
சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்ட மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பினை வரவேற்கிறோம்! – மே பதினேழு இயக்கம்
தமிழ்நாட்டில் சாதி ஆணவப்படுகொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் அதனை தடுப்பதற்கு தனி சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களும், குடிமைச் சமூக அமைப்புகளும், முற்போக்கு சிந்தனையாளர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்தனர். சமீபத்தில் நிலக்கோட்டை அருகே தினேஷ் குமார் என்பவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதையடுத்து, சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தின் தேவையை விளக்கி இரண்டு நாட்களுக்கு முன்னதாக மே பதினேழு இயக்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது அதற்கான முன்னேற்பாடாக, சாதி ஆணவப்படுகொலைகளை தடுப்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்க ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை மே பதினேழு இயக்கம் முழு மனதார வரவேற்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை-வத்தலகுண்டு அருகே இராமசந்திரன் என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரை, காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணின் குடும்பத்தார் சாதி ஆணவப்படுகொலை செய்தனர். இது குறித்து மே பதினேழு இயக்கம், சாதி ஆணவப்படுகொலை தொடர்பான திமுக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும், சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தின் தேவையை வலியுறுத்தியும், நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தும் அறிக்கை வெளியிட்டிருந்தது. அறிக்கையை வாசிக்க:
ஆவணப்படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் இயற்றிடுக – மே 17 அறிக்கை
2013ம் ஆண்டு தர்மபுரி இளவரசன் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது முதலே சாதி ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக மே பதினேழு இயக்கம் செயல்பட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் சாதி ஆணவப்படுகொலைகள் குறித்தும் ஜெனீவாவில் உள்ள ஐ,நா. மனித உரிமை மன்றத்தில் மே பதினேழு இயக்கம் பதிவு செய்துள்ளது. உடுமலை சங்கர் ஆணவப்படுகொலைக்கு பிறகு சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. இதற்காக பல்வேறு ஆர்பாட்டங்களையும், போராட்டங்களையும் மே பதினேழு இயக்கம் முன்னெடுத்து வந்துள்ளது. கள ஆய்வுகள் மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொண்டும் வந்துள்ளது. இந்நிலையில், தற்போது சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம் குறித்த முதலமைச்சரின் அறிவிப்பு நம்பிக்கையை உண்டாக்குகிறது.
சாதி ஆணவப்படுகொலைச் சட்டம் தொடர்பாக 16-10-2025 அன்று மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இன்று (17-10-2025) சட்டமன்றத்தில் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அறநெறியை கொண்ட தமிழ் மண்ணில், அனைத்து விதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்து, சாதிய ஏற்றத்தாழ்வுகள் நீங்கிய சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்கிட, சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தை உருவாக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா அவர்கள் தலைமையில் தலைமையில் சட்ட வல்லுநர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள் மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஓர் ஆணையம் உருவாக்கப்படும் என்றும், இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று இப்பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்குமென்றும், அதனடிப்படையில் தமிழக அரசு ஆணவப் படுகொலையை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதி அளிப்பதாக கூறினார்.
சாதி ஆணவப்படுகொலைச் சட்டம் குறித்து சமீபத்தில் மறைமலைநகரில் திராவிடர் கழகத்தின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கிய பங்காற்றியுள்ளது முதலமைச்சரின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், சாதி ஆணவப்படுகொலை என்ற கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வை சமூக சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல அரசியல் இயக்கங்களும் பொதுநல அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைப்பதாக முதலமைச்சர் கூறினார். அனைத்து தரப்பினரையும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ள முதலமைச்சரின் உரை வரவேற்பிற்குரியது. சாதி ஆணவப்படுகொலை குறித்த விழிப்புணர்வையும் எதிர்ப்பையும் கட்டியெழுப்ப மே பதினேழு இயக்கம் உறுதிகொண்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா அவர்கள் தலைமையிலான ஆணையம் செயல்படத் தொடங்கியதும், ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தில் இடம்பெற வேண்டிய கூறுகள் குறித்து ஆணையத்திடம் விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறோம். ஆணவப்படுகொலை என்பதற்கான வரையறைகளை வகுப்பதிலும், குற்றவியல் நடவடிக்கைகளின் நோக்கத்தை வரையறுப்பதிலும் மே பதினேழு இயக்கம் பங்களிக்க விரும்புகிறது. தண்டனை என்பதனை தாண்டி சமூகத்தை சீர்திருத்தும் நோக்கிலும், ஆணவப்படுகொலைக்கு எதிரான சிந்தனையை சமூகத்தில் விதைக்கும் வகையிலும் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதற்கான பரிந்துரைகளை அரசுக்கு ஆணையம் வழங்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.
இச்சட்டம் கொண்டுவர வலியுறுத்தி போராடிய அனைத்து சனநாயக அமைப்புகளுக்கும் வாழ்த்துகளை மே பதினேழு இயக்கம் தெரிவித்துக்கொள்கிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்திலேயே இக்கோரிக்கை தீவிரமடைந்த போதிலும், 2021 திமுக ஆட்சிக்காலத்தின் தொடக்க காலத்திலேயே இக்கோரிக்கை நிறைவேறுமெனும் நம்பிக்கை இருந்தபோதிலும், தாமதமாக இச்சட்டம் கொண்டுவரும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதற்குமேலும் தாமதம் செய்யாமல் விரைந்து இச்சட்டம் கொண்டுவரப்பட்டு ஆளுநர் எனும் தடைக்கல்லை கடந்து உடனடியாக இச்சட்டம் நடைமுறையாக்கப்பட வேண்டும். ஆகவே, விரைந்து இதற்கான சட்டத்தை இயற்ற வேண்டுமென கோருகிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
17/10/2025