
பாஜக கூட்டணி வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் எனும் முழக்கத்தோடு கடந்த ஏப்ரல் 9, 2026 அன்று திண்டிவனம் தொகுதியின் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தோழர் வன்னி அரசு அவர்களை ஆதரித்து, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய தேர்தல் பரப்புரை தொகுப்பு:
“அதிமுக பாஜக கூட்டணி என்பது தமிழருக்கு எதிரான கூட்டணி. பாஜக போன்ற ஒரு வடநாட்டான் கட்சியை நாம் ஜெயிக்க விடலாமா? நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகளின் கொடி வட இந்தியாவில் பறக்க முடியுமா? முடியாது. ஆனால் தில்லி, நாகபூர், அயோத்தி போன்ற வட மாநிலத்தவர் இங்கு சட்டாம்பிள்ளைத்தனமாக (பிறர் மீது அதிகாரம் செலுத்தும் விதமாக) பேசிக் கொண்டிருக்கின்றனரே, அதை யார் கேள்வி கேட்பது? நீங்கள்தான் கேட்க வேண்டும்.
போராட்டக் களங்களிலே எங்கள் உற்ற தோழராய் விளங்குபவர் தோழர் வன்னி அரசு அவர்கள். அவர் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று அவரது தோழராய் நாங்கள் கேட்கின்றோம். பாஜக கூட்டணியை ஒழிக்காமல் தமிழ்நாடு வெல்லாது. தமிழ்நாட்டில் பாஜகவாலும் அண்ணாமலையாலுமே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. பாஜக கட்சியினரே சிறுபான்மையினருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளைப் பரப்பினர். காலம் காலமாக ஒற்றுமையுடன் இருந்த நமக்குள் மத வெறியைத் தூண்டி கலவரத்தைக் கொண்டுவரப் பார்க்கிறது பாஜக. அந்த மதவெறிக் கும்பலால்தான் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகிறது.
பாஜக இதுவரை தமிழ்நாட்டிற்கு எந்த நல்லதும் செய்யவில்லை. பாஜக வடநாட்டில் சாதியையும் மதத்தையும் முன்னிறுத்தியது. ஆனால் தமிழ்நாடு தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் முன்னிறுத்தியது. மத வெறி, சாதி வெறிக்கு எதிராக, பிஜேபி-ஆர்.எஸ்.ஸிற்கு எதிராக தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும். பாஜக கூட்டணியை நாம் துடைத்தெறிய வேண்டும்.

ஈழத்தமிழருக்காக தன்னையே கொடுத்த விசிக கட்சியை சேர்ந்த ’கடலூர் ஆனந்த்’ அவர்களை நாம் மறக்க முடியுமா? இந்த மண்ணுக்காக போராடிய விசிக கட்சியை சேர்ந்த பல தோழர்கள் சிறை சென்றிருக்கிறார்கள். எங்கள் தோழர்கள் போராளிகள். அந்த போராளிகள் வெற்றி பெற வேண்டும். இந்த திண்டிவனம் மண்ணில் இருந்து தோழர் வன்னி அரசு அவர்கள் வெற்றி பெற வேண்டும்.
அண்மையில் பாஜகவிற்கு வாக்களித்தால் தான் மதுரைக்கு மெட்ரோ வரும் என்று பாஜக தலைவர் ஒருவர் பேசுகிறார். இதுவரை தமிழர்கள் கொடுத்த வரிப்பணம் என்ன ஆனது? இட்லிக்கும் வரி, சட்னிக்கும் வரி என்று நம்மிடம் வரிப்பணத்தை பிடுங்கியது பாஜக. நம் வரியை வாங்கி கொண்டு நமக்கு எந்த திட்டத்தையும் அறிவிக்காத பாஜகவை நாம் விரட்ட வேண்டும்.
தமிழன் வரிப்பணம் இனிக்குது. ஆனால் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் மோடிக்கு கசக்குது. இத்தகைய பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்.
பாஜகவிற்கு இந்து மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கோவில் சொத்தையெல்லாம் கொள்ளையடிக்க வந்த கூட்டம் அது. ஒரு கவுன்சிலர் கூட ஜெயிக்க வக்கில்லாத கட்சிதான் பாரதி ஜனதா கட்சி. தமிழ்நாட்டை நாசம் பண்ணுவதற்காக வந்திருக்கக்கூடிய கட்சி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல எங்கெல்லாம் பாஜகவினர் கால் வைக்கிறார்களோ அங்கே எல்லாம் சட்டம் ஒழுங்கு கெடுகிறது.
ஒன்றிய அரசு நிறுவனங்களில் இரண்டரை லட்சம் வேலை இருக்கிறது. ஆனால் தமிழனுக்கு அங்கு வேலை கிடைப்பதில்லை. திண்டிவனம், விழுப்புரம் ரயில் நிலையங்களில், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், வங்கி என அனைத்து இடங்களிலும் யார் வேலை பார்க்கின்றார்கள்? இந்தி பேசுவோர் தான். உயர் பதவிகளில் இந்திக்காரர்களை பணி அமர்த்துகிறது மோடி சர்க்கார். அந்த மோடி சர்க்கார் நமக்கு கேடுகள் தான் கொண்டு வந்திருக்கிறது. இவ்வளவு காலம் தமிழ்நாட்டை நாசமாக்கி இருக்கிறது.
திருப்பரங்குன்றத்துக்கு ஆள் திரட்டின பாஜக காவிரி பிரச்சனைக்கு ஆள் திரட்டியதா? என்எல்சி-இல் தமிழனுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்று பாஜக போராட்டம் நடத்தி இருக்கிறதா? மெட்ரோ வர வேண்டுமென்று பாஜக போராட்டம் நடத்தி இருக்கிறதா? எதுவும் செய்ததில்லை. ஆனால் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலை வைத்து கலவரம் செய்ய முயற்சித்தது.

நாம் அனைவரும் மத வேறுபாடுகள் இல்லாமல் தமிழராக ஒன்றாக இருக்கின்றோம். ஆனால் பிஜேபிகாரனுக்கும் சாமிக்கும் என்ன சம்பந்தம்? என்றாவது பிஜேபிக்காரன் அலகு குத்தி காவடி தூக்கி இருக்கிறானா? கலவரம் செய்வதற்காக திருப்பரங்குன்றத்தை வைத்து பிரச்சனையை உண்டாக்கக்கூடிய பிஜேபி, தமிழ்நாட்டுக்கு முறையான வரி பங்கீடு கொடுக்கவில்லை. நம் பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகம் தருவதற்கோ, ஆசிரியருக்கு சம்பளம் கொடுப்பதற்கோ நிதி தரவில்லை. எல்லாவற்றையும் நிறுத்தி வைத்திருக்கிறது மோடி சர்க்கார்.
தமிழ்நாட்டை வளர்க்க வேண்டுமென்று பிஜேபிக்கு எந்த நோக்கமும் இல்லை. பிஜேபி அதிமுகவை வற்புறுத்தி, அடித்துப் பிடுங்கி, கூட்டணியில் சேர்த்திருக்கிறது. ஒரு கவுன்சிலர் கூட ஜெயிக்காத பிஜேபிக்கு 40 சீட்டுக்கள் கொடுத்திருக்கிறார் எடப்பாடியார். அதிமுக எனும் பெரிய கட்சியை, ஜெயலலிதா அம்மையார் ‘மோடியா லேடியா’ என்று பேசின கட்சியை பிஜேபிக்கு தாரைவார்த்திருக்கிறார் எடப்பாடியார். நாற்பது சீட்டை தாமரை சின்னத்திற்கு தாரைவார்த்திருக்கிறார். இவர் எப்படி நல்ல ஆட்சி கொடுப்பார்? தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பாகவே அடிபணிந்து நிற்கக்கூடிய எடப்பாடியை எப்படி நாம் முதலமைச்சராக்க முடியும்? என்று அதிமுகவினர் யோசிக்க வேண்டும். அதிமுகவை நான்காக உடைத்தது யார்? ’சசிகலா அம்மையார் அணி, ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, தினகரன் அணி’ என இத்தனை அணியாக அந்த கட்சியை உடைத்தது யார்? பிஜேபி தான். அதிமுகவை நாசம் பண்ண ஒரு கட்சி உடன் எடப்பாடியார் கூட்டணி வைத்திருக்கிறார்.
அதிமுகவையே காப்பாற்ற முடியாத எடப்பாடியார் அவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்? அதிமுகவை நான்காக உடைத்த பிஜேபி நாளை தமிழ்நாட்டை உடைக்க மாட்டானா? இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய ஒரு அருமையான தோழர், ஒரு போராளி சட்டசபை தேர்தலிலே திண்டிவனத்திலே போட்டியிடுகின்றார். அவர்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய துணை பொதுச் செயலாளர் ஆற்றல் மிகுந்த தோழர் வன்னியரசு அவர்கள். தோழர் வன்னியரசு அவர்கள் பானை சின்னத்தில் இங்கு போட்டியிடுகின்றார்.

அவரைப் பற்றி ஒரு விடயம் கூற வேண்டும். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஈழப் பிரச்சனைக்காக அங்கே கொலை செய்யப்பட்ட மக்களுக்கு ஒரு மெழுகுவர்த்தி ஏந்த வேண்டும் என்று முயற்சி செய்ததற்காக என்னை கைது செய்து சிறையில் அடைத்தார் எடப்பாடியார் அவர்கள். அன்றைக்கு புழல் சிறையில் என்னை வரவேற்றவர் தோழர் வன்னி அரசு. எதற்காக அவர் சிறைக்கு சென்றார்? பண மோசடி வழக்கோ, நில அபகரிப்பு வழக்கோ, பிஜேபி கட்சியினர் போல் பாலியல் வழக்கோ அல்ல. டாஸ்மாக் சாராய கடையை எதிர்த்து அதை கொழுத்திய போராட்டத்திலே சிறைக்கு சென்றார் தோழர் வன்னியரசு அவர்கள். அவரும் அவர் தோழர்களும் போராடியதற்காக சிறையிலே இருந்தார்கள். அவரை நான் சிறையில் தான் சந்தித்து பேசினேன். அதற்கு முன் பல போராட்டங்களில் அவரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் பேசுவதற்கு நேரம் கிடைக்காது. ஆனால் அவருடன் பேசுவதற்கு நேரம் கிடைத்த இடம் புழல் சிறை.
புழல் சிறைக்கு எதற்காக நாங்கள் சென்றோம்? மக்கள் போராட்டத்திற்காக சென்றோம். மக்களுக்காக சென்றோம். தமிழனுக்காக சென்றோம். தமிழர் நலனுக்காக சென்றோம். அப்படிப்பட்ட ஒரு போராளியான தோழர் வன்னி அரசு அவர்கள் இங்கே வேட்பாளராக களம் காண்கிறார். பானை சின்னத்திலே களம் காண்கிறார். தோழர் திருமாவின் தளபதியாக களம் காண்கிறார். அவர் வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டினுடைய உரிமை குறித்தும் திண்டிவனத்தின் மக்களினுடைய தேவை குறித்தும் துணிச்சலாக சட்டசபையில் பேசக்கூடிய ஒரு வேட்பாளர் இருப்பார் என்றால் அது தோழர் வன்னியரசு அவர்களாகத்தான் இருக்க முடியும்.
நான் போராட்டக் களத்தில் அவரைப் பார்த்தவன். நான் மே 17 இயக்கத்தைச் சார்ந்தவன். கடந்த மாதம் “இந்தி ஒழிக தமிழ் வாழ்க” என்று சொல்லி மே 17 இயக்கத்தினுடைய எங்களுடைய தோழர் என்னுடைய நெருங்கிய நண்பர் ’சிவா திலீபன்’ ரயிலின் முன்னே பாய்ந்து தன் உயிரைக் கொடுத்தார். எதற்காக கொடுத்தார்? பாஜக அரசு இந்திக்காரனுக்கெல்லாம் வேலை கொடுக்கிறது. நம் இளைஞர்களுக்கான வேலைகள் எல்லாம் இந்திக்காரனுக்கு போகின்றது. ரயில்வே நிலையம், வங்கி என எல்லா இடத்திலும் இந்திக்காரனுக்குத்தான் வேலை கிடைக்கிறது. அந்த வேலை நம் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டும். நம் இளைஞர்கள் சோத்து மூட்டை எடுத்து கொண்டு, ஸ்விக்கி சுமோடோ என்று வண்டி ஓட்டுகிறார்கள். வாடகைக்கு கார் ஓட்டுகிறார்கள். கூலி வேலை பார்க்கிறார்கள். நம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் இந்திக்காரனுக்கு வேலை கிடைக்கிறது.

அறுபடை வீடு, முருகனுடைய இல்லம், முருகனை கொண்டாடுகிறேன் என்று பாஜக சொல்கிறது. ஆனால் திருச்செந்தூர் ரயில்வே நிலையத்தில் யார் பணி புரிகிறார்கள்? இந்திக்காரன்தான் அங்கு பணியில் இருக்கிறான். மதுரை, பழனி, ராமேஸ்வரம், விழுப்புரம், சென்னை எனப் பல ரயில்வே நிலையங்களிலும் இந்திக்காரன்தான் பணியில் இருக்கிறான். இதெல்லாம் யாருடைய வேலை? மோடி சர்க்காரினுடைய வேலை. இப்படிப்பட்ட மோடி சர்க்காரை, பாரதி ஜனதா கட்சி கூட்டணியை விரட்டுவது நமது பொறுப்பு.
இன்று மோடியும் அமித்சாவும் எடப்பாடியாரை மிரட்டலாம். ஆனால் தமிழ்நாட்டை/ தமிழனை மிரட்ட முடியாது. மோடி அவர்களுக்கு நாங்கள் ஒன்றை சொல்கின்றோம் – “எடப்பாடியாரைப் போல எல்லா தமிழனும் முட்டிப் போடக்கூடிய தமிழன் அல்ல. மண்டியிடக்கூடிய தமிழன் அல்ல. மானத்தமிழன் ஒரு நாளும் பாஜக கட்சியின் முன் மண்டியிட மாட்டான். ஒரு காலத்திலும் தாமரை மலராது. அதிமுக கூட்டணி வெற்றி பெறாது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள்”.
பாஜகவை எவனெல்லாம் எதிர்க்கவில்லையோ அவனெல்லாம் தமிழின துரோகிகள் என்று எழுதி வையுங்கள். கல்வெட்டில் பொறித்து வையுங்கள். தமிழ்நாட்டுக்கு கேடு பண்ணக்கூடிய ஒரு கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் இருக்கிறது. இந்த சட்டசபை தேர்தல் என்பது தமிழனுக்கும் வட இந்தியனுக்கும் ஆரியனுக்கும் தமிழனுக்கும் நடக்கக்கூடிய போர். இந்திக்கும் தமிழுக்கும் நடக்கக்கூடிய போர். தமிழர்களை அழிக்கக்கூடிய ஆற்றலுக்கு எதிராக நாம் நடத்துகின்ற ஒரு மாபெரும் போராட்டம். இந்த போராட்டத்திலே ஒரு தளபதியாக தோழர் வன்னிஅரசை நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். பானை சின்னத்திலே பெருந்திரளாக நீங்கள் வாக்களிக்க வேண்டும். உங்கள் குடும்பத்தாரையும் உறவினர்களையும் உடன் வேலை செய்யக்கூடிய நண்பர்களையும் பானை சின்னத்திற்கு வாக்களித்து பெருவெற்றி பெற செய்ய வேண்டும் என்று நான் வேண்டி கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்றால் பாஜக கூட்டணி விரட்டி அடிக்கப்படவேண்டும். அதிமுகவை பாஜக உடைத்தது போல நாளை தமிழ்நாட்டை நான்காக உடைத்து தமிழ் மொழியை நசுக்கி விடும். இன்று நாம் பயன்படுத்தும் அலைபேசியில் எதற்கு இந்தியில் பேசுகிறான்? தமிழ்நாட்டில் எதற்கு இந்தி? ஏன் தமிழை முன்னிறுத்திய இடங்களில் எல்லாம் இன்று இந்தி ஆக்கிரமித்திருக்கிறது?
இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது சாதாரண போராட்டம் இல்லை. இன்று நம் வாழ்வாதார போராட்டம். நான் கோயம்புத்தூர்க்காரன். 30 ஆண்டுகளுக்கு முன் கோயம்புத்தூர் நன்றாக இருந்தது. என்று பிஜேபி அங்கு வளர்ந்ததோ அன்றிலிருந்து தமிழனைப் பிரித்து விட்டது. இந்து கடை, முஸ்லிம் கடை, கிறிஸ்துவ கடை என்று அடையாளம் காட்டி கலவரத்தை மூட்டினான். சண்டையை மூட்டினான். இவ்வாறு கலவரத்தை உருவாக்கி எல்லா கடைகளையும் நாசம் செய்ததற்குப் பிறகு, இன்று கோவையில் எல்லா கடைகளும் மார்வாடி கடைகளாக மாறி இருக்கின்றது. மார்வாடி குஜராத்துக்காரனும் இந்து இவனும் இந்து. எல்லாரும் ஒன்றாக இருக்க சொல்கிறான். ஆனால் நம் தொப்புள் கொடி உறவான இசுலாமியரை வேண்டாம் என்கிறான். நம்மோடு போராட்டத்தில் இருக்கக்கூடிய இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் வேண்டாம் என்கிறான். நம்மை பிரித்துவிட்டு குஜராத்காரன் தொழில் செய்ய வேண்டும் என்று சொல்கிறது பாஜக. உங்கள் ஊரில் எத்தனை மார்வாடி கடைகள் அதிகரித்திருக்கின்றன என்று எண்ணிப் பாருங்கள். ஏன் மார்வாடி மீது பாஜகவிற்கு தனிப் பாசம்? ஏனெனில் இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதுதான் பாசம்.
நமக்குள் பிளவு கொண்டு வரும் இந்த கேடுகெட்ட சக்தியை, தீய சக்தியை விரட்டி அடிக்கக்கூடிய வகையிலே, இதற்கான பெரும் போராட்டத்தை நடத்துகின்ற தோழர் திருமா அவர்களுடைய கரத்தை வலுப்படுத்துகின்ற வகையிலே, பானை சின்னத்திலே நீங்கள் வாக்களித்து தோழர் வன்னிஅரசு அவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்புவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.

உங்கள் மீது நம்பிக்கை வைத்து நான் பேசுகின்றேன். நீங்கள் மானத் தமிழர்கள், நீங்கள் சுயமரியாதை மிக்கவர்கள் என்கின்ற அடிப்படையில் நான் பேசுகின்றேன். இந்த பரப்புரையை உங்கள் வீடுகளில் குடும்பத்தில் நீங்கள் வசிக்கக்கூடிய தெருக்களில் எடுத்துச் செல்லுங்கள். தோழர் வன்னி அரசை வெற்றி பெறச் செய்யுங்கள். அதிமுகவை மாபெரும் தோல்வியிலே கொண்டு போய் நிறுத்துங்கள். அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது. பாஜகவுடன் கூட்டணி வைத்த உனக்கு எதற்கு டெபாசிட் என்று தமிழன் திருப்பி அடிக்க வேண்டும்.
அதிமுகவை நான்காக உடைத்தது போல் பாட்டாளி மக்கள் கட்சியை இரண்டாக உடைத்து விட்டது பாஜக. பிஜேபிக்காரன் நுழைய வேண்டுமென்றால் ஊரை, நாட்டை, குடும்பத்தை இரண்டாக உடைப்பான். அப்படிப்பட்ட பிரிவினை சக்தியாக பிஜேபி இருக்கிறது. அந்த பிஜேபியை இதற்குப் பிறகும் தமிழ்நாட்டில் வளர விடக்கூடாது. அந்த பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆகவே இது பிஜேபிக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழனுக்கும் நடக்கக்கூடிய போராட்டம். ஒரு மாபெரும் போர். இந்தப் போரை அன்றைக்கு திருவள்ளுவர் நடத்தினார். வள்ளலார் நடத்தினார். தந்தை பெரியார் நடத்தினார். மேதகு பிரபாகரன் நடத்தினார். இன்றைக்கு நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். நாம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். பானை சின்னம் வெற்றி பெற வேண்டும். விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற வேண்டும். தோழர் வன்னிஅரசு வெற்றி பெற வேண்டும் என்று சொல்லி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!!