இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மே பதினேழு இயக்கத்தின் மொழிப்போர் குறித்தான ஊடக சந்திப்பு

ஒன்றிய அரசின் துறைகளில் ஆதிக்க இந்தியைத் திணிக்கும், ஒன்றியப் பணியிடங்களில் இந்திக்காரர்களைத் திணிக்கும் பாஜக மோடி அரசைக் கண்டித்து, மே பதினேழு இயக்கம் முன்னெடுத்த இந்தி அழிப்புப் போராட்டம் குறித்து மார்ச் 18, 2026 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நடத்திய ஊடக சந்திப்பு:

ஒன்றிய அரசின் மொழித்திணிப்பை எதிர்த்து மே பதினேழு இயக்கம் முன்னெடுத்த ஆதிக்க இந்தியை எதிர்க்கும் போராட்டம் குறித்து மார்ச் 18, 2026 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நடந்த ஊடக சந்திப்பு:

இந்தி மொழியை திணிக்க கூடாது, தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நிறுவனங்களில் இந்தியை தாய்மொழியாக கொண்டிருக்கக்கூடிய மாநிலத்தை சார்ந்தவர்களுக்குதான் முன்னிலை கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசு நிறுவனங்களில் இந்தியை முதன்மைப்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது. சிறுக சிறுக இந்தியை முன்னிலைப் படுத்துவதும், தமிழுக்கான இடத்தை பின்னுக்கு தள்ளுவதுமான பணிகள் நடந்து வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து கடந்த ஆண்டு 2025-ல் மொழிப்போர் ஈகியர் தினத்தன்று, மே 17 இயக்கம் இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும். ஆகவே இந்தி திணிப்பை உடனடியாக இந்திய அரசு மோடி அரசு கைவிட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம்.

ஆனாலும் தொடர்ச்சியாக இந்தி மொழி திணிப்பை பாரதி ஜனதா கட்சி நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் ரயில் நிலையங்களில் தமிழ் பெயர் இருக்கக்கூடிய இடங்களில் இந்தியை திணித்து தமிழை பின்னுக்கு தள்ளுகின்ற வேலையை ரயில்வே நிர்வாகம் செய்திருக்கிறது. அப்பொழுதும் கூட நாங்கள் இதற்கான எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தினோம். இதற்கான கூட்டங்களை நடத்தி பரப்புரையை மேற்கொண்டோம். இந்த ஆண்டு(2026) மொழிப்போர் ஈகியர் தினத்தன்று பல்வேறு கூட்டங்களை பல ஊர்களில் நடத்தினோம்.

உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21ஆம் தேதி மோடி வருகையின் பொழுது, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலே நாங்கள் ஒரு முற்றுகை போராட்டத்தை நடத்தினோம். ரயில் நிலையங்களில் எழுதப்பட்டிருக்கக்கூடிய இந்தி வார்த்தைகளை நீங்கள்(ஒன்றிய அரசு) உடனடியாக பின்னுக்கு தள்ளி, தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மே 17 இயக்கம் கோரிக்கை வைத்து முற்றுகை போராட்டத்தை நடத்தியது. ஆனால் அதற்குப் பிறகும் அதே மொழி திணிப்பு நடந்து கொண்டிருந்தது. மறுபடியும் மார்ச் 1, 2026 அன்று கோயம்புத்தூர் ரயில் நிலையம் மற்றும் சிதம்பரம் ரயில் நிலையம் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மீண்டும் ஒரு முற்றுகை போராட்டத்தை நடத்தியது. இப்படி தொடர்ச்சியாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை மே பதினேழு இயக்கம் நடத்தி வருகிறது. தொடர்ச்சியாக நாங்கள் கோரிக்கை வைத்தும் நினைவுபடுத்தியும் கூட மோடி அரசு இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பல துறைகளில் இந்தியை திணிக்கிறார்கள்.

இதில் இந்தி திணிப்பு என்பது கடந்த காலத்திலிருந்து ஒரு மாறுபட்ட உச்சபட்ச வடிவத்தை அடைந்துள்ளது. அது என்னவெனில் இந்தியை படித்தால் வேலை என்று சொல்லி இந்தியை திணிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இந்தி படித்த மாநிலத்திலிருந்து எத்தனை பேர் வேலைக்கு வந்துள்ளனர் என்று பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசினுடைய வேலைகளில் ரயில்வே துறை, வங்கி துறை, வரிதுறை, சுங்கத் துறை போன்று எந்த துறையை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், அந்த துறையில் எல்லாம் தமிழர் அல்லாத ’இந்தி’ பேசுகின்ற மாநிலத்திலிருந்து ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

அதற்கு உதாரணம் ரயில் நிலையத்தில் உள்ள அதிகாரி (station master) இருந்து சீட்டு வழங்குமிடம் (ticket counter) இருந்து எல்லா இடத்திலும் இந்தி பேசுகின்ற ஆட்களைதான் நாம் பார்க்கின்றோம். இதை நான்(திருமுருகன் காந்தி) சொல்லி தெரிய வேண்டியதில்லை. எல்லாருக்கும் தெரியும். தபால் நிலையத்திலும், வங்கிகளிலும் இதே நிலைமைதான் இருக்கிறது. பல துறைகள் இதே நிலைமையாக இருக்கிறது. நாம் என்ன கேட்கிறோம் எனில், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்லக்கூடிய அரசு, இந்த வேலைகளில் இந்தி படித்து இந்தியை தாய்மொழியாக கொண்டிருக்காத மாநிலங்களை சார்ந்தவர்களிலிருந்து யாரும் வேலைக்கு எடுக்கவில்லை. அதாவது இந்தியை படிப்பான். இந்தி கட்டாய பாடமாக இருக்கக்கூடிய மாநிலமாக இருக்கும். அவனுக்கு இந்தி தாய்மொழி இல்லாமல் இருக்கும். ஆனால் இந்தி தெரியும். அவனெல்லாம் இங்கு தமிழ்நாட்டில் அல்லது பிற மாநிலங்களில் அவனுக்கு வேலை கிடைப்பதில்லை, மாறாக இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலத்தில் இருப்பவனுக்கு மட்டும்தான் இந்த வேலைகள் ஒதுக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் தேவைப்படுகின்ற தமிழருக்கான பணியிடங்கள் எல்லாம் முழுக்க முழுக்க இந்தி மாநிலத்தை சார்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் இடங்கள் ஒன்றிய அரசினுடைய பணியிடங்கள் இவ்வாறு நிரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிப்போய்க்கொண்டிருக்கிறது. இதை எச்சரிக்கும் விதமாகத்தான் நாங்கள் இந்திக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில், எஸ்எஸ்சி கமிஷன் வேலைவாய்ப்புக்கு (உதாரணத்திற்கு ரயில்வே எடுத்து கொண்டால் மண்டலவாரியாகதான் தேர்வு நடத்தப்படும்). மண்டலவாரியாக தேர்வு நடத்தி, அந்தந்த மாநிலங்களுக்குரிய இடங்கள் அந்தந்த மாநிலத்தை சார்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படக்கூடிய நிலைமைதான் கடந்த காலத்தில் இருந்தது. ஆனால் இன்றைக்கு இந்திய அளவில் தேர்வு வைக்கிறார்கள். ”ஒரே நாடு ஒரே தேர்வு” அந்த அடிப்படையில் வைத்து, இந்தி பேசாத மாநிலத்திற்கும் பிரதித்துவம் இல்லை என்கின்ற அடிப்படையில் குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்களுக்கு/ இளைஞர்களுக்கு ஒன்றிய அரசின் வேலைகளில் இடமில்லாத நிலைமை உருவாக்கி இருக்கிறார்கள்.

நாம் அதைதான் கேட்கிறோம். மண்ட அளவில் இருந்த தேர்தல், தற்போது இந்திய அளவில் தேர்தலாக மாற்றப்படுகிறது. இந்திய அளவில் தேர்தல் நடத்திவிட்டு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகிறது. இதற்கு இதுவரைக்கும் பாஜக அரசு பதில் சொல்லவில்லை. தமிழ்நாட்டில கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பணியிடங்கள் ஒன்றிய அரசு பணியிடங்கள் இருக்கிறது. இரண்டு லட்சம் பணியிடங்களில் பெரும்பாலான இடங்கள் இந்தி பேசுகின்ற மாநிலத்தை சார்ந்தவர்களாக கொடுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல ரயில்வே நிலையங்களில் இந்தி பேசுகின்ற மாநிலத்தில் இருக்கிறவர்களுக்குதான் இடம் இருக்கிறது. இந்தி பேசுபவன்தான் இங்கே ரயில்வேயில் வேலைக்கு வைத்திருக்கிறான். இந்தியை தெரிந்து கொண்டு இந்தியை கட்டாய பாடமாக எடுத்து கொண்டிருக்கக்கூடிய, இந்திய தாய்மொழியாக இல்லாத மாநிலமாக பஞ்சாப், மேற்குவங்கம், மகாராஷ்டிரா இருக்கிறது. ஆனாலும் இந்த மாநிலங்கள் எல்லாம் இந்தியை ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்தி மொழியை இந்த மாணவர்கள் கட்டாயமாக படிக்கிறான். ஆனாலும் இவனுக்கு கூட ஒன்றிய அரசில் வேலை கிடையாது.

எல்லா இடத்திலும் இந்தி பேசக்கூடிய ஆள் யாரு என பார்த்தால், இந்தி தெரிந்தவன் அல்ல. இந்தியை தாய்மொழியாக வைத்திருக்கும் மாநிலத்தை சார்ந்தவன்தான் இங்கே வேலை இருக்கிறது. அவன் இந்தியை பேசக்கூடிய பீகார், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் அல்லது அரியானாவிலிருந்து இருக்கிறான்.

அப்போது இந்தியை கட்டாய பாடமாக எடுத்து படிக்கிறவனுக்கும் இதுதான் நிலைமை. ஒரே ஒரு கேள்விதான் இந்தியை கட்டாயப்படமாக எடுத்து படிக்கக்கூடிய பஞ்சாப்பிலிருந்து எந்த சிங்கு தமிழ்நாட்டில் வேலை செய்கிறான். சீக்கியரை யாராவது பார்த்துள்ளீர்களா? இல்லை. மீண்டும் கூறுகிறேன் இந்தியை தாய்மொழியாக கொண்டிருக்கிறவனுக்குதான் இங்கு வேலை என்பதாக இருக்கிறது. அதனால்தான் இந்தியை எல்லா இடத்திலும்  நிறுத்துகிறான். எல்லா இடத்திலும் இந்தி எழுத்துக்களாக இருக்கிறது. அதனால் இந்தியில் மட்டும் பெயர் வைக்கிறான். இந்தியில் பெயர் வைக்க கூடியதை தமிழில் எழுதி காண்பிக்கிறான். அப்போது தமிழில் தெரிந்தவன் கூட அந்த பேரை படிக்க முடியாது. இந்த லட்சணத்தில்தான் இங்கே தமிழை வளர்க்கிகிறோம் என்று பிஜேபி நாடகம் நடத்துகிறது.

மோடி எல்லா இடத்துக்கும் சென்றால் தமிழை புகழ்கிறேன் என வாய்க்கிழிய பேசுகிறார். ஆனால் எல்லா இடத்திலும் ஏன் இந்தி திணிக்கப்படுகிறது? என்பதற்கான பதில் இல்லை. அதற்கான எதிர்ப்பு தெரிவிக்கின்ற விதமாக இந்தியை அழிக்கின்ற போராட்டத்தை கடந்த புதன்கிழமை மார்ச் 11, 2026 ஆம் தேதி முதல் மொழிப்போர் ஈகியர் தாலமுத்திவினுடைய நினைவு நாளில் இந்த போராட்டத்தை தொடங்கினோம்.

அந்த போராட்டம் இப்பொழுது தீவிரமடைந்து தமிழ்நாடு முழுவதும் இந்தி எழுத்துக்கள் ரயில் நிலையங்களில் அழிக்கப்படுகின்றன. இது வெறும் மொழி எழுத்தை அழிக்கின்ற வேலை மட்டும் இல்லை, இந்தியை திணிப்பதற்கு எதிரான இந்த போராட்டம் என்பது: மோடி அரசே! எங்கள் இளைஞனுக்கான வேலை என்ன ஆனது? ஒன்றிய அரசு நிறுவனங்களில் எல்லாம் இடங்களிலும் இந்திக்காரனை அரசு வேலைக்கு உட்கார வைக்கிறாய், தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் ஸ்விக்கி, சொமாட்டா ஓட்டுவதுதான் வேலையா? அவனும் எம்பிஏ,பி.இ போன்ற உயர் கல்வி படித்துள்ளான். அதிகாரிகளாக யார் நியமனம் செய்யப்படுகிறது என்றால், இந்தி மாநிலத்தை சார்ந்தவர்கள், இந்தியை தாய்மொழி கொண்டிருக்க மாநிலத்தை சேர்ந்தவன்தான் நியமனம் செய்யப்படுகிறான்.

அதனால் நம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பறிப்போகிறது. உத்தரப் பிரதேசத்தில இந்தி பேசக்கூடிய ஆள் இருந்தார்கள் எனில், அது அவங்களுடைய உரிமை. அதை செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டில் எதற்கு இந்தி பேசக்கூடிய மாநிலத்திலிருந்து கொண்டு வந்து ரயில்வே, வங்கி, வேலைக்கு போடுகிறாய்? தற்போது கூட திருவாரூர் ’கனரா’ வங்கியினுடைய படிவம் இந்தியில் இருக்கிறது. இதே லக்னோவிலோ, டெல்லியிலோ தமிழில் விண்ணப்பம் வைப்பார்களா? எங்கேயும் கிடையாது. ஆக தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் இந்தியை திணிக்கக்கூடிய வேலையை திட்டமிட்டு செய்கிறது. இந்திக்காரனுக்கு வேலை கொடுப்பதும், இந்தி மொழியை திணிப்பதும் அவன் வசதிக்கு எல்லாத்தையும் பாஜக அரசு செய்கிறது.

தந்தை பெரியார் அன்றைக்கு மொழி திணிப்பு என்பது வெறும் மொழி திணிப்பு மட்டுமல்ல. அது பண்பாட்டை,  வேலைவாய்ப்பை, வாழ்வாதாரத்தை, கல்வியை போன்று எல்லாமே நாசப்படுத்துவது என்றார்.

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என சொல்வது எல்லாம் பித்தலாட்டம். நான் கேட்கறேன் பஞ்சாப், மேற்குவங்கம், அசாம் போன்ற மாநிலத்திலும் இந்தி கட்டாயப்படம்தான், அதில் ஏதாவது ஒருவன் அங்கிருந்து வேலைக்கு வந்து பார்த்திருக்கிறோமா? எல்லாம் உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், அரியானவிலிருந்தும் வந்திருக்கிறான். இந்தி கட்டாய பாடமாக எடுக்கும் மாநிலத்திலிருக்கும் எவனுக்கும் வேலை கிடையாது. ஏன்? அவன் எல்லாம்  இந்தி படிக்க வேண்டுமெனில், இந்திக்காரனுக்கு வேறு மொழி படிப்பதற்கு அறிவு கிடையாது. அவனுக்கு இந்தி மட்டும் தான் தெரியும். அவன் வசதிக்கு நாமெல்லாம் இந்தியில் பேச வேண்டும். அவன் வேறு மொழி கற்றுக்கொள்ள மாட்டார். அவர்கள்க்கு வசதியாக உட்காந்து கொண்டு தாய்மொழியில் தேர்வு எழுதுவார்கள்.

இன்றைக்கு ஒன்றிய அரசு நிறுவனங்களில்/ கல்வி நிறுவனங்களில் நடத்தக்கூடிய தேர்வுகள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் நடத்தப்படுகிறது. நம் பிள்ளைகளுக்கு இண்டுமே அந்நிய மொழியில் தேர்வு எழுத வேண்டிய இருக்கிறது. ஆனால் இந்திக்கான்ர பிள்ளைகள் அவன் தாய் மொழியில் தேர்வு எழுத முடியும். அப்போது தாய்மொழியில் தேர்வு எழுதுகிறவன் தேர்ச்சி பெறுவானா? அந்நிய மொழியில் எழுதக்கூடிய பிள்ளைகள் தேர்ச்சி பெறுவார்களா? இப்படி எல்லா இடத்திலும் இந்திய திணித்துகொண்டே இருந்தால் எங்கள் பிள்ளைக்கு எங்கு இடம் இருக்கிறது?

எங்களுடைய (மே 17) போராட்டமே எங்கள் மாணவர்களுக்கும், எங்கள் குழந்தைகளுக்கும், எங்கள் இளைஞர்களுக்கும் எதிர்காலம் என்ன? அதை கேட்பதற்காக வந்திருக்கிறோம். அதற்குதான் இந்தி அழிப்புப் போராட்டம் நடக்கிறது. இந்தியை ஒழித்துக் கட்டும் வரைக்கும் விட மாட்டோம். எங்களுடைய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி பண்ண வேண்டும்.

சோத்து மூட்டைய தூக்கிக்கொண்டு சுவிகி, சொமாட்டா ஓட்டுவதுதான் எங்கள் பிள்ளைகள் இருக்கிறார்களா? எங்கள் இளைஞர்கள் எல்லாம் அதற்குதான் பொறியியல் படித்தார்களா? இதற்காகவா பெற்றோர்கள் எல்லாம் கல்வி கடனை வாங்கி, ஆடு மாடு வீடு எல்லாம் விற்று படிக்க வைத்தது? சுவிகி, சொமாட்டா ஓட்டக்கூடிய நிலைமை ஏன் வந்தது? அரசாங்கத்தில் வேலை இல்லை, அரசாங்கம் வேலை தடை செய்யப்படுகிறது. அதிகாரம் கிடைக்கக்கூடிய பதவிகளில் தமிழர் இருக்கிறானா?

கிட்டத்தட்ட 20 நகரங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் செய்துள்ளோம், அதில் எங்களை கைது செய்த ரயில்வே காவல்துறையினர் ஒருவர் கூட தமிழர் இல்லை, எந்த ரயில் நிலையங்களில் தமிழரே கிடையாது. தமிழாள் கிடையாது. ரயில்வே போலீஸ் இங்குதான் வேலை பார்க்கிறார்கள். ஆனால் இங்கு இருக்கின்ற எல்லா பயணிகளும் தமிழர்கள். பயணிகளின் உடைய தேவை என்ன? என பேசி தெரிந்துக்கொள்வதற்கான தமிழ் ஆள் கூட ரயில்வே போலீஸ் வேலை செய்ய முடியவில்லை. ”கடைநிலை பணி, குரூப் டி பணி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி, பிஆர்பி, ஐசிஎஃப், எல்.ஐ.சி, பெல், ஆவடி தொழிற்சாலை, வங்கிகள் போன்ற எதிலும் தமிழர் கிடையாது.

அப்போது இந்த நாட்டுக்கு எதற்கு வரி கட்டுகிறோம்? எங்க பிள்ளைகளுடைய எதிர்காலம் என்ன ஆனது? எங்கள் குழந்தைகளுடைய வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக களத்தில் நிற்கிறோம். தமிழ் மொழியை காக்கவும், தமிழ் இளைஞருடைய வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான போராட்டம் தேவை. அந்த போராட்டத்தில்தான் எங்களுடைய தோழர் சிவா திலீபன் அவர்கள் இந்த பிரச்சனைகள் தொடர்ச்சியாக ஒன்றரை ஆண்டுகளாக பேசி பேசி வெதுமினார்.

தமிழ்நாட்டினுடைய குழந்தைகள் எதிர்காலத்திற்காக, அன்னை தமிழை காப்பாற்றுவதற்காக போராட்ட களத்திற்கு வரவில்லையே, இவர்களை போராட்ட களத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று தன் உயிரை கொடுக்கக்கூடிய செயலில் இறங்கிவிட்டார். தற்போது மிக மோசமான நிலையில் காயம் ஏற்பட்டு அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவர் இது போன்ற முயற்சிகளை செய்யக்கூடியவர் அல்ல, தன் உயிரை கொடுப்பது என்பது தேவையற்றது கொடுக்க கூடாது என்று சொன்னவர். எங்களுடைய எல்லா தோழர்களுக்கும் அப்படிப்பட்ட அறிவுரை கொடுத்தவர். அவர் இந்த எல்லைக்கு செல்வார் நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தன் உயிரை கொடுக்க வேண்டும் என்று தலையில் பலத்தை காயமடைந்து ரயிலில் மிக மோசமாக அடிபட்டு, அவரை மருத்துவமனைக்கு வழியில் கூட ”தமிழ் தமிழ்” என்றுதான் பேசிக்கொண்டிருந்தார். அவர் இறுதியாக நினைவு இருக்கின்ற சமயம் வரை அவர் பேசிய வார்த்தை தமிழ். ரயில் முன்னால் அவர் பாய்வதற்கு முன்பு அவர் முழக்கமிட்டது ”தமிழ் வாழ்க” என்பதுதான். தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு இழிவு நடக்கிறது. தமிழ் இளைஞனுக்கு வேலை கிடைப்பதில்லை. இதற்காக தமிழ்நாடு எழுந்து நிற்காதா? என்றுதான் இவ்வளவு ஒரு துணிவான முடிவு எடுத்திருக்கிறார். அந்த முடிவில் நாங்கள் உடன்படுவதில்லை. தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக உடன்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இதற்கான குரல் வலுபெற வேண்டும், எழ வேண்டும். கட்சி கடந்து எழ வேண்டும். நாங்கள் அதைதான் சொல்கிறேன்.

இந்திய எதிர்ப்பு போராட்டம் என்பது இது ஒரு தனி கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல, இந்த கட்சிகள் எல்லாம் வருவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட பிரச்சனை, கேள்வி எழுப்பப்பட்ட கோரிக்கை, நடந்து கொண்டிருக்கக்கூடிய போராட்டம் அது. அதனுடைய தொடர்ச்சிதான் 100 ஆண்டுகளாக நடக்கக்கூடிய போராட்டத்தின் தொடர்ச்சிதான், நாங்களும் முன்னெடுக்கின்றோம். இந்திய அழிப்பு போராட்டம் தொடரும். எந்த இடத்திலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

நாங்கள் கட்சிக்காகவோ தேர்தலுக்காகவோ நிற்க கூடியவர்கள் கிடையாது. எங்களுக்கும் இந்தியை திணிக்கக்கூடிய ஒன்றிய பாஜக அரசிற்குமான இந்த முரண்பாட்டில், ஒரு அடி கூட நாங்கள் பின்வாங்க போவது இல்லை.

தமிழ்நாட்டில் தமிழ் இளைஞர்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டில் திணிக்கப்படுகின்ற இந்தி எல்லாம் அகற்றப்பட வேண்டும். இந்தி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களை பின்னுக்கு தள்ளிவிட்டு எங்கெல்லாம் எழுதப்பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் மாற்றப்பட வேண்டும். தமிழ் இளைஞர்களுக்கும் தமிழ் மொழிக்கும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்றால், இந்த போராட்டம் தொடர்ச்சியாக நடக்கும். எந்த இடத்திலும் நான் நிறுத்த போவதில்லை. அதற்கான தேவையும் எங்களுக்கு இல்லை. இதில் பொதுமக்கள் வந்து பங்கெடுக்க வேண்டும், இளைஞர்கள் பங்கெடுக்க வேண்டும், மாணவர்கள் பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும். உங்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.

அவன் ஊரில் அவன் மொழியை திணித்தால் பிரச்சனை இல்லை. நம் ஊரில் எதற்கு திணிக்கிறான்? எங்கள் ஊரில் எதற்கு இந்தி? ஊர் ஊராக சென்று ‘நான் தமிழ் மொழி சிறந்தது’ என மோடி பேசுகிறாரே, அது போதுமா? ஆனால் சமஸ்கிருதத்துக்கு இந்திக்கு மட்டும் தான் நிதி அதிகமாக ஒதுக்குகிறார், தமிழ் மொழிக்கு ஒதுக்கவில்லை. ஐந்து வருடத்துக்கு முன்பு 2019 தேர்தல் வந்தபோது ”தமிழ்நாட்டுக்குள் பறக்கக்கூடிய விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்ய வைப்பேன்” என்று வாக்குறுதி கொடுத்து சென்றவர் நரேந்திர மோடி. ஆறு வருடம் ஆகிவிட்டது, எங்கே போனது உங்கள் வாக்குறுதி? ஒன்றும் இல்லையே. விமானத்தில் போகக்கூடியவனுக்கு தமிழ் மொழி மட்டும்தான் தெரியும், ஆங்கிலமோ, இந்தியோ தெரியாது எனில், ஏதோ அந்த விமான விபத்துக்குள் உள்ளானால், அவன் இறந்து போகனுமா? அவர்களுக்கு இந்த அடிப்படை உரிமை இல்லையா? உயிர் காக்கக்கூடிய அந்த குறிப்புகளை அவனுக்கு எந்த மொழி தெரிய வேண்டுமோ அந்த மொழி அறிவிக்க கூடாதா?

நான் ஐரோப்பாவில் பயணம் செய்திருக்கிறோம். சின்ன சின்ன நாடுகளை கடக்கும் பொழுது எந்த நாட்டில் இருக்கக்கூடிய பயணிகள் எந்த நாட்டிலிருந்து விமானம் கிளம்புகிறதோ, எந்த நாட்டுக்கு செல்கிறதோ, அந்த இரண்டு நாடுகளினுடைய மொழியில் தான் அறிவிப்பு இருக்கும். இது அடிப்படை மனித உரிமை. அவன் உயிர் காக்கக்கூடிய நடவடிக்கை எப்படி தெரிந்து கொள்ளனும் என்பதை அவனவன் தாய் மொழியில் சொல்ல வேண்டும். இது விமான நிலையத்துடைய விமானத்தை இயக்கக்கூடிய பொறுப்பு. அதையெல்லாம் தடை செய்து தமிழ் மக்களுக்கு தமிழ் பயணிகளுக்கு இவ்வளவு கொடூரமாக ஒரு மனித உரிமை மீறல் செய்து வருகிறார்கள்.

ஆங்கிலம் தெரியாதவன் இந்தி தெரியாதவன் விமானத்தில் போகக்கூடாது என ஏதாவது சட்டம் வைத்துள்ளார்களா? பிறகு எதற்கு இந்தியில் பேசுகிறார்கள்? ஏன் தமிழில் பேச மறுக்கிறார்கள்? சென்னையிலிருந்து மதுரைக்கு போகக்கூடிய விமானம், சென்னையில் இருந்து தூத்துக்குடி திருச்சி சேலம் கோவை தமிழ்நாட்டுக்குள் பறக்கக்கூடிய எந்த விமானத்திலும் தமிழில் அறிவிப்பு கிடையாது. இதைவிட பச்சை அயோக்கியத்தனம் வேறு என்ன இருக்கிறது? இதையெல்லாம் தெரிந்துதான் மோடியே சொன்னார்: தமிழில் நாங்கள் அறிவிப்பு செய்கிறோம் என, அப்போது மோடிக்கே தெரிகிறது அல்லவா!, இருப்பினும் தாய் மொழியில் அறிவிப்பு இல்லை. இதை ஆறு/ ஏழு வருடமாக ஏன் செய்யவில்லை? என கேட்கிறோம்.

ஆக இந்த மொழிப்போர் ஓயாது, ஒரு நாளும் பின்வாங்காது. நீங்கள் எல்லோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இது எல்லாருடைய பிரச்சனை. எனவே எல்லோரும் கைகோர்த்து நிற்க வேண்டும், கட்சி கடந்து நிற்க வேண்டும், தமிழினம் எழுந்து நிற்க வேண்டும். இந்த அந்நிய மொழி திணிப்பை அடித்து விரட்ட வேண்டும் ஆதிக்க இந்தியை வெட்டி புதைக்க வேண்டும். ”தமிழ் வாழ்க, இந்தி ஒழிக” என்கின்ற முழக்கம் தமிழ்நாடு முழுவதும் எழ வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.

பத்திரிகையாளர் கேள்வி: தேர்தல் வந்ததாலே ’மே 17 இயக்கம்’ இந்தி திணிப்பை உள்ளே கொண்டு வந்துவிடுகிறார்கள் என தமிழிசை விமர்சனம் வைக்கிறார்களே?

தோழர் திருமுருகன் காந்தி பதில்: எங்களுக்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்? நாங்களெல்லாம் தேர்தலில் போட்டியிடவில்லை என் தமிழிசை அம்மா அவர்களுக்கு தெரியுமா? நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என எங்கள் இயக்கம் சொல்லியுள்ளது. தமிழிசை அவர்களுக்கு அந்த அறிவு இருக்கிறதா? என எனக்கு தெரியாது.

கேள்வி: திமுக ஆதரவாக செயல்படுகிறீர்கள், அதனால்தான் இந்த ’இந்தி எதிர்ப்பு’ என சொல்கிறார்களே?

பதில்: மொழி போர் என்பது கட்சி கடந்தது. நான் ஒன்று கேட்கிறேன்: நாங்கள் இந்தி எதிர்ப்புதான் செய்கிறோம். இது ஏன் பாஜகவுக்கு பிரச்சனை ஆகிறது? இதில் தமிழிசைக்கு என்ன பிரச்சனை? அப்போது அடிப்படையில் தமிழிசைக்கு இந்தி திணிக்கப்படும் விருப்பம் இருக்கிறது என வெளிப்படையாக சொல்லிவிட்டார்கள்., அவர்கள் ’ஆமாம் இந்தி வேண்டாம்’ என சொல்ல வேண்டும் அல்லவா!, இதில் என்ன தவறு வர போகிறது?

அவர்கள் தமிழ்நாட்டு நலனுக்கு தானே பேச வேண்டும், எதற்கு டெல்லி நலனுக்காக தமிழிசை எதற்கு பேச வேண்டும்? அப்படியெனில் அவரை ’டெல்லியிசை அல்லது இந்தியிசை’ வேண்டுமானால் பேரை வைக்க சொல்லுங்கள், யார் வேண்டாம் என்றார்கள்? முதலில் தமிழ்நாட்டு நலனுக்கு பேசுங்கள். உங்கள் கட்சி நிலைப்பாடே எங்களுக்கு எதற்கு? அது எங்களுக்கு தேவையில்லை.

”இந்தி வேண்டாம், தமிழ் வேண்டும்” என்று சொல்வது திமுகவோட கோரிக்கை மட்டும்தானா? பிஜேபிக்கு கோரிக்கை இல்லையா? அப்போது பிஜேபிக்கு ’இந்தி வாழ்க தமிழ் ஒழிக’ என சொல்லிறார்களா?, எங்கே தமிழிசை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். நாங்கள் ”தமிழ் வாழ்க, இந்தி திணிப்பு ஒழிக’ என பேசுகிறோம். இதில் என்ன பிரச்சனை வந்துவிடும்? இது எப்படி கட்சி வந்துவிடும்? இதில் நாங்கள் திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என சொன்னோமா? நாங்கள் எல்லா கட்சியும் தான் போராட வாங்க என சொல்கிறோம். தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதுக்காக பேச சொல்கிறோம். இது எப்படி ஒரு கட்சி பிரச்சனை மாற்றுகிறார்கள்? அப்போது இந்தியை திணிக்கிறார்கள் என பிஜேபியே ஒப்புக்கொண்டது என தமிழிசை வெளிப்படையாக சொல்கிறார்.

கேள்வி: தேர்தல் நேரத்தில் இந்த பிரச்சனையை வேண்டுமென்றே ஈடுப்படுகிறார்கள், ’அறிவாயலத்தோடு தொடர்பு’ வைத்துதான் செய்கிறீர்கள் என சொல்கிறார்களே?

பதில்: ’தேர்தல் வரைக்கும் இந்த பிரச்சனை தீர்க்கவில்லை’ என்பதுதான் அவர்களுடைய அயோக்கியதனம். தேர்தல் வந்தால்தானே வாயை திறந்து பேசுறீங்க, ஒன்றரை வருடமாக பேசிகொண்டு இருக்கிறோம். அப்போது ஏன் வாய் திறந்து பேசவில்லை? இப்போது தேர்தல் சமயத்தில் கழுத்தை புடித்த உடனே வருகிறது. இன்றைக்கு பிஜேபிக்கு தெரிகிறது, வழி என்னவென்று தெரிகிறது. இத்தனை வருடமாக என்ன செய்தார்கள்?

இத்தனை வருடமாக டிடி தொலைக்காட்சி (தூர்தர்சன்) இங்கு இருக்கிறதே, இதிலும் இந்தியை திணித்துள்ளார்களா? தூர்தர்சன் மைக்கில் காவி கலரில் இந்தியில் எழுதி வைத்துள்ளார்களே , இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு வருடத்திற்கு முன் போராட்டம் நடத்தினோமே, அப்போது பிஜேபி எங்க போனது? தேர்தல் வந்தால் என்ன? வாராமல் இருந்தால் என்ன? இதற்கு பதில் சொல்லுங்கள். தேர்தலுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இது எப்படி தேர்தலுக்கும் எங்களுக்குமான தொடர்பாக நீங்கள் பார்க்க முடியும்?

நாங்கள் திமுக ஆதரவு இதுவரைக்கும் தெரிவித்தது கிடையாது அதிமுக ஆதரவு தெரிவித்தது கிடையாது, காங்கிரஸ் & பிஜேபிக்கு ஆதரவு தெரிவித்தது கிடையாது. அப்பறம் எப்படி தேர்தல் பிரச்சனையாக இருக்கும்? இது எப்படி இன்னொரு கட்சி சார்ந்த பிரச்சனையாக இருக்கும்? இது ஒரு கட்சியை சார்ந்தது என்று பாஜக கட்சிக்கு கிடையாது என்கிறார்கள். அப்போது நான் தமிழசைக்கு நன்றி சொல்கிறேன். ”தமிழுக்கு எதிரானவர்கள் என்று பாஜகாவை சார்ந்த தமிழிசை அவர்கள் வெளிப்படையாக ஏற்று கொண்டுவிட்டார்” என்று அவரது வாக்கு மூலத்தை நம்மெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி: தமிழக இளைஞர்களுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தா ’ஒன்றரை லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம்’ என திமுக சொன்னது. ஆனால் ஐந்து ஆண்டுகளில் 94,000 வேலைவாய்ப்புகளைதான் உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள். மேலும் வேலைவாய்ப்பு பறிப்போகிறது என பேசினீர்களே, இது குறித்து ஏன் திருமுருகன் காந்தி போன்றவர்கள் திமுகவை நோக்கி கேள்வி எழுப்பவில்லை என்கிறார்களே?

பதில்: கிட்டத்தட்ட லட்சக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தம் செய்யப்படாமல் இருக்கிறார்கள் என தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்.  நாங்கள் தொடர்ச்சியாக பங்கெடுத்த போராட்டத்தின் வீடியோவாக எல்லாமே இருக்கிறது. நான் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 50/ 60 போராட்டங்களில் பங்கெடுத்து, கடந்த நான்கு ஆண்டுகள் இதற்கான போராட்டத்தில் பங்கெடுத்து நடத்தி இருக்கிறோம்.

என்னுடைய கேள்வி ஒன்றுதான். தமிழ்நாட்டில் திமுக வேலைவாய்ப்பு உருவாக்கவில்லை என்று பிஜேபி கூறுகின்றது. ஆனால் இதற்காக ஏதாவது ஒரு போராட்டத்தை அண்ணாமலை நடத்தி இருக்கின்றாரா? தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வேண்டும் என்று அண்ணாமலை ஏதாவது போராட்டம் நடத்தி இருக்கின்றாரா? அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன் பேட்டி தருகிறார். கல்யாண வீட்டில் பேட்டி தருகிறார், உணவு உண்பதற்கு முன், பின் என பல முறை பேட்டி தருகிறார். இதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறார்? மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தியிருக்கிறாரா? இல்லையே! ஏன் பிஜேபி போராட்டம் பண்ண வேண்டியதுதானே? இந்த வேலைவாய்ப்பின்மைக்கான அடிப்படை காரணம் பிஜேபிதான்.

மாநில அரசுக்கு வரவேண்டிய நிதியை முறையாகக் கொடுக்கவில்லை என்றால், மாநில அரசு தன் தொழிலாளர்களுக்கு எப்படி சம்பளம் கொடுக்கும்? ஆசிரியர்களுக்கு வரவேண்டிய 2500 கோடி நிதியை பாஜக நிறுத்தி வைத்தால் ஆசிரியர்களுக்கு எப்படி சம்பளம் தர முடியும்? ஆசிரியர்களை எப்படி பணி நிரந்தரம் பண்ண முடியும்? கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டு இளைஞர்களுடைய வேலைவாய்ப்பு குறித்து பிஜேபி எதுவும் பேசவில்லை. எதுவும் செய்யவில்லை. காரணம் என்னவென்றால் ஒன்றிய அரசால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பிடுங்கப்படுகிறது என்று பிஜேபிக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அந்தக் கட்சி எந்த போராட்டமும் செய்வதில்லை.

ஒன்றிய அரசினுடைய ரெக்ரூட்மென்ட் (வேலைக்கு பணியமர்த்துவது) முன்பு மண்டல அளவில் நடக்கும். தென்னக ரயில்வே என்றால் நான்கு அல்லது ஐந்து மாநிலங்கள் (தென் மாநிலங்கள்) அளவில் நடக்கும். இந்த மாநிலங்களில் இருப்போர்தான் அந்த வேலைக்கு விண்ணப்பிப்பார்கள். ஆனால் இப்போது ஒன்றிய அளவில் தேர்வு நடக்கிறது. ஒரே நாடு-ஒரே தேர்வு. ஆனால் ஒருத்தனுக்கும் வேலை கிடைப்பதில்லை. இதுதான் பிஜேபியின் முழக்கம்.

‘ஒரே நாடு-ஒரே தேர்வு’ முறைப்படி தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இந்தியா முழுமைக்கும் நடக்கும் தேர்வுகளில், இந்தியில் ஆங்கிலத்தில் நடக்கும் தேர்வுகளில் நமது பிள்ளைகள் எப்படி தேர்வாகும்? கடினம்.

ஐசிஎப்-இல் 5000 பேருக்கான பயிற்சி கொடுக்கப்பட்டது (அப்பரண்டடைஸ் பயிற்சி). ஆனால் அவர்கள் யாருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அவை வட இந்திய தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதைக் கண்டித்து ஒரு இளைஞர் தீக்குளித்து இறந்து போனார் (கர்நாடகாவை சேர்ந்தவர்). ஐசிஎப் டைரக்டர் அலுவலக வாயிலிலேயே அவர் தீக்குளித்து இறந்து போனார். அவர் மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இது நடந்தது. இன்றைக்கும் நடக்கிறது. ஆனால் அந்த பணியிடங்கள் எல்லாம் வட இந்தியருக்குக் கொடுக்கப்பட்டது.

பொன்மலையில் கிட்டத்தட்ட 323 இடங்கள், அதில் 250 இடங்கள் வட மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த ரயில்வேயில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 3600 இடங்களில் கிட்டத்தட்ட 2800ல இருந்து 3000 இடங்கள் வட மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

நம் இளைஞர்களுக்கு நம் ஊரில் வேலை கிடைப்பதில்லை. திருச்செந்தூர், புதுக்கோட்டையில் உள்ள ரயில் நிலையங்களில் கவுண்டரில் இந்தி பேசுவோர் பணி புரிகின்றனர். அறுபடை வீடு, முருகன் குறித்து பாஜக பேசுகிறது, ஆனால் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் சில இடங்களில் தமிழில் அறிவிப்பு இல்லை. இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் அறிவிப்பு இருக்கிறது. ஆனால் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது மட்டும்தான் பாஜகவிற்கு பிரச்சனையாக இருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் ரயில் நிற்கிறது ஆனால் திருச்செந்தூருக்கு, பழனிக்கு எத்தனை ரயில் விட்டார்கள்? பாஜகவிற்கு முருகனுக்கும் என்ன சம்பந்தம்? கலவரம் செய்வது மட்டும்தான் அவர்களின் வேலை. இதைத்தான் கேள்வி கேட்கிறோம்.

கேள்வி: மத்திய அமைச்சர்கள் “தமிழில் பேச முடியவில்லை” என்று வருத்தமாக கூறுகிறார்களே?

பதில்: அவர்களுக்கு தமிழ் எப்படிங்க வரும்? அற உணர்வு கொண்டவர்க்கும் மதவெறியை வெறுப்பவர்க்கும்தான் தமிழ் வரும். மதவெறியை அரசியலாக கொண்டவர்க்கு (பாஜகவுக்கு) தமிழ் வாயிலயே நுழையாது.

கேள்வி: இந்தி திணிப்பு இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் நடந்திருக்கின்றது. அப்போது குரல் கொடுத்தவர்கள் இப்போது ஏன் குரல் கொடுப்பதில்லை?

பதில்: இந்தி திணிப்புக்கு எதிரான தொடர் போராட்டம் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றது. கடந்த 80 ஆண்டுகளாக வீரியமாக  நடக்கின்றது. இவ்வளவு போராட்டம் நடத்தியும் டெல்லிகாரனுக்கு அறிவு வரவில்லை. எந்த கட்சி டெல்லியில் ஆட்சியில் இருந்தாலும் இந்தியைத் திணிக்க வேலை செய்கிறது. அதனால்தான் திரும்ப திரும்ப போராட வேண்டிய நிலைமையில் நாம் இருக்கிறோம். என் தாத்தா காலத்தில் தொடங்கிய போராட்டம் என் பிள்ளைகளுடைய காலத்தில் தொடர வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.

100 ஆண்டுகளாக ஒரு மொழியை எதுக்கு திணிக்கிறார்கள்? அது (இந்தி) ஒரு யோக்கியமான மொழியா? நல்ல மொழியா? இல்லை. அதில் பெரிய இலக்கிய வளமும் கிடையாது. பெரும்பான்மை மொழியும் கிடையாது. அது ஒரு உள்ளூர் மொழி மட்டுமே.

இந்தி பேசும் மாநிலங்களிலேயே இந்தி சிறுபான்மதான். அங்கு மைதிலி, சந்தாலி போன்ற மொழிகள் தான் பெரும்பான்மை. ஆனால் பாஜக அங்கேயும் இந்தியைத் திணித்து வளர்த்தது. நாம் செய்வது மொழித்திணிப்பு எதிர்ப்பு மட்டுமல்ல. இந்தி பேசுகின்ற மாநிலத்தில் இருக்கிறவனுக்கு மட்டும்தான் வேலை என்று கொண்டு வந்து விட்டார்கள்.

பஞ்சாபில் இந்தி கட்டாயம் என்று கூறினார்கள். இப்போது பஞ்சாப் வங்கி அல்லது ரயில் நிலையங்களில் பஞ்சாபியர்களை பணியில் பார்த்திருக்கின்றீர்களா? இந்தியைப் படித்தாலும் கூட இதுதான் அங்குள்ள சூழல். இந்தியைத் தாய் மொழியாக கொண்டிருப்பவனுக்கு மட்டும்தான் வேலை கிடைக்கிறது. அதுதான் இன்றைய நிலைமை.

கேள்வி: ஒன்றிய அரசை எதிர்த்து பல விடயங்களில் காங்கிரஸ் கேள்வி கேட்கிறது. ஆனால் இந்தி எதிர்ப்பு போன்ற விடயங்களில் அவர்கள் குரல் கொடுப்பது போதுமான அளவுக்கு இருக்கிறதா?

பதில்: காங்கிரசும் பாரதி ஜனதா கட்சியும் இந்த திணிப்பிலே மாறுபட்ட கட்சிகள் கிடையாது. டெல்லியில் இருக்கக்கூடிய தலைமை இந்திக்கு சாதகமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. அதனால் எங்களுக்கு காங்கிரசோ பிஜேபியோ வேறுபாடு கிடையாது.

கேள்வி: இங்கு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பெரும்பான்மை தமிழர்கள்தான். அங்கும் திணிக்கப்படும் இந்தியை எதிர்த்து நீங்கள் மக்களுடன் போராடுவீர்களா?

பதில்: எங்களுடைய அடுத்தகட்ட போராட்டம் அதுதான். கனரா வங்கியோ ஸ்டேட் பேங்கோ, இந்தியன் ஓவர்சீஸ் பேங்கோ அல்லது இந்தியன் பேங்கோ இந்தியைத் திணித்துக் கொண்டே இருந்தால் ‘இனிமேல் இந்த வங்கியில் கணக்கு தொடங்காதீர்கள்’ என்று நாங்கள் பரப்புரை செய்ய வேண்டி வரும். மேலும் ‘இருக்கின்ற கணக்குகளை எல்லாம் மூடுங்க’ என்று சொல்ல வேண்டி இருக்கும். (இங்கு இருக்கும் ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி போன்ற தனியார் வங்கிகள் இவ்வாறு இந்தியில் மட்டும் எழுதுகிறதா? அந்த வங்கியிலும் வியாபாரம் நன்றாக நடக்கிறது. இத்தகைய சூழலில் ஏன் ஒன்றிய வங்கிகளில் மட்டும் இந்தியைத் திணிக்கிறார்கள்?

இன்னொரு விடயத்தையும் கூற வேண்டும். நாங்கள் இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் நடத்தியவுடன் சவுகார்பேட்டையில் இரண்டு மார்வாடிகள் எங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று பிரச்சாரம் செய்கிறார்கள். வழக்கு கொடுப்பதெல்லாம் அவர்கள் உரிமை. நாங்கள் வழக்குக்கு அஞ்சுபவர்கள் கிடையாது.

ஆனால் தமிழ்நாட்டில் இந்தியை அழித்தால் மார்வாடிகளுக்கு என்ன பிரச்சனை? என்று நாங்கள் கேட்கிறோம். ‘நம்முடைய பண்பாடு அழிந்துவிடும், ஆகவே மார்வாடிகளே ஒன்று கூடுங்கள்’ என்று அவர்கள் காணொளி வெளியிடுகிறார்கள். இங்கே வணிகம் செய்யக்கூடிய மார்வாடிகள் நம் ஊரில் நடக்கும் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆள் திரட்டுகிறார்கள். இங்கே வியாபாரம் செய்ய வந்தால் அனைவருடனும் இணக்கமாக இருக்க வேண்டும். தமிழ் மொழிக்காக தமிழினத்தின் உரிமைக்காக போராடக்கூடிய இயக்கங்களுக்கு எதிராக இருந்தால் மார்வாடி கம்பெனிகளுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் மீண்டும் ஆரம்பிக்க வேண்டி இருக்கும்.

ஏன் மீண்டும் என்று சொல்கிறேனென்றால் 1956இல் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் ‘மார்வாடி கடைகளை மூட வேண்டும்’ என்று  போராட்டம் நடத்திய வரலாறு இருக்கிறது. அதை அவர்கள் மறந்து விடக்கூடாது. இங்கே மாணவர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்திய போராட்டம் குறித்து டெல்லியில் புகார் கொடுப்பதற்காக இந்த மார்வாடிகள் போயிருக்கிறார்கள். இவர்களுடைய சமூக வலைதள பக்கங்களில் இருந்து இவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி உடன் தொடர்பில் இருப்பவர்கள் என்று தெரிகிறது. எங்கள் தாய்மொழிக்காக நாங்கள் போராடுவது குறித்து மார்வாடிக்கார சேட்டுகளுக்கு என்ன பிரச்சனை?அந்த பெண்களை வைத்து இதேபோல தமிழர்களுக்கு எதிராக தமிழ் மொழிக்கு எதிராக பரப்புரை செய்தால் மார்வாடி கடைகளை புறக்கணிக்கும் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டி இருக்கும். நாங்கள் தனி அமைப்பு அல்ல, நூற்றுக்கணக்கான அமைப்புகள் தமிழ்நாட்டில் இருக்கிறோம்.

கேள்வி: முன்பு வேல்முருகன் அவர்கள் ஊடக சந்திப்பு கொடுத்திருந்தார்கள். (திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து) எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் தராவிட்டாலும் பரவாயில்லை, ஈழத்தமிழர்கள் சார்ந்த முன்னெடுப்பு எடுத்து அதை நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறி இருந்தார்கள். இதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: தோழர் வேல்முருகன் அவர்கள் இந்த கோரிக்கைக்காக பலமுறை குரல் எழுப்பியவர், பல போராட்டத்தை நடத்தியவர். நாங்கள் அனைவருமே இதே கோரிக்கையோடு, ஒற்றை கருத்தோடு இருக்கக்கூடியவர்கள். அதனால் இந்த போராட்டம் நிச்சயமாக தீவிரமடைவதற்கான பின்னணிகள் இருக்கிறது என்பதுதான் அதனுடைய உண்மை.

கேள்வி: சில அரசியல் கட்சிகள் மார்வாடிகளுக்கு சீட் கொடுக்கிறார்கள். அதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: மார்வாடிகள் தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்பது நகைச்சுவை.

கேள்வி: பல தொகுதிகளில் வட இந்தியர்கள் வாக்காளர்களாகவும், அவர்களே வெற்றியை தீர்மானிக்க கூடியவர்களாகவும் இருக்கிறார்களே?

பதில்: மொழிச் சிறுபான்மையினராக சனநாயகத்தில் பங்கெடுப்பது குறித்து யாருக்கும் விமர்சனம் இருக்காது. ஆனால் அவர்கள் மாநில அரசியலை இங்கே திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இங்கே இருக்கும் மார்வாடிகள் பிஜேபிக்கு தான் ஓட்டு போடுவோம் என்றும் மார்வாடிகளுடைய கட்சியை வளர்ப்போம் என்று நினைத்தார்கள் என்றால், அதற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கும். மார்வாடி கடையில் இனிமேல் பொருள் வாங்க கூடாது என்று தமிழ்நாடு முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே ஒரு எம்எல்ஏ, ஒரு கவுன்சிலருக்கு ஆசைப்பட்டு பிஜேபிக்காரன் சொல்வதை (இங்குள்ள கட்சிகள்) கேட்டால் ஒட்டுமொத்த மார்வாடி கூட்டமும் வணிகத்தை இழக்க வேண்டி வரும். இது எச்சரிக்கை கிடையாது. தமிழ்நாட்டில் இதற்கான போராட்டம் நீண்ட காலமாக நடக்கிறது. கேரளாவுக்குள் இதுவரை மார்வாடி வணிகம் செய்ய முடியவில்லை.

இங்கே நாம் யாரையும் தடுப்பது இல்லை. நாம் யாரையும் எதிரியாக  பார்ப்பது இல்லை. அந்த பண்பைப் புரிந்து கொண்டு நடந்து கொண்டால் அவர்களுக்கும் அவர்கள் வணிகத்திற்கும் நல்லது.

கேள்வி: தூர்தர்சன் இந்த ஊடக சந்திப்பிற்கு வந்திருப்பது குறித்து…?

பதில்: தூர்தர்சன் இந்தி திணிப்பும் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பும் தமிழ்நாட்டிற்குள் செய்ய ஆரம்பித்த பொழுது எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இப்போது இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கிய பிறகு முதல் முறையாக நான் தூர்தர்சன் ஊடகத்தை இந்த சந்திப்பில் பார்க்கிறேன். இந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக தூர்தர்சன் சேனல் இங்கே வந்திருக்கின்றார்கள். இத்தனை ஆண்டுகளாக வந்ததில்லை. அவங்களுக்கும் முறையாக எங்கள் செய்தியை சொல்லி விட்டோம்.

கேள்வி: நேற்றைய தினம் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பெண்களை குறித்து மிக தரக்குறைவான வார்த்தைகள் கூறியது குறித்து….?

பதில்: பெண்கள் மீதான வன்முறைக்கு நாங்கள் எதிராக இருக்கிறோம். எல்லா பெண்களுடைய உரிமைகளையும் மதிக்கக்கூடிய வகையில், அவர்கள் மீதான வன்முறைக்கு எதிரான நிலைப்பாடுதான் அரசியல் நிலைப்பாடு. தேர்தலுக்காக சண்டை செய்தால் உண்மையான முகம் வெளியில் வந்து விடும். பெண்களை மதிக்காத ஒரு பேச்சு என்பது மிக மோசமானது, கண்டிக்கத்தக்கது. அதைக் கட்சி கடந்து அனைவருமே கண்டிக்க வேண்டும். எங்கள் கண்டனத்தை நாங்கள் தெரிவித்து விட்டோம்.

இதனுடன் ஊடக சந்திப்பு நிறைவு பெற்றது.

நன்றி, வணக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »