கூட்டணி பேரத்திற்கே முன்னுரிமை கொடுக்கும் காங்கிரஸ் – திருமுருகன் காந்தி

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதனையோட்டி காங்கிரஸ் கட்சியினர் தவெக கட்சியுடனும் மற்றும் திமுகவுடனும் பேரம் பேசி வருவதையும், கடந்தகால காங்கிரஸ் கட்சியின் அரசியலை செயல்பாட்டினையும், நிகழ்காலத்தில் காங்கிரசை முன்னுக்கு நகர்த்தி, தமிழ்நாட்டிற்குள்ளாக இந்திய தேசிய அரசியலை வளரச் செய்வதற்கான பரப்புரையை கமுக்கமாக முன்னெடுக்கும் அரசியலை அம்பலப்படுத்துகிறார் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள். இதனை தனது சமூக வலைதளத்தில் பிப்ரவரி 23, 2026 அன்று பதிவு செய்தது.

காங்கிரஸ் கட்சி இதுவரை கூட்டணிக்குள் வராமல் விஜயுடன் பேரம் பேசுகிறதென திமுக ஆதரவாளர்கள் விமர்சிப்பதை காண்கிறோம். காங்கிரஸ் கட்சி பாசிச எதிர்ப்பு அரசியலை கொண்டுள்ளதா? மாநில உரிமைகளை ஏற்குமா? தனியார்மயத்தை தடுக்குமா? இசுலாமியர்களை காக்குமா எனும் கேள்விகள் அதன் கடந்தகால, நிகழ்கால அரசியலை வைத்து மதிப்பிட வேண்டும் என்பதை சொல்லி, இந்தியாவில் பாசிச எதிர்ப்பும், மாநில உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், மாநில கட்சிகளே இந்திய அளவிலான கூட்டமைப்பை வழிநடத்த வேண்டும் என 2021ல் மே17 இயக்கம் விவாதத்தை முன்வைத்தது.

கடந்த பீகார் தேர்தலின் பொழுது அதிக தொகுதிகள் பங்கீடு தேவையென பீகாரின் லல்லுபிரசாத் கட்சிக்கு நெருக்கடி கொடுத்து, பிரச்சாரம் மிக தாமதமாக பீகாரில் தொடங்கினார்கள். அதிக இடங்களை இழந்தது காங்கிரஸ் கட்சி. பீகாரில் பாஜக வலுவானதற்கு பேரம் பேசி காலம் கடத்திய காங்கிரஸ் கட்சி மீதான குற்றச்சாட்டுகள் வெளியாகின. இந்திய அளவில் உருவான பாஜக எதிர்ப்பு அமைப்பான இந்தியாக்கூட்டணியில் உள்ள சக கட்சிகளை கடுமையாக அந்தந்த மாநிலங்களில் விமர்சித்து அரசியல் செய்தது காங்கிரஸ். சனநாயக சக்திகள் மீது நெருக்கடி கொடுத்து பாஜக வளர்வதற்கு சத்தீஸ்கரில் பாஜகவிற்கு உதவி செய்ததால் ஆட்சி இழந்தது. ராகுல்காந்தி கேரளாவில் போட்டியிட்டு கம்யூனிஸ்டுகளை தமக்கு எதிரான கட்சியாக இந்திய அளவில் காட்டியது ஏன் என கேட்டிருந்தோம். தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு அரசியலை வலுப்படுத்தாமல் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் இதே எதேச்சதிகார போக்கு குஜராத், டில்லி, பஞ்சாப்,மத்தியபிரதேசம், ராஜஸ்தான் தேர்தல்களில் தோல்வியை உருவாக்கின. அம்பேத்கரிய கட்சியை இணைத்து கூட்டணி உருவாக்கததால் மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் ஆட்சி இழந்தார்கள். மராத்தியத்தில் பிரகாஷ் அம்பேத்கர், இசுலாமிய அமைப்புகளை கூட்டணிக்குள் கொண்டுவராமல் தோல்வியை தழுவினார்கள். இவ்விடங்களில் எல்லாம், பாஜகவின் கொள்கைக்கி ஏதுவாக தலித்துகள், இசுலாமியர்களை தனிமைப்படுத்தி தம்மையும் இந்துத்துவ அமைப்பிற்கு நிகராக காட்டிக்கொண்டார்கள்.

ஆட்சிக்கு வந்ததும், கர்நாடக காங்கிரஸ் மேகதாது அணை கட்டுவோம் என தமிழ்நாட்டோடு முரணை தொடங்கினார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சனநாயக மரபு கொண்டவர்கள் அல்ல, அதனால் பாசிச எதிர்ப்பு அரசியலுக்கு தலைமை தாங்கும் கொள்கை வலிமை, கட்டமைப்பு வலிமை அவர்களுக்கு கிடையாது. இதனால் மாநில கட்சிகள் வலுவான தலைமையை உருவாக்க வேண்டும் என பேசினோம். இதை 2021-2022ல் மே17 இயக்கம் முன்வைத்தது.

ஆனால், ஆக்கப்பூர்வமான விவாதம் நடக்காமல், எமது காணொளியை சங்கிகளை போல வெட்டி-ஒட்டி அவதூறு பரப்பினார் மருதையனும், அவரது சீடர்களும். திராவிடம், மாநில சுயாட்சி, சுயநிர்ணயம், அதிகார பகிர்வு குறித்தெல்லாம் மருதையனுக்கு எவ்வித நிலைப்பாடு கடந்த காலத்திலும், இன்றும் கிடையாது. ஏகபோல புரட்சி என சொல்லி, அனைத்து சனநாயக சக்திகளையும் மிகக்கொச்சையாக விமர்சனம் செய்துவிட்டு, கடைசியில் திமுகவிடம் சரணாகதி அடைந்தவர். கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியாக இயங்குபவர். நடிகர் விஜயை கடுமையாக விமர்சிக்கும் மருதையன், அவரது சீடர்கள், காங்கிரஸின் விஜய் மீதான ஆர்வம் குறித்து விவாதிப்பதில்லை. இந்திய தேசியமே இலக்கு என சங்கி தேசியம், காங்கிரஸ் தேசியத்தோடு தனது தேசிய பற்றை இணைத்துக்கொண்டவர். திமுகவிடம் மாதந்தோறும் சம்பளம் பெற்றுக்கொண்டு, நடுநிலைவாதியை போன்று நடித்துக்கொண்டு, தமிழ்நாட்டின் சனநாயக ஆற்றல்களை தொடர்ந்து தாக்கி அவதூறு பரப்புவது இவரது அரசியல். இவரை புரட்சியாளராக ஏற்றுக்கொண்டு, கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திமுகவிற்கு அப்பாற்பட்ட சனநாயக விவாதங்கள் ஏற்படாமல் தடுத்ததில் முக்கிய பங்காற்றியவர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் செய்யும் குளறுபடி குறித்து கள்ளமெளனத்தோடு கடந்து செல்லும் இவர்களது போக்கை கண்டறிவது அவசியம்.

திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த மக்கள் போராட்டங்களான மாஞ்சோலை தொழிலாளர், ஒப்பந்த ஊழியர், செவிலியர், இனாம் நில விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு விவசாயி அமைப்புகள், பரந்தூர் எதிர்ப்பு மக்கள், தூய்மை பணியாளர்கள், வேங்கைவயல் உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகள், மீனவர் மீதான தாக்குதல், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வளர்ச்சி, இந்துத்துவ அமைப்பினரின் அடாவடி, வீடுகள் இடிப்பு, தனியார்மயம் என எண்ணற்ற கோரிக்கைகளுக்காக போராடியவர்களை நிராகரித்தும், இழிவு செய்தும் அவதூறு பரப்பியும் தனது யூட்யூபர்களை வைத்து செயல்பட்ட இந்த கட்டமைப்பு காங்கிரஸுக்கு ஆதரவாக ராகுலின் செய்திகளை மட்டும் முன்னிலைப்படுத்தியது. தமிழ்நாட்டில் சனநாயக விவாதம் நடத்தப்படாமல், பாசிச எதிர்ப்பு இயக்கம் வளரவிடாமல் திமுக தேர்தல் ஆதரவு அரசியலை மட்டுமே பிரதானமாக நிறுத்தியவர். ஆனால் இந்த பரப்புரையில் காங்கிரசை முன்னுக்கு நகர்த்தி தமிழ்நாட்டிற்குள்ளாக இந்திய தேசிய அரசியலை வளரச் செய்வதற்கான பரப்புரையை கமுக்கமாக முன்னெடுத்தவர்.

காங்கிரஸ் அரசியல் வளர்வதற்கு தடையாக இருந்த ஈழ ஆதரவு அரசியலையும், வி.பு அமைப்பையும் கொச்சையாக அவதூறாக விமர்சனம் செய்தவர். வி.புக்கு எதிராக திமுக இயங்கினால் தான் வாக்குகளை பெறமுடியுமென நம்பவைக்க யூட்யூபர்களிடத்தில் பேரம்பேசியவர். திமுகவிற்கு ஆதரவாக இருந்த பல சனநாயக ஆற்றல்களை, எதிராக மடைமாற்றிய பெருமை மருதையன் கும்பலுக்கு உண்டு. இவர் திமுக ஆதரவாளர் போல இயங்கிக்கொண்டே திராவிடத்திற்கு மாற்றாக காங்கிரஸின் தேசிய அரசியல் வளர பரப்புரை செய்தவர். இவரது அரசியலில் வீழ்ந்த சில முற்போக்கு ஆற்றல்கள் தமிழ்நாட்டில் திமுக ஆதரவிற்கு வெளியே இயங்கும் சனநாயக ஆற்றல்களை அவதூறாக விமர்சித்ததும் நடந்தது. திமுக ஆட்சியின் 5 ஆண்டுகாலத்தில் முற்போக்கு சிவில் சமூகத்திற்குள்ளாக பிளவுகளையும், முரண்களையும் கூர்மைப்படுத்திய கூட்டம் இது. இதற்கு பலியான மூத்தவர்கள் சிலரையும் அறிந்தே வைத்திருக்கிறோம். கொள்கை அரசியலை முன்னிலைப்படுத்தாமல், தேர்தல் கணக்குகளை முன்னிலைப்படுத்தி காங்கிரஸை பாசிச எதிர்ப்பு சக்தியாக காட்டி மடைமாற்றிய அரசியலை வெற்றிகரமாக செய்துள்ளார்.

இன்றைக்கு மிகத்தீவிரமாக விமர்சிக்கும் காங்கிரஸின் மாணிக் தாக்கூர் என்பவர் சோனியா குடும்பத்திற்கும், ராகுல்காந்திக்கும் மிக நெருக்கமானவர். இவர்கள் சொல்லாமலா திமுக கூட்டணியை கடுமையாக தாக்குவார் மாணிக் தாக்கூர்? இச்சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் பேரம்பேசும் அரசியலையும், விஜய் சார்பு அரசியலையும் தீவிரமாக எதிர்க்காமல் புலிகள் எதிர்ப்பை முன்னிலைப்படுத்துவார்கள் மருதையன் சீடர்கள். ‘இடஒதுக்கீட்டு போராட்டத்தை நாய்சண்டை’ என மருதையன் தன் தலைமைக் காலத்தில் எழுதினார். பார்ப்பன எதிர்ப்பை கைவிட்டு கட்சி அறிக்கையில் திருத்தம் செய்ததை 2006ல் பெரியாரிய அமைப்பின் மூத்த தலைவர் கட்டுரையே வெளியிட்டார். இவையெல்லாம் ஆவணமாக இன்றும் உள்ளன. இந்த ட்ரோஜான்களை வைத்துக்கொண்டு திமுக ஆதரவு சிவில் சமூகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

2019 முதலாக தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையையும் பாராளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தமிழக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசியதோ, போராடியதோ இல்லை. கோட்டைப்பட்டின மீனவர் இலங்கையால் கொல்லப்பட்ட போது, அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி, குடும்பத்தாரை சந்திக்க அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ வந்ததில்லை. 2021 கோவை தேர்தலில் வானதி வெற்றிபெற ஏதுவாக காங்கிரஸ் வேட்பாளர், தேர்தலில் செயல்படாது ஒதுங்கியவர். இவ்வாறாக ஏராளமான உதாரணங்கள் உண்டு.

இவற்றை விவாதத்திற்கு கொண்டு வந்திருந்தால், பேரம் பேசும் அரசியலை காங்கிரஸ் செய்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. அக்கட்சியில் சில சனநாயக ஆற்றல்கள் இருக்கலாம், அவர்களால் மாணிக் தாக்கூர், பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர்களை எதிர்க்க இயலாமல் ஏன் போனது? காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் கைப்பற்ற வேண்டும் என்பதே இலக்கு. கர்நாடகம், தெலுங்கானவிற்கு பின்னர் கேரளாவை கைப்பற்ற விஜய் ஆதரவு பயன்படுமென நினைக்கிறது. அடுத்த தேர்தலில் தமிழகத்தில் தனித்த ஆற்றலாக உருவெடுக்கலாமென நம்புகிறது.

வட இந்தியாவில் ஆட்சியை கைப்பற்ற இயலாத நிலையில், தென்னிந்தியாவை தனது பிடிக்குள் கொண்டுவரலாமென காங்கிரஸ் முயல்கிறது. மாநில உரிமைகளை பாஜக நசுக்கிய போதெல்லாம் கடும் எதிர்ப்பு தெரிவிக்காமல் நின்றது காங்கிரஸ். மாநில தேர்தலில் மாநில கட்சிகளை ஒதுக்கிவிட்டு தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்த விரும்புவதை நாம் மறக்கக்கூடாது.

வட இந்தியாவில் பாஜக எதிர்ப்பைவிட, கூட்டணி பேரத்திற்கே முன்னுரிமை கொடுத்து வீழ்ந்தது காங்கிரஸ் என்பது சமகால வரலாறு. மாநில கட்சிகளின் பாஜக எதிர்ப்பை பயன்படுத்தி லாபம் காண்கிறது காங்கிரஸ்.

இன்றுவரை, சிவசேனை, ஆம் ஆத்மி, திரிணாமுல், ஜனதா, திமுக, டி.ஆர்.எஸ், ஜே.எம்.எம் போன்று அமலாக்கத்துறையால் அதிக நெருக்கடிக்குள்ளாகாத கட்சியாக காங்கிரஸ் இருப்பது ஆச்சரியம்தானே. அமித்ஷாவின் தனிப்பட்ட வன்மத்தால் சிதம்பரம் கைதானார். இது தவிர்த்து காங்கிரஸ் எதிர்கொண்ட நெருக்கடி சிவசேனை, திமுக, திரிணாமுல், லல்லுவின் ஜனதா கட்சிகள் எதிர்கொண்ட நெருக்கடிகள் போன்றதல்ல.

டில்லி கட்சிகள் மாநில உரிமையை மதித்தவர்கள் அல்ல. பார்ப்பனிய கொள்கையை கைவிட்டவர்கள் அல்ல. பாஜக-காங்கிரஸ் கட்சிகளுக்குள்ளாக பல ஒற்றுமைகளும், சில வேறுபாடுகளும் உண்டு. இவை தமிழர்களுக்கு ஆதரவானவை அல்ல. இந்த கட்சிகளின் மாநில தலைமை டில்லி தலைமைக்கு கட்டுப்பட்டவை. சுயமாக முடிவெடுக்கக்கூடியவை அல்ல.

இன்றைய பாஜகவின் யுக்திகள் பல, காங்கிரஸால் நடத்தப்பட்டவை. மாநில அதிகாரம், மாநில கட்சிகளிடத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த கட்சிகளே பாஜக எதிர்ப்பு அரசியலுக்கு தலைமை தாங்க வேண்டும். இதைத்தான் 2021ல் மே17 இயக்கம் வலியுறுத்தியது. இந்த விவாதத்தை சிதைத்த மருதையன் கூட்டம், தற்போது கள்ளமெளனம் காக்கிறது.

தமிழ்நாட்டின் அரசியல், தமிழர்களின் சுயமரியாதை மற்றும் சுயநிர்ணய கோரிக்கையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி இதற்கு நேர் எதிரான கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »