வாழ்வாதாரத்தை பறிக்கும் திருவண்ணாமலை சிப்காட் திட்டம்

வாழ்வாதாரத்தை பறிக்கும் திருவண்ணாமலை சிப்காட் திட்டம்

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதி அறிக்கையில் சிப்காட் தொழிற்பேட்டைகள் தமிழ்நாட்டில் 10 இடங்களில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த 10 இடங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்று. ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் எங்கு அமைக்கப்படும் என இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆனாலும், பாலியப்பட்டு, ஆடையூர், தேவனந்தல், அய்யம்பாளையம் போன்ற ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் வருவாய்த் துறையினர் அடிக்கடி நிலத்தை பார்வையிட்டு நில அளவை செய்து வந்ததால் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. சிப்காட் குறித்த விவரங்கள் கசிந்து மக்கள் விவரம் அறிய முயற்சித்த நிலையில், சிப்காட் அமைக்க பாலியப்பட்டு ஊராட்சியில் 1500 ஏக்கர் விளை நிலத்தையும் 500 ஏக்கர் கிராம மக்கள் வசிக்கும் வீடுகளையும் கையகப்படுத்த இருக்கும் செய்தியை அறிந்துள்ளனர். இச்செய்தியினை உறுதிபடுத்த, கடந்த 18.12.2021 அன்று கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டும் முறையான பதில் வழங்கப்படவில்லை.

அரசு அதிகாரிகளிடம் இருந்து முறையான பதில் கிடைக்காததால் பாலியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அத்தனை கிராம மக்களும் ஒன்று சேர்ந்து “சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம்” என்கிற இயக்கத்தை தொடங்கினர். தங்கள் விவசாய நிலங்களையும், வீடுகளையும் இழந்து அகதிகளாகும் நிலையை தடுக்க கடைசிவரை போராடுவது என முடிவெடுத்து 22.12.2021 முதல் பாலியப்பட்டு கிராமத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கிராம மக்களின் காத்திருப்பு போராட்டம் 50 நாட்களை கடந்தும் அவர்களின் கேள்விகளுக்கு மாவட்ட நிர்வாகம் முறையான பதிலை வழங்க மறுத்து வருகிறது.

மக்கள் ஏன் எதிர்க்கின்றனர்?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் திருவண்ணாமலை மலைக்கும் கவுத்தி-வேடியப்பன் மலைக்கும் இடையில் நீர்வளம், மண்வளம், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என்று இயற்கை எழில் கொஞ்சும் சூழலோடு பாலியப்பட்டு ஊராட்சி அமைந்துள்ளது.

சாமந்தி, கோழிக்கொண்டை, கனகாம்பரம், சம்பங்கி, மல்லி போன்ற மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு திருவண்ணாமலை மற்றும் சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், நெல், நிலக்கடலை, காய்கறிகள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து சாகுபடி செய்யப்படுகின்றன. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து உருண்டு வரும் ஓடைகள் ஆண்டு முழுவதும் விவசாய நீர்பாசனத்திற்கு உதவுகிறது. நீர் நிறைந்த பகுதி என்பதால் கால்நடை மேய்ச்சல் நிலம் மிகுதியுமாக உள்ளது. இதன் காரணமாக இக்கிராமத்தில் பால் உற்பத்தியும் அதிகளவில் உள்ளது. அக்கிராம மக்களுக்கு விவசாயம் ஆண்டு முழுவதும் வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது.

“சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக நிலத்தை வழங்கினால் அரசு தரும் இழப்பீடு அல்லது வேலை வாய்ப்பு எத்தனை தலைமுறையை காப்பாற்றும்? ஆனால், எங்கள் விவசாய நிலம் எங்களை பல தலைமுறைகளாக வாழ வைத்துள்ளது. தொடர்ந்து எங்கள் சந்ததியினரை வாழ வைக்கும் அளவிற்கு செழிப்பான நிலம்.”  என்று அம்மக்கள் உறுதிபட கூறுகின்றனர்.

கார்பொரேட்கள் குறியில் கவுத்தி – வேடியப்பன் மலை 

திருவண்ணாமலை நகரம் மற்றும் அதைச் சுற்றிய 55 கிராமங்களுக்கு நீராதாரமாகவும், பல்லினப் பெருக்க சூழலின் மையமாகவும், திகழும் கவுத்தி-வேடியப்பன் மலையை அழித்து இரும்புத் தாதுக்களை (இமடைட்) வெட்டி எடுக்க 2008ஆம் ஆண்டு வட நாட்டு மார்வாடி ஜிண்டால் நிறுவனத்துக்கு வழங்கிய அனுமதியை பாலியப்பட்டு உள்ளிட்ட 55 கிராம மக்கள் போராடி மீட்டெடுத்தனர்.

அதேபோல் 2014ல் கவுத்தி- வேடியப்பன் மலையை மீண்டும் ஜிண்டால் நிறுவனத்திற்கு தாரை வார்க்க முயன்றபோது கடுமையாக போராடி பாதுகாத்தனர். 2018ல் சேலம்- சென்னை இடையேயான எட்டு வழி சாலை திட்டத்திலும் கவுத்தி- வேடியப்பன் மலைகள், காடுகள், விளைநிலங்கள், வீடுகள் என மக்களின் நிலமும், வாழ்வாதாரமும் சுற்றுச்சூழலும் பலியாக இருந்த நிலையில் மக்களின் கடும் போராட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அதிக தரமிக்க தாதுக்கள் குவிந்துள்ளன. தமிழ் தேசிய இனத்தவரின் இந்த இயற்கை வளத்தை சூறையாடிடவே 8 வழி சாலை, சிப்காட் போன்ற கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக அரசியல் கட்சிகள் மார்வாடிகளுக்கு தரகு வேலை செய்து வருகின்றன. இம்மலை தொடர்ச்சி அழிந்தால் தமிழ்நாட்டின் மழை பொழிவு கடுமையான பாதிப்பிற்குள்ளாகும் என்று சூழலியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

செவி மடுக்காத தமிழக அரசு 

பாலியப்பட்டு ஊராட்சி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காத்திட தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை பல வடிவங்களில் மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சி காய்ச்சும் போராட்டம், கருப்பு பொங்கல், ஊருக்குள் அனைத்து வீடுகள் மற்றும் பொது இடங்களில் கருப்புக் கொடி ஏற்றுவது, குழந்தைகள் தங்கள் கிராமத்தை ஓவியங்களாக தீட்டுவது என்று போராட்டத்தை வீரியமாகவும் உற்சாகமாகவும் நடத்தி வருகின்றனர்.

  1. காத்திருப்பு போராட்டத்தின் மூன்றாம் நாள் (24.12.21) அன்று கிராமசபை கூட்டத்தைக் கூட்டி கிராம மக்கள் பாலியப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சிப்காட் தொடங்கக்கூடாது என்று அரசை வலியுறுத்தி சிறப்பு கிராமசபை தீர்மானத்தை இயற்றியுள்ளனர்.
  1. போராட்டத்தின் 6வது நாள் (27.12.21) அன்று போளூரில் நலத்திட்டங்களை வழங்கும் விழாவில் பேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு “விவசாயிகள் என்கிற போர்வையில் சிலர் சிப்காட் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். யார் எதிர்த்தாலும் திருவண்ணாமலை செங்கம் அருகே சிப்காட் வந்தே தீரும்” என்று பேசியுள்ளார். காலங்காலமாக விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழில்களை மட்டுமே செய்து வரும் தங்களின் ஜனநாயகபூர்வ போராட்டத்தையும் உணர்வையும் கொச்சைப்படுத்துவதாக அமைச்சர் பேசியதாக வருத்தப்படுகின்றனர்.
  1. 31.12.21 அன்று விவசாயிகள் குறைகேட்பு நிகழ்வில் பாலியப்பட்டு ஊராட்சி மக்கள் 200 பேர் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க சென்ற போது ஆட்சியர் திரு பா.முருகேஷ் அவர்களை சந்திக்க மறுத்துள்ளார். 200 பேரில் 10 பேரை மட்டுமே அவரது அறைக்குள் அழைத்து பேசியதுடன் “ஸ்டெர்லைட் போராட்டத்தில் என்ன நடந்தது தெரியும் அல்லவா? குண்டாஸ் போட்டு விடுவோம்” என்று மிரட்டியதாக மக்கள் கூறுகினறனர்.
  1. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.கிரண் சுருதி போராட்டம் செய்து வரும் மக்களை 6.1.22 அன்று அழைத்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசிவிட்டு பதில் சொல்வதாக கூறியுள்ளார். ஆனால், அவரும் இதுவரை போராடும் மக்களுக்கு எந்த பதிலையும் வழங்கவில்லை.
  1. 4.2.22 அன்று பாலியப்பட்டு ஊராட்சி பொதுமக்கள் மற்றும் அருகாமை கிராம மக்கள் என 500க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அணிவகுத்துச் சென்று பாலியப்பட்டில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுக்க உள்ளதை எதிர்த்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல கேள்விகளை எழுப்பி 424 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
  1. அரசு எந்த பதிலும் வழங்காமல் மவுனம் காத்து வரும் சூழலில், தொடர் காத்திருப்பு போராட்டத்தின் 50வது நாளான 9.2.22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.

பாலியப்பட்டு ஊராட்சியில் வேளாண்மை, வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் மட்டுமே மக்கள் இத்திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதாகவும்; தரிசு நிலத்தில், அரசு நிலத்தில் சிப்காட் அமைக்கப்பட வேண்டும் என்பதே தங்களுடைய கோரிக்கை என்று கூறுகின்றனர்.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்பே போராடி வரும் மக்கள், தங்கள் “பாலியப்பட்டு ஊராட்சிக்கு சிப்காட் தொழிற்பேட்டை வராது” என்கிற உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன் வைக்கின்றனர்.

வேலைவாய்ப்புகளை உருவாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அமைக்கப்படும் சிப்காட் வளாகங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதாக இருக்கக்கூடாது என்று பாலியப்பட்டு ஊராட்சி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழக முதல்வர் இந்த சிக்கலில் உடனடியாக தலையிட்டு போராடி வரும் விவசாயிகள் மற்றும் வேறு யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கான சிப்காட் வளாகத்தை பாதிப்பில்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் இனி அமைக்கப்படும் சிப்காட் தொழிற்பேட்டைகள் தரிசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற இடங்களில் தான் அமைக்கப்படும் என்பதை அரசு உறுதிப்படுத்தல் வேண்டும். இதன் மூலம் மாவட்டத்தின் வளர்ச்சியும் அதிகரிக்கும், அதேநேரம் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

அரசு செவி சாய்க்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »