
அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் ஜூலை 13, 2026 அன்று தாம்பரத்தில் நடந்த கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துக்கொண்ட சிறப்புரையின் தொகுப்பு:
உங்கள் அனைவருக்கும் மே 17 இயக்கத்தினுடைய புரட்சிகர வாழ்துக்களை இந்த சமயத்திலே தெரிவிப்பதில் பெரிய மகிழ்சி அடைகிறேன். எல்லா இடங்களிலும் மக்களுக்கான இயக்கங்கள் வர வேண்டும். கட்சிகள் இருக்கின்றன, பெரிய பெரிய கட்சிகள் இருக்கின்றன. அந்த கட்சிகளில் பொறுப்புகள் தருகிறார்கள். அந்த பொறுப்புகளை எல்லாம் பெற்றுக்கொள்வதற்காக பெரிய போட்டி நடக்கிறது. பெரிய பெரிய கட்சிகள் எல்லாம் போய் சேர்ந்தால் பதவி கிடைக்கும். எம்.எல்.ஏ(MLA) ஆகலாம், எம்.பி(MP) ஆகலாம் என்றெல்லாம் அரசியலுக்கு வரக்கூடிய எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கும்.
ஆனால் அப்படி ஒரு அரசியல் கட்சியை நோக்கி நகராமல், தேர்தலில் பங்கெடுக்காத, மக்களுக்காக வேலை செய்யக்கூடிய இயக்கத்தை நோக்கி நகரக்கூடிய உங்கள்(அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம்) மீது எனக்கு பெரிய மரியாதையும் நம்பிகையும் என்றென்றும் என் மனதில் இருக்கிறது. ஏனென்றால் இன்றைக்கு நிறைய கட்சிகள் இருக்கிறது. ஆனால் மக்கள் பிரச்சனைக்காக பேசக்கூடிய ஆட்களும், அவரை வழிநடத்தக்கூடிய தலைவர்களும், அதற்கான இயக்கமும் இல்லை.
இத்தனை கட்சிகள் இருந்தால் நம் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்திருக்க வேண்டும். ஆனால் பிரச்சனைகள் தீரவில்லை. கட்சிகள் வளர்ந்து கொண்டே போகின்றன. அதிகாரத்தை நோக்கி புதிதாக ஆட்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். புதிது புதிதாக சினிமா துறையிலிருந்து ஆட்கள் களம் இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அவர் என்ன செய்யப் போகிறார் என்பது நமக்கு தெரியாது. ஆனால் தொடர்சியாக தமிழ்நாட்டில் அதிகாரத்தை தங்கள் கையில் எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு வந்து கொண்டே இருக்கிறார்கள். அரசியலில் பங்கெடுப்பதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. மறுப்பு கிடையாது. ஆனால் மக்களிடத்தில் யார் வேலை செய்கிறார்கள்?
இங்கே அனகாபுத்தூர் பகுதியில் உள்ள வீடுகளை அகற்றியது என்கின்ற அந்த மோசமான நடவடிகையின் போது, இந்த பகுதியில் இறங்கி வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. சென்னை நகரத்துக்குள் பல இடங்களில் இது போன்ற வீடுகள் அகற்றப்படுகின்ற இடங்களில் எல்லாம் நாங்கள் சென்று போராட்டம் நடத்தியிருக்கிறோம். எல்லா இடங்களிலும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அல்லது வருகின்ற எதிர்பை எல்லாம் மட்டம் தட்டி வீடுகளை இடித்துவிட்டு போய்விடுகிறார்கள்.

கடந்த 15, 20 வருடங்களில் பார்தால் கிட்டத்தட்ட 8, 9 லட்சம் பேர் சென்னையின் மையப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறோம். நம்மைப் போன்ற சாமானிய குடும்பங்கள் சென்னையின் மையப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால் ஏன் ஒரு பெரிய எழுச்சி வரவில்லை? ஏன் அது குறித்து கேள்வி வரவில்லை என்பதுதான் நமக்கு இருக்கக்கூடிய பெரிய கவலை.
எல்லா இடங்களிலும் ஒரே வாக்குறுதி கொடுக்கிறார்கள். “உங்களுக்கு மாற்று இடம் தருகிறோம்” என்று சொல்கிறார்கள், அல்லது “ஒரு வீடு தருகிறோம்” என்று சொல்கிறார்கள். முதலில் மக்கள் போக விரும்ப மாட்டார்கள். “நாங்கள் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம்” என்று ஒரு தரப்பு சொல்வார்கள். பிறகு கொஞ்சம் நாள் கழித்து, இன்னொரு தரப்பு “அண்ணே அவர் டோக்கன் வாங்கிட்டார். இப்போது நான் டோக்கன் வாங்கவில்லையெனில் எனக்கு பிரச்சனை ஆயிடுமே, என்ன பண்ணுவது?” என்று சொல்லி இவர்களும் டோக்கன் வாங்குகிறார்கள். அப்போது ’ஒரு தரப்பு போராடக்கூடிய தரப்பாக இருக்கிறது. ஒரு தரப்பு சமரசம் செய்யக்கூடிய தரப்பாக’ இருக்கிறது. இதற்கு இரண்டுக்கும் நடுவில் சிக்கி குழம்பிப் போன மக்களாக இருக்கிறார்கள்.
அதற்கு பிறகு வீடுகளை இடிப்பதற்கு என்று யாரோ ஒருத்தன் சம்பந்தமே இல்லாமல் வழக்கு போடுகிறான். அந்த வழக்கு உண்மையா, பொய்யா? என்பதை பற்றி கவலைப்படாமல் “வீடுகளை இடித்துத் தள்ளுங்கள்” என்று நீதிமன்றம் தீர்ப்பு தருகிறது. அனகாபுத்தூரில் வீடு இடிக்கின்ற அந்த உத்தரவை எடுத்துப் படித்தால் இரத்தம் கொதிக்கிறது.
நீதிபதி என்ன கொடுத்திருக்கிறார் என்றால், “நீங்கள் காவல் துறையை வைத்து வீடெல்லாம் இடியுங்கள், அகற்றுங்கள். அப்படி ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றால், நான் ராணுவத்தை வர வைக்கிறேன்” என்று ஒரு நீதிபதி உத்தரவு கொடுக்கிறார்.
அப்படித்தான் அந்த இடத்தில் இருக்கக்கூடிய அந்த வீடுகள் இடிக்கப்படுகின்றன. தோழர் சுபாஷ் அவர்களிடம் பேசிதான் இதற்கான வழக்குகளை நகர்த்தும் வேலையை செய்தோம். ஒரு திறமையாக வாதாடி ஒரு வழக்கை நடத்தி, அந்த வீடு இடிக்கப்படுவதை தடுத்து வைக்க கூடிய தீர்பை தோழர் சுபாஷ் பெற்றார்.

ஆனால் என்ன நடந்தது என்றால், அந்த ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய மக்களில் ஒரு நான்கு பேர் இதை எதிர்த்து வேலை செய்து கொண்டே இருப்பார்கள். அவன் என்ன பண்ணான்? எங்களுக்கெல்லாம் தெரியாமல் போய் மறுபடியும் நீதிமன்றத்தில் வேறொரு வழக்கு நடத்துகிறேன் என்று சொல்லி, வேறு ஒரு வழக்கறிஞரிடம் கொண்டு போய் சேர்த்து அந்த தடையை நீக்கிவிட்டு வந்தார்கள். அதற்கு பிறகு ஆறு மாதத்திற்குள் வீட்டை இடித்துவிட்டார்கள்.
நமக்கு பொதுவாக “வீடு அகற்றப்படுதல்” என்றால் என்ன சொல்வோம்? “நாங்கள் இத்தனை வருடமாக இங்கே இருக்கிறோம். இங்கே கடைகள் இருக்கின்றன” என்று. இந்த கடைகள் எல்லாம் நாளைக்கு ரிலையன்ஸ் கம்பெனிக்காரன் ஒரு வணிக வளாகம் (Shopping mall) கட்டினால், இங்கே இருக்கும் கடைகளால் எங்களுக்கு வியாபாரம் வராது என்று சொல்லி அதிகாரிகளிடம் சொன்னால், “இதெல்லாம் ஆக்கிரமிப்பு” என்று அடுத்த நாளே நீக்கி விடுவார்கள்.
நமக்கென்று எந்த பாதுகாப்பும் கிடையாது. அதிகாரி போய் சொல்வான், “இதெல்லாம் ஏழை எளிய மக்கள் இங்கே பொருட்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கு பயன்படக்கூடிய இடமாக இருக்கிறது. நீண்ட காலமாக வணிகர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் நீக்கக் கூடாது” என்று எந்த அதிகாரியும் சொல்ல மாட்டான். நேராக போவான், கம்பெனிக்காரனிடம் பணம் வாங்குவான். யாராவது ஒருத்தரை விட்டு, “இதெல்லாம் ஆக்கிரமிப்பு. போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது” என்று வழக்கு தொடுப்பார்கள்.
இந்த வழக்கை எப்படி கையாளுவது என்று தெரியாமல் நமது மக்கள், சாமானிய மக்கள், அப்பாவி மக்கள், ஏழை மக்கள் என்ன சொல்வார்கள் என்றால், “காலம் காலமாக நாங்கள் இங்கே கடை போட்டுள்ளோம். காலம் காலமாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலம் காலமாக எங்கள் வீடு இருக்கிறது. எங்கள் தாத்தா இங்கேதான் வாழ்ந்தார். எனது அப்பா இங்கேதான் திருமணம் செய்து கொண்டார். ஆகவே இந்த இடத்தை எங்களுக்கு தாருங்கள்” என்று நீதிமன்றத்திலே அவர்கள் பேசுவார்கள்.
உடனே நீதிபதி என்ன பண்ணுவார் என்றால், “அதெல்லாம் இருக்கட்டும். ஆனால் இது ஆக்கிரமிப்பு இடம். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு வருகிறது” என்று சொல்லி அதை நீக்குவதற்கான உத்தரவை உடனே கொடுப்பார். கொடுத்த உடனே அதிகாரி காவல் துறையை கூட்டி வந்து, “நீதிமன்றம் உத்தரவு கொடுத்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவை நாங்கள் மீற முடியாது. ஆகவே அகற்ற வேண்டும்” என்று அகற்றி விடுவார்கள்.
MLA-விடம் போய் கேட்டால் என்ன சொல்வார்? “நீதிமன்ற உத்தரவு. அதனால் நாங்கள் என்ன சொல்ல முடியும்” என்று சொல்லிவிட்டு கை கழுவிவிட்டு போய்விடுவார். MP-யிடம் கேட்டால், “உங்கள் MLA-விடம் போய் கேளுங்கள். நான் MLA-விட பேச முடியாது” என்று சொல்வார்கள். கவுன்சிலரை கேட்டாலோ, அல்லது மாநகராட்சியில் புகார் பண்ணாலோ என்ன பண்ணுவார்கள் என்றால், “இதெல்லாம் நீதிமன்ற உத்தரவு. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது” என்று சொல்லி கை கழுவி மூடிவிடுவார்கள்.
இந்த விடயம் கடந்த 25 வருடமாக தமிழ்நாட்டில் நடக்கிறது. யாரோ ஒருத்தன் அனாமத்தாக வழக்கு போடுவான். அதற்கு நீதிபதி தீர்ப்புத் தருவார். அந்த தீர்ப்பை தூக்கிக் கொண்டு வந்து அதிகாரிகள் இருக்கின்ற நிலத்தை எல்லாம் இடித்து அப்புறப்படுத்தும் வேலையே செய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்று எல்லா இடத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு தெரிந்து நான் 15 வருடமாக பார்த்து கொண்டிருக்கிறேன்.
எப்படி தடுப்பது? ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இதுபோல “ஆக்கிரமிப்பு” என்று சொல்லி அகற்ற வந்தால், தயவு செய்து நீதிமன்றத்துக்கு போகாதீர்கள். யோக்கியமானவர்கள் இருந்தால் அவர்கள் நேரடியாக வந்து கடையைப் பார்ப்பார்கள். மக்களைப் பார்ப்பார்கள். குடும்பங்களைப் பார்ப்பார்கள். குழந்தைகளைப் பார்ப்பார்கள். பள்ளிக்கூடங்களை படிக்கக்கூடிய மாணவ செல்வங்களை பார்த்து தீர்பெழுதுவார்கள்.
திருப்பரங்குன்றம் மலை மேல ஏறி தீபம் ஏற்றலாமா வேண்டாமா? என்று பார்கக்கூடிய நீதிபதிகள், நமது குடிசைகளுக்கும் வீடுகளுக்கும் வருவதில்லை. கடைகளை எட்டிப் பார்பதில்லை. அவர்களுக்கு அதற்குத்தான் நேரம் இருக்கும். ஆனால் அந்த நீதிபதிகள் நமக்கு நீதி கிடைப்பதற்காக, நமது வீட்டை நோக்கி வருவதில்லை, இடத்தை நோக்கி வருவதில்லை, கடைகளை பார்ப்பதில்லை, வாழ்வாதாரத்தை பற்றி கவலை கொள்வதில்லை. எனவே நீதிமன்றத்துக்கு போகாதீர்கள்.

அதிகாரி அதற்கேற்ற வகையில் அவன் ஆவணங்களை மாற்றி வைத்திருப்பான். திருத்தி வைத்திருப்பான். திருட்டுத்தனமாக மாற்றி வைத்திருப்பான். பொய் சொல்வான். அவனை கேள்வி கேட்பதற்கு நம்மால் முடியாது.
உடனடியாக பத்திரிகைகள் என்ன பண்ணும்? ஒரு கட்டுரை போடும். “இந்த ஆற்றங்கரை ஓரத்தில் எல்லாம் இந்த மக்கள் ஆக்கிரமிப்பாக வீடு கட்டுகிறார்கள். இந்த வீடுகளை கட்டுப்படுத்துபவர்கள் அரசியல்வாதிகளோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் மாபியாக்களாக இருக்கிறார்கள், சட்டவிரோதமாக இவர்களிடத்திலே வாடகைகளை வசூலித்து கொண்டு, இந்த நிலத்தை எல்லாம் கைப்பற்றி ஒரு ’மாபியா ராஜ்யம்’ நடத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஆங்கில பத்திரிகையில் எழுதுவான். நம் ஆட்கள் ஆங்கிலப் பத்திரிகை படிக்க மாட்டான். அது உண்மையா பொய்யா என்று கூட தெரியாது. அந்த செய்தி வந்ததே தெரியாமல் கூட இருப்பான்.
ஆனால் நீதிபதி தீர்ப்பு எழுதுகிறார், “டைம்ஸ் ஆஃப் இந்தியா (Times of India) பத்திரிகையிலே இதுபோன்று ஆற்றங்கரையோரம் இருக்கக்கூடிய வீடுகளை எல்லாம் அரசியல்வாதிக்கு தொடர்புடையவர்கள் வீடு கட்டி அங்கே விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். வாடகை வசூலித்து கொண்டிருக்கிறார்கள். அங்கே திருட்டுத்தனமாக ஒரு தொழில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாபியா தொழிலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் அந்த வீடுகளை அகற்ற வேண்டும்” என்று நீதிபதி உத்தரவு கொடுக்கிறார். நீதிபதி என்றால், சாட்சியங்களை பார்க்க வேண்டும், விசாரிக்க வேண்டும், விசாரித்து அது உண்மையா என்று ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு பிறகு தீர்ப்பு தர வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை.
டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து போன்ற பத்திரிகைக்காரன் கட்டுரையை ஏன் எழுதுகிறான்? சனிக்கிழமை பத்திரிக்கைத்தாளை எடுத்து பாருங்கள். அந்த வீடு கட்டக்கூடிய காசா கிராண்ட் (Casa Grand) கம்பெனிக்காக நான்கு பக்கம் விளம்பரம் கொடுத்திருப்பான். ஒரு பக்க விளம்பரத்துக்கு 11 லட்சம் என்றால், நான்கு பக்க விளம்பரத்துக்கு 45 லட்சம் ரூபாய் கொடுத்து வைத்திருப்பான். 45 லட்சம் விளம்பரம் கொடுக்கிறவனுக்காக, இவன் இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு கட்டுரை எழுதுவான். அந்த கட்டுரை என்னவென்றால், “இதெல்லாம் ஆக்கிரமிப்பு” என்று எழுதி வைப்பான்.
இரண்டு நாள் கழித்து அதே பத்திரிகையில் விளம்பரம் வரும். என்னவென்றால், “ஆற்றை பார்த்தவாறு இருக்கக்கூடிய ஒரு அருமையான வீடுகளை நாங்கள் ஆற்றங்கரையில் கட்டி கொடுக்கிறோம். நீங்கள் அடையாறை பார்த்துக் கொண்டு அற்புதமான வாழ்கை நடத்தலாம்” என்று ’காசா’ கம்பெனிக்காரன் இதே பத்திரிகையில் விளம்பரம் தருவான். அதையும் அந்த நீதிபதி பார்ப்பார். அதை “ஆக்கிரமிப்பா இல்லையா?” என்று கேட்க மாட்டார். அவருக்கு அது தேவையில்லை. அவருக்கு காசா கிராண்டில் ஒரு வீடு கிடைத்தால் போதும். இதெல்லாம் ஒரே கூட்டம். ஒத்த கூட்டம்.
இவன் அதிகாரியாக இருப்பான். வக்கீலாக இருப்பான். இவனே நீதிபதியாக இருப்பான். இவனே பத்திரிகைக்காரனாக இருப்பான். இவனே கம்பெனிக்காரனாக இருப்பான். இவனே பணம் வாங்கக்கூடிய கம்பெனிக்காரனாக இருப்பான். இவனே MLA-வாக இருப்பான். இவனே எல்லாமாகவே இருப்பான். இவர்கள் அத்தனை பேரையும் எதிர்த்து நிற்க வேண்டிய ஒரு துணிச்சல் மக்கள் இயக்கத்திற்கு மட்டும்தான் வரும். அது நமக்கு மட்டும்தான் இருக்கிறது.
நமக்குத்தான் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் நாம் துணிந்து நிற்போம். இன்றைக்கு எல்லா மக்களும், இதுபோல பட்டா இல்லாத மக்கள் அனைவரையும் நாம் திரட்டியாக வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பட்டா இல்லாத மக்கள் அனைவரையும் நாம் திரட்டியாக வேண்டும்.
நான் கேட்கிறேன்: இந்த நாடு விடுதலை அடைந்து 80 வருடம் ஆகிறது. “நாங்கள் வாழ்வதற்கு ஒரு 500 சதுரடி இடம் இல்லை” என்றால், இந்த விடுதலையை தூக்கி குப்பைத் தொட்டியில் போட வேண்டும். நான் வசிப்பதற்கு ஒரு நிலம் இல்லை. எனக்கு என்று சொந்தமாக சொல்வதற்கு ஒரு நிலம் இல்லை என்றால், விடுதலை வாங்கி என்ன அர்த்தம்? எங்களுக்கு பட்டா கொடுக்க வக்கு இல்லை என்றால், மாநகராட்சியை கலைத்துவிட்டு செல்ல வேண்டும். பிறகு ஏன் இந்த மாநகராட்சி இங்கே இருக்கிறது? எங்களுக்கு பட்டா தர முடியாதவன் எதற்கு அதிகாரியாக இருக்க வேண்டும்?

என்னிடம் நீ(அரசு) வரி வாங்குவாய். என்னிடம் ஓட்டு வாங்குவாய். என்னிடம் எல்லாவற்றையும் வாங்குவாய். ஆனால் நான் வசிப்பதற்கு ஒரு வீடு தருவதற்கு, ஒரு பட்டா தருவதற்கு வக்கு இல்லை என்றால், அந்த அதிகாரியிடம் நாம் எந்த வரியும் வாங்கவிட மாட்டோம் என்பதை சொல்வதற்கு ஒரு இயக்கம் வேண்டும்.
அப்படிப்பட்ட இயக்கமாகத்தான் நீங்கள் வர வேண்டும். அதை பேசுவதற்கு இன்றைக்கு ஆள் இல்லை. எந்த கட்சிக்காரனும் பேச மாட்டான். எந்த கட்சிக்காரர்களாலும் மாற்றத்தை கொண்டு வர முடியாது. ஒருவேளை மாற்றம் கொண்டு வருகிறோம் என பேசலாம். ஆக மாற்றத்தை கொண்டு வருவது இதுதான். இதுதான் மாற்றம்.
நான் கேட்கிறேன்: இதே தெருவில் இத்தனை கடைகள் இருக்கின்றன. எத்தனை கடைகளில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடையை வணிகமாக வைத்திருக்கிறார்கள்? யோசித்து பார்ப்போம். எத்தனை கடையில் இருக்கிறது? இதே மவுண்ட் ரோடு/ அண்ணா சாலையில் எத்தனை கட்டிடங்கள் நம் மக்களுக்கு சொந்தமான கட்டிடங்களாக இருக்கின்றன? இவ்வளவு பெரிய கட்டிடங்களை பார்க்கிறோமே, அந்த கட்டடத்தின் சொந்தக்காரன் யார்? அவனுக்கு கிடைக்கூடிய அந்த வாடகையின் அளவு எவ்வளவு? நாம் வாழ்நாள் முழுக்க சம்பாதித்தாலும் கிடைக்காத அளவு.
நமக்கு வசிப்பதற்கு இடம் இல்லை. ஆனால் நம்மை சுற்றி இந்த நிலத்தை வைத்து சம்பாதிக்கக்கூடிய ஏராளமானோர் வசித்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு இரண்டு கைகளை வைத்து உழைத்து உழைத்து, இந்த கடைகளிலும், இந்த வணிகங்களிலும், இந்த கம்பெனிகளிலும் நமது உழைப்பை கொடுப்பதற்கும், நமது பணத்தை கொடுப்பதற்கும் மட்டும்தான் நாம் வாழ்கிறோம். வேறு எதற்கும் கிடையாது.
அடுத்த தலைமுறையாவது அது மாற வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு கோரிக்கை இருக்கிறது. மாதம் மாதம் நம் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்களா? வரவேற்கிறோம். இலவசமாக அரவை இயந்திரம் (மிக்ஸி) கொடுக்கிறீர்களா? வரவேற்கிறோம். இலவசமாக சலவை இயந்திரம் (வாஷிங் மெஷின்) கொடுங்கள். எல்லாவற்றையும் கொடுங்கள். அது தவறு கிடையாது. இந்த அரசாங்கம் நமக்கு இலவசமாக அனைத்தையும் கொடுத்தாக வேண்டும். வீட்டையும் கொடுத்தாக வேண்டும். நிலத்தையும் கொடுத்தாக வேண்டும். வேறு எதற்கு நாட்டை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்? எதற்கு நாங்க வரி கட்டுகிறோம்?
நீங்கள் ஒரு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்கள் என்றால், அதில் 12% போட்டால் 2400 ரூபாய் இந்த அரசாங்கத்துக்கு மாதம் மாதம் வரியாக தண்டம் எழுதிக் கொண்டிருக்கிறோம். மறந்துவிடாதீர்கள். உங்களுடைய வருமானத்தில் 10%-த்தை வரியாக கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். 30% வரியாக கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். மிஞ்சி இருக்கக்கூடிய 60%த்தில்தான் நீங்கள் அத்தனையையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லாமல் இருக்கிறது. 100 ரூபாய்க்கு மொபைலுக்கு ரீசார்ஜ் போட்டால் 12% -18% வரி கட்டுகிறீர்கள். வரி கட்டாத ஒரு பொருள் கிடையாது. எல்லா இடத்துக்கும் வரி கட்டுகிறீர்கள். அப்போது நாம் இந்த அரசாங்கத்தின் சட்டையை பிடித்து கேட்க வேண்டும். “எனக்கான நிலம் எங்கே?”
மே 17 இயக்கத்தில் தொடர்சியாக ஒன்று சொல்லிக் கொண்டு வருகிறோம். என்னவென்றால், இட ஒதுக்கீடு என்பது நமக்கு அடிப்படை உரிமை.
ஆனால் அரசு என்ன செய்கிறது? அரசாங்கத்தில் கடைமட்ட பணிகள் எல்லாத்தையுமே அரசாங்க பணிகள் இல்லாமல் ஒப்பந்த பணிகளாக மாற்றிவிட்டான். அப்புறம் எங்கே இட ஒதுக்கீடு? அங்கே வேலை இருக்கிறதா? 60,000 சம்பளம் வாங்க வேண்டிய இடத்தில் 12,000 சம்பளம் வாங்கிட்டு நம் ஆள் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இட ஒதுக்கீடு முறைப்படி நடைமுறைப்படுத்தப்படாமல், அதை கடப்பதற்காக ஒப்பந்த ஊழியர் முறையை கொண்டு வந்திருக்கிறான். நம் பிள்ளைகளுக்கு வேலை கிடைப்பதில்லை.
நாம் கேட்பதற்கு நிறைய விடயம் இருக்கிறது. அதில் மிக முக்கியமானது என்னவென்றால், இட ஒதுக்கீடு என்பது வெறும் வேலைகள் என்பதாக மட்டும் முடித்துவிடக் கூடாது. நில ஒதுக்கீடு தேவை.
தமிழ்நாட்டில் ”13 லட்சம் சதுர கிலோமீட்டர் இருக்கிறது” என்று கணக்கு உள்ளது என்கிறார்கள். அப்படி 13 லட்சம் சதுர கிலோமீட்டர் இருக்கிறது என்றால், அதில் என் மக்களுக்கு நிலம் இல்லாமல் இருக்கிறது என்றால், இந்த நாடு சுதந்திரம் அடைந்தது என்று சொல்வதற்கு எந்த அர்த்தமும் கிடையாது.
மக்கள் தொகையில் 24% பட்டியல் சமூகத்தில் இருக்கிறார்கள் என்றால், 24% அளவில் நிலம் இருக்க வேண்டும் அல்லவா?, அப்படி நிலம் நம்மிடம் இருக்கிறதா? யோசித்து பாருங்கள். என்ன வேலை நமக்கு இருக்கிறது? அந்த வேலையெல்லாம் முறைப்படுத்தப்பட்ட வேலையாக இருக்கிறதா? வளர்சிக்கான வேலைகளாக இருக்கிறதா? இல்லை. இங்கே SIPCOT வருகிறது. தொழிற்சாலைகள் வருகின்றன. எத்தனை தொழிற்சாலைகள்? துணை தொழிற்சாலைகள், Sub-Contract இருக்கக்கூடிய கம்பெனிகள் நம்மாள்(தமிழர்கள்) கம்பெனியாக இருக்க முடிகிறதா? சொல்லுங்கள்.
ஏன் நமக்கு வைக்க முடியாதா? நமது மக்களிடத்தில் பொறியாளர்கள் கிடையாதா? ஒரு உற்பத்தி கம்பெனி நம்மால் நடத்த முடியாதா? ஒரு தரக் கட்டுபாடு கம்பெனி நடத்த முடியாதா? என அதை கேளுங்கள். அதற்கு தயார் பண்ணுங்கள். அரசிடம் நாம் உதவியை கேட்பதல்ல, அதில் பங்கு கேட்க வேண்டும். “சிப்காட்(SIPCOT) கொண்டு வருகிறாயா? தொழித்துறை வழித்தடம் (Industrial Corridor) கொண்டு வருகிறாயா? எதை கொண்டு வந்தாலும் எனக்கு அதில் பங்கு இருக்க வேண்டும். அதற்கான நிதியை வங்கி தர வேண்டும்” என்று இதையெல்லாம் கேட்பதற்கு ஒரு இயக்கம் வேண்டும். அப்படிப்பட்ட இயக்கமாக இந்த மக்கள் மீதான இயக்கம் வர வேண்டும். அதுதான் எனது விருப்பம்.

நாம் ஏதோ பஞ்சாயத்து அலுவலகத்தில் போய் நின்று, மக்களுக்காக சண்டை போடுவது மட்டுமல்ல. நமக்கு என்ன தேவை? நீங்கள் எந்த பகுதியில் வேலை செய்கிறீர்களோ – செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வேலை செய்கிறீர்கள் என்றால் – நீங்கள் பணியாற்றுகிறீர்கள், தொண்டு செய்கிறீர்கள் என்றால், நீங்கள் சந்திக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குறைந்தபட்சம் ஒரு கிரவுண்ட் நிலமாவது இந்த அரசாங்கம் ஒதுக்கித் தர வேண்டும். நிலத்தில் பங்கு கேட்போம். தப்பு என்ன இருக்கிறது?
நிலம்தான் முதலீடு. அந்த நிலத்தை கேளுங்கள். அந்த நிலத்தில் நாம் வீடு கட்டி இருந்தால் நம்மை எவனும் அப்புறப்படுத்த முடியாது. நம்மை வெளியேற்றி விட முடியாது. அந்த உரிமையை கேட்பதற்கு நீங்கள் தயாராக வேண்டும். அப்படிப்பட்ட ஒன்றுதான் இன்றைக்கு மாற்றம்.
நம்ம எத்தனையோ கட்சி வரலாம். எத்தனையோ முதலமைச்சர் வரலாம், போகலாம். ஆனால் நிலம் மாறாது. அந்த இடம் மாறாது. அந்த நிலம்தான் உங்களுக்கு சொத்து. நமக்கெல்லாம் சொத்து இருக்கிறதா? எத்தனை சொத்து இருக்கிறது? எவ்வளவு ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார்கள்? ஏன் தமிழ்நாட்டில் நம்மால் நிலம் வைக்க முடியாதா? நமக்கு நிலம் வைப்பதற்கு தகுதி இல்லையா? அரசாங்கம் நாம் இருக்கின்ற இடத்துக்கே பட்டா தர மறுக்கிறான். இருக்கின்ற/வாழ்கின்ற இடத்திற்கே பட்டா தரவில்லை என்பதை நாம் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. அப்போது இதையெல்லாம் செய்தால்தான் நாம் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும். அந்த மாற்றத்தை செய்வதற்கு மக்கள் இயக்கங்கள் சாத்தியமாகும்.
அனகாபுத்தூரில் அம்பேத்கர் மக்கள் இயக்கம்தான், அங்கே அப்புறப்படுத்தப்பட்ட மக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களுக்காக நிலத்தை வாங்கிக் கொடுக்க முடிந்தது. அதுதான் ஒரு இயக்கத்தின் வெற்றி. அங்கே 2000 வீடுகள் இடித்தார்கள். அதில் பட்டா நிலத்தில் இருக்கின்ற வீட்டையும் இடித்தார்கள். எல்லாவற்றையும் இடித்தார்கள். ஒரே விடயம்தான். காசா கிராண்ட் கம்பெனிக்காரனிடம் தாம்பரம் மாநகராட்சியை சேர்ந்த சில அதிகாரிகள் என்ன உறவு வைத்திருந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் காசா கிராண்ட் கம்பெனிக்காரன் மேல் கை வைக்கவில்லை. இந்த வீடுகளின் மீது கை வைத்தது மட்டுமல்ல, பட்டா நிலத்தின் மீதும் கை வைத்தார்கள். அங்கே அங்கீகரிக்கப்பட்டு, அனுமதி பெற்று கட்டப்பட்ட வீட்டையும் இடிதார்கள்.

அங்கே இடிக்கப்பட்ட அந்த வீட்டுக்காரர் ஒருவர் “பட்டா இடம் இது. நாங்கள் அரசிடம் அனுமதி வாங்கி கட்டிய வீட்டை எப்படி இடிப்பீர்கள்?” என்று கேட்டார். மேலும் அவர். “என் வீட்டை இடிக்க முடியாது” என்பதற்கான நீதிமன்ற உத்தரவையும் காண்பிக்கிறார். அதற்கு கமிஷனர் சொல்கிறார்: “நாங்கள் வீட்டை இடிப்போம். வேண்டுமெனில் நீங்கள் மீண்டும் நீதிமன்றத்துக்கு சென்று உத்தரவு வாங்கி கொண்டு வாங்கள்” என்று. அந்த குடும்பம் எங்கே போனது என்று தெரியவில்லை.
“உங்கள் வீடுகள் எல்லாம் ஆற்றங்கரையோரம் இருக்கிறது. மழை வெள்ளம் வந்தால் உங்கள் வீடுகளில் நீர் புகுந்து விடும்” என்று சொல்லி அப்புறப்படுத்தி வேறு இடத்தில் விட்டார்கள். அதாவது “வெள்ளத்திலிருந்து உங்களை காப்பாற்றுவதற்காக வேறு இடத்தில் வீடு கட்டிக் கொடுத்தது அரசாங்கம். ஆனால் அடுத்த வருடமே வந்த மழை வெள்ளத்தில் அரசாங்கம் கட்டிக் கொடுத்த வீடுகள் மழை வெள்ளத்துக்குள்ளே மாட்டிக் கொண்டது.
ஆனால் எங்கு “மழை வெள்ளம் வருகிறது” என்று அப்புறப்படுத்த சொன்னார்களோ, அந்த வீடுகளில் எதிலும் மழை வெள்ளம் வரவில்லை அவர்கள் காலம் காலமாக குடியிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும். மழை வெள்ளம் வந்தால் எந்த உயரம் வரை வரும் என்று தெரிந்துதான் வீடு கட்டியிருக்கிறார்கள்.
நான் கேட்கிறேன்: ஆற்றங்கரையோரம் வீடு கட்டுவது என்பது தவறான விடயமா? என்றால் இல்லை. ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகமே ஆற்றங்கரை நாகரிகம்தானே? ஆற்றங்கரைதானே கட்டியிருக்கிறார்கள்? கீழடியில் எங்கே கட்டியிருக்கிறார்கள்? அது வைகையில்தான். ஆற்றங்கரையில்தானே கட்டியிருக்கிறார்கள். மக்கள் எங்கே வாழ்வார்கள்? தண்ணீர் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் வாழ்வார்கள்.
அப்போது “ஆக்கிரமிப்பு” என்று சொன்னால் முதலில் ஹரப்பாவை இடிக்க வேண்டும். மொகஞ்சதாரோவை இடிக்க வேண்டும். கீழடியை இடிக்க வேண்டும். அதற்கு பின்னாடி இங்கே வர வேண்டும்.
ஆற்றங்கரையில்தான் மனிதன் வாழ முடியும். தண்ணீர் எங்கே கிடைக்கிறதோ, அங்கேதான் வாழ்ந்திருக்கிறான். அப்படித்தான் குடிசை போட்டு குடியிருந்திருக்கிறார்கள், அவர்கள் இடத்தை வளர்த்தார்கள், நிலத்தை வளர்த்தார்கள், இங்கே நகரத்தை உருவாக்கினார்கள், வேலைவாய்ப்பில் பங்கெடுத்தார்கள், உற்பத்தியை கொண்டு வந்தார்கள், வளத்தை கொண்டு வந்தார்கள், வளர்ச்சியை கொண்டு வந்தார்கள்.
இத்தனையும் கொண்டு வந்த அந்த மக்கள் அது முடிந்த உடனே காசா கிராண்ட் கம்பெனிக்காரனுக்கு நிலத்தை தாரை வார்த்துவிட்டு, இந்த மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி இருக்கிறான். இதற்கு அதிகாரிகளிடத்தில் பெரிய அளவுக்கு ஒரு ஒற்றுமை இருக்கிறது. மொத்தமாக பணத்தை கூறு போட்டு இருக்கிறான்.

CRRT என்று ஒரு கம்பெனியை உருவாக்கியிருக்கிறான். Cooum River Restoration Trust என்று ஒரு கம்பெனியை உருவாக்கி, இடிக்கிறதற்கு ஒரு பணம் வாங்குகிறான். இடித்ததை அப்புறப்படுதுவதற்கு ஒரு பணம். அதற்கு பிறகு அங்கே பூங்கா கட்டுவதற்கு ஒரு பணம். இத்தனையும் இந்த அதிகாரிகளுக்கு போகிறது.
நமக்கு ஒரு வேலை இருக்கிறது தோழர்களே, என்னவென்றால் இனி அதிகாரிகள் வந்தால் நாம் மல்லு கட்டிக் கொண்டிருப்பது ஒரு பக்கம், போராட்டம் பண்ணுவது ஒரு பக்கம் இருக்கட்டும், எந்த அதிகாரி எல்லாம் வந்து “வீட்டை இடிக்கிறேன்” என்று சொல்கிறானோ, அவன் எவனும் யோக்கியனாக இருக்க மாட்டான். அவன் கை சுத்தமானதாக இருக்காது. அவன் என்னென்ன ஊழல் பண்கிறானோ, அந்த ஊழல் எல்லாம் எடுத்து வெளியே போடுவோம்.
அதிகாரிகள் இடிக்க வந்தால், அதற்கு அடுத்த வாரம் நீ எங்கே லஞ்சம் வாங்கினாய்? என்பதற்கு எதிராக சுவரொட்டி விளம்பரம் வரும், போராட்டம் நடக்கும். நீ யோக்கியனாக இருந்தால் பார்திருக்கலாம். நீ நேர்மையாக இருந்தால் பார்திருக்கலாம். நீதான் இங்கே லஞ்சம் வாங்கக்கூடியவனாக, பெரிய பெரிய கம்பெனிகளிடம் கையூட்டு பெறக்கூடியவனாக இருக்கிற பட்சத்தில், உனது கை எனது வீட்டின் மேல் படக்கூடாது என்கின்ற உறுதியை நாம் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் இந்த அதிகாரிகள் அடங்குவார்கள்.
இவர்களுக்கு என்னவென்றால், இங்கே இருக்கக்கூடிய வீடுகள் மொத்தம் 50 ஆயிரம் வீடுகள் இடிப்பதாக இருக்கிறார்கள். 50 ஆயிரம் வீடுகள் இடிப்பதாக அவர்கள் திட்டம் வைதிருக்கிறார்கள். இந்த 50 ஆயிரம் வீடுகளை இடித்து, அதற்கான நிதியை பெற்றுக்கொண்டு, அந்த நிதியை அவர்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டு வளர்க்கிறார்கள். நம் ஆட்கள் தெருவில் இருப்பான். நம்மை கொண்டு போய் பெரும்பாக்கத்தில் போடுவான், புதுப்பாக்கத்தில் போடுவான். அங்கிருந்து எப்படி அந்த குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு போகும்? அந்த குழந்தைகளுடைய எதிர்காலம் என்ன? அங்கே பள்ளிக்கூடமும் கிடையாது. குழந்தைகளுடைய பள்ளி கல்வி தடைப்பட்டு விடுகிறது.
தாம்பரம் மாநகராட்சியில் ஒரு கமிஷனர் இருந்தார். அந்த வீடு இடிக்க வரும்பொழுது, அனகாபுத்தூரில் அந்த குழந்தைகள் கேட்கிறார்கள், “நாங்கள் எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு போய் கொண்டு இருக்கிறோம். தேர்வு வரப்போகிறது. இப்போது வந்து இடிக்கிறீர்கள்” என்று. அப்போது அந்த அம்மா சொன்னதாக சொன்னார்கள், “இதெல்லாம் படித்து என்ன ஆக போகிறது?” என்று. அதிகாரிகள் அப்படி பேசியதாக அந்த மக்கள் குமுறினார்கள். அப்படிப்பட்ட அதிகாரி என்ன லஞ்சம் வாங்கினார் என்று கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? உங்கள் வண்டவாளத்தை எடுத்து வெளியே போட எவ்வளவு நேரம் ஆகும்? அதனால் இங்கே ஏழை எளிய மக்கள் மீது கை வைத்தால், அவர்களுடைய வண்டவாளங்களை வெளியில் கொண்டு வரக்கூடிய அளவுக்கு நமக்கு துணிச்சல் இருக்க வேண்டும். அந்த வகையில் செயல்பட்டால் சாத்தியம்.

நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். இது ஏதோ அனகாபுத்தூருக்கு நடந்துவிட்டது, சண்முக சாலைக்கு நடக்காது என்று நினைக்காதீர்கள். இவனுக்கு பட்டா தராமல் வைத்திருபதற்கு காரணமே, நகரத்தின் மையப்பகுதியின் நிலத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் போய்விட்டது. புதிதாக நிலம் கிடையாது. புதிதாக கம்பெனி உருவாக்க நிலம் கிடையாது. எந்த நிலத்தை எடுக்க வேண்டுமென்றால், உங்கள் வீட்டு நிலத்தைத்தான் எடுக்க வேண்டும். அதற்குத்தான் பட்டா கொடுக்காமல் வைத்திருக்கிறான். ஒரு திட்ட முறையாக ஒவ்வொரு இடமாக எடுத்துகொண்டே வந்து கொண்டிருக்கிறான். இது கிட்டத்தட்ட 18 வருடமாக நடக்கிறது. ஒரே நாளில் பண்ணியிருந்தால் எல்லாரும் சேர்ந்து எதிர்த்திருப்பார்கள்.
அனகாபுத்தூர் பிரச்சனை 2000 பேர் வெளியேற்றப்பட்டனர். நான்கு நாட்களுக்கு முன் பூந்தமல்லியில் வீடுகளை இடித்துள்ளனர். தற்போது பார்த்தால் மாதத்துக்கு ஒரு இடத்தில் இடித்துக்கொண்டே இருக்கிறான். அன்றைக்கு போய் திமுக MLA-விடம் சொன்னோம். அவர் வரவில்லை. அவர் எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார் என்றால், இந்த மக்களை இங்கிருந்து அப்புறப்படுதினார்களே, அவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில்தான் அவர் தோற்றார். இங்கு வாழும் மக்களை (திமுகவுக்கு ஓட்டுப்போட்ட) ஓட்டையெல்லாம் கொண்டு போய் பெரும்பாக்கத்திலும் கண்ணகி நகரிலும் போட்டால், உங்களுக்கு ஓட்டு போடுவது யார்? சேட்டு, மார்வாடி, காசா கம்பெனிக்காரன் ஓட்டு போடுவானா?
திமுகாவுக்கா, அதிமுகாவுக்கா – இவர்களுக்கு யார் வாக்களிதார்கள்? இந்த ஏழை எளிய மக்கள்தான் வாக்களித்தார்கள். இவர்கள்தான் கொடிப் பிடித்தார்கள். தங்கள் பகுதியில் கொடிமரத்தை நட்டார்கள். தங்கள் கட்சி என்று பிரகடனப்படுத்தி வளர்த்தார்கள். இந்த மக்களை அப்புறப்படுத்தி வெளியே போட்டுவிட்டு, சேட்டு, மார்வாடி, வெளிநாட்டுக்காரனுக்கு காசா கம்பெனிக்காரன் வீடு கட்டிக் கொடுத்தால், அவன் ஒரு நாளும் உனக்கு ஓட்டு போட மாட்டான். இந்த தேர்தலின் முடிவே அதுதான். எத்தனை லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டதோ, அத்தனை வாக்குகள் உங்களை விட்டு போனது. மறந்துவிடாதீர்கள்.

அன்பானவர்களே, நமக்கென்று வலிமை இருக்கிறது. அந்த வலிமை நமது ஒற்றுமைதான். நாம் எதை கேட்க வேண்டும் என்று தெளிவாக நின்று போராடி பெற்றாக வேண்டும். இந்த நகரம் வளர்ச்சி அடைகிறது. புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய குடிசைகள், வீடுகள் எல்லாம் அகற்றப்படும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
இனிமேல்தான் பெரிய போராட்டமே இருக்கிறது. ஒரு அங்குல நிலத்தை கூட கொடுத்துவிடாதீர்கள். நிலம்தான் இன்றைக்கு சொத்து. வேறு எதுவும் கிடையாது. மேலே கட்டியிருக்கக்கூடிய கட்டடம், மாடிகள் எதுவும் கிடையாது. நிலம்தான் சொத்து. திரும்ப நிலத்தை நீங்கள் வாங்க முடியாது. அனகாபுத்தூரிலிருந்து அப்புறப்படுதப்பட்ட மக்கள் திரும்ப அனகாபுத்தூருக்கு வர முடியாது. அந்த இடத்தில் நிலத்தை வைக்க முடியாது. அங்கே பட்டா கொடுதிருந்தால் அந்த நிலத்தின் மதிப்பு என்னவாக இருந்திருக்கும்? ஒரு கிரவுண்டில் வீடு கட்டியிருந்தால் எத்தனை கோடிகள் போயிருக்கும்? எத்தனை லட்சங்கள் போயிருக்கும்? அதையெல்லாம் இல்லாமல், அந்த மக்களை ஓட்டாண்டிகளாக, ஏழைகளாக, பஞ்ச பராரிகளாக அந்த இடத்திலிருந்து துரத்தியிருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய யாருக்கும், எந்த குடும்பத்திற்கும் இந்த நிலைமை நாளைக்கு வரக்கூடாது என்ற உறுதியோடு நாம் எடுப்போம்.
எங்கெல்லாம் அப்புறப்படுத்த வருகிறார்களோ, அந்த இடத்திற்கெல்லாம் தோழர் சுபாஷ் வருவார். தோழர் திருமுருகன் வருவார். மே 17 இயக்கம் நிச்சயமாக உங்களோடு வந்து நிற்கும். அன்பானவர்களே, இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்குத்தான் ஒரு இயக்கம் தேவை.
கட்சிக்காரர்கள் இதையெல்லாம் பேச மாட்டார்கள். எந்த கட்சியும் இதை பேசாது. ஒரு கட்சி இன்னொரு கட்சியை திட்டும். 41 பேர் இறந்து போனதற்கு யாரும் பொறுப்பெடுக்கவில்லை. நாமெல்லாம் இறப்பதை பற்றி எவனுக்கு கவலை இல்லை. அதை கொண்டாட்டமாக கொண்டாடிவிட்டு போய்விட்டார்கள். “இறந்தவனுக்கு அந்த பிரச்சனை தெரியவில்லை, கொன்றவனுக்கும் பிரச்சனை தெரியவில்லை” என்கிற மாதிரி ஆகிவிட்டது என்பதே நாட்டின் நிலைமை.
நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எந்த கட்சிக்காரர்களும் காப்பாற்ற மாட்டார்கள். தயவு செய்து அதை கனவில் வைத்துக்கொள்ளாமல், ஒரு மக்கள் இயக்கமாக வருவது பெருமை. அப்படி வந்தால் மக்களுக்கு நம் மீது மரியாதை வரும், அன்பு வரும். அதைவிட பெரிய செல்வம் வேறு எதுவும் கிடையாது. அந்த வகையில் இன்றைக்கு ஒரு பெரும் பாய்ச்சலை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் – ஒரு அருமையான பெயர். மக்கள் நீதி இயக்கம். அம்பேத்கரின் கொள்கை வழி நடக்கக்கூடிய இந்த இயக்கம் நிச்சயம் பெரும் புகழ் பெற்று, தமிழ்நாடு அளவில் போற்றப்படக்கூடிய இயக்கமாக திகழும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்!