
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அரசியல் சாசனத்தை கையளித்த நாள், தந்தை பெரியார் அவர்கள் சாதியை பாதுகாக்கக்கூடிய சட்டப்பிரிவை எரித்த நாள், தமிழ்த்தேசிய அரசியலை உயர்த்திப் பிடித்த மேதகு பிரபாகரன் அவர்களுடைய பிறந்தநாள், ஆகிய மூன்றையும் ஒன்றிணைந்து முப்பெரும் விழாவாக நடத்தி, தமிழ் தேசியத்தின் அடையாளமாக உலகுக்குக் காட்ட வேண்டும், என்கின்ற அடிப்படையில் நவம்பர் 26, 2025 அன்று திருவாரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவை தமிழ் தேசியக் கூட்டணியினுடைய நிகழ்வாக நடத்தியது. அதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை.
தோழர்களே! இந்த முப்பெரும் விழா என்பதை கிட்டத்தட்ட மூன்றாவது நிகழ்வாக தமிழ்த்தேசிய கூட்டணியாக நடத்திக் கொண்டிருக்கின்றோம். முதல் நிகழ்வு திருச்சியில் நடந்தது. சென்ற ஆண்டு சென்னையில் நடந்தது. நிகழ்வாண்டு திருவாரூரில் நடத்திக் கொண்டிருக்கின்றோம். தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினுடைய தலைவர் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கக்கூடிய மரியாதைக்குரிய தோழர் கே.எம்.ஷெரீப் அவர்களும், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியினுடைய ஆற்றல்மிகு தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்களும், மே பதினேழு இயக்கத் தோழர்களும் ஒன்றிணைந்து, ஒரு தமிழ் தேசியக் கூட்டணியை எழுப்ப வேண்டும் என்கின்ற தேவையின் அடிப்படையில் இந்த முப்பெரும் விழாவை நடத்துகிறோம். இது இரண்டு முக்கியமான நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு நடக்கிறது.
ஒன்று தமிழ் தேசியம் என்பது என்ன? என்பதை இளைஞர்களிடத்தில் தெளிவுபடுத்தக்கூடிய வகையில் ஒரு கூட்டணி அமைய வேண்டும் என்பதற்காகவும், இரண்டாவதாக சாதி ஒழிப்பு களத்திலும், சனாதன எதிர்ப்பு களத்திலும், தமிழர்களுடைய உரிமையை நிலைநாட்டுகின்ற போராட்டக் களத்திலும் தமிழ்த்தேசியத்தை நிலைநிறுத்துகின்ற வகையிலும் செயலாற்றி கொண்டிருக்கக்கூடிய இயக்கங்கள் ஒன்றிணைந்து, தமிழ்த்தேசிய முழக்கத்தை முன்வைக்க வேண்டும் என்றுதான் இந்த தமிழ்த்தேசியக் கூட்டணி உருவானது.
நாட்டில் பலபேர் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியம் என்று பேசி, தமிழ்த்தேசியத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்த்தேசியம் என்கின்ற அரசியல் சொல்லை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்த்தேசியக் கூட்டணி உருவெடுத்தது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அரசியல் சாசனத்தை கையளித்த நாள், தந்தை பெரியார் அவர்கள் சாதியை பாதுகாக்கக்கூடிய சட்டப்பிரிவை எரித்த நாள், தமிழ்த்தேசிய அரசியலை உயர்த்திப் பிடித்து தமிழுக்கு உலகெங்கிலும் முகவரி கொடுத்த மேதகு பிரபாகரன் அவர்களுடைய பிறந்தநாள், ஆகிய மூன்றையும் ஒன்றிணைந்து முப்பெரும் விழாவாக நடத்தி, தமிழ் தேசியத்தின் அடையாளமாக உலகுக்குக் காட்ட வேண்டும், என்கின்ற அடிப்படையில் தான் இன்று ( நவம்பர் 26) முப்பெரும் விழாவை தமிழ் தேசியக் கூட்டணியினுடைய நிகழ்வாக நடத்துகிறது.
இது கொள்கை அளவிலும், செயல்தளத்தின் அளவிலும், மிக தெளிவான இலக்கை வைத்து உருவாக்கப்பட்ட கூட்டணி. தமிழ்த்தேசியம் என்றால் பல்வேறு விளக்கங்களை வியாக்கியானங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படையில் தமிழ்த்தேசியம் என்பது இலக்கு. இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்று சொல்லக்கூடிய இந்திய தேசிய விடுதலை என்றால் அது ஒரு இலக்கு. அந்த இந்திய தேசிய விடுதலையை காங்கிரஸ் கட்சியும் பேசியது, முஸ்லிம் லீக் கட்சியும் பேசியது, கம்யூனிஸ்ட் கட்சிகளும் பேசினார்கள், ஏனைய சுயமரியாதை அமைப்புகளைச் சார்ந்தவர்களும் இந்திய விடுதலைக் குறித்து பேசினார்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும் பேசினார்கள். இப்படி ஒரு இலக்குக்கு பல்வேறு முறைகளில் இருந்து கூட செயல்படக்கூடிய இயக்கங்கள் உருவாக்க முடியும். அதுபோல தமிழ்த்தேசியம் என்பது இலக்கு. அது எந்த கொள்கை வழியில் சென்றடைவது என்பதுதான் மிக மிக முக்கியமானது.
தமிழர்களுக்கான இறையாண்மையை உறுதி செய்யக்கூடிய கோரிக்கைதான். தமிழ் தேசியம் ஆகும்.
அந்த இலக்கை அடைவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. அதில் வலதுசாரி முறைகளை முன்வைக்க கூடியவர்களாகத்தான் சீமான் போன்றவர்களை நாங்கள் பார்க்கிறோம். வலதுசாரியா? இடதுசாரியா? என்று தெரியாத குழப்ப வழிமுறையை முன்வைக்க கூடியவராகதான் ஐயா மணியரசன் அவர்களை நாங்கள் பார்க்கின்றோம்.
தமிழ் தேசியம் என்றால் எப்படி அணுக வேண்டும் என்று மேதகு பிரபாகரன் அவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் தோழர் தமிழரசன் அவர்கள் முன்வைத்த அந்த வழிமுறைகள்தான் தான், உண்மையான தமிழ்த்தேசிய விடுதலைக்கான வழிமுறை என்று நாங்கள் கூறுகிறோம். இந்த இலக்குக்கான காரணம் என்னவெனில், தமிழர்கள் தங்களுக்கான உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என பேசுகிறார்களே, யாரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசமாட்டார்கள். தமிழர் தனக்கான உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால், யாரிடமிருந்து உரிமையைப் பெறுவது?
சீமான் என்ன சொல்கிறார்? திமுக விடமிருந்து உரிமை பெற்றுக் கொள்ளவேண்டும் என்கிறார். திமுகவா தமிழக உரிமையை வைத்திருக்கிறது? திராவிடத்திடமிருந்து நாங்கள் உரிமையைப் பெறவேண்டும் என்கிறார். அப்படி திராவிடத்திலிருந்து என்ன உரிமையைப் பெறவேண்டும் என்று கேட்டால், தெலுங்கர்களிடமிருந்து உரிமையைப் பெற வேண்டும் என்று பேசுகிறார்கள். ஒருவேளை தமிழ்த்தேசியம் என்றால், சீமான் ஆந்திராவின் மீது படையெடுப்பதை தான் தமிழ்த்தேசியம் என நினைத்திருக்கிறாரோ?
தமிழர்களின் உரிமை யார் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்? ஆந்திராவா?, ஐதராபாத்தா? தமிழனுடைய அனைத்து அரசியல், பண்பாடு, பொருளாதார வளர்ச்சியை எல்லாம் யார் தடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல மாட்டார்கள். ஐயா மணியரசன் பேசமாட்டார். மேம்போக்காக இந்திய அரசே என்று பேசுவாரே ஒழிய, என்ன மாதிரியான விடுதலையை, உரிமையை பெறப்போகிறார் என்று கேட்டால், தன்னாட்சி என்று பேசுவார். தன்னாட்சி என்றால் என்ன என்று கேட்டால், அது கூட்டாட்சி என்று பேசுவார். கூட்டாட்சி என்றால் என்ன என்று பேசினால், தமிழ்த் தேசம் என்று பேசுவார். அதற்கு தெளிவான வரையறை இருக்காது.
இந்தியா என்கின்ற ஒன்றை நீங்கள் ஏற்றுக்கொண்டு அதற்குள் கூட்டாட்சியாக என்றால், ஆமாம் என்று சொல்லுவார். அந்த கூட்டாட்சியைத் தானே திமுகவும் மாநில சுயாட்சி என்று பேசுகிறது என்று சொன்னால், அது மாநில சுயாட்சி வேறு, கூட்டாட்சி வேறு என்று சொல்கிறார். கூட்டரசு முறை பற்றி அறிஞர் அண்ணா பேசினாரே, என்று கேட்டால், நாங்கள் திராவிடத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பேசுவார்.
என்னதான் வழிமுறை? என்னதான் தமிழ்த்தேசியம்? இதுதான் இவர்களது (சீமான் மற்றும் மணியரசன்) தமிழ்த்தேசியம். என்றாவது வரையறுத்து பேசியிருக்கிறார்களா? திமுகவை எதிர்ப்பது தமிழ்த்தேசியம். திராவிடத்தை எதிர்ப்பது தமிழ்த்தேசியம். இதைதான் பேசியிருப்பார்களே தவிர தமிழ்த்தேசியம் என்னவென்று வரையறுத்ததில்லை.
தமிழ்த்தேசியம் என்கின்ற இலக்கை அடைய வேண்டும் எனில், தமிழருக்குள் ஒற்றுமை வேண்டும். நாம் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றோம், நமது உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன, ஆகவே உரிமையை மீட்பதற்கான போராட்ட களத்தில் நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்கின்ற முடிவு நமக்கு வேண்டும்.
தமிழன் ஒன்றுபடுவதை எது பிரிக்கிறது? தமிழன் தமிழனாக ஒன்றுபடுவதை சாதிதான் பிரிக்கிறது. இந்த சாதிதான் பெரிய தடையாக இருக்கிறது என்றால், சாதியை கடந்து தமிழன் ஒன்றானால்தான் தமிழன் தன்னுடைய உரிமைக்காக போராட முடியும். அப்போது சாதி ஒழிப்புதான் தமிழன் ஒன்றுசேர்வதற்கான வழிமுறையாக இருக்கும்.
அப்படியெனில் சாதி ஒழிப்பை தமிழ் தேசியத்தினுடைய வேலைத் திட்டத்தில் முக்கியமான வேலைத்திட்டமாக வைக்க வேண்டும் அல்லவா? ஆனால் சீமானுக்கும் அந்த வேலைத் திட்டம் கிடையாது, ஐயா மணியரசனுக்கும் அந்த வேலைத்திட்டம் கிடையாது. ஆக எப்படி தமிழனை ஒன்றுபடுத்துவீர்கள்? ’அவர்களுக்கு திமுகவை எதிர்த்தால் போதும். சாதிப் பிரச்சனை வந்துள்ளது என்றால், அது திராவிடம் கொண்டுவந்தது’ என்பார்கள். இந்த இரண்டையும் தான் மாறிமாறி ஒப்பிப்பார்கள்.
சாதியின், மூலம் எங்கிருந்து வருகிறது? சாதியினுடைய வியாக்கியானம் என்ன? சாதி எப்படி இயங்குகிறது? சாதி எப்படி மக்களை பிரிக்கிறது? எப்படி பட்டியல் சமூக இளைஞர்களை படுகொலை செய்கிறது? என்று அதைப்பற்றி பேசமாட்டார்கள். அதை வெறும் மேம்போக்காக கடந்து சென்று கொண்டிருப்பார்கள். அப்படி என்றால் இவர்கள்(சீமான், மணியரசன்) யாருக்கான தமிழ்த்தேசியத்தை பேசுகிறார் என்கின்ற கேள்வி வருகிறதா? இல்லையா?
தமிழ்நாட்டுக்குள் தமிழர்கள் எல்லாம் ஒன்றுபடுவதற்கு தடையாக இருக்கக்கூடிய சாதியைப் பற்றி பேசமாட்டோம், சாதி ஒழிப்பைப் பற்றி பேசமாட்டோம், சாதிய வெறியினால் பாதிக்கப்படக்கூடிய தமிழர்களைப் பற்றிப் பேச மாட்டோம், சாதிவெறியை கையில் வைத்து இயங்குகின்ற சாதி வெறியர்களைப் பற்றி பேச மாட்டோம், என்றால் எப்படி தமிழ்த்தேசியம் சாத்தியம்? எப்படி தமிழன் ஒற்றுமை சாத்தியம்? அதை என்றைக்குமே இவர்கள் பேசியது இல்லை.
ஐயா மணியரசன் அவர்கள் இங்கே தஞ்சாவூரில் இருக்கிறார். எத்தனை சாதிய வன்கொடுமைகள் இந்தப் பகுதியைச் சுற்றி சுற்றி நடக்கிறது. அதையெல்லாம் கேட்டால் என்ன சொல்வார்? இதெல்லாம் திமுக அரசு, திராவிடம் சரி செய்து இருக்க வேண்டும் என்று சொல்வார். சரி, திமுக செய்யவில்லை. நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்த களத்திற்குச் சென்று திமுக சரியாக இல்லை, உங்களை எல்லாம் சாதியாக பிரித்து வைத்துள்ளார்கள் எனச் சொல்லி, சாதிக்கு எதிராக மக்களைத் திரட்டி இருக்க வேண்டும் அல்லவா? நீங்கள் யோக்கியராக இருந்தால், ஏன் செய்யத் தோன்றவில்லை? ஏனெனில் உங்களுக்கு வலிக்கவில்லை.
பட்டியல் சமூக இளைஞன் இறந்ததற்கோ, அவன் மீது சாதிய வன்கொடுமை ஏற்பட்டதற்கோ, ஒரு தமிழ்த்தேசிய தலைவனுக்கு வலிக்கவில்லை என்றால், அவன் தமிழ்த்தேசிய தலைவனாக இருக்க முடியாது. தமிழினத் தலைவனாக இருக்க முடியாது.
கோவிலில் தமிழில் குடமுழுக்கு வரவேண்டும் என எல்லாரும் விரும்புகிறோம். அதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. ஆனால் கோவிலுக்குள் யார் வரவேண்டும் என முடிவு செய்கிறார்களே, அவனுக்கு எதிரான போராட்டம் வரவேண்டும். அதைப் பற்றி ஐயா மணியரசனுக்கு கவலை இல்லை. அது முக்கியம் இல்லை. தூக்கில் போடும் பொழுது அவன் ஆங்கிலத்தில் சொல்வது பிடிக்காது, தமிழில் சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்பதைப் போல இருக்கிறது. தூக்கில் போடாதே என்று சொல்லவில்லை, தூக்கில் போடு என்று தமிழில் சொல், ஏற்றுக்கொள்கிறோம் என்கிறார்கள்.
அதேபோல கோவிலில் சமஸ்கிருதத்துக்கு பதிலாக தமிழ் வரவேண்டும் என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை, ஆனால் கோவிலுக்குள்ளாக சாதி கடைபிடிப்பதைப் பற்றி மணியரசனுக்கு பிரச்சனை இல்லை. அது தமிழ் மட்டும் போதும், ஒருவேளை சாதியப் பெயரைச் சொல்லி பச்சைத் தமிழில் திட்டினால் கூட, திட்டி கொள்ளலாம் என்று இருப்பார்களா? எனத் தெரியவில்லை. அவர்களுக்கு எது பிரச்சனையாக இருக்கிறது? எனில், எந்த முரண்பாடு இந்த மக்களை பிரிக்கிறதோ அது பிரச்சனை அல்ல. மேலோட்டமான தீர்வுகளை மட்டுமே அவர்கள் பேசிக்கொண்டே போகிறார்கள்.
காவிரி என்பது தமிழ்நாட்டினுடைய தமிழ்த்தேசிய இனத்தினுடைய மிக முக்கியமான ஒரு ஜீவாதாரமான நீர் உரிமை. தோழர் குடந்தை அரசன் அவர்கள் தொடர்ச்சியாக காவிரி உரிமை கூட்டமைப்பில் இயங்கியவர். நாங்கள் ஐயா மணியரசனிடம் கேட்டோம், காவிரி உரிமை பிரச்சனையை விரிவுபடுத்துவோம், வாருங்கள் என்றோம். ஏனெனில் காவிரி தண்ணீரை டெல்டாக்காரர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்குள்ளாக எங்கெங்கு காவிரி நுழைகிறதோ அங்கிருந்து சென்னை வரைக்கும் தமிழன் காவிரிதான் பயன்படுத்துகிறான். காவிரி ஆற்றங்கரையில் கிட்டத்தட்ட 10 /13 பெரிய நகரங்கள் இருக்கின்றன. தர்மபுரி ஆரம்பித்தால் திருச்சி வரைக்கும் பெரிய நகரங்கள் இருக்கிறது. அதில் சென்னையும் பாதிக்கப்படுகிறது. அப்போது இது தமிழ்நாட்டின் பிரச்சனையாக எடுத்து செல்லலாம் என்று சொன்னோம்.
அதற்கான பதில் என்னவாக இருந்தது? என்றால், கூட்டமைப்பிலிருந்து மே பதினேழு இயக்கத்தை வெளியேற்றிவிட்டார். அவருக்கு தஞ்சாவூரோடு தஞ்சை டெல்டாவோடு காவிரி பிரச்சனை முடித்து கொள்ள வேண்டும் என்பதுதான் அவருடைய இலக்கு. அது தமிழ் தேசிய பிரச்சனையாக மாற்ற வேண்டும் என்று அவருக்கு தோன்றவில்லை, ஆக இப்படி வேலைசெய்தால் எப்படி தமிழ்த்தேசியம் வரும்? தஞ்சாவூர் தமிழ்த்தேசியம் வேண்டுமானால் வரும். தமிழ்நாட்டின் உரிமைக்காக தான் இருக்கிறார்கள் என்றால், தமிழ்நாடு தழுவிய ஒரு பெரியப் போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும். ஆனால் ஐயா மணியரசனுக்கு டெல்டாவை தாண்டி தஞ்சாவூரை தாண்டி செல்வதற்கு விருப்பமில்லை.
தமிழ்நாட்டினுடைய உரிமைக்காக போராடுவதற்கு தமிழின ஒற்றுமைக்கு வரவேண்டும் என்றால், சாதி ஒழிப்பை முன் நிபந்தனையாக வைக்க வேண்டும். அதைத்தான் தமிழரசன் வைக்கிறார். மேதகு பிரபாகரன் வைக்கிறார். சாதி ஒழிப்பையும், பெண் விடுதலையையும் முதன்மை வேலைத்திட்டமாக வைக்கிறார்கள்.

தமிழீழத்தில் விடுதலை புலிகள் பெண்களை அமைப்பிற்குள்ளாக கொண்டு வருவதற்கான ஒரு பெரும் வேலைத் திட்டத்தை வைக்கிறார்கள். அந்த வேலை திட்டத்தை எடுத்து நடைமுறைப்படுத்தியவர்தான் தோழர் திலீபன். நமக்கு திலீபனுடைய உண்ணாநிலைப் போராட்டம் மட்டும்தான் தெரியும். ஆனால் விடுதலை புலிகளுக்குள்ளாக பெண்களை பெரிய அளவில் அரசியலாகத் திரட்டி கொண்டு வந்து சேர்த்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, கிராமம் கிராமமாக, ஊர் ஊராகச் சென்று பெண்களை வீட்டை விட்டு வெளியில் வந்து போராட்டத்திலே பங்கெடுக்க வைத்தவர் திலீபன் அவர்கள்.
அப்படி ஏதாவது ஒரு வேலையை சீமானோ, ஐயா மணியரசோ செய்திருந்தார்கள் என்றால், தமிழ்த்தேசிய வேலை திட்டத்தில் இருக்கிறார்கள் என்று கருதலாம். ஆனால் என்ன நடக்கிறது? விடுதலை புலிகளை தடை செய்த வழக்குக்காக மக்களை திரட்டுவதை விட, பாலியல் வழக்குக்காக அதிக ஆட்களை திரட்டுவதைதான் சீமான் செய்து கொண்டிருக்கிறார். அதுதான் நடக்கிறது. அவர் மீதான பாலியல் வழக்குக்கு ஆயிரம் பேரைத் திரட்டிக் காண்பித்து வீர முழக்கம் போடக்கூடிய சீமான், விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக வழக்கில் பங்கு பெறுவதற்கு ஆயிரக்கணக்கான ஆட்களை என்றைக்குமே அவர் திரட்டியதில்லை. இவர்கள் எல்லாம் தமிழ்த்தேசியவாதிகளா? இவர்கள் ஆமை கறியில் ஆரம்பித்து, இப்பொழுது மான் ஊறுகாயில் வந்து நிற்கிறார்கள். இப்படிப்பட்ட சீமானை தமிழ்த்தேசியவாதியாக ஐயா மணியரசன் கொண்டாடுவார். ஆனால் இந்திய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு, வர்க்க ஒழிப்பு என்று போராடக்கூடிய குடந்தை அரசன் அவர்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது.
காவரி டெல்டாவிற்குள்ளாக நின்று தமிழ்த்தேசியக் குரலை பதிவு செய்திருக்கக்கூடிய, போராடக்கூடிய தோழர் குடந்தை அரசனை ஏற்றுக்கொள்வதில என்ன பிரச்சனை? தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு எதிராக கட்டுரை போடுவார். ஆனால் மருத்துவர் ராமதாசுக்கு எதிராக வந்துள்ளதா? அல்லது வருமா?, ஏன்? அங்கு பாசம் வரும். இங்கு பேசினால் வேசம்தான். அந்த சாதித் தமிழனை அடித்தால் கைகட்டி வேடிக்கைப் பார்ப்பேன். வேறோரு சாதித் தமிழனை நான் விமர்சிப்பேன். ஆனால் இந்த சாதித் தமிழனுடன் கை கோர்த்துக் கொள்வேன். இது என்ன தமிழ்த்தேசியம்?
கழுதைப்புலி என ஒன்று இருக்கிறது. அது கழுதை மாதிரி பொதி சுமக்கவும் செய்யாது, புலி மாதிரி வேட்டையாடவும் செய்யாது. அதை புலியாக பார்ப்பதா? அல்லது கழுதையா பயன்படுத்துவதா? நமக்கு தெரியாது. அது மாதிரிதான் இவர்கள் கழுதைப் புலிகள். நீங்கள் சீமானையோ ஐயா மணியரசன் அவர்களையோ கழுதைப்புலி தமிழ்த்தேசியம் பேசக்கூடியவர்கள். அவர்கள் புலிகளும் அல்ல, கழுதைகளும் அல்ல, எதற்கும் அவர்களை பயப்படுத்த முடியாது. தமிழர்களை அடக்கி ஒடுக்கக்கூடிய இந்திய அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு அறிக்கையாவது ஐயா மணியரசனாவது போடுவார். ஆனால் சீமானிடம் அது வரவே வராது. ஏனெனில் அவரின் எஜமானர்களே அங்குதான் இருக்கிறார்கள்.
நாம் இதையெல்லாம் கேட்டால் என்ன சொல்வார்கள்? நீங்கள் திமுகவின் கைக்கூலிகள், அண்ணா அறிவாலயத்தில் நிற்கக் கூடியவர்கள் என்பார்கள். அண்ணா அறிவாலயத்தில் நின்று இருந்தால் தோழர் ஷெரீப் அவர்களும் தோழர் குடந்தை அரசன் அவர்களும், இன்றைக்கு எம்எல்ஏவாக இருந்திருப்பார்கள். திமுகவை எதிர்க்கக்கூடிய சீமானோ ஐயா மணியரசனோ 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிக வழக்குகளை உண்மையாக வாங்கிருக்க வேண்டும். ஆனால் குடந்தை அரசன் வாங்கியிருக்கிறார்.
ஆக இவர்கள் வாய் சவடால் தமிழ்த்தேசியம் பேசுகிறார்கள். திமுக எதிர்ப்பெல்லாம் ஒன்றும் கிடையாது. திமுகவை எதிர்க்கிறோம் என்று சொல்லி பம்மாத்து செய்து கொண்டு பிஜேபி ஆர்எஸ்எக்காக வேலை செய்யக்கூடிய, கமலாலயத்தினுடைய காவல்காரர்கள். கமலாலயம் என்பது பிஜேபியுனுடைய தலைமையகம். இதில் கமலாலயத்தினுடைய காவல் தெய்வங்களாகதான் இந்த இரண்டு பேரும் உட்காந்து இருக்கிறார்கள். தமிழ்த்தேசிய அரசியலை முன்னகர்த்துவதற்கான எந்த வேலை திட்டமும் இவர்களிடம் கிடையாது.
இன்றைக்கு தமிழ்த்தேசியத்தின் தடை யார் என்றால், தமிழ்த்தேசிய பேரியக்கமும் & நாம் தமிழர் கட்சியும் தான் மிகப்பெரிய தடையாக இருக்கிறார்கள். இவர்கள் அண்ணல் அம்பேத்கரையோ, தந்தை பெரியாரையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அண்ணல் அம்பேத்கரை அவருடைய சனாதன எதிர்ப்பு சிந்தனையிலிருந்து இந்திய அரசை எப்படி கையாள வேண்டும் என்றும், இந்திய சமூகத்தில் சாதி எப்படி இயங்குகிறது, அதிலிருந்து எப்படி விடுதலை பெறுவது? என்பதையும் கற்றுக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் பெருந்திரளான மக்கள் அம்பேத்கர் அவர்களைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான மக்களை நிராகரித்துவிட்டு எப்படி ஒரு தமிழ்த்தேசியம் கட்ட முடியும்? என்பதை ஐயா மணியரசனை பார்த்து கேட்க விரும்புறேன். கேட்டால் அவர் என்ன சொல்வார்? அம்பேத்கர் மீது எங்களுக்கு விமர்சனம் இருக்கிறது என்று சொல்வார். எல்லாவற்றிற்கும் எல்லாருக்கும் விமர்சனம் இருக்கிறது. ஆனால் அவர்கள் எதை மையமாக வைத்தார்கள், அது தானே கேள்வி.., சாதி ஒழிப்பை மையமாக வைத்தார்கள். அதில் பாதிக்கப்பட்ட மக்களுடைய விடுதலையை மையமாக வைத்து போராடினார்கள். அதை ஏற்றுக்கொள்வது ஐயா மணியரசனுக்கு என்ன பிரச்சனை? விமர்சனம் ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் அம்பேத்கரோடு உடன்படுவதற்கு மணியரசன் அவர்களுக்கு ஒரு புள்ளி கூட கிடையாதா? அது அவருக்கு முக்கியம் இல்லை. சாதி ஒழிப்பு தேவையில்லை. சாதியால் பாதிக்கப்படுகின்ற மக்களைப் பற்றி அக்கறையில்லை.
இன்றைக்கு என்ன நிலைமை? அதைப் பேச வேண்டும். இன்றைக்கு செய்வதுதான் அரசியல், நேற்றைக்கு செய்தது வரலாறுதான், அது பயன்படாது.
தமிழ்த்தேசியத்தினுடைய மிகப்பெரிய சிக்கல் தமிழர்கள் ஒன்றுபடுவதற்கு தடையாக இருக்கக்கூடிய சாதி. திராவிட எதிர்ப்பாளர்கள் வந்து ’திராவிடம் தான் சாதியைக் கொண்டு வந்தது எனப் பேசுவார்கள். சரி வரலாற்று ரீதியாக விவாதிப்போம் என்றால் விவாதத்துக்கு வரமாட்டார்கள்.
பல வரலாற்று ஆசிரியர்கள் ஒரே புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவார்கள். அது விஜயநகரப் பேரரசு வந்த பிறகுதான் சாதி வந்தது, சாதியப் பிரிவுகள் வந்தது என்று பேசுவார்கள். பிஜேபிகாரன், ஆர்எஸ்எஸ்எஸ்காரன் வெள்ளைக்காரன் வந்த பிறகுதான் சாதி வந்தது என கதை விடுவான். ஆனால் பல்லவர் காலத்திலேயே அந்த சாதி பிரிவினைகள், சோழர் காலத்திலே சாதி அடுக்குகள் இருக்கிறது என்பது ஆவணங்களாக/ கல்வெட்டுகளாக இருக்கின்றன. அது குறித்து பேசுங்கள் என்றால் பேசமாட்டார்கள்.
சாதி இருந்திருக்கிறது, அது காலம் காலமாக இருந்திருக்கிறது, சாதியோடு வர்ணம் எப்பொழுது கலந்தது? அதாவது பார்ப்பனர் என சொன்னால் அவனுக்கு ஏன் கோவம் வருகிறது? இப்போது யாரையாவது பார்த்தால் என்ன ஆளுங்கதான் கேட்பார்கள். எல்லாரும் அவரவர் இந்த சாதி, அந்த சாதி என்று பெயரை சொல்வார்கள். ஐயரைக் கேட்டால் ’நாங்க பிராமின்’ என்பார்கள். பிராமின் என்பது சாதியா? அது வர்ணம். ஐயர் என்றால் அவன் சைவநெறியை சார்ந்தவன். வைணவன் என்றால் வடகலையோ, தென்கலையோ, வைணவத்தை சார்ந்தவன். அது கடவுள் நம்பிக்கை சார்ந்தது, மத நம்பிக்கை சார்ந்தது. ஆனால் பிராமின் என்றால் அது சாதி அல்ல, வரணத்தை சொல்கிறது. அப்போது நாமும் சாதி பெயரை சொல்ல முடியாமல் வர்ணத்தை சொல்ல வேண்டி வருகிறது.
பிராமின் என்றால் அவன் பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவன் என்கிறான். நாம் சூத்திரன் என்றுதான் அந்த இடத்தில் சொல்ல முடியும். அவன் நம்மை பிரம்மாவின் காலில் இருந்து பிறந்தவன் என்கிறான். இப்படி நம்மை இழிவுபடுத்தக்கூடிய வேலையை திரும்ப திரும்ப செய்கிறான். அவன்(பாப்பான்) சாதி பேரை சொன்னால் மற்றவர்களும் சாதி பேரை (அது கோனாரோ, செட்டியாரோ, தேவரோ, நாடாரோ) சொல்வார்கள். ஆனால் அவன் பிராமிண் என வர்ணப் பெயரை சொல்கிறான்.
சாதிகளாக இருந்த பொழுது ஏற்றத் தாழ்வுகள் வரவில்லை, அது வர்ணமாக மாறும் பொழுது அது அடுக்கு நிலையாக மாறி நிற்கிறது. அந்த வர்ணத்தைக் கொண்டு வந்தது ஆரியம். அது எந்த காலத்தில் வந்தது என்றால், இந்த 2000 ஆண்டு காலத்தில் நிதானமாக சமூகத்திற்குள்ளாக உள்ளே நுழைந்தது. இது அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டிய உண்மை.
திடீரென விஜயநகரப் பேரரசு வந்தபிறகு நீயெல்லாம் சூத்திரன், நீயெல்லாம் பிராமணன், நீயெல்லாம் சத்திரியன், நீயெல்லாம் வைசியன் எனப் பிரிக்கவில்லை. அது இந்த நிலத்தில் உழைப்பாளிகளாக மக்களை பிரிக்கும் பொழுது, அந்த உழைப்பாளிகளுக்கு சாதி என்கின்ற பிரிவு தேவைப்படுகிறது என்பதனால் பிரிக்கிறான். அதற்கு பிறகு சாதிக்குள் ஏற்றத்தாழ்வு தேவைப்படுகின்ற காரணத்தினால் வர்ணத்தை கொண்டுவந்து இறக்கிறான். இது ஏழு /எட்டாம் நூற்றாண்டு குப்தர் காலத்தில் உச்சநிலை அடைகிறது. அதே போலதான் தமிழ்நாட்டுக்குள் அது வருகிறது. இவன் கேட்டால் என்ன சொல்வான்? அந்த காலத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்ப்பனன் என்று ஒரு பிரிவு தமிழ்நாட்டில் இருந்தது என்பான். ஆமாம் இருந்தது. ஆனால் அது சமநிலையில் இருந்ததே ஒழிய, படிநிலையில் இல்லை.
சமநிலை என்பது வேறு. படிநிலை என்பது வேறு. ஒருத்தர் வட்டமாக உட்கார்ந்தால் சமநிலை. ஒருவர் மேலே உட்கார, அடுத்தவர் அதற்கும் கீழே, அடுத்தடுத்து கீழே உட்கார வைத்தால் அதுதான் படிநிலை. இந்தப் படிநிலை அரசியல் எங்கிருந்து வந்தது என்றால், ஆரியத்திலிருந்து வந்தது. அது வேலைப் பிரிவினை நடக்க நடக்க சாதி கூடுகிறது.
ஏன் சோழ நாடு என்று சோறுடைத்து யானை கட்டி போரடித்து என்று வந்தது? 2000 வருடத்துக்கு முன்பு யானை கட்டி போரடித்த கதையெல்லாம் வரவில்லை. விவசாயம் விரிவடைகிறது, புது புது உணவு கருவிகள் வர ஆரம்பிக்கின்றன. புது புது பாசன முறைகளை கண்டுபிடிக்கிறார்கள். அப்போது விவசாயம் விரிவடையும் பொழுது உற்பத்தி அதிகமாகிறது. அந்த உற்பத்தி அதிகரிப்பதற்கு தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். அப்படி தேவைப்படுகின்றவர்களை தங்களுக்கு கீழே சுரண்டுவதற்காக சாதி அடுக்கு நிலை கொண்டு வருகிறார்கள். இது தீவிரமடைந்த காலகட்டம் சோழர் காலகட்டத்தில் நடக்கிறது.
சோழர் காலகட்டத்திற்கு அடுத்து வரக்கூடிய பாண்டியர் காலம் இருக்கிறது. அதற்கு அடுத்து வரக்கூடிய விஜயநகரப் பேரரசு காலத்தில் இன்னும் தொழில் விரிவடைந்து விரிவடைந்து போகிறது. தொழில் விரிவடைய விரிவடைய சாதியும் விரிவடைந்து வருகிறது. சாதி விரிவடைய விரிவடைய ஏற்றத்தாழ்வும் அதிகமாகி கொண்டே வருகிறது. இதையெல்லாம் விட்டு விட்டு விஜயநகரப் பேரரசில் சாதி அதிகமாகிவிட்டது எனப் பேசுவார்கள். அது எப்படி திடீரென நடக்கும்?
அப்போது ஐயா மணியரசன் அவர்கள் சோழர் காலத்தை கொண்டாடுவது என்பதில் நமக்கு எங்கு மாற்று கருத்து வருகிறது எனில், சோழர் சமூக கட்டமைப்பு என்னவாக இருந்தது? சோழர் காலத்தில் சமஸ்கிருதத்தின் நிலை எப்படி இருந்தது? அதுதான் கேள்வி. சோழர் காலத்தில் பெரிய படை இருந்தது, தமிழர்களாக நிலத்தை ஆக்கிரமித்தார்கள், நாட்டைப் பிடித்தார்கள், பெரும்படை எடுத்தார்கள், அவரை வெல்லுவதற்கு யாருமே இல்லை என்பதெல்லாம் நமக்கு பெருமைதான்.
ஆனால் நான் என்னவாக வாழ்ந்தேன்? என ஒருவன் கேட்பானா ? இல்லையா? இந்தியா பெரிய நாடுதான். சரிதான் எனக்கு மாத வாடகை கட்ட முடியவில்லையே நான் என்ன செய்வது? இந்த பெருமையை வைத்து என்ன செய்வது? கோவணம் கட்ட முடியுமா? அந்த கேள்விதான் முக்கியமானது. அப்போது இவர்கள் பேசக்கூடிய விசயம் என்னவெனில், இங்கே இருந்த ஒரு இடைநிலை சாதிகளினுடைய அரசியலை தமிழ்த்தேசியம் என்று பேசுகிறார்கள். அவர்களுக்கு பட்டியல் சமூகத்தை சார்ந்த மக்களை அடிப்பதை, கொல்வதைப் பற்றி எந்த அக்கறையும் கிடையாது.
விடுதலை புலிகளின் பணிகள் மிக முக்கியமானது. விடுதலைப் புலிகள் சிங்களத்திடமிருந்து விடுதலை வாங்கிக்கொண்டு, தனி தமிழிழம் பெற்ற பிறகு தான் சமூக சீர்திருத்தம் செய்வோம் என்றார்கள்? தமிழீழ விடுதலை போராட்டத்தோடு பெண் விடுதலையை இணைத்தார்கள், சாதி ஒழிப்பை இணைத்தார்கள். அதனால்தான் உன்னதமான இயக்கமாக நாம் அவர்களைப் பார்க்கிறோம். விடுதலை புலிகளை கொண்டாடுவதற்கு, போலி தமிழ்த்தேசியவாதிகளுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்கிறது. இவர்கள் என்ன சொல்வார்கள்? நன்றாக குறிபார்த்து சுடுவார்கள் என்று மட்டும்தான் பேசுவார்கள். ஆனால் நாம் அதைப் பற்றி பேசவில்லை. அவர்கள் சமூக சீர்கேடுகளை எப்படி ஒழித்தார்கள் என்பதை நாம் பேசுகிறோம். அதுதான் தமிழ்த்தேசியம் என்று சொல்கிறோம், அதனால்தான் நாம் விடுதலைப்புலிகளைக் கொண்டாடுகிறோம்.
விடுதலை புலிகள் நன்றாக துப்பாக்கி எடுத்து சுட்டார்கள், ஆயுதம் செய்தார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் எப்படிப்பட்ட போராட்டத்தை கட்டி எழுப்பினார்கள் என்றால், சாதியை ஒழித்த போராட்டத்தையும், பெண் விடுதலை வென்றெடுத்த போராட்டத்தையும் கட்டி எழுப்பினார்கள். அதனால்தான் இன்றைக்கு வரைக்கும் தமிழீழ விடுதலை புலிகள் ஆட்சி செய்த நிலப்பரப்பில் சாதிய இறுக்கம் கிடையாது, பெண் அடிமைத்தனம் கிடையாது.
தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் என்ன கனவு கண்டார்களோ, அதை நடத்தி காட்டியவர்கள் விடுதலைப்புலிகள். அதனால்தான் முப்பெரும் விழா.
பல அமைப்புகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒரு எழவும் புரியாது. உதாரணத்திற்கு ஒரு ஆட்சி நிலப்பரப்பு தன் கையில் வந்த உடனே, அங்கு அவர்கள் இராணுவ ஆட்சியை கொண்டுவரவில்லை. இதுவே வேறு ஒரு அமைப்பாக இருந்தால் அந்த நகரத்தைக் கட்டுப்படுத்தும், அந்த அமைப்புதான் தீர்ப்பு தரும். நீதி பரிபாலனம் செய்யும். நிர்வாகம் செய்யும். இது எல்லா இடத்திலும் நடக்கும்.
ஆனால் விடுதலைப்புலிகள் அதை செய்யவில்லை. அவர்கள் யாழ்பாணத்தை கட்டுப்பாட்டில் எடுத்த உடனே, அவர்கள் நீதிமன்றத்தை உருவாக்குகிறார்கள். இலங்கையின் சட்ட வரையறையை தூக்கி எறிந்துவிட்டு, தமிழ்த்தேசியத்திற்கான சட்ட வரையறை/ அரசியல் சாசனத்தை உருவாக்குகிறார்கள். இது 1989/ 90 காலக்கட்டத்தில் அறிவிக்கிறார்கள். ஒரு சனநாயகக் கட்டமைப்பு கொண்டு வந்தார்கள், இராணுவ ஆட்சியை செய்யவில்லை. இதுகுறித்து கம்யூனிஸ்ட் என்று சொல்லக்கூடிய எவரும் பேசுவதில்லை. விடுதலை புலிகளை ஆதரிக்கிறோம் என்று சொல்லக்கூடிய போலித் தமிழ்த்தேசியவாதிகளும் பேசுவதில்லை.
இலங்கை அரசு வைத்திருக்கக்கூடிய சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, அந்த சட்டத்தில் தேச வளமை சட்டம் என்று ஒரு பிரிவு இருக்கிறது. பெண்களுக்கு பெரிய நெருக்கடியை கொடுக்கக்கூடிய சட்டங்கள் என்னவெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் நீக்கிவிட்டு, ஒரு சமத்துவமான அரசியல் சாசனத்தை விடுதலைப் புலிகள் வெளியிட்டார்கள். அதன் அடிப்படையில் தான் நீதிமன்றங்கள் இயங்கின. அந்த நீதிமன்றத்தில் நீதிபதிகளாக அமர்த்தப்பட்டவர்கள் பாதி பேர் பெண்கள், மீதி பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள். இதை செய்தவர்கள் விடுதலைப் புலிகள். ஆனால் இதைப்பற்றி இங்கே பேசுவதற்கு ஆட்களில்லை. சில தலித் அமைப்புகள் வதந்தி பரப்புகிறார்கள். என்னவெனில் விடுதலை புலிகள் வெள்ளாளர் சாதிகளை வளர்த்தார்கள் என்று பேசுவார்கள். இதற்கு எந்த ஒரு தகவலோ, ஆதாரமோ இருக்காது.
நான் ஏன் இதை சொல்றேன் எனில், அந்த நீதிபதிகளில் ஒருவருடைய வீட்டில் நான் தங்கி இருந்தேன். நானே ஆதாரமாக சொல்கிறேன். சுவிட்சர்லாந்தில் தங்கிருந்த ஒரு வீட்டிலிருந்த அந்த பெண் நீதிபதி சொன்னார். ”நான் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நீதிபதியாக இயங்கியவள்” என்றும், அந்த நுணுக்கத்தையும் சொன்னார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பெண்கள் நீதிபதிகளாக அமர்த்தியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். தலித்துகள் என்று நாம் சொல்லக்கூடிய, பட்டியல் சமூகம் என்று அழைக்க கூடிய அந்த ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து நீதிபதிகள் அமர்த்தினார்கள். அவர்கள்தான் வெள்ளாளர் சாதித் திமிர் பிடிச்சவனுக்கு தீர்ப்பைக் கொடுத்தார்கள், தண்டனையை கொடுத்தார்கள். இதுதான் வரலாறு. இதையெல்லாம் தலித் தலைவர்களிடம் எடுத்து சொல்லுங்கள், தோழர்களே!
தமிழீழத் தேசியத்தலைவரின் சாதி ஒழிப்பைப் பற்றி பலமுறை தோழர் திருமா பகிர்ந்திருக்கிறார். அதைக் கேளுங்கள். நான் ஐ.நா சென்ற பொழுது அவர்களிடத்தில் விசாரித்த பொழுது, சாதி ஒழிப்பு குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் எவ்வளவு கவனமாக இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். இங்க செய்தது போல ஆவணப்படுகொலை செய்தாலோ, குடிக்கின்ற தண்ணிரில் மலத்தை கலக்கியதை செய்தாலோ விடுதலைப் புலிகள் வாயிலே சுட்டு இருப்பார்கள்.

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பிரபாகரன் போன்றோரை இணைத்து பேசுகிறோம் என்றால், மூவரும் மானுட விடுதலைக்காகப் போராடினார்கள். விடுதலைப் புலிகளினுடைய செயல்பாடுகளை குறித்த ஆவணங்கள் நம்மிடத்தில் இல்லை. ஏனெனில் புலிகளின் புத்தகங்கள், பத்திரிக்கைகள் தடை செய்யப்பட்டிருக்கிறன. விடுதலை புலிகள் நிறைய பத்திரிகைகள் நடத்தினார்கள், நிறைய விவாதங்கள் நடத்தினார்கள், மார்க்சிய லெனினிய அரசியல் குறித்து பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டார்கள்.
நான் ஒரு பத்திரிக்கை ஆசிரியரை சந்தித்தேன். அவர் விடுதலை புலிகளுடைய பத்திரிக்கை நடத்தியவர். 2009-ல் போர் கிளிநொச்சி அழித்து கிழக்கு பக்கமாக படை நகர்ந்து செல்கிறது. முள்ளிவாய்க்கால் நோக்கி செல்கிறார்கள். அது முக்கியமான இடம் பட்டுவாங்கம். அங்கு தான் ஒரு நாளில 7000 / 8000 பேர் படுகொலை செய்யப்படுகிறார்கள என்றார். தோழர்களே, பாலஸ்தீனத்திற்காக நாம் குரல் கொடுக்கிறோம், ஏனெனில் அந்த வலி நமக்கு தெரியும். பாலஸ்தீனத்தில அமைதி அறிவிக்கப்பட்ட பிறகும் கூட இன்றைக்கும் 100-லிருந்து 200 பேர் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதே சமயத்தில் ஈழத்தில் ஒரு நாளில் 7000 முதல் 8000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் ஈழப் படுகொலையின் மிக மோசமான முகம்.
இந்த கோரமான யுத்தத்தை இலங்கை அரசு நடத்துவதற்கான ஒற்றை காரணம் இந்திய அரசின் ஆதரவுதான். இந்திய அரசினுடைய உதவி இல்லாமல் இலங்கை நடத்தி இருக்கவே முடியாது. இந்திய அரசின் கொள்கை திட்டம் அது. அந்த கொள்கை திட்டத்தை தடுக்கவில்லை, கேள்வி கேட்கவில்லை, தமிழ்நாட்டை போராட அனுமதிக்கவில்லை என்றுதான் நாம் திமுகவை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் திமுகவோடு நம்மால் உடன்பட முடியவில்லை. அதனால்தான் விமர்சிக்கிறோம்.
தமிழ்நாட்டை, தமிழனை காப்பாற்றுவோம் தமிழினத்தலைவர் என பேசிக் கொண்டு இருந்தீர்கள், ஏன் இனப்படுகொலையை தடுக்கவில்லை என்று திமுகவை உரிமையாகக் கேட்கின்றோம், எதிர்த்து சண்டை போடுகின்றோம்.
ஆனால் திமுகவை மட்டும் எதிரியாக வைத்துக்கொண்டு இந்தப் போரை வடிவமைத்த இந்தியாவைப் பற்றி ஒரு வார்த்தையும் சீமான் பேசுவதில்லை. இங்கு மேடையில் இருக்கக்கூடிய தமிழ்த்தேசிய கூட்டணியுனுடைய எந்த அமைப்பும் திமுகவை எந்த தேர்தலிலும் ஆதரித்ததில்லை. ஆனால் எதிரி யார் என்றால், இந்தப் போரை வடிவமைத்து இத்தனை லட்சம் மக்களை படுகொலை செய்ய வேண்டும் என்ற செயல் திட்டத்தை வடிவமைத்து கொடுத்த இந்திய அரசு. அதை கூட என்ன சொல்வார்கள் எனில், காங்கிரஸ் கட்சி என்று சுருக்கி விடுவார்கள். காங்கிரஸ் கட்சி மேல் வெறுப்பு இருக்கிறது, கோபம் இருக்கிறது, அதை தமிழ்நாட்டில் துடைத்தெரிய வேண்டும் என்கின்ற வேகம் இருக்கிறது. ஆனால் ஒரு கட்சியோடு மட்டுமே முடிச்சு போடுவதற்கு நாம் முட்டாள்கள் அல்ல. சரி காங்கிரஸ் செய்தது, பிஜேபி என்னசெய்தது? பிஜேபிதான் ராஜபக்சேவைக் காப்பாற்றியது. போர் நடந்த பொழுது ஆர்எஸ்எஸ்-யினுடைய மாநாடு நாக்பூரில் நடக்கிறது. தமிழினத்தின் பிரதிநிதிகள் அங்கு சென்று சந்தித்து, நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறீர்கள், ஆர்எஸ்எஸ் அங்கே தமிழ் மக்களுக்கு ஆதரவாக அறிக்கை விட வேண்டும், போரை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த பொழுது ஆர்எஸ்எஸ் மறுத்துவிட்டது. அது காங்கிரஸுக்கு ஆதரவை தெரிவித்தது என்பதை மறந்துவிடக்கூடாது. இதை வீதி வீதியாக சொல்லியாக வேண்டும். எப்போது கேட்டாலும் காங்கிரஸ், திமுக மட்டும் பேசுவான், பிஜேபி, ஆர்எஸ்எஸ் என்ன தமிழின மக்களுக்கு செய்தது எனக் கேட்க வேண்டும்.
இந்துக்களை காப்பாற்றுகிறோம் என்று பேசும் ஆர்எஸ்எஸ் என்ன செய்தான்? அந்த ஈழத்தமிழர்களை இந்து என்று சொல்கிறானே, அந்த இந்துக்களை படுகொலை செய்வதற்காக சிங்களத்தை ஆதரித்தவன்தான் ஆர்எஸ்எஸ் காரன்.
அவனுக்கு இந்து என்றால் ஆரிய சனாதன இந்து மட்டும்தான். தமிழ்நாட்டில் இருக்கிறவன் எல்லாம் அவனுக்கு சூத்திர அடிமைகள். அவன் இறந்தால் கவலைப்பட மாட்டான். கடந்த 10/ 15 வருடமாக ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை மோடியோ, ஆர்எஸ்எஸ்-சோ, அண்ணாமலையோ, நயினார் நாகேந்திரனோ, ஒரு வார்த்தை பேசவில்லை. இதெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆக இந்திய அரசில் இந்த திட்டம் தமிழனுக்கு எதிரான திட்டம் என்றால், காங்கிரஸ், பிஜேபி கைகோப்பார்கள். இதைப் பேச வேண்டும். ஆனால் இதை தமிழ்த்தேசியவாதிகள் பேசவில்லை. அதனால்தான் சொல்கிறோம் அவர்கள் கழுதைப்புலிகள் என்று. இதையெல்லாம் திட்டமிட்டு மறைத்தார்கள். இவர்கள் சாதி ஒழிப்பை பற்றி பேசுவதில்லை, அப்புறம் எப்படி தமிழ் தேசியம்?
திராவிட எதிர்ப்பு பேசுகின்ற ஐயா மணியரசன் அவர்கள் தமிழ்நாடு விடுதலைப் படை பற்றி என்றாவது பேசி இருக்கிறாரா? போராட்டம் நடத்தி இருக்கிறாரா? தோழர் தமிழரனுக்காக நிகழ்ச்சி நடத்தி இருக்கிறாரா? தமிழ்நாடு விடுதலைப் படையை சார்ந்தவர்களுக்காக வழக்கு நடத்தி இருக்கிறாரா? அல்லது நாம் தமிழர் கட்சி தான் நடத்தி இருக்கிறதா?
தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய விடுதலைக்காகப் போராடி உயிர் கொடுத்த, அதற்காக தன் வாழ்க்கை அர்ப்பணித்த தமிழ்நாடு விடுதலைப்படையை சார்ந்தவர்களை பற்றி பேசுவதற்கே துணிச்சல் இல்லாதவர்கள், எப்படி தமிழ் தேசியவாதிகளாக இருப்பார்கள்?
அந்த தமிழ்நாடு விடுதலைப் படையில் இருந்து தமிழினத்தினுடைய விடுதலைக்காக போராடி சிறை சென்று வீரப்பனோடு சேர்ந்து இயங்கி, காவிரி உரிமைக்காக போராடி, நெய்வேலி உரிமைக்காக போராடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக போராடி, இதற்கெல்லாம் போராடி வழக்கு வாங்கி, எட்டு பத்து ஆண்டுகள் சிறை சென்று தமிழ்த்தேசியப் போராளியாக இருக்கக்கூடிய ’ரேடியோ வெங்கடேசன்’ அவர்களை, தனது கட்சியின் பொதுச்செயலாளராக வைத்திருக்கிறார் தோழர் குடந்தை அரசன் அவர்கள். அவர் தமிழ்த்தேசியவாதி கிடையாதாம், ’மான்கறி’ கதை சொல்பவன் எல்லாம் தமிழ்த்தேசியவாதியாம். இவர்கள் எவ்வளவு போலியானவர்கள் என்பது தெரிகிறது.
உடனே தமிழ்நாடு விடுதலைப்படையை அழித்தது திராவிடம் தானே, அதிமுக ஆட்சியில்தான் அழித்தார்கள் எனப் பேசுவார்கள். ஆமாம், இந்திய அரசியலில் எந்த மாநில கட்சியையும் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் இந்தியாவினுடைய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்தான். இது சீமானுக்கு புரியாமல் இருக்கலாம், ஆனால் மணியரசன் அவருக்கு புரியாமல் இருக்காது. மார்க்சிய அரசியலை ஏற்றுக்கொண்டு அதில் பயிற்சி பெற்றவர் அவர்.
இந்தியாவை நடத்துவது ஐஏஎஸ் அதிகாரி & ஐபிஎஸ் அதிகாரிகள்தான். அவர்கள்தான் எல்லா முடிவும் செய்வார்கள். அந்த முடிவுக்கு கட்டுப்பட்டுதான் இந்த ஆட்சியாளர்கள் ஆட்சி செய்ய முடியுமே ஒழிய, அவர்கள் முடிவுக்கு மாறாக அதிமுகவோ, திமுகவோ, எம்ஜிஆரோ, கலைஞரோ, ஜெயலலிதாவோ, எடப்பாடியோ, ஸ்டாலின் அவர்களோ மாறாக முடிவெடுத்தால் ஆட்சி கலைந்து போகும். அவர்கள் சொல்லக்கூடிய உத்தரவுக்கு கட்டுப்பட்டுதான் இவர்கள் வேலை செய்ய முடியும். இதை கவனத்தில் எடுத்துக் கொண்டால் தான், ஸ்டெர்லைட்டில் துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது எனக்குத் தெரியவில்லை, டிவியை பார்த்து தெரிந்து கொண்டதாக எடப்பாடி சொன்னது புரியும்.
இந்தியாவின் அதிகார வர்க்கத்தை பற்றிப் பேசுவதில்லை. ஒரு துறையில் ஒரு அமைச்சர் இருக்கிறார் என்றால், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் அமைச்சராக இருப்பார். அந்த ஐந்து வருடத்தில் அந்தத் துறை சார்ந்த விவரம் அவருக்கு என்ன தெரியும்? உதாரணத்திற்கு பொதுத்துறை அமைச்சராக இருப்பார் எனில், எத்தனை இடத்தில் அணை இருக்கிறது? ஆறு இருக்கிறது? கால்வாய் இருக்கிறது? எப்போது திறக்க வேண்டும்? எப்போது மூட வேண்டும்? என ஐந்து வருடத்துக்குள் தெரிந்துவிடுமா? ஆனால் அந்தத் துறையில் 30 ஆண்டுகளாக வேலை செய்யக்கூடிய அதிகாரிக்குத் தெரியும், அந்த அதிகாரிதான் முடிவு செய்வான். ஆனால் அதிகாரிகளைப் பற்றி நாம் பேசுவதில்லை.
முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் சிறைக்கு போயிருக்கிறார்கள். எத்தனை ஐஏஸ், ஐபிஎஸ் போயிருக்கிறார்கள்? தலைமை செயலாளர் போயிருக்கிறார்கள்? ஏன் அவர்கள் ஊழலை செய்யாத யோக்கியவான்களா?
விடுதலை படம் ஒரு அற்புதமான படம். விடுதலை இரண்டாம் பாகத்தில் ஒரு காட்சி வரும். தலைமை செயலாளர் உட்கார்ந்திருப்பார், ’பெருமாளை புடிச்சிட்டாங்களா இல்லையா?’ என்பதைப் பற்றி பேசும் போது, மாவட்ட கலெக்டர் இருப்பார், காவல்துறை அதிகாரி இருப்பார். ’என்னிடம் எதுவுமே சொல்லாமல் துப்பாக்கிச் சூடு எங்கள் ஏரியாவுக்குள் நடத்தி இருக்கிறீங்க?’ என அமைச்சர் கேட்டபோது, அமைதியாக அதிகாரிகள் இருக்க, ‘மதிக்கவே மாட்டிகிறீங்க நான் போய் முதலமைச்சரிடம் சொல்றேன்’ என கோவப்பட்டு எந்திரிப்பார். அதற்கு தலைமை செயலாளர் ‘போய் சொல்லுங்கோ’ என்பார். அவ்வளவுதான் அமைச்சருக்கு மரியாதை. அவர் அப்படியே ஒரு நிமிடம் நின்று யோசித்து, நமக்கு அமைச்சர் பதவி வேட்டு வைத்துவிட்டால் என்ன செய்வது என்று அமைதி காப்பார்.
இதிலிருந்து தலைமை செயலாளர் இல்லாமல் முதலமைச்சரால் ஆட்சியே செய்ய முடியாது. அவருக்குதான் மத்திய அரசாங்கத்தின் திட்டம் என்னவென்று தெரியும். எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறது என்று தெரியும். அது எப்போது வரும் என்று தெரியும். அது எப்படி நடைமுறை செய்ய வேண்டும் என்று தெரியும். இந்த அரசை எப்படி இயக்குவது தெரியும். அதிகாரிகள் இல்லாமல் அரசாங்கமே அசையாது. கொள்கை திட்டத்தை முடிவெடுக்கக் கூடியவர்கள்தான் இந்த ஆட்சியாளர்களே ஒழிய, அதை நடைமுறைப் படுத்துகிறவன் அதிகாரி. அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.
தற்போது பி.ஆர். பாண்டியன் அவர்களுக்கு 13 ஆண்டுகள் சிறை வந்திருக்கிறது. இது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த வழக்கை எடுத்து நடத்தி தண்டனை வாங்கி கொடுத்த வேலையை யார் செய்தது? ஏன் நடக்கிறது? ஒ.என்.ஜி.சி-யில் இனிமேல் அதிகமாக தோண்டப் போகிறான், அதிகமான இடத்தை கை வைக்கப் போகிறான், அப்படி வைக்கும் பொழுது நாளைக்கு அதற்கு ஆதரவாக மக்கள் திரண்டு விடக்கூடாது என்பதை மிரட்டுவதற்காக தான். ஒ.என்.ஜி.சி-க்கு சாதகமான வேலைகள் நடந்திருக்கிறது அதுதான் உண்மை. பி.ஆர் பாண்டியன் அவர்களுக்கு இவ்வளவு வருடம் சிறை என்றால், சாதாரண மக்கள் பயபட மாட்டார்களா? இவர் போராட்டம் நடத்தியதால ஒ.என்.ஜி.சி-க்கு எவ்வித இழப்புமில்லை, ஆனால் இவ்வளவு விரைவாக வழக்கு நடத்தி தண்டனை வாங்கிக் கொடுத்த வேலையை அதிகாரிகள் செய்துள்ளனர்.
தோழர்களே! இந்த ஆட்சி அதிகாரத்தில் யார் முடிவெடுக்கிறார்கள்? என்பதைக் குறித்துப் பேசாமல் மக்களை ஏமாற்றுகின்ற வேலை செய்கிறார்கள். சீமான் ஆட்சிக்கு வந்தார் எனில், இலங்கைக்கு படை அனுப்புவாராம், தமிழ்நாடு காவல்த்துறை கடலில் எவ்வளவு தொலைவு போக முடியும்? அதற்கு எல்லை இருக்கிறது, அதை தாண்டிப் போனால் எல்லைக் காவல் படை பிடிக்கும், அதையும் தாண்டிப் போனால் இந்தியாவினுடைய கப்பல் படை பிடிக்கும். காவல்துறையால் என்ன பண்ண முடியும்?ஆனால் கதை அளந்து விடுவது. வாயைத் திறந்தால் பொய் மட்டும்தான்.
2009ல் நடந்த அநீதியை பார்த்து எழுந்த தமிழர்களை, பொய் சொல்லி பொய் சொல்லி, கதை சொல்லி கதை சொல்லி, அந்த மக்களை முற்றிலுமாக மழுங்கடித்து, இன்றைக்கு ஈழ அரசியல் என்று பேசினாலே, நம்மைத் தாழ்வாக பார்க்கிறார்கள். நேர்மையாக போராடிய எல்லாத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இவர்(சீமான்) மட்டும்தான் யோக்கியன் என சொல்லிப் போராடுகிறார். அதே வேலைதான் ஐயா மணியரசனும் செய்கிறார்.
தந்தை பெரியாரை எதிர்க்க காரணம் என்ன? தந்தை பெரியார் என்ன உங்கள் சொத்தை பிடுங்கினாரா? அவ்வளவு கோபம் இருந்தால் பெரியார் செய்த வேலையை விட அதிகமாக செய்திருக்க வேண்டும் அல்லவா? உங்களை யார் தடுத்தார்கள்?
திராவிடம் என்ன செய்தது? இட ஒதுக்கீடு கேட்டது, பெண் விடுதலை கேட்டது, இந்தி வேண்டாம் சொன்னது, வட இந்தியா வேண்டாம் என சொன்னது, மார்வாடிகள் வேண்டாம் என சொன்னது, இந்திய அதிகாரம் வேண்டாம் என சொன்னது, தமிழ்நாடு விடுதலை அடையும் என சொன்னது. ஆனால் திராவிடத்தால் விழுந்தோம் வீழ்ந்தோம் என சொல்லும் இவர்கள், திராவிடம் வைத்த கோரிக்கையில் எந்த கோரிக்கை இவர்களுக்கு (சீமான், மணியரசன்) பிடிக்காத விசயம் என்று சொல்ல வேண்டும் அல்லவா?
இட ஒதுக்கீடு போராட்டம் எதற்கும் ஐயா மணியரசன் வந்திருக்க மாட்டார், சீமான் வந்திருக்க மாட்டார். தற்போது தேவேந்திர வேளாளர் மக்கள் பட்டியல் சமூக வெளியேற்றம் செய்ய வேண்டும் என்று கூட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார். பெண் விடுதலை பற்றிப் பேசினால் நாம் சிரித்து விடுவோம். முதலில் பாலியல் வழக்கிலிருந்து விடுதலை வாங்கட்டும், பிறகு பெண் விடுதலை பற்றிப் பேசட்டும்.
இவர் இந்திய எதிர்ப்பு போராட்டம் இம்மியளவு கூட செய்தது கிடையாது. இந்தியாவிலிருந்து ’விடுதலை’ வேண்டுமென்று தந்தை பெரியார் பேசினார். அதை சொல்வதற்கு பயந்துகொண்டுதான் பெரியார் தவறு என வருகின்றனர். பெரியார் பேசிய எந்த விசயத்திலும் கோட்பாடு ரீதியாக எதிர்ப்பதில்லை, அது குறித்து பேசுவதில்லை. வெறுமனே பெரியார், திராவிடம் திராவிடம், தெலுங்கு தெலுங்கு என பேச வேண்டியது.
ஒரு தேசிய இனம் என்பதில் மொழி, பண்பாடு, பொருளாதாரம், நிலம் போன்றவை முக்கியம். இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு தேசிய இனம் உருவாகும். ஒன்று மட்டும் வைத்துக் கொண்டு முடிவெடுத்துவிட முடியாது.
அந்த நிலத்தில் வாழக்கூடிய மக்கள் பொருளாதார ரீதியாக, பண்பாடு ரீதியாக, மொழி ரீதியாக, இன ரீதியாக ஒன்றுபட்டவர்களாக இருக்க வேண்டும். பல இனத்தை சார்ந்தவர்களாக இருக்கலாம், பல மொழியை சார்ந்தவர்களாக இருக்கலாம், பல பண்பாட்டை சார்ந்தவர்கள் இருக்கலாம், ஆனால் வரலாற்று ரீதியாக ஒன்றுபட்ட உணர்வோடு இருந்தார்கள் எனில், அவர்கள்தான் தேசிய இனம். ஒரே மொழியை பேசினாலும் கூட அவர்கள் வேறு வேறு விதமான பொருளாதாரப் பின்னணியில், வேறு வேறு வரலாற்று பின்னணியில், வேறு வேறு பண்பாட்டு பின்னணியில் இருந்தால், அவர் வேறு தேசிய இனம்.
அயர்லாந்து இருக்கிறது, இங்கிலாந்து இருக்கிறது. இது இரண்டும் வேறு வேறு தேசிய இனம் என சொல்கிறார்கள். ஆனால் இந்த இரண்டுக்கும் ஆங்கிலம் தான் மொழி. ஏனெனில் இரண்டுக்கும் நிலம் கடலால் பிரித்திருக்கிறது. அதனால் இரண்டு தேசிய இனமாகிப் போனது. ஆனால் ஒற்றை நிலத்திற்குள்ளாகவே இங்கிலாந்து மக்கள் இருக்கிறார்கள், ஸ்காட்லாந்து மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஸ்காட்டிஷ் மொழியை பேசுகிறார்கள். இரண்டும் வேறு வேறு தேசிய இனமாக இருக்கிறது. ஒரு சின்ன நிலப்பரப்புக்குள் இத்தனை வேறுபாடு. இதில் ஒரே மொழி பேசுகிறவன் இரண்டு தேசிய இனமாக இருக்கிறான், ஆனால் இரண்டு மொழி பேசுகின்றவன் ஒரே தேசியத்தில் வந்து நிற்கிறான்.
பிரெஞ்ச் தேசியத்தில், பிரெஞ்ச் மொழி பேசுபவன் மட்டும்தான் இருந்தானா? இல்லை. அதில் கௌன் என்கிற மொழியை பேசக்கூடியவன், பிரெஞ்ச் மொழியை பேசக்கூடியவன், ஜெர்மானிய மொழியை பேசக்கூடியவன், ஆங்கில மொழியை பேசக்கூடியவன், பழங்குடி மொழிகளை பேசக்கூடியவன், ரோமானிய மொழியை பேசக்கூடிய இத்தாலியன் இருந்தார்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் பிரெஞ்ச் தேசிய இனம் வந்தது. இப்படித்தான் ஜெர்மானிய தேசிய இனமும் வந்தது.
உலகத்தில் தேசிய இன உருவாக்கம்/ தேசிய இன நாடுகள் உருவானது என்பது, அந்த பகுதியில் வரலாற்று ரீதியாக ஒன்றுபட்டு வாழ்ந்து, நாமெல்லாம் ஒருவரே/ ஒரே ஆட்கள் என்று நினைத்து வளர்ந்தானோ, அவனெல்லாம் சேர்ந்துதான் தேசிய இனத்தை உருவாகிறதே ஒழிய, இந்த மொழி பேசுகிறவன் மட்டும்தான், தேசிய இனம் என்று அல்ல. இவர்கள்(சீமான், மணியரசன்) மாற்றி பேசுகிறார்கள்.
இத்தாலிய தேசிய இனத்தில் எத்தனை இனங்கள் இருந்தன. ஜெர்மானிய தேசியத்தில் எத்தனை பேர் இருந்தார்கள். ஆனால் இங்குள்ளவர்களை தெலுங்கு பேசுகிறார்கள் என திரும்ப திரும்ப பேசி திசை திருப்புகிறார்கள், இங்கு தெலுங்கு பேசுகின்ற மக்கள் தெலுங்குமொழியை முன்மொழியவில்லை, ஒரு தேசிய இனமாக முன்வைக்கவில்லை, அவன் அந்த மொழியில் இலக்கியத்தை படைக்கிறானா? அந்த மொழியில் பொதுமேடையில் பேசுகிறானா? அந்த மொழியில் அவன் எழுதுகிறானா? அந்த மொழியில் அவன் கல்வி கற்கிறானா? அவன் தேசியமாக இல்லை, அவன் தமிழ்த்தேசியமாக இருக்கிறான்.
ஆனால் மார்வாடி இருக்கிறான். அவன் தேசிய இனமாக இல்லை, அவனுக்கென்று வேறு நிலப்பரப்பு இருக்கிறது, தனக்கு தனி பண்பாடு இருக்கிறது, தனக்கென்று தனி பொருளாதார கட்டமைப்புகள் இருக்கிறது, அவன் வேறு என்று பேசுகிறான். பார்ப்பனர்களை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்களே. அவர்களும் தமிழ்தானே பேசுகிறார்கள் என திரும்பத் திரும்ப கேட்பார்கள். மார்வாடி மாதிரி தானே அவனும் இருக்கிறான். மொழியால் மட்டும் தேசிய இனம் என்று சொல்ல முடியுமா?
நாம் தமிழர் கட்சி அறிக்கையில், இஸ்லாமியர்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று அறிக்கை போட்டது. தயவுசெய்து எடுத்து சொல்லுங்கள். உருது பேசக்கூடியவர்கள் தேசிய இனத்தில் வரமாட்டானா? ஆங்கிலோ இந்தியர்கள் தேசிய இனத்தில் வரமாட்டார்களா? எத்தனை மொழிச் சிறுபான்மையினர் இருக்கிறார்கள். உதகையில் இருக்கக்கூடிய பழங்குடிகள் தேசிய இனத்தில் வரமாட்டானா? அவர்களை தூக்கி வெளியே போடுவீர்களா? மொழி சிறுபான்மை இருந்தாலும் கூட தேசிய இனத்தின் அங்கமாகத்தான் அவர்கள் இருக்கிறார்கள். அதுதான் தமிழ் தேசிய இனம். அப்படித்தான் பார்க்க வேண்டும்.
தமிழ் தேசிய விடுதலை என்பது அடக்கு முறையிலிருந்துதான் விடுதலையே ஒழிய, இவன் சொல்கின்ற மாதிரி கட்சியிலிருந்து விடுதலை அல்ல.
இந்திய அரசினுடைய அடக்கு முறை என்பது இவர் தெலுங்கு, நாயக்கர், ரெட்டியார் என்று தனித்தனியாக இல்லை. எல்லாரையும் ஒரே மாதிரிதான் வைத்து நசுக்குகிறான். எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரிதான் ஜிஎஸ்டி போட்டு மிதிக்கிறான். அதில் வேறுபாடு பார்ப்பதில்லை. ஆனால் மார்வாடி சேட்டுகளுக்கு வேறுபாடு பார்க்கிறான். அவன் மேல் ஐடி ரெய்டு(IT raid) கிடையாது. அவனுக்கு ஈ.டி ரெய்டு(ED raid), அவனுக்கு வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது. அவன் இஷ்டத்துக்கு இருக்கலாம். பார்ப்பனர்களும் தன் இஷ்டத்துக்கு இருக்கலாம்.
தமிழ் தேசிய மக்களை சிறு சிறு குழுவாக பிரிக்கக்கூடிய வேலையை செய்கிறார்கள். தெலுங்கு, தெலுங்கற்றவர் எனப் பிரிப்பான். அதன்பின் தமிழனுக்குள்ளாக பட்டியல் சமூகமாக பிரிப்பான். பிறகு அதுக்குள் யார் பெரிய ஆள் எனப் பிரிப்பான். இப்படியே பிரித்து பிரித்து தமிழ் தேசிய இனத்தை கூறு போடுகின்ற வேலையைத்தான் சீமானும், ஐயா மணியரசனும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
அதற்கு மாற்றாகதான் தமிழ்த் தேசியக் கூட்டணி வந்திருக்கிறது. அதனால்தான் முப்பெரும் விழா என்பது, மூன்று ஆளுமைகளை முன்வைத்து உருவாக்கி இருக்கின்றோம். சமூகத்தில் சமூக சீர்திருத்தத்தை பேசுகின்ற யாராக இருந்தாலும், அவர் எந்த இனத்தை சார்ந்தவராக இருந்தாலும், அவரது சிந்தனைதான் முக்கியம். காரல் மார்க்ஸ் தமிழர் இல்லையென்று ஒதுக்கி வைக்க முடியுமா? சாக்ரடீஸ்-சை நிராகரித்து விடுவாயா? மார்கமிக்ஸ்-சை வேண்டாம் என சொல்லிவிடுவாயா? சொல்லுங்கள்.
மாவோ வேண்டாம் என நிராகரித்து விடுவாயா? அப்படி எந்த நிராகரிப்பையும் விடுதலை புலிகள் செய்யவில்லை. அதேபோல விடுதலை புலிகள் ஒரு கட்சிக்கு எதிராகவோ, ஒற்றை அதிபருக்கு எதிராக அரசியல் செய்யவில்லை, சிங்களப் பேரினவாதம் என்கின்ற கருத்தியலுக்கு எதிராகக்தான் சண்டை போட்டார்களே ஒழிய, சிங்கள மக்களுக்கு எதிராக அல்ல, சிங்கள் கட்சிகளுக்கு எதிராக இல்லை, ஜெயவர்தனாவுக்கு எதிராக துப்பாக்கி தூக்கினார்கள், சிங்களப் பேரினவாதத்தை கைவிடவில்லை காரணத்தினால்: ஜெயவர்த்தனாவை எதிர்த்து, பிரேமதாசாவை எதிர்த்து, சந்திரிகாவை எதிர்த்து, ரணிலை எதிர்த்து, ராஜபக்சேவை எதிர்த்து, தொடர்ச்சியாக எதிர்த்து எதிர்த்து சண்டை போட்டார்கள். காரணம் கருத்தியலுக்கு எதிரான சண்டை.
சீமான் வகையாறாக்கள் என்ன செய்கிறார்கள? திமுக எதிர்ப்பது மட்டும்தான் கொள்கையாக வைத்துள்ளனர். திமுகவை விமர்சிப்பது முக்கியம். அந்த விமர்சனம் என்பது மக்களிடத்தில் அரசியல் படுத்துவதற்கான தேவையே ஒழிய, வெறுப்பையும் வன்மத்தையும் மட்டுமே அரசியலாக மாற்றுவதற்காக அல்ல.
10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தது. ஈழம் வந்துவிட்டதா? 12 ஆண்டுகளாக பிஜேபி ஆட்சியில் இருக்கிறது, ஈழம் வந்துவிட்டதா? இல்லையே. அப்போது என்ன பிரச்சனை? இந்திய பார்ப்பனிய கொள்கைதான் பிரச்சனை. அந்த கொள்கையைப் பற்றிப் பேசாத யாரும் தமிழ் தேசியவாதிகள் இல்லை.
தெளிவாக தந்தை பெரியார் சொல்கிறார்: யார் எதிரி என்ற கொள்கை அடையாளத்தை வைக்கிறார். பார்ப்பனரை எதிரியாக வைக்கவில்லை, பார்ப்பனியத்தை எதிரியாக வைக்கிறார். அதேதான் அம்பேத்கர் பார்ப்பனியத்தை எதிரியாக சொல்கிறார்.
இந்தியா என்ற ஒன்று இல்லை என்றால், பார்ப்பனியம் என்ற ஒன்று இருக்காது என்று தந்தை பெரியார் சொல்கிறார். பார்ப்பனியம் என்ற ஒன்று இல்லை என்றால், சாதிய இறுக்கம் என்ற ஒன்று இருக்க முடியாது. அடிமைத்தனம் என்ற ஒன்று இருக்க முடியாது. சமஸ்கிருதம் ஆக்கிரமிக்க முடியாது. நம்முடைய சடங்குகள் எல்லாமும் பார்ப்பனர் கையில் இருக்க முடியாது. இதைத்தான் அவர் சொல்கிறார்.
பெரியாரையும், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நிராகரித்துவிட்டு இவர்கள் பேசுவது, சாதித் தேசிய வெறிதான் தவிர வேறு ஒன்றும் கிடையாது. இவர்கள் சொல்லப்போனால் சாதிவெறி தேசியத்தைதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இவர்களை (சீமான், மணியரசன்) நிராகரிக்க வேண்டிய, அம்பலப்படுத்த வேண்டிய பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
தமிழ்நாட்டில் நம் ஆட்கள்(தமிழ்தேசியக் கூட்டணி) எம்எல்ஏவாக இருக்க விரும்புகிறோம். ஏனெனில் நம் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும். இவர்கள் எல்லாம் நமக்காக பேசக்கூடியவர்கள். என்றாவது ஏதாவது சமரசம் பண்ணியிருக்கிறார்களா? பத்து காசு சம்பாதித்து உள்ளார்களா? இல்லை. எனவே இவர்கள்தான் மக்களுக்காகப் பேசக்கூடியவர்கள். இவர்கள் எல்லாம் சட்டசபையில போய் பேச வேண்டும் என்று நாங்கள் விரும்புறோம். எங்களுக்கு தேர்தல் அரசியல் விருப்பம் இல்லை. ஆனால் அவர்கள் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புறோம்.
அவர்கள் போராளிகள். மக்களுக்காக அர்ப்பணித்தவர்கள். கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருக்கக்கூடியவர்கள். ஆக தேர்தல் அரசியலும் & இயக்க அரசியலும் கைகோர்த்துதான் இங்கே இருக்கிறது. தோழர்களே அடுத்து வரக்கூடிய காலகட்டத்தில் மிக ஆழமாக விரிவான கூட்டமைப்பை விரிவுபடுத்தி செய்வோம். டெல்டாவுக்குள் இருக்கக்கூடிய அரசியல் கொள்கைதான் தமிழ்நாட்டின் அரசியலை முடிவு செய்திருக்கிறது. அதனால் ஒரு மிகப்பெரிய அரசியல் எழுச்சியை கொண்டு வாருங்கள் என்கின்ற கோரிக்கையை வைத்து விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!!.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி திருவாரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் உரையாற்றின உரை.