
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் இனப்படுகொலை போரை நிறுத்தக் கோரியும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம்! – மே பதினேழு இயக்கம்
பாலஸ்தீன மண்ணை அபகரிப்பதற்காக ஆக்கிரமிப்பு சியோனிச இஸ்ரேல் படை 1940ம் ஆண்டு முதலாக தொடர்ந்து பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இசுரேல் இப்படுகொலையை மிகத் தீவிரமாக முன்னெடுக்கிறது. இதற்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் துணைபோகிறது. இதுவரை 6,80,000 பாலஸ்தீனர்கள் இசுரேலினால் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் 3 லட்சம் பேர் குழந்தைகள், 400க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மருத்துவர்கள், ஐ.நா பணியாளர்கள் என இசுரேலின் கொடூரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இசுரேல் அரசு இனப்படுகொலை செய்கிறதென ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இசுரேல் அரசு உணவையும், மருந்துகளையும் தடுத்து பாலஸ்தீன மக்கள் மீது போர்தொடுக்கிறது. உணவை, மருந்தை போர் கருவிகளாக பயன்படுத்தக்கூடாதெனும் சர்வதேச சட்டத்தினை அப்பட்டமாக மீறி வருவதால், பசி, பட்டினியை எதிர்கொண்டு பாலஸ்தீன மக்கள் கொத்துக்கொத்தாக மரணமடைகிறார்கள்.
இசுரேலின் இந்த இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தி உலகமெங்கும் இருக்கிற மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல லட்சணக்காணோர் வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள். காசாவில் பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க கடலமார்க்கமாக மக்கள் காசாவை நோக்கி பயனப்படுகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் மே 17 இயக்கமும் கடந்த இரண்டு வருடங்களாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இசுரேலின் இனப்படுகொலை போரை நிறுத்த வலியுறுத்தியும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது.
* 21 அக்டோபர் 2023 அன்று சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
* 22 அக்டோபர் 2023 அன்று அவையம் நிகழ்வை பாலஸ்தீனம் குறித்தான ‘படைப்பும் உரையாடலும்’ என நடத்தியது.
* 29 அக்டோபர் 2023 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பாலஸ்தீன அதரவு பேரணி சென்னை.
* 03 டிசம்பர் 2023 அன்று வாலாஜாப்பேட்டையில் பேரணி.
* 03-05 ஆகஸ்ட் 2023 தேதிகளில் நடைபெறவிருந்த இசுரேல்-தென்னிந்திய வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்திற்கெதிரான போராட்டத்தை தோழமை கட்சிகளைக் கொண்டு ஒருங்கிணைத்தது. இதனால் இக்கூட்டம் இரத்து செய்யப்பட்டது.
* 19 மே 2024 இல் நடந்த 15ஆம் ஆண்டு ஈழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை பாலஸ்தீன ஆதரவு கிஃபாயா நிகழ்வாக நடத்தியது.
* 04 அக்டோபர் 2024 இல் இணையக் கருத்தரங்கு மூலம் பாலஸ்தீனம் குறித்து உரையாடல் நடத்தியது.
* 05 அக்டோபர் 2024 இல் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கட்சி இயக்கங்களையும் ஒருங்கிணைத்து சென்னையில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
* 18 மே 2025 இல் சென்னையில் நடந்த 16ஆம் ஆண்டு ஈழ நினைவேந்தல் கூட்டத்தில் பாலஸ்தீன ஆதரவு.
* 21 ஜூன் 2025 இல் வேலூரில் கூட்டம் என தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்தது.
இதுமட்டுமில்லாமல் செப். 2014 இல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீனத்தை ஆதரித்து பேசியதற்காக இந்தியாவின் கொடுஞ்சட்டமான ‘ஊபா சட்டம்’ மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீது 2018 இல் ஏவப்பட்டது. பிற தோழமை கட்சிகள் மற்றும் இயக்கத்தினர் தமிழ்நாடு எங்கும் முன்னெடுத்த 30க்கும் அதிகமான போராட்டங்களில் மே 17 இயக்கம் பங்கேற்றது. அத்தோடு தமிழர்களுக்கு காசாவில் நடக்கும் இனப்படுகொலையின் உண்மை நிலையை விளக்கும் விதமாக தமிழ்நாட்டின் முன்னனி தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கணொளிகள் கொடுத்தது. பாலஸ்தீனம்-ஈழம்: இரு தேசங்களின் துயரக்கதை எனும் நூலை இரு தேசிய இனப்போராட்டத்தின் தேவையை வலியுறுத்தி புத்தகத்தை வெளியிட்டது. மே17 இயக்கத்தின் அதிகாரபூர்வ இணைய இதழான ‘மே 17 இயக்க குரல்’ மின்னிதழில் 20க்கும் அதிகமான கட்டுரைகளை வெளியிட்டது. இவ்வாறு தமிழ்நாட்டில் பாலஸ்தீனத்திற்கான அதரவு நிலையை உருவாக்க மே 17 இயக்கம் தொடர்ந்து போராடி வந்ததிருக்கிறது.
உலகமெங்கும் போராடுகிற மக்களின் அழுத்தம் காரணமாக ஐ.நா. பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் இந்த வேளையில், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இனப்படுகொலை செய்யும் ஆக்கிரமிப்பு இசுரேலின் போரை தடுக்கக்கோரியும், வருகிற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருப்பது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகமெங்கும் நடைபெறுகின்ற போராட்டத்தில் தமிழர்களும், தமிழ்நாடும் இணைந்துகொள்கிறது என்பதை உணர்த்தும் மிகமுக்கியமான நடவடிக்கை. அதேபோல இந்திய ஒன்றிய அரசு உடனடியாக பாலஸ்தீனம் தனிநாடு அடைவதற்குரிய சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்டவும், இனப்படுகொலை இசுரேலுக்கு எதிராக பொருளாதார புறக்கணிப்பையும் செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.
தமிழ்நாடு எப்போதும் அடக்குமுறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை வலியுறுத்திய மாநிலமாக இருந்து வந்துள்ளது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவான இந்த தீர்மானம் அந்த பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தும். ஆகவே முதலமைச்சரின் இந்த அறிவிப்பை மே 17 இயக்கம் வரவேற்கிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
08/10/2025