
மாஞ்சோலை தேயிலை தோட்ட மக்களை ஏழு நாட்களுக்குள் காலி செய்ய நிர்வாக தரப்பில் அறிக்கை விட்டதையொட்டி, திமுக அரசு மற்றும் பாம்பே பர்மா நிர்வாகப்போக்கை கண்டித்தும், நான்கு தலைமுறையாக உழைத்த மக்களை வஞ்சித்ததும் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சனவரி 28, 2026 அன்று சமூக வலைதளத்தில் பதிவு செய்தது.
மாஞ்சோலை கம்பெனியின் சுரண்டலை அனுமதித்து, நான்கு தலைமுறை மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமையை நசுக்கிய வரலாறு திமுகவின் இருண்ட காலமாக எழுதப்படும்.
1960களில் மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக வழக்காடி, போராடி நீதிபெற்றுக்கொடுத்த திமுக, 1995களிலிருந்து 2023ம் ஆண்டு காலகட்டத்தில் தொழிலாளர் நலனை கைகழுவி, தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து அடக்குமுறையை ஏவியது என்பது அறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு நேரெதிரான அராஜகவாத போக்கு.
2022-23ம் ஆண்டில் மாஞ்சோலை நிறுவனத்தின் ஒப்பந்தம் காலாவதியான பின்பு தொழிலாளர்களுக்கு வந்து சேரவேண்டிய நட்ட ஈட்டை மாஞ்சோலை நிறுவனமான பர்மா-பாம்பே கம்பெனி வஞ்சகமாக மறுத்தது.
தமது உரிமைகளை பேச இயலாத அந்த மக்களுக்காக குரல் கொடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டிய திமுக அரசு, மார்வாடி கம்பெனிக்கு சாதகமாக செயல்பட்டது இந்த ஆட்சியின் மிகமோசமான காலகட்டமாகும்.
4 தலைமுறைகளாக உழைத்து, அடர்ந்த காட்டை செம்மைப்படுத்தி லாபம்கொழிக்கும் தேயிலை நிறுவனமாக மாற்றிய தமிழர்களுக்கு நட்ட ஈடாக தரவேண்டிய பணத்தை கொடுக்காமல் வஞ்சித்தது. அந்த வஞ்சகம் கூட தெரியாத அப்பாவிகளாக அம்மக்கள் இருந்ததை நேரில் கண்டோம். ஒவ்வொரு தொழிலாளியிடமும் தவறான செய்தியை சொல்லி, ‘தாமாக ஓய்வு பெறுகிறோமென்ற படிவத்தில்’ (voluntary retirement) கையெழுத்தை பெற்று தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வீடுகளை காலி செய்ய வைத்தார்கள். இதை நாகர்கோவிலில் இருந்து plantation workers welfare departmentஇல் இருந்த அதிகாரி நேரில் வந்து இந்த அராஜகத்தை செய்தார்.
திமுக அரசு தன்பங்கிற்கு, மின்சாரம்-ரேசன்-தண்ணீர் வசதிகளை துண்டித்தது. வீடுகளை தருகிறோமென்று வறுமைக்கோட்டிற்கு கீழானவர்களுக்கான நலத்திட்டத்தின் கீழான வீடுகளை கொடுத்து தனது கடமையை முடித்துக் கொண்டது.

பாம்பே-பர்மா கார்ப்பரேசன் கிட்டதட்ட 13,000 கோடி ரூபாய் வணிகம் செய்யும் மிகப்பெரும் நிறுவனம். பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனியும் இந்த நிறுவனத்தின் அங்கம். பாஜகவிற்கு 25 ஆண்டுகளாக நன்கொடை கொடுத்து வளர்த்த நிறுவனம். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு கிட்டதட்ட ஆண்டுக்கு 200 நாட்கள் வீதம் மொத்த வேலை ஆண்டுகளை கணக்கீட்டு நட்டத்தொகையை கொடுக்க வைத்திருக்க வேண்டும்.
மே17 இயக்க தோழர்கள் ஃபோர்டு நிறுவனத்திடம் போராடி 147- 170 நாட்கள் சம்பளத்தை நட்ட ஈடாக பணிசெய்த ஆண்டுகளுக்கு கணக்கீட்டு கிட்டதட்ட ரூ 25-70 லட்சம் தொகையை பெற்றுக் கொடுத்தார்கள். இந்நிலையில் 90 ஆண்டுகளாக உழைத்த மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு 200 நாட்கள் நட்ட ஈட்டை திமுக அரசு பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஒரு தனியார் நிறுவனத்திடம் நம் தொழிலாளர்களுக்காக வாதிட்டிருக்க வேண்டும்.
ஆனால், மார்வாடி நிறுவனத்திற்கு சாதகமாக ஏன் திமுக நடந்து கொண்டது என்பதை திராவிட ஆய்வாளர்கள் தான் கண்டறிய வேண்டும்?
தொழிலாளர்களை வஞ்சித்து, சட்டவிரோதமான முறையில் நிறுவனத்தை மூடும் மாஞ்சோலை கம்பெனிக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீடு உள்ள கருவிகளை எடுக்க திமுக அரசு அனுமதிக்கப்போகிறதா? தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கப்பட வேண்டிய வரிபாக்கியை கொடுக்காத மார்வாடி மாஞ்சோலை கம்பெனி மீது திமுக அமைச்சர்களுக்கு என்ன பாசம்?
அரசு பணத்தை அம்மக்கள் கேட்கவில்லை, திமுக கட்சிக்காரர்கள் பணத்தை கேட்கவில்லை, மாறாக ரூ 4000 கோடி லாபம் பார்க்கும் மார்வாடி கம்பெனியிடமிருந்து சில கோடி ரூபாய் பணத்தை நட்ட ஈடாக 2000 தொழிலாளர் குடும்பங்களுக்கு வாங்கிக் கொடுப்பதை ஏன் செய்ய மறுக்கிறது திமுக?
தொழிலாளர் நல அமைச்சர், தொழில்துறை அமைச்சர், சமூகநலத்துறை அமைச்சர் என எவரும் அக்கறை கொள்ளாமல் மாஞ்சோலை தொழிலாளர்களை வஞ்சித்திருக்கிறார்கள் என்பதை மே17 இயக்கம் துணிந்து சொல்லும்.
எதிர்கட்சியான அதிமுக மாஞ்சோலை குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவதாக சொல்லிவிட்டு கைவிட்டது. திராவிட எதிர்ப்பு, திமுக எதிர்ப்பு பேசும் சீமான் இன்றுவரை, தமிழ் தொழிலாளர்களுக்காக வாய்திறக்கவில்லை. எதிர்கட்சி என சொல்லிக்கொள்ளும் பாஜக, தனக்கு நன்கொடை கொடுத்துவரும் மாஞ்சோலை கம்பெனியை கண்டிக்க முன்வரவில்லை.

மாஞ்சோலை தொழிலாளர்களின் துயரத்தினை திமுக அரசு துடைக்கவில்லை,மாறாக முதலாளிகளுக்கு ஆதரவாக இயங்கியதை எக்காலத்திலும் நாம் மறக்க இயலாது. இப்போதும் கூட காலம் கடந்துவிடவில்லை, மாஞ்சோலை தோட்ட ஒப்பந்தம் முழுமையாக முடிய ஓரிரு ஆண்டுகள் உள்ளன. முதலமைச்சர் இந்த இறுதிக் கட்டத்திலாவது நிறுவனத்தை பணிய வைத்து நட்ட ஈட்டை பெற்றுத்தர வேண்டும்.
ஆங்கிலேய காலம் முதல், வடநாட்டு, பாஜக சார்பு மார்வாடி கம்பெனி வரை அப்பாவி தமிழ் தொழிலாளர்களை வஞ்சித்த வரலாறை முடிவுக்கு கொண்டு வந்து சமூகநீதியை நிலைநாட்ட முதலமைச்சர் முயற்சி செய்ய வேண்டும். செய்வார்களா என தெரியவில்லை.
மேலும், நம்மை போன்ற பொதுசமூகத்தின் அமைதியும் இந்த அராஜக அநீதிக்கு சாதகமாக அமைந்தது எனும்வகையில் நாம் பொறுப்பேற்க வேண்டும். மே17 இயக்கம் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுத்தது, ஆயினும் போதிய அழுத்தத்தை எம்மாலும் தர இயலவில்லை. இது எமது தோல்வி என்பதை சுயவிமர்சனமாக ஏற்கிறோம். இம்மக்களுக்கு நெருக்கடி சமயத்தில் உதவி செய்த தோழர் எஸ்.ஆர்.பாண்டியன் மற்றும்
எஸ்.டி.பி.ஐ தோழர்களை நினைவுகூறுகிறோம். இம்மக்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த முற்போக்கு தோழமைகளை நினைவு கூறுகிறோம். ஆயினும் நம் முயற்சி போதுமான அழுத்தத்தை கொடுக்கவில்லை.
இனிமேலாவது அனைவரும் குரல் எழுப்ப வாருங்கள். பாம்பே-பர்மா கார்ப்பரேசன் மோசடியான கொலைகார கம்பெனி. நம் தமிழர்களுக்கு உரிய நட்ட ஈட்டை தராமல் வெளியேறக்கூடாதெனும் குரல் எழட்டும்.
நீதியை பேசுங்கள், குரல் எழுப்புங்கள். தொழிலாளர்கள் உரிமை வெல்லட்டும்.