
அண்மையில் அமெரிக்காவில் ஒரு நிகழ்வில் பேசிய அண்ணாமலை “அமெரிக்காவில் 4 லட்சம் இலங்கை தமிழர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 90,000 புலம்பெயர்ந்தோர் உள்ளனர். போரால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழும் இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவர்களுக்காக இனி துணை நிற்பேன்” என பேசியுள்ளார். அண்ணாமலையின் இத்தகைய திடீர் ‘ஈழ ஆதரவு முகமூடி’க்குப் பின்னால் பல துரோகங்கள் மறைந்து கிடக்கின்றன. தற்போது புது இயக்கம் தொடங்கியவுடன் ஈழத்தமிழர் நலனில் அக்கறை காட்டுவதாக நாடகம் நடத்துகிறார் அண்ணாமலை. ஈழத் தமிழர் குடியுரிமை விடயத்தில் துரோகம் இழைத்த பாஜகவின் பாசறையில் இருந்து வந்த அவரின் ‘ஈழ ஆதரவு முகமூடி’யை அவிழ்க்க வேண்டிய தேவை இப்போது நமக்கு எழுந்திருக்கிறது.
தமிழீழ மக்களை குறிக்கும் போது ‘ஈழத்தமிழர்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் ‘இலங்கை தமிழர்கள்’ என்று கூறி இருக்கிறார் அண்ணாமலை. ஈழத்தமிழர்களை இலங்கை தமிழர்கள் என்று குறிப்பிடுவதே முதலில் அவர்களின் தேசிய இன உரிமையை மறுக்கும் செயலாகும். அங்கு நடந்த 60 ஆண்டுகளான போராட்டமே ‘ஈழத்தமிழர்கள் தனித்த தேசிய இனத்தை சேர்ந்தவர்கள்’ என்பதை நிறுவுவதற்கான போராட்டம்தான். ஆனால் அதை ஏற்காமல் (‘ஈழத்தமிழர்கள்’ என்று கூறாமல்) அவர்களின் போராட்டத்தை புறந்தள்ளியிருக்கிறார் அண்ணாமலை. மேலும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் பாஜக பல முறை ஒவ்வாமையுடனேதான் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ் தேசிய இனம் எழுச்சி பெற்று விடக்கூடாது என்பது அவர்களின் இலக்கு. இப்போது பாஜகவில் இருந்து வெளியேறி விட்டதாக அண்ணாமலை கூறினாலும் இன்னும் ஆர்.எஸ்.எஸ்ஸின் வேர் அவருள் இருக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு முறையும் ‘ஈழத் தமிழர்’ என்று கூறாமல் ‘இலங்கைத் தமிழர்’ என்றே குறிப்பிடுகிறார் அண்ணாமலை. ‘ஈழத் தமிழர்’ என்ற சொல் அவரிடம் வருவதே இல்லை.
மேலும் தற்போது ஈழத்தமிழர்களுக்கு துணை நிற்பதாகக் கூறிய அண்ணாமலை, அவர்களின் குடியுரிமை விடயத்தில் செய்த துரோகத்தை யாரும் மறக்கவில்லை. கடந்த 2019-இல் மக்களவையில் பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வந்த போது, இந்தியாவில் குடியுரிமை கோரக்கூடிய சிறுபான்மையினர் பட்டியலில் இசுலாமியரும் ஈழத்தமிழரும் புறக்கணிக்கப்பட்டனர். இப்போது “இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க துணை நிற்பேன்” என்று கூறிய அண்ணாமலை, அப்போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை பேசவில்லை. மாறாக, “ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் மதரீதியான துன்புறுத்தல்களைப் போலல்லாமல், இலங்கையில் தமிழ் அரசியல் பிரச்சினைகள் உள்நாட்டிலேயே தீர்க்கப்படுகின்றன” என்று கூறினார். இதை ஒரு காரணமாக் கூறி, ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதை ஆதரித்து பேசியவர்தான் அண்ணாமலை. பல ஆண்டுகளாக அகதி முகாம்களில் வதைபட்டு, குடியுரிமை இல்லாததால் வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த ஈழத்தமிழர்களுக்கு இத்தகைய துரோகத்தை செய்து விட்டு, இப்போது நாடகமாடி வருகிறார் அண்ணாமலை.

மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் “மதரீதியான துன்புறுத்தல்களிலிருந்து தப்பி வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு உதவுவதற்காகவே வடிவமைக்கப்பட்டது” என்றும் அவர் கூறினார். எண்ணிக்கையில் மிக சிறிய சதவீதமாக இருக்கும் பௌத்தர்களுக்கு கூட குடியுரிமை வழங்க அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த நிலப்பரப்பில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து, ஒரு இனப்படுகொலையை எதிர் கொண்ட ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கேட்க அண்ணாமலைக்கு தையரிமுமில்லை, அதைப் பற்றி பேசியதுமில்லை.
“பாஜகவில் இருந்தபோதும் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து உள்ளேன்” என்று கூறுகிறார் அண்ணாமலை. அவர் கூறிய காலகட்டத்தில் இரு முறை இலங்கைக்கு சென்றுள்ளார் (2022 மற்றும் 2023). ஆனால் இந்த பயணங்களின் போது, இலங்கை அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாகவே பேசியுள்ளார். ‘பதின்மூன்றாவது திருத்தம்’ உண்மையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை என்பதை திட்டமிட்டு மறைக்கிறார்.
இது குறித்து மே பதினேழு இயக்கக் குரல் கடந்த 2022லேயே கட்டுரை வெளியிட்டிருக்கிறது. “இந்த (பதின்மூன்றாவது திருத்தம்) ஒப்பந்தமானது தமிழீழ மக்களின் அரசியல், தேசிய நலன்களைப் பேணுவதாக அமையவில்லை. தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனையின் சிக்கலான பரிமாணங்களை எந்த வகையிலும் செம்மையாக அணுகவில்லை. அவற்றிக்கு பரிகாரம் காண முனையவில்லை. மாறாக, ஈழத்தமிழரின் தேசிய பிரச்சனையை முற்றிலும் தவறான அடிப்படையில் இந்த ஒப்பந்தம் தொட்டு நிற்கிறது”– இந்திய இலங்கை ஒப்பந்தம் – விடுதலை புலிகளின் நிலைப்பாடு, பக்கம்-3
“இந்தியா முன்மொழியும் இந்த 13-வது சட்டத்திருத்தத்தால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக, ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படையையே மறுத்துவிட்டு, பிரச்சனைக்குரியவையையே தீர்வாக முன்வைக்கிறது. இதைப் புரிந்துகொண்டு தான் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோதே அதனை மிகக்கடுமையாக எதிர்த்தனர். ஈழத்தமிழர்கள் 13-வது சட்டத்திருத்ததை புறக்கணிக்கின்றோமென்று 30-01-22 அன்று மாபெரும் பேரணியை நடத்திக் காட்டினார்கள்” – மே பதினேழு இயக்கக் குரல் கட்டுரை (https://may17kural.com/wp/proposed-13th-amendment-rejected-by-tamils-is-being-re-imposed/) இந்த பதின்மூன்றாவது திருத்தத்திற்கு ஆதரவாகத்தான் பேசுகிறார் அண்ணாமலை.

அவர் கடந்த முறை இலங்கை சென்றுவந்தபோது கூட 13ஆவது சட்டதிருத்தத்தை தான் தீர்வாக கூறி இருக்கிறார். இந்த 13ஆவது சட்டதிருத்தத்தை தான் இந்திய பார்ப்பனிய அரசு ஈழத்தமிழர்களுக்கான தீர்வாக கடந்த 30ஆண்டுகளாக சொல்லிவருகிறது. அதன்மீது கூட எந்த குறைந்தபட்ச நடவடிக்கையும் எடுக்காத இந்தியாவின் குரலைத்தான் அண்ணாமலையும் பேசுகிறார். இதனால் தமிழர்களுக்கு ஒருபயனும் ஏற்படாது என்பதே உண்மை.
ஈழத்தமிழர்கள் தனித்த தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொண்டு, ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்றும், அந்த மக்களிடம் ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்துவதன் மூலமே ஈழத்தமிழர்களுக்கான தீர்வை அறிந்து கொள்ள முடியும் என்பதையும் மே17 இயக்கம் கடந்த 18 ஆண்டுகளாக சொல்லிவருகிறது. இதைத் தவிர்த்து வேறு எந்த தீர்வும் ஈழத்தமிழர்களுக்கு பயன் தராது என்பதுதான் வரலாற்று உண்மை. ஆனால் இந்த இனப்படுகொலை குறித்தோ பொது வாக்கெடுப்பு குறித்தோ அண்ணாமலை இதுவரை வெளிப்படையாக பேசவில்லை. மேலும் ‘ஈழத்தமிழர்களுக்கு தனித் தமிழீழமே ஒரே தீர்வு’ என்பது தமிழ்தேசியவாதிகளின் முழக்கம். அதை அண்ணாமலை வெளிப்படையாக முழங்குவாரா? ITJP அறிக்கை மூலம் ஈழத் தமிழர்கள் மீதான வன்முறை அறிக்கையாக வெளி வந்தபோதும், செம்மணியில் எலும்புக் கூடுகள் மட்டுமல்லாது புத்தகப்பை, பொம்மை, சிறுமிகள் அணியும் செருப்பு என ஈழத்தமிழரின் துயரம் வெளி வந்தபோதும் அண்ணாமலை வாய் திறந்தாரா? இல்லை.
“இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்” என்று கூறிய கட்சி பாஜக. அவர்களை தமிழினமாக மட்டுமல்ல, மனிதர்களாகக் கூட மதிக்காத ஒரு கட்சியின் தலைவராக செயலாற்றியவர் அண்ணாமலை. இப்போது புதிதாக இயக்கம் தொடங்கி இளைஞர்களை மடைமாற்றப் பார்க்கிறார்.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், 233 தொகுதிகளில் தோற்று பாஜக தமிழ்நாட்டில் படுதோல்வி அடைந்தது. எனவே ஆட்டுத்தோல் போர்த்திய நரிகளாக இப்போது பலரை இயக்கம் தொடங்க வைத்து, மாணவர்களை நோக்கி அனுப்பி வைத்திருக்கிறது. அண்ணாமலையும் இதில் ஒருவரே. முன்பு ஆர்.எஸ்.எஸ்ஸின் ‘இயற்கை பாசறை’ முகமாக இருந்து மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார் சீமான். இப்போது ஆர்.எஸ்.எஸ்-ஸின் வலதுசாரி தமிழ்த்தேசிய முகமாக பேசிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. தமிழர்கள் விழிப்புடன் இருந்து இத்தகைய நபர்களின் முகமூடிகளை கழட்ட வேண்டும், அவர்களை அம்பலப்படுத்த வேண்டும். ஈழத்தமிழர்களின் விடயத்தில் நாடகமாடி வரும் நரிகளை புறக்கணிக்க வேண்டும்.