
நீட்டைத் திணித்து நம் மாணவர்களுக்கு செய்த துரோகத்தை அடுத்து நம் மாணவர்களுக்கு உரிமையான 461 அரசு மருத்துவ இடங்களையும் பறித்திருக்கிறது மோடி அரசு. மூன்று தனியார் கல்லூரிகளை நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றியதால் இந்த இடங்கள் நம் கைவிட்டுப் போயிருக்கின்றன.
மேலும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கென சிறப்பு ஒதுக்கீடாக இருந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான (Super Speciality) 151 இடங்களையும் பறித்திருக்கிறது. தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு சிதையத் துவங்கும் ஆபத்தான அறிகுறிகளாக இவை நிகழ்ந்திருக்கின்றன.
தமிழ்நாட்டின் 2026-ம் ஆண்டிற்கான மருத்துவக் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே, ‘தேசிய மருத்துவ ஆணையம்’ தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு ஆதரவாக நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக்கும் முடிவை எடுத்திருக்கிறது. திருச்சி சமயபுரத்தில் உள்ள ‘சீனிவாசன் மருத்துவக் கல்லூரி’, பெரம்பலூரில் உள்ள ‘தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி’, ஓசூரில் உள்ள ‘செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி’ ஆகிய 3 கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக (Deemed University) அறிவித்தது.. இதனால் அவற்றில் மொத்தமுள்ள 650 இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களான 461 இடங்கள் பறிபோய் விட்டன.
தமிழ்நாட்டில் மொத்தம் 13050 மருத்துவ இடங்கள் இருக்கின்றன. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பினால் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் 5349 மருத்துவ இடங்களும் நம்மிடம் உள்ளன. இவற்றின் 15% (832 இடங்கள்) இடங்களை மத்திய தொகுப்புக்கு கொடுத்து விட வேண்டும். மீதமுள்ள 4517 இடங்கள் அரசு கல்லூரி இடங்கள்.
தனியார் கல்லூரி வசமுள்ளவை சுமார் 4750 இடங்கள். இவற்றில் அரசின் ஒதுக்கீட்டுக்குள் (50 – 65%) சுமார் 3000 வரையாக இடங்கள் கிடைக்கின்றன. ஆக மொத்தம் அரசு கல்லூரியிலும், தனியார் கல்லூரியிலும் சேர்ந்து கிட்டத்தட்ட 7517 இடங்களுக்கு மேல் மாநில அரசின் முடிவுக்கு உட்பட்டவையான இருக்கின்றன. இதில் ESIC (தொழிலாளர் காப்பீட்டு கழகம்) கல்லூரியில் இருந்து 75 இடங்கள் கிடைக்கின்றன. மொத்தமாக அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 7592 இடங்களாகும். இதில் 461 பறிபோனதனால் 7131 இடங்கள் இப்போது இருக்கின்றன. கிட்டத்தட்ட 7000 க்கும் மேலான இடங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.

2026-க்கு முன்பு வரை தமிழ்நாட்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மொத்த எண்ணிக்கை 13. பல்வேறு கால கட்டங்களில் நிகர்நிலையாக மாறின. அவற்றின் மொத்த மருத்துவ இடங்கள் 3050. இவை மொத்தமும் 100% மத்தியத் தொகுப்பிற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் ஆணையினால் கொண்டு செல்லப்பட்டது. தற்போது 3 தனியார் கல்லூரியை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக ஒரே சமயத்தில் மாற்றியிருக்கிறார்கள். இதனால் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைத்த 461-ம் அதில் சேர்ந்து விட்டது. அந்த 3 கல்லூரியின் மொத்த இடங்களான 650 இடங்களும் சென்று விட்டன. இதனால் இந்தியத் தொகுப்பிற்கு தமிழ்நாட்டிலிருந்து 3700 இடங்கள் சென்று விட்டன.
இவை அனைத்தும் நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக மாறாமலிருந்தால் இவற்றிலிருந்து 2000 இடங்களாவது நம் தமிழ் மாணவர்களுக்கு கிடைத்திருக்கும். மாநில ஒதுக்கீட்டுக்கு 50% தர வேண்டும் என நீண்ட நாட்களாக தமிழ்நாடு அரசு போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் நிகர்நிலைப் பல்கலையில் 15% வெளிநாட்டவருக்கு (NRI) என ஒதுக்கப்படுகிறது.
அரசு கல்லூரிகளில் வருடத்திற்கு 15 ஆயிரத்திற்குள் கட்டணம் செலுத்தினால் போதும். தனியார் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்களுக்கு ஆண்டு கட்டணம் 5 லட்சத்திற்குள் தான். ஆனால் இன்று இந்த 3 கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் (Deemed University) ஆன பிறகு, அவை மொத்தமும் இந்திய மருத்துவ கலந்தாய்வுக்கு சென்று விட்டன. 461 இடங்கள் பறிபோனதால் வெறும் ரூ 5 லட்சம் கட்டணத்தில் படித்த மாணவர்களின் கனவு பறிபோனது.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கட்டணம் நிர்வாகத்தினரே நிர்ணயித்துக் கொள்ளலாம். அதிக கட்டணம் செலுத்தும் இந்தியாவில் உள்ள எந்த மாணவரும் இதில் போட்டியிடலாம். இந்த இடங்கள் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது. 5 லட்சத்துக்குள் தமிழ்நாடு மாணவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த இடங்கள் இனி 25 லட்சம் – 1 கோடி வரை அனைத்து இந்திய மாணவர்களும் வந்து படிக்கும் நிலையாகி விட்டது.

இனி தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கட்டணக் கொள்ளை அடிக்கலாம் என்கிற நோக்கத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற விண்ணப்பிப்பார்கள். தனியார் கல்லூரிகளில் இருந்து அரசின் ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும் சுமார் 3000 இடங்களும் கேள்விக்குறியாகும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று 7.5% மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு, 69% வரை சமூக நீதி இடஒதுக்கீடு கிடைத்தன. இதன் ஊடாக சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட பல மாணவர்கள் பயனடைந்தார்கள். ஆனால் நிகர்நிலைப் பல்கலையில் அகில இந்திய அளவிலான இட ஒதுக்கீடு கூட கிடையாது.
மூன்று தனியார் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றப்படுவதால் தமிழ்நாட்டிற்கு குறையும் சீட்டுகளை சமன் செய்வதற்காக 900 சீட்டுகள் அதிகரித்து தருவதாக தேசிய மருத்துவ ஆணணயம் சொல்லியிருக்கிறது. அதில் 150 சீட்டுகள் அரசு கல்லூரிகளுக்கும், 650 சீட்டுகள் தனியார் கல்லூரிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தனியாருக்கு அளிக்கப்படும் சீட்டுகள் எந்த நேரத்திலும் அரசிடமிருந்து பறிக்கப்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. வருங்காலத்தில் இவையும் மத்தியத் தொகுப்புக்குள் சென்று விடும் சூழலே ஏற்படும்.
“ஒரே தேசம்; ஒரே கலந்தாய்வு” என முடிவெடுத்த மோடி அரசு தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தொடுத்த மருத்துவ அநீதி இது. நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடும் கிடையாது. பண வரையறையும் கிடையாது. இதனால் தமிழ்நாட்டின் சுமார் 3700 இடங்களில் பணம் இருக்கும் எந்த மாநிலத்திலிருந்தும் வந்து அமரலாம். டெல்லி, உ.பி, குஜராத்தில் இருந்து பணக்கார மாணவர்கள் வந்து அமர்ந்து கொள்வார்கள். நம் மாணவர்கள் வெறும் பார்வையாளராக நிற்க வேண்டியவர்களாகி விடுவார்கள்.
நிகர்நிலைப் பல்கலையாக மாற்றுவதற்கு நாங்கள் நாங்கள் கடிதம் அனுப்பினோம், பதில் வரவில்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் சொல்கிறது.. மாநில அரசு 60 நாட்களுக்குள் தனது ஆட்சேபனையைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தாமதத்தால் இந்த இடங்கள் பறிபோயிருக்கின்றன. தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது.
இவ்வாறு லாப நோக்கத்திலுள்ள தனியார் கல்லூரிகள் விண்ணப்பித்தால் உடனே நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறும் அங்கீகாரம் பாஜக மோடி அரசினால் கிடைத்து விடுகிறது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு 2024- லிலேயே உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. அதற்குள் இந்த மூன்று தனியார் கல்லூரிகளையும் நிகர்நிலைப் பல்கலைக்கழமாக மாற்றி 461 இடங்களையும் பறித்து விட்டார்கள்.
நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக மாற்றி தமிழ் மாணவர்களின் இளங்கலை மருத்துவ இடங்களைப் பறித்தது போதாதென்று, உயர் சிறப்பு இடங்களாக நம் அரசு மருத்துவர்களுக்கென்று இருந்த 152 இடங்களையும் பறித்துவிட்ட அநீதியும் நிகழ்ந்துள்ளது. இதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல் போன்ற உயர் துறைகளைச் சேர்ந்து 670 உயர் சிறப்பு இடங்கள் இதில் அடங்கும். அவற்றில் சுமார் 430 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இவற்றில் இந்திய ஒதுக்கீடு 50% (215 இடங்கள்) சென்று விடும்.
தமிழ்நாடு ஒதுக்கீட்டின்படி அரசு மருத்துவமனையில் பணியாற்றும், முதுகலை படிக்க விரும்பும் இளங்கலை மருத்துவர்களுக்கென்று மீதமுள்ள 215 சீட்டுகளை தமிழ்நாடு அரசு தனியாக ஒதுக்கியிருந்தது. ஏற்கெனவே 64 சீட்டுகள் கலந்தாய்வு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 151 இடங்களுக்கு கலந்தாய்வு நடக்க இருந்தது.
இந்நிலையில், தனி நபர் ஒருவர் இவற்றை இந்தியத் தொகுப்புக்கு மாற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு நடந்தது. புதிதாகப் பொறுப்பேற்ற தவெக அரசின் வழக்கறிஞர் முறையாக விவரங்களை எடுத்து வைத்து வாதாடவில்லை. இதனால் தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் தோற்றது. இறுதியாக உச்சநீதிமன்றம் இந்த 151 இடங்களையும் இந்திய தொகுப்புக்கு மாற்ற தீர்ப்பு அளித்திருக்கிறது.

இதனால் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தால் உயர் சிறப்பு இடங்களும் கிடைக்கும் என்று அரசு மருத்துவமனையில் சேவை செய்யும் இளங்கலை மருத்துவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதனை ‘தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர் சங்கம்(TNMOA)’ வன்மையாகக் கண்டித்திருக்கிறது.
இவ்வாறு நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக மாற்றி மருத்துவ இடங்களை பறித்தும், நம் அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கி வைத்த 151 இடங்களைப் பறித்தும் மோடி அரசு தமிழ் நாட்டு மருத்துவ மாணவர்களுக்கும், அரசு மருத்துவர்களுக்கும் தொடர் துரோகம் இழைத்திருக்கிறது.
தமிழ்நாடு 40 ஆண்டுகளாக 69% இடஒதுக்கீட்டுடன் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தை பாஜக அரசு தனது ஆதிக்கத்தினால் பறித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவன், முதல் தலைமுறை பட்டதாரி, விவசாயியின் மகன் இவர்களின் மருத்துவக் கனவை சுக்குநூறாக்கும் சதி இது. இது தமிழ்நாட்டின் சமூக நீதி கொள்கைக்கு எதிரான போர்.
“நீட்”டால் போதாது என்று இப்போது “நிகர்நிலைப் பல்கலைக்கழகம்” என்ற புதிய ஆயுதத்தை வைத்து தமிழ்நாட்டு மாணவர்களை வீழ்த்தப் பார்க்கிறார்கள். உயர் சிறப்பு இடங்களைப் பறித்து, ஏழை எளிய மக்களின் உயர் சிகிச்சைக்கு உத்தரவாதம் அளித்த, அரசு மருத்துவமனையின் மருத்துவக் கட்டமைப்பை உடைத்திருக்கிறார்கள்.
நீட்டைத் திணித்து அனிதா உட்பட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரைப் பறித்த பாஜக அரசு, இப்போது ஏழை மாணவர்களை மருத்துவக் கல்வியில் இருந்தே தூர விலக்கிவிடும் வேலையைச் செய்கிறது. மாநில அரசின் உரிமைகளைப் படிப்படியாகப் பறித்து, கல்வியிலும் தனது அதிகாரத்தைத் திணிக்கிறது.
அதிகாரப் பறிப்பிற்கு எல்லையே இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பாஜக அரசிடமிருந்து கல்வியை மீண்டும் மாநில அரசின் பட்டியலுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே இந்த அதிகாரத் திணிப்பைத் தடுக்க முடியும்.
மாணவர்கள் முன்வைக்கும் “நீட் ஒழிப்பு” கோரிக்கை என்பது மாநில உரிமையை மீட்பதற்கான முதல் படியாக இருக்கும். கல்வி மாநிலப் பட்டியலுக்குள் கொண்டு வருவதே தமிழ்நாட்டுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும்