தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட ஒரு கோடி வாக்காளர்கள் நிலை என்ன? – தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

SIR-ஆல் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்தும், திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவவாதிகள் செய்யும் கலவர முயற்சி குறித்தும், தவெக வரும் இளைஞர்களை அரசியல் பண்புக்கு மாற்ற வேண்டிய பொறுப்பு குறித்தும், தொழிலாளர் வர்க்கத்தின் சிக்கல்கள் குறித்தும் பியான்ட் ஹெட்லைன்ஸ் ஊடகத்திற்கு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கடந்த திசம்பர் 22, 2025 அன்று வழங்கிய நேர்காணல்:

ஊடகவியலாளர்: பியான்ட் ஹெட்லைன்ஸ் (Beyond Headlines) நேயர்களுக்கு வணக்கம். தற்போது இருக்கும் அரசியல் சூழல் குறித்து நம்மிடம் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொள்வதற்காக, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இணைந்துள்ளார். அவர்களிடம் பேசுவோம்.

ஊடகவியலாளர்: வணக்கம் தோழர்.

தோழர் திருமுருகன் காந்தி: வணக்கம்.

ஊடகவியலாளரின் கேள்வி: என்னுடைய முதல் கேள்வி என்னவெனில், இப்போது செங்கோட்டையன் அவர்கள் த.வெ.கவில் இணைந்துள்ளார், அதைப் பற்றி உங்களுடைய கருத்துக்கள் என்ன?

தோழர் திருமுருகன் காந்தியின் பதில்: செங்கோட்டையன் அவர்கள் எந்தக் கட்சிக்குப் போக வேண்டும் என்பதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்து அந்த கட்சிக்குப் போயிருக்கிறார். அவர் பல்லாண்டு காலம் இருந்த அதிமுக கட்சியை விட்டு வெளியேறி வந்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியினுடைய விருப்பத்திற்கு ஏற்ப அதிமுகவிற்கு உள்ளாக இயங்கியவர். அதிமுக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, பாரதிய ஜனதா கட்சியை நேரடியாக டெல்லியில் சென்று சந்தித்திருக்கிறார். அதற்குப் பிறகு தவெகவில் இணைந்திருக்கிறார். அதைத் தாண்டி அவர் ’கொள்கை அரசியல்’ பேசியோ இயங்கியோ நாம் பார்த்ததில்லை. இது மாதிரி பலர் வருவதும் கட்சி மாறுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கேள்வி: கரூர் கூட்ட நெரிசலுக்கு பின் ‘ரோட் ஷோ’ இல்லாமல் ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது. ஆனால் இன்னமும் கட்சியில் இருக்கக்கூடிய இளைஞர்களை ’தற்குறிகள்’ என விமர்சனங்களும் வைக்கிறார்கள். அதேபோல அந்தக் கட்சியின் அண்மைய கூட்டத்தில் ஒரு இளைஞர் ’ஒலிப்பெருக்கி’ (Speaker set) மேல் ஏறுகிறார். அப்போது ‘இதுவரைக்கும் இளைஞர்களை தவெக கட்சி நெறிமுறைப் படுத்தவில்லை’ என கேள்வி எழுகிறதே? அதைப்பற்றிய உங்கள் பார்வை?

பதில்: அடிப்படையில் அந்த கட்சி ஒரு ரசிகர் மன்றத்தினால் உருவாக்கப்பட்டது. ரசிகர் மன்றம் இந்த அரசியல் கட்சியாக மாற்றப்படுவதற்கு முன்பாக, ஒரு அரசியல் அமைப்புக்கு ஏற்ப அவர்களுக்கு பயிற்சி கொடுத்திருக்க வேண்டும். அப்படி எந்த பயிற்சியும் கொடுக்காமல் அப்படியே அரசியல் கட்சியாகவே வைத்துள்ளார்கள். அதனால் அவை ரசிகர் மன்றங்களாகவே இருக்கின்றன. அதனுடைய பொறுப்பாளரும் ரசிகர்மன்ற தலைமையில் எப்படி இருந்தார்களோ, அப்படியேதான் இருக்கிறார்கள். அரசியல் கட்சியாக மாறிய பின், ஒரு பண்பு மாற்றம் வர வேண்டும். அந்த பண்பு மாற்றம் என்பது தலைமையிலிருந்து ரசிகர் மன்ற தலைவர்கள் வரை யாரும் தயாராக இல்லை என்கிற பொழுது, அக்கட்சி இளைஞர்களை சாதாரண ரசிகர்களாகவேதான் அணுகுவார்கள். இத்தகைய ரசிகர் மனப் பண்பிலிருந்து அரசியல் பண்புக்கு மாற்ற வேண்டிய பொறுப்பு தவெக தலைமையிடம் இருக்கிறது.

தவெக கட்சிக்கு அரசியல் தலைவர் என்று தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் என்று குறிப்பிட்டு சொன்னபின், அவர்களுடைய கருத்துக்களைக் குறித்து  உங்களுடைய (தவெக) கட்சி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் எடுத்திருக்க வேண்டும்.

அந்த இளைஞர்களுக்கு இந்த கொள்கையை நாம் ஏன் தேர்ந்தெடுத்தோம் என சொல்லித் தர வேண்டும். இதெல்லாம் இருந்திருந்தால் இந்த பிரச்சனைகள் நேர்ந்திருக்காது. மிக நேர்த்தியான அரசியல் இயக்கமாக கட்சியை மாற்றியிருக்க முடியும். ஆனால் அந்த கட்சித் தலைமை அப்படி விரும்பவில்லை என்றுதான் தெரிகிறது. கரூர் பிரச்சனைக்கு பிறகு வடிவத்தை மாற்றினாலும், உள்ளடக்கத்தில் அதே ரசிகத் தன்மையை வைத்துதான் கட்சி நடத்துகின்றார்கள். நீண்ட காலமாக ஒரு கட்சி செயல்படுவதற்கு இந்த ரசிகத் தன்மை நிச்சயமாக பயன்படாது.

கேள்வி: திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தொடர்ந்து வெவ்வேறு வடிவத்தில் தூய்மை பணியாளர்களுடைய போராட்டம், செவிலியர்களுடைய போராட்டம், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம், அங்கன்வாடி ஊழியர்கள் என பல போராட்டங்கள் வலுவாக நடந்துக்கொண்டு இருக்கிறது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: தனியார் மயம் குறித்தும் ஒப்பந்த ஊழியர் குறித்தும் திமுக எந்த கொள்கை நிலைப்பாடும் கொண்டு வரவில்லை. கடந்த காலத்தில் (அதிமுக காலத்தில்) இருந்த ஒப்பந்த ஊழியர் முறையை இவர்கள் (திமுக) வசதிக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த பொறுப்பை அதிமுக கட்சியின் மேல் போட்டுவிட்டு திமுக கடந்து செல்ல முடியாது. உங்களுக்கு (திமுக) ஒரு பொறுப்பு இருக்கிறது. பணி நிரந்தரம் என்பது தொழிலாளர்களுடைய உரிமை என்பதை திமுக கட்சியின் தொழிலாளர் கொள்கை சார்ந்து, கடந்த 4-5 ஆண்டுகளாக செய்யாமல் தவிர்ப்பதை அந்தக் கட்சியினுடைய தோல்வியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

தொழிலாளர் கொள்கையில் ஒரு ஈடுபாடோ, தொழிலாளர்களை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கமோ, அதற்கான ஒரு கருத்தியல் தெளிவோ எதுவுமே இல்லை. முழுக்க முழுக்க தனியார்மயத்தின் சார்பாக இருக்கக்கூடிய ஒரு அமைப்பாகத்தான் இருக்கிறது. அந்த அமைப்பில் தொழிலாளர் நலன் சார்ந்து பேசக்கூடியவர்கள் யாரையும் நான் பார்க்கவில்லை. முழுக்க முழுக்க முதலாளித்துவ சிந்தனையில் இருக்கக்கூடிய கட்சிதான் திமுக. ஒரு முதலாளித்துவ மனநிலையில் தொழிலாளர் பிரச்சனையை அணுகுகிறார்கள். அது நிச்சயமாக தேர்தலில் பெரும் நெருக்கடியை கொடுக்கத்தான் போகிறது.

கேள்வி: திமுக கூட்டணியில் இடதுசாரி கட்சிகளும் இருக்கும் போதே தொழிலாளர்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் தொடர்ந்து கொடுக்கப்படுகின்றது. இடதுசாரிகள் கூட்டணியில் இருந்தும் அவர்கள் திமுக மீது ஏன் பெரிய அளவில் கேள்விகள் எழுப்புவதில்லை என்கிற கேள்வி பொதுமக்களிடம் இருக்கிறேதே? 

பதில்: நிச்சயமாக, இந்த போரட்டங்கள் எல்லாமே ஏதோ ஒரு சமயத்தில் திமுக தங்கள் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்திவிடும் என்கிற ஒரு ஏக்கத்தின் அடிப்படையிலே நான்கு ஆண்டு காலம் ஓடியதை நாம் பார்க்க முடியும். இதை ஒரு தீவிரமான தொழிலாளர் போராட்டமாக முன்னெடுப்பது என்பது தேவைப்படுகிறது. திமுகவோ, அதிமுகவோ, காங்கிரஸோ, பாரதிய ஜனதாவோ ஆகிய நான்கு கட்சிகளுமே ’தொழிலாளர் எதிர்நிலைப்பாடு’ கொண்ட கட்சிகளாகத்தான் இருக்கின்றன.

இது தொழிலாளர் போராட்டம் தான். அந்த ஆட்சி, இந்த ஆட்சி என்ற வேறுபாடு கிடையாது. அதிகார வர்க்கம் எப்படி இருக்கிறது? ஐஏஎஸ் அதிகாரிகள் எப்படி இருக்கிறார்கள்? முழுக்க முழுக்க தொழிலாளர் விரோதிகளாகவே இருக்கிறார்கள். எதேச்சதிகார மனநிலை கொண்டவர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகளை நாம் பார்க்கிறோம். அவர்கள் மனிதத் தன்மையோடோ அல்லது தொழிலாளர் நலன் கொள்கை சார்ந்தோ பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்ல.

தொழிலாளர் கொள்கைகள் என்ன? தொழிலாளர் நலத்திட்டங்கள் எப்படி உருவாக்க வேண்டும்? என்கின்ற எந்த பயிற்சியும் கிடையாது. அவர்களுக்கு நிர்வாகம் செய்வதற்குரிய பயிற்சி மட்டும் தான் இருக்கிறது. அதனால் வெறும் நிர்வாக பயிற்சியோடுதான் வருகிறார்கள். எனவே அந்த வர்க்கம் முழுமையாக தொழிலாளர்களுக்கு எதிர் நிலையில் தான் இருக்கிறார்கள். நிதி நிர்வாக கட்டமைப்பு மட்டும்தான் பேசுகிறார்கள்.

சமூக நீதி பேசக்கூடிய பணிகளில் இருக்கக் கூடியவர்கள் எல்லாருமே அடித்தட்டு மக்கள்தான். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி சமூகத்தை சார்ந்தவர்கள். அதில் ஏழைகளாக இருக்கக் கூடியவர்கள், பெரிய வசதி வாய்ப்பு இல்லாதவர்கள், கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள், நகரப் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கான பணி என்பது மிக மிக முக்கியமானது. அதிகார கட்டமைப்புகள் விரிவடையும்.

இன்றைக்கு அடிமட்ட அளவிலுள்ள எல்லாவற்றையும் ஒப்பந்த ஊழியராக மாற்றி விட்டால், அங்கு அதிகாரம் என்ன இருக்கிறது? அரசு அதிகாரத்தை ஐஏஎஸ் மட்டத்தோடோ அல்லது வேற ஒரு அதிகார மட்டத்தோடோ நிறுத்திவிட்டு, மற்றவர்களை ஒப்பந்த ஊழியராகவே மாற்றிக்கொண்டு போகும் பொழுது அவர்கள் அதிகாரமற்றவர்களாகவும், உரிய சம்பளம் பெற முடியாத நிலையில் ஊதியம் பெற முடியாத நிலையில் சுரண்டப்படக்கூடியவர்களாக மாற்றப்படுகிறார்கள். இது மிகப்பெரிய கேடு. ஆனால் இதைப் பற்றிய எந்த புரிதலும் அதிகார வர்க்கத்திற்கும் கிடையாது. இந்த நான்கு கட்சிகளுக்கும் கிடையாது. அதுதான் இங்கு இருக்கக்கூடிய மிக மிக மோசமான நிலை. திமுகவாவது செய்யும் என எதிர்பார்த்து நான்கு வருடம் போய் விட்டது. இனி போராட்டக்காரர்கள் திமுகவிற்கு (எதிர்வினை) செய்வார்கள் என நினைக்கிறேன்.

கேள்வி: திருப்பரங்குன்றம் விடயத்தில் அந்த ஊரில் இருக்கும் மக்களுக்கே (உச்சிப்பிள்ளையார் கோவில் தவிர வேறு இடத்தில்) விளக்கு ஏற்ற விருப்பம் இல்லை என்று செய்தி வந்தது. ஆனால் திடீரென சிலர் கடைகளில் விளக்கேற்றி ’நாங்கள் இதை ஆதரிக்கத்தான் செய்றோம்’ என்கிற ஒரு விடயத்தை முன் வைக்கிறார்கள். இது திட்டமிட்டு செய்யக்கூடிய செயலா? இல்லையெனில் அந்த மக்களுடைய பார்வை இதில் எப்படி இருக்கிறது?

பதில்: பொதுவாக பக்தர்களிடம் நிறைய கோரிக்கைகள் இருக்கும். ஒரு கோவிலுக்குள்ளாக எத்தனையோ மாற்றங்கள் நடக்கும். பக்தர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப கொள்கை மாற்றங்கள் எல்லாமே நடக்கும். பக்தர்கள் நிற்பதற்கான வரிசைகள் அமைப்பதிலிருந்து, எல்லா விதமான மாற்றங்களும் பக்தர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப நடக்கும். இத்தகைய சூழலில் பாஜக கூறும் இடத்தில் தீபம் ஏற்றினால்தான் முருகனுக்கு சக்தி வரும், பக்தி வரும், முக்தி வரும் என்பது ஏமாற்றுகின்ற அல்லது ஒரு கலவரத்தை கொண்டு வருகின்ற செயல்.

அங்கே ’சிக்கந்தர் தர்கா’ இருப்பதால்தான் இவனுக்கு (இந்துத்துவ குண்டர்கள்) பக்தி வந்திருக்கிறதே ஒழிய, இவர்களுக்கு உண்மையிலேயே  தீபம் ஏற்ற வேண்டும் என்ற அக்கறை எல்லாம் இல்லை. முருகன் மலையில்தான் ஏற்ற வேண்டும் எனில் எல்லா மலை மீதும் ஏற்றியிருக்க வேண்டியதுதானே. கொடைக்கானல் மலை, மருத மலை, சாமி மலைகளுக்கு சென்று ஏற்ற வேண்டியதுதானே. அதெல்லாம் செய்யாமல் இந்த கும்பல்களுக்கு திருப்பரங்குன்றத்தில் என்ன அக்கறையென்றால் ‘மேலே தர்கா இருக்கிறது, இனிவரும் காலங்களில் தர்காவை இடித்து எச். ராஜா சொன்ன மாதிரி கலவரம் பண்ணனும்’ என்கிற விருப்பத்தின் அடிப்படையில்தான் நடக்கிறது. இதற்கும் உண்மையான பக்தி கொண்டவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது. அப்படி இந்த கும்பல் எல்லாம் பக்திமான்கள் என்றால் நமக்கு பக்தியின் மேல் கடுமையான அச்சம்தான் வருகிறது.

கேள்வி: எஸ்ஐஆர்-ல் 97,37,832 வாக்குகள் தமிழ்நாட்டில் நீக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி வந்தது. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் ஓட்டு நீக்கப்படும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அடிப்படையில் இது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்? இதுனுடைய விளைவு வரும் தேர்தலில் எதிரொலிக்குமா?

பதில்: இது நிச்சயமாக கவனிக்க வேண்டிய விடயம். ஒரு கோடி பேருக்கான வாக்குகள் நீக்கப்படுகிறது எனில், தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க திறமையற்ற ஒன்றாக இருக்கிறது, அல்லது எந்த அக்கறையும் இல்லாமல் பொறுப்பற்ற வகையில் நடத்தியுள்ளது. இறந்து போனவர்கள் 23 லட்சம் பேர் என்று அதை நீக்கியுள்ளோம் என்கிறார்கள், அல்லது இரட்டை இடத்தில் பதிவு செய்யப்பட்டது என்று 3/4 லட்சம் (கிட்டதட்ட ஒரு சதவீதம்)  கணக்கு சொல்கிறார்கள். அந்த இரண்டையும் நீக்கிவிட்டால் கூட 75 லட்சம் பேர் இருக்கிறார்கள். இந்த 75 லட்சம் பேரை பட்டியலில் உறுதிப்படுத்த முடியவில்லை எனும் போது, இந்த 75 லட்சம் பேர் என்ன ஆனார்கள்? அவன் ஏற்கனவே இருந்திருக்கிறான், ஓட்டு போட்டிருக்கிறான். இப்பொழுது எங்கே போய்விட்டான்? காணாமல் போய்விட்டானா? அல்லது 75 லட்சம் பேர் நாட்டை விட்டு ஓடி விட்டார்களா? என்ன கணக்கு அது? எப்படி 75 லட்சம் பேர் இல்லாமல் ஒரு ஆவணத்தை வெளியிடுகிறார்கள்? முதலில் அதை எப்படி வெளியிட முடியும்? 75 லட்சம் பேர் இல்லையெனில் மறுபடியும் நீங்கள் (தேர்தல் அலுவலர்) தேட ஆரம்பித்து இருக்க வேண்டும். ஒவ்வொரு தொதியிலும்  எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் என சொல்ல வேண்டும் அல்லது அவர்களைத் தேடி இருக்க வேண்டும் அல்லது நீக்கப்பட்டதற்கு சரியான காரண காரியங்கள் சொல்லியிருக்க வேண்டும்.

ஒரு கோடி வாக்காளர்கள் இல்லையென்றால் அதற்கான காரணம் என்ன? அந்த கேள்விக்கு இதுவரைக்கும் தேர்தல் ஆணையத்திடம் பதிலே இல்லையே, அப்படியென்றால் ஒழுங்காக ஆவணம் வாங்கினார்களா? இல்லையா? மக்கள் தொகை எப்படி குறைந்திருக்கும்? மக்கள் தொகையில் ஒரு கோடி பேர் எப்படி காணாமல் போவார்கள்?

ஒரு  திரைப்படத்தில் ’கிணறு காணோம்’ என்று சொல்வார்களே, அந்த மாதிரி ‘ஒரு கோடி பேர் காணோம்’ என தேர்தல் ஆணையம் பேசுகிறது. அதாவது மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கு (1/7) காணவில்லை என்று பொறுப்பற்ற தன்மையில் தேர்தல் ஆணையம் பேசுகிறது. இது மிக அதிர்ச்சிக்குரிய விடயம்.

இந்த எஸ்ஐஆர்-ல் இருந்து வாக்காளர்கள் நீக்குவது மட்டுமே ஊழல் அல்ல, இந்த நீக்கத்தை எதைக் கொண்டு நிரப்புகிறார்கள்? இதன் மென்பொருள் அமைப்பு வடிவமைப்பு (Software System Design) எடுத்துக் கொண்டால், தேர்தல் நடத்தினாலும் சரி, நடக்கவிட்டாலும் சரி, ஆவணம் இருக்கிறதோ இல்லையோ தரவுகளை (Database) வைத்து எல்லாவற்றையும் மாற்ற முடியும். அதற்கு இந்த ஆவணங்கள் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த தரவுத்தளத்தில் ஒரு பட்டியலை உருவாக்கலாம். வாக்காளராக சேர்க்கலாம். எங்கெல்லாம் இடைவெளி இருக்கிறதோ அங்கு சேர்க்கவும் முடியும். (ஒரு தொகுதியில் இருக்கக்கூடிய 300 வாக்குச்சாவடியில் 100 வாக்குகள் சேர்த்தாலே 30,000 வாக்குகள் சேர்க்க முடியும்)

இரண்டாவது விடயம், தேர்தலில் இரண்டு கட்சிகளுக்குமான (திமுக, அதிமுக) வேறுபாடுகள் பார்த்தால் 1% அல்லது 2% அளவில்தான் இருக்கிறார்கள். இது (1%-2%) பெரிய எண்ணிக்கை கிடையாது. இந்த விகிதத்தை மட்டும் வைத்து எல்லாவற்றிலும் சேர்த்துக்கொண்டே போனால், தமிழ்நாட்டில் 100 தொகுதியில் 3000 வாக்குகள் எடுத்துக்கொண்டால் 3 லட்சம் வாக்குகள் தான். அந்த 3 லட்சம் வாக்குகளையும் ஆயிரம் ஆயிரமாக மாற்றி விட்டாலே, ஆட்சியை கைப்பற்றிவிடுவார்கள். வெறும் 3 லட்சம் வாக்குகளை திணித்தாலே இதைச் செய்ய முடியும். எனினும் இறுதி வாக்காளர் பட்டியலில் என்ன இருக்கிறது? அதன்பின் எவ்வளவு வாக்குகள் பதிவாகி இருக்கிறது? எப்படி மாற்றங்கள் வந்திருக்கிறது? இது இரண்டையுமே பார்க்க வேண்டும்.

அதற்கு பிறகு தவறான விடயங்கள் நடந்திருக்கும் இடங்கள் உறுதியாகும். உதாரணத்திற்கு 2024 ஆண்டு தேர்தலில் கவுண்டம்பாளையம்  தொகுதியில் அண்ணாமலையினுடைய (பாஜக) வாக்குகளில் போலியான வாக்குகள் பதிவானாதற்கான எல்லா சாத்திய கூறுகளும் இருக்கின்றன. நான் ஏன் அந்த தொகுதியை சொல்கிறேன் எனில், அந்த தொகுதியில் பாஜகவுக்கு ஒரு லட்சம் வாக்குகள் கிடைப்பதற்கு எந்த வாய்ப்புமே கிடையாது. அந்த பகுதி எனக்கு நன்றாக தெரிந்த பகுதிதான். ஒரே வீட்டில் கிட்டத்தட்ட 14 பேர் இருப்பதாகக் கணக்கு சொல்கிறார்கள். பத்து வீடுகளில் 150  பேர் இருப்பதாகக் கணக்கு சொல்கிறார்கள். இதுவெல்லாம் நம்பத்தகுந்ததாக இல்லை.

தற்போது வெளிவந்த எஸ்ஐஆர்-ல், என் பக்கத்து வீட்டில் இருப்பவருடைய மனைவி பெயர் இருக்கிறது, அவருடைய தந்தை பெயர் இருக்கிறது, ஆனால் கணவர் பெயர் இல்லை. அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருக்கிறது. அந்த வீட்டில் எல்லாரும் ஒன்றாகத்தானே படிவம் கொடுத்திருப்பார்கள். அது எப்படி ஒரு பெயர் மட்டும் நீக்கப்பட்டிருக்கின்றது? அது தவறுதலாக நீக்கப்பட்டிருந்தால், அவர் ஏன் ஆவணங்களை சுமந்து கொண்டு அலைய வேண்டும்? இத்தகைய செயல் திறனற்ற ஒரு வேலையை செய்திருக்கிறார்கள்.

அடிப்படையில் மே 17 இயக்கம் பாரத ஜனதா கட்சியை எப்படி புரிந்துள்ளோம் என்றால், மிக தீவிரமான ஒரு பெரிய நடவடிக்கை நடத்துவதை போல ஒன்றை காண்பிப்பார்கள். அதில் கவனத்தை குவிக்கும் பொழுது, மிக மோசமான விடயத்தை (ஊழலை) பாஜக கட்சியினர் செய்வார்கள்.

கருப்பு பணத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. அப்போது நம்மிடம் இருந்த 100 ரூபாய், 500 ரூபாய் எல்லாத்தையும் பிடுங்கிவிட்டு, இவன் எந்த பணத்தை என்னவாக மாற்றினான் என யாருக்கும் எந்த கணக்கும் தெரியாது. ஆனால் இன்றைக்கு கருப்பு பணம் வைத்திருக்கிறார்கள் எனச் சொல்லி அமலாக்கத்துறையை அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். கருப்புப்பணம்தான் ஒழித்துவிட்டீர்களே அப்புறம் எப்படி அமலாக்கத்துறை வேலை செய்கிறது? என யாரும் கேட்கவில்லை.

அதேபோல ஜிஎஸ்டி வந்தால் வரி எல்லாம் எளிதாக்குவோம், வணிகம் செய்வது எளிது என்றார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்த மூன்று/நான்கு நண்பர்களே ஜிஎஸ்டி தாக்கத்தால் நிறுவனத்தை மூடினார்கள். பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் வருமானம் அதிகமாக வருகிறது, ஆனால் சிறு நிறுவனங்கள் மூடப்படுகின்றன. இந்த ஜிஎஸ்டி என்பது ஒரு ஏமாற்று வேலை.

கொரோனா வந்தபோது ஒன்றிய அரசு தடுப்பூசி போடுவதாக சொல்லி ஒரே கம்பெனிக்கு (பூனாவாலா நிறுவனத்திற்கு) கொடுத்தார்கள். அதன்பின் அந்த தடுப்பூசி நிறுவனத்தின் மேல் ஏகப்பட்ட புகார்கள்  எழுந்தன, அது குறித்து சர்வதேச அறிக்கையும் வந்தது. ஆனால் அந்த செய்தியை மறைத்துவிட்டார்கள். தற்போது பலர் திடீர் மாரடைப்பால் இறந்து போகின்ற செய்தியை தினமும் நாம் பார்க்கிறோம். எப்படி ஏன் திடீர் என மாரடைப்பு வருகிறது? எதனால் வருகிறது? நாம் தடுப்பூசிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இந்த தடுப்பூசி எப்படிப்பட்டது என்கின்ற மோசமான ஆய்வுகள் வெளியே வந்திருக்கின்றன. அதனால் தடுப்பூசி குறித்து பேச வேண்டிய தேவை இருக்கிறது. எந்த ஊசி எந்த உடலுக்கு பொருத்தமானதாக இருக்கும்? அதற்கான விசாரணை நடந்துள்ளதா? அதன் முடிவுகள் பற்றிய ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வேண்டும், ஆனால் அது இல்லை. இந்த தடுப்பூசி போட்ட பின் பலருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனதாக நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். நமது நண்பர்கள் வட்டத்திலே இது நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால் இன்றைக்கு இது குறித்த செய்திகளை மறைக்கிறார்கள். இந்த வேலையை செய்தது யார்? மோடி சர்க்கார்.

நீட் தேர்விலும் இதுபோன்ற மோசடிகள் நடந்தன. நீட் மிகப்பெரிய அளவுக்கு மிகவும் கராரான தேர்வு என்ற பெயரில், தேர்வு எழுத செல்லும் மாணவர்களை தலையைக் கலைத்து, சட்டையைக் கிழித்து, கம்மலை கழட்டி, நமது பிள்ளைகள் அனைவரும் திருட்டுத்தனமாக / கள்ளத்தனமாக தேர்வு எழுதப் போவதைப் போல அச்சப்பட வைத்தார்கள் (நீட் தேர்வு கேள்விகளுக்கான பதில்களை (Objective type questions) அப்படியெல்லாம் திருட்டுத்தனமாக எழுத முடியாது). மிகவும் கண்டிப்புடன் தேர்வு நடத்துகின்றோம் என்ற பெயரில் அந்த குழந்தைகளை மனரீதியாக உளவியல் ரீதியாக சிதைக்கின்றான். ஆனால் வட இந்தியா முழுக்க நீட் தேர்வில் ஊழல் செய்துக்கொண்டு இருக்கின்றான். திருட்டுத்தனம் செய்துக்கொண்டு இருக்கின்றான். இன்றைக்கு நீட் தேர்வில் மதிப்பெண் எடுக்கவில்லை என்றாலும் கூட தனியார் கல்லூரியில் சேர்ந்துவிடுகிறான். பணம் கொடுத்தால் சேர்ந்து விடலாம் என்பதே நடக்கிறது. இதன் பின்னணி என்னவெனில், மிக தீவிரமாக ஏதோ ஒரு விடயம் இருக்கின்ற மாதிரி காண்பித்து பெரிய ஊழலை செய்கிறார்கள்.

இப்போது SIR-இல் ஒரு கோடி பேர் காணாமல் போனதால், அந்த ஒரு கோடி பேரும் கடவுச்சீட்டு (Passport) பெறுவது போல் ஆவணங்களை எடுத்துக்கொண்டு அலைய வேண்டும். கடவுச்சீட்டுக்கே இவ்வளவு கடின வழிமுறை கிடையாது. இவ்வளவு செய்தும் இறுதியில் (பாஜகவினர்) திருட்டுத்தனம் பண்ண போகிறார்கள். கண்டிப்பாக தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் திருட்டுத்தனம் பண்ணுவதும், வாக்குப்பதிவில் திருட்டுத்தனம் பண்ணுவதும் நடக்கப்போகிறது. ஆச்சரியமே பட வேண்டாம்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 50 லட்சம் வாக்குகள் வாங்கியது போல கூறுகிறார்கள். இது நம்புகின்ற விடயமா? திருப்பரங்குன்ற கூட்டத்துக்கு பாஜகவினர் எத்தனை பேர் வந்தார்கள்? 100 பேர் கூட கிடையாது. அவன் கட்சியினர் எண்ணிக்கையே அவ்வளவுதான் இருக்கிறது. அவ்வாறெனில் எப்படி இத்தனை லட்சம் ஓட்டு வந்திருக்கும்? கண்டிப்பாக திருட்டுத்தனம் நடந்திருக்கின்றது. அதன்பின்தான் எஸ்ஐஆர் வருகிறது. எஸ்ஐஆர்-ஐ  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே கொண்டுவர வேண்டியதுதானே? அப்போது பண்ணவில்லை. நாடாளுமன்ற தேர்தலை முடித்துவிட்டு அதன்பின்னாவது பண்ண வேண்டியதுதானே? அதையும் செய்யவில்லை.

இவ்வளவு நெருக்கடியில் செய்வதற்கு காரணம் தமிழ்நாட்டு தேர்தலில் கண்டிப்பாக ஏமாற்று வழி செய்வதற்குத்தான். பிரேசில் நாட்டு பெண்ணை எஸ்.ஐ.ஆரில் சேர்த்துள்ளனர். நாளைக்கு இதே போல் கொரியா/சீனா மக்களின் பேரெல்லாம் சேர்க்க போகிறார்களா என தெரியாது. அதனால் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

கேள்வி: மத்திய அரசு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி அவர்களுடைய பெயரை நீக்குவதும், சில இடங்களில் அந்த திட்டத்தையே மாற்றுவதும், இந்தியில் பெயரை மாற்றுவதும் தொடர்ந்து நடக்கிறது. இப்போது புதிதாக நான்கு தொழிலாளர் சட்டம் வந்திருக்கிறது. இந்த விடயங்களை எப்படிப் பார்ப்பது? தொழிலாளர்கள் இதை எதிர்த்து வர முடியுமா என்ற கேள்வியும் வருகிறதே?

பதில்: அடிப்படையில் தொழிலாளர் வர்க்கம் என்பது அவர்களுடைய வேலைவாய்ப்பு, வருமான உயர்வு, பணி நிரந்தரம் – இது சம்பந்தமாக மட்டும்தான் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது அரசியல் ரீதியாக பயிற்றுவிக்கப்படவில்லை. அந்த தொழிலாளர் வர்க்கத்தை அரசியல் சக்தியாக பயிற்றுவித்து இருந்தால், இந்தியாவினுடைய முன்னணி சக்தியாக முன் நிறுத்தி இருந்தால், பாசிசத்துக்கு எதிரான சண்டையில் அவர்கள்தான் வழிகாட்டி இருப்பார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு, பணி நிரந்தரம், அதில் இருக்கக்கூடிய சலுகைகள் அல்லது தேவையான வசதி வாய்ப்புகளுக்காக மட்டுமே போராடக்கூடிய (ஒரு பொருளாதார நலன் சார்ந்து மட்டுமே) முன்வைக்கப்பட்டதால் தொழிலாளர்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்ட பொழுது, அவர்களால் திரள முடியாமல் போகிறது. ஒரு அரசு நிறுவனத்தில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் இருக்கிறார்கள். இந்த இரண்டு பேருக்கான ஒரே சங்கம் இருக்கிறதா? இல்லை. ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என நிரந்தர பணியாளர்கள் சங்கம் போராடி இருக்கிறதா? தொழிலாளர்களுக்குள் இவ்வளவு வேறுபாடுகள் ஏன் நடக்கிறது? எல்லா துறையிலும் ஒப்பந்த ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஒரே பிரச்சனை பணி நிரந்தரம் இல்லை என்பதுதான். அப்போது எல்லா ஒப்பந்த ஊழியர்களுக்கும் சேர்ந்து போராட்டம் நடந்துள்ளதா?

இது தவிர இந்த தொழிலாளர்கள் தான் இந்த நாட்டை நிர்வாகம் பண்ண வேண்டும். அரசியல் அதிகாரம் தொழிலாளர் கைக்கு போக வேண்டும். அப்படியென்றால் அரசியல் போராட்டத்தை யார் நடத்தியிருக்க வேண்டும்? தொழிற்சங்கங்கள் நடத்தியிருக்க வேண்டும்.

சிஏஏ & என்ஆர்சி, எஸ்ஐஆர், சூழலியல் பிரச்சினைகள் குறித்த திட்டங்களுக்கு, அது சர்ந்த மிக மோசமான சட்டங்களுக்கு எதிராக யார் வந்திருக்க வேண்டும்? தொழிலாளர்கள் வந்திருக்க வேண்டும். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் களத்தில் இறங்கி இருக்க வேண்டும். இதையெல்லாம் எதிர்கொள்ளாமல் அல்லது போராடாமல் பாசிஸ்ட்டுகளை எப்படி எதிர்கொள்வீர்கள்?

கேள்வி: பொதுவான போராட்டங்கள் இல்லாமலா?

பதில்: பொதுவான போராட்டங்கள் மட்டுமல்ல. வர்க்க அரசியல் என்பது அந்த வர்க்கம் அதிக அரசியல் அதிகாரத்தை அடைவதற்குரிய போராட்டத்தை நடத்தவில்லை. அதனுடைய விளைவைத்தான் இன்றைக்கு சந்திக்கின்றோம்.

தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்திற்குள்ளாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக மட்டுமல்ல, தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான அமைப்புகளாக இருந்தால் மட்டும்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும். அப்படியான பயிற்சி இந்தியாவில் இல்லை, அதனுடைய தோல்வியைத்தான் இன்றைக்கு நாம் பார்க்கிறோம். போராட்ட சக்தி, புரட்சிகர சக்தி, தொழிலாளர் சக்தி என பேசினாலும், அந்த தொழிலாளர் சக்தி / புரட்சிகர சக்தியை வைத்து புரட்சிகர நடவடிக்கைக்கும், அரசியல் மாற்றத்திற்கும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் பயன்படுத்தவில்லை என்றால், புரட்சிகர சக்தியை இழந்த அரசியலைத்தான் செய்கிறீர்கள். முன்னணி அரங்கை இழந்துவிட்டால், பிறகு எப்படி மாற்றத்தை கொண்டு வர முடியும்? அதனால்தான் இன்றைக்கு நிலை இவ்வளவு மோசமாக இருக்கிறது.

அனைத்து தொழிலாளர்கள் முன் இறங்கி போராடியிருந்தால், முன்னரங்கு சக்தியாக இறக்கப்பட்டிருந்தால், அவர்கள் அரசியலாக்கப்பட்டிருந்தால், இந்த பிரச்சனை இருந்திருக்காது. பாசிசம் இன்று இருக்க முடியாது. அடிப்படை பிரச்சனை தொழிற்சங்கத்தினுடைய அரசியல் தயாரிப்புகளில் இருக்கக்கூடிய பிரச்சனையாகத்தான் நான் பார்க்கின்றேன். கண்டிப்பாக இதற்கு ஒரு மீளாய்வு வேண்டும். அது குறித்து உறுதியாகப் பேச வேண்டும்.

1950-60களில் பிரஞ்சு(French) சிந்தனையாளர் இது குறித்து பேசுகிறார். ஏன் பிரஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி அடைகிறது? பிரஞ்சு தொழிலாளர் அமைப்புகள் ஏன் தோல்வி அடைகின்றன? என்பதை அவர் பேசுகிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரான்சில் இடதுசாரி அரசு ஏன் உருவாகாமல் போனது? மேற்கு ஐரோப்பாவில் இடதுசாரி அரசு உருவாகி இருக்கும் என்றால், அது எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க முடியும். பக்கத்தில் இருக்கக்கூடிய ஸ்பெயினில் அதற்கான கூறுகள் இருந்தன. பாசிஸ்ட் அரசாக பிராங்கோ அரசு இருந்தது. அதை வீழ்த்தி இருக்க முடியும். இத்தாலியை இடதுசாரிகள் மீண்டும் கைப்பற்றிருக்க முடியும். இப்படி பல மாற்றங்களை சாத்தியப்படுத்தி இருக்க முடியும். ஆனால் அங்கு தொழிற்சங்கம் என்பது வர்க்கத்திற்குரிய அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு ஆற்றலாக மாற்றப்படவில்லை. அதேதான் இங்கே இந்தியாவிலும் மிகப்பெரிய தோல்வியாக இருக்கிறது.

கேள்வி: என்னுடைய இறுதி கேள்வி – 2026 தேர்தல் வரப்போகிறது. இந்த நிலையில் மே 17 இயக்கத்தினுடைய நிலைப்பாடு எப்படி என்னவாக இருக்கிறது?

பதில்: பார்ப்போம்…எங்களுடைய நிலைப்பாடு ஒன்றே – ”பாசிஸ்ட் எதிர் நிலைப்பாடுதான்”. பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் மே17 இயக்கம் என்றைக்கும் இருக்கும்.  தொடர்ச்சியாக அந்த பரப்புரை நிச்சயமாக இருக்கும். எங்களுடைய நிலைப்பாடு அதுதான்.

ஊடகவியலாளர்: உங்கள் நேரத்தை செலவு செய்து எங்களிடம் நிறைய விடயங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

தோழர் திருமுருகன் காந்தி: நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »