செம்மணி மனிதப் புதைகுழி: நாங்கள் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றோம் – ITJP அறிக்கை

தமிழீழத்தில் 1950-களில் இருந்து திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான இனப்படுகொலையின் சாட்சியமாகியிருக்கிறது செம்மணி மனிதப் புதைகுழி. பிஞ்சுக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலான 544 தமிழர்களின் எலும்புகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. பால் குப்பிகள், புத்தகப் பைகள், விளையாட்டு பொம்மைகளுடனும் சேர்த்து புதைக்கப்பட்ட குழந்தைகளின் எலும்புகூடுகள் யாவும் சிங்கள இனவெறி ராணுவத்தின் கோரமுகத்தை அம்பலப்படுத்துகின்றன.

இலங்கை இனவெறி ராணுவத்தால் காணாமல் போன தங்களின் சொந்தங்களை 30 வருடமாக தேடிக் கொண்டிருப்பவர்கள், இப்புதைகுழியில் தங்கள் உறவுகளின் எலும்புகளும் இருக்குமோ என்னும் அச்சத்துடன் கலங்குவதைத் தொகுத்து “செம்மணி மனிதப் புதைகுழி: நாங்கள் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றோம்” என்கிற தலைப்பில் ITJP (சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு) அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிங்கள ராணுவ அதிகாரிகளால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகள், இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்த தகவல்கள், பெண்கள் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பாலியல் குற்றங்கள் போன்ற பலவற்றைக் குறித்து அறிக்கைகள் வெளியிட்ட “உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு”  ITJP. சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் யாழ்பாணம் அகப்பட்ட 1996-களில் நடந்த மனிதப் பேரவலமாக, இன்று வெளிவரும் செம்மணி மனிதப் புதைகுழி விவரங்களை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது ITJP.

1996-ம் ஆண்டு பள்ளி மாணவியான கிருசாந்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னரே இப்புதைகுழி வெளிச்சத்திற்கு வந்தது, அப்பெண்ணின் தாயார், சகோதரர், சாட்சியங்கள் இருவர் கொல்லப்பட்டு இப்புதைகுழியில் புதைக்கப்பட்டனர். அப்பெண்ணின் சகோதரி மூலமாக வழக்கு தொடரப்பட்டது. ஒன்பது ராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர். அதில் ஐந்து பேர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதியப்பட்டது. விசாரணையில் சோமரத்ன ராஜ்பக்ச என்கிற குற்றவாளி அப்புதைகுழியில் 400 க்கும் மேற்பட்ட உடல்களை புதைத்திருக்கிறோம் என்று சொன்னது இப்புதைகுழி குறித்த கவனம் வெளிச்சத்திற்கு வந்தது.

செம்மணி புதைகுழி அகழாய்வு  குறித்து மே 17 இயக்கக்குரலில் வெளிவந்த கட்டுரை :

1995-ல் விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது இலங்கை அரசு. அந்த காலகட்டத்தில் 512 வது படைப்பிரிவில் பொறுப்பேற்ற சிங்கள உயர் அதிகாரி காமினி ஜெயசுந்தரவின் தலைமையில் தமிழர்கள் மீது தன்னிச்சையானத் தாக்குதலை நடத்தியது சிங்கள ராணுவம். 1996-ம் ஆண்டு அப்பகுதியை பார்வையிட்ட ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு’ குறுகிய காலகட்டத்தில் ஏறத்தாழ 600 பேர் அங்கிருந்து காணாமல் போயிருப்பதாக பதிவாகியிருப்பதைக் குறிப்பிட்டது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்கள் சிங்கள ராணுவத்தின் சித்திரவதைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என அப்பொழுதே இந்த அமைப்பு கூறியிருப்பதை இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த முல்லை தீவு சண்டைக்குப் பிறகு, சிங்கள ராணுவம் நாவற்குழி எனும் பாலத்தின் கீழுள்ள கைத்தடிப் பிரிவில் இருந்த ஏழு கிராமங்களை சுற்றி வளைத்து, அங்குள்ள மக்களை தேவாலயங்களில் கோவில்களில் அடைத்து வைத்தது. ”தலையாட்டிகள்” எனப்படும் முகமூடி அணிந்தவர்களைக் கொண்ட அடையாளம் காணப்பட்டு, காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள் எல்லாம் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

யாழ்ப்பாணத்தின் ‘மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்’ 1997ம் ஆண்டின் நடுப்பகுதியில் அப்பகுதியில் காணாமல் போன நூற்றுக்கணக்கானவர்களைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கை பெருமளவில் மறைந்து விட்டதாக கூறியது நாவற்குழி பகுதியில் நடந்த அவலத்தை சுட்டிக் காட்டுகிறது.

கிருசாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூத்த சிப்பாய் சோமரத்ன ராஜபக்சே, ஜெயதிலகே, பயிற்சி சிப்பாய் பெரேரோ, காவலர் பிரியதர்ஷன, பயிற்சி சிப்பாய்  ஜெயசிங்க ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழு (HRC) விடம் கூறிய பல தகவல்கள், தமிழர்கள் மீது சிங்கள ராணுவத்தின் வக்கிரமான தாக்குதல்களை அறியச் செய்தன. அவர்கள் புலனாய்வு அதிகாரிகளால் கொண்டு வரப்படும் நூற்றுக்கணக்கான உடல்களை செம்மணி சோதனை சாவடிக்கு அருகே புதைத்ததாக சாட்சியமளித்தனர்.

சோமரத்ன ராஜபக்சே அளித்த வாக்குமூலத்தில், தான் புதைத்த சடலங்களின் எண்ணிக்கை சுமார் 400 இருக்கும் என்றும், ஜெயதிலகே, தன்னுடைய பதவி காலத்தில் புதைக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 300 இருக்கலாம் என்றும், பெரோரோ, 40-50 உடல்களை புதைத்ததாகவும, காவலர் பிரியதர்ஷன மற்றும் பயிற்சி சிப்பாய் ஜெயசிங்கே 50- 60 உடல்களை புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

மேலும் முகாமுக்கு பிடித்து வரும் நபர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்து கொன்றார்கள் என்பதையும் பதிவு செய்கிறார்கள். முகாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களின் கைகள் கண்களை கட்டியிருக்கிறார்கள். நிர்வாணமாக்கப்பட்டிருக்கிறார்கள். தலைகீழாக தொங்கவிடப்பட்டு, மிளகாய் பொடி பையை முகத்தில் கட்டி அடித்திருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டும், மண்வெட்டியால் வெட்டியும் கொன்றிருக்கிறார்கள். இப்படி பல வகையான கொடுமைகள் அந்த முகாமில் நிகழ்ந்ததாக பதிவு செய்தனர்.

முகாமுக்கு அழைத்து வரப்பட்டவர்களை கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொன்றவர்களில் முக்கியமானவர்களாக தளபதி காமினி ஜெயசுந்தர, லெப்டினன்ட் துடுகல, சவேந்திர விஜேசிரிவர்தன, உதயகுமாரா, கேப்டன் லலித் ஹேவா, ஜெயரத்ன, மேஜர் கருணசேகர, காவல்துறை மொழி பெயர்ப்பாளர் சமரவிக்ரம மற்றும் பல புலனாய்வு அதிகாரிகளைக் கூறினர்.

கைது செய்யப்பட்ட இந்த கீழ்மட்ட ராணுவ ஊழியர்கள் அனைவரும் கொலை குற்றங்களில் சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளை காட்டிக் கொடுத்ததால் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. சோமரத்ன ராஜபக்சே மீதும் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் வெளியே கசிந்ததால், விரைவில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கைகளும், சர்வதேச அழுத்தமும் அதிகரித்தது. 

உலக மட்டத்தில் நிகழ்ந்த பல வலியுறுத்தல்களுக்கு பின்பு, முதலாம் கட்ட செம்மணி அகழ்வாய்வு 1999 ஜுன் 16ந் தேதி நடைபெற்றது. இதில் 15 மனித உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு சிறுவன், ஒரு பெண், 13 ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 12 பேர்களின் தலை மற்றும் மார்பில் தடியால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என அவர்களின் காயங்கள் உறுதிப்படுத்தியது. பலர் கைகள் கட்டப்பட்ட நிலையில் எலும்புகளாக மீட்கப்பட்டனர்.

இந்த அகழ்வாய்வு நடந்ததை அடுத்து, 1995 அக்டோபர் 25-ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதுகாவலர் சங்கம் – MPGA” உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. அதற்குப் பதிலாக பாதுகாப்பு அமைச்சகம் 355 குடும்பங்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் கடிதங்களை அனுப்பியது. அந்தக் கடிதத்தில், இனி உங்கள் உறவினர்களை உயிருடனோ, உடலாகவோ கண்டுபிடிப்பது இயலாத காரியம் என்று அரசு அறிவித்தது.

ஆனால், அதற்கு முன்பு, ‘உங்கள் உறவினர் சிறையிலோ அல்லது புனர்வாழ்வு முகாமிலோ உயிருடன் இருக்கிறார்’ என்று கடிதம் பெற்றிருந்த குடும்பங்கள் இந்தப் புதிய கடிதத்தால் அதிர்ச்சியடைந்தன. இப்போது அவர்கள் கதி என்ன என்று அதிகாரிகளிடம் தொடர்ந்து கேள்வி கேட்டனர். அதிகாரிகளோ தட்டிக்கழிக்கும், மழுப்பலான பதில்களையே கொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளஞ்செழியன், அகழ்வில் எடுக்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணுமாறு அரசுக்கு பலமுறை உத்தரவுகள் பிறப்பித்தார். ஆனால் அரசு தரப்பினர் தொடர்ந்து காலதாமதம் செய்தனர். தமிழர்கள் கொலையில் சம்பந்தப்பட்ட 20 இராணுவ அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரப்பட்டது. ஆனால் அரசு தரப்பு 5 அதிகாரிகளை மட்டுமே முன்னிறுத்தியது. மீதமுள்ளவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவர்களில் இருவர் இறந்துவிட்டதாகவும் மழுப்பலாக பதில் சொன்னார்கள்.

இந்த வழக்கு 2000-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அடுத்த மாதமே  ஜூலையில் அந்த ஐந்து இராணுவ அதிகாரிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களும், டி.என்.ஏ-க்களும் பரிசோதனைக்காக அனுப்பப்படவில்லை. இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் காலவரையின்றி இழுத்தடிக்கப்பட்டன. இந்த நிலை 2010 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.

2002 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தினால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆதரவுடன் ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான குழு’ ஒன்று ஆதாரங்களை சேகரித்து விரிவான அறிக்கை தொடுத்தது. 1996-97 ம் ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட அவர்களின் பதிவுகள் அதில் பதியப்பட்டன.

பொதுவாக முகமூடி அணிந்திருந்தவர்களால் அடையாளம் சொல்லப்பட்டவர்கள் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் தேடுபவர் கிடைக்கவில்லை என்றால்,   கிடைப்பவர்களை பிடித்துக் கொண்டு செல்வது, கைதுக்கு சாட்சியாக இருந்தவர்களையும் கைது செய்வது, உடலில் தழும்புகள் ஏதேனும் இருந்தால் அது விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்திருக்கும் காரணத்தினால் தான் என்ற தன்னிச்சையாக முடிவு செய்து கைது செய்வது போன்றவை எல்லாம் நிகழ்ந்தேறின.

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் பலர் மன ரீதியாக பாதிக்கப்பட்டும், குடும்பத்தின் முதுகெலும்பாக இருந்தவர்களை தொலைத்து வறுமையில் வாடுபவர்களாகவும் இருந்தனர் என்பதையும் அக்குழு பதிவு செய்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் குற்றம் சாட்டப்பட்ட ராணுவ அதிகாரிகள் பலரும் இக்குழுவிடம் பல சாக்குப் போக்குகளை கூறினர்.

1996-ல் கேப்டனாக இருந்து லெப்டினன்ட் கர்னலாகப் பதவி உயர்வு பெற்ற துமிந்த-வின் பெயரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பலரும் கூறினாலும், தான் குற்றமற்றவன் என்பதற்கு பல முரண்பாடான காரணங்களை தெரிவித்தார். 1996-ல் மேலதிகாரியாக இருந்த கர்னல் பிரதீப் ஜெயசூரிய தான் காரணம் என்றார். நாவற்குழியில் நடந்த பெரிய முற்றுகையில் உளவுத்துறை அதிகாரிகளைக் கொண்டு கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர், அதற்கும் ராணுவத்திற்கு பொறுப்பில்லை என்று மழுப்பினார்.

ஜெனரல் லெக்கான் குணவர்த்தனே-வை விசாரித்த போது, தமிழ் போராளிகள் உடனான சண்டையில் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் அழிக்கப்பட்டதாக கூறினார். மற்றொரு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல்லே, கடிதம் மூலம், குற்றம் சாட்டப்பட்ட 35 ராணுவ வீரர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இவரும் போராளிகள் உடனான சண்டையில்  பதிவேடுகள் அழிக்கப்பட்டது என்றார். ஆனால் இவரே 1996-97ல் காணாமல் ஆக்கப்படுதலுக்காக குற்றம் சாட்டப்பட்ட படைப்பிரிவுகளுக்கு தலைமை தாங்கினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்து தடைகளையும் மீறி 2003 ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண பகுதியில் ஆட்கொணர்வு மனுக்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். ஆனால் எவரும் நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படவில்லை. 1996 ஆம் ஆண்டு நிகழ்ந்த காணாமல் ஆக்கப்படுவதை குறித்து விவரிக்கும் சுருக்கமான ஆவணமாக இந்த ஆட்கொணர்வு மனுக்கள் அமைந்தன.

இம்மனுக்களின் பட்டியலில் சோமரத்ன ராஜபக்சே, அவரின் மேலதிகாரியாக இருந்த கேப்டன் லலித் ஹேவா, நாவற்குழி ராணுவ முகாமிலிருந்து பலரை காணாமல் ஆக்கச் செய்த துமிந்த, 512 படைப்பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர்  விஜேரத்ன ஜெயசுந்தர, கேப்டன் திசநாயக பண்டார ஆகியோரின் பெயர்கள்  குறிப்பிடப்பட்டன. இந்த ஆட்கொணர்வு மனுக்கள் யாவும் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி மெதுவாக இடைநிறுத்தப்பட்டன.

சிப்பாய் சோமரத்ன ராசபக்சே மற்றும் கேப்டன் லலித் ஹேவாவைக் குறிப்பிடும் 8 ஆட்கொணர்வு மனுக்கள், கேப்டன் துமிந்த கெப்பெட்டிவலானவைக் குறிப்பிடும் 19 மனுக்கள், கேப்டன் பண்டாரவைக் குறிப்பிடும் 7 மனுக்கள் இருந்தன.

இம்மனுக்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தங்கள் உறவுகள் காணாமல் போன சூழலை விவரித்துள்ளனர். அவர்கள் 30 வருடங்களாக தேடி அலைந்தும் காணாமல் போனவர்கள் கிடைக்கவில்லை.

2006 க்கு பின்பான காலகட்டங்களில் இருந்து தமிழினப்படுகொலை போர் நடந்த 2009 க்கு முன்பு வரை காணாமல் ஆக்கப்படுதல் தொடர்ந்தன. அவர்களின் உறவுகள் ஆவணத்தில் கூறியதெல்லாம் “நாங்கள் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்பதாகத் தான் இருக்கிறது.

2016-ல் காணாமல் போனவர்கள் வழக்கை விசாரிக்க இலங்கை அரசு ஒரு அலுவலகத்தை (OMP) அமைத்தது. இதன் கவனம் நிதி விநியோகிப்பதில் தான் இருந்தது. நெறிமுறைகளும் தெளிவில்லை.

இரண்டரை லட்சம் உதவி பெற “காணாமல் போனதற்கான  சான்றிதழ்” கேட்டனர். நிதியை வாங்கினால் வழக்கு மூடப்பட்டு, உண்மை தெரியும் வாய்ப்பும் போய்விடும் என குடும்பங்கள் பயந்தனர். எனவே இந்த அலுவலகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என ‘சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணையம் (ICJ)’ அறிக்கை கூறியிருந்தது.

பொறுப்புக் கூறலின் அடிப்படையில் 2025-ம் ஆண்டு நடந்த விசாரணையிலும், 1996-ல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பதிவு செய்தனர். அதில் ஒரு வார இடைவெளியில் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 25 வயதான கடை உதவியாளர் ஒருவர், 24 வயது தையல்காரர், இளம் காசாளர் ஒருவர், ஒரு தொழிலாளர், பள்ளி மாணவன், ஆசிரியர் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சூழலைக் குறித்து அவர்களின் குடும்பத்தினர் விரிவாக பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அளித்த வாக்குமூலங்கள், நீதித்துறையில் குற்றவாளிகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்கள், இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிகளிலிருந்து கிடைத்த தடயவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அரசு அதிகாரிகளின் நடத்தை ஆகியவை மூலமாக இலங்கை பாதுகாப்பு படை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கடுமையாக மீறி உள்ளதை விளக்குகிறது இவ்வறிக்கை. 

பின்னர், 2026-ல் செம்மணியில் இன்று வரை அகழ்ந்தெடுக்கப்பட்ட 600 க்கும் மேலாள மனித எலும்புக் கூடுகள் குறித்த விவரங்களை விரிவாக அலசுகிறது. இவ்வறிக்கையின் பின் இணைப்பாக, 1996 இல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகள் 7 பேர் பின்னாளில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு படிப்படியாக காலவாரியாக பதவி உயர்வு பெற்ற பட்டியலும் விரிவாக தொகுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசு கிட்டத்தட்ட மூன்று சகாப்தங்களாக தனது சர்வதேச கடமைகளில் நிறைவேற்ற தவறியுள்ளது. அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் பொதுமக்களிடம் தவறான தகவல்களை அளித்தல், பாதிக்கப்பட்டவர்களையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் அவமதித்தல், சர்வதேச ஆய்வினை எதிர்த்தல் ஆகியவற்றின் மூலம் செம்மணியுடன் தொடர்புடைய குற்றங்களை மறைத்தல் அல்லது குறைத்து மதிப்பிடுதல் போன்ற திட்டமிட்ட தொடர்ச்சி மறுப்பின் காரணமாக காணாமல் போனவர்களுக்கான நீதியின் தோல்விக்கு காரணமாக அமைகிறது. அரசின் தோல்வியானது பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காணும் உரிமைகளை நேரடியாக பாதித்துள்ளது என இந்த அறிக்கை இலங்கை அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளது

செம்மணி என்பது கடந்த கால அட்டூழியர்களின் தளம் மட்டும் அல்ல அது சர்வதேச சட்டப்படி ஒரு தொடர்ச்சியான குற்றக்களமாக இருப்பதாக இலங்கையைக் குற்றம் சாட்டுவதுடன், இலங்கை செய்ய வேண்டிய சட்டக் கடமைகளை ITJP பட்டியலிடுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐ.நா மூலம் தடை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்திற்கு கோரிக்கைகளையும் வைத்து இந்த அறிக்கை நிறைவடைகிறது.

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 500க்கும் மேலான மனித எலும்புக்கூடுகளில் தங்கள் உறவுகளுடையதும் இருக்குமோ என்கிற பதைபதைப்புடன் “இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம்” என்று உறவுகள் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

ITJP-ன்” செம்மணி மனித புதைகுழி: நாங்கள் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றோம்” அறிக்கையின் இணைப்பு :

https://itjpsl.com/reports/chemmani-mass-grave-we-are-still-searching-july-2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »