
தமிழனின் உயிர் மலிவானதல்ல. கடலில் சாகும் ஒவ்வொரு தமிழனுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை மாநில மற்றும் ஒன்றிய அரசுக்கு உண்டு.
“மாற்றம் வேண்டும்” என்று மக்கள் கொடுத்த ஆணையின் பொருள் வெறும் அறிவிப்புகளும் நலத்திட்டங்களும் அல்ல. ஆபத்தில் சிக்கும் போது அரசு தன் மக்களுக்காக அரணாக நிற்குமா, இல்லையா என்பதே உண்மையான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.
ஓமான் கடலில் ஜூன் 11 அன்று உயிரிழந்த தமிழக மாலுமி நிஷாந்த் உயிர்தநாதனின் மரணம், அந்தத் தேர்வில் அரசு தோற்றுப் போனதற்கான சாட்சி. ₹2500க்கு வாங்க முடிந்த மருத்துவ விசா, ஒரு மணி நேர மருத்துவ உதவி – இவை இரண்டும் கிடைத்திருந்தால் இன்று அவர் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக உயிரோடு இருந்திருப்பார். இது ஒரு தனி நபரின் மரணமல்ல. வெளிநாட்டு கப்பல்களில், அண்டை மாநில எல்லையில், சர்வதேச கடலில் – தமிழக மீனவனும் மாலுமியும் தொடர்ந்து கைவிடப்படும் அரசின் தோல்வி
அமெரிக்கா–ஈரான் போர் பதற்ற சூழலில், ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஓமன் நாட்டுக்குச் சொந்தமான எம்.டி. செலஸ்டியல் கப்பலில் இரண்டாம் நிலை அதிகாரியாக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த மாலுமி நிஷாந்த் உயிர்நாதன், கடந்த ஜூன் 11ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

நிஷாந்த் இரண்டு குழந்தைகளின் தந்தை. அவரது மனைவி அளித்த பேட்டிகளில், கணவரின் உடல் மட்டுமே இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டதாகவும், குடும்பத்தினர் தமிழ்நாட்டிலிருந்து ஹைதராபாத் சென்று உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது தனிப்பட்ட உடைமைகள் இன்றளவும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, நிஷாந்திற்காக மட்டுமல்லாமல் அவருடன் உயிரிழந்த மற்ற இரு மாலுமிகளின் குடும்பங்களுக்கும் சேர்த்து நியாயமான இழப்பீடும் உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். “இந்த மரணத்திற்குப் பொறுப்பு யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஒன்றிய அரசு, மாநில அரசு மட்டுமல்லாமல் அமெரிக்க அரசிடமும் விளக்கம் கோரியுள்ளார்.

முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காததாலும், கப்பல் நிறுவனத்தின் அலட்சியத்தாலும் நிஷாந்த் உயிரிழந்ததாக இந்திய மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் சங்கமான எப்.எஸ்.யூ.ஐ. (Forward Seamen’s Union of India) குற்றம்சாட்டியுள்ளது. மாலுமிகள் சங்கங்களின் கூற்றுப்படி, சுமார் 2500 ரூபாய் செலவில் மருத்துவ விசா பெற்று ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவ உதவி வழங்கப்பட்டிருந்தால் நிஷாந்தின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடிந்திருக்கலாம். இது உண்மையெனில், இந்த மரணம் ஒரு சாதாரண விபத்தாக அல்ல; அலட்சியத்தின் விளைவாகப் பார்க்கப்பட வேண்டியதாகும்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று வரை ஒன்றிய அரசோ, தமிழக அரசோ விரிவான மற்றும் வலுவான அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிடவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இதுகுறித்து நேரடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. மீன்வளத்துறை அமைச்சர் ஏ. ஸ்ரீநாத், நிஷாந்தின் மனைவி சரோபின் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து, கல்வித் தகுதிக்கேற்ற அரசு வேலை, குழந்தைகளின் கல்வி உதவி மற்றும் தேவையான அரசாங்க ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்திருப்பது வரவேற்பிற்குரியது.
தமிழக அரசு வெறும் ஆறுதல் அறிவிப்புகளோ நிவாரண வாக்குறுதிகளோ வழங்குவதோடு தனது பொறுப்பை முடித்துக் கொள்ள முடியாது. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாலுமி சர்வதேச கடற்பகுதியில் உயிரிழந்திருக்கிறார். மருத்துவ உதவி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், கப்பல் நிறுவனத்தின் பொறுப்பு, இந்திய தூதரகத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஒன்றிய அரசின் வெளியுறவுக் கொள்கை சார்ந்த செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு இந்திய ஒன்றிய அரசிடம் விளக்கம் கோர வேண்டும். இந்த மரணம் எவ்வாறு நிகழ்ந்தது, அதைத் தடுக்க முடியுமா, எதிர்காலத்தில் இதுபோன்ற உயிரிழப்புகளைத் தவிர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்பதற்கான பதில்களை ஒன்றிய அரசிடமிருந்து பெறுவது தமிழக அரசின் கடமையாகும்.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 2026 ஏப்ரல் 9 அன்று நெல்லூர் மாவட்ட கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி 7 தமிழக மீனவர்கள் ஆந்திரப் பிரதேச அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 2026 ஜூன் மாதத்தில் 19 தமிழக மீனவர்கள் ஆந்திரப் பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது புதிதல்ல. ஆனால் இன்று அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசமும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நிலை உருவாகியுள்ளது. இது தமிழர்களின் கடல்சார் வாழ்வாதார உரிமைகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
இலங்கை கடற்படை கைது செய்தாலும், ஆந்திரப் பிரதேச காவல்துறை கைது செய்தாலும், பாதிக்கப்படுவது தமிழக மீனவர்களே. எனவே தமிழக மீனவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பாக உறுதியான நிலைபாடு எடுக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பாகும். தமிழக மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் ஒன்றிய அரசை கேள்வி கேட்கவும், பதிலைக் கோரவும் தமிழக அரசு தயங்கக் கூடாது.
ஓமன், அமெரிக்காவுடன் பேசி மாலுமியை மீட்க வேண்டிய பாஜக அரசு எந்த மனிதாபிமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.. மேலும் கப்பல் நிறுவனமும் அரசுத் தரப்பும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காததே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என குடும்பத்தினரும் உடன் பணியாற்றிய மாலுமிகளும் குற்றம்சாட்டுகின்றனர். மூன்று நாட்கள் குளிர் பதன வசதி இன்றி மாலுமியின் உடல் அழுகியது. வெளிநாட்டில் சிக்கும் இந்திய குடிமக்களின் மருத்துவப் பாதுகாப்பு கட்டமைப்பு குறைபாடு குறித்து மாலுமிகள் சங்கம் கண்டனக் குரல் எழுப்பினர். மூன்று நாட்களுக்குப் பின்னர் கடும் கண்டனங்கள் வலுத்தப் பின்னரே மாலுமியின் உடலை மீட்கும் முயற்சியை மோடி அரசு மேற்கொண்டது. மேலும், அதே கடற்பகுதியில் நின்றிருந்த மற்றொரு இந்தியக் கப்பல் மீது ஜூன் 10-ல் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். நாட்டிற்கு சேவையாற்ற சென்ற மாலுமிகளின் உயிர்கள் பறிபோனது குறித்து வலிமையான கண்டனம் எதுவும் மோடி அரசு தெரிவிக்கவில்லை

சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் ஒருவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக 30 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. அந்த மனிதாபிமான அக்கறை பாராட்டத்தக்கது. ஆனால் அதே அக்கறை கடலில் உயிரிழக்கும் தமிழர்களுக்கும், வெளிநாடுகளில் உயிரிழக்கும் தமிழர்களின் குடும்பங்களுக்கும், வாழ்வாதாரப் போராட்டத்தில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும்.
நலத்திட்டங்கள் ஒரு அரசின் செயல்பாட்டின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால் ஒரு அரசு தனது மக்களுக்காக நெருக்கடியான நேரங்களில் எவ்வளவு உறுதியாக நிற்கிறது என்பதுதான் அதன் உண்மையான அளவுகோல். தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும், வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், அவர்களின் உயிர், உரிமை மற்றும் பாதுகாப்பிற்காக தமிழக அரசு வலுவான குரலாக செயல்பட வேண்டும்.
அதுவே தமிழர்களின் கோரிக்கை!!!.