
மே பதினேழு இயக்கம் ஈழ அரசியலுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்தும், திராவிடம் – தமிழ்த்தேசியம் குறித்தும், தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்கள அரசால் தாக்கப்பட்டதற்கு எதிராக மே 17 இயக்கம் நடத்திய போராட்டங்கள் குறித்தும், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தின செய்தி ஊடகத்திற்கு ஆகத்து 11, 2026 அன்று வழங்கிய நேர்காணல்
நெறியாளர்: நேயர்களுக்கு வணக்கம். இன்று நம்முடைய நேர்காணலில் நாம் சந்திக்க போகும் நபர் யார் என்றால், அவர் தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை. தமிழ் தேசியம், சாதி மறுப்பு என்கிற இரு பெரிய கொள்கைகளில் உறுதியாக நின்று அரசியல் களமாடுபவர். மே 17 இயக்கத்தின் தலைவர் திரு. திருமுருகன் காந்தி அவர்களைத்தான் நாம் இன்று சந்திக்கப் போகிறோம். வணக்கம் தோழர்.
திருமுருகன் காந்தி: வணக்கம்.
நெறியாளர்: இன்றைக்கு தமிழ் தேசிய அரசியலில் நீங்கள் ஒரு பெரிய ஆளுமையாக இருக்கிறீர்கள். தவிர்க்க முடியாத ஒரு தலைவராக இருக்கிறீர்கள். உங்களுடைய பயணம் எங்கிருந்து ஆரம்பித்தது? எப்படி இதற்குள் நீங்கள் வந்தீர்கள்?
திருமுருகன் காந்தி: கல்லூரி காலத்தில் இருந்தே இந்த அரசியல் பங்களிப்புகள், அதனுடைய அரசியல் தளங்களில் இயங்கியிருக்கிறேன். 2009-ல் நடந்த ஈழப்படுகொலை என்பது ஒரு முழுநேர அரசியலுக்கான தேவையை உருவாக்கியதாக நான் உணர்ந்தேன். அதனால் அதன் பின்னால் இயக்கம் கண்டு, மே 17 இயக்கமாக 17 ஆண்டுகளாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
நெறியாளர்: மே 17 இயக்கம் என்பது வந்து முள்ளிவாய்கால் பிரச்சனைக்கு பிறகு, அதாவது தமிழர்கள் படுகொலைக்கு பிறகு, இந்த ஒரு இனப்படுகொலையை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் உருவாக்கிய இயக்கம். இது கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கிறது. நீங்கள் தொடங்கிய போதிலிருந்து இப்போது வரைக்கும் இயக்கம் எப்படி வளர்ச்சி அடைந்திருக்கிறது? நீங்கள் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கிறதா?
திருமுருகன் காந்தி: அடிப்படையில் தமிழ் இனம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய அமைப்பாகத்தான் தொடங்கினோம். அதனால் உறுப்பினர் எண்ணிக்கை என்பதில் பெரிய ஈடுபாடு காட்டவில்லை. செயல்படக்கூடியவர்கள், ஆய்வு செய்யக்கூடியவர்கள், அதற்குரிய பணிகளை மேற்கொள்ளக்கூடியவர்கள்தான் வேண்டும். இந்த இயக்கம் ஆரம்பித்து முதல் ஆறு ஆண்டுகள் ஈழப்படுகொலை குறித்தான ஆய்வுகளை மேற்கொண்டோம். சர்வதேச அளவில் ஈழ இனப்படுகொலைக்கான ஆதாரங்கள், இந்திய அரசின் பங்கு, அதனுடைய பங்களிப்புகள் குறித்த ஆய்வுகள்… இவை அனைத்தையும் பல்வேறு அரங்குகளில் முன் வைத்தோம். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகள், ஐக்கிய நாடுகள் சபையில் இனப்படுகொலை குறித்து எடுத்து செல்வதற்குரிய பணிகள் என்ற ஆய்வு, அறிவு தளத்தில் ஆரம்பக்கட்ட பயணம் போன்றவற்றில் பெருமளவில் கவனம் செலுத்தினோம்.
வெகு சமீபமாகத்தான் உறுப்பினர்கள் என்கிற ஒன்றை நாங்கள் முன்னெடுக்க ஆரம்பித்தோம். ஏனென்றால் 10 ஆண்டுகளாவது மக்களிடத்தில் பணி செய்ததற்கு பின்னால்தான் மக்களிடம் “அமைப்பில் வந்து சேருங்கள்” என்று கேட்க முடியும். நமக்கு வரலாறு வேண்டும். நாமும் ஒரு வாக்குறுதியை கொடுத்துவிட்டு, “நான் தலைகீழாக மாற்றுவேன், நான் திருப்பி போடுவேன்” என்று வசனம் பேசக்கூடிய அரசியலை தமிழ்நாட்டில் நாங்கள் பேச விரும்பவில்லை.
நெறியாளர்: இப்போது உறுப்பினர் சேர்க்கை எல்லாம் ஆரம்பிக்கப்பட்டது என்று சொன்னீர்கள். உறுப்பினர்கள் சேர்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னீர்கள். ஆனால் தேர்தல் அரசியலில் மே 17 இயக்கம் ஈடுபடவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடைய இரு பெரும் கொள்கையே ”தமிழ் தேசியம், சாதி மறுப்பு”. இந்த இரண்டுக்குமே அதிகாரம் இல்லாமல் எப்படி அதை நடைமுறையில் சாத்தியப்படுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
திருமுருகன் காந்தி: அதிகாரத்தை வைத்துக்கொண்டு இத்தனை ஆண்டு காலம் எந்த கட்சி சாதியை ஒழித்தது? மக்களிடத்தில் இது குறித்தான தெளிவுகளை ஏற்படுத்த வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. தமிழ் தேசியம் குறித்து மக்களிடத்தில் விளக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாங்கள்(மே 17) தேர்தல் அரசியலை நிராகரிக்கவில்லை. தேர்தல் அரசியல் எங்களுடைய ஆரம்ப கட்டத்தில் தேவையில்லை என்று நினைத்தோம். மக்களுக்கு சேவை செய்வதற்கு தேர்தல் அரசியல் தேவையில்லை. தேர்தல் அரசியலுக்குள் போக வேண்டும் என்றால் அதற்கான கட்டமைப்புகள், அதற்கான வேலைத் திட்டங்களே வேறாக இருக்கின்றன. அதை செய்வதற்குரிய காலம் வந்தால் அதை செய்யலாம்.
இப்போதைக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். சேவை மனப்பான்மை கொண்டவர்கள்தான் முதலில் வர வேண்டும். கட்சி என்று ஆரம்பித்த உடனே என்ன செய்வார்கள் என்றால், பதவிக்கு ஆசைப்பட்டவர்கள் உள்ளே வருவார்கள். பதவிக்கு ஆசைப்படாதவர்கள் என்று ஒரு ஆயிரம் பேரை நாம் காட்ட முடியும். பதவியை கொண்டு வந்துவிட்டோம் என்றால், தேர்தல் அதிகாரத்தை நோக்கி நாங்கள் செல்கிறோம் என்று கொண்டு வந்தால், ஒரு லட்சம் பேரை காட்ட முடியும். நாங்கள் ஒரு லட்சம் பேரை காட்டுவதை விட ஆயிரம் பேரை காட்டுவதைத்தான் சிறப்பானதாக பார்க்கிறோம். எதையும் எதிர்பார்க்காமல் சேவை செய்யக்கூடிய ஒரு ஆயிரம் பேர், உண்மை தன்மையோடு மக்களை நேசித்து ஒரு ஆயிரம் பேர் உருவாவதுதான் கடினமான விடயம். அதைத்தான் மே 17 இயக்கம் செய்துகொண்டிருக்கிறது.

நெறியாளர்: இப்போது தமிழீழப் படுகொலை மட்டுமல்ல, அதை தொடர்ந்து நிறைய விடயங்களில் உங்களுடைய குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக எந்த ஒரு விடயம் தமிழ்நாட்டில் மக்களுக்கு எதிராக நடந்தாலும் உடனே உங்களது குரல் ஓங்கி ஒலிக்கிறது. இதனால் ஏற்பட்ட உங்கள் மீதான வழக்குகள், சிறைவாசம், அதற்கு பிறகு காவல்துறையின் அதிகார அத்துமீறல்… இவை அனைத்தையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
திருமுருகன் காந்தி: அது இயல்பு. நாம் நேர்மையாக மக்களுக்கான அரசியலை செய்யும் பொழுது, மக்கள் விரோத அரசாக இருக்கக்கூடியவர்கள் நம் மீது நெருக்கடியை உருவாக்குவார்கள். அடக்குமுறையை ஏவுவார்கள். நெருக்கடியையும் அடக்குமுறையும் எதிர்பார்க்காமல் மக்கள் சேவை செய்ய முடியாது. ஆனால் நெருக்கடியோ அடக்குமுறையோ நம்மை தடுத்து நிறுத்தாது என்பதுதான் அதனுடைய எதார்த்த நிலை.
நெறியாளர்: உங்களுடைய போராட்டங்களில் அதிகமாக அடக்குமுறை செய்தது, வழக்கு போட்டது, சிறைக்கு அனுப்பியது எல்லாமே ஒன்றிய அரசா? அல்லது மாநில அரசா?
திருமுருகன் காந்தி: ஒன்றிய அரசினுடைய அழுத்தத்தை மையமாக வைத்துதான் மாநில அரசு செயல்படுகிறது. ஒன்றிய அரசுக்கு கட்டுப்பட்ட எல்லா அரசும், எந்த அரசாக இருந்தாலும், அவர்கள் மாநில அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு, நம் மீது அடக்குமுறையை ஏவுவார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரைக்குமே ஒன்றிய அரசுதான் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துகிறது. அதை கேட்டுக்கொண்டுதான் அடக்குமுறைகளை மாநில அரசு செயல்படுத்துகிறது. அதாவது மாநில அரசு தனித்துவமான அரசாக இருந்தால் ஒன்றிய அரசு சொல்வதை கேட்டுக்கொண்டு இருக்க மாட்டார்கள். ஆனால் இங்கே சார்பு அரசுகளாக இருக்கக்கூடிய சமயங்களில் இந்த மாதிரியான அடக்குமுறைகள் வருகின்றன. இது தவிர்க்க முடியாது.

நெறியாளர்: சமீபத்திய 2026 ஆண்டு அரசியல் நிலை… திரு. ஜோசப் விஜய் அவர்களின் பிரமாண்ட வெற்றியை எப்படி பார்கிறீர்கள்?
திருமுருகன் காந்தி: இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஒரு வரியில் சொல்லிவிட முடியாது. என்ன என்றால், திரையில் பார்த்தவரை அரசியலுக்கு ஒரு சக்தியாக பயன்படுத்தக்கூடிய யுக்தி முறை, ஒரு புது முறையாக இருக்கிறது. இதுவரை அப்படி நாம் யாரும் பார்க்காத ஒரு முறை.
நெறியாளர்: எம்ஜிஆர்-ஐ அப்படி பார்க்கவில்லையா?
திருமுருகன் காந்தி: எம்ஜிஆர் அரசியல் கட்சிகளில் இருந்தவர். திமுகவில் பொறுப்பில் இருந்தார். ஒரு எம்எல்ஏவாகவும் எம்பியாகவும் மாறுவதை இயல்பாக நாம் பார்க்க முடியும். (அம்மையார் ஜெயலலிதாவும் சினிமாவில் இருந்து வந்து அரசியலில் இருந்திருக்கிறார்கள்). மேலும் எம்.ஜி.ஆர் திரைப்படங்களிலேயே திமுகவின் கட்சி கொடியை எல்லாம் பயன்படுத்தியிருக்கிறார். சின்னங்களை பயன்படுத்தியிருக்கிறார். அறிஞர் அண்ணா அவர்களின் படங்களை காட்டியிருக்கிறார், பேசியிருக்கிறார். அது ஒரு படிநிலை. ஆனால் அப்படி எதுவுமே இல்லாமல்தான் விஜயினுடைய வருகை என்பது இருந்திருக்கிறது. ரசிகர்களை அரசியலுக்கு வாக்காளர்களாக மாற்றக்கூடிய ஒரு புதுவிதமான யுக்தி முறையை அவர்கள் கடைபிடித்திருக்கிறார்கள். இது நாம் எதிர்பார்க்காத ஒன்று.
திமுகவும் அதிமுகவும் தங்களுக்குள்ளான போட்டி அரசியலைத்தான் மையப்படுத்த விரும்பினார்கள். அப்போது தவெகவை அவர்கள் பொருட்டாக மதிக்காததனுடைய விளைவையும் எதிர்கொண்டார்கள். இது எல்லாமே சேர்ந்த ஒன்றாகத்தான் விஜய் அவர்களின் வெற்றி. ஏனென்றால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் தவெக தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள்.
தவெகவை எதிர்த்து யாருமே பேசவில்லை. நான் தேர்தலில் 35 தொகுதிகளில் போய் பரப்புரை செய்திருந்தேன். எங்கேயுமே தவெகவை விமர்சித்து யாருமே பேசவில்லை. பெரிய பொதுக்கூட்டம் நடத்தவில்லை. யாருமே அந்த கட்சியை பொருட்படுத்தி யோசிக்கவில்லை. அவர்களுமே பிரசாரத்தை பெரிதாக எல்லாம் செய்யவில்லை. அப்படிப்பட்ட எதிர்ப்பற்ற நிலையில் மக்கள் தவெகவை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். அதனால் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
நெறியாளர்: ஒரு கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் சொன்னது என்னவென்றால், “நீங்கள் எல்லோரும் கட்சி ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போய் உட்கார்ந்தீர்கள். நான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போய் உட்கார்ந்துவிட்டு கட்சி ஆரம்பித்திருக்கிறேன்” என்று சொன்னார்.
திருமுருகன் காந்தி: “எல்லோர் வீட்டுக்குள்ளும் நான் போனேன்” என்றால் வீட்டுக்குள் தொலைக்காட்சிகள்தான் கொண்டு போய் சேர்த்தன. அதுவும் திமுகவின் தொலைக்காட்சிகள்தான் கொண்டு போய் சேர்த்தன. திரு. விஜய் அவர்கள் திமுகவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அப்படி வீட்டுக்குள் போனீர்கள் என்பதனால் மட்டுமே ஒருவர் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி பார்த்தால் ”வடிவேலு” அவர்களும் போயிருக்கிறார். அப்படியென்றால் அவர் அன்றைக்கே முதலமைச்சராக ஆகி இருக்க வேண்டும். அப்படி அல்ல, இந்த பேச்சு எதுகை மோனை நல்லாயிருக்கும் என்பதற்காக பேசி இருக்கலாம். திமுக, அதிமுகவின் இடையேயான போட்டி அரசியலில் மூன்றாவது அணிக்கான இடம் இருக்கிறது அல்லவா? அந்த இடத்தை தவெக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நெறியாளர்: மூன்றாவது அணி என்றால் விஜயகாந்த் வந்தார். அதற்கு பிறகு சீமான் தொடர்ந்து களமாடிக்கொண்டு இருக்கிறார். இவர்களை எல்லாம் மூன்றாவது அணியாக பார்க்காமல் ஏன் திரு. விஜய் அவர்களை மட்டும் பார்க்க வேண்டும்?
திருமுருகன் காந்தி: மூன்றாவது அணி என்கிற வரலாறு இன்றைக்கு மட்டுமல்ல. அது நீண்டது. நடிகர் சிவாஜி கணேசன் கூட ஒரு கட்சி ஆரம்பித்தார். அதற்கு பிறகு ஐயா வைகோ அவர்கள், மருத்துவர் ராமதாஸ் அவர்கள், அதற்கு பிறகு விஜயகாந்த் அவர்கள்… இவர்கள் எல்லாம் வந்தார்கள்.
இந்த சமயத்தில் எல்லாம் திமுக, அதிமுகவில் “Towering Personality” என்று சொல்லக்கூடிய வகையில் ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. மக்களோடு ஒரு பிணைப்பு இருந்தது. மக்கள் செல்வாக்கு பெற்ற இரண்டு தலைவர்கள் ஒரு கட்டத்தில் மறைகிறார்கள். ஒரு பெரிய இடைவெளி வருகிறது. அதிமுகவினுடைய புது தலைவராக உருவெடுத்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக மாறவில்லை. திமுகவில் திரு. ஸ்டாலின் அவர்கள் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக மாறிக்கொண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில்தான் இவர்(விஜய்) உள்ளே வருகிறார். ஆனால் ஒரு விடயம், தலைவர்களை பார்த்து தேர்ந்தெடுக்கக்கூடிய, கட்சியை தேர்ந்தெடுக்கக்கூடிய போக்கு தமிழகத்தில் இருக்கிறது.
இப்போது தலைவராக பார்ப்பதற்கு யாருமே இல்லை என்கிற ஒரு இடத்திற்குள், ஜெயலலிதா அம்மையார் இருந்திருந்தால் விஜய் வந்திருக்க மாட்டார். கண்டிப்பாக கலைஞர் இருந்திருந்தாலும் வந்திருக்க மாட்டார். இப்போது அந்த இடத்தில் இரண்டு பேருமே இல்லை. பெரிய ஆளுமைகள் இல்லாத ஒரு வெற்றிடம் இருக்கிறது. அப்போது அந்த இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். அதுதான் காரணமாக இருக்க முடியும். சீமான் வராமல் இருப்பதற்கு காரணம் நேர்மையற்ற தன்மை. அவரிடம் எதிலுமே நேர்மை இருக்கிற மாதிரியான ஒன்று இல்லை. அவர் அம்பலப்பட்டு போனவர்.
நெறியாளர்: அது ஒரு கேள்வியாகவே வைத்திருந்தேன். ஏனென்றால் சீமான் தமிழ் தேசியம் பேசுகிறார். நீங்களும் அதைத்தான் முன்னெடுக்கிறீர்கள். ஆனால் அவர் பேசுவதை ஏன் விமர்சிக்கிறீர்கள்?
திருமுருகன் காந்தி:.சீமானுக்கு தமிழ் தேசியம் என்னவென்றே தெரியாது. தமிழ் தேசியத்தில் அ, ஆ கூட தெரியாது. அவருக்கு சாதி அரசியல் பேச தெரியும். திராவிடத்தை கொச்சையாக பேச தெரியும். எல்லோரையுமே கொச்சையாக கையாளத் தெரியுமே ஒழிய, நாகரீகமான, எதிர்காலத்திற்குரிய அரசியலை சீமானுக்கு பேச தெரியாது. தமிழ் தேசியத்தினுடைய எந்த அடிச்சுவடும் தெரியாத ஒரு நபர், தன்னைத் தானே தமிழ் தேசியவாதி என்று சொல்லிக்கொள்கிறார். அவ்வளவுதான். அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு என்றைக்குமே கிடையாது. அது அவருக்குமே நன்றாகவே தெரியும்.
சீமான் வெற்றி பெறுவதற்கான அரசியலை செய்திருந்தால், அனைவரையும் அரவணைத்து அரசியல் செய்ய வேண்டும். எல்லோரையும் இணைத்துதானே அரசியலில் வந்து நிற்க வேண்டும்! எல்லாவித பிரதிநிதித்துவத்தையும் அரவணைக்க வேண்டும். எட்டு கோடி பேர் கொண்ட சமூகம் இது. இதில் எல்லா தரப்பிலிருந்தும் அரசியல் பிரதிநிதித்துவம் கேட்பார்கள். “இல்லை, நான் தனி ஆள், தனி ஆள்” என்று ஒரு திரைத்துறையில் எப்படி தனியாளாக ஒரு இயக்குனராக இருப்பது போல, ஒரு படத்திற்கு ஒரு இயக்குனர் என்ற அதே முறையை இங்கே கையாண்டால் அது நிற்காது. அது எதேச்ச அதிகார போக்கு. பெரியாரை பற்றி எல்லாம் பொய்யாக பேசுகிறார். கொச்சையான தலைவராக இருக்கிறார். அதுதான் சீமானின் பின்னடைவுக்கு காரணம். அது யோக்கியத்தனம் கிடையாது.
நெறியாளர்: ஜோசப் விஜய் அவர்கள் பதவி ஏற்று கிட்டத்தட்ட 90 நாட்கள் ஆகிறது. ’இந்த 90 நாட்களில் ஊழல் ஒழிந்துவிட்டது’ என்கிற மாதிரியான ஒரு பிரச்சாரம் முன்னெடுத்து வைக்கப்படுகிறது. இப்போது நிறைய பேர் பொதுவெளியில் சொல்கிறார்கள், “இப்போதெல்லாம் அரசு துறையில் லஞ்சம் இல்லை” என்கிற சில விடயங்கள் எல்லாம் கேள்விப்படுகிறோம். இதை எல்லாம் எப்படி பார்க்கிறீர்கள்? இது உண்மையா?
திருமுருகன் காந்தி: இது நீண்ட காலத்திற்கு நடக்கும் பொழுதுதான் இது குறித்து நாம் சொல்ல முடியும். ஏனென்றால் ஒரு அரசாங்கம் புதிதாக வரும்பொழுது சில விருப்பங்களை முன்வைப்பார்கள். அரசியல் அதிகார வட்டங்கள் அதை எவ்வளவு தூரம் உள்வாங்குகிறது என்பதை பொறுத்தது, எவ்வளவு காலம் இப்படி ஒன்று நடக்கிறது என்பதை பொறுத்துதான், அதை நாம் பார்க்க முடியும். ஒரு சில முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள். அதன் மூலமாக சில மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதை வரவேற்கிறோம்.
நெறியாளர்: முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள் என்பது உண்மைதானே!
திருமுருகன் காந்தி: எனக்கு இன்னும் நேரடியான அனுபவங்கள் இல்லை. ஆனால் நிறைய பேர் சொல்வதை கேள்விப்படுகிறோம். முயற்சி எடுப்பதை வரவேற்கிறோம். நல்ல முயற்சிகளை எப்படி வரவேற்காமல் இருக்க முடியும்? ஆனால் நிலைத்து நிற்கக்கூடிய அளவு கட்டமைப்புகள் மாற்றப்பட வேண்டும்.
ஊழல் என்றால் இது மட்டும் ஊழல் இல்லை. “ஆக்கிரமிப்பு” என்று சொல்லி வீடுகளை இடிக்கிறார்கள். அது பெரிய ஊழல். அது ஒரு நில மாபியா நடத்தும் ஊழல். ஆக்கிரமிப்பு என சொல்லி இவர்கள் போலியாக ஒரு பொதுநல வழக்கு போடுவது, நீதிமன்ற ஆணையை வாங்குவது, அதிகாரிகள் துணை நிற்பது, அதை வைத்துக்கொண்டு நிலத்தை “முழுக்க நாங்கள் பொது பயன்பாட்டுக்கு கொண்டு போகிறோம்” என்று மக்களை அப்புறப்படுத்தி வெளியே தூக்கி போடுவது… இதெல்லாம் பெரிய ஊழல்தான். இந்த ஊழலில் விஜய் கை வைக்கும்போதுதான் என்ன நடக்கிறது என்பது தெரியும்.
நெறியாளர்: திராவிடம் என்கிற சொல்லாடலுக்கும் தமிழ் தேசியம் என்கிற சொல்லாடலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

திருமுருகன் காந்தி: திராவிடம், தமிழ் தேசியம் வருவதற்கு முன்னால் தமிழ் சமூகம் என்னவாக இருந்தது என்றால், ஆரிய ஆக்கிரமிப்பின் கீழாக ஒரு அவமானப்படுதப்படுகின்ற இடத்தில், நம்முடைய மொழியையும் நம்மையும் வைத்திருந்தார்கள். நம்மை சாதியாகப் பிரித்தார்கள். வழிபாட்டு மொழியாகவும் தமிழ் மொழி இருக்காது. கல்விக்கு வாய்ப்பற்ற ஒரு நிலை இருந்தது. அப்போது நம்மை அவமதிக்கக்கூடிய கட்டமைப்புகளை, சிதைக்கின்ற, நிராகரிக்கக்கூடிய கட்டமைப்புகளை, மக்கள் மனதில் இருந்து அகற்றுகின்ற பெரும் பணியை திராவிடம் தூக்கி சுமந்தது. அவமானப்படுத்தப்படுகின்ற அந்த கட்டமைப்புகளிலிருந்து வெளியேற வேண்டும் என்ற அரசியலை திராவிடம் செய்கிறது. அப்படி வெளியேறியதற்கு பின்னால் நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கான தேசத்தை கட்டமைக்க வேண்டும். அடுத்த கட்ட கட்டமைப்பு, ஒரு வளர்ச்சி நிலை. அதுவே தமிழ்தேசியம்.
திராவிடம் இல்லாமல் தமிழ் தேசியம் எப்படி இயங்க முடியும்? திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிரான ஒரு அரசியலை முன் வைக்கிறது. தமிழ் தேசியம் என்பது வளர்ச்சி நிலையை முன் வைக்கிறது.
நமக்கான ஒரு இறையாண்மையான அரசியலை, இறையாண்மை கொண்ட பொருளாதாரத்தை, ஒரு பண்பாட்டை முன்வைக்கிறது. ஆரியத்தை கடந்துதானே அதை செய்ய வேண்டும். ஆரியத்தோடு எப்படி தமிழ் தேசியத்தை படைக்க முடியும்? அப்படிப் படைத்தால் அது ஆரிய தேசியமாகத் தான் இருக்க முடியும். அதனால் திராவிடத்தை நிராகரித்துவிட்டால் தமிழ் தேசியத்தை கட்டமைக்க முடியாது. இதைத்தான் மே 17 இயக்கம் திரும்ப திரும்ப சொல்கிறோம்
நெறியாளர்: தமிழீழம், ஈழ தமிழர் பிரச்சனையை அரசியல் அடையாளத்திற்காக பயன்படுத்துகிறீர்கள் என்கிற ஒரு விமர்சனம் உங்கள் மீது இருக்கிறது என்பதை நாங்கள் கேள்விப்பட்டோம். நிறைய பேர் ஈழத் தமிழர் பிரச்சனையை எடுத்திருக்கிறார்கள் எனும்போது, அதை உண்மையாக எடுக்கிறவர்களுக்கு கூட அது ஒரு பாதகமாக அமையலாம். அந்த மாதிரியான ஒரு விமர்சனம் வரும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
திருமுருகன் காந்தி: இது நல்லதுதான். நாங்கள் ஈழ அரசியலை அடையாளமாகத்தான் வைத்திருக்கிறோம். “மறந்துவிடாதீர்கள்” என்று சொல்கிறோம். மறக்காதீர்கள் என்று சொல்வது நல்ல அரசியல்தானே? ஒரு இனப்படுகொலை நடந்திருக்கிறது. ஒன்றரை லட்சம் பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, அந்த தேதியை, அந்த இடத்தை மறந்துவிடாதீர்கள். அதை அடையாளமாக வைத்துகொள்வது எங்களுக்கு பெருமைதான். எந்த வகையில் பெருமை என்றால், இதை நினைவுபடுத்துகிறோமே என்கிற ஒரு பொறுப்பை சுமந்திருக்கிறோம்.

ஈழ அரசியல் செய்தால் என்ன லாபம் வந்துவிட போகிறது? ஓட்டு கிடைத்துவிட போகிறதா? அப்படி என்றால் ஐயா வைகோ இன்றைக்கு வெற்றி பெற்றிருப்பார். ஈழ அரசியலால் என்ன கிடைக்கிறது? வழக்கு வருகிறது. அடக்குமுறை வருகிறது. ஊடகத்தில் செய்தி வருவதில்லை. ஈழ அரசியலை பேசுகின்ற மே 17 இயக்கத்திற்கு எத்தனை ஊடகத்தில் செய்தி வந்திருக்கிறது? எத்தனை செய்தி ஆகியிருக்கிறது? ஒன்றுமில்லாத நபர்களுடையதெல்லாம் இன்றைக்கு பெட்டி செய்தியாக போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் மீனவர்கள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சிங்கள நிறுவனத்திற்கு எதிராக, மே 17 இயக்கம் தமிழ்நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டங்களை 10 ஊர்களில் நடத்தினோம். அதிலிருந்து இன்றைக்கு வரைக்கும் எந்த மீனவன் மீதும் கை வைக்கவில்லை. இது மே 17 இயக்கம் சாதித்திருக்கிறது. எங்கள் தோழமை அமைப்புகளோடு சேர்ந்து இதை செய்திருக்கிறோம். யார் பேசினார்கள்? எந்த கட்சி இதை செய்தது?
அதற்கும் இரண்டு வருடத்திற்கு முன்னால் கோட்டைப்பட்டினத்தில் மீனவன் கொலை செய்யப்பட்ட பொழுது, அதற்கு பிரேத பரிசோதனை அறிக்கை வாங்கினோம். அதற்கு முன் அழுத்தம் கொடுத்தோம், நெருக்கடி கொடுத்தோம். வழக்கறிஞர்கள் இரண்டு பேர் போய் வழக்கு போட்டு, பிரேத பரிசோதனைக்கு மறு உத்தரவு வாங்கினார்கள். இத்தனை அழுத்தத்தை கொடுத்து அரசை செய்ய வைத்தோம். அதற்குப் பிறகு மீனவர் மீதான வன்முறை குறைந்தது.

பிறகு திடீரென்று இரண்டு தமிழ் மீனவர்களை கொலை செய்ததால், “மறுபடியும் நீ அங்கே கை வைத்தால், இங்கே இருக்கும் உன் கம்பெனியை நடத்த முடியாது” என்று சொன்னோம். இங்கே “DAMRO Furniture” என்று ஒரு கடை இருக்கிறது. அது இலங்கை சிங்களவருடைய கடை. அது மிகப்பெரிய ஒரு “Chain of furniture” கடை. சிங்களவர் இங்கே வந்து வியாபாரம் செய்யலாம், சம்பாதிக்கலாம், எல்லாம் செய்யலாம். நாம் ஒன்றும் சொல்ல மாட்டோம். ஆனால் என் மீனவர்கள் கடலுக்கு போய் ஏதோ சில ஆயிரம் மீனை பிடிக்கிறார்கள் என்பதற்காக சிங்களவர்கள் அவனை அடித்து கொலை செய்கிறார்கள் எனில், “உன் நிறுவனத்தை நான் எப்படி இங்கே விட்டு வைப்பேன்? நான் இழுத்து மூடுவேன்” என்று சொன்னதற்கு பின்னால், இரண்டு ஆண்டுகளாக என்ன நடந்திருக்கிறது? ஏதாவது நடந்ததா?அப்போது இதை எல்லாம் மே 17 இயக்கம் சத்தமில்லாமல் சாதித்து இருக்கிறது. இதை எந்த ஊடகம் பேசியது? யார் இதையெல்லாம் வெளியே பேசினார்கள்?
இந்திய அரசு ஈழப்படுகொலையில் ஒரு கூட்டு குற்றவாளி என்பதை ஜெர்மனியில் சர்வதேச மட்டத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தது மே 17 இயக்கம். ஈழத்தை ஆதரிக்கக்கூடிய எத்தனை பேர் இதை பேசியிருப்பார்கள்? ஐயா வைகோ அவர்கள் மட்டும்தான் இதை ஒரு அறிக்கையாக வெளியிட்டு, “இது நடந்திருக்கிறது” என்று வெளியே கொண்டு வந்தார். எப்போதும் மே 17 இயக்கம் சத்தமில்லாமல் பல விடயங்களை சாதித்து இருக்கிறது. ஆனால் இவை எதுவுமே செய்தியானது கிடையாது. காரணம் இவை எல்லாம் ஈழ அரசியல் என்பதுதான்…
காணொளி:
இந்த காணொளியின் அடுத்தப் பகுதி அடுத்த கட்டுரையில் வெளிவரும்…