
E20 பெட்ரோல் என்றால் என்னவென்றே தெரியாமல், இன்று கோடிக்கணக்கான வாகன ஓட்டிகள் அதை தங்கள் வண்டிகளில் நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அனுமதியோ, விழிப்புணர்வோ இல்லாமலேயே இதனை நுழைத்து விட்டார்கள். இதனால் வரும் நன்மைகள் என்ன? பிரச்சனைகள் என்ன? என்று தெரியாமலேயே, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோலாக E20 மாறிவிட்டது.
E20 என்பது 20 சதவீத எத்தனாலும், 80 சதவீத பெட்ரோலும் கலந்த எரிபொருள். பெட்ரோல் இறக்குமதியைக் குறைப்பது, சர்க்கரை, கரும்பு, அரிசி , கோதுமை, சோளம் உள்ளிட்ட பயிர்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பது, கார்பன் உமிழ்வைக் குறைப்பது ஆகிய நோக்கங்களுடன் ஒன்றிய அரசு இதை கொண்டு வருவதற்கு காரணங்களாக சொல்கிறது.

ராஜஸ்தானில் ஒரு வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கே E 20 பெட்ரோலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. சத்தீஸ்கரின் ராய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவர் பிரேம்ராஜ் என்பவர் 2024-ல் வாங்கிய மாருதி சுசுகி வாகனத்தில், E20 பெட்ரோல் பயன்படுத்திய பிறகு மீண்டும் மீண்டும் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதாக புகார் அளித்தார். பலமுறை சர்வீஸ் மையத்தில் பழுது பார்த்தும் பிரச்சினை தொடர்ந்ததால், நுகர்வோர் ஆணையத்தை நாடியிருக்கிறார். மாருதி சுசுகி நிறுவனம், வாகனத்தில் உற்பத்திக் குறைபாடு எதுவும் இல்லை; பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் கலப்படம் இருந்ததே பழுதுக்குக் காரணம் என்று வாதிட்டது. இருப்பினும், நுகர்வோர் ஆணையம் வாடிக்கையாளருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அந்நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை. ஆனால் இந்த ஒரு வழக்கே நாடு முழுவதும் ஒரு அடிப்படை கேள்வியை எழுப்பியுள்ளது. E20 பயன்பாட்டால் வாகனம் பாதிக்கப்பட்டால், அதன் பொறுப்பை யார் ஏற்கப் போகிறார்கள்? நீண்ட நாட்களாக இது குறித்து பேசபட்டாலும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் அளிக்கப்படாமல் E20 பெட்ரோலை பாஜக அரசு இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மக்களிடம் திணித்துள்ளது.
ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அரசிடம் அளித்த அறிக்கையில், E20 பயன்படுத்தும்போது சில பழைய வாகனங்களில் மைலேஜ் குறையும், சில ரப்பர் சீல்கள், ஹோஸ்கள் மற்றும் எரிபொருள் அமைப்பில் உள்ள சில பாகங்கள் பாதிக்கப்படும், அவை சேதமடைந்தால் எரிபொருள் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியா போன்ற அதிக வெப்பநிலை கொண்ட நாட்டில் பெட்ரோல் கசிவு என்பது சாதாரண விஷயம் அல்ல. அது தீ விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் அபாயம் கொண்டது. ஆகவே இது வெறும் மைலேஜ் அல்லது பராமரிப்பு பிரச்சினை அல்ல; பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பான கேள்வி.

2023-க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட பல புதிய பெட்ரோல் வாகனங்கள் E20-க்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு இந்திய சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான வாகனங்களின் நிலை என்ன? அவற்றில் எத்தனை வாகனங்கள் E20-க்கு ஏற்றவை? எத்தனை வாகனங்கள் ஏற்றவை அல்ல போன்றவை குறித்து அரசு நாடு முழுவதும் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தியதா? இது குறித்து மக்களிடம் எந்த தகவலும் பெரிதாக போய் சேரவில்லை. எத்தனாலில் பெட்ரோலை விட ஆற்றல் குறைவு. அதனால் அதே தூரத்துக்கு கொஞ்சம் அதிக பெட்ரோல் எரியும். ஆனால் புது BS6 Phase-2 வாகனங்கள் E20-க்காகவே செய்யப்பட்டுள்ளதால் மைலேஜ் வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கும்.
மேலும், எத்தனால் உற்பத்திக்கும் பெருமளவில் நீர் தேவைப்படுவதாக பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏற்கனவே நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாட்டில், எத்தனால் பெட்ரோலினால் எந்தளவிற்கு நீர் தேவைப்படும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் என்ன போன்ற எந்த அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை.
இதில் மற்றொரு முக்கிய பிரச்சினை புகார் அளிக்கும் நடைமுறை. ஒரு வாகனம் E20 காரணமாக பாதிக்கப்பட்டதாக ஒருவர் நிரூபிக்க வேண்டுமென்றால், அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்தின் சான்று, தொழில்நுட்ப ஆய்வு உள்ளிட்ட பல கட்டங்களை கடக்க வேண்டியிருக்கும். வாகனம் பழுதடைந்தால் அருகிலுள்ள கடைக்கு எடுத்துச் செல்லும் சாதாரண மக்களால் இந்த நடைமுறையைப் பின்பற்ற முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்காமல், ஆதாரங்களை மக்களே சேகரித்து நிரூபிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தொழில்நுட்ப அறிக்கைகளுக்கும், பொதுமக்களிடம் கூறப்படும் உறுதிமொழிகளுக்கும் இடையிலான முரண்பாடு இன்னும் தீர்க்கப்படாமலே E-20 பெட்ரோல் புழக்கத்திற்கு விடப்பட்டு விட்டது

பெட்ரோலுடன் 20% எத்தனாலை கலக்கும் E20 திட்டத்திற்காக, அரசு எத்தனால் தயாரிக்க இந்திய உணவுக் கழகமான FCI-யின் அரிசியை மானிய விலையில் வழங்குகிறது. இந்த ஆண்டு எல் நினோவினால் வறட்சி ஏற்படும் என சூழலியல் நிபுணர்களும், வானிலை அறிக்கைகள் எச்சரித்து வரும் நிலையில், அரசு ரேஷன் கடைகளில் அரிசியின் அளவை குறைப்பதும், FCI-யிடம் இருக்கும் உபரி அரிசியை எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்துவதும் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் நேரத்தில், அடிப்படை தேவையான அரிசியை எரிபொருளாக மாற்றுவது சரியான முடிவு அல்ல.

இந்தச் சூழலில், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ABP News-க்கு அளித்த பேட்டி முக்கியமானது. அந்தப் பேட்டியில் E20 குறித்து எழுந்த கேள்விகள் எதற்கும் தெளிவான பதில் தரவில்லை. அவருடைய மகனின் நிறுவனம் எத்தனால் தயாரிப்பதனால் இதை மக்களிடம் திணிக்கிறார்களா என்கிற கேள்விக்கு, ‘இது தனது மகன் நடத்தும் பல தொழில்களில், இதுவும் ஒன்று, சிறியது’ என்று மேலோட்டமாக பதில் அளித்தார். மேலும் செய்தியாளர் சந்திப்புகளில் “E20-யினால் எந்தப் பிரச்சினையும் இருப்பதால் இந்தியா முழுவதும் ஒரு புகார் கூட இல்லை” என்றும் கூறினார். ஆனால் E 20 பெட்ரோல் உபயோகித்த உடனே வாகனப் பழுதுகள் கண்டறியப்பட முடியாது.. சில ஆண்டுகள் கழித்தே பாகங்கள் பழுதாகும் எனச் சொல்லப்படுகிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தும் நாடுகளில் முன்னோடியாக பிரேசில் தனது மக்களுக்கு E100 விற்பனை செய்கிறது. ஆனால் பிரேசில் தனது வாகனங்களை E100 பெட்ரோலை ஏற்கும் வகையில் தயாரித்துக் கொள்கிறது. 1990களின் இறுதியிலும், 2000களின் தொடக்கத்திலும், பிரேசில் Flex-Fuel (நெகிழ்வான எரிபொருள்) வாகனங்களை அறிமுகப்படுத்தியது. இந்த வாகனங்கள் 100% பெட்ரோல், 100% எத்தனால் (E100) அல்லது இரண்டும் எந்த விகிதத்தில் கலந்திருந்தாலும், அதற்கேற்ப இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாகனத்தின் எரிபொருள் குழாய்கள், இன்ஜின் மற்றும் எரிபொருள் செலுத்தும் (fuel injection) அமைப்பு, எரிபொருள் கலவையை கண்டறிந்து இன்ஜினை சரிசெய்யும் மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு (ECU) இவை அனைத்து E 100 பெட்ரோலை ஏற்கும் வகையில் உள்ளது.
இந்தியா தற்போது தான் E20 இலக்கை நோக்கி செல்கிறது. இந்தியாவில் 2023-ம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்படும் வாகனங்கள் தான் E20- பெட்ரோலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுகின்றன.
ஆனால் 2023-ம் ஆண்டுக்கு முன்பு தயாரித்த வாகனங்களே இங்கு நமது சாலைகளை ஆக்கிரமித்து உள்ளன. இது இந்த ஒன்றிய அரசுக்கு தெரிந்தும் அதற்கான கட்டுமானம் எதையும் மேம்படுத்தாமல் அதனால் வாகனங்கள் பழுதடையும் என்ற எச்சரிக்கையையும் மீறி மக்களிடம் கொண்டு வந்துள்ளனர்
கோடிக்கணக்கான எளிய, நடுத்தர மக்களின் இருசக்கர வாகனங்களின் ஆயுளையும், அவர்களின் உயிர் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ள E20 பெட்ரோல் திட்டத்தை, உரியப் பாதுகாப்பு சோதனைகளும், விழிப்புணர்வும் இன்றி அமல்படுத்தியிருப்பது முற்றிலும் பொறுப்பற்ற செயலாகும். ரேஷன் அரிசியை எத்தனால் தயாரிப்பிற்குத் திருப்பிவிட்டு உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதும், பொதுமக்களின் புகார்களைப் புறக்கணித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே முடிவெடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, ஒன்றிய அரசு உடனடியாக:
E20 பெட்ரோலினால் பழைய வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிவியல் பூர்வமான தெளிவான ஆய்வறிக்கையைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
2023-க்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களுக்குப் பொருத்தமான சாதாரணப் பெட்ரோல் (E10 அல்லது மாற்று எரிபொருள்) தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பிரேசில் போன்ற நாடுகளில் உள்ளது போல, அதற்கான உள்கட்டமைப்புகளையும், நெகிழ்வு எரிபொருள் (Flex-Fuel) வாகனப் பயன்பாட்டையும் முழுமையாக உயர்த்திய பின்னரே இத்தகைய திட்டங்களை முறைப்படுத்த வேண்டும்.