
இனப்படுகொலையான ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களுக்கு 17ஆம் ஆண்டு நினைவேந்தல் மே 17, 2026 ஞாயிறு மாலை 5 மணிக்கு, சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் மே 17 இயக்கம் நடத்த இருக்கிறது. எனவே மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், தவெக அரசிற்கு தமிழினப்படுகொலை நினைவாக நினைவு சின்னம் அமைக்க வேண்டும், இனப்படுகொலை நாளாக மே 18 ஆம் நாளை அறிவிக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மே 17 இயக்கம் நடத்திய ஊடக சந்திப்பு குறித்தான தொகுப்பு:
ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மே17 இயக்கத்தின் சார்பாக மாலை வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஊடகச் சந்திப்பு என்பது, இப்பொழுது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய தமிழக வெற்றி கழகத்தினுடைய மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவரோடு கூட்டணியாக இயங்குகின்ற ஜனநாயக சக்திகளுக்கும் இணைத்து, எங்களது கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
இதில் முதல் கட்ட கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறோம். முழு அமைச்சரவை உருவான பிறகு, மக்கள் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை தொகுத்து இந்த ஆட்சிக்கு நாங்கள் முன்வைக்க ஆயத்தமாக இருக்கிறோம். 2009-ல் தமிழீழத்தில் இனப்படுகொலை நடைபெற்றது. அந்த சமயத்தில் அங்கே கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது 1,46,000 என்று முதல் கட்ட தகவல் வெளியானது. அந்த தகவலை ஆதாரப்பூர்வமாக தொகுத்து கொடுத்த அமைப்புகளில் ஒன்று மே17 இயக்கம். அதன் பிறகு 1,47,679 தமிழர்கள் அங்கே படுகொலை செய்யப்பட்டார்கள் என்கின்ற எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது.
மன்னார் மாவட்டத்தினுடைய ஆயர், மறைந்த ராயப்பு ஜோசப் அவர்கள் இதை உறுதி செய்தார்கள். அதற்கு பின்பு கடந்த ஆண்டு “காணாமல் ஆக்கப்பட்டோர்” என்ற தலைப்பின் கீழாக, படுகொலையான மக்களின் எண்ணிக்கை என்பது 1,47,000 அல்ல, அது 1,67,000 என்று மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருபதாயிரம் பேர் மேலதிகமாக காணவில்லை அல்லது படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருந்தது. அது தமிழர்களினுடைய உயிர் இழப்பை சொல்கின்றது. அது 20,000 பேர் எனப்படுகின்ற குடும்பங்களை சார்ந்த, பெற்றோர்கள், தாய் தந்தைகளை, சகோதர சகோதரிகளை அல்லது குழந்தைகளை வைத்திருக்கக்கூடிய, நம் தொப்புள் கொடி உறவுகளின் எண்ணிக்கை.
இப்படிப்பட்ட ஒரு மோசமான இனப்படுகொலை நடந்திருக்கிறது. ஆனால் அது குறித்து தமிழ்நாடு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தொடர்ச்சியாக மே17 இயக்கம் வலியுறுத்தி வந்திருக்கிறது. இந்த 17 ஆண்டுகளில், தமிழருக்கு நடந்தது ”இனப்படுகொலை” என்று ஜெர்மன் நாட்டின் பிரேமன் நகரத்தில், ஐ.நா.வினுடைய முன்னாள் துணை செயலாளர் தலைமையில், சர்வதேச வழக்கறிஞர்கள் – குறிப்பாக இனப்படுகொலை சார்ந்த வழக்குகளை நடத்தியவர்கள் – ஒன்று சேர்ந்து நடத்திய விசாரணையில், இலங்கை அரசு நடத்தியது ஒரு இனப்படுகொலை என்றும், இந்த இனப்படுகொலைக்கு பல்வேறு நாடுகள் துணை போய் இருக்கின்றன, அந்த நாடுகள் மீது விசாரணை தேவை என்றெல்லாம் தீர்ப்பை வழங்கினார்கள். அங்கே நடந்த இனப்படுகொலையை விசாரித்த ஐ.நா.வினுடைய நிபுணர் குழுவும், ஐ.நா. எவ்வாறு தோற்றது என்பது குறித்தான விசாரணையை முன்னெடுத்த சார்லஸ் பெட்ரி தலைமையிலான குழுவும், ஒரு சர்வதேச விசாரணை தேவை என்று இந்த இனப்படுகொலை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
இப்படி இந்த 17 வருடத்தில் தமிழர்களுக்கு நீதி என்பது கிடைக்காமல் போனது. ஆனால் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை நியாயங்களை, காரணங்களை சர்வதேச மட்டத்தில் எடுத்து சொல்லிவிட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அதற்கான போதுமான ஒரு அரசியல் அழுத்தம் இந்திய அரசை நோக்கியோ, சர்வதேச மட்டத்தை நோக்கியோ நடக்கவில்லை.
கடந்த 2011 முதல் 2016 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக, ஜெயலலிதா அம்மையார் ஆட்சி காலத்தில், தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு போராட்டங்களின் அழுத்தத்தின் காரணமாகவும், மாணவர் போராட்டத்தின் அழுத்தத்தின் காரணமாகவும், “இலங்கை அரசு இனப்படுகொலை செய்திருக்கிறது. அதற்கு ஒரு சர்வதேச விசாரணை தேவை. தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், ஈழத் தமிழர்கள் மத்தியில் ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்தி, அங்கே தனித்தமிழ் ஈழம் அமைவதற்கான ஒரு முயற்சியை முன்னெடுக்க வேண்டும். இந்த இனப்படுகொலைகளை செய்த இலங்கையின் மீது ஒரு பொருளாதார தடை வேண்டும்” என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்கள் ஏகமனதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதற்கு பிறகு 2014-லிருந்து கடந்த 12 ஆண்டுகளாக இது குறித்து எந்தவித முன்னேற்றமும் தமிழ்நாடு அரசின் சார்பாக மேற்கொள்ளப்படவில்லை. சட்டசபையில் அங்கம் வகிக்கக்கூடிய, ஆட்சி அதிகாரத்தை பெற்றிருந்த கட்சிகளும் இது குறித்தான ஒரு மேலதிகமான நடவடிக்கையை மேற்கொள்ளாத நிலை இருந்தது. இந்த நிலையில், அங்கே நடந்த இனப்படுகொலைக்காக ஒரு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காகவும், தமிழினத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கான கோரிக்கையையும் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டு காலங்களில் மே17 முன்வைத்தோம்.
அதற்குப் பிறகு நாங்கள் 2011-லிருந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக தமிழினத்தின் மீது நடந்த இனப்படுகொலையை நினைவேந்தல் நடத்தி வருகிறோம். முதலில் கண்ணகி சிலை அருகே, மெரினாவில் அந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்க ஆரம்பித்தது. மிக எழுச்சியுடன் நடந்தது. இந்தியாவினுடைய தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆளுமைகள் வந்திருந்தார்கள். தமிழ்நாட்டினுடைய பல்வேறு ஆளுமைகள் அந்த நிகழ்வில் பங்கெடுத்திருந்தார்கள். அது கட்சி கடந்து, சாதி மத எல்லைகளை கடந்து நடந்த ஒரு நிகழ்வு. அப்படியான ஒரு நிகழ்வை கடந்த எடப்பாடியார் அரசு தடை செய்தது. அந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த முயற்சி செய்ததற்காக என் (திருமுருகன்) மீது குண்டர் சட்டத்தை ஏவினார்கள். பல்வேறு வழக்குகளை தொடுத்தார்கள். அந்த வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டு, நாங்கள் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டிருக்கிறோம்.
இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக மெரினாவில் எங்களுக்கான அனுமதி தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு, பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த நினைவேந்தல் நடந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகப் பெசன்ட் நகர் கடற்கரையில் நினைவேந்தல் நடந்து வருகிறது. நாங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த அதே கோரிக்கையை இப்போதும் சொல்கிறோம்.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும். தமிழ்நாடு அரசு ஏற்று நடத்த வேண்டும். கனடா நாட்டில், தமிழினத்தின் மீது நடந்தது இனப்படுகொலை என்று அங்கீகரிக்கிற விதமாக அந்த அரசே முன்வந்து இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அந்த மக்களுக்கான ஒரு நினைவுச் சின்னத்தை அங்கே எழுப்பி இருக்கிறார்கள். படுகொலையான தமிழர்களுக்கான ஒரு நினைவுச் சின்னத்தைத் தமிழ் மண்ணில் அல்ல, தமிழ்நாட்டு மண்ணில் அல்ல, கனடா மண்ணில் எழுப்பி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழினம் இருக்கிறது. ஆக, இதையெல்லாம் தொகுத்து அந்தக் கோரிக்கையை மீண்டும் நாங்கள் முன்வைக்கிறோம்.
தமிழ்நாடு அரசுக்கு 2014, 2015, 2016 காலகட்டத்தில் இதே அரங்கத்தில் இருந்து நாங்கள் அன்றைய ஆளும் கட்சிக்கு வைத்த அதே கோரிக்கையை இப்போது சொல்கிறோம்: ”ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கான ஒரு நினைவுச் சின்னத்தை இங்கே கடற்கரையோரம் தமிழ்நாடு அரசு எழுப்ப வேண்டும்”. அந்த மக்களுக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை மட்டுமல்ல, அந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது நாம் கைகட்டி வேடிக்கை பார்த்ததற்காக நம்முடைய மன்னிப்பைக் கோருகின்ற நிகழ்ச்சியாகவும் இது அமைய வேண்டும்.
ஏனென்றால், நாம் அதைத் தடுப்பதற்கான எந்த வேலையும் செய்யவில்லை. பெரிய அளவில் நாம் இயங்கியிருந்தால், பெரிய போராட்டத்தைத் தமிழ் மண் முன்னெடுத்திருந்தால் நாம் தடுத்திருக்கலாம். கிட்டத்தட்ட 22 பேர் தீக்குளித்து அந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டில் முயற்சி செய்தார்கள். பல்வேறு போராட்டங்களைப் பல்வேறு தலைவர்கள் இங்கே முன்னெடுத்தார்கள். இருந்தபோதிலும், அந்தப் போரை நம்மால் நிறுத்த இயலாமல் போனது. ஆகவே, இதையெல்லாம் நினைவுகூருகின்ற வகையில் தமிழர்களுக்கு ஒரு நினைவுச் சின்னத்தை இங்கே நாம் எழுப்ப வேண்டும். இதற்கு எல்லாரும் சேர்ந்து கோரிக்கை வைக்க வேண்டும்.
அதேபோல, இந்த இனப்படுகொலை நாளான மே 18 என்கின்ற அந்தத் தினத்தை ஈழத்தமிழர்கள் ‘இனப்படுகொலை நாள்’ என்று குறித்திருக்கிறார்கள். அதே நாளைத் தமிழ்நாடு அரசும், இப்பொழுது பொறுப்பில் இருக்கக்கூடிய த.வெ.க அரசும் ‘இனப்படுகொலை நாள்’ என்று அறிவிக்க வேண்டும். ஏற்கனவே அ.தி.மு.க-வினுடைய ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட தீர்மானங்களை மறுபடியும் வலியுறுத்தி, இந்தக் காலகட்டத்தில் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம்.
காரணம் என்னவென்றால்: தமிழ்நாட்டில் இது குறித்தான ஒரு குரல் இல்லை என்றால் வேறு யார் பேசுவார்கள் என்கின்ற ஆதங்கம் இருக்கிறது. இதற்காகப் பல்வேறு கட்டங்களில் ஐ.நா. மனித உரிமை அவையிலே, ஜெனீவாவுக்கு நேரடியாகச் சென்று கருத்துகளையும் ஆவணங்களையும் பதிவு செய்திருக்கிறோம். ஆனால், என்ன நடந்தது என்றால், மோடி அரசு எங்களது பாஸ்போர்ட்டுகளை முடக்கி வைத்திருக்கிறது. எங்களுடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே, சர்வதேச மட்டத்திலே இது குறித்து, இந்த நியாயங்கள் குறித்து எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பே இல்லை. இவ்வாறு தமிழ்நாட்டில் ஓர் அவல நிலை இருக்கிறது.
இந்தச் சமயத்திலே, தமிழ்நாடு சட்டசபையிலே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய துணைப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய தோழர் வன்னியரசு அவர்கள், “தமிழ்நாடு அரசு இந்த ஈழத்தமிழர் குறித்த நினைவேந்தலை நடத்த வேண்டும், இனப்படுகொலை நாளை அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை முன்வைத்திருக்கிறார். சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் முன்வைத்திருக்கிறார். இதே கோரிக்கைகளை நீண்ட காலமாக முன்வைத்து ஐயா வைகோ அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பேசியிருக்கிறார். தோழர் திருமாவளவன் அவர்கள் இதற்கான பல்வேறு மாநாடுகளை நடத்தி இருக்கிறார். தோழர் வேல்முருகன் அவர்கள் இதற்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இப்படி எண்ணற்ற அமைப்புகள் இதற்காகப் பேசி வருகிறார்கள்.
தமிழ்நாட்டிலே இவர்கள் அனைவரும் பேசி வருகின்ற நியாயத்தை, இப்பொழுது பொறுப்பேற்று இருக்கக்கூடிய முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள், முதல் காரியமாகத் தமிழர்கள் நாம் அனைவரும் ஒன்றுபட்டு, இந்த மக்களுக்கான நினைவேந்தலை நடத்துவதற்கு எல்லோரும் ஒன்றாகக் கைகோர்க்க வேண்டும் என்ற ஒரு முழக்கத்தை முன்வைக்க வேண்டும். அவர்களுக்கான ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்புவதும், மே 18ஆம் தேதி என்பதை அதிகாரப்பூர்வமாக ‘இனப்படுகொலை நாள்’ என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பதும் மிக மிக வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்(திரு. விஜய்) திராவிடத்தையும் தமிழ்த் தேசியத்தையும் இரு கண்களாகத் தாங்கள் மதிப்பதாகத் தனது கொள்கை நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். அந்தக் கொள்கை நிலைப்பாடு – திராவிட இயக்கங்களும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் ஈழத் தமிழருக்காகப் போராடிய வரலாறு என்பது நீண்ட நெடிய வரலாறு. அந்த மரபிலே நாங்களும் வருகிறோம் என்று சொல்கின்ற தமிழக வெற்றிக் கழகம், இந்தச் சமயத்தில் இப்படிப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்தால், அது அனைவருக்கும் பெரிய மகிழ்ச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும்.
தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்பதற்கான ஒரு பெரிய வாய்ப்பைத் திரு. விஜய் அவர்கள் தவறவிடக் கூடாது என்று இந்தச் சமயத்திலே அவருக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலாகவும், உலகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு நாடுகளில் வசிக்கக்கூடிய தமிழர்கள் ஒன்றுபட்டு வருவதற்கான வாய்ப்பும் அமையும். புலம்பெயர் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் திரு. ஜோசப் விஜய் அவர்களுடைய கலைப்படைப்புகளை அங்கீகரித்திருக்கிறார்கள், வரவேற்றிருக்கிறார்கள், கொண்டாடி இருக்கிறார்கள். ஆக, அவர்களுக்கான மரியாதை அளிக்கின்ற விதமாகவும், தமிழ்நாடு மக்களின் நீண்ட நெடிய போராட்டத்தை அங்கீகரிக்கின்ற விதமாகவும், தமிழின மக்களினுடைய விடுதலைக் கோரிக்கையை அங்கீகரிக்கின்ற விதமாகவும், நீங்கள் (திரு. விஜய்) தமிழ்நாடு சட்டசபையிலே ஏகமனதாகத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும்.
இப்பொழுது உங்களுக்கு எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகமோ, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமோ, அனைவருமே இந்தக் கோரிக்கைக்கு உடன்பட்டவர்கள். இந்தக் கோரிக்கைக்காகப் போராட்டங்களை நடத்தியவர்கள். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட வரலாறு இவர்கள் அனைவருக்கும் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், இப்பொழுது பொறுப்பேற்றிருக்கும் தவெக இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பணியைச் செய்தால், அது வரலாற்றில் என்றும் எழுதப்பட்டதாக இருக்கும் என்கின்ற அந்தக் கோரிக்கையை இந்தச் சமயத்தில் முன்வைக்கிறோம். ஆகவே, உடனடியாக இப்பொழுது பொறுப்பேற்றிருக்கக்கூடிய தமிழக வெற்றிக் கழகம் இப்படி ஒரு முடிவு எடுக்கும் என்று நாங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம்.
நாளை இதற்கான நினைவேந்தல் – மே 17ஆம் தேதி. எங்கள் அமைப்பினுடைய பெயர் ‘மே 17 இயக்கம்’. இந்த நாளில்தான் நாங்கள் எங்கள் ஆயுதத்தை மௌனித்தோம் என்று சொல்லி, “எங்கள் மக்களை போர்ச் சூழலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றுங்கள்” என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்த கோரிக்கையை நிராகரித்து, மே 17, மே 18, மே 19 ஆகிய மூன்று நாட்களில் 70,000 தமிழர்கள் முள்ளிவாய்க்காலில், வெறும் 2 கிலோமீட்டர் அளவில் இருக்கக்கூடிய கடற்கரையில் படுகொலை செய்யப்பட்டார்கள். இதை நாங்கள் (மே 17) சொல்லவில்லை, ஐ.நா.வினுடைய மூவர் அறிக்கை வெளிப்படுத்தியது, சார்லஸ் பெட்ரி அறிக்கை வெளிப்படுத்தியது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இது உண்மை என்று வெளிப்படுத்தி இருக்கின்றன. இப்படிப்பட்ட மோசமான நிலையில், வெறும் மூன்று நாட்களில் 70,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இன்றைக்கு பாலஸ்தீனப் படுகொலைக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடி, மே 17 இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறது. பாலஸ்தீனத்திற்காகக் குரல் கொடுப்பதற்காக என்மீது ’உபா’ வழக்கு ஏவப்பட்டது. பாலஸ்தீனத்தில் ஒரு நாளைக்குச் சராசரியாக ஐநூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது ஒரு இனப்படுகொலையாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சூழலில், ஈழத்தில் அந்தப் போர் நடந்த சூழலில் (நான்கு மாதங்களைப் பார்த்தோம் என்றால்) ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 3,000-இல் இருந்து 4,000 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். இதெல்லாம் புள்ளிவிவரங்களோடு இருக்கிறது, ஆதாரங்களோடு இருக்கிறது.
ஐ.நா.வின் அறிக்கையை எடுத்துப் படித்தோம் என்றால், அதைவிட ஒரு கொடுமையான சம்பவத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது. அதாவது உணவுப் பொட்டலங்களை அனுப்புவதற்குப் பதிலாக, மருந்துகளை அனுப்புவதற்குப் பதிலாக, கிரிக்கெட் மட்டைகளையும் கால்பந்துகளையும் அனுப்பி வைத்தார்கள். எவ்வளவு எடை வேண்டும் என்று கணக்கெடுக்கும்போது, உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் நீக்கிவிட்டு, விளையாட்டுச் சாமான்களை உள்ளே வைத்து அடைத்து அனுப்பிவிட்ட வரலாறுகளை ஐ.நா.வினுடைய உள்ளக விசாரணைக் குழுவே பதிவு செய்திருக்கிறது.
ஆகவே, இப்படிப்பட்ட ஒரு மோசமான சம்பவத்தை, இப்படி ஒரு மோசமான இழப்பை எதிர்கொண்ட தமிழினம் நியாயம் கேட்கிறது. அதைத் தமிழ்நாடு உயர்த்திப் பிடிக்க வேண்டும். இது மிகச் சரியான சமயம். இங்கே இருக்கக்கூடிய அனைத்துப் பெரிய கட்சிகளும் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறார்கள். மக்கள் சார்ந்த அமைப்புகள் ஆதரிக்கிறார்கள்.ஆகவே, இதை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள் வைத்து, எங்களது ஊடகச் சந்திப்பை நிறைவு செய்கிறோம்.
பத்திரிக்கையாளர் கேள்வி: இன்றைக்கு இலங்கையின் எம்.பி. அவர்கள் தி.மு.க, அ.தி.மு.க தொடர்ந்து பிரச்சினையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இருக்கிறார். இதைப் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?
தோழர் திருமுருகன் காந்தியின் பதில்: இந்தச் சமயத்திலாவது கட்சிகள் எல்லாம் கட்சி அரசியலை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழினத்திற்காக ஒன்றிணைய வேண்டும். தேர்தல் முடிந்துவிட்டது. இனிமேலும் தேர்தல் அரசியலை வைத்துப் பார்க்க வேண்டாம். கட்சி கடந்து நடந்த இனப்படுகொலைக்கு ஒரு முடிவு எடுப்போம். எல்லாக் கட்சியும் இது இனப்படுகொலை என்று சொல்லியிருக்கின்றன. அதை அ.தி.மு.க-வும் ஏற்றுக்கொண்டிருக்கிறது, தி.மு.க-வும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கொல்லப்பட்டவர்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் முன்னின்றிருக்கிறது, ம.தி.மு.க அதற்காகப் போராடி இருக்கிறது. எல்லாருமே அதற்காக முன்னின்றிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, ஏன் ஒன்றுபட்டு முடிவு எடுக்கக் கூடாது? இந்தச் சமயத்தில் கட்சி அரசியல் வேண்டாம். அனைவரும் ஒன்றுபட்டு ஒரு முடிவு எடுப்போம் என்கின்ற கோரிக்கையை இந்தச் சமயத்தில் வைக்கிறேன்.
கேள்வி: அந்தக் காலகட்டத்தில் (இனப்படுகொலை நடக்கும்போது) இந்தியாவில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. இப்போது அவர்கள் கூட்டணியில்தான் இருக்கிறார்கள். அப்படியானால், அவர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? தமிழின ஆதரவு கருத்துக்கு முன்வருவார்களா? பா.ஜ.க அரசு முன்வருமா?
பதில்: காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததில்லை. இதுபோன்ற மனிதநேய விடயங்களில் ஐ.நா.வே சொல்லியிருக்கும்போது, இதற்கு எதிரான நிலைப்பாட்டைக் காங்கிரஸ் எடுக்கும் என்றால், தமிழ் மக்களிடத்தில் அவர்கள் தனிமைப்பட்டுப் போவார்கள். கடந்த காலத் தவறுகளை அவர்கள் மீண்டும் செய்யக்கூடாது. “இல்லை, நாங்கள் இப்படியே தான் நிற்போம்” என்று சொன்னால், அவர்கள் கடுமையான எதிர்ப்பை (எப்படி 2009-க்குப் பிறகு எதிர்கொண்டார்களோ) அதே மாதிரி மீண்டும் எதிர்கொள்ள நேரிடும்.
இந்தச் சமயத்தில் இன்னொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். நேற்று முன்தினம், சர்வதேச ஐ.நா.வினுடைய சிறப்பு மேற்பார்வையாளராக இருந்த ’யாஸ்மின் சூக்கா’ போன்றவர்களின் தலைமையில் இயங்கக்கூடிய சர்வதேச அமைப்பான ITJP ஓரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால், அமைதிப்படையை ராஜீவ் காந்தி அனுப்பிய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளோடு அவர்கள் முரண்பட்ட சமயத்தில், பத்தாயிரம் பேர் இந்திய அமைதிப்படையின் கீழாகக் காணாமல் போயிருக்கிறார்கள். அந்தப் பத்தாயிரம் பேர் குறித்த பெயர் விவரங்கள், எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர், எந்த ஊரைச் சார்ந்தவர் என்று கிட்டத்தட்ட 10,000 முதல் 15,000 பேரின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். இதைக் குறித்து ஒரு விசாரணை நாளைக்கு நடக்கும் என்றால், அது யார் மீதான விசாரணையாக வரும் என்றால், அது ராஜீவ் காந்தி மீதான விசாரணையாக வரும்.
இதை நாங்கள் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அமைதி படையின் வன்முறைகள் குறித்து 1989 இல் ’அம்னெஸ்டி இன்டர்நஷனல்’ ஏற்கனவே ஒரு வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள். இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதைத் திரும்பவும் மேலெடுத்துக் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பினால், இப்போது 15,000 பேரின் பெயர்ப் பட்டியலே வெளிவந்துவிட்டது.அமைதிப்படைக் காலகட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பெயர்ப் பட்டியலே வெளிவந்திருக்கிறது. இதை நாங்கள் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. சர்வதேச மட்டத்தில் இருக்கக்கூடிய மனித உரிமை ஆர்வலர்கள் வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில், இந்தியாவில், உலகத்தில் எங்கும் இது வெளியே வரவில்லை. முதல் முறையாக நாங்கள் சொல்கிறோம் – அந்தத் தகவல் வெளிவந்திருக்கிறது.
இது நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றால், யாருக்குக் கடினம், யாருக்கு நட்டம் என்பதை எல்லாம் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 2009-இல் நடந்த இனப்படுகொலைக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும். அது நியாயமான ஒரு விடயம். எங்கேயோ கனடா நாடு இதற்கான நீதிக்கான நினைவுச் சின்னத்தை எழுப்பி இருக்கிறது, இனப்படுகொலை நாளை அங்கீகரிக்கிறது. அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டுக்கு என்ன குறை? தமிழ்நாடு காங்கிரஸ்காரர்களுக்கு என்ன பிரச்சினை? இதுதான் கேள்வியாக வரும். ஆகவே, அவர்கள் இப்படி ஒரு எதிர்நிலையை எடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.
கேள்வி: இது குறித்து முதல்வரை சந்திப்பீர்களா?
பதில்: தேவைப்பட்டால் நிச்சயமாக முதல்வரை சந்திப்போம். இந்த விடயத்தில் நாங்கள் யாரையும் ஒதுக்குவதாக இல்லை. இதில் ஒரு முடிவு வர வேண்டும் என்று விரும்புகின்றோம். நிச்சயமாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து இதற்கான ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சியும் எடுப்போம்.
கேள்வி: பேரறிவாளன் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: அது தேவையில்லாத விடயம். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். விடுதலைக்குப் பின்னால் ஒருவரைக் குற்றவாளி என்று சொல்வது ஏற்புடையதல்ல, விளம்பரத்திற்காக அவர்கள் (காங்கிரஸ்) பேசிக்கொண்டு இருப்பார்கள்.
மேகதாது அணையைக் காங்கிரஸ் அரசாங்கம் கர்நாடகத்தில் கட்டுவோம் என்று சொல்லும்போது, தமிழ்நாடு காங்கிரஸ் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்கும். அப்போது பேச மாட்டார்கள். இப்போது ராஜீவ் காந்தி பிரச்சினை அல்லது ஈழப் பிரச்சினை என்று வந்தால் எடுத்துப் பேசுவார்கள். ஏனென்றால், அப்போதுதான் விளம்பரம் கிடைக்கும். ஆனால், விளம்பரத்திற்காகச் செய்யக்கூடிய முயற்சி சட்டரீதியாக என்றைக்குமே நியாயமாகாது. ஏனென்றால், அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படாத போதும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறையில் அடைபட்டிருந்தார். அதையும் மீறி நன்கு படித்து வழக்கறிஞராகி இருக்கிறார். அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதில் என்ன தவறு இருக்கிறது?
நிறைவாக, பொதுமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். நாளைக்கு (மே 17, 2026) நினைவேந்தல் இருக்கிறது. ஊடக நண்பர்கள் அவசியம் வர வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். எங்களுடைய ஊடகச் சந்திப்பை செய்தியாக்கினால் கொஞ்சம் உதவியாக இருக்கும். ஏனெனில் எங்களால் செய்திகளை பெரிய அளவுக்குக் கொண்டு போக முடியவில்லை.

நாளை மே 17ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு சென்னையில் இருக்கக்கூடிய பெசன்ட் நகர் கடற்கரையில், இனப்படுகொலையான தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நாங்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துகின்றோம். அதில் சாதி, மதம் கடந்து, கட்சி கடந்து அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கிறார்கள். 16 ஆண்டுகளாக நடந்து வருகிறது இது. நீங்கள் குடும்பத்தோடு திரண்டு வந்து, அங்கே இனப்படுகொலையான தமிழர்களுக்கு நினைவேந்த வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் உங்கள் முன் தாழ்மையுடன் முன்வைக்கிறோம். இது நம்முடைய தொப்புள்கொடி உறவுகளுக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை. இதில் எந்தக் கட்சி அடையாளங்களும் இல்லை. இதுவரைக்கும் 16 ஆண்டுகளாக அப்படி எந்த அடையாளமும் இல்லாமல்தான் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. ஆகவே, நீங்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்துவதற்காக, அவர்களுக்குச் சுடரேற்றி மரியாதை செலுத்துவதற்காக வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
மே 17ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு பெசன்ட் நகர் கடற்கரையில் நாம் அனைவரும் ஒன்றுகூடுவோம்.
நன்றி!!