ஆவணப்படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் இயற்றிடுக – மே 17 அறிக்கை

நிலக்கோட்டை அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த இராமச்சந்திரன் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கொடுஞ்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்! சாதி ஆணவப்படுகொலை தடுப்பு சிறப்பு சட்டத்தை இயற்றிடாத திமுகவை வன்மையாகக் கண்டிக்கிறோம். திமுக அரசே, நடப்புக் கூட்டத் தொடரில் சிறப்புச் சட்டத்தை இயற்றிடு! பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசுப் பணியையும், நீதியையும் வழங்கிடு! – மே பதினேழு இயக்கம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை-வத்தலகுண்டு அருகே இராமசந்திரன் என்ற பிற்படுத்தப்பட்ட (நாயுடு) சமூகத்தை சேர்ந்த இளைஞரை, காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட (தேவர்) சமூகத்தை சேர்ந்த பெண்ணின் குடும்பத்தார் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிக்குரிய செய்தி வெளியாகியுள்ளது. சாதி ஆணவப்படுகொலை என்ற இந்த கொடுஞ்செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இது, சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்கத் தவறிய திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது. பட்டியல் சமூகத்தை சாராத ஒருவர் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டுள்ளது, சாதி ஆணவப்படுகொலையை தடுப்பதற்கான தனி சிறப்பு சட்டம் தேவை என்பதை உணர்த்துகிறது.

பால் வியாபாரியான 24 வயதான இராமசந்திரனும் 22 வயதான ஆர்த்தி என்பவரும் நீண்டகாலமாக காதலித்து, கடந்த ஜூன் மாதம் ஆர்த்தியின் பெற்றோர் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர். ஆர்த்தி குடும்பத்தினரின் அச்சுறுத்தல் காரணமாக திருமணத்தின் போதே காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு சென்றுள்ளனர். அப்போது காவலர்கள் ஆர்த்தியின் குடும்பத்தினரை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். அதன்பின்பு, ஆர்த்தியின் அப்பாவும், அண்ணனும் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இந்த அச்சுறுத்தல் குறித்து இராமசந்திரன்-ஆர்த்தி தம்பதியினர் காவல்துறையில் புகாரளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 12ம் தேதி இராமசந்திரன் பால் கறந்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்த போது, ஆர்த்தி குடும்பத்தினர் அவரை அரிவாளால் கடுமையாக வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த சாதி ஆணவப்படுகொலை காவல்துறையின் மெத்தனப்போக்கினால் நிகழ்ந்துள்ளது. குற்ற சம்பவத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்ணின் குடும்பத்தாரும் நண்பர்களும் உறவினர்களும் ஈடுபட்டுள்ள நிலையில், பெண்ணின் தந்தை சந்திரன் மட்டும் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். கணவர் கொலையில் தொடர்புடையவர்கள் என பத்து பெயர்களை காவல்துறையிடம் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததல், தனக்கு நீதி வேண்டி கணவரிடன் குடும்பத்தாருடன் இணைந்து மனைவி போராடி வருகிறார். அவரது அண்ணன் கொலை மிரட்டல் விடுத்த ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது குற்றத்தில் குடும்பத்தினரின் தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

சாதி ஆணவப்படுகொலைகள் சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடந்தேறுவது அவமானகரமானதாகும். சாதியின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ள தமிழ்ச் சமூகம் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது காட்டுமிராண்டித்தனமாது. பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாவிட்டாலும் இருவேறு சாதியினர் காதலித்து திருமணம் செய்தால், சாதிவெறி கொண்ட கூட்டம் இந்த கொடுஞ்செயலில் செயலில் ஈடுபட்டுள்ளது. இது போன்ற சாதி ஆணவப்படுகொலைக்கு அதிகார வர்க்கம், குறிப்பாக காவல்துறையினர் துணைபோவது வெட்கக்கேடானது. காவல்துறையினர் உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இராமசந்திரன் ஆணவப்படுகொலை தடுக்கப்பட்டிருக்கும். ஆணவப்படுகொலையை தடுப்பதற்கான தனி சட்டமும், சாதிமறுப்பு திருமணம் செய்வோருக்கான சட்டப்பாதுகாப்பும் இல்லாததால் இந்த கொலை நடந்தேறியுள்ளது. இந்த ஆணவப்படுகொலை முழுக்க முழுக்க திமுக அரசின் தோல்வியினால் நிகழ்ந்த ஒன்றாகும்.

இராமச்சந்திரன் ஆணவப்படுகொலையில் ஈடுபட்ட அனைவரும் சமூகக் குற்றவாளிகளாக கருதப்பட வேண்டும். ஆணவப்படுகொலையில் ஈடுபட்ட பெண்ணின் குடும்பத்தினர் மட்டுமல்லாது, இந்த ஆணவப்படுகொலை தொடர்புடைய அனைவரையும் உடனடியாக திமுக அரசு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. புகாரளித்தும் பாதுகாப்பு அளிக்கத் தவறிய காவலர்களையும் குற்றத்திற்கு உடந்தையானவர்களாகக் கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இராமச்சந்திரன் குடும்பத்தினருக்கும் அவரது மனைவிக்கும் உரிய இழப்பீடு வழங்குவதோடு, தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள அரசுப் பணி வழங்கிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், அவர்களது எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டுமெனவும் கோருகிறோம்.

சாதி ஆணவப்படுகொலையை தடுப்பதற்கு தனி சிறப்பு சட்டம் தேவை என்பதை மே பதினேழு இயக்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. இராமசந்திரன் போன்ற பட்டியல் சமூகத்தவரல்லாதவர் சாதி ஆணவப்படுகொலை செய்யப்படும் போது, தற்போதைய சட்டத்தில் சாதாரண கொலை வழக்காகவே பதிவு செய்யப்படும். சாதி ஆணவப்படுகொலையை தடுக்க வன்கொடுமை தடுப்புச் சட்டமே போதுமானது என்று கூறும் முதலமைச்சர் உள்ளிட்டோர், தற்போது தனி சிறப்பு சட்டம் தேவை என்பதை உணர முடியும் என்று நம்புகிறோம். ஆகவே திமுக அரசு இதனை கருத்தில் கொண்டு, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே ஆணவப்படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டத்தை கொண்டுவர வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

அதனோடு, வயது வந்தோர் சாதிமறுப்பு திருமணம் செய்வதற்கு சமூகத்தில் நிலவும் தடைகளை நீக்குவதற்கும், தடைகளை மீறி திருமணம் செய்வோருக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கவும் சட்டத்தில் வழிவகை செய்திட வேண்டும். இதன்மூலம், திருமணத்திற்கு தடையாக இருப்பவர்களையும், உயிருக்கோ, உடைமைக்கோ அச்சுறுத்தை உண்டாக்குபவர்களையும் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டும். ஆணவப்படுகொலையில் ஈடுபடுபவர்கள் மற்றும் துணை செய்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அதனோடு, பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடும், நீதியும் உடனடியாக வழங்கிட வழிவகை செய்திட வேண்டும். மேலும், சாதிய சமூகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்வோர் தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள, கல்வி-வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடும், சிறப்பு நலத்திட்டங்களும் உருவாக்கிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

சாதியற்ற சமூகமே முன்னேறிய சமூகமாக கருதப்படும். சாதி ஒழிப்பு சமூகநீதியை அடைவதற்கான ஒரு வழிமுறையாகும். சாதிய இருக்கத்தை பாதுகாக்கும் சாதி ஆணவப்படுகொலைகள் தடுத்து, சாதியை தளர்த்தும் சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுவது தமிழ்ச் சமூகத்திற்கு இன்றியமையாததாகும். சமூகநீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் திமுக அரசு, இதில் உரிய கவனம் செலுத்தி தமிழ்ச் சமூகத்தை பண்பட்ட சமூகமாக மாற்றிட முயற்சிக்க வேண்டும்.

மே பதினேழு இயக்கம்

9884864010

15/10/2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »