சனாதனவாதிகள் கட்டமைக்கும் ஆன்மீகக் குருக்களின் வலைப்பின்னல்களில் சீரழியும் பெண்கள்

திருப்பரங்குன்றம் பிரச்சனையில் சர்ச்சையானத் தீர்ப்பை வழங்கியவர் நீதிபதி சாமிநாதன். அவரின் ஆன்மீகத் தேர்வான சனாதன தர்மப்படியே தீர்ப்புகளை வழங்குவதாக பேசி வருபவர். அரசியலமைப்பு சட்டத்தின் பொதுவான விதிகளை மீறும் அவரின் கருத்துக்களால் ஜனநாயக சக்திகளால் தொடர்ந்து விமர்சிக்கப்படும் அவர், சமீபத்தில் ஒரு பள்ளி நடத்திய நிகழ்விற்கு சென்று, ஆன்மீகக் குருக்களை விமர்சிப்பவர்களை அயோக்கியர்கள், முட்டாள்கள் என்று பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது. அரசமைப்பு சட்டங்களை துச்சமென மதிக்கும் ஆளுநர் ரவியை போல நீதிபதி சாமிநாதனும் அடுத்த நகர்வில் வருகிறார்.

பெரும்பாலான இந்துத்துவ சாமியார்களில், பாலியல் வழக்குகளில் சிக்காதவர்கள் ஆன்மீகக் குருவாக வலம் வருகிறார்கள், சிக்கியவர்கள் பாலியல் குற்றவாளிகளாக சிறைக்குள் இருக்கிறார்கள் என்பது தான் இதுவரையிலான சாமியார்களின் வரலாறாக இருக்கிறது. நீதிபதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் போன்று மக்களிடம் அதிக செல்வாக்கு கொண்டவர்கள் பலராலும் ஆன்மீகக் குருவாக கட்டமைக்கப்படும் சாமியார்களை நம்பிச் சென்று, அவர்களால் பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளான பெண்களின், சிறுமிகளின் பட்டியல் நீளமானது..

’அசாரம் பாபு’ எனும் சாமியார், 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் 2018-ல் ஆயுள் தண்டனை பெற்றார். 2013, ஆகஸ்ட் 15 அன்று இரவு, ஜோத்பூரில் உள்ள அவரின் ஆசிரமத்தில் தீய சக்தியை விரட்டுவதாக சிறுமியை அழைத்துச் சென்று கட்டாயப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கும், 2001-2006 காலகட்டத்தில், அகமதாபாத் அருகிலுள்ள அவரது மோதேரா ஆசிரமத்தில் தங்கியிருந்த ஒரு பெண் சீடரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2013-ல் புகார் அளிக்கப்பட்டு, மருத்துவ ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட குற்றத்திற்கும் சேர்த்து இரு ஆயுள் தண்டனைகளைப் பெற்றார். சிறுமிக்கும், குடும்பத்தினருக்கும்  கொலை மிரட்டல், சாட்சிகளை அச்சுறுத்தல் போன்றவற்றை அடியாட்கள் மூலம் செய்தார். இதனால் ஆசிரமத்தில் பாதிக்கப்பட்ட பல பெண்களும் புகாரளிக்க முன்வரவில்லை போன்ற செய்திகளும் வெளிவந்தன. அசாரம் பாபுவின் மகனான நாராயணன் சாய் மீது ஒரு பெண் சீடரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடர்ந்த வழக்கில் சிறைக்கனுப்பப்பட்டார். 

’குர்மீத் ராம் ரஹீம் சிங்’ என்கிற சாமியார் ’தேரா சச்சா சௌதா’ என்ற அமைப்பின் தலைவராக இருந்தார். 2017-ல் இரு பெண் பக்தர்களை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்த அமைப்பிற்குள் நடந்தவற்றை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ’ராம் சந்தர் சத்திரபதி’ மற்றும் மேலாளர் ’ரஞ்சிங் சிங்’ ஆகியோரை கொலை செய்த வழக்குகளில் ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார். மருத்துவம், பிற காரணங்களால் பலமுறை பிணை பெற்று வெளியில் வருகிறார். மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக 500க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்களுக்கு கட்டாயமாக ஆண் விரைகளை வெட்டியதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.

’கங்கேஷனந்தா தீர்த்தபடா’ என்னும் கேரள சாமியார், கேரளாவில் பல கோயில்களில் பிரசங்கம் செய்தவர், ஒரு வழக்கறிஞர் மாணவி, சிறு வயதிலிருந்து தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, அவரின் ஆணுறுப்பை துண்டித்த வழக்கு 2017-ல் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் பல மிரட்டலுக்கு ஆளாகி அப்பெண்ணும், குடும்பத்தினரும் மாற்றிக் கூறியதாக செய்தி வெளியானது.

’சைதன்யானந்த் சரஸ்வதி’ என்பவர் ஒரு சாமியாராக மட்டுமின்றி, கர்நாடகா சிருங்கேரி மடத்தின் கீழ் இயங்கும் ‘ஸ்ரீ சாரதா’ இந்திய மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார். பெரும்பாலும் உயர்சாதி மாணவிகள் படிக்கும் இந்நிறுவனத்தில், மாணவிகளுக்கு பல வகையிலும் பாலியல் தொல்லைகளை தந்ததாக குற்றச்சாட்டு எழும்பியது. 30 மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது பாலியல் துன்புறுத்தல் பாலியல் வன்கொடுமை, மிரட்டல், கட்டாய உடலுறவு போன்றவற்றால் 17 மாணவிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். 2025- ஆக்ராவில் கைது செய்யப்பட்டார். வழக்கு தொடர்கிறது.

’நித்தியானந்தா’ என்னும் சாமியார் 2010-ல் ஒரு நடிகையுடன் தகாத உறவு கொண்ட காணொளி வெளியானது. பல பெண்கள் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். காவல் துறை தேடலில் அகப்படாமல், தற்போது தனித்தீவு வாங்கி பெண் பக்தைகள் சூழ ஆன்மீகக் குருவாகவே வலம் வருகிறார்.

’பிரேமானந்தா’ என்னும் சாமியார் 1990களில் திருச்சியில் நடத்தி வந்த  ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுமிகள் மீது தொடர்ந்து பாலியல் கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. தெய்வீக சக்தி உள்ளவன் என்று ஏமாற்றி, பாலியல் உறவு கொண்டதாக கூறப்பட்டது. கர்ப்பமான பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து, சாட்சிகளை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது. 1994ல் அங்கிருந்து தப்பி வந்த ஒரு சிறுமி மூலம் இந்த தகவல்கள் அம்பலமாயின. அதன் பிறகு கைது செய்யப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2011-இல் பிரேமானந்தா கல்லீரல் வியாதியால் மரணம் அடைந்தார். 

’புட்டபர்த்தி சத்ய சாய் பாபா’ என்னும் சாமியார் இளையவர்களான ஆண் பக்தர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டுகள் கூறினர். ஆனால் அவரின் செல்வாக்கினால் எந்த வழக்கும் பதியப்படவில்லை. பிபிசி தொலைக்காட்சி இவரை குறித்து ‘The Secret Swami’ என்கிற ஆவணப்படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

’சிவசங்கர் பாபா’ என்னும் சாமியார் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் ஆவார். இவரின் மீது அப்பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு வைத்தனர். 2021 இல் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் வீடியோ காலில் ஆபாச செய்கைகள், அருவருப்பான குறுஞ்செய்திகள், தொடுதல் போன்ற பாலியல் சீண்டல், தானே கடவுள் என்று மூளைச் சலவை செய்தல் போன்றவை குற்றச்சாட்டுகளாக இருந்தன. அவரின் பக்தைகளுக்கும் இதில் பங்கிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. அவர் மீதான ஒன்பது வழக்குகளில் ஒரு சிலவற்றில் பிணை வழங்கப்பட்டாலும், மற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியாராக இருந்த ஜெயேந்திரரின் பாலியல் லீலைகள் குறித்து பிரபல எழுத்தாளரான ’அனுராதா ரமணன்’ கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் அனைவரையுமே அதிர வைத்தது. 1992-ல் ஜெயேந்திரர் துவங்கவிருந்த அம்மா என்ற இதழின் ஆசிரியர் பணிக்கு சந்திக்க சென்றதாகவும், அங்கு மைதிலி என்ற பக்தையுடன் அவர் பாலியல் உறவு கொண்டிருந்ததைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்த தன்னிடமும் பாலியல் சீண்டல் செய்ததாகவும் அவர் பகிரங்கப்படுத்தினார். அந்த பக்தை ஜெயந்திரர் தொடுவது அதிர்ஷ்டம் எனக் கூறியதாகவும், மறுத்து வெளியே வந்த போது ஜெயந்திரர் இந்த விசயம் வெளியே தெரியக்கூடாது என மிரட்டியதாகவும் வெளிப்படுத்தி இருந்தார். இந்தத் தகவல்களை 2004-ல் காஞ்சி சங்கர மடத்தில் சங்கரராமன் என்னும் ஆடிட்டர் கொலை செய்யப்பட்ட காலத்தில், தன்னிடம் பேட்டி எடுக்க வந்த நிருபரிடம் கூறியிருந்தார்.

இப்படி ஆன்மீக குருக்கள் என உயர் வர்க்கத்தினரால் அடையாளப்படுத்தப்பட்டு சாமானியர்களால் நம்ப வைக்கப்பட்ட சாமியார்களின் அட்டூழியம் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் கூட தொடர்ந்தது. ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு தியானம், யோகா கற்றுக் கொடுப்பதாக பல பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் செய்யப்பட்டதாக ”பிக்ராம் சௌத்ரி, முக்தானந்தா, ராமா, யோகி பாஜன், அம்ரித் தேசாய், அகண்டானந்த்” போன்ற பலரின் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை இவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையின் ’ஜக்கி வாசுதேவ்’ சாமியார் நடத்தும் ஈஷா யோகா மையம் மீதும் பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. சமீபத்தில் யோகா பயிற்சிக்கு வந்த சுமதி என்ற பெண் அங்கிருந்து தப்பித்து ஓடி வந்த காட்சிகள் காணொளியாக வெளிவந்தன. அடுத்த நாள் அவர் ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தார். 2025, பிப்ரவரியில் யோகா மையத்தின் ஊழியர்கள், சிறுவர்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த வழக்குகள் யாவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.

சமீபத்தில், ’ஜோதிர்மட் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த்’ இளைய சீடர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச அரசு பொய் வழக்கு புனைந்துள்ளதாக இவர் கூறியதும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது.

இவ்வாறு, உயர் வர்க்கத்தினரால் ஆன்மீகக் குருக்கள் என அழைக்கப்படும் இந்த சாமியார்கள் நடத்தும் ஆசிரமங்களில், மடங்களில் பல நாட்களாகவோ, வருடங்களாகவோ பெண்கள், சிறுமிகள் பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கும் செய்திகள் எப்போதாவது வெளி உலகத்துக்கு தெரியும் நாள் வரை அங்குள்ள பெண்களின் நிலை பலருக்கும் தெரிய வருவதில்லை. ஒரு மூடுவெளியாகவே சாமியார்களின் ஆசிரமங்கள் உள்ளன. உயர் வர்க்கத்தினரின் ஆன்மீகத் தேடலை பூர்த்தி செய்யும் சாமியார்களை உயர்த்திப் பேசி, சாமானியர்களுக்கும் அவர்கள் மீது நம்பிக்கை வரவைக்கும் ஆன்மீகக் கட்டமைப்பை உயர்வர்க்கத்தினர், பிரபலங்கள் செய்கின்றனர். இதனால் இந்த வலைப்பின்னலுக்குள் சாமியார்களின் பாலியல் இச்சைக்கு பெண்கள், சிறுமிகளே இலக்காகின்றனர்.

ஒரு தனித்தீவில் சிறுமிகளை உலகத்தின் செல்வாக்கு கொண்டவர்களின் பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்திய சர்வதேச பாலியல் தரகன் ’எஃப்ஸ்டீன்’ செய்த வன்கொடுமைகளை வெளிப்படுத்தும் எஃப்ஸ்டீன் பைல்ஸ் போலவே, இங்கும் பல ஆசிரமங்களில் பெண்களுக்கு நடக்கும் அட்டூழியங்கள் வெளிவந்த பின்பும் ஆன்மீகக் குருக்களை விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.   

தமிழர்களின் வழிபாடு என்பது ஆன்மீக குரு என்னும் இடைத்தரகன் இல்லாதது. இயற்கையை, முன்னோர்களை, வீரர்களை வணங்கும் முறைமையைச் சார்ந்தது. நடுகல் வைத்து வழிபடும் பண்பாடு கொண்டது. பிரம்மாண்ட ஆசிரமங்களைக் கட்டி சுகவாழ்க்கை வாழும் கார்ப்பரேட் சாமியார்களை ஏற்காதது. உளப்பூர்வமாக நெஞ்சுருகி தனக்கும் தெய்வத்துக்கும் இடையே நடக்கும் மௌன உரையாடல் தன்மையே தமிழர்களின் வழிபாடு. இந்து மதம் தமிழர் தெய்வங்களை ஆக்கிரமித்து, இந்துத்துவ சாமியார்களைத் தரகனாக நியமித்துக் கொண்டது.

இந்தக் கட்டமைப்பை வலுப்படுத்தவே சனாதனத்தை உயர்த்திப் பிடிக்கும் உயர் வர்க்கத்தினர் ஆன்மீகக் குருக்கள் என்னும் சாமியார்களை வளர்க்கின்றனர். இவர்களை அம்பலப்படுத்துபவர்களே பகுத்தறிவாளர்கள். சாமியார்களை நம்பி ஏமாறும் மக்களை விழிப்பூட்டி தடுப்பவர்கள். அதனாலேயே ஆன்மீகக் குருவை வணங்குபவர்களை காட்டுமிராண்டி, முட்டாள், அயோக்கியன் என சொல்லும் பகுத்தறிவாளர்களே, இந்த வசைச் சொல்லுக்கு உரியவர்கள் என்று நீதிபதி சாமிநாதன் குறிப்பிடுகிறார்.

ஆன்மீகக் குருக்கள் என்னும் சாமியார்கள் நம்மவர்களுமல்ல; நம் வழிபாட்டு முறைக்கு ஏற்றவர்களும் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »