தத்துவமே தலைமை – தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

ஏமாறும் இளைஞர்கள் கொள்கை என ஏமாற்றும் தலைவர்கள் என்ற தலைப்பில் திங் பாலிடிக்ஸ் சேனலில் கடந்த ஜீலை 19, 2025 அன்று பேட்டி அளித்தார் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள். தலைவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இடையிலான இன்றைய தத்துவப் புரிதல்களை விளக்கும் நேர்காணல்.

நிரூபர்: திங் பாலிடிக்ஸ் (Think politics) நேயர்களுக்கு வணக்கம். கேள்விகள் ஆயிரம் நிகழ்ச்சி மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நம் நிகழ்ச்சி இன்றைய சிறப்பு விருந்தினர் மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள். தோழர் வணக்கம்.

கேள்வி: அனைவரும் தேர்தல் பரப்புரைக்கு பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், எனக்கு இன்னொரு கோணத்தில் உங்களை நேர்காணல் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. பொதுவாக தலைவர்கள் உருவான பின் சித்தாந்தங்கள் உருவாகும். ஒரு பெருங்கூட்டம் அதைப் பின்பற்றும் போது, அந்த தலைவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, அதன் மூலமாக, அவர்களின் தியாகத்தின் மூலமாக, உழைப்பின் மூலமாக, போராட்டத்தின் மூலமாக ஒரு பெரிய மாற்றம் நடக்கும். தேசங்கள் உருவாகும். உலகம் முழுக்க நிறைய தேசங்கள் இதற்கு உதாரணம் சொல்லலாம். நம் தமிழ்நாடையும் சொல்லலாம். அந்த மாற்றத்தை நேரடியாக பார்த்து பலன்களை அனுபவிக்கும் ஒரு தலைமுறைக்கு 50 வருடம் ஆகி இருக்கும். இவர்கள் அதிகாரத்திற்கு வந்ததற்குப் பிறகு இந்த தத்துவத்தின் மூலமாக என்ன மாற்றங்கள் நடந்து இருக்கிறது என்பதை அவர்கள் பார்த்திருப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் 50 வருடத்திற்கு பிறகு வந்த பலன்களை, அந்தப் போராட்டங்களை நேரடியாக பார்க்காத அல்லது அனுபவிக்காத தலைமுறை ஒன்று வரும். அந்த தலைமுறைக்கு கடந்தகாலம் தேவையில்லை. அவர்களுக்கு இன்றைக்கு நிகழ்காலத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தான் கண்ணுக்குத் தெரியும். நாங்கள் முன்பு போராடினோம், நாட்டுக்காக இவ்வளவு செய்தோம், படிக்க வைத்தோம் என சொல்வதற்கு பல விசியங்கள் அவர்களுக்கு இருக்கலாம். அதையெல்லாம் கேட்கும் அளவிற்கு புது தலைமுறைக்கு மனநிலை இருக்காது. அப்படி இருக்கும்போது ஒரு 50 வருடங்களுக்குப் பிறகு தத்துவங்களை பின்பற்றி உருவான தேசத்தில் இருக்கக்கூடிய மக்களே வேறு ஒரு தத்துவத்தையோ அல்லது வேறு ஒரு தலைவனையோ தேடுவார்கள். மாற்றம் வேண்டும் என்று அது தொடர்ந்து கொண்டே இருக்கும். இது நம் ஊரிலேயும் இருக்கிறது. இந்திய சூழலில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து இளைய தலைமுறை மாற்றத்தை தேடுவார்கள். அப்படி அவர்களிடம் மாற்றமாக வரக்கூடிய சக்திகள் உண்மையிலேயே மாற்றமாக இருக்கிறதா என்கிற கேள்வியும் எழும்பும். சினிமாவின் மூலம் ஏற்படும் கவர்ச்சியோ அல்லது பேச்சின் மூலம் வரக்கூடிய கவர்ச்சியோ, அந்தக் கவர்ச்சியால் உந்தப்பட்டு அரசியலாக உருவெடுத்திருக்கும் கட்சிகளிடம் செல்லும் இளைஞனைப் பற்றிய கருத்துக்களை ஒரு இயக்க அரசியல் முன்னெடுப்பவராக  நீங்கள் சொல்லுங்கள்? இன்றைய இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்று நினைப்பது சரியாக கூட பார்க்கலாம். ஆனால் அதை அவன் எப்படி ஏற்று கொள்கிறான்? எதை நோக்கி பயணிக்கிறான்?

பதில்:  நிச்சயமாக இது ஒரு நல்ல கேள்வி. இது எல்லாருக்கும் தேவைப்படக்கூடிய ஒன்று. ஒரு சமயத்தில் நமக்கு சாதகமாக இருந்த கோட்பாடு ஒரு காலகட்டத்திற்கு பின்பு காலாவதி ஆகிவிட்டதா? ஒரு கட்டத்தில் இருந்த தலைவர்கள் இன்றைக்கு தேவைப்படாமல் போய்விட்டார்களா? ஒரு கட்டத்தில் நமக்காக இருந்த அமைப்பு இன்றைக்கு பயனில்லாமல் எதிரியாக நாம் பார்ப்பதற்குரிய அமைப்பாக மாறுகிறதா? என்கிற கேள்விகள் உலகம் முழுவதிலும் இருக்கிறது. இதனை இரண்டு விதத்தில் பார்க்கலாம். 

மதம் என்கின்ற ஒன்று. அதுதான் காலம் காலமாக இருக்கக்கூடிய ஒரு நம்பிக்கை சார்ந்த சமூகக் கட்டமைப்பாக இயங்குவது மதம்தான். அது தன்னை புதுப்பிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. கடவுள் இருக்கிறார், நல்லது செய்தால் நல்லது செய்வார், கெட்டது செய்தால் கெட்டது செய்வார் என எளிமையாக தர்க்கத்துடன் முடிந்து விடும். நீ கடவுளுக்கு விசுவாசமாக இரு என்பதோடு சரி. மற்றவை எல்லாம் அதற்கு மேல் கட்டப்பட்ட கூடுதலான கதைகள் தான்.

மற்றொன்று மக்கள் பக்கத்திலிருந்து பிரச்சனைகளை யோசிப்பது. அனைத்திற்கும் கடவுள் தான் தேர்வு என்பது இல்லாமல் நம் பிரச்சனைகள் தீர்வதற்கு வழிமுறை என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளும் அதற்கான அதற்கான நடைமுறைகளையும் வைத்து தான் தான் ஒரு இயக்கம் வரும். தலைவர்கள் வருவார்கள். கோட்பாடுகள் செயல்படும். இப்போது இன்றைய பிரச்சனைகள் தீர்ந்து நீங்கள் வேறு ஒரு நபராக மாறுகிறீர்கள்.

உதாரணத்திற்கு 1940- 60 வரைக்கும் இருந்த தலைமுறை ஏழைத் தலைமுறையாக இருந்தது. அதன் பிறகு 1970-80 வரை அதுவே நடுத்தர வர்க்கமாக மாறியது. அந்த நடுத்தர வர்க்கம் வரும் வரைக்கும் அந்த கருத்து பயன்படக் கூடியதாக அந்தத் தலைமுறை பார்த்தது. 1990-க்கு பின்பு உயர்தட்டு வர்க்கமாக மாறும்போது, அந்த இயக்கமோ, அந்த தலைமையோ, அந்தக் கோட்பாடோ தமக்கு பயன்படுகிறதா என்று யோசிக்க ஆரம்பிப்பார்கள். இப்படியான இந்த வாழ்வியல் மாற்றத்தில் வர்க்க மாற்றமும் நடக்கிறது. அந்த மாற்றத்திற்கு ஏற்ப கொள்கைகளிலும் மாற்றங்கள் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதும், இயக்க ரீதியாக நடைமுறைகளிலே ஒரு மேம்படுத்தல் (update) செய்வதும் தேவைப்படுகிறது. மக்கள் மாறி, சமூகம் மாறி அடுத்தடுத்த கட்டங்கள் நகரும் போது இயக்கங்களாக இயங்கக் கூடியவர்கள் அல்லது தலைவர்களாக இருக்கக்கூடியவர்கள் தேங்கி போகும்போது இந்த வேறுபாடுகள் வருகின்றன.

உண்மைதான் தத்துவம். உண்மையைப் புரிந்து கொள்ளக்கூடிய விஷயங்கள் தான் தத்துவம். அப்படி என்றால் எது உண்மை என்பதை விவாதிக்க வேண்டும். கால சூழல்கள் மாறும் பொழுது அதற்கேற்ப தத்துவம் தன்னை தகவமைத்துக் கொண்டே வரும். தத்துவம் தன்னை தகவமைப்பதற்கான புரிதலோடு இருக்கும். ஆனால் அதை நடைமுறைப்படுத்தக் கூடியவர்கள் அந்தப் புரிதலோடு இருக்க மாட்டார்கள். அந்த காலத்தில் தாங்கள் இருந்த தன்மையுடனே இந்த காலத்தில் இருக்கும்போது  நாங்கள் அந்த காலத்தில் அப்படி இருந்தோம் என்கிற தன்மையுடனே இந்த காலத்திலும் இருக்கும் போது சம்பந்தமில்லாதவர்களாக (irrelavant) மாறுகிறார்கள். 

மதத்துக்கு அந்த சிக்கல் இல்லை. மதத்தின் அடித்தளம் ஒன்றுதான். 5000 வருடமாக நம்பினாலும், அத்தனை காலமும் ஏழையாக இருந்தாலும் சாமியிடம் கேள்வி கேட்க மாட்டார்கள். தான் ஏழையாக இருப்பதாக சாமியிடம் யாராவது சண்டை போட்டிருக்கிறார்களா? நான் உனக்காக மொட்டை அடித்திருக்கிறேன், அலகு குத்தி இருக்கிறேன், யாகம் செய்து இருக்கிறேன், யார் யாரையோ (பார்ப்பனர்களையோ அல்லது சோதிடர்களையோ) அழைத்து வந்து அவர்களிடம் காசு எல்லாம் கொடுத்து பூசை செய்திருக்கிறேன். ஆனால் நீ என்னையே ஏழையாக வைத்திருக்கிறாயா? என்று யாரும் போய் கேட்பதில்லை. அது ஒரு ஆறுதல் அல்லது அந்த மாதிரி ஒரு தன்மையுடன் முடிந்து போய்விடும். கடவுளுக்கு அதற்கான பொறுப்புணர்வு கிடையாது.

ஆனால் இயக்கத்தினரிமோ, தலைவரிடமோ பொறுப்புணர்வு இருக்கிறது. இந்த இடத்தில் இயக்கம், தத்துவம், கோட்பாடு வாசித்து தன்னை வளர்த்து கொள்ளவில்லை என்றால், அது தேங்கி போய்விடும். தத்துவம் என்பது அறிவியல் தான். அந்த அறிவியல் வளர்ந்து வரவேண்டும். அதை நீங்கள் வளர்க்காமல் பாதுகாப்பாக வைத்திருப்பீர்கள் என்றால், அதாவது தத்துவ புத்தகத்திற்கு பூஜை பண்ண ஆரம்பித்து விட்டீர்கள் என்று வைத்துக் கொண்டால், அப்போது மக்களிடமிருந்து அந்நியமாகி போவீர்கள். அதனால் தான் பல இடங்களில் அந்த சிக்கல்களை நாம் எதிர்கொள்றோம்.

இங்கு இருக்கக்கூடிய கட்சிகளை பார்ப்போம். 50 ஆண்டுகளாக இருக்கக்கூடிய கட்சிகளில் முன்பிருந்த அந்த கட்சியினுடைய மாவட்ட அளவிலுள்ள தலைவர்கள் எளிய மக்களாக இருந்திருப்பார்கள். மிக எளிமையாக உட்கார்ந்திருப்பார், பேசி இருப்பார், எல்லாரும் ஒன்றாக வேலைக்கு போவார்கள், வருவார்கள். அதற்கு பின்பு பார்த்தால் அவருடைய பையன் என்னவாகியிருப்பான் எனில், அவரோடு கொஞ்சம் உயர்ந்த இடத்துக்கு வந்திருப்பார். அவருக்கும் மக்களுக்குமான தொடர்பு கொஞ்சம் குறையும். அதற்கு அடுத்த தலைமுறை வெளிநாட்டுக்கு போய் படித்து, ஊருக்கும் அவருக்கும் தொடர்பு இல்லாமல் போயிருக்கும். ஊர் மக்கள் அங்கேதான் இருக்கிறார்கள். இவர்கள் வேறு வேறு இடத்துக்கு போகும் பொழுது அந்த தொடர்பு இல்லாமல் போவதும், தொடர்பற்று போவதும் நடக்கிறது. இதற்கு தத்துவம் என்ன செய்யும்? தத்துவத்தில் மேல் எந்த தவறும் இல்லை.

கேள்வி:. இப்போது தத்துவமும் தலைவர்களும் அன்னியப்பட்டு நிற்கும்போது, அடுத்த தலைமுறை வேறொன்று தேடுகிறது. புதிய விருப்பத்தை தேடும்போது அவர்களுக்கு என்னவாக இருக்கும் என்ற ஒரு கேள்வியும் வருகிறது. பழைய தத்துவத்தைப் பிடித்து கொண்டிருக்கக்கூடிய தலைவர்களும் சரி, அதை பின்பற்றக்கூடிய முந்தைய தலைமுறையும் சரி, என்ன முடிவு எடுப்பார்கள்? மாற்றத்துக்கான விருப்பம் நல்ல முடிவாக இருக்குமா? என்ற ஒரு கேள்வியும் வருகிறது. ஏனெனில், முந்தைய தலைமுறைக்கு இந்த தத்துவத்தின் செயல்பாடு தெரியும், புதிதாக வரக்கூடிய தலைவர்களிடம் இருக்கக்கூடிய குறைகள் எல்லாமே மிக தெளிவாக தெரியும். ஆனால் வரும் இளம்தலைமுறைகள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க மாட்டார்கள். இவர்கள் இந்த பேச்சுக்கோ அல்லது ஏதோ ஒரு விசியத்துக்கோ மயங்கி ஏற்பார்கள். அதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களோ அல்லது விருப்பங்களையோ குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: நமது அப்பாக்களை நம்முடைய பதின் பருவத்தில் (teenage) விமர்சனம் இருந்தாலும் இப்போது நமக்கு அப்பாக்கள் கொடுக்கும் ஆலோசனை தேவைப்படுகிறது. அவர் 70 வயதுக்கு போகும் பொழுது அப்பா தேவையில்லை என தூக்கி போட முடியாது இல்லையா, அந்த சமயத்தில் நீங்கள் அந்த இடத்துக்கான ஆளாக மாறுவீர்கள். அவரின் அனுபவமும் வாழ்வில் எதிர்கொண்ட அனுபவத்தையும் இணைக்கும் பொழுது அடுத்த தலைமுறை வந்துவிடும். அப்போது அந்த தலைமுறைக்கு நீங்கள்தான் கொண்டு போக வேண்டும். ஒரு நிறுவனம் அல்லது அமைப்பில் இருக்கக்கூடிய சிக்கல் என்னவாக வரும் எனில், அது ஒரு நெருக்கடிக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும். ஒரு கட்டத்துக்கு மேல் நெருக்கடி வந்தால் அது வேறு விதமாக மாறியிருக்கும். ஆனால் தன்மையை மாற்றி இருக்காது. இது ஒரு பிரச்சனையாக வந்து மாறி நிற்கும்.

இளைஞர்களை ஒரு அமைப்புக்குள்ள கொண்டு வந்து, அவர்கள் கையில் கொடுக்கும் பொழுது அது ஒரு புது மாற்றத்தை/ புது விசியத்தை கொண்டு வரும். ஆனால் பழைய தலைமுறைக்கு என்ன ஒரு சிக்கல் இருக்குமென்றால், இளம் தலைமுறையாக வருபவர்கள் சூழலை சரியாக புரிந்து கொள்ளாமல் தவறான நிலைப்பாடு எடுத்துக்கொண்டு வரக்கூடிய விளைவுகளை, முன் தலைமுறையினர் ஏற்கனவே பார்த்திருப்பார்கள். இது இரண்டுமே பொருந்தாமல் போய் நிற்கும். அதனால் இளைய தலைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் கடினப்படுவார்கள், யோசிப்பார்கள், அந்த இடத்துக்குள் தடுமாறும் ஒரு பிரச்சனை வந்து வரும்.

இப்போது மே 17 இயக்கத்தை எடுத்து கொள்வோம். மே 17 இயக்கம் எந்த புது செய்தியுமே சொல்லவில்லை. ஆனால் புது குரலில் பேசுகிறது. புது விசியமாக புது வழிமுறைகளில் ஒரு பிரச்சனையை அணுகுகிறது. இதனுடைய பரப்புரை முறைகள்  வேறுபட்ட முறைகளாக மாறுகிறது. இது உங்களுக்கு ஒரு கோட்பாடை இன்றைய காலகட்ட வடிவங்களுக்கு ஏற்ப சொல்வதற்கான ஒரு கட்டமைப்பாக மாறுகிறது. அப்படி உலகம் முழுவதுமே புது புது அமைப்புகள் உருவாவதும், வளர்ந்து வருவதும் நடக்கிறது.

நாங்கள்(மே 17) பெரியாரிய அமைப்புதான், அம்பேத்கரியத்தை உள்வாங்கிய அமைப்புதான், மார்க்சிய இடதுசாரி பண்பு கொண்ட அமைப்புதான். நாங்களும் புதிதாக எந்த தத்துவத்தையும் கண்டுபிடித்து கொண்டு வரவே இல்லை. ஆனால் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில நாம் சொல்லக்கூடிய இடம் வரும்பொழுது, மக்கள்/இளைஞர்களுக்கு ஈர்ப்புடையதாக மாறுகிறது. அதனால் இளைஞர்களால் இயங்க முடியும் என்ற ஒரு நம்பிக்கையில் வந்து நிற்கிறது. நாங்கள் இன்னும் 20 வருஷம் கழித்து இதே மாதிரி இருப்போமா என சொல்ல முடியாது. அன்றைக்கு கெட்டி தட்டிப் போன ஆளாக இருக்கலாம். புது புது அமைப்புகள் வரும். கோட்பாடுகள் சாவதில்லை, கோட்பாடுகள் காலாவதியாவதில்லை. நிறுவனங்கள் தான் மாறிக்கொண்டே இருக்கிறது. அதன் தேவைகள் இருந்தது எனில், புது நிறுவனங்கள் உருவாகும். அது தவிர்க்க இயலாததாக வந்து நிற்கும்.

மாவோ ஒரு முக்கியமான விசியம் சொல்வார். மாவோவும் ஸ்டாலினும் இது குறித்து பேசி இருக்கிறார்கள். மாவோ ஒரு கட்டத்தில் ஒரு அமைப்புக்குள் சீர்திருத்தம் எவ்வளவு முக்கியம் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி பேசியது என்பது, நாம் எல்லாருமே அறிந்ததே. அமைப்புக்கு ஒருத்தர் வந்துவிட்டாதாலே புரட்சிகரவாதியாவோ, சீர்திருத்தவாதியாவோ, முற்போக்காளரோ இருப்பார் என்ற அவசியம் இல்லை. ஒரு கட்டத்தில் அவரும் அமைப்புக்குள் அதிகாரத் தன்மையோடும் கெட்டி தட்டிப் போன நபராகவும் மாறும் பொழுது, அவர் எதற்காக வந்தாரோ அதற்கு எதிராகவே மாறுவார். இதையெல்லாம் சீர்திருத்தக்கூடிய விஷயங்களை அவர்கள் நடைமுறையாக செய்திருக்கிறார்கள்.

அப்படிதான் ஒரு பெரிய அளவில் பொறுப்பில் இருந்த ஒருவர், ஒரு கட்டத்தில் அதை உணர்கிறார். அதற்கென்று அவர்கள் தனியாக பள்ளி வைக்கிறார்கள். திரும்ப பயிற்சி செய்வதற்கும், தன்னைத்தானே மறுபடியும் தகவமைத்து கொள்வதற்கான பள்ளிக்கூடத்திற்கு நான் மறுபடியும் போய் சேருகிறேன் என போய் சேரும் பொழுது, அங்கு நீங்கள் தொழிலாளியாகத்தான் வேலை பார்க்க வேண்டும். அங்கு நீங்கள் ஒரு மாவட்ட தலைவர், செயலாளர் என்கிற கதை எல்லாம் கிடையாது. அங்கு தொழிலாளிதான். அங்கு தொழிலாளியாகவே அவர் இயங்குகிறார். ஒரு ஆறு மாதம் இயங்கும் பொழுது தொழிலாளருடன் பழகும் பொழுது, தனக்குள் இருந்த அந்த விசியங்கள் எல்லாவற்றையும் மறு தகவமைத்து கொள்கிறார். அதாவது தன்னை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். இந்த ”மறுகல்வி செயல்முறை” எத்தனை அமைப்புகளில் இருக்கிறது.

நீங்கள் அதிகார அமைப்பில் பார்த்தால், ”பொறுப்புகள் என்றால் பொறுப்பு சம்பந்தப்பட்டது தான். ஆனால், நம் ஊரில் பொறுப்பு என்பது அதிகாரம் சம்பந்தப்பட்டது”. உதாரணத்திற்கு ‘மாவட்ட செயலாளர்’ என்பது அதிகாரம் சம்பந்தப்பட்டது, பொறுப்பு சம்பந்தப்பட்டதல்ல என மாறுகிறது. ’அதிகாரம்’ சம்பந்தப்பட்டதாக மாறும் பொழுது ’பொறுப்பு’ என்பது இரண்டாவது பட்சமாக மாறுகிறது. அப்போது அதிகாரம்தான் முதன்மை மையமாக மாறுகிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கட்சிகளுடைய பெரிய சிக்கலே என்னவெனில், அதிகார மையங்கள் உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்.

இன்றைக்கு ஒரு இளைஞன் ஒரு அமைப்பில் சேர விரும்பினால் முதலில் கேட்பது, ”எனக்கு என்ன பொறுப்பு தருவீர்கள் என்று தான் கேட்கிறான்? நாங்கள் என்ன பொறுப்பு தருகிறோம் எனில், ”இங்கே சாதி பிரச்சனை இருக்கிறது, அதற்கு போராட்டம் நடத்த வேண்டியது உன் பொறுப்பு. இங்கே குடிசை அகற்றப்பட போகிறார்கள், அதற்காக காவல்துறையிடம் மல்லுகட்ட வேண்டியது உன் பொறுப்பு. அங்கே  மாணவர் போராட்டம் நடக்கிறது, அந்த மாணவர்களுக்கு உதவி செய்வது உன் பொறுப்பு” எனச் சொன்னால் அதற்கு தயங்குவார்கள்.

அதாவது பொறுப்பை செய்வதற்கு கொடுக்கப்பட்ட பதவி என்பது அதிகார மையமாக மாறும் பொழுது, அதை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நன்றாக சம்பாதிக்கலாம் என மாறுகிறது. இது இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கட்சிகள் செய்கிறது. இப்படி இயங்கக்கூடிய அரசியல் நிறுவனங்கள் எல்லாம் மக்களுக்கானதாக இல்லாமல் போகிறது. வெறும் சம்பிரதாயங்களாக மாறுகிறது. இதுதான் நாங்கள் பெரிய பிரச்சனையாக பார்க்கிறோம். எங்கள் அமைப்பில் அப்படிப்பட்ட கட்டமைப்பு கிடையாது.

கேள்வி: இப்படியான சூழலில் கிட்டத்தட்ட இங்கு இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாமே தத்துவத்தை கொண்டு போய் சேர்ப்பதற்கோ, மறு கட்டமைப்பு செய்வதற்கோ, அல்லது மீட்டுருவாக்கம் செய்வதற்கோ முயற்சி இல்லாமல், விளம்பர நிறுவனங்களாக மாறி இருப்பதை பார்க்கிறோம். மேலும் வெறும் திட்டங்களுக்கு ஏதோ ஒரு பெயர் வைக்கிறார்கள், புதிதாக வரக்கூடிய அமைப்புகளும் அதேதான் செய்கிறார்கள். அப்போது இந்த குழப்பம் இளைஞர்களுக்கு நெருக்கடி உருவாகிறது. இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் இதை புரிந்துகொண்டு எந்த தத்துவத்தை பதிவு செய்கிறார்கள்?, எதை உள்வாங்கி கொள்வது?, எதை நோக்கி பயணிப்பது? என்கிற ஒரு பெரிய குழப்பம் வந்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இப்போது இருக்கக்கூடிய பிரச்சனை என்னவெனில், எது சரி தவறு என நாம் புரிவதற்கான வாய்ப்புகள் இல்லாத உள்ளடக்கமாக (content) இருக்கிறது. பெரும்பாலானவை காட்சி உள்ளடக்கமாக (visual content) இருக்கிறது. இது மனதுக்குள் நிற்கும், உணர்வு ரீதியாக போகும். இந்த சூழலில் ஒரு சரியான கருத்தை கொண்டு போய் சேர்ப்பதற்கான வழிமுறையை கண்டறிய வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு வேண்டியதை சென்றடையும் வழிமுறைகள் அறியாததை நாங்கள் உட்பட குறைபாடாக பாக்கிறோம். என்றைக்கும் மக்களை குறை சொல்ல முடியாது. மக்களை நாம் அணி திரட்ட வேண்டுமென சொல்லியே வந்திருக்கிறோம். அவர்களை அரசியல்படுத்த வேண்டியது இயக்கங்களின் வேலை. உதாரணத்திற்கு பள்ளிக்கூடம் படிக்க வந்த பையனை மதிப்பெண் எடுக்கவில்லை என்பதற்காக மாடு மேய்க்க போ எனச் சொல்லுவது போலத்தான். மாடு மேய்ப்பதிலிருந்துதான் பள்ளிக்கூடத்தை நோக்கி கொண்டு வந்திருப்பது, அதன் பிறகு மாடு மேய்க்க போ என சொல்லவா நாம் இருக்கிறோம். அது தவறு.

மே 17 இயக்கம் உட்பட இந்த கருத்துக்களை இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற மாதிரி இன்றைய தலைமுறைக்கு ஏற்ற மாதிரியாக சொல்லுவதற்கு தயாராக வேண்டும். அதுதான் பெரிய சவால். அதில்தான் நாம் தோற்றுப் போகிறோம். அதற்கு பொருளாதாரம் பெரும் காரணமாக இருக்கிறது. அடுத்ததாக அதை செய்வதற்குரிய பயிற்சி பெற்ற தோழர்கள் இல்லை. வெறும் நம் கண்ட காட்சி அறிவு (visual knowledge) மட்டும் போதாது. அவனுக்கு கொள்கை கோட்பாடு தெரிய வேண்டும். இவை இரண்டையும் தெரிந்தவர்களுக்கு எளிதில் கடத்த முடியும். இது எல்லா கட்சி, அமைப்புகளுக்குமான இன்றைய நெருக்கடியே.

இன்றைக்கு இருக்கக்கூடிய கல்லூரி இளைஞர்களை எடுத்துக் கொண்டோமெனில், அவர்கள் முழுக்க வீடியோவாக (in shorts), இசையாக (sound music) கேட்கிறார்கள். அவையெல்லாம் 30 நொடிகள் தாண்டுவதில்லை. அதற்குள் ஒரு கருத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டியதாக இந்த தலைமுறைகள் உள்ளன. இதை நாம் தவறாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், இதே தலைமுறைதான் அமெரிக்காவில் பாலஸ்தீனத்துக்காக போராடுகிறார்கள். ஐரோப்பாவில் பாலஸ்தீனத்துக்காக பேசுகிறார்கள். மூர்க்கமாக போராடுகிறார்கள். இன்றும் கல்லூரியிலிருந்து நீக்கி விடுவோம்,  நிதி எதுவும் கிடையாது எனச் சொன்னாலும் கூட, அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு போராடுகிறார்கள். அவர்களும் இதே தலைமுறைதான். அவர்கள் சமூகவலைதளத்தில் சர்வதேச செய்திகளை/ விசியங்களை பார்த்து பழகிவிட்டார்கள். மறுபடியும் அவர்களை அடிப்படைவாதிகளாக மாற்ற முடியாது. மிகவும் எளிதாக உலகத்தையும் பார்க்கிறார்க்ள்.

கேள்வி: ஒரு நிமிடத்திற்குள் தத்துவத்தை, உலக விசியங்களை கம்யூனிஸ்ட் தலைவர்கள் எப்படி கொண்டு போய் சேர்ப்பார்கள்? எதிர் சிந்தாந்தம் கொண்டவர்கள் இரண்டடி வசனம்(punch dialogue) பேசிவிட்டு செல்வார்கள். இதைப் பற்றிய உங்கள் கருத்து?

பதில்: இந்தப் பிரச்சனை காலம் காலமாக இருக்கிறது. அவர்கள் (கம்யூனிஸ்ட் தலைவர்கள்) தத்துவமாகவே நம்மிடம் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதை எளிய முறையில் இன்றைய தலைமுறைக்கு ஏற்ப பேச வேண்டும். உதாரணத்திற்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவரிடம் சென்றால், அவர் இந்த மாத்திரையை மூன்று நாட்களுக்கு போடு சரியாகிவிடும் என சொல்வார். அத்றகு பதிலாக அந்த நோயின் அறிவியல் பெயரை சொல்லி வேதியல் மூலக்கூறுகளை விளக்கினால் நோயாளிக்கு புரியுமா?, ஆக எளிய மக்களுக்கோ அல்லது இன்றைய தலைமுறைகளுக்கோ தத்துவத்தை மிக எளிமையாக, அவர்களுக்குப் புரியும் வடிவில் சொல்ல வேண்டும். இன்றைக்கே எல்லாவற்றையும் பேசிவிட முடியாது. தத்துவம் என்பது வாழ்நாள் முழுக்கப் படிக்கக்கூடியது அதை எளிமைப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது.

அடுத்த சிக்கல் மாற்று அரசியல் சொல்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப் படுகிறது. ஒரு புறம் செய்தி சேனல்கள் அழைக்க மறுக்கின்றனர், மறுபுறம் சமூக வலைதளம் முடக்கம். மேலும் பொதுக்கூட்டம் நடத்த பொருளாதார சிக்கல்கள் உள்ளன. அந்த பொருளாதாரத்தில் வசதியாக இருப்பவர்கள் விளம்பரம்/சந்தைப் படுத்துதல் வேலையை செய்கிறார்கள். இன்று பி.ஆர்(Public relation) வேலையை பத்திரிகையாளர்கள் நடத்துகிறார்கள். இவர்கள்தான் அரசியலை நடத்துகிறார்கள். இன்றைக்கு எது பரபரப்பான செய்தியாக மாற்ற வேண்டும்? யார் செய்தி சேனலில் பேச வேண்டும்? யார் எந்த கருத்தை சொல்ல வேண்டும் எனக் கணக்கு போட்டு நடக்க ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலான தொலைக்காட்சி விவாதங்களில் பத்திரிக்கைகாரன் பேரில் ஒருவரைக் கொண்டுவந்து உட்கார வைக்கிறார்கள்.. ’நாங்கள் கடந்த வருட தேர்தலில் எட்டு தொகுதியில் வேலை பார்த்தோம். 200 கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம்’, இவர்கள் (பத்திரிக்கையாளர்) யாரையும் நாங்கள் பார்த்ததில்லை. ஆனால் இவர்கள்தான் கருத்து சொல்கிறார்கள். இந்த சேனலில் ஒரு கருத்து, அடுத்த அந்த சேனலில் ஒரு கருத்து என பரப்புகிறார்கள். அது எல்லாமே உருவாக்கப்பட்ட /திணிக்கப்பட்டு கருத்துக்களாக நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

இன்றைக்கு உண்மையாகவே பெரிய நெருக்கடியில்தான் நாம் நிற்கிறோம். ஒரு பக்கம் தவறான தகவல், இன்னொரு பக்கம் உண்மையே இல்லாத தகவல்கள், ஆழமே இல்லாத தகவல்கள் என சுற்றி இருக்கின்றன. இதற்கு நடுவில் ஒரு இளைஞன் வந்து அரசியலை செய்ய வேண்டுமா என பார்த்தால், 18 வயது பையனோ 20 வயது பையனோ நியூஸ் சேனல் பார்க்கிறானா? செய்தி சுருக்கம் ஏதாவது பார்க்கிறானா என்றால், இல்லை. அவன் வேறுதான் பார்க்கிறான். அப்போது அரசியலையும் பொழுதுப்போக்காக (politics entertainment) கொடுத்தால்தான் பார்ப்பான். முன்பு போல டீக்கடையில் அரசியல் பேசிக்கொண்டு கொடுக்க முடியாது.

இன்றைக்கு ’விலாக் மெட்டீரியல்’ இருக்கிறது. இதை அப்படியே பாஜக அண்ணாமலை பண்றார். அவர் நடப்பார் போவார் அங்கே நின்று பேட்டி கொடுப்பார். அந்த வீலாக்தான் அண்ணாமலை மற்றும் சீமான். அது வேறு ஒன்றுமே கிடையாது. ஒரு போராட்டமும் பண்ணாமல் அண்ணாமலை தமிழ்நாட்டுக்குள் பெரிய தலைவராக பார்க்கப்பட்டார். திமுகவை எதிர்த்து ஒரு போராட்டம், தலைமை செயலகம் போனார், கைது என்றவுடன் ஆட்டோவில் ஏறி கிளம்பி போயிட்டார். அதாவது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆட்டோவில் தப்பித்து ஓட்டினார். ஆக இந்த அரசியல் செயயக்கூடிய ஆட்கள் தான், இன்று பெரிதாக அறியப்படுகிற அளவுக்கு ஊடகம் வளர்த்து விடுகிறது.

கேள்வி: இப்படி ’வீலாக்சும் பிராண்டிங்சும்’ நிறைந்திருக்கக்கூடிய இந்த சூழலில் நம் இளைஞனை குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை. ஆனால் நாம் சொல்ல வேண்டியது அவர்களுக்கு, இதற்கு நடுவில் அவர்கள் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது சரியான தத்துவத்திற்கு வந்து நிற்க வேண்டும். அதற்கு அவர்கள்(இளைஞ்ர்கள்) என்ன செய்ய வேண்டும்?

பதில்: குறிப்பாக அவர்களை சுற்றி நடக்கக்கூடிய அல்லது தேவைகளுக்கான காரணங்களைத் தேட ஆரம்பித்தால் நல்லது. அது மிகவும் முக்கியமானது. இன்னொன்று இளைஞர்கள் ஏதோ ஒரு கிரிக்கெட் குழுவை ஆதரிக்கிறார்கள் அல்லது ஏதோ ஒரு நடிகரை விரும்புகிறார்கள் அல்லது ஏதோ ஒரு திரைப்படம் பிடிக்கும். இப்படி இதெல்லாம் உங்களுக்கு தேர்வுகள் இருக்கின்ற மாதிரி, அரசியலில் தேர்வு இருக்க வேண்டும். அரசியல் இல்லாமல் இருக்கிறேன் என்பது தவறு. சினிமாவற்ற மனிதன் இருக்கலாம். விளையாட்டற்ற மனிதன் இருக்கலாம். அரசியல் அற்ற மனிதன் இருக்கவே முடியாது என்கிற சூழல் இன்று வந்துள்ளது. அதில் ஒவ்வொரு அரசியலும் நீங்களே தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை தேடி செல்லுங்கள். அதில் எது உண்மை எது பொய் என்பதை ஒரு கட்டத்தில் கற்றுத்கொள்வீர்கள். அனுபவம் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும்.

இப்போது அரச பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி நாங்கள் பேசி இருக்கிறோம். அதை கண்டுகொள்ளாத ஒரு மனிதனாக அஜித்குமார் வந்திருக்கலாம். ஒரு அப்பாவி இளைஞன் எங்கேயோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு வேலை செய்து தன்னுடைய வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த இளைஞன். யாரோ ஒருவர் கொடுத்த புகாரில் காவல்துறையால் அடிபட்டு சாகக்கூடிய கொடூரத்தை பார்க்கிறோம். அப்போது அரச பயங்கரவாதம் எப்போது யாரைத் தாக்கும் என யாருக்கும் தெரியாத ஒரு சூழல் அளவுக்கு இன்று வந்து விட்டோம். அரசியல் இல்லையெனில் நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியாது. அரசியல் என்பது அரசியல் கட்சி அல்ல. என்ன நடக்கிறது என்பதை புரிந்தால் நீங்களே பேசி சரி செய்ய முடியும்.

தமிழ்நாட்டு நலன் சார்ந்து யோசிப்பதுதான் இன்றைக்கு நமக்கு இருக்கக்கூடிய ஒரே விசயம். ஏனெனில் நாம்தான் ஒடுக்கப்படுகிறோம். ”இந்தியாவில் உள்ள மக்கள் வெள்ளையர்களால் ஒடுக்கப்பட்டார்கள் என்பது நமக்கு சொல்லப்பட்ட வரலாறு. அது நடந்த வரலாறு. இந்தியாவுக்குள் தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது நடக்கின்ற வரலாறு”. இதை முதலில் ஏற்க வேண்டும்.

ஒவ்வொரு விசயத்துக்கும் சண்டை போட்டு கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஒரு சுதந்திரம் அடைந்த நாடு, சுதந்திரம் அடைந்த மனிதர்களெனில் என்னுடைய தொல்லியல் வரலாறை(கீழடி) பற்றி நாம் ஏன் டெல்லி பாஜக அரசிடம் மல்லு கட்ட வேண்டும்?, மருத்துவப் படிப்பை பற்றி நாம் ஏன் போய் கெஞ்சிக் கொண்டு இருக்க வேண்டும்?, நான் கொடுத்த வரி, எனக்கு திருப்பி கொடு என ஏன் ஒருவனிடம் போய் வழக்கு நடத்த வேண்டும்? நமக்குத் தேவையான சட்டத்தை நிறைவேற்றியதை எவனோ தடுப்பதை எதிர்த்து ஏன் மல்லு கட்டி போராடிக்கொண்டு இருக்க வேண்டும்?, அப்போது இது எல்லாவற்றுக்குமே  போராட வேண்டிய சூழல்.

இது  திமுக/அதிமுக என்கிற ஒரு கட்சி நடத்தக்கூடிய போராட்டம் அல்ல, தமிழர்கள் எதிர்கொள்ளக்கூடியது. இங்கு நீட் தேர்வு தடை வரவில்லையெனில், அதை திமுக தோல்வி, அதிமுக தோல்வி என்கிற இடத்துக்குள் இருந்து பார்க்க அல்ல, அது பாஜக தமிழர்கள் மீது எடுக்கக்கூடிய நடவடிக்கைதான் என்று புரிந்துக்கொள்ள வேண்டும்.. அது நம் பிள்ளைகளுக்கு பிரச்சனையாக வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கட்சி என்பது அதுற்கு பிறகு தான் வந்து நிற்கும். இதைதான் நாம் ஒடுக்கப்படுகிறோம் என சொல்கிறோம். இப்படி தமிழ்நாட்டின் பக்கம் சார்ந்து நின்று இந்த அரசியலை பார்க்க தெரிய வேண்டும்.

இது எல்லாருக்கும் ஒன்றான இந்தியா என யாரை சொல்வது?, குஜராத்காரனை சொல்வதா?, உ.பி.காரனை சொல்வதா?, யார் அந்த இந்தியா என்ற பொறுப்பை கையில் எடுத்து இருப்பது ஒன்று சனாதிபதி எடுக்க வேண்டும் அல்லது பிரதமர் எடுக்க வேண்டும், பிரதமர் மணிப்பூருக்கு போய் பார்க்க மாட்டார், நமக்கு கஜா புயல் வந்தாலும் பார்க்க மாட்டார், அப்படி என்றால் யார் அந்த பொறுப்பை எடுப்பார்? இந்த நிலைமையில்தான் நாம் இன்று நின்று கொண்டு இருக்கிறோம். இந்த சிக்கலில்தான் நாம் ஒடுக்கப்படுகிறோம் என்கிற இடத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதுதான் நம்மை காப்பாற்றும்.

கேள்வி: இப்போதைய இளைஞர்களுக்கு முக்கியமாக படிக்க வேண்டிய ஐந்து புத்தகங்களை பற்றி சொல்லுங்கள்?

ஒன்று இந்தியாவிற்குள் தமிழ்நாடுடைய அரசியல் சூழல் புரிந்து கொள்ளவேண்டும் எனில், பெரியாருடைய எந்த புத்தகத்தையும் எடுத்து படிக்கலாம். அதில் நூற்றுக்கணக்கான தலைப்புகள் இருக்கிறது. ஏனெனில் பெரியார் தான் கருத்தை அப்படியே நமக்கேற்ற மாதிரி சொல்வார். உங்களை யோசிக்க வைக்கும் செயல்முறைக்கு நகர்த்துவார். அதே போன்று இந்தியாவைப் பற்றி சமூக கட்டமைப்பை புரிந்து கொள்ள வேண்டுமெனில், அம்பேத்கர் புத்தகத்தை எடுத்து படிக் வேண்டும். அது உங்களை அடுத்தடுத்த புத்தக கட்டத்திற்கு நகர்த்தும். உலகலாவிய அளவில் என்னவாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள சேகுவேரா உடைய வாழ்க்கை வரவாறு புத்தகம். அது அவ்வளவு ஆழமான ஒரு விசயத்தை கொடுக்கும். ஈழ வரலாறு எடுத்த பிடிக்கலாம். திலீபன் உடைய 12 நாட்கள் உண்ணாநிலை போராட்டம் ஆவணமாக இருக்கிறது. என்ன நடந்தது?, அந்த உண்ணாநிலை போராட்டத்தினுடைய சூழல் என்னவாக இருந்தது?, தெற்காசியாவையே மாற்றி போட்ட ஒரு பெரும் போராட்டம் என்பது திலீபனுடையது. அறிவுமதி ஒரு கவிதை படிக்கலாம், நா.முத்துக்குமாருடைய கவிதை படிக்கலாம், உலக இலக்கியத்தின் மீது பிடிப்பு கிடைக்கும். அந்த இலக்கிய தன்மையோடும் அரசியல் தன்மையும் சேரும்.

கேள்வி: நல்ல சினிமா என சொல்லும்போது தேர்ந்தெடுப்பது என்பது பெரிய பிரச்சனையாகத்தான் இருக்கும். நமக்கான ரசனை என்பது எனக்கானதா? இல்லை எனக்கு இங்கு சொல்லப்பட்ட/  கேட்கப்பட்ட விசயத்தை எல்லாம் சேர்த்துதான் எனக்கு ஒரு ரசனை உருவாகி இருக்கறதா? ஏதோ ஒரு கட்டத்தில் நிறுத்தி நிதானமா உட்கார்ந்து யோசிக்கும் போதுதான் நாம் ஒரு இடத்தை நோக்கி நகர்கிறோம். இதை எப்படி பார்ப்பது?

பதில்: எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை சொல்கிறேன். கல்லூரி காலத்தில் ஒரு திரைப்பட பாடல் எனக்கு பிடிக்கவில்லை, வேறு  பாடல் போடு கேட்கலாம் என்றேன். என் நண்பன் உடனே ஒரு கேள்வி கேட்டான். இந்த பாட்டில் எது உனக்கு பிடிக்கவில்லை என சொல் என்றான். பிறகு நிதானமாக யோசிக்க ஆரம்பித்தேன். அதன்பின் குரல் ஏற்ற இறக்கம் (voice modulation) எப்படி இருக்கிறது. இசை மாற்றம் (music transformation) எப்படி இருக்கிறது என கவனிக்காமல், எப்படி இதை பிடிக்கவில்லை என யோசித்தேன். உன் ரசனைக்குள் நான் வரவில்லை, அதனால் நீ கவனிக்காமலே கடந்து போகிறாய் என்கிற ஒரு விஷயத்தை அவன் பேசினான். அதுவரை நான் மேலோட்டமாக இருக்கிறோமோ என்கிற பார்வையை அன்று கொடுத்தது.

நல்ல சினிமா என சொல்லும்போது தேர்ந்தெடுப்பது என்பது பெரிய பிரச்சனையாகத்தான் இருக்கும். ஒரு காலத்தில் நமக்கு பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா போன்ற மிகப்பெரிய இயக்குநர்கள் பெரிய படைப்பு கொடுத்தார்கள். இன்றைக்கு ரஞ்சித்தோ, வெற்றிமாறனோ, மாரி செல்வராஜ் மாதிரி எத்தனையோ இயக்குநர்கள் அற்புதமான படங்களைக் கொடுக்கிறார்கள். தங்கலான், விடுதலை, வாழை போன்ற படங்களைப் பார்க்கிறோம். மகாராஜா, பறந்து போ போன்ற படங்களோ வேறு உலகத்தை நமக்கு கொடுக்கிறார்கள். இந்திய அளவில் பேச முடியாத விசயங்கள் தமிழ் சினிமாவில் மிக துணிச்சலாக பேசுகிறார்கள்.

இந்த காலகட்டத்தை தமிழ் சினிமாவில் மிக முக்கியமான காலகட்டமாக பார்க்கிறேன். ஒரு பக்கம் அழுத்தம், அடக்கு முறை, நெருக்கடி இருக்கிறது. இன்னொரு பக்கம் அதற்கு எதிரான விசயங்களும் பல இடங்களில் நடந்து கொண்டே இருக்கிறது. வரலாறு அமைதியாக இருந்தால் ஒன்றுமே இல்லை. அது தேங்கி இருப்பதுதான் சலிப்பு தட்டும். இங்கே ஏதோ கொந்தளிப்புகள் நடந்து கொண்டே இருக்கிறது. அதில் நின்று சண்டை போடுவது என்பது இன்பமானதாகத்தான் நான் பார்க்கிறேன். ஏனென்றால் அது தான் வரலாறைக் கொடுக்கும்.

சோழர் காலம் ஒரு 300 வருடத்தை அமைதியான காலகட்டமாக என பார்த்துவிட்டு போய்க் கொண்டு இருப்போம். ஆனால் பாளையக்காரர்கள், வீரபாண்டிய கட்டப்பொம்மன், பூலித்தேவன், ஒண்டிவீரன் சண்டை போடுவது தான் வரலாறு. மருதுபாண்டியர்கள் சண்டை போடுகிறார்கள், தீரன் சின்னமலை  சண்டை போடுகிறார் என வரிசையாக ஒவ்வொருத்தராக வெள்ளையர்களை எதிர்த்து சண்டை போட்டது தான் வரலாறு. அந்த மாதிரியான கிளர்ச்சிகளும், போராட்டங்களும் தான் வரலாறு. அந்த மாதிரியான காலகட்டத்தில் வாழ்கிறோம்.

நிரூபர்: இது அனைத்துமே வரலாறு என்பதை மிக அழகான இடத்தில் வந்து முடித்துள்ளீர்கள். அருமை. இந்த மாதிரி உரையாடல் கிடைப்பது வாய்ப்பு கிடைத்தால் பேசலாம். நன்றி நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »