
பாரதியாரை புகழ்பாடுவதாக பார்ப்பனியத்திற்கு ஆதரவான-தமிழ்த்தேசியத்திற்கு எதிரான நிலைப்பாட்டை சீமான் எடுத்துள்ளதை கடுமையாக விமர்சித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மின்னம்பலம் ஊடகத்திற்கு திசம்பர் 19, 2025 அன்று வழங்கிய நேர்காணல்.
மின்னம்பலம் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேர்காணலில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நம்மோடு இணைந்திருக்கிறார். வணக்கம் தோழர்.
நெறியாளரின் கேள்வி: சமீபத்தில் நாம் தமிழர் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள், ஒரு ’ஆர்எஸ்எஸ் விழாவில் பாரதியினுடைய கொள்கை வாரிசு நான்’ என அறிவித்தார். அதில் பெரியார் குறித்தான விமர்சனங்களையும் முன்வைத்தார். குறிப்பாக பெரியாரையும் பாரதியையும் எதிரெதிர் நிலையில் வைத்து ஒரு சில விவாதங்கள் கிளப்பியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே சீமான் பெரியார் குறித்தான நிறைய விமர்சனங்களை எழுப்புகிறார். அது மட்டுமில்லாமல் வருகின்ற 20ஆம் தேதி அன்று ’சமத்துவ பாரதி மற்றும் சாதிவெறியர் பெரியார்’ என்கின்ற அடிப்படையில் ஒரு கருத்தரங்கமும் நடத்த இருக்கிறார்கள். இந்த விவாதத்தை நாம் எப்படி பார்ப்பது? தமிழ் தேசியத்தில் பாரதியை முன்வைக்கிறார் சீமான். இதனை எப்படி புரிந்து கொள்வது?
தோழர் திருமுருகன் காந்தி பதில்: முதலில் சீமான் தமிழ் தேசியவாதி கிடையாது. அவர் ஒரு மேடை பேச்சாளர். அவர் யார் அழைக்கிறார்களோ அவர்களுக்கு ஏற்ப, அவர்கள் மனம் குளிரப் பேசுவது என்பது, இந்த வாடகை பேச்சாளர்களுக்கு ஒரு வழிமுறை. அதனால் தன்னை யார் கூப்பிடுகிறார்ளோ அவர்களுக்காக பேசுவது. உதாரணத்திற்கு பெரியாரியவாதிகள் அழைத்த பொழுது பெரியாரிய கருத்துக்களை பேசினார். ஆர்எஸ்எஸ் காரர்கள் அழைக்கும் பொழுது ஆர்எஸ்எஸ் காரர்களுக்கான கருத்துக்களை பேசுகிறார்.
கேள்வி: பாரதிக்காக பேசுகிறேன் எனச் சொல்லி சீமான் சொல்கிறாரே?
பதில்: மேடை பேச்சாளர்கள் சம்பளத்துக்கு பேசக்கூடியவர்கள். இஸ்லாமியர்கள் அழைத்தார்கள் எனில், குரானைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள். கிறிஸ்தவர்கள் அழைத்தால் அவர்கள் இயேசுவைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள். யார் சம்பளம் தருகிறார்களோ அதற்கு ஏற்ப, அந்த நன்கொடைக்கு ஏற்ப, அந்த அளவிற்கு ஏற்ப பேசக்கூடியவர்கள். சீமானும் அப்படித்தான் . சீமானுக்கும் தமிழ் தேசியத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவருக்கு தமிழ் தேசியம் என்றால் என்ன? என தெரியாது.
தமிழ்த்தேசியம் குறித்து ஒரு கோட்பாடு இருப்பதை போல மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய கோட்பாடுகள் இருக்கிறது. இப்போது பெரியாரியத்தை சீமான் மறுக்கிறார் எனில், அந்த கோட்பாடுகளை சொல்லி அதன் அடிப்படையில் மறுக்க வேண்டும். அது அவருக்கு தெரியாது. ஏனெனில் பெரியாரியமும் தெரியாது. கோட்பாடும் தெரியாத நபர் சீமான். தமிழ் தேசியம் என்பது ஒரு இலக்கு. அந்த இலக்கு குறித்து விரிவாக பேசுவதற்கான எந்தவிதமான ஒரு அடிப்படை அரசியல் அறிவும் அவருக்கு கிடையாது.
தமிழ்த்தேசியம் என்பது என்ன? தேசியம் என்பது என்ன? தேசிய இனம் என்பது என்ன? தேசிய இன கோரிக்கை என்பது என்ன? சுய நிர்ணய உரிமை என்பது என்ன? இந்திய தேசியத்திற்குள் தமிழ் தேசியம் என்பது என்ன? இந்திய தேசியத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் முரண்பாடு என்ன? இந்திய தேசியம் இருக்கும் பொழுது ஏன் தமிழ் தேசியம் என்று வருகிறது? இதையெல்லாம் சொல்லத் தெரிந்தவர்கள்தான் தமிழ் தேசியவாதி.
தோழர் தமிழரசன் அவர்கள், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள், புலவர் கலியபெருமாள் அவர்கள், இதை மிக் தெளிவாக வரையறைத்து சொல்லி இருக்கிறார்கள். இந்திய தேசியம் என்பது என்ன? தமிழ் தேசியம் என்பது என்ன? தமிழ் தேசிய இன மக்கள் என்பது யார்? இந்த தேசியத்தை எப்படி கட்டி எழுப்புவது? இது எந்த இடத்தில் இந்திய தேசியத்தோடு முரண்படுகிறது? என்று சொல்கிறார்.

அதேபோல மேதகு பிரபாகரன் அவர்கள் சிங்கள பேரினவாதத்திற்கும் தமிழ் தேசியத்திற்குமான வேறுபாடு, இலங்கையினுடைய அந்த அரசியல் சாசனத்திலிருந்து ஏன் தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும்? என்று அரசியல் தர்க்க ரீதியாக பேசுகிறார். தமிழ் தேசியத்தினுடைய விழுமியங்கள் என்ன? இலக்குகள் என்ன? அதனுடைய கொள்கை திட்டம் என்ன? பொருளாதார திட்டம் என்ன? என்று அவர் மிகத் தெளிவாக பேசுகிறார். மேதகு பிரபாகரன் அவர்கள் ஒரு தமிழ் தேசிய கோட்பாடை மிகத் தெளிவாக வரையறை செய்து முன் வைக்கிறார்.
இப்படிப்பட்ட எந்த விசயத்தையும் நீங்கள் என்றாவது சீமானிடம் கேட்டு உள்ளீர்களா? அப்படி எங்கேயும் அவர் பேசிப் பார்த்ததில்லை. அவர் ஈழத்தைப் பற்றி பேசினால் மான் ஊறுகாய் ஆரம்பித்து பல கதைகள் கேட்டிருக்கிறோம். தமிழ்நாட்டுக்குள் பெரியாரை புகழ்ந்து பேசிய காலம் போய் பெரியாரை வீழ்த்துவேன் என்று பேசுவதும், இப்பொழுது திடீரென்று பாரதியைப் பேசுவதும், திடீரென்று பெரியாரிய தலைவர்களை எடுத்துக்கொண்டு கொண்டாடுவதும் இருக்கிறார்.
ஐயா. ஆனைமுத்துவைக் கொண்டாடி பேசுவார், சுவரொட்டி விளம்பரம் போடுவார். ஆனைமுத்து ஐயா அவர்கள் பெரியாரிய இயக்கத்தை நடத்தியவர். பெரியாரோடு இருந்தவர் பயணித்தவர். ’பெரியார் வேண்டாம், ஆனால் பெரியாரியவாதிகள் வேண்டும்’ என்று பேசுவார். இப்படிப்பட்ட ஒரு குழப்பமான ஒரு நபர். திரும்பவும் சொல்கிறேன் சீமான் ஒரு மேடை பேச்சாளர். அவருக்கு யார் என்ன சம்பளம் தருகிறார்களோ, அந்த சம்பளத்திற்கு அளவிற்கு ஏற்பப் பேசுவார். தற்போது அதிக சம்பளத்தை ஆர்எஸ்எஸ் கொடுத்திருக்கிறது என்றுதான் நம்ம புரிந்து கொள்ள முடியும்.
உதாரணமாக விடுதலை புலிகள் மீது விசாரணை வேண்டும் என்று ஒரு தீர்மானம் வருகிறது. அந்த தீர்மானத்தை ஆதரித்து மேதகு பிரபாகரன் அவர்களை போற்றுகிறேன் என்று சொல்லி ஊர்வலம் நடத்துகிறார் சீமான். இப்படிப்பட்ட ஒரு கோமாளித்தனத்தை உலகத்தில் யாருமே செய்திருக்க முடியாது.
கேள்வி: குறிப்பாக சீமான் குறிப்பிடுவது என்னவெனில், பாரதியினுடைய கொள்கை வாரிசு நான் என்பதைத்தான். பாரதியை தமிழ் தேசியத்தோடு தொடர்புப்படுத்தி பார்க்க வேண்டுமா?
பதில்: பாரதியின் கொள்கை வாரிசு சீமான் என்று சொன்னால், பாரதியினுடைய கொள்கை என்னவென்று சொன்னாரா? அவருக்கு தெரியாது. பாரதியுடைய காலகட்டம் என்ன? பாரதி எந்த அரசியலை முன் வைத்தார்? பாரதி என்ன கோட்பாடை நம்பினார்? எந்த அரசியல் வழிமுறையைக் கையில் எடுத்துக் கொண்டார். ஏனெனில் பாரதியினுடைய காலகட்டத்தில் அரசியல் வழிமுறைகள் தோன்றிய காலகட்டம், சமூக இயக்கங்கள் தோன்றிய காலகட்டம்.
திராவிட இயக்க மகாஜனசபை நிறுவி அயோத்திதாசர் பாண்டியர், இரட்டைமலை ஸ்ரீனிவாசன் பேசிய காலகட்டம் வந்திருக்கிறது. நீதிக்கட்சி உருவான காலகட்டம் வந்திருக்கிறது. தேசிய இயக்கங்கள்/ சுதேசிய இயக்கங்கள் உருவான காலகட்டம் வந்திருக்கிறது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் பாரதியும் வருகிறார். அப்போது பாரதி என்ன கொள்கை எடுத்துப் பேசினார் என்று எதையாவது சீமான் பேசினாரா எனில், அப்படி எதுவுமே பேசவில்லை. பாரதி ’பாரத தேசத்தை’ பற்றி பேசுகிறார். ’தமிழ் தேசியத்தை’ பற்றிப் பேசவில்லை.
கேள்வி: ’பைந்தமிழ் நாடு’ என பேசி இருக்கிறாரே?
பதில்: அது ஒரு பாடலாசிரியராக பல விசயங்களை குறிக்கும் படி பேசலாம். பாரதியினுடைய கொள்கை எனச் சொன்னால், அது எப்படி தமிழ் தேசியத்துக்கு பொருந்தும் என பேச வேண்டும். அப்படி எதுவுமே பேசவில்லை. இதெல்லாம் ஆர்எஸ்எஸ் இடமிருந்து கூலி பெறுவதற்காக கூவிக் கூவி பேசுவார். அவருடைய தன்மை அதுதான்.
அடிப்படையில் நாதக ஒரு தேர்தல் கட்சி. சீமான் பெரிய புரட்சி பண்ணக்கூடிய கட்சியெல்லாம் கிடையாது. 16 வருடமாக ஒரு புரட்சியும் பண்ணவில்லை. அதிகபட்சமாக அதிகமாக ஆட்களைத் திரட்டி பெரிய போராட்டத்தை நடத்திய சம்பவம் எது எனில், அவர் பாலியல் வழக்குக்காக அவர் ஆட்களை திரட்டி காவல் நிலையத்தில் நின்றதுதான். அதைத் தாண்டி பெரிய போராட்டத்தை நடத்தியதையெல்லாம் ஒன்றும் நாம் பார்க்கவில்லை. அவருடைய தேவை என்ன வருகிறது எனில், தேர்தல் காலகட்டத்தில் பாஜக/ஆர்எஸ்எக்கு சார்பாக பெரியாரை எதிர்த்து பேசினால் சாதகமாக கிடைக்குமா என்பதுதான். ஏற்கனவே பாஜக ஓட்டு திருட்டு வேலை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஓட்டு திருட்டில் தனக்கு ஏதாவது சாதகமாக கிடைக்குமா? அல்லது அதற்கு சாதகமாக ஏதாவது நகர்வுகள் கிடைக்குமா? அல்லது கிடைக்கும் கொஞ்சம் நஞ்சம் ஓட்டையும் எவனாவது பிடுங்கிக் கொண்டு போயிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான்.
ஏனெனில் டிடிவி. தினகரன் தனிச்சையாகப் போட்டியிட்ட பொழுது அவருக்கு அந்த பிரச்சனை நடந்தது. பல இடங்களில் அவருடைய தொகுதி வேட்பாளருடைய வார்டில் ஓட்டு விழாமல் நீக்கப்பட்டதெல்லாம் அவரே சொல்லி இருக்கிறார். அதனால் அவர் கடைசியில் பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணியில் வைத்ததைப் பார்த்தோம். அது மாதிரி தனக்கு நடக்க கூடாது என்கிற ஒரு பயம்.
கேள்வி: அதற்கு பாரதியை பேசித்தான் சீமான் அதை செய்ய வேண்டுமா?

பதில்: அவரை எந்த மேடைக்கு அழைத்தாலும், அதற்கு ஏற்றார் போல ஜால்ரா அடித்து பேசுவார். சாவர்க்கரைப் பற்றிப் பேச அழைத்தால் போய் பேசியிருப்பார். பாரதியைப் பற்றி பாகிஸ்தானில் போய் பேசுவேன் என்கிறார். பாகிஸ்தான்காரன் எதற்கு பாரதியைப் பேச அழைக்கப் போகிறான். ஆர்எஸ்எஸ்காரன் ஏன் அழைக்கிறான் என முதலில் யோசிக்க வேண்டும். பாரதியைப் பற்றி பேசுவதற்கு 1000 மேடைகள் இருக்கிறது. சொந்தமாக மேடையைப் போட்டு பேசுங்கள். யார் வேண்டாம் என சொன்னார்கள்.
கேள்வி: சீமான் திமுக மேடை அமைத்தாலும் போவேன் என்கிறாரே?
பதில்: திமுக அழைக்காதென நன்றாகத் தெரியும். எடப்பாடி ஆட்சி சிறந்த ஆட்சி எனச் சொன்னாரே, அவரே அழைத்துள்ளாரா? எந்த மேடையிலும் சீமானை அழைப்பது கிடையாது. ஆர்எஸ்எஸ் அழைத்தது எனில், ஆர்எஸ்எஸ் கூட நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற காரணம்.
ஆர்எஸ்எஸ் தலைவர்களிடத்தில் யாரெல்லாம் உறவு வைத்திருக்கிறார்கள் என்றால் பெரிய பெரிய முதலாளிகள். டாட்டா(TATA), எச்சிஎல்(HCL) நிறுவன முதலாளிகள் ஆர்எஸ்எஸ் தலைவரைச் சென்று பார்க்கிறார்கள், அவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார்கள். அதன் காரணம் என்ன? ஆர்எஸ்எஸ் இன்றைக்கு அதிகாரத்தை கையில் மறைமுகமாக இயக்கக்கூடிய ஒரு நிழல் அமைப்பு. அந்த நிழல் அமைப்போடு உறவு வைத்திருப்பதன் மூலமாக தனக்கு லாபம் வரும். இதுதான் விசயம்.
அந்த நிகழ்ச்சியில் பாரதியை மட்டும் பேசி இருந்தால் இவ்வளவு பெரிய விவாதமாக மாறியிருக்காது. அங்கு பிராமணக் கடப்பாரையை வைத்து திராவிடத்தை உடைப்பேன் என்றால், பிராமண கடப்பாரை என்ன செய்தது? என்பதை பார்ப்போம்.
இந்த பிராமண கடப்பாரைதான் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளை அழித்தது. தமிழர்கள் கல்வி கற்காமல் நிராகரிக்கப்படுவதற்கான எல்லா வேலைகளும் செய்தது, தமிழர்களுடைய உழைப்பை சுரண்டுகின்ற ஒரு பண்ணையார்களாக இருந்தவர்களும் இதே பிராமண கடப்பாரைகள் தான். தமிழ் மொழி வேண்டாம் சமஸ்கிருதம் வேண்டும் என்றும் சொன்னதும் இதே பிராமணர் கடப்பாரைதான்.
கேள்வி: பிராமணர் சாதியை குறிப்பிட வேண்டுமா? அல்லது பார்ப்பனியம் என்ற அந்த கொள்கையை குறிப்பிட வேண்டுமா?
பதில்: இரண்டு விசயம் இருக்கிறது. பிராமணன் என்பது என்ன? ஐயர், ஐயங்கார் என்பது என்ன? பிராமணன் என்பது வர்ணம். எல்லாருக்கும் ஒரு சாதி இருக்கும், அந்த சாதியை சொல்லுவோம். ’ஐயர்’ என்பது ஒரு வணங்குகின்ற முறையை சார்ந்தது. ’ஐயங்கார்’ வேறோரு வணங்குகின்ற முறையை சார்ந்தது. வைணவனாக இருந்தால் அது வடகலையோ தென்கலையோ நம்பிக்கை சார்ந்த விசயமாக இருக்கும். அதே போல் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு தொழில் சார்ந்து இருந்தே முன்பு இருந்தது. ஆனால் பிராமணன் என்றால் அது வர்ணத்தைக் குறிக்கிறது.
வர்ணம் என்பது சாதிகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வை குறிக்கக்கூடிய சொல். ஐயர், ஐயங்காரா என்பதற்குப் பதிலாக பிராமணன் சொன்னால், அது வர்ணத்தை சொல்கிறார் என்று அர்த்தம். அவன் வர்ணத்தை சொன்னால் நீங்களும் வர்ணத்தை சொல்ல வேண்டிய இடத்திற்கு வரும். அப்போது நம்மவர்களை சூத்திரன் என்று மனுஸ்மிருதி சொல்லுகிறது. அதாவது சூத்திரன் என்கின்ற வர்ணத்திற்கு எந்த இடம் என்றால், பிரம்மாவின் காலில் இருந்து பிறந்தவர்கள் என்று அர்த்தம். அவர்களுக்கு சொத்து வைத்துக்கொள்ள உரிமை கிடையாது, கல்வி கற்க உரிமை கிடையாது, ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க உரிமை கிடையாது, நீதி வழங்குவதற்கு உரிமை கிடையாது, நீதியை பெற்றுக் கொள்வதற்கு உரிமை கிடையாது.
கேள்வி: சீமான், சூத்திரன் என தமிழர்களை சொன்னார்களா என்று கேட்கிறாரே?

பதில்: இந்தியா முழுவதும் இருந்த ஆரியர்கள் அல்லாதவர்களை சூத்திரன் என்று சொன்னார்கள். உண்மையான தமிழ்நாட்டினுடைய தற்குறி சீமான்தான். அவர் தன்னுடைய முட்டாள்தனத்தை ஒட்டுமொத்த கட்சியாக மாற்றியவர். அவர் எந்த மேடையிலும் மற்றவர்களோடு நின்று விவாதிக்க வர மாட்டார். வந்தால் மாட்டிக்கொள்வார். அவர் ஊடகச் சந்திப்பில் கம்பு சுற்றுவார். பத்திரிக்கையாளிடம் சண்டையை போட்டு மல்லுக்கட்டக் கூடிய வேலைதான் செய்வார்.
தற்போது வரை ஆந்திராவில், கர்நாடகத்தில், கேரளாவில், ஒரிசாவில், வங்கத்தில், சட்டத்தீஸ்கரில் ஆரியம் அல்லாத மக்கள் இருக்கிறார்கள். அங்கு இருக்கும் பழங்குடிகள், பட்டியல் மக்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் யார்? இவர்கள் எல்லாமே சூத்திரர்கள்தான். தமிழ்நாட்டுக்குள் மட்டும் இருக்கிறார்கள் எனச் சொல்வார்கள். அதுவும் தெலுங்கர்கள் மட்டும் தான் சூத்திரர்கள் என சொன்னார்கள் என்று கம்பு சுற்றுவார்கள் நாதக முட்டாள்கள்.
ஆரிய வேத முறைகளில் நம்மை எப்படி வரையறுத்தார்கள் என்கிற இடத்தில்தான், இந்த ஸ்மிருதிகள் எல்லாம் வருகிறது. அது பிற இனங்களை சூத்திரன் என்று வரையறுத்தது. அதாவது மலையாளிகளோ, ஆரியர்கள் தங்களை மேல் வர்ணத்தாராகவும், தமிழர்களை போன்ற பிற தேசிய இனமான குஜராத்தி, தெலுங்கர், வங்காளி, நம்மவர்கள் என இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் பழங்குடியின மக்கள் அல்லது அதிலிருக்கக்கூடிய பிரிவுகள் இவர்களை கீழ் வர்ணமாகவும் பிரித்து வைக்கிறான். மேலும் வர்ணத்துக்கு அப்பாற்பட்டவர்களாக பஞ்சமர்களைப் பிரித்து வைக்கிறார்கள்.
ஐயர் ஐயங்கார் பேக்கரி நாம் பார்க்கிறோம். அதை யாராவது எதிர்க்கிறோமா? கோனார் பேக்கரி, கோனார் மெஸ் என பார்க்கிறோம், அதை யாராவது எதிர்க்கிறோமா? அதெல்லாம் சாதி பெயர்கள். ஆனால் பிராமணாள் என்றால் அது வர்ணப் பெயர். நீ வர்ணத்தை சொன்னால், நான் என் வர்ணத்தை சொல்ல வேண்டிய இடத்துக்கு வந்துவிடுகிறேன். அந்த வர்ணம் என்ன வர்ணம்? பிராமணனுக்குக் கீழானவன் என்று ஆரியம் வரையறுத்து வைத்திருக்கும் வர்ணம். அதனால்தான் தன்னை ஒரு வர்ணமாக ’நான் பிராமணன்’ என்று பேசுகிறான்.
கேள்வி: பிராமின் மட்டுமா சொல்கிறார்கள், எல்லாருமே அவரவருடைய சாதியுடைய பட்டங்களைக் காண்பித்து மதிப்பாக சொல்கிறார்கள், தானே!
பதில்: இங்கு சாதியாக இருக்கக்கூடிய ஒரு நிலை உருவானதை, அடுக்காக பிரித்தது வர்ணம். அந்த வர்ணத்திற்கு தர்மம் இருக்கிறது. அதற்கு ஒரு கர்மம் வருகிறது. அந்த கர்மத்தையும் தர்மத்தின் அடிப்படையில் வர்ணம் உருவாகிறது. அந்த வர்ணத்திலிருந்து வர்ண பேதம் உருவாகிறது. அந்த வர்ண பேதத்தில் நம்முடைய கர்மம் என்ன? பிராமணர்களுக்கு சேவை செய்வது நம்முடைய கர்மம். அதுதான் நம் தர்மம்.
அந்த கர்மத்தை செய்து அந்த தர்மப் பலனின் மூலமாக நம்மை இந்த சூத்திரன் என்கிற இழிபிறவியில் இருந்து அடுத்த பிறவியில் விடுதலை பெறலாம், இந்த பிறவியிலே கிடையாது என்பதுதான் அதில் சொல்லக்கூடியது. ”வர்ணம், தர்மம், கர்மம்” இது எல்லாமே சேர்ந்துதான் சனாதனம். இந்த சனாதனத்தை நாம் எதிர்க்கிறோம், ஏன்? ஆர்எஸ்எஸ் எதிர்க்கிறோம், ஏன்? ஆர்எஸ்எஸ் என்ன சொல்கிறது எனில், ஆர்எஸ்எஸ்னுடைய தலைவர் பிராமணராக பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவராக இருக்கிறார். அந்த பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்த ஆர்எஸ்எஸ்னுடைய தலைவருக்கு கூலி வேலை பார்க்கக்கூடிய அடிமை வேலை பார்க்கக்கூடிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்து தன்னுடைய பிறவிப் பலனை அடையக்கூடியவராக சீமான் இருக்க வேண்டும் என்று அவர் தர்மத்தை வைக்கிறார். சீமான் அதை ஏற்றுக்கொண்டு போகிறார். அவ்வளவுதான் விசயம்.
கேள்வி: ஆனால் ஏதோ ஒரு விதத்தில் பிராமண எதிர்ப்பு என்பது தவறு என்கிற ஒரு புள்ளியை வியூகமாக சீமான் முன் வைக்கிறார் இல்லையா?
பதில்: அதாவது சீமானைப் பொறுத்தவரைக்கும் சாதி தேவை. ஐயர் ஐயங்கார் என்ற ஒரு தனி நபர்களை நோக்கியான வெறுப்பை நாம் வைக்க வில்லை. வெறுப்பு என்றால், நாம் அக்ரகாரத்துக்குள் நுழைய மாட்டோம், பொருளைத் தர மாட்டோம், தொட்டால் தீட்டு என்றோ, என் கோவிலுக்குள் வரக்கூடாது என நாம் வைக்கவில்லையே. நாம் உற்பத்தி செய்த அரிசி பருப்பிலிருந்து, மரப்பொருளிலிருந்து, நெய்யிலிருந்து, நெய்யக்கூடிய சட்டைத் துணியிலிருந்து, எல்லாமே யார் செய்தார்கள்? ஐயர் ஐயங்கார் அல்லாத மற்ற சாதிகள் தான் செய்தது. ஏதாவது ஐயர் ஐயங்கார்களை ஒதுக்கி வைத்தார்களா? உங்கள் வெறுப்பை கைவிடுங்கள் என்றுதான் நாம் கேட்கிறோம்.
நாம் ஐயர் ஐயங்காரர்களை வெறுக்கவில்லை. பிராமணன் என்ற வார்த்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏனெனில் பிராமணன் என்ற வார்த்தை வர்ணத்தை சொல்கிறது. நீ பிராமணன் என்றால் நான் சூத்திரன் என்று ஏற்றுக்கொள்வதாய் மாறிப் போகிறது. நீ உன் சாதியை சொல்ல, என் சாதியை சொல்கின்ற நிலை வேறு. ஆனால் இந்த வர்ணத்தை சொன்னால், நான் என் வர்ணத்தை சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்த விரும்புகின்றனர்.
பெரியாரியம் என்ன சொல்லுகிறது என்றால், அதை ’சனாதன கருத்தை தூக்கிப் போட்டுவிட்டு, நீயும் நானும் சமம் என்று சொல்’ என்கிறது. இதில் தனிப்பட்ட வெறுப்பை எல்லாம் சொல்லவில்லை.
கேள்வி: பாரதி அவர்களை இருட்டடிப்பு செயவதற்கான ஒரே காரணம், அவர் பிறந்த சாதிதான் என்கிற குற்றச்சாட்டையும் வைக்கிறார்கள். இது எப்படி பார்ப்பது?
பதில்: பாரதியின் மேல் விமர்சனம் இருந்தது. பெரியாரிய அமைப்புகள் சிந்தனைக் கோட்பாடாக என்ன வைக்கிறார்கள் எனில், இந்த சனாதன தர்மத்தை/ இந்து மதக் கோட்பாட்டை/ வேத மதத்தை ஏற்றுக்கொள்கின்ற, அதை உள்வாங்கி வைத்திருக்கக்கூடிய படைப்புகளை நிராகரிக்கிறார்கள்.
பாரதியின் மொழிவளம் வலிமையானதாக இருக்கலாம், போற்றக்கூடியதாக இருக்கலாம். ஆனால் உள்ளடக்க கருத்துவளம் என்னவாக இருக்கிறது என்றுதான் பெரியாரிஸ்டுகள் பார்க்கிறார்கள். அது இலக்கிய நயத்தைப் பார்க்கவில்லை. உங்கள் (பார்ப்பனர்) மொழிவளம் என்னுடைய வாழ்க்கையை பாதிப்பதில்லை. ஆனால் உங்கள் (பார்ப்பனர்) கருத்துவளம் என்னுடைய பொருளாதார வாழ்க்கையை/ சமூக அந்தஸ்தை பாதிக்கிறது. அந்த அடிப்படையில் தான் பாரதி மேல் விமர்சனம் வைக்கிறார்கள். இதுதான் அடிப்படை. பாரதிதாசனை ஏற்று கொள்வதும் இதே அடிப்படையில் தான்.
கேள்வி: சீமான் எப்படி பெரியாரை விமர்சிக்கிறாரோ, அதே போலதான் பாரதியை பெரியாரியவாதிகள் விமர்சிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டை சொல்கிறார்களே?
பதில்: பாரதி இந்த பார்ப்பனிய சார்பாகவோ அல்லது வேத சார்பாகவோ இருக்கிறார் என்று குறிப்பிட்டு, அந்த அடிப்படையில் விமர்சனம் வைக்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை. ஒரு தரப்பில் முற்போக்கு கருத்து இருக்கிறது. மற்றொரு தரப்பில் பிற்போக்கு கருத்து இருக்கிறது எனில், ஒரு மக்களிடம் என்னவென்று சொல்வீர்கள்? இந்த பாதியை வைத்துக்கொள்ளுங்கள், அந்த பாதி வேண்டாம் என்றா சொல்ல முடியும். அப்படி சொல்ல முடியாது.
இரண்டாவது பாரதியினுடைய காலகட்டம் என்பது முன்பு போக வேண்டியிருக்கிறது. அவர் எந்த இடத்திலுமே பெரியாரியக் கருத்தியலோடு, அதை வலுபடுத்தக்கூடிய எந்த பகுதியையும் நாம் பெரிய அளவில் பார்க்க முடியவில்லை. இதெல்லாம் சமூக இயக்கங்கள் தோன்றிய காலகட்டம்.
கேள்வி: 1926-ல் தான் பெரியார் பெயருக்கு பின் சாதி பட்டத்தை நீக்க தொடங்கிறார். ஆனால் அதற்கு முன்பே பாரதியார் இறந்துவிட்ட பொழுது, இதை பொருத்திப் பார்க்க முடியுமா?
பதில்: சாதிப் பெயரை நீக்குவது என்பது போராட்டத்தில் ஒரு வளர்ச்சி நிலை. அதுதான் போராட்டத்தின் தொடக்கமாக பேசக்கூடாது. அந்த போராட்டத்தின் தொடக்கம் எங்கே வருகிறது எனில், இந்த சாதியின் அடிப்படையில். இந்த அதிகாரம் எனக்கு சொந்தம் என்று பார்ப்பனர்கள் பேசுகின்ற பொழுது, இந்த சாதியின் அடிப்படையில் எனக்கு மட்டும்தான் கல்வி சொந்தம் என்று பேசுகின்ற பொழுது, இந்த சாதியின் அடிப்படையில் அரச மரியாதை எனக்குத்தான் சொந்தம் என்று பேசும் பொழுது, அதை மறுக்கின்ற குரல் எழ ஆரம்பிக்கிறது. அதனுடைய நீட்சி போக்கில்தான் பிரதிநிதித்துவத்தை கேட்கிறார்கள். பிரதிநித்துவம் இல்லை என்று என்கின்ற பொழுது பிரதிநிதித்துவம் தருவதற்கான வழிமுறைகளை பார்க்கிறார்கள். அதற்கான காலக்கட்டம் என்ன என்று பார்க்கும் பொழுது, சாதியின் அடிப்படையில் எப்படி ஒருவர் மேலே கீழே என பிரித்து பார்க்கின்ற இடத்தில், அதுவெல்லாம் இல்லை, எல்லாம் சமம் என்கிற ஒரு வேலைத் திட்டமாக முன்வைக்கப்படுகிறது. சாதிப் பெயரை நீக்குவது நாமெல்லாம் சாதி அற்றவர்களாக்க என்கிற இடத்தை கடந்த 100 ஆண்டுக்கு முன்பு முடிவு செய்கிறார்கள்.
பாரதியினுடைய காலகட்டத்தில் இருந்த பல்வேறு போக்குகளில் அவர் எதை தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்ற இடத்திலிருந்துதான் நாம் பார்க்க முடியும். அன்றைக்கு இருந்த மதவழியிலான இந்திய விடுதலை உணர்வு/ சுதேசி உணர்வு என்கின்ற இடத்தில்தான் தன்னை பொறுத்திக் கொள்கிறார். அது திராவிட இயக்க கருத்தியலோடு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. அந்த இடத்தில்தான் பெரியாரிஸ்டுகள் விமர்சிக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் வகையான இந்துத்துவ கோட்பாடுகள் என்பது, தேச முதலாளித்துவ தேச கட்டமைப்புகள் எழுகின்ற காலகட்டத்தில், இந்துத்துவ தேசத்தை உருவாக்க வேண்டும் என்றால், தீவிரவாத மதவெறி அரசியலை முன்வைக்கிறார்கள். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில், கி.பி.1860 காலகட்டங்களில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவு பெற்று இங்கிலாந்து அரசின் ஆட்சி வருகிறது. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் (80 ஆண்டு காலகட்டத்தில்) சமஸ்கிருத அறிஞர்களை வைத்து மனுஸ்மிருதியின் அடிப்படையில் நீதி பரிபாலனை செய்கிறார்கள். அப்போது பார்ப்பன ஆட்சி முறை என்பதால் பார்ப்பன சலுகைகள் எல்லாம் இருந்தது. இனாம் நிலத்திற்கு வரி கிடையாது. பார்ப்பன நிலங்களுக்கு எல்லாம் வரி கிடையாது என்கிற இடத்தில் இருக்கிறது. அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் கடந்த காலத்தில் எப்படி அரசர்கள் பார்த்துக் கொண்டார்களோ, முகலாயர்கள் எப்படி பார்த்துக் கொண்டார்களோ, அதற்கு முன்பு எப்படி பார்த்து கொண்டார்களோ, அது போல பார்த்து கொண்டார்கள்.
ஆனால் இங்கிலாந்து அரசினுடைய நேரடி ஆட்சி 1860 சிப்பாய் கலகத்திற்கு பின் வந்தது. அப்போது பல்வேறு கட்டமைப்புகள் வருகிறது. பள்ளிக்கூட கட்டமைப்பு, நீதிமன்ற கட்டமைப்புகள், இதெல்லாம் வரும்போது சமப்படுத்தப்பட்ட ஒரே விதமான நீதி பரிபாலனம் என்று வரும்பொழுது, இவர்களுக்கு பல சிக்கல்கள் வந்தது. அந்த இடத்தில்தான் சனாதனத்துக்கு பிரச்சனை வருவதாக பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு பிரச்சனை வருவதாக, இனாம் நிலத்துக்கு வரிகட்டுங்கள் என சொல்கிறார்கள். இது போன்ற பல சீர்திருத்தங்கள் எல்லாருக்கும் சமம் என்கின்ற அடிப்படையில் பிரிட்டிஷ் அரசு (கிழக்கு இந்திய கம்பெனி அல்ல) சொல்ல வரும்பொழுதுதான் பார்ப்பனர்கள் இங்கிலாந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்குகிறார்கள்.
1860 ஆண்டுக்கு முன்பிருந்த காலகட்டத்தில் கி.பி. 1740/1750 ஆண்டு காலகட்டங்களில் இருந்து பாத்தால், கிட்டத்தட்ட 110 /120 வருட காலகட்டத்தில் பார்ப்பனர் எழுச்சி ஆங்கிலேயருக்கு எதிராக இருந்திருக்காது. பிரிட்டிஷ் அரசியார் ஆட்சி வரும்பொழுது எதிர்ப்பு வருகிறது. (அதுக்கு முன்பு வரைக்கும் பழங்குடிகளும் பிற்படுத்தப்பட்ட சாதிகளும் சேர்ந்தவர்கள் தான் பிரிட்டிஷ்க்கு எதிராக போராடினார்கள்.) இந்த காலகட்டத்தில்தான் பார்ப்பனர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழ ஆரம்பிக்கிறார்கள். அந்த எழுச்சியினுடைய காலகட்டத்திற்குள்ளாக மதரீதியாக தங்களை வேறுபடுத்திக் கொள்கின்ற போக்கு நடக்க ஆரம்பிக்கிறது.
கேள்வி: அதாவது பிரிட்டிஷ்காரர்கள் கிறித்தவர்கள், நாம் இந்துக்கள் என்று ஆரம்பித்தா?
பதில்: அந்த இடத்தில் ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜங்கள் ஆரம்பிக்கிறது. இதில் அன்னிபெசண்ட் அம்மையார் உள்ளே வருகிறார்? திலகர் என்ன பேசுகிறார்? கோகுலே என்ன அரசியலை முன் வைக்கிறார்? லஜபதிராய் என்ன அரசியலை முன்வைக்கிறார்? அவர்கள் எல்லாம் சுதேசி என பேசுவார்கள். அந்த சமயத்தில் பிரிட்டிஷ் அரசு நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட இந்திய முதலாளிகள், இங்கே இருந்த ஆளும் வர்க்கத்தை சார்ந்தவர்கள், இங்கே இருந்த பார்ப்பனர்களுடைய ஆதிக்கம் எல்லாம் நெருக்கடிக்கு உள்ளான போது, இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் சுதேசிகளை பேச ஆரம்பிக்கிறார்கள். அதில் ஒரு தரப்பு காங்கிரஸாக இருந்து கொண்டு பேரம் பேசுகிறது. காங்கிரசில் ஒரு தரப்பு இருந்து கூட பிரிட்டிசாரோடு மோதுகிறது. இந்த இந்த சூழ்நிலைக்குள் தான் பாரதியார் சுதேசி அரசியலை தேர்ந்தெடுத்தார்.
முதல் உலகப் போருக்கு பின்பு தேச அரசுகள் உருவாக ஆரம்பிக்கிறது. இதே காலகட்டத்தில் மான்டேகு செம்ஸ்போர்ட் அடிப்படையில் இரட்டை ஆட்சி முறை வருகிறது. முதல் முறை ஆட்சி பகிர்வு வரும்பொழுது தான், என்ன விதமான ஆட்சியை நாம் உருவாக்கிக் கொள்வது என்கின்ற சண்டை ஆரம்பிக்கும் பொழுது, இந்த ’மிலிட்டன்ட் இந்துத்துவா/ தீவிரவாத இந்துத்துவ அரசியல்’ என்பது எழ ஆரம்பிக்கிறது. அதில்தான் இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ் போன்றவர்கள் இனிமேல் வரக்கூடிய ஆட்சி அதிகாரம் என்பது பார்ப்பனர்கள் கையில் தான் இருக்க வேண்டும். மராத்திய பேஷ்வாக்கள் உடைய ஆட்சி அமைப்பு முறையை தான் அவர்கள் முன் வைக்கிறார்கள்.
கேள்வி: அது எந்த கட்சியா இருந்தாலும் சரியா?
பதில்: அப்போது கட்சி எல்லாம் ஒன்றுமே கிடையாது. மதச் சார்பு நிறுவனங்கள் மட்டும்தான். இந்த மத சார்பு நிறுவனங்கள் வந்து உயர் சாதி அமைப்புகள். அதனுடைய சிந்தனைகள் எப்படி எனில், உதாரணத்திற்கு கஸ்தூரிரங்கன் ஐயங்கார் தொழிலாளர் உரிமை என பேசுவார்கள், ஆனால் இன்னொரு புறத்தில் சனாதனத்தை பாதுகாப்பார்கள்.
அதாவது வஉசி அவர்களின போராட்டத்தை சுதேசி போராட்டமாக ஆதரிப்பார்கள், ஆனால் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்பார்கள். இதுதான் இரட்டை நிலைப்பாடு. அதாவது சுதேசியாகவும் இருப்பார்கள். சனாதனவாதியாவும் இருப்பார்கள்.
கேள்வி: இது பாரதிக்கும் பொருந்துமா? ஏனெனில் அவர் தொழிலாளர் உரிமையைப் பற்றி பேசியிருந்தாரா?

பதில்: இரட்டை நிலைப்பாடு இருந்த காலகட்டமும் இருக்கிறது. அதற்கு அடுத்தான ஒரு வளர்ச்சி நிலையை அடையக்கூடிய காலகட்டத்திற்கு வர ஆரம்பிக்கிறது. சமூக சீர்திருத்த கருத்துக்களை நோக்கி அயோத்திதாச பண்டிதர் & ஐயா. இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் எல்லாம் வேலை செய்யும்போது, அதனோடு பாரதி தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. இதைத்தான் விமர்சனப் பூர்வமாக பார்க்கிறேன்.
சமுதாய சீர்திருத்த இயக்கங்களோடு இணைத்துக் கொள்கிறீர்களா? அல்லது பார்ப்பனர் வகைப்பட்ட தேசிய இயக்கங்களோடு இணைத்துக் கொள்கிறீர்களா? என்ற இந்த ஆய்வுகளை வைத்து நாம் பாரதியை புரிந்து கொள்ள முடியும்.
திலகர் & கோகலே வகைப்பட்ட இந்த அரசியல் என்னவாக இருக்கிறது எனில், இந்துத்துவ அரசியலுடைய இடத்தில் நிற்கிறது. அப்போது சர்தார் வல்லபாய் பட்டேல் & திலகருடைய வாரிசாகதான் பார்க்க முடியும். காங்கிரசிலிருந்து ஒரு இந்துத்துவம் கி.பி.1870 /1880களில் உருப்பெற்று வளர்ந்து வருகிறது. இந்த சமயத்தில் தேச அரசியல்கள் உருவாகக்கூடிய காலகட்டங்களும் வர ஆரம்பிக்கிறது. அதனுடைய போக்கும் இதற்குள்ளாக வருகிறது. பார்ப்பன எதிர்ப்பு அரசியலும் இதற்குள்ளாக வருகிறது. மதவாத அரசியலில் பார்ப்பனர்கள்தான் சனாதானத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அரசியலை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக முன் வைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நடந்த பாளையக்காரர்கள் புரட்சிக்கும், வடநாட்டில் நடந்த சிப்பாய் கலகத்திற்கும் வேறுபாடு என்ன? சொல்லியிருக்கிறார்களா யாராவது? வடநாட்டில் இருந்த சிப்பாய் புரட்சி என்பது என்ன? மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பின் அடிப்படையில் மதரீதியான சண்டையாக வெள்ளையருக்கு எதிராக நடக்கிறது. ஆனால் இங்கே நடந்த பாளையக்காரர் எழுச்சி கட்டபொம்மன், மருதுபாண்டியர், பூலிதேவன், ஒண்டி வீரன், சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, முகமது ஹாசம், திப்பு சுல்தான், இவர்களெல்லாம் ஏகாதிபத்தியத்திற்கு / ஆதிக்கத்திற்கு/ சுரண்டலுக்கு எதிரான சண்டை செய்தார்கள். வெள்ளைக்காரன் ஏகபோகமா எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறான். அவன் போடக்கூடிய வரிக்கு எதிரான ஏழை எளிய மக்களின் சண்டைதான் அது.
தமிழ்நாட்டினுடைய பாளையக்காரர்கள் எழுச்சியை அடுத்து, ஒரு 50/ 60 ஆண்டு காலம் கழித்து வரக்கூடிய வடநாட்டு சிப்பாய் கழகம் என்பது, ஒரு முகலாய அரசரை மறுபடியும் ஆட்சி அதிகாரத்தை கொண்டு வரக்கூடிய, ஒரு மதரீதியாக தங்களை இணைத்து கொண்ட ஒரு சண்டையாக வருகிறது. அங்கே சிற்றரசர்கள் தங்கள் ஆதிக்கத்திற்காக சண்டை போடுகிறார்கள். இங்கே ஏழை எளிய மக்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு எதிராக சண்டை போடுகிறார்கள். இந்த இரண்டுமே வேறு வேறு.
நம்முடைய பாரம்பரியம் வேறு. வடநாட்டில் நடந்த விடுதலைப் போராட்ட பாரம்பரியம் என்பது வேறு. அதற்காக அதை குறைத்து மதிப்பிடவோ, உதாசீனப்படுத்தவோ அல்ல. ஜான்சிராணி, தாந்தியா தோபியாவோட அல்லது பேகம் ஹஸ்ரத் மஹால் போன்றவர்களின் போராட்ட வரலாறு இருக்கிறது. அயோத்தியை பாதுகாத்த அஸ்ரத் மஹாலுடைய சண்டையோ, லக்னோவை பாதுகாத்து சண்டைவிட்ட ஹசரத் மகால் சண்டையோ நாம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அதனுடைய தன்மை ஒரு நிலவுடமை சண்டை. இரு சமூகத்தினுடைய சண்டையாக இருந்திருக்கிறது.
கேள்வி: அதேபோலதான் பெரியாரியவாதிகள் பாரதியின் மீதான விமர்சனத்தின் மூலமாக ஒரு குறை மதிப்பீடு செய்கிறார்களா என்ற ஒரு கேள்வியும் இருக்கிறதே?
பதில்: பாரதி பற்றிய மதிப்பீடு தனியாக நாம் பேசலாம். அவரை ஒரு கோட்பாட்டாளராக பார்க்க முடியாது. ஒரு இலக்கியவாதியாக பார்த்துக்கொண்டு, அந்த இலக்கியவாதி முன்வகிக்கக்கூடிய கருத்தியல்கள் முரண்பட்ட கருத்தியல்களாக இருக்கின்றன. அந்த முரண்பாடுகளை மக்களிடத்தில் சொல்லும் பொழுது அடிப்படையில் விமர்சனப் பூர்வமாக மறுக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் பாரதியை ஏற்றுக் கொள்கிறார்கள். பாரதிதாசனை ஏன் பெரிய அளவுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
கேள்வி: என்ன காரணமா இருக்கும்?
பதில்: அவர்களிடம்தான் கேட்க வேண்டும். இங்கே பெரியாரிய தோழர்கள் பாரதியை இந்த இந்தப் புள்ளிகளில் நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இந்த இந்தப் புள்ளிகளில் விமர்சனம் இருக்கிறது என வெளிப்படையாக முன் வைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் பாரதி நாம் பார்க்கக்கூடிய காலகட்டம் என்பதை நான் வேறு புள்ளியில் இருந்து பார்க்கிறேன்.
கேள்வி: இறுதியாக, ஒரு பக்கம் பெரியாரியவாதிகள் ’சனாதன பாரதி; சமத்துவ பெரியார்’ என்ற தலைப்பில் ஒரு கூட்டம் நடத்துகிறார்கள். அதேபோல சீமான் ’சாதிவெறி பெரியார்; சமத்துவ பாரதி’ எனச் சொல்லி ஒரு கூட்டம் நடத்துகிறார்கள். இப்போது பாரதியாரையும் பெரியாரையும் எதிர் எதிரில் நிற்க வைக்க வேண்டிய சூழல் இருக்கிறதா? இந்த இரண்டு இயக்கங்களுமே ஒரு விசயத்தை செய்வது எப்படி புரிந்து கொள்வது?
பதில்: அதாவது பாரதியுடைய பற்றியான ஆய்வுகள் வைக்கலாம். சாதிவெறி பெரியார் எனச் சொல்கிறார்களே அதற்கான ஆய்வு செய்துள்ளார்களா? பெரியார் புத்தகம் ஏதாவது படித்துள்ளார்களா? என் பெயருக்கு பின்னால் என் சாதி போட்டால் என்ன தவறு என குடிதேசியம் பேசியவர்கள், கோகுல்ராஜ் ஆவணப்படுகொலை செய்யப்பட்டார். அதற்காக யுவராஜ் இரட்டை ஆயுள் தண்டனை பெறு சிறையில் இருக்கிறார். ஆனால் கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொண்டார் என்று பேசியவர் சீமான். இதுதான் சாதி எதிர்ப்பினுடைய லட்சணம், அளவுகோள். இவர் பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இவர் சாதியொழிப்பு பேசுவதெல்லாம் மேடையில் மட்டுமே. திமுக, அதிமுக சாதி அரசியலை வைத்து தேர்தல் அரசியல் எதிர்கொள்ளக்கூடிய கட்சியைப் போலதான், நாம் தமிழர் கட்சி வேறு ஒன்றும் கிடையாது.
நாதக வெற்றி பெறாது என்றபோது யாரை எங்கே நிறுத்தினால் என்ன பிரச்சனை வரப் போகிகிறது? ஈரோடு இடைத்தேர்லில் யாரை நிறுத்தினார் என்று கேட்போமா? சீமான் கடந்த தேர்தலில் அந்த தொகுதியில் ஏன் நின்றார் என கேட்போமா? அந்த சாதி ஆய்வு பார்ப்போமா? அதைப்பற்றி வெளிப்படையாக பேசுவாரா? இதையெல்லாம் தெரியாத மற்றவர்களிடம் போய் கதை பேச சொல்லுங்கள். இந்த புளுகுமூட்டைக் கதை எல்லாம் வெளியே வேண்டுமானால் பேசலாம். ஏதாவது ஒரு பொதுமேடையில் பேசினால் மொத்தமாக வெளியே வந்துவிடும்.
இத்தனை சாதிய ஆணப்படுகொலை நடக்கிறது. இது சம்பந்தமாக திமுக அரசு எதுவும் செய்யவில்லை, அதிமுக அரசு செய்யவில்லை, உடனே திராவிட கட்சிகள் செய்திருக்கிறது என்றால், இந்த சாதி ஆணவக் கொலைகளுக்கு வரலாறு எவ்வளவு காலம்? திமுக அதிமுக விமர்சனம் என்று சொல்லி மாற்று நாதக என சொல்லி வந்தால், அதே மாதிரி அரசியலை நாதகவும் செய்கிறது.
கேள்வி: தத்துவ ரீதியாக கேட்கிறேன். பெரியாரியவாதிகள் ”பாரதியாரையும் பெரியாரையும்” எதிரெதிர் நிலையில வைப்பது எப்படி நாம் புரிந்துக்கொள்வது?
பதில்: பெரியாரியவாதிகள் பாரதியை ஏற்றுக்கொள்ளவில்லை. பாரதி எடுத்த கோட்பாட்டில்/புள்ளியில் நான் இந்த இடத்தில் ஏற்றுக்கொள்கிறேன், இந்த இடத்தில் மறுக்கிறேன். மேலும் அதற்கான காரணத்தை அவர் சொல்லிவிட்டார்கள். அவர்கள் வைக்கக்கூடிய விமர்சன ரீதியான இடத்திற்கு பதில் சொன்னால் விசயம் முடிந்தது. எல்லாவற்றையும் எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவரவருடைய கொள்கை வேலை திட்டத்துக்கு ஏற்ப எது நடக்கிறதோ, அந்த அடிப்படையில் தான் கடந்து போக முடியும்.

பெரியார் அரசியலை ஆர்எஸ்எஸ் மேடையில் நின்று மறுக்கக்கூடிய ஒரு நபருக்கும், ராஜபக்சே மேடையில் கருணா பிரபாகரனை நான் மறுக்கிறேன் என்று சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் ஒன்றும் இல்லை.
பெரியார் ஒரு விடுதலை அரசியலை பேசினார். தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என பேசினார். அந்த துணிச்சல் சீமானுக்கும் கிடையாது. அவரின் தமிழ்த்தேசிய குருவாக ஏற்றுக் கொண்டிருக்க ஐயா மணியரசனுக்கும் கிடையாது.
தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்று பேசியவர் தந்தை பெரியார். புத்தகமே இருக்கிறது? அப்படி ஏதாவது தமிழ்த்தேசியவாதிகளாக சொல்லப்படும் ஐயா மணியரசன் அவர்கள் போட்டுள்ளாரா? அது சீமானுக்கு எல்லாம் வரவே வராது. சீமான் தோழர் தமிழரசனை தேங்காய் சில்லுக்கு ஆசைப்படுகிறார் என்று பேசினார். ஒரு மாவீரன் என்று போற்றப்படுபவர் தோழர் தமிழரசன் அவர்கள். ஒரு படைகட்டி தமிழ்நாடு விடுதலைக்காக போர் புரிந்த ஒரு வீரனை தேங்காய் சில்லுக்காக ஆசைப்பட்டவர் என்று இழிவாக பேசியவர்தான் சீமான். பொட்டம்மானையும் இழிவாகப் பேசியவர். இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான நபரை அம்பலப்படுத்த வேண்டிய இடத்திற்கு வந்துள்ளோம்.
இவர்கள் பொருட்படுத்தக்கூடிய சக்தி எல்லாம் ஒன்றும் கிடையாது. இவர் ஆர்எஸ்எஸ் -க்கு கூலி வேலை பார்கக்கூடிய நபர். யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்காக பேசுவார். பணம் நிறைய கொடுத்தால் அவர் தன்னைத்தானே திட்டிக்கொள்வார். அதில் கொஞ்சமும் கூச்சமும் பட மாட்டார். வெட்கம் மானம் எல்லாம் சீமானுக்கு எதுவுமே கிடையாது. இவரை தமிழ்த்தேசியவாதி என தயவு செய்து சொல்ல் வேண்டாம். தமிழ் தேசியத்துக்கும் சீமானுக்கும் சம்பந்தமே கிடையாது. இவர் ஏதோ ஓட்டு பொறுக்கிவிட்டு சம்பாதித்துவிட்டு சந்தோசமாக இருக்கக்கூடிய நபர்.
16 வருடமாக ஈழத்தமிழர்கள் விசயத்தில் எந்த வேலையும் செய்யாத நபர், என்பது எங்களுக்கு தெரியும். சீமான் விடுதலை புலிகளுக்கு எதிரான வேலையைத் தான் 16 வருடம் பார்த்துள்ளார். தமிழ்நாட்டில் விடுதலை புலிகளை கொச்சைப்படுத்துவதற்கான ஒரு பெரும் பரப்புரையை 16 ஆண்டுகளாக செய்தவர். வெறும் விடுதலை புலிகளின் படத்தை வைத்துக்கொண்டு போற்றுவதால் ஒரு அர்த்தம் இல்லை.
நெறியாளர்: பல்வேறு கேள்விகளுக்கு மிக ஆழமாகவும் பொறுமையாகவும் பதில் அளித்தீர்கள். நன்றி.
தோழர்: நன்றி!
முழு காணொலி: