பேரிடரை சந்தித்த நேபாளம், பாடம் கற்குமா இந்தியா?

காட்டாற்று வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துள்ளது நேபாளம். பெரும் மழைப் பொழிவே இல்லாமல் ஏற்பட்ட வெள்ளம் நேபாளத்தையே புரட்டி போட்டுள்ளது. நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போட்கொஷி ஆற்றில் திடீரென வந்த சேற்று வெள்ளம் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது.

திபெத் எல்லையில் ஆகஸ்ட் 26, 2026 அன்று காலை 8 மணிக்கு, 4.4 ரிக்டர் நிலநடுக்கம் உருவானதால் இப்பேரழிவிற்கு மூல காரணம் என நேபாளத்தின் அமைச்சர் சொல்லியிருக்கிறார். நிலநடுக்கம் காரணமாக பனிப்பாறையில் சரிவு ஏற்பட்டு, அந்த சரிவு போட்கொஷி ஆற்றை அடைந்ததாக சொல்லியிருந்தார்.

ஆனால் இன்று(27.08.2026) அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் செயற்கைகோள தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்ததில், இதற்கு காரணம் நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவே காரணம் என்று விளக்கமளித்து இருக்கிறது. பனிப்பாறை சரிவினால் 5.2 ரிக்டர் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறிவித்தது. இதன் காரணமாக போட்கொஷி ஆற்றில் 3 மீட்டர் உயரத்திற்கு சேறும், பாறையும், பனியும் கலந்த வெள்ளம் பெருக்கெடுத்திருக்கிறது. ஆற்றின் அடைப்பு உடைந்ததால் கரை புரண்டோடிய வெள்ளம் பேரழிவை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

நேற்றைய தினம் வரை கிடைத்த தகவலின் படி, இந்த பேரழிவு வெள்ளத்தில் 95-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக நேபாள காவல் துறை கூறியிருக்கிறது. இன்னும் உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கில் கூடும் என அஞ்சப்படுகிறது. பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளே பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 105 பேர் இந்தியர்கள், அதில் 50 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது.

திபெத்தின் 60 கி.மீ தூரத்தில் உள்ள சைலாங் பகுதி முதல் நேபாளத்தில் உள்ள திரிசூலி பகுதி வரை உள்ள  19 பாலங்கள், 40 கி.மீ சாலை மற்றும் 430 மெகாவாட் உற்பத்தி செய்யும் 12 நீர் மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக செய்திகளில் தெரிய வருகின்றன. ரசுவாகடி என்னும் துறைமுகம் முழுவதும் அழிந்திருக்கிறது. கைலாஷ் மானசரோவர் மற்றும் லாங்டாங் போன்ற மலையேற்ற பாதைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.

இந்த வெள்ளத்திற்கு முன்பு ரசுவா மாவட்டத்தில் மழைப்பொழிவு இல்லாமல் வறண்ட நிலையில் இருந்ததாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே இது மழை வெள்ளம் அல்ல, பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட பேரிடரே என்பது தெளிவாகிறது. இமயமலை உலக சராசரியை விட 2 மடங்கு அதிகமாக வெப்பம் உயர்கிறது என நீண்ட நாட்களாக விஞ்ஞானிகள் எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். பன்மடங்கு அதிகரிக்கும் வெப்பத்தினால் பனிப்பாறைகள் உருகுகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் நேபாள பணிப்பாறைகளின் 30% குறைந்துவிட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. உருகிய நீர் மலை மேல் ஏரிகளாக தேங்கி நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது.

பாறைகளை இறுகப் பிடித்து வைத்திருந்த பெர்மாஃப்ராஸ்ட் (Permafrost) எனப்படும் நிரந்தர உறைபனி உருகுவதால் மலைகள் தளர்வடைகின்றன. இதனால் சிறு நிலநடுக்கம் வந்தாலே பாறை சரிந்து ஏரியை உடைக்கிறது. பலவீனமான பனிப்பாறையில் 4.4 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கி, சரிவை ஏற்படுத்தி, ஆற்றை அடைத்து, பின் உடைத்ததே இப்பேரழிவிற்கு காரணமாக இருக்கிறது. இப்படியான நிகழ்வின் பின்னணிக்கு பருவநிலை மாற்றமே காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

2020-ல் ICIMOD (சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு  மையம்) கணக்குப்படி நேபாளம், திபெத் மற்றும் இந்தியாவில் உடனடியாக உடையும் ஆபத்தான 47 பனி ஏரிகள் உள்ளன எனவும், அவை ஒவ்வொரு வருடமும் பெரிதாவதையும் எச்சரிக்கிறது. மேலும் இமயமலையில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட பனி ஏரிகள் இருப்பதாகவும், எதிர்கால பருவநிலை மாற்றத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆபத்துகள் ஏற்படலாம் எனவும் அந்த மையத்தின் அறிக்கை கூறுகிறது.

பனி உருகும் இடங்களில் உருவாகும் கட்டுமானங்கள் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிந்தும், இயற்கையை விட பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் முக்கியமாகக் கொண்டு அரசுகள் அனுமதி அளிக்கின்றன. நீர் மின் நிலையங்கள், சுற்றுலா தளங்கள், வீடுகள் என பலவும் கட்டப்படுகின்றன. ICMOD, NDMA (பேரிடர் மேலாண்மை ஆணையம்)  போன்றவை ‘பனிப்பாறை மிருதுவான (GLOF )பகுதி’ என எச்சரிக்கை விடுத்தும் ஆபத்தை உணர்ந்து கொள்ளாமல் எழுப்பப்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாகின்றன. 

நேபாளத்தில் வெள்ளம் வருவதை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் கருவிகள் உள்ளன. ஆபத்தான ஏரிகளில் தண்ணீரை வெளியேற்றும் தொழில்நுட்பமும் நேபாளத்திடம் உள்ளது. மேலும் வெள்ளம் வந்தால் தப்பிப்பதற்கு மக்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் இவை அனைத்தும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றன.

பனிப்பாறை ஆபத்து உள்ள இடங்களில் தான் அணைகளே கட்டப்படுகின்றன.

  1. உத்தராகண்டில் அலக்நந்தா, பாகீரதி, மந்தாகினி ஆறுகளில் 50-க்கும் மேற்பட்ட நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 2013 கேதார்நாத் வெள்ளம் மற்றும் 2021 சமோலி பேரழிவு இரண்டும் இங்குதான் நிகழ்ந்தன. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) எச்சரித்த பின்னரும் தபோவன், விஷ்ணுகாட் அணைகள் கட்டப்பட்டன.
  1. சிக்கிம் மாநிலத்தில் தீஸ்தா ஆற்றில் 6 பெரிய அணைகள் உள்ளன. 2023-ல் லோனாக் (Lhonak) பனி ஏரி வெடித்ததில் சுங்தாங் (Chungthang) அணை முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டது.
  1. இமாச்சல பிரதேசத்தில் சட்லஜ், பியாஸ், செனாப் ஆறுகளில் 30-க்கும் மேற்பட்ட திட்டங்கள் நடைபெறுகின்றன.
  1. அருணாச்சல பிரதேசத்தில், நிலநடுக்கம் மற்றும் பனிப்பாறை உருகும் அபாயம் இரண்டும் உள்ள Zone-V பகுதியான பிரம்மபுத்திரா ஆற்றில் 100-க்கும் மேற்பட்ட அணைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
  1. ஜம்மு காஷ்மீர் பகுதிகளில், பனி உருகுதல் வேகமாக அதிகரித்து வரும் செனாப், ஜீலம் ஆறுகளில் கிஷன்கங்கா, ராட்டில் போன்ற அணைகள் கட்டப்படுகின்றன.

இவை அனைத்தும் ICIMOD குறிப்பிட்டுள்ள 47 மிக ஆபத்தான பனி ஏரிகளுக்கு கீழே தான் அமைந்துள்ளன. எவ்வளவோ பேரிடர்களை சந்தித்த பின்னரும், பருவநிலை மாற்ற விவகாரத்தில் உலகளவில் அலட்சியமே நிலவுகிறது. அதிலும் இந்தியாவில் இந்த அலட்சியம் மிக அதிகமாக உள்ளது. இன்று நேபாளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்களும், மின் நிலையங்களும் நாளை உத்தராகண்டிலோ, சிக்கிமிலோ, காஷ்மீரிலோ அரங்கேறாமல் இருக்க வேண்டும் என்ற அச்சம்தான் கூடுகிறது. பொருளாதாரத்தை விட சூழலியலை முன்னிறுத்தும் அரசாக இந்திய அரசு இல்லை என்பது இன்றுள்ள நிலையாக இருக்கிறது.

இமயமலை வெப்பமயமாதல் என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, நேபாளத்திற்கும் ஆபத்து என்பதை இந்த பேரழிவு உணர்த்துகிறது..

இமயமலை நமக்கு கொடுக்கும் ஒவ்வொரு எச்சரிக்கையும், அடுத்த பேரழிவிற்கான ஒத்திகையாகவே உள்ளது. பனி ஏரிகள் வெடிப்பதை நம்மால் தடுக்க முடியாது, ஆனால் அதன் கீழ் அணைகளை கட்டாமல் இருப்பதை தடுக்க முடியும். ஆனால் ஒன்றிய பாஜக அரசு இதனை செய்யுமா என்பதே கேள்விக்குறி.

மேலும், பனி உருகினால் வெள்ளம் மட்டுமல்ல, வைரசு(Virus) ஆபத்தும் வரக்கூடும் என விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக எச்சரிக்கின்றனர். இமயமலையின் பனிப்பாறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறைந்து கிடக்கும் கொடிய வைரசுகள், பாக்டீரியாக்களையும் உள்ளடக்கி வைத்துள்ளன. அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு ஒன்று திபெத் பீடபூமியில் உருகிய பனியில் இருந்து 15,000 ஆண்டுகள் பழமையான 28 வகை வைரசுகளை கண்டுபிடித்துள்ளது. அதில் பாதிக்கு மேல் இதுவரை மனிதன் பார்த்திராதவை. பனி உருக உருக, இந்த வைரசுகள் வெளியே வரும் ஆபத்து உள்ளதாக அவர்கள் எச்சரிக்கின்றனர். சூழலியல் சீர்கேடு வெள்ளத்தை மட்டுமல்ல, கொடிய நோய்களையும் பரப்பும் தன்மை கொண்டது. அதில் அதிகம் பாதிக்கப்படுவதும் எப்போதும் எளிய மக்களே.

நம் தமிழ்நாட்டிலும் பரந்தூரில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளை ஆக்கிரமித்து, தி.மு.க அரசு வளர்ச்சிக்காக விமான நிலையம் கட்ட நினைத்ததை தற்போது மக்கள் போராட்டம் தடுத்து நிறுத்தியிருக்கிறது. நீண்ட நாட்களாக மக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக இன்றுள்ள தவெக அரசு பரந்தூர் விமான நிலையத்திற்கு தடையிட்டிருப்பது வரவேற்புக்குரியது.

இயற்கையின் ஒரு சங்கிலி அறுந்தாலே சூழலியலின் ஒட்டுமொத்த சங்கிலியும் குலைந்துவிடும். இதை உணர்ந்து மக்களிடம் சூழலியல் விழிப்புணர்வை விதைப்பதே ஜனநாயக அமைப்புகளுக்கும், சூழலியல் செயல்பாட்டாளர்களுக்கும் உள்ள இன்றியமையாத கடமையாகும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »