கோவை சிறுமி கொலை – தொடரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க சட்டமும் சமூகமும் இன்னும் தங்களுடைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய தேவையை சுட்டிக் காட்டி உள்ளது கோவை சூலூர் வன்முறை.

கடந்த மே 21, 2026 அன்று நிகழ்ந்த கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த 10 வயது சிறுமியின் இரக்கமற்ற படுகொலை என்பது தமிழ்நாடு முழுக்க அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் துயரமும், பதட்டமும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏதுமறியா பச்சிளம் தளிர் போன்ற 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உடலை சிதைத்து, அவளது தலைமுடியை கொண்டே கழுத்தை நெறித்துள்ளதாகவும், முகம் கைகால்கள் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் வெளியாகிய செய்திகள் மக்கள் மனதை பதைபதைக்கச் செய்கின்றன. மனித உரிமை மீறலாக ஒரு குழந்தையின் மீது நிகழ்த்தப்பட்ட இந்த படுபாதக செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

கடந்த வியாழன் அன்று சிறுமியை காணவில்லை என காவல்துறையில் பெற்றோர் புகார் அளித்த நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் மூலம் ஆய்வு செய்தனர். விசாரணையில் இருசக்கர வாகனத்தில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அந்த இரு நபர்களும் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்தவர்கள்தான் எனும் திடுக்கிட வைக்கும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அவர்கள் மீது போக்சோ மற்றும் குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.

பெரும்பாலான குழந்தை வன்முறைகளில் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவரே இப்பாதகத்தை செய்வதாக பல ஆவணங்கள் கூறுகின்றன. முன்பு இருந்த குடும்ப உறவுகளும் சமூக உறவுகளும் சிக்கலாகிப் போன இந்த நவீன காலத்தில், பக்கத்து வீட்டில் இருக்கும் குடும்பங்களோடு ஒன்றாக பழகுவது முற்றிலும் குறைந்து போய் விட்டது. முன்பு நமது ஆத்திர அவசர தேவைகளுக்கு உற்ற துணையாய் நமது உறவுகளை விட அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களே உதவி புரிந்தனர். அந்த காலத்தில் அண்டை வீட்டாரையும் ‘அத்தை’, ‘மாமா’ என அழைத்து, குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் கண்ணியமாக நடந்து கொண்ட வழிமுறை காலப்போக்கில் சிறிது சிறிதாக மறையத் தொடங்கியது. நகரங்களில் முற்றிலுமாக தொலைந்த  இந்த வழிமுறை இன்று கிராமப்புறங்களில் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. அங்கும் அலைபேசியும் தொழில்நுட்பமும் நுழைந்த பின்னர்  இளைய தலைமுறையினரிடம் குழு நடவடிக்கைகளை அதிகளவில் இன்று பார்க்க முடிவதில்லை. 

இத்தகைய சூழலில்தான் பெருகி வரும் பாலியல் குற்றங்கள் குழந்தைகளின் சமூக வாழ்வியலுக்கு பெரும் சவாலாகவே அமைந்தன. “யாரிடமும் பழகாதே, எவர் எந்த திண்பண்டங்கள் கொடுத்தாலும் உண்ணாதே, அனைவரையும் சந்தேகப்படு” என குழந்தைகளிடம் சொல்லி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள். பாலியல் வன்முறையில் ஈடுபடும் கேடுகெட்ட நபர்களால் அனைவரிடமும் அதே கண்ணோட்டத்தையே வைத்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு இந்த சமூகம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

குழந்தைகள் மீதான இத்தகைய பாலியல் வன்முறைக்கு பல காரணங்களை உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு சிறு குழந்தையிடம் பாலியல் இச்சையை தேடும் கேடுகெட்ட மனநிலை எங்கிருந்து வருகிறது என பார்த்தோம் என்றால் அதற்கு பல காரணிகள் இருக்கின்றன. முதல் காரணம் போதை, அடுத்தது தடையற்ற ஆபாச வீடியோக்கள், பாலியல் உறவு குறித்த அரைகுறை சிந்தனை என பல கேடுகெட்ட விடயங்கள் இந்த பட்டியலில் இருக்கின்றன. இதன் காரணமாகவே ஒரு குழந்தையைப் பார்க்கும் போது அதுவும் தன் குழந்தையைப் போன்றதுதான் என்று நினைவில் வராமல் இத்தகைய வன்முறையை நிகழ்த்துகிறார்கள். குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்கள், ஏன் வயதான முதியவர்கள்கூட தனது பேத்தி வயதிருக்கக்கூடிய குழந்தைகளை தவறாகப் பார்க்கும் பார்வையை மேற்கூறிய காரணிகள் உண்டாக்கி விடுகின்றன. 

கோவை சிறுமியின் வன்கொடுமை போலவே காஷ்மீரில் 2018ல் ஆசிபா என்ற சிறுமியை இந்துத்துவ சனாதனத்தை பின்பற்றும் நபர்கள் பாலியல் கொடுமைகள் செய்து படுகொலை செய்தனர். ஆசிபாவின் தந்தை அவளை ஊரெங்கும் தேடினார்….கோவிலைத்தவிர…”அங்கு குழந்தை எப்படி இருப்பாள், அது புனிதமான இடம் ஆயிற்றே!”  என நினைத்து அங்கு மட்டும் தேடவில்லை.

ஆனால் அக்குழந்தையை கொன்ற இந்துத்துவவாதிகளை காப்பாற்றும் நோக்கில் சில அரசியல் கட்சிகள் இறங்கியதையும் நாம் பின்னர் அறியப்பெற்றோம். இவ்வாறு காமம், போதை, மதவெறி அரசியல் என அனைத்து விடயங்களும் சிறு குழந்தைகளை பலிவாங்கிக் கொண்டே இருக்கின்றன. பெண்களையும் குழந்தைகளையும் சக உயிர் தான் என பார்க்காமல், வலிமை குறைந்தவர்களாக நினைப்பதும், தனக்கு கட்டுப்பட்டவர்கள் என அடிமையாக நடத்த நினைப்பதும், சனாதன மனநிலையில் பார்ப்பதுமே இதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. 

 எளிதில் குறிவைத்து தாக்கப்படும் மனிதர்களை குறிப்பாக பெண்களை சாதி ஒருபுறம் அடிமைபடுத்தி சொந்தம் கொண்டாடுகிறது. மறுபுறம் ஆணாதிக்க சிந்தனை இவர்களைப் பந்தாடுகிறது. இவை இரண்டிற்குமே சனாதன மனபோக்குதான் காரணியாக அமைகிறது என்றால் மிகையில்லை.

இவ்வாறு பெண்களை / குழந்தைகளை போதை பொருளாக பார்க்கும் மனநிலையை உருவாக்கும் அனைத்து காரணிகளையும் இந்த சமூகம் புறந்தள்ளவேண்டும். “குழந்தைகளை குழந்தைகளாக காணுங்கள்” என்று அறிவுறுத்தும் அளவிற்கு வீழ்ந்து கிடைக்கும் சீழ்பிடித்த மனநிலை கொண்டோர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  

ஒருபுறம் சாதிய ஆணாதிக்க மனநிலை கொண்ட தந்தையோ, அண்ணணோ, உறவினரோ பெண்கள் தானாக சிந்தித்து முடிவெடுக்க விடாமல், அடக்கி வைக்க நினைப்பதும், மீறி காதலோ அல்லது திருமணமோ செய்துவிட்டால் ஆணவப்படுகொலை செய்வதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. மறுபுறம் குழந்தைகள் மீதான போக்ஸோ குற்றங்களின் வழக்குகளும் நீதிமன்றங்களில் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. சென்னையில் மட்டுமே 600-க்கும் மேற்பட்ட வழக்குகளும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் ஆயிரக்கணக்கில் போக்ஸோ வழக்குகளும் பதியப்பட்டு இருக்கின்றன. (போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து  வருவது குறிப்பிடத்தக்கது.)

சாக்லட் கொடுத்து குழந்தைகள் மீது வன்முறை, பக்தி என்ற பெயரில் பெண்கள் மீது வன்முறை – இவை போன்ற பல கொடுஞ்செயல்களைத் தடுக்க தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சொல்லிசென்ற பெண்ணுரிமை கருத்துகளும் சட்ட வழிகாட்டுதலும் சமூகத்திற்கு பயன்படுமே தவிர வேறெந்த ‘கதாநாயக பிம்பமும்’ இச்சிக்கலில் முன்வராது. கொள்கை ரீதியாக தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை இப்போதுதான் அதிகமாகி இருக்கிறது. மேலும் இது போன்ற குற்ற செயல்களைத் தடுக்க கடுமையான தண்டனையுடன் கூடிய சட்டத்தை அமல்படுத்துவதும் நிலுவையில் உள்ள போக்ஸோ வழக்குகளுக்கு நீதி கிடைக்கச் செய்வதுமே அரசின் முதல் கடமை என்பதை உரக்க சொல்வோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »