
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஜூலை 25, 2026 அன்று சென்னையில் நடைப்பெற்றது. இதில் மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரை.
இங்கு நாம் நீட் தேர்வை குறித்துப் பேச வேண்டியிருக்கிறது. நீட் தேர்வு என்பது மாநில உரிமை சார்ந்தது, மாணவர் உரிமை சார்ந்தது, கல்வி உரிமை சார்ந்தது, வேலைவாய்ப்பு உரிமை சார்ந்தது, சுகாதார உரிமை சார்ந்தது என்று பல்வேறு அடுக்குகளைக் கொண்டது.
வட இந்தியாவில் இப்போது போராட்டம் நடந்திருக்கிறது. இந்த வட இந்தியா போராட்டத்தை எப்படிப் புரிந்துகொள்வது என்பதில் நமக்கு பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. வட இந்தியாவில் இளைஞர்கள் தொடர்ச்சியாக நீட் தேர்வுப் போராட்டம் நடந்தது. இந்த பாரதிய ஜனதா கட்சியினுடைய செயலற்ற ஒரு அரசியலை எதிர்ப்பதற்கான ஒரு புள்ளியாக மாறியிருக்கிறது. வட இந்தியாவில் இதனுடைய எதிர்ப்பு என்பது, இவ்வளவு காலம் அந்த பாஜக சகிக்க முடியாத நிலையில், அது ஒரு போராட்ட நெருப்பாக வெடித்து, அது வட இந்தியாவில் மையம் கொண்ட இடமாக பார்க்க வேண்டும்.
ஏனென்றால் “கரப்பான் பூச்சி கட்சி” என்பதை எப்போது உருவாக்குகிறார்கள் என்றால், அந்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போராடக்கூடியவர்களை எல்லாம் கரப்பான் பூச்சிகளோடு ஒப்பிட்டுச் சொன்னதை வைத்துதான், ஒரு எழுச்சியை அவர்கள்(கபூக) பேச ஆரமிக்கிறார்கள். அதில் நீட் தேர்வினுடைய முறைகேடுகள் எல்லாம் வருகின்றன. “பாரத ஜனதா கட்சி என்றாலே முறைகேடுதான்” என்கின்ற இடத்தில் அனைத்தும் இணைந்து ஒரு பெரும் போராட்டமாக வெடிக்கிறது. கோரிக்கையில் வட இந்தியாவைப் பொறுத்தவரை அவர்கள் முழுமையான கோரிக்கையை முன்வைக்கவில்லை என்கின்ற வருத்தம் நமக்கு இருக்கிறது.
இதில் கல்வி அமைச்சரை கேள்வி எழுப்பினார்கள். “நீட் தேர்வு” என்கின்ற அந்தக் கட்டமைப்பை குறித்தான கேள்வி அவரிடத்தில் இல்லை. அவர்கள் கேள்வி எழுப்பியது பாரதிய ஜனதா கட்சியை நோக்கிய, ஆட்சி அமைப்பை நோக்கிய, அமைச்சர்களை நோக்கிய, அதனுடைய பிரதம மந்திரியை நோக்கிய கேள்விதான்.
ஆக இந்த வட இந்தியாவில் நடந்த போராட்டம் என்பது நீட் தேர்வினுடைய முறைகேடுகளை மையமாக வைத்து நடந்தாலும் கூட, அது அடிப்படையில் பாரத ஜனதா ஆட்சியினுடைய லட்சணத்தை கேள்வி எழுப்புகின்ற போராட்டமாகத்தான் அமைந்தது. அதனால்தான் 12 வருடமாக எந்தப் போராட்டத்திற்கும் செவி சாய்காத நரேந்திர மோடி, இந்த முறை கல்வி அமைச்சரை ராஜினாமா செய்யக்கூடிய ஒரு முடிவை எடுத்தார்.
டெல்லியில் நடந்த போராட்டம் என்பது நரேந்திர மோடியின் பதவிக்கு வேட்டு வைக்கக்கூடிய போராட்டமாக மாறிவிட்டது. நரேந்திர மோடி மூன்று நாளைக்கு முன்பு இரவில் ஒரு வீடியோ போட்டார். அதில் மோடி பல நாள் தூங்காத, மிக மோசமான ஒரு பீதியில் இருக்கக்கூடிய முகமாகத் தெரிந்தது.

இந்த இளைஞர்களுடைய எழுச்சி என்பது, ஒரு இளைஞன், ஒரு மாணவன் வீதிக்கு வருகிறான் என்றால், அவனுக்குப் பின்னால் ஒரு குடும்பம் இருக்கிறது, உறவினர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரதிநிதியாகத்தான் ஒரு மாணவன் அல்லது இளைஞன் வீதியில் பார்க்கப்படுவான். அப்படி ஒட்டுமொத்த சமூகமும் அவன் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகத் திரண்டு எழுந்த ஒரு சூழலைத்தான் பார்க்கிறோம். மாணவன் மீது கை வைத்தால் அது ஒட்டுமொத்த சமுதாயத்தின் எதிர்ப்பையும் சம்பாதிக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கும் என்பதுதான் அங்கே நாம் பார்த்த போராட்டத்தின் விளைவு.
இந்தச் சமயத்தில் தமிழ்நாட்டிற்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது. ஏனென்றால் இது இப்போது மட்டுமல்ல. 90-களில் மண்டல் கமிஷனுக்கு எதிரான போராட்டம் நடந்தபோது இட ஒதுக்கீடு எவ்வளவு முக்கியம் என்று தமிழ்நாடு குரல் எழுப்பியது.
மண்டல் கமிஷன் எதிர்ப்பு போராட்டம் நடக்காத மாநிலமாக தமிழ்நாடுதான் இருந்தது. அதேபோலத்தான் இப்போதும் நாம் நீட் தேர்வினுடைய பிரச்சினை குறித்துப் பேச ஆரம்பித்திருக்கிறோம்.
இப்போது இந்தப் பிரச்சினை தென்னிந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வடக்கு நோக்கி எழ வேண்டும். அதுதான் இன்றைக்கு முக்கியம். இன்றைக்கு இதை நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். வட இந்தியாவின் இளைஞர்களுக்கு இது குறித்துப் பாடம் எடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அவர்களையும் பயிற்றுவிக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.
தமிழ்நாடு எப்போதுமே வட இந்தியாவைப் பயிற்றுவித்து கொண்டே இருக்கிறது. 1950-களில் இட ஒதுக்கீடு காலத்திலிருந்து ஆரம்பித்து, இன்றுவரை வட மாநிலத்தைப் பயிற்றுவிக்கக்கூடிய பெரும் பொறுப்பை தமிழ்நாடு சுமந்திருக்கிறது. அந்த வகையில் இன்றைக்கு இருக்கக்கூடிய இந்தப் போராட்டம் என்பது “நீட் எதிர்ப்பு”, “நீட்டை ரத்து செய்ய வேண்டும்” என்ற போராட்டமாக, “தமிழ்நாட்டிற்கு நீட்டில் விலக்கு வேண்டும்” என்கின்ற போராட்டமாக நாம் மாற்ற வேண்டும்.
இன்றைய புது இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் சமூக வலைதளம் வழியாக இந்தத் தகவல்களை எல்லாம் பெற்றுக்கொள்கிறார்கள். இப்போது இதில் ஒரு அற்புதமான விடயங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. இதுவரைக்கும் எந்தப் போராட்டம் நடந்தாலும் அதற்கு தவறாக முத்திரை குத்துவது என்பது பாஜக IT Wing-வின் வேலையாக இருந்தது. ஆனால் இந்தப் போராட்டத்தில் பாஜக IT Wing-குடைய வேலையை இந்த Gen Z தலைமுறை மிக எளிமையாகக் கடந்துவிட்டார்கள்.

பாரதிய ஜனதா கட்சியினுடைய IT Wing-க்கு எந்த வேலையும் இல்லாத நிலைமை ஆகிப் போய்விட்டது. அவன் என்ன விதமான அவதூறைப் பரப்பினாலும் கூட அதையெல்லாம் கடந்து அவர்கள்(கபூக) பேசிவிட்டார்கள். அதை நாம் வீடியோக்களைப் பார்த்திருப்போம். ஒரு தீவிரமான அடக்குமுறையை ஏவுகின்ற ஒரு பாசிச அரசாங்கத்தை நேருக்கு நேராக உணர்ச்சிமயமாகப் போராடி வீரமாக எதிர்க்கக்கூடிய ஒரு வழிமுறை.
அதே சமயத்தில் அந்த அரசாங்கத்தை, அந்த அதிகாரத்தை, அந்த பாசிசத்தை மக்களிடத்தில் அந்நியப்படுத்தி, அடையாளப்படுத்தி, அம்பலப்படுதும் ஒரு முறையை நாம் பார்க்க வேண்டும் என்றால், ஹிட்லரை குறித்துச் சார்லி சாப்ளின் எடுத்த அந்த “The Great Dictator” என்கிற திரைப்படத்தின் மூலமாக ஹிட்லர் என்கின்ற பெரும் பிம்பம் உடைக்கப்பட்டது. அதாவது எப்படி ஒரு கேலியின் மூலமாக, இந்த பாசிசம் என்பது எவ்வளவு தூரம் கொடூரமானது என்பதை மிக எளிய மொழியில், கிண்டலாக, கேலியாக அதை சுக்குநூறாக உடைத்தவர் சார்லி சாப்ளின்.
அதேபோலதான் இப்போது Gen Z Generation, இந்த நரேந்திர மோடியும் RSS கும்பலும் வைக்கக்கூடிய அத்தனை அவதூறுகளையும் மிக எளிமையாக எள்ளலின் மூலமாகக் கடந்துவிட்டார்கள். அதைதான் நாம் ஒரு வீடியோவில் பார்த்தோம்.
போராடுபவர்களை எல்லாம் இந்த பாஜக என்ன சொன்னது? “இவர்கள் எல்லாம் அந்நிய கைக்கூலிகள்” என்று சொன்னார்கள். பாஜகக்காரன், சங்கி பையன் எப்போதுமே போராடக்கூடியவர்களை “அந்நிய கைக்கூலிகள்” என்றுதான் பேசுவார்கள். விவசாயிகளை “காலிஸ்தானிகள்” என்று சொன்னார்கள். இஸ்லாமியர்களை “பாகிஸ்தானிகள்” என்று சொன்னார்கள். ஜனநாயகத்திற்காக போராடக்கூடியவர்களை எல்லாம் “பங்களாதேசிகள்” என்று சொன்னார்கள்.
இப்படி எல்லாம் சங்கி பாஜக காரன் சொன்ன உடனே, போராடும் இளைஞர்கள் நேராக சீன அதிபருக்கு போன் போட்டு, “எனக்கு டீக்கு காசு இல்லை, அனுப்புங்கள்” என்று சொல்லி வீடியோ எடுத்து வெளியே போடுகிறான். அதை அனைத்து இடங்களிலும் அந்த இளைஞர்கள் பரப்புகிறார்கள். இதன் மூலமாக பாரதிய ஜனதா கட்சி அம்பலமாகிறது. காவலர்களை கிண்டல் செய்கிறார்கள். அடக்குமுறைக்கு அங்கே ஆணியுடன் இருக்கும் லத்தியினால் இளைஞனை அடித்து துவம்சம் செய்தப்போதும் அந்த காவல் துறையைப் பார்த்து Gen Z இளைஞர்கள் எள்ளல் செய்கிறார்கள். அந்த அடக்குமுறையை எள்ளல் செய்கிற எத்தனை வீடியோ பார்த்தோம் நாம்!
பீகாரில் நடந்தப் போராட்டத்தைப் பார்த்தால், அந்த Barricade-க்கு கீழே சர்க்கரம் இருப்பதால் ஓடிப் போய் விளையாடுகிறான். கயிறு பிடித்து Tug of War பண்ணுகிறான். தண்ணீரை பீய்த்து அடித்தால் அதில் குளித்து கும்மாளம் அடிக்கிறான். ஆக, இந்த அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கேலிக்கூத்தாக்கிய இந்த Gen Z தலைமுறை ஒரு புதுவிதமான புத்துணர்சியைப் போராட்டக் களத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. அவர்களை நாம் கவனமாகக் கற்றுக்கொண்டு, அவர்கள் வழியிலே முன்னகர்வதுதான் முக்கியமானது.

இந்த Gen Z தலைமுறையை இங்கே நாம் இழிவுப்படுத்திய முறை என்பது தவறானது என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இது புது முறையைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த பாசிசத்தை எள்ளலின் மூலமாக அம்பலப்படுத்தி தூக்கிப் போட்டார்கள்.
அங்கே போய் “இந்து-முஸ்லிம்” எல்லாம் சொல்ல முடியவில்லை. “பிரிவினைவாதி” என்று சொல்ல முடியவில்லை. “இவனெல்லாம் Missionary” என்று சொல்ல முடியவில்லை. பாஜகவால் எந்த அவதூறையும் வைக்க முடியவில்லை. எல்லாத்தையும் செய்து பார்த்துவிட்டான். ஒன்றும் நடக்கவில்லை. அதனால்தான் “கல்வி அமைச்சர் பதவி விலகவில்லை என்றால், நரேந்திர மோடியின் பதவிக்கு ஆபத்து” என்கின்ற நிலை வந்திருக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்போது நமக்கு என்ன பொறுப்பு இருக்கிறது என்றால், “நீட்டுக்கு எதிரான போராட்டத்தைக் கட்டி எழுப்ப வேண்டும்”. தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் – பாஜக-வைத் தவிர – அனைத்துக் கட்சிகளும் நீட்டுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறோம். கொள்கை நிலைப்பாட்டில் இருக்கிறோம். அப்படி இருக்கும்போது அனைத்துக் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து எல்லோரும் ஒன்றாக வந்து வீதியில் இறங்கினால் வெற்றி நிச்சியம்…
இதைப் பக்கத்திலிருக்கும் மாநிலத்தில் நாம் பார்கிறோம். கேரளாவில் முல்லைப் பெரியாறு பிரச்சினை வந்தால் ஆளுங்கட்சி, எதிர்கட்சி ஒன்றாக நின்று பேசுகிறார்கள். காவேரி பிரச்சினை வந்தால் கர்நாடகக்காரன், ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்றெல்லாம் வேறுபாடு பார்ப்பதில்லை. Congress, BJP என்ற வேறுபாடு பார்ப்பதில்லை. எல்லோரும் கைகோர்து நிற்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு வந்தால் மட்டும்தான் இதெல்லாம் பிரிந்து கிடப்பதைப் பார்க்கிறோம். நாம் நெருக்கடி சமயத்திலும் கையாண்டு கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு வர வேண்டும்.

தவெக அரசின் நிலைப்பாடு என்ன என்பதுதான் கவலைக்குரியதாக இருக்கிறது. மரியாதைக்குரிய மருத்துவர் எழிலன் அவர்கள் அதைச் சொன்னது அதிர்சியாக இருக்கிறது. இதுவரை இந்த வழக்கு சம்பந்தமாக தவெக அரசு நிலைப்பாடு எடுக்கவில்லை. “நீட் தேர்வு ரத்து” குறித்து உச்சநீதிமன்றத்தில் இருக்கக்கூடிய வழக்கில், இதுவரை தவெக அரசு எந்தவித நிலைப்பாட்டையும் அதனுடைய மூத்த வழக்கறிஞர்களுக்கு, அரசு வழக்கறிஞர்களுக்குக் கொடுக்கவில்லை என்பது மிக மிக ஆபத்தானது.
தவெக அரசை எச்சரிக்கிறோம். இது குறித்த நிலைப்பாட்டை உடனடியாக எடுத்து அறிவிக்கவில்லை என்றால், அதற்கான வழக்கை முன்னகருவதற்கான வேலைகளைச் செய்யவில்லை என்றால், அது கடுமையான எதிர்ப்பைத் தமிழ்நாடு முழுவதும் எதிர்கொள்ளும் என்பதை இச்சமயத்தில் எச்சரிகையாக முன்வைக்கிறேன்.
அன்பான தோழர்களே, இந்தப் போராட்டம் மேலும் முன்னகரட்டும். கட்சி கடந்து, இயக்கம் கடந்து, அனைத்துத் தடைகளையும் கடந்து நாம் ஒன்றுபட்டு “நீட்டை ரத்து” பெற்றுத் தருவோம். அதுதான் தங்கை அனிதாவிற்கு நாம் செய்யக்கூடிய நீதியாகவும், அவருக்குச் செய்யக்கூடிய புகழஞ்சலியாகவும் இருக்கும் என்று சொல்லி விடைபெறுகிறேன்.
நன்றி. வணக்கம்