்றிற்கும் கூடுதல் வரியில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ரசியா மூலமாக மலிவான விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தாலும் இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோலியம், டீசல்  விலை குறையவில்லை. ஏனென்றால் நம்மிடம் விற்பனை செய்யப்படும் பெட்ரோலுக்கு  சுமார் 50% வரிகள் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. சுத்திகரிப்பு, போக்குவரத்து என எல்லாம் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் 50 ரூபாய் மட்டுமே. ஆனால் நம்மிடம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மீதமுள்ள 50 ரூபாய் வரிகளாகப் பிடுங்கப்படுகிறது. இதன் மூலம் அரசின் வருமானம் 2025-ல் மட்டும் 7.51 லட்சம் கோடியாகும். ரசியாவில் இருந்து மலிவான விலையில் வாங்கினாலும் அம்பானிக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் பெரும் லாபமும், இந்தியாவின் 140 கோடி மக்களில் சுமார் 120 கோடி மக்களாவது உபயோகிக்கும் பெட்ரோலியத்திற்கு விலை குறைவில்லாத நிலையும் என மிதமிஞ்சிய கொள்ளை ரசியாவிடமிருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் மூலமாக நடக்கிறது.

மேலும் அமெரிக்கா வரியை விதித்தாலும் வேறு நாடுகளுக்கு சந்தையை  விரிவாக்கும் ஆற்றலும், நிதி மூலதனமும், பங்குச் சந்தை ஆற்றலும் என பெருமளவிலான தொடர்புகள் பெரு நிறுவனங்களுக்கு இருக்கின்றன. ஆனால் சிறு குறு நிறுவனங்களுக்கு இந்தக் கட்டமைப்பு எளிதானதில்லை. பெரு நிறுவனங்கள் பாதிப்புக்கு ஆளாகாததால் அவர்களின் நல விரும்பியான மோடிக்கு கவலை ஏற்படவில்லை. எனவே அமெரிக்காவின் வலியுறுத்தலுக்கு செவி சாய்க்கவில்லை என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

அமெரிக்க விதித்த 50% வரி விதிப்பின் உண்மைத்தன்மை இப்படியாக இருக்கும்போது, இதனை மறைப்பதற்காகவே சுதேசி பொருட்களை உபயோகிப்பதற்கே இந்தியா முக்கியத்துவம் தரும் என்றும், இந்தியா எந்த அழுத்தத்தையும் தாங்கும் என்றும் மக்களிடையே மோடி உரையாற்றுகிறார். மேலும் கருப்பு பணம், வெள்ளை பணம் எதுவாக இருந்தாலும் இந்திய நிறுவனங்கள் இந்தியாவிற்குள்ளே முதலீடு செய்யுங்கள் என்று சொல்கிறார். கருப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் ஏழை எளிய மக்களை கடும் துன்பத்திற்கு ஆளாக்கிய மோடியின் பேச்சு இது. ஊழலை, கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகள் எல்லாம் கைவசம் இருப்பதால், கருப்பு பணத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள் என பெரு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்றே அவரின் இந்தப் பேச்சு மூலமாக தெரிய வருகிறது.

பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் போர் நடவடிக்கையின் போது 24 மணி நேரத்திற்குள் போர் நிறுத்தம் செய்யாவிட்டால் வர்த்தகத்தை நிறுத்துவோம் என்று சொன்னதால், 5 மணி நேரத்திலேயே மோடி போர் நிறுத்தம் செய்து விட்டார் என டிரம்ப் மோடியை அம்பலப்படுத்தினார். டிரம்ப் கூறிய வர்த்தக நிறுத்தம் என்பது குஜராத், பனியா, மார்வாடி பெரு நிறுவனங்களுடனான வர்த்தகம் என்பதனால்தான், 5 மணி நேரத்திலேயே மோடி போரை நிறுத்தியிருக்காரே தவிர, சிறுகுறு நிறுவனங்கள் பற்றிய அக்கறையினால் அல்ல என்பதையே இன்றைய டிரம்பின் 50% கூடுதலான வரி விதிப்பு தெளிவுபடுத்துகிறது.

குஜராத், மார்வாடி, பனியா நிறுவனங்களே தங்கம், வெள்ளி, எலக்ட்ரானிக்ஸ், மின்னணுப் பொருட்கள், மொபைல், பெட்ரோலியப் பொருட்கள் எனப் பல்லாயிரம் கோடி வர்த்தகத்தில் கோலோச்சுகிறார்கள். அவர்கள் தயாரிக்கும் பெரும்பாலான பொருட்களுக்கு வரி விதிப்பு இல்லை. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதலாக வரி விதித்த அரிசி, கடல் சார் உணவுகள், தோல் பொருட்கள். கைவினைப் பொருட்கள், இரும்பு, எஃகு பொருட்கள் என அனைத்துமே தென்னிந்தியாவையே அதிகம் சார்ந்தவை. தென்னிந்தியாவின் சிறுகுறு நிறுவனங்களே பெரும்பாலும் இந்த கூடுதல் வரிவிதிப்பினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன என்பது வரிகள் விதிக்கப்பட்ட, வரிகள் விதிக்கப்படாத பொருட்களின் மூலமாகவே தெள்ளத் தெளிவாகிறது.

ஒரு புறத்தில் ஜி.எஸ்.டி வரியினால் தென்னிந்திய நிறுவனங்களை நெருக்கடிக்குத் தள்ளி பொருளாதாரத்தை நாசப்படுத்தும் சூழலில், மறுபுறத்தில் தென்னிந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்நாட்டில் சுமையை இறக்கியிருக்கிறார் மோடி.

பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் தொகுதி மறுவரையறை, பாஜக ஆளாத மாநில கட்சிகளின் முதல்வர்களைக் குறி வைத்து பதவி பறிப்பு சட்டம், தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி சேர்ந்து லட்சக்கணக்கான வாக்குகள் திருட்டு என ஜனநாயகத்தை பேரழிவுப் பாதையில் கொண்டு செல்லும் பாஜக மோடி அரசு, கொங்கு மண்டலத்தின் பொருளாதாரத்தை சரியச் செய்திருக்கிறது. பல்லாயிரம் சிறுகுறு நிறுவனங்களை வீழ்த்தி, பல லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை அழித்திருக்கிறது. மோடியின் சுதேசி பிரச்சாரம். இது குஜராத் பனியா மார்வாடி பெருநிறுவனங்கள் மீதான அக்கறையே தவிர, பெரும் வேலைவாய்ப்பை சாமான்ய மக்களுக்கு அளிக்கும் சிறுகுறு நிறுவனங்கள் மீதான அக்கறையல்ல என்பது டிரம்ப் விதித்த 50% வரி மூலமாக மீண்டும் ஒரு முறை நிரூணமாகி இருக்கிறது.          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »