வீரளூர் கள ஆய்வறிக்கை வெளியீடு: பின்னணியும் தாக்கமும்

வீரளூர் கள ஆய்வறிக்கை வெளியீடு: பின்னணியும் தாக்கமும்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியம் வீரளூர் கிராமத்தில் 16.01.2022 அன்று ஆதிக்க சாதிவெறியாட்டத்தால் பட்டியலின அருந்ததியர் சமூக மக்களின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அவர்கள் உடமைகள் சூறையாடப்பட்டன. இது குறித்து வெளியாகிய பத்திரிகை செய்திகளில் “இரு தரப்பு கோஷ்டி மோதல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இச்சம்பவத்தின் உண்மை தன்மையை கண்டறிய மே பதினேழு இயக்கம் நேரில் சென்றது.

பாதிக்கப்பட்ட வீரளூர் கிராமத்தின் அருந்ததியர் மக்களை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் மற்றும் குழுவினர் நேரில் சந்தித்து (19.01.2022 & 22.01.2022) ஆறுதல் தெரிவித்ததோடு அச்சம்பவத்தை குறித்த தகவல்களையும் சேகரித்தனர்.

வீரளூர் அருந்ததியர் மக்கள் கடந்த 02.06.2021 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் “தங்கள் சமூகத்தினர் சடலத்தை பொது வழியில் எடுத்து செல்ல அனுமதிக்கக்கோரி” மனு அளித்துள்ளனர். இந்த மனுவின் அடிப்படையில் ஆதிக்க சாதி மற்றும் அருந்ததியர் பிரதிநிதிகளை வட்டாட்சியர் அழைத்து அமைதி பேச்சுவார்த்தையை (26.08.2021) நடத்தியுள்ளார். இதனையடுத்து, ஆரணி கோட்டாட்சியர் தலைமையில் (22.09.2021) இரண்டாம்கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் “அருந்ததியர் மக்கள் பொது பாதை வழியாக சடலத்தை எடுத்த செல்ல” கோட்டாட்சியர் அனுமதி அளித்துள்ளார். இம்முடிவை ஆதிக்க சாதியினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், 11.01.2022 அன்று வட்டாட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்புடன் அருந்ததியர் சடலத்தை பொது பாதை வழியாக முதல் முறையாக எடுத்து சென்றனர். தொடர்ந்து, 15.01.2022 அன்று உடல்நலக்குறைவால் காலமான திருமதி.அமுதா என்பவரின் உடலை பொது பாதை வழியாக எடுத்து செல்லக்கூடாது என்று ஆதிக்க சாதியினர் கூடி பேசி முடிவெடுத்து அருந்ததியர் வசிக்கும் தெருவுக்குள் நுழைந்து கொலைவெறி தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். அம்மக்களின் உடமைகளை சூறையாடி, தங்க நகை, ரொக்கப்பணம், ஜல்லிக்கட்டு மாடு என அனைத்தையும் திருடியும் சென்றுள்ளனர். உண்மை நிலவரம் இப்படி இருக்க, ஊடகங்கள் பாதிக்கப்பட்ட மக்களும் வன்முறையில் ஈடுபட்டதாக உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டிருந்தன.

மே பதினேழு இயக்கம் கண்டறிந்த உண்மை தகவல்களை பொது மக்களிடம் எடுத்து சொல்லி,

  • இந்த சாதிவெறியாட்டத்தை நிகழ்த்திய ஆதிக்க சாதி குற்றவாளிகளுக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் உரிய தண்டனையை பெற்று தர வேண்டும்.
  • இந்த சாதிவெறி தாக்குதலுக்கு துணைபோன மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இதர அரசு அதிகாரிகள் மீது உச்ச நீதிமன்றம் 2011 வழிகாட்டுதலின் பேரில் வன்கொடுமை தடுப்புச்சட்டப்பிரிவு 4ல் வழக்கு பதிவு செய்திட வேண்டும்.
  • அருந்ததியர் சடலத்தை இனி நிரந்தரமாக பொது வழியில் கொண்டு செல்லும் அனுமதியை நடைமுறைப்படுத்துவதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவர்க்கும் உரிய இழப்பீடை 7 நாட்களுக்குள் (வன்கொடுமை தடுப்புச்சட்டம் வழிகாட்டுதலின் அடிப்படையில்) தமிழக அரசு வழங்கிட வேண்டும்

என்கிற கோரிக்கைகளை மே பதினேழு இயக்கம் முன் வைத்தது. இந்த கோரிக்கைகளை முன்னிலைபடுத்தி அரசுக்கு அழுத்தும் தரும் வகையில் சென்னையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை திட்டமிட்டது.

“திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் சாதிவெறியாட்டத்தின் கள ஆய்வு அறிக்கை வெளியீடு” என்கிற தலைப்பில் 28.01.2022 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் மாலை 3.30 மணிக்கு பல தலைவர்கள் முன்னிலையில் ஆய்வு அறிக்கை புத்தகம் மற்றும் ஆவண காணொளி வெளியிடப்பட்டது.

மேலும், இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த பாதிக்கப்பட்ட வீரளூர் கிராமத்து மக்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிலர் தாங்கள் எதிர்கொண்ட வன்முறை சாதிவெறியாட்டத்தை மேடையில் பதிவு செய்தனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு சனநாயக அமைப்புகள் இந்த சாதி வெறியாட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்த நிலையில் மே பதினேழு இயக்கம் சென்னையில் வைத்து தனது கள ஆய்வு உண்மை ஆவணங்களை வெளியிட்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேடை அமைத்து கொடுத்து அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையை தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பகிர்ந்திட ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது.

வெள்ளிக்கிழமையன்று காலை சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆதித்தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவும், மாலை மே பதினேழு இயக்கத்தின் கள ஆய்வு அறிக்கை வெளியீடு நிகழ்வில் பங்கெடுக்க 2 பேருந்துகளில் புறப்பட்டனர். இதை அறிந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆட்கள் இரண்டு பேருந்துகளை முதலில் சிறுவள்ளூர் அருகே, அடுத்து பேட்டை அருகே சாலையை மறித்து தடுத்தனர். பாதிக்கப்பட்ட வீரளூர் கிராம மக்களை சென்னைக்கு செல்ல வேண்டாம் மே பதினேழு இயக்கம் நடந்திடும் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்க வேண்டாம் என்று கட்டாயப்படுத்தினர். திமுக கட்சியினரின் இந்த கட்டாயத்திற்கு அடிபணியாமல் உறுதியாக நின்று வீரளூர் கிராம மக்கள் சென்னைக்கு புறப்பட்டு வந்தனர்.

கூடுதலாக, 28.01.2022 அன்று உடல்நலக்குறைவால் காலமான அருந்ததியர் பெண்மணியின் உடலை பொது பாதையில் (29.01.2022 அன்று) கொண்டு செல்ல அரசு ஏற்பாடு செய்திட வேண்டுமென தலைவர்கள் அந்நிகழ்வில் வலியுறுத்தினார். தமிழக திமுக அரசு இதை செய்திட தவறும்பட்சத்தில் வீரளூர் சென்று இறந்த அருந்ததியர் பெண்மணி உடலை பொது பாதை வழியாக எடுத்து செல்வதை வலியுறுத்தி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க தயாராக உள்ளதாக மே பதினேழு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் அறிவித்தனர்.

வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பை அடுத்து சனிக்கிழமை (29.01.2021) அன்று தமிழக அரசு வீரளூர் அருந்ததியர் பெண்மணியின் சடலத்தை பொது பாதை வழியாக எடுத்து செல்ல உரிய ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த இறுதி ஊர்வலத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தலைவர் தோழர்.அரங்க குணசேகரன் அவர்களும் உடன் கலந்துகொண்டார்.

மிக முக்கியமாக, கள ஆய்வறிக்கை வெளியீட்டின் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர், கலசப்பாக்கம் வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் அனைவரும் பணி இட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மே பதினேழு இயக்கத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்றுவதோடு, ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இனி வரும் காலத்தில் சாதிய ஒடுக்குமுறைகளை தமிழ் நாட்டில் முற்றிலும் ஒழித்து சமூக நீதியை நிலைநாட்டிட தமிழக அரசு பாடுபட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »