
தொடர் நீட் தேர்வு குளறுபடிகளினால் வெறுப்படைந்த மாணவர்கள், டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்புடன் இணைந்து 49 நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர். இதன் எதிரொலியாகத் தமிழகத்திலும் பாலன் இல்லம், தாயகம் மற்றும் திருவள்ளூர் இல்லம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டங்கள் வெடித்தன.
இந்தச் சூழலில், நீட் தேர்வு மற்றும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில், இடதுசாரி கட்சிகள் (CPI, CPI(M)) மற்றும் CJP அமைப்புகளின் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க, காவல்துறை – கல்வித்துறை – மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க அறிக்கை உத்தரவிட்டுள்ளது. ஜனநாயக ரீதியிலான போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களைக் கட்டுப்படுத்த, குறிப்பாக இடதுசாரி மற்றும் CJP அமைப்பின் பெயர்களைக் குறிப்பிட்டுத் தடை விதிக்க முயன்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சுற்றறிக்கை பின்னணி மற்றும் ரத்து:
- ஜூலை 28, 2026: தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் தலைமையில் நடைபெற்ற சட்டம் – ஒழுங்கு கூட்டத்தில், இடதுசாரிகள் மற்றும் CJP போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க அறிவுறுத்தப்பட்டது.
- ஜூலை 31: பொதுத் துறைச் செயலாளர் மூலமாக இக்கூட்டத்தின் விவரங்கள் பிற துறைகளுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டன.
- ஆகஸ்ட் 14: உயர்கல்வித் துறை சிறப்புச் செயலாளர் ரஷ்மி சித்தார்த் ஜாகடே, கல்லூரிக் கல்வி ஆணையர் மற்றும் பல்கலைக்கழகப் பதிவாளர்களுக்குக் கடிதம் அனுப்பினார்.
- ஆகஸ்ட் 17: கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் (DoCE) இணை இயக்குநர் பி. சிந்தியாசெல்வி, அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் மாணவர்களை இப்போராட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுக்கும்படி சுற்றறிக்கை அனுப்பினார்.

இந்தச் செய்தி வெளியானதும், மாணவர் அமைப்புகளான SFI, AISF மற்றும் பல்வேறு இடதுசாரி மாணவ இயக்கங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். முற்றுகைப் போராட்டங்களையும் நடத்தினர். இதையடுத்து, ஆகஸ்ட் 19, 2026 அன்று கல்லூரிக் கல்வி இயக்ககம் இந்த உத்தரவை அவசர அவசரமாகத் திரும்பப் பெற்றது.
உயர்கல்வித் துறை அமைச்சரின் விளக்கம்:
இச்சம்பவம் குறித்துத் தமிழக வெற்றிக் கழக (TVK) அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் அளித்துள்ள விளக்கத்தில்:
“இந்தச் சுற்றறிக்கை மாணவர்களின் கல்வி சூழல் மற்றும் ஒழுங்கமைவு பராமரிப்புக்காக மட்டுமே அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதில் தவறுதலாக குறிப்பிட்ட கட்சி மற்றும் இயக்கம் குறித்த சில வாசகங்கள் இடம்பெற்று விட்டது. இதை அறிந்த கல்லூரி இயக்குனரகம் உடனே இதனை திரும்பிப் பெற்றது.. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என்று சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
தோழர் திருமுருகன் காந்தியின் காட்டமான பதிவு:
அமைச்சரின் இந்த விளக்கத்தை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மாணவர் சுற்றறிக்கை குறித்து உயர்கல்வித் துறை அமைச்சரின் விளக்கம் முற்றிலும் ஏற்புடையதல்ல. பிழைதிருத்தம் செய்வதைப் போல அறிக்கை மாற்றம் செய்யப்பட்டது என்பதும், இடதுசாரி மாணவர் அமைப்புகள் மீதான கண்காணிப்பு என்பது ஏதோ மேலோட்டமான தவறு போலக் கூறுவதும் குற்றத்தை மூடி மறைக்கும் செயலாகும்.

இவ்வாறான அடிப்படை உரிமைகள் குறித்து அறிவற்ற அதிகாரிகளை வைத்து கல்வி இயக்ககம் செயல்படுகிறது என்றால், அந்த அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அதிகாரிகள் மட்டுமல்ல, அமைச்சரும் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். ஏற்கனவே தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பிற்குள்ளாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த உத்தமர் அவர்.
கல்வித் துறையின் உயர் அதிகாரி பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர். வழக்கம் போல சங்கித்தனமான அதிகாரியாக அவர் செயல்பட்டிருக்கிறார். மாணவர்களிடத்தில் சாதிய-மதவாத அமைப்புகள் குறித்தெல்லாம் தகவலைத் திரட்ட விரும்பாத கல்விச் செயலாளர், இடதுசாரி அமைப்புகள் குறித்து மட்டுமே கவனிப்பார் என்றால், அவரது கயமையையும் சங்கித்தனத்தையும் நாம் சகித்துக் கொண்டு செல்ல வேண்டுமா?
இடதுசாரி கட்சிகள் மிகத்தீவிரமாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தாக வேண்டும். இந்த அமைச்சரும், கல்விச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனடியாக நீக்கம் செய்யப்பட வேண்டும். அறிக்கை திரும்பப் பெறப்பட்டுவிட்டாலும், இத்தகைய மனநிலை அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது என்பது அம்பலமாகி இருக்கிறது. வெறுமனே அறிக்கையைத் திரும்பப் பெறுவது ஒரு சம்பிரதாயமான செயல்; இதனால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை.
கல்வி மற்றும் மாணவர்கள் குறித்த எவ்வித அடிப்படை அறிவும் அற்ற கும்பல் இந்தத் துறையை நடத்திக்கொண்டிருக்கிறது. இவர்கள் சமூகவிரோதிகள்; மாணவர்களின் எதிர்காலத்தை நாசம் செய்யவே பயன்படுவார்கள். சட்டமன்றத்தில் கல்வி அமைச்சரை இடதுசாரிகள் இடைமறித்திருக்க வேண்டும், ஆனால் மென்மையாக எதிர்ப்பைப் பதிவு செய்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. பிற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் இதுகுறித்து அமைதி காப்பது முறையல்ல.
மாணவர்களின் அரசியல் உரிமை குறித்து தலையிட அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எவ்வித அதிகாரமும் யோக்கியதையும் கிடையாது எனும் செய்தி உயர்மட்ட அதிகாரிகளின் காதுகளுக்கு எட்ட வேண்டும். மக்கள் விரோதிகளாக மாறி, ஊழலில் திளைக்கும் இந்த அதிகாரிகள் மீது மக்கள் விசாரணை (Public Accountability) தீவிரமடைய வேண்டும். இந்த அதிகாரிகளைக் கையாளும் திறமையோ, நேர்மையோ ஆட்சியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இல்லாத நிலையில் நம்மிடம் இருந்தே அந்த விசாரணை எழ வேண்டும்.”
ஆட்சியாளர்கள் மாறினாலும், அரசு இயந்திரத்தைச் இயக்கும் அதிகாரிகள் மத்தியில் சமூக–அரசியல் விழிப்புணர்வு கொண்ட மாணவர் இயக்கங்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்ற பழைய மனநிலையே நீடிக்கிறது என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது
அதிகாரிகள் தன்னிச்சையாகச் செய்துவிட்டார்கள்” என்று கூறி அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. அமைச்சரவைக்கும், அரசிற்கும் தெரியாமல் உயர்மட்ட அதிகாரிகளால் இவ்வளவு முக்கியமான சுற்றறிக்கையைப் பிறப்பிக்க முடிகிறது என்றால், அது நிர்வாகத்தின் பலவீனத்தையே காட்டுகிறது
ஜனநாயக நாட்டில் மாணவர்கள் சமூகப் பிரச்சனைகளுக்காகவும், கல்வி உரிமைக்காகவும் குரல் கொடுப்பது அவர்களின் அடிப்படை அரசியல் உரிமை. அதை இடதுசாரி அல்லது குறிப்பிட்ட அமைப்புகளின் முத்திரை குத்தித் தடுக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும்
எதிர்ப்புகள் வந்தவுடன் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுவது (Withdrawal) என்பது ஒரு தற்காலிகச் சமாளிப்பே தவிர, உண்மையான தீர்வாகாது. இத்தகைய நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மீது வெளிப்படையான விசாரணையும், கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டால் மட்டுமே வருங்காலத்தில் இத்தகைய ஜனநாயக விரோத உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதைத் தடுக்க முடியும்” என்று தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
.