மீண்டும் திணிக்கப்படும் தமிழர்கள் நிராகரித்த 13-வது சட்டத்திருத்தம்

மீண்டும் திணிக்கப்படும் தமிழர்கள் நிராகரித்த 13-வது சட்டத்திருத்தம்

13-வது சட்டத்திருத்தத்திற்கு அடிப்படையான 1987 ராஜீவ்-ஜெயவர்தனே ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது

13-வது சட்டத்திருத்தம் எனும் இந்தியப் பேய் மீண்டும் ஈழத்தமிழர்களை பயமுறுத்த தொடங்கியிருக்கிறது.

ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத, இலங்கை இனவாத அரசும் ஏற்றுக்கொள்ளாத இந்தியாவால் முன்மொழியப்பட்ட 13-வது சட்டத்திருத்தம் என்ற பேயை 1987க்கு பிறகு மீண்டும் ஈழத்தமிழர்களின் மீது ஏவிட இந்திய அரசு முனைக்கிறது. இதை ஈழத்தமிழர்கள் ஒற்றுமையுடன் இருந்து முறியடிக்க வேண்டும். ஏனென்றால் இந்தியா முன்மொழியும் இந்த 13-வது சட்டத்திருத்தத்தால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக, ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படையையே மறுத்துவிட்டு, பிரச்சனைக்குரியவையையே தீர்வாக முன்வைக்கிறது. இதனால் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோதே அதனை மிகக்கடுமையாக எதிர்த்தனர்.

“இந்த ஒப்பந்தமானது தமிழீழ மக்களின் அரசியல், தேசிய நலன்களைப் பேணுவதாக அமையவில்லை. தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனையின் சிக்கலான பரிமாணங்களை எந்த வகையிலும் செம்மையாக அணுகவில்லை. அவற்றிக்கு பரிகாரம் காண முனையவில்லை. மாறாக, ஈழத்தமிழரின் தேசிய பிரச்சனையை முற்றிலும் தவறான அடிப்படையில் இந்த ஒப்பந்தம் தொட்டு நிற்கிறது

– இந்திய இலங்கை ஒப்பந்தம் – விடுதலை புலிகளின் நிலைப்பாடு, பக்கம்-3

இப்படியான போலியான, வெறுமையான, எந்தவித சுயாட்சி அதிகாரமுமற்ற மாகாண சபைத் திட்டத்தைத்தான் இந்தியஇலங்கை ஒப்பந்தம் தமிழரின் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வுத் திட்டமாக முன்வைக்கிறது. இதிலிருந்து ஒன்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. அதாவது, தமிழரின் பிரச்சனையை தீர்த்துவைப்பதற்காகவோ அன்றி தமிழரின் நலன்களைப் பேணுவதற்காகவோ இந்த ஓப்பந்தம் செய்யப்படவில்லை. இந்திய அரசானாது தனது தேசிய பூகோள நலன்களைக் கருதியே இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்கிறது. தமிழ் மக்களின் நலன்களை முற்றாகப் புறக்கணித்து, அவர்களது நியாயபூர்வமான அரசியல் கோரிக்கைகளை உதாசீனம்செய்து இந்திய அரசானது தனது பூகோள நலன்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்துள்ளமைதான் இந்த ஒப்பந்ததின் அடிப்படை குறைபாடாகும்.”

– இந்திய இலங்கை ஒப்பந்தம் – விடுதலை புலிகளின் நிலைப்பாடு, பக்கம்-13,14

இந்திய இலங்கை ஒப்பந்ததின் அடிப்படை நோக்கமே குறைபாடுயுடையது என்பதனால்தான் அதனை அன்று ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளான விடுதலை புலிகள் எதிர்த்தனர். ஆனால் இன்று அதே ஓப்பந்ததின் 13-வது சட்டத்திருத்ததை கொண்டுவரவேண்டுமென்று இந்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் சிலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க இந்தியா அரசின் சதியே ஆகும். இதைப் புரிந்துகொண்டு தான் ஈழத்தமிழர்கள் 13-வது சட்டத்திருத்ததை புறக்கணிக்கின்றோமென்று 30-01-22 அன்று மாபெரும் பேரணியை நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.

இந்தியா ஏன் 1987க்கு பிறகு மீண்டும் இவ்வளவு தீவிரமாக 13-வது சட்டத்திருத்திற்காக பேசுகிறதென்றால் இந்தியாவின் நலன் தான். அன்று அமெரிக்கா Voice Of America என்ற வானொலி நிலையத்தை இலங்கையில் தொடங்கி இந்தியாவை வேவு பார்க்க முனைந்ததை தடுக்கவும்,  அதே நேரத்தில் உலகின் இரண்டாவது இயற்கை துறைமுகமான திருகோணமலையிலுள்ள 99 எண்ணைய் கிடங்குகளை (ஓவ்வொன்றும் 12000 கிலோலிட்டர் கொள்ளளவு கொண்டது) கைப்பற்றுவது. இந்த இரண்டு நோக்கத்திற்காகத்தான் ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா தேவையில்லாமல் மூக்கை நுழைத்தது. இந்தியாவின் இந்த தேவையில்லாத வேலை 2009-இல் இலங்கையோடு சேர்ந்து ஈழத்தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை இனப்படுகொலை செய்ய துணைபோகுமளவிற்கு போயிற்று.

இப்போது, முன்பு அமெரிக்கா என்ற ஏகாதிபத்திய அரசு இருந்த இடத்தில் இன்று சீனா வல்லாதிக்க அரசு இருக்கிறது. விடுதலை புலிகள் இருந்தவரை எந்தவொரு பெரிய வல்லரசு நாட்டையும் இலங்கைக்குள் காலூன்ற விடாமல் தடுத்திருந்தார்கள். இதனால் இந்தியாவுக்கு தெற்கிலிருந்து  எந்த பெரிய ஆபத்துமில்லாமல் இருந்தது. ஆனால் இந்தியவோ ஆரிய பகைக்கொண்டு தமிழர்களை தனது பகையாக எண்ணி இலங்கை அரசோடு சேர்ந்து ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தது. விளைவு இன்று சீனாவின் இருப்பு நாளுக்கு நாள் இலங்கைக்குள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இலங்கையில் கொழுப்பு துறைமுகத்தை வாங்கியதாகட்டும், ஹம்பந்தோட்டா துறைமுகத்தை வாங்கியதாகட்டும், இலங்கைக்குள் சாலை மற்றும் இதர வேலைகள் என்று சீனா இலங்கைக்குள் ஆழமாக வேரூன்றிவிட்டது. இவை எதையும் தோல்வியுற்ற  வெளியுறவு கொள்கைக் கொண்ட இந்தியாவினால் தடுக்கமுடியவில்லை.

எல்லாவற்றிருக்கும் மேல், இத்தனை காலம் எந்த தமிழர்களை காட்டி இலங்கை அரசை மிரட்டி வந்ததோ, அந்த ஈழத்தமிழர்களின் பூர்விக  பிரதேசமான வடக்கிற்குள்ளும் சீனா சமீபத்தில் புகுந்துவிட்டது. ஆம் சீனாவின் இலங்கைக்கான தூதுவர்  Qi Zhenhong டிசம்பர் 15-17வரை இலங்கையின் தமிழர் பகுதியான வடக்கு கிழக்கின் மன்னார், பருத்தித்துறை, கச்சத்தீவு, நல்லூர் கந்தசாமி கோவில் என்று எல்லா இடங்களுக்கும் சென்று வந்துள்ளார்.

இந்த பயணத்திற்கு முன்தான் இந்த பகுதிகளான நயினார்தீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் சீனா தொடங்கவிருந்த மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை இலங்கை இரத்து செய்துவிட்டு, அதை இந்தியாவிற்கு கொடுத்தது. சீனத் திட்டம் இரத்து செய்யப்பட்டதற்கு சீன அரசாங்கம் சீனாவின் ’குளோபல் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் ’மூன்றாம் தரப்பு நாட்டின் பாதுகாப்பு கவலைகள் காரணமாக இந்த திட்டத்தை கைவிட்டிருக்கிறோம்’ என்று சொல்லியது. பின் அந்த திட்டத்தை மாலத்தீவுக்கு சீனா மாற்றிவிட்டது.

இத்தனை ஆண்டுகாலம் சீனாவானது தனது நலனை முன்னிறுத்திம் மட்டுமே இலங்கைக்குள் பொருளாதார உதவிகள் மூலம் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. முதன்முறையாக தமிழர் பகுதிக்குள் நுழைந்தது என்பது சீனாவின் வெளியுறவுக்கொள்கையில் ஏற்பட்டிருக்கிற மிகப்பெரிய மாற்றம். இது இந்தியாவிற்கு மிகப்பெரிய கவலைதரும் விசயம்.

மேலும் மிக முக்கிய பிரச்சனையாக வடக்கு மாகாண பயணத்தின்போது சீனத்தூதுவர் கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டு புகைப்படம் எடுத்துச் சென்றிருக்கிறார். இது குறித்து அண்மையில் அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் அமெரிக்க பாராளுமன்றத்திற்கு ஒரு முக்கிய ஆவணத்தை சமர்பித்துள்ளது. மக்கள் சீன குடியரசின் 2021 ஆம் ஆண்டுக்கான இராணுவ மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி தலையீடுகள் என்ற தலைப்பில் இந்த ஆவணம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் சீனா தனது இராணுவ தளம் ஒன்றினை இலங்கையில் நிறுவ முயற்சி செய்து வருவதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இலங்கையின் கச்சத்தீவில் சீனாவுக்கான இராணுவ தளம் ஒன்றினை அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவும், சீன தூதுவரின் வடக்கு பயணத்தின் உள்நோக்கம் இது தான்.  அதோடு இந்தியாவிற்கு சொந்தமென்று இத்தனை வருடங்கள் சொல்லிவந்த திருகோணமலை எண்ணெய் கிடங்குகளுக்கான உரிமத்தை மறுபரிசீலனை செய்யபோவதாகவும் இலங்கை அறிவித்து விட்டது.

ஆக, இப்படியான இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட இந்தியாவுக்கு இதிலிருந்து மீளவும், இலங்கையை சீனாவிடமிருந்து விலக்கி இந்தியாவின் கைக்குள் கொண்டுவரவும் தேவைப்படும் கருவிதான் ஈழத்தமிழர் பிரச்சனை. மீண்டும் அதை கையிலெடுத்தால் அதன்மூலம் இலங்கையை மிரட்டவும், இலங்கைக்குள் தனது பனியா முதலாளிகளுக்கு தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்திதரவும் முடியுமென்பதற்காகவே 30 ஆண்டுகளுக்கு முன் ஆழக்குழிதோண்டி புதைக்கப்பட்ட 13-வது சட்டத்திருத்தம் என்ற பேயை மீண்டும் தமிழர்களின் மீது ஏவிட இந்தியா முனைகிறது. இது முழுக்க முழுக்க இந்தியாவிற்கான பூகோள நலன்சார்ந்த பிரச்சனையே  அன்றி இதில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு குண்டுசி அளவுக்கு  கூட தீர்வுகிடைக்காது.

இந்த பிரச்சனையை இந்தியா கையிலெடுத்தபின்னால் தான் இந்தியாவின் பனியா முதலாளியான அதானிக்கு இலங்கையில் துறைமுகம் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல், திருகோணமலை எண்ணெய் கிடங்குகள் மீண்டும் இந்தியாவிற்கே கொடுக்கப்பட்டிருப்பது போன்ற நடவடிக்கைகள் நடந்திருக்கிறது. இது இந்தியாவிற்கு பலன் கொடுத்திருக்கிறது. ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஒரு துளியாவது மாறியிருக்கிறதா? ஒருபோதும் மாறாது என்பது தான் கடந்தகால படிப்பினை. ஆகவே இதை  உணர்ந்து இந்தியாவின் சதித்திட்டமான ஈழத்தமிழர்களின் தேசிய  இனவுரிமையை மறுக்கும் 13-வது சட்டத்திருத்தத்தை தமிழர்கள் ஒற்றுமையுடன் இருந்து முறியடிக்க வேண்டும்.

இப்படி எல்லா நாடுகளையும் எதிர்த்துக்கொண்டு ஈழம் எப்படி வாங்குவது என்று சிலர் கேட்கக்கூடும். ஈழம் ஒன்றும் கடை சரக்கல்ல கடையில் போய் வாங்கிவர. உலக வல்லரசுகளின் ஆதரவு இருந்தால் விடுதலை வாங்கமுடியுமென்றால் குர்திஸ்தான் ஏன் நாடு அடையவில்லை? 56 இஸ்லாமிய நாடுகள் இருந்தும்  காஷ்மீர் ஏன் இந்தியாவிலிருந்து பிரிய முடியவில்லை? கட்டலோனியா ஏன் பிரியமுடியவில்லை? இங்கு நாடுகளின் ஆதரவு என்பதையும் விட மக்களின் போராட்டம் மிகமுக்கியம். அந்த போராட்டத்தில் சமரசமின்றி கோரிக்கைகளை உயர்த்தி பிடிக்கும் கொள்கை முடிவினை எடுப்போம். தமிழ் ஈழம் மலர்வதை மக்கள் நாம் உறுதி செய்வோம்.

One thought on “மீண்டும் திணிக்கப்படும் தமிழர்கள் நிராகரித்த 13-வது சட்டத்திருத்தம்

  1. மிக நல்ல கட்டுரை! நம்பிக்கையான கடைசி வரிகள்! அதே நேரம், 13-ஆவது சட்டத் திருத்தம் கேடு தரும் என்பது மட்டும்தான் கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கிறதே தவிர, அந்தச் சட்டத் திருத்தம் என்ன, ஏது என விவரிக்கப்படவில்லையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »