
ஏகாதியபத்தியதைப் பற்றி சுருக்கமாக கூறவேண்டுமென்றால் அது முதலாளித்துவத்தின் ஏகபோக நிலை என்று கூறுவார் லெனின்.
முதலாளித்துவ கொள்கைகளில் ஊறித் திளைத்து, தன் நாட்டு மக்களிடையே போர் வெறியை ஊக்குவித்து, பிற நாட்டு வளங்களைக் கொள்ளையடிக்கும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியம், மேற்காசியா லத்தீன் அமெரிக்கா எனப் பரவி தற்போது கிரீன்லாந்தை குறி வைத்திருக்கின்றது. வெனிசுலாவில் அதிபர் மதுரோவை சிறை பிடித்ததைத் தொடர்ந்து, கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க தற்போது அமெரிக்கா திட்டம் தீட்டியுள்ளது.
வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக் பகுதிக்கும் இடையில் உள்ளதால் புவிசார் ரீதியாக கிரீன்லாந்து அமெரிக்காவிற்கு முக்கியமான நாடாக அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தீவானாலும் மிகவும் குறைந்த மக்கள் தொகை (சுமார் 56,000 மக்கள்) கொண்ட இந்த நாட்டில் பெரும்பாலும் ‘இனுயிட்’ எனும் பழங்குடி மக்களே வாழ்கின்றனர். தற்போது கிரீன்லாந்து டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தாலும் சுயாட்சி பகுதியாக (autonomous territory) அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.
பனிரெண்டாம் நூற்றாண்டு வரை கிரீன்லாந்து நார்வே நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1380இல் டென்மார்க்குடன் இணைந்தது. டென்மார்க்கின் காலனியாகத் தொடர்ந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் அமெரிக்காவின் கழுகுப்பார்வையில் சிக்கியது கிரீன்லாந்து. 1941ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கும் டென்மார்க்கிற்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் மூலம் கிரீன்லாந்தில் நுழைந்தது அமெரிக்கா. (அப்போது நாஜி ஜெர்மனியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என்று கூறப்பட்டாலும் ஐரோப்பாவின் போர் வெறியும் இதற்குக் காரணமாக இருந்தது.) போருக்கு முன்புவரை வேட்டையாடுதல், மீன்பிடித்தல் போன்றவற்றை செய்து வந்த மக்களின் வாழ்க்கை அமெரிக்கா நுழைந்ததால் மாறியது. போரினால் கிரீன்லாந்தின் வரலாறும் மாறிப்போனது.

போரில் ஏவுகணைத் தாக்குதல்களின் போது முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் கருவிகளை பயன்படுத்துவதற்கும் பிராந்தியத்தில் உள்ள கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் பொருத்தமான இடமாக கிரீன்லாந்தை தேர்வு செய்தது அமெரிக்கா. பனிப்போரின் காலகட்டத்தில், கிரீன்லாந்தில் அணு ஏவுகணைகளை நிலைநிறுத்தவும் திட்டமிட்டிருந்தது. இவ்வாறு இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளுக்காக கிரீன்லாந்தை பயன்படுத்திக் கொண்டது. அடுத்த நான்கு ஆண்டுகளில் (1940-1944), கிரீன்லாந்தில் கிட்டத்தட்ட 5,800 இராணுவ வீரர்களைக் கொண்ட 13 இராணுவத் தளங்களையும் நான்கு கடற்படைத் தளங்களையும் அமெரிக்கா கட்டியது. 1944வாக்கில், கிரீன்லாந்தின் மக்கள்தொகையில் 25 சதவீதமாக மாறும் அளவிற்கு அமெரிக்க ராணுவத்தினர் எண்ணிக்கை அதிகரித்தது.

1941-இல் டென்மார்க்-அமெரிக்கா இடையே போடப்பட்ட ஒப்பந்தம் 1951மற்றும் 2004இல் புதுப்பிக்கப்பட்டதால் முழுவதும் அமெரிக்காவின் இராணுவத் தளமாகவே மாறி விட்டது கிரீன்லாந்து. தற்போதும் கிரீன்லாந்தின் விமானத்தளங்களையும் விண்வெளித் தளங்களையும் பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா. போர்த்தளங்கள் மட்டுமல்லாது அமெரிக்க நலனுக்காக பல வானிலை மையங்களை உருவாக்கி இருக்கின்றது.
தற்போது உலகப் போர் மூளும் சூழலில் ரஷ்யா, சீனா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த கிரீன்லாந்தை வழித்தடமாக பயன்படுத்தும் திட்டத்தை வகுத்துள்ளது அமெரிக்கா. 2029ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் ‘கோல்டன் டோம்’ விண்வெளி போர்த்திட்டத்திற்கு கிரீன்லாந்து மிக முக்கியமான தேவையாக இருக்கும் என்று அமெரிக்கா கூறியிருப்பது இதற்குச் சான்று. மேலும் தங்கம், இரும்பு, தாமிரம் உள்ளிட்ட முக்கியமான கனிமங்களைக் கொண்ட கிரீன்லாந்தின் வளத்திற்காகவும் அமெரிக்கா அந்நாட்டை கையகப்படுத்த வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கின்றது.
இதற்கு முன்னரும் டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தை வாங்க அமெரிக்கா முயற்சித்தாலும் தற்போது மிரட்டும் தொனியில் டிரம்ப் பேசியிருப்பது கிரீன்லாந்து மக்களை கொந்தளிக்க செய்துள்ளது. கிரீன்லாந்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும் மக்களும் டென்மார்க்கிலிருந்து விடுதலை பெற நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும் வேளையில் மீண்டும் ஒரு காலனி நாடு போல் அமெரிக்காவின் அடிமையாக மாற அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். (டென்மார்க் கிரீன்லாந்திற்கு 2009இல் சுயநிர்ணய உரிமை வழங்கியது குறிப்பிடத்தக்கது.)

இப்போது இந்தத் தீவை அமெரிக்கா கைப்பற்ற நினைப்பதன் மூலம் நேட்டோ (வடக்கு அட்லாண்டிக் இராணுவ கூட்டணி) நாடுகள் இடையே விரிசல் எழுந்திருக்கிறது. ஏனெனில் நேட்டோவின் பன்னிரண்டு நிறுவன உறுப்பு நாடுகளில் டென்மார்க்கும் ஒன்று. கிரீன்லாந்தை ‘சொந்தமாக்க’ அதை விலை கொடுத்து வாங்கவோ போர் மூலமாகவோ முயற்சிப்பேன் என்று டிரம்ப் கூறியதன் மூலம் அமெரிக்காவிற்கும் பிற நேட்டோ நாடுகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. டிரம்பின் அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் டென்மார்க் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் கிரீன்லாந்தில் கூட்டு இராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதனால் கோபமடைந்த டிரம்ப், ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதிப்பேன் என்று மிரட்டியதும் உலக அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவ ரீதியாக ஒரு நாட்டை குறி வைப்பது, அதன் வளங்களை சுரண்டுவது, அதிக வரி விதிப்பது, பின் அந்த நாட்டின் பொருளாதாரத்தைக் குலைத்துப் போடுவது – அமெரிக்கா பின்பற்றும் இந்த வழிமுறைக்கு கிரீன்லாந்தும் இப்போது பலியாகி இருக்கின்றது. அமெரிக்காவின் அழுத்தத்தால் சிறு நாடுகளும் தீவு நாடுகளும் விற்பனைப் பொருளாக மாறி வருகின்றன. கம்யூனிச ஆட்சி நடைபெறும் கியூபாவை தனிமைப்படுத்த முயன்ற அமெரிக்கா, கியூபாவிற்கான எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியதால், கியூபாவின் பொருளாதாரம் சரிவின் விளிம்பில் உள்ளது. லத்தீன் அமெரிக்காவின் பணக்கார நாடாக திகழ்ந்த, எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுவேலா அமெரிக்காவின் சர்வாதிகாரப் போக்கினால் போராடிக் கொண்டிருக்கின்றது. அந்த வரிசையில் தற்போது கிரீன்லாந்தும் சிக்க வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழலை நாம் தமிழ்த் தேசிய அரசியல் பார்வையில் பார்க்கும்போது, ஒரு உண்மை தெளிவாகிறது: சிறு இனங்களின், சிறு தேசங்களின், மொழி–பண்பாட்டு, பொருளாதார அடையாளங்களின் சுயநிர்ணய உரிமை எங்கும் ஏகாதிபத்திய சக்திகளால் நசுக்கப்படுகிறது. ஈழத் தமிழர் பிரச்சினை முதல், இந்திய அரசியல் அமைப்புக்குள் தமிழின உரிமைகள் வரை – எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இருப்பது இதே ஆதிக்க அரசியல்தான். கிரீன்லாந்து இன்று எதிர்கொள்வது, நாளை வேறு எந்த சிறு தேசமும் எதிர்கொள்ளக்கூடிய அபாயத்தின் முன்னோட்டம் ஆகும்.
ஆகவே, கிரீன்லாந்து மக்களின் போராட்டம் என்பது ஒரு தீவின் பிரச்சினையோ ஒரு சிறு நாட்டின் பிரச்சினையோ மட்டும் அல்ல. அது உலகம் முழுவதும் சுயநிர்ணய உரிமைக்காக போராடும் அனைத்து இனங்களின், அனைத்து தேசங்களின் போராட்டத்துடனும் இணைந்த ஒன்று. இந்த ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிரான எதிர்ப்பு, தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனையின் இயல்பான தொடர்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.