
காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மதுரையை சேர்ந்த பட்டியல் சமூக இளைஞர் மரணம்! திமுக அரசே, தினேஷ்குமார் மரணத்திற்கு காரணமான காவலர்களை கைதுசெய்! பணிநீக்கம் செய்!! வன்கொடுமை வழக்கை பதிவு செய்!!! காவல்நிலைய மரணங்களுக்கு முடிவு கட்டாத திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்! – மே பதினேழு இயக்கம்
மதுரை அண்ணா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யாகப்பா நகர் சக்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேல்முருகன்-முத்துலெட்சுமி தம்பதியினரின் 30 வயது மகன் தினேஷ் குமார். பட்டியல் சமூகத்தை சேர்ந்த தினேஷ் குமார் சமீபத்தில் ஒரு தனியார் ஆலையில் பணிக்கு சேர்ந்து தொடர்ந்து பணிக்கு சென்று வந்துள்ளார். கடந்த 09-10-2025 வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து அண்ணா நகர் காவல் ஆய்வாளர் அவர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தினேஷ் குமார், பிற்பகல் 1:30 மணியளவில் இறந்தவிட்டதாக அவரது தாயாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இது லாக்கப் கொலையாக இருக்கக்கூடும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளதை மே17 இயக்கம் கவனப்படுத்துகிறது. இந்த அரச வன்முறையை, காவல்துறையில் தொடரும் சட்டவிரோத நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறது.
அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா இரு காவலர்களோடு தினேஷ் குமாரை ஒரு விசாரணைக்காக அழைத்து செல்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர். உடன் செல்ல முயன்ற அவரது தந்தையை தடுத்து நிறுத்தி 9 மணிக்கு காவல் நிலையத்திற்கு வந்து அவரை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். தந்தை 10 மணியளவில் காவல் நிலையம் சென்று பார்த்த போது தினேஷ் குமார் அங்கு அழைத்து வரப்படவில்லை என்பதும், வழக்கறிஞர் ஒருவர் மூலம் விவரம் கேட்ட போது, ‘..காவல் நிலையத்திற்கு அழைத்து வருவார்கள் அங்கேயே காத்திருங்கள்..’ என்று கூறியுள்ளனர். பின்னர் தினேஷ் குமாரின் தந்தைக்கு அழைத்து, வண்டியூர் சுங்கச்சாவடி அருகில் வழக்கறிஞர் ஒருவரோடு வருமாறு கூறியதாகவும், அங்கு அவர் சென்ற போது யாருமில்லை என்றும் தினேஷ் குமார் பெற்றோர் கூறுகின்றனர் 1:00 மணியளவில் உங்கள் மகன் குறித்து பேச வேண்டும் என்று தாயாரை காவல் நிலையத்திற்கு அழைத்து, தினேஷ் குமார் தப்பியோடி விட்டதாக ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா கூறியுள்ளார். சிறிது நேரத்தில் காவல் நிலையத்தின் வெளியே காத்திருந்த தாயாரை உதவி காவல் ஆணையர் சிவசக்தி உள்ளே அழைத்து, தினேஷ் குமார் தப்பியோடும் போது வண்டியூர் கால்வாயில் விழுந்து இறந்துவிட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
தினேஷ் குமாரை அதிகாலை 4 மணிக்கு அழைத்து செல்லப்பட்டதும், அழைத்து செல்லப்பட்ட போதே தாக்கப்பட்டதாகவும், விசாரணை காவல் நிலையத்தில் நடத்தப்படாமல் இருந்ததும், காரணம் இல்லாமல் தப்பியோடியதாக கூறியதும், ஆறடி உயரமுள்ளவர் முழங்கால் அளவு ஆழமே கொண்ட கால்வாயில் விழுந்து இறந்தாதாக கூறுவதும் தினேஷ் குமார் மரணம் குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. குறிப்பாக, தினேஷ் குமார் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டிருக்க வேண்டும் என கருதுகிறோம். மக்கள் கண்காணிப்பகத்தின் வழக்கறிஞர் தோழர் ஹென்றி டிபேன் அவர்கள், வண்டியூர் கால்வாய் அருகிலுள்ள சிசிடிவி பதிவுகள் நீக்கப்பட்டதாகவும், தினேஷ்குமாருக்கு நீச்சல் தெரியுமா என அவரது தந்தையிடம் காவல்துறையினர் கேட்டுள்ளதும் ஏன் என்ற கேள்வியையும் எழுப்புகிறார். தற்போது தோழர் ஹென்றி டிபேன் அவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல் மரணம் என வழக்கு தொடர்ந்துள்ளார்.
காவல் நிலைய மரணங்கள் தமிழ்நாட்டில் தொடர்கதையாக உள்ளது. இதன்மீது திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததும் கண்டனத்திற்குரியதாக உள்ளது. காவல்துறை மேற்கொள்ளும் சட்டவிரோத நடவடிக்கைகள், காவல்நிலைய மரணங்கள் குறித்து கடுமையான நடவடிக்கையை திமுக அரசு மேற்கொள்ளாததே, இதுபோன்ற அத்துமீறல்களுக்கு அடிப்படையான காரணமாகும்.
சமீபத்தில் அஜீத் குமார் என்பவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கி கொலை செய்த காணொளி அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில், தற்போது தினேஷ் குமாரின் காவல் மரணம் நிகழ்ந்துள்ளது காவல் மரணங்கள் தடுப்பு நடவடிக்கைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் காவல் மரணங்கள் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கிய பின்பு, காவல் மரணங்களை தடுக்க காவல்துறைனருக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டன. இருந்தும், காவல்துறையினர் அவற்றை முறையாக பின்பற்றாததும், தொடர்ந்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் மீது அத்துமீறி உயிர் போகும் அளவிற்கு தாக்குதல் நடத்தப்படும், அதிலும் குறிப்பாக, பட்டியல் சமூகத்தவர் என்றால் அதிகார அத்துமீறலில் எவ்வித தயக்கமின்றி ஈடுபடுவதும் தொடர் நடைமுறையாக உள்ளது. தினேஷ் குமார் மரணமும் இப்படியான காவல்துறையினரின் அத்துமீறலில் நடந்திருக்க வேண்டும் என்றும், அதனை மறைக்க காவல்துறையினர் ஈடுபட்டிருப்பதும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
தினேஷ் குமார் மரணம் காவல் நிலைய மரணம் என்ற அடிப்படையில் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா உள்ளிட்ட காவலர்கள் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தினேஷ் குமாரின் உடற்கூராய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும், அதன்மீது சந்தேக உண்டெனில் பெற்றோர் கோரும் மருத்துவரை வைத்து மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்றும், வண்டியூர் கால்வாய் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
பாதிக்கப்பட்ட தினேஷ் குமார் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளது. அரசின் மீது நம்பிக்கை கொள்ளும்படி மதுரை காவல்துறையினர் மீதான நடவடிக்கைகளும் வெளிப்படைத்தன்மையான செயல்பாடுகளும் இருக்க வேண்டுமென கருதுகிறோம். காவல் நிலைய மரணங்களை தடுக்க தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், தொடர்புடைய அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் திமுக அரசிடம் மே பதினேழு இயக்கம் கோருகிறது. நீதியின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு காவல்துறையினரின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
13/10/2025