
தமிழ்நாடு வெல்லட்டும், பாஜக கூட்டணி வீழட்டும் எனும் முழக்கத்தோடு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தோழர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களை ஆதரித்து நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் ஏப்ரல் 11, 2026 அன்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய தேர்தல் பரப்புரை:
“இந்த 2026 தேர்தலிலே மதவாத சக்திகளை முறியடிக்கின்ற விதமாக இங்கே எழுச்சியோடு பரப்புரை நிகழ்த்தவிருக்கும் தோழமை அமைப்புகளே! சட்டமன்றத்திலே தமிழர்களின் குரலாய் எளிய மக்களின் குரலாய் தமிழ்நாட்டினுடைய கோரிக்கைகளை அன்றாடம் பேசி வருகின்ற, போராடி வருகின்ற எங்களுக்கெல்லாம் ஆசிரியராய் திகழ்கின்ற பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களுக்கும், இந்த நிகழ்விலே தலைமை ஏற்றிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய மாவட்ட பொறுப்பாளர் மரியாதைக்குரிய ஐயா கௌதமன் அவர்களுக்கும் மற்றும் ஏனைய தோழமைகளுக்கும் நான் சார்ந்திருக்கக்கூடிய மே பதினேழு இயக்கத்தின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
2026 தேர்தல் என்பது கடந்த காலத்தில் நடந்த தேர்தலைப் போல அல்ல. தமிழ்நாட்டை நாசப்படுத்துகின்ற ஒற்றை நோக்கத்தோடு களம் காண்கின்ற பாரதிய ஜனதா கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியவும், அதனுடைய கூட்டணி கட்சிகளையும் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிலிருந்து அப்புறப்படுத்துகின்ற ஒரு பெரும் போரை தமிழ்நாடு நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டம் என்பது தமிழ்நாடு தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக நடத்தக்கூடிய போராட்டம். இந்த சட்டமன்ற தேர்தலிலே பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை முற்றிலுமாக அப்புறப்படுத்தி தோற்கடித்து, மிகச் சிறப்பு வாய்ந்த நமது போராட்ட தலைவர்களையும் பேராசிரியர்களையும் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து பரப்புரையை மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையிலே நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிவாழ் மக்கள் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லலாம்.

ஏனெனில் தமிழ்நாட்டிலேயே மிகச்சிறந்த ஒரு அறிவாற்றல் மிகுந்த பேராசிரியர் இங்கே நமக்கு வேட்பாளராக கிடைத்திருக்கிறார்கள். பேராசிரியர்கள் மாணாக்கர்களுக்கு மட்டும் பாடம் சொல்வதில்லை, மக்களுக்கும் பாடம் சொல்கிறார்கள். எதிரிகளுக்கும் பாடம் எடுக்கிறார்கள். அந்த வகையிலே ஆய்வு பூர்வமாக அறிவு பூர்வமாக தமிழ்நாட்டினுடைய தேவைகளை குறித்து அன்றாடம் பேசி வருகின்ற எழுதி வருகின்ற பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் இந்த சட்டமன்ற தொகுதியிலே நிற்பது என்பது இந்த தொகுதிக்கு கிடைத்த பெருமையாக நான் கருதுகின்றேன். ஏனென்றால் நாகை மாவட்டத்தினுடைய இந்த நாகூர் பகுதி தமிழறிஞர்களையும் கலைஞர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு பாரம்பரிய மண். இங்கே மதங்களைக் கடந்து தமிழர்கள் ஒன்று கூடுகிற நாகூர் தர்கா இருக்கிறது. இந்த நாகூர் தர்காவிற்கும் எனது குடும்பத்திற்கும் ஒரு நெருக்கமான உறவு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் எனது தாயார் இந்த நாகூர் தர்காவிற்கு என்னை அழைத்து வருவார்கள். எங்களது குடும்பத்தினுடைய வேண்டுதலை நிறைவேற்ற என்னுடைய தாயார் நம்புகின்ற இடமாக இந்த நாகூர் தர்கா இருக்கும். ஆகவே இந்த இடம் மதங்களைக் கடந்து தமிழர்கள் ஒன்று கூடுகின்ற இடமாக சமத்துவத்தின் இடமாக இருக்கிறது. அந்த இடத்தில் இந்த பரப்புரை தொடங்குவது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் இருந்து, நாம் இந்த தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சொல்லுகின்றோம் – “பாரதிய ஜனதா கட்சி என்கின்ற மதவெறி சக்தி, தமிழின விரோத சக்தி, தமிழ் மொழியை, தமிழர்களை நாசப்படுத்துகின்ற சக்தியை வேரோடு அழிக்கக்கூடிய குரல் நாகூரில் இருந்து எழுகிறது.”

நாகூரிலிருந்து எழக்கூடிய இந்தக் குரல், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குரல் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரல். தமிழ்நாட்டினுடைய குரலாக பேராசிரியர் அவர்கள் இருக்கிறார். நான் அரசியல் களத்தில் இருந்த இந்த 17 ஆண்டு காலத்திலே எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக பேராசிரியர் இருக்கிறார். போராட்டக் களங்களில் ஒரு கோரிக்கையை எப்படி வகுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கின்றார். அது மட்டுமல்ல, சட்டமன்றத்தில் தான் இருந்த காலத்திலே அங்கு தன் தொகுதிக்கான மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்காகவும் குரல் கொடுத்திருக்கின்றார். தமிழர்களைப் பாதுகாத்திருக்கின்றார்.
அணு உலை எதிர்ப்புப் போராட்டம், மரண தண்டனை ஒழிப்புப் போராட்டம், முல்லைப் பெரியார் அணையை பாதுகாக்கும் போராட்டம் என இந்த மண்ணையும் தஞ்சை டெல்டாவையும் பாதுகாக்கக்கூடிய அனைத்து போராட்டங்களிலும் முன் களத்தில் நின்றவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள். இப்படிப்பட்ட கல்வி அறிவு பெற்ற, கல்வி நுணுக்கம் பெற்ற ஒரு ஆற்றல் மிகுந்த பேராசிரியர், ஆற்றல் மிகுந்த செயல்வீரர் இந்த தொகுதியிலே வெற்றி வேட்பாளராக நிற்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கக்கூடியது. நிச்சயமாக அவர் வெற்றி பெறுவார், உறுதியாக வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கரம் கோர்த்து உழைத்திடுவோம். தேர்தலில் அவர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்லுகின்ற போது நடைபெறும் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் உங்களோடு நாங்களும் பங்கெடுப்போம் என்பதை சொல்லி எனது உரையை நிறைவு செய்கின்றேன். நன்றி! வணக்கம்!!”