தமிழ்நாட்டில் மின் தடை ஏன்? – பற்றாக்குறையா? நிர்வாகக் குளறுபடியா?

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடையினால் மக்களின் நிலை மோசமாகியுள்ளது. இரவு நேரங்களில் கூட வீதியில் இறங்கி மக்கள் போராடுகின்றனர். கோடை காலத்தில் கூட இல்லாத அளவுக்கு மின் தேவை உயர்ந்து விட்டதாகவும், காற்றாலை மின் உற்பத்தி குறைந்து விட்டதால் 3,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் மின்துறை அமைச்சர் CTR நிர்மல்குமார் விளக்கம் அளித்திருக்கிறார். இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்கத் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறது அரசு.

ஆனால் உண்மையில் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இருக்கிறதா? அல்லது நிர்வாகக் குளறுபடியால் இருக்கும் மின்சாரத்தைக் கூடப் பயன்படுத்தாமல், மக்கள் பணத்தை வீணடிக்கிறார்களா? என்ற கேள்வியை முன்னாள் மின்துறைப் பொறியாளர் திரு. சா. காந்தி அவர்கள் ஆதாரங்களுடன் எழுப்புகிறார்.

தமிழ்நாட்டின் சராசரி மின் தேவை 18,000 மெகாவாட் ஆகும். கோடை காலங்களில் இது உச்சபட்சமாக 21,000 மெகாவாட் வரை உயரும். இந்த மொத்த மின் தேவையும் மூன்று வழிகளில் பூர்த்தி செய்யப்படுகிறது:

1.  அரசின் சுய உற்பத்தி

2.  தனியாரிடம் இருந்து வாங்கும் நீண்ட கால ஒப்பந்தம்

3.  இடைக்கால ஒப்பந்தம்

தமிழ்நாட்டில 5780 மெகாவாட் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவை தவிர நீர் இருப்பைச் சார்ந்த புனல் மின் நிலையங்களும் உள்ளன. தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியம் நிலையான அனல் மின் உற்பத்தியையே நம்பியிருக்கிறது. தனியாருடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட மின் நிலையங்களும் பெரும்பாலும் அனல் மின் நிலையங்களே ஆகும்.

நமது மாநில சுய உற்பத்தி நிலையங்களில் கிடைக்கும் மின்சாரத்தைத் தவிர நெய்வேலி, கூடங்குளம் போன்ற மத்தியத் தொகுப்பிலிருந்தும், சூரிய ஒளி காற்றாலை போன்றவற்றிலிருந்தும் மீதமுள்ள மின்சாரம் கிடைக்கிறது. 

மாநில உற்பத்தி மையங்களில் உற்பத்தி செய்யப்படும் 5780 மெகாவாட் மின்சாரத்தில் தற்போது 3,530 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதம் 2,250 மெகாவாட் உற்பத்தி செய்யப்படவில்லை.

குறிப்பாக,

  1. ஒரு யூனிட் வெறும் 2.50 ரூபாய்க்கு கிடைக்கும் காடம்பாறை நீரேற்று மின் நிலையத்தின் 400 மெகாவாட் மின்சாரம் கடந்த 450 நாட்களாக உற்பத்தி செய்யப்படவில்லை.
  2. வடசென்னை 1&2-ல் உற்பத்தி செய்ய வேண்டிப 1830 மெகாவாட் மின்சாரத்தில் 1150 மெகாவாட் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதம் 680 மெகாவாட் உற்பத்தி நடப்பதில்லை.
  3. உடன்குடி திட்டத்தில் 660 மெகாவாட் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
  4. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சுமார் 300 மெகாவாட் உற்பத்தி இல்லை.
  5. தூத்துக்குடி அனல்மின் மொத்தமுள்ள 1050 மெகாவாட் உற்பத்தி நிலையத்தில், 210 மெகாவாட் உற்பத்தி செய்யும் ஒரு அலகு பழுதடைந்துள்ளது

இவை அனைத்தையும் முழுமையாக இயக்கினாலே பற்றாக்குறையை சமாளிக்கலாம். அதை செய்வதை விடுத்து, வெளிச்சந்தையில் ஒரு யுனிட் விலை குறைந்தபட்சம் 20 ரூபாய்க்கும், அதிகம் தேவைப்படும் உச்ச நேரத்தில் ரூ 30-40 வரையிலும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது ஏன் என்பதே சா. காந்தி அவர்களின் கேள்வியாக இருக்கிறது.

சுய உற்பத்தியில் இவ்வளவு தேக்கம் என்றால், தனியார் நிறுவனத்தில் போடப்பட்ட  நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் மின்சாரம் வாங்காமலே அதற்குரிய கட்டணம் வழங்கிக் கொண்டிருக்கிறது மின்வாரியம்.

பத்திற்கும் மேற்பட்ட தனியார் நிறுவனத்திடங்களிடமிருந்து 2013-14ம்  ஆண்டுகளில் 2,830 மெகாவாட் மின்சாரம் வாங்குவதாக ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இதில் இரண்டு வகைக் கட்டணம் உண்டு.

ஒன்று, நிலைக் கட்டணம். மின்சாரம் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய வாடகைத் தொகை இது. மற்றொன்று, மாறும் கட்டணம். நாம் மின்சாரம் எடுக்கும் போது மட்டும் செலுத்தும் எரிபொருள் விலை.

இன்றைய நிலை என்னவென்றால், ஒப்பந்தம் செய்த 2,830 மெகாவாட்டில் சுமார் 2,000 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே நாம் பெற்றுக் கொள்கிறோம். மீதமுள்ள 830 மெகாவாட் மின்சாரத்தை நாம் பெறுவதே இல்லை.

ஆனால், பெற்றுக் கொள்ளாத அந்த 830 மெகாவாட்டிற்கும் சேர்த்து ஒவ்வொரு மாதமும் நிலைக் கட்டணத்தைத் தனியார் நிறுவனங்களுக்குக் கட்டியே தீர வேண்டும். இது மின்சாரம் வாங்காமலேயே  தண்டச் செலவாக செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஒருபுறம், ஒரு யூனிட் ரூ2.50-க்குக் கிடைக்கும் நமது காடம்பாறை போன்ற சொந்த மின் நிலையங்கள் 450 நாட்களாக இயக்கப்படாமல் உள்ளன. மறுபுறம், வாங்காத மின்சாரத்திற்கு மாதம் நூற்றுக்கணக்கான கோடிகளை வாடகையாகக் கொடுக்கிறோம். இன்னொருபுறம், மின் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, தனியார் சந்தையில் ஒரு யூனிட் 20 ரூபாய் என்கிற அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குகிறோம்.

இந்த மூன்று செலவுகளும் சேர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தைக் கடன் சுமையில் தள்ளியுள்ளது.

நீண்ட கால ஒப்பந்தத்தை விட ஆபத்தானது இடைக்கால ஒப்பந்தம். ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்காகச் செய்யப்படும் ஒப்பந்தம். நமது ஒப்பந்த அளவு 2,814 மெகாவாட். ஆனால் தினமும் வாங்குவது 1,500 மெகாவாட் மட்டுமே. வாங்காமல் விடுவது சுமார் 1,314 மெகாவாட்.

இதன் விதியின்படி, 1,500 மெகாவாட் மட்டும் எடுத்துக் கொண்டு, மீதி 1,314 மெகாவாட்டை எடுக்காமல் விட்டாலும், அதற்கான முழு நிலைக் கட்டணத்தையும் நாம் செலுத்தியே ஆக வேண்டும்.

1,314 மெகாவாட் என்பது ஒரு நாளைக்கு சுமார் 3.15 கோடி யூனிட் மின்சாரம். இந்த மின்சாரத்தை நாம் எடுக்காவிட்டாலும், அதன் நிலைக் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு சுமார் 3 ரூபாய் கட்ட வேண்டும். அதன் மூலமாக ஒரு நாளைக்கு ஏற்படும் தண்டச் செலவு மட்டும் சுமார் 9 கோடி ரூபாய்.  ஒரு மாத இழப்பு 283 கோடி ரூபாய். ஒரு வருட இழப்பு 3453 கோடி ரூபாய்க்கும் மேல் வீணாக இடைக்கால ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்தப்படுகிறது.

சொந்த நிலையங்களில் யூனிட் 3 ரூபாய்க்குக் கிடைக்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல் நிறுத்தி வைத்துவிட்டு, வெளியில் ஒப்பந்தம் போட்டு வாங்காத மின்சாரத்திற்கு தினமும் 9 கோடி ரூபாயை வீணாக்குகிறது மின்சார வாரியம்.

இப்படியாக சுயஉற்பத்தி, நீண்டகால ஒப்பந்தம், இடைக்கால ஒப்பந்தம் மூலமாக கிடைக்க வேண்டிய சுமார் 4000 மெகாவாட் மின்சாரம், நிர்வாகக் குளறுபடிகளை சரி செய்யப்படாமல், வெளிச்சந்தையில் அதிக விலையை வாங்கி மக்கள் மீது மின் கட்டணச் சுமையை ஏற்றுகிறார்கள்.

ஆக, தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள மின் தடைக்குக் காரணம் மின் பற்றாக்குறை அல்ல, முழுக்க முழுக்க மின்துறையின் நிர்வாகத் தோல்வியே காரணம்.

கையில் இருக்கும் சொந்த மின் நிலையங்களை முழுமையாக இயக்கினால் 2,250 மெகாவாட், நீண்ட கால ஒப்பந்தத்தில் வாங்காமல் விட்டது 830 மெகாவாட், இடைக்கால ஒப்பந்தத்தில் வாங்காமல் விட்டது 1,314 மெகாவாட் என மொத்தம் சுமார் 4,394 மெகாவாட் மின்சாரம் நம் கண் முன்னே இருந்தும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

இதைச் சரி செய்யாமல், ஒரு யூனிட் 2.50 ரூபாய்க்குக் கிடைக்கும் காடம்பாறை மின்சாரத்தை 450 நாட்களாக முடக்கி வைத்துவிட்டு, வெளிச் சந்தையில் ஒரு யூனிட் 12 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கொடுத்து மின்சாரம் வாங்குவதும், வாங்காத மின்சாரத்திற்குத் தினமும் 7 கோடி ரூபாய் தண்டச் செலவு கட்டுவதும் எந்த விதத்திலும் நியாயமாகாது.

இந்தக் குளறுபடிகளைச் சரி செய்தாலே மின் தடையை முற்றிலுமாக நீக்கலாம். அதோடு, ஏற்கனவே 2.7 லட்சம் கோடி கடனில் இருக்கும் மின் வாரியத்தையும், அதன் சுமையைத் தாங்கும் மக்களையும் காப்பாற்ற முடியும். இவை அனைத்தையும் கண்காணிக்க உருவாக்கப்பட்ட மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எந்த கேள்வியும் கேட்பதில்லை.

மக்கள் தலையில் சுமையை ஏற்ற மின் கட்டணத்தை உயர்த்துவதை மட்டும் சரியாக செய்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 3 முறை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு யூனிட் ரூ.4.50 இருந்தது இப்போது ரூ.6.50 வரை போய்விட்டது. மின்சாரம் பயன்படுத்தா விட்டாலும், நாம் கட்ட வேண்டிய நிலைக் கட்டணம் மட்டும் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை ஆணையத்தின் அலட்சியத்தினால் இன்று மின் வாரியத்தின் கடன் இப்போது 2.7 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. இந்த கடனை அடைக்க வரும் காலங்களிலும் கட்டண உயர்வு தொடரும் என்பதே உண்மை. தமிழ்நாடு அரசு இனியாவது சந்தை கொள்முதலைக் குறைத்து, சுய உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »