பட்டியலின மக்களுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை தவெக அரசு ஏற்க வேண்டும் – திருமுருகன் காந்தி

எஸ்சி/எஸ்டி மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி; அம்மக்களுக்காக செலவிடப்படாமல் பொது திட்டத்திற்கு செலவிடுவதை தடுக்கவும், அரசு ஒதுக்கின்ற நிதி முழுமையாக இம்மக்களுக்கு செலவிடக் கோரியும், பஞ்சமி நிலம் மீட்பு தொடர்பாகவும், புரட்சி பாரதம் கட்சி கட்சியினுடைய தலைவர் தோழர் ஜெகன் மூர்த்தியார் அவர்கள் ஆகத்து 20, 2026 அன்று ஒருங்கிணைத்த அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துக்கொண்டு உரை ஆற்றிய தொகுப்பு:  

பட்டியலின பழங்குடி மக்களுக்கான சிறப்பு உட்கூறு பிரிவினை நீண்ட காலமாக நடைமுறைப் படுத்தாத காரணத்தினால், அதற்கென்று ஒரு நிழல் நிதிநிலை அறிக்கையை மரியாதைக்குரிய தோழர் புரட்சி பாரதம் கட்சியினுடைய தலைவர் தோழர் ஜெகன் மூர்த்தியார் அவர்கள், இங்கே நம்மிடத்தில் வழங்கி இருக்கிறார்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த கலந்தாய்விலே பங்கெடுத்திருக்கக்கூடிய மேனாள் ஒன்றிய அமைச்சர் மரியாதைக்குரிய தோழர் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சியினுடைய தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய தோழர் வேல்முருகன் அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினுடைய மரியாதைக்குரிய தோழர் கரிகாளன் ஐயா அவர்களுக்கும், விடுதலை தமிழ் புலியின் கட்சியினுடைய தலைவர் தோழர் குழந்தை அரசன் அவர்களுக்கும், தோழர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கும், இங்கே பங்கெடுத்திருக்கக்கூடிய அனைத்து ஆளுமைகளுக்கும் நான் சார்ந்திருக்கக்கூடிய மேப்பதினேழு இயக்கத்தின் சார்பாக வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த சிறப்பு உட்கூறு திட்டத்தைப் பற்றி தோழர் ஜெகன் மூர்த்தியார் தொடர்ச்சியாக சட்டமன்றத்தில் பேசி வந்திருக்கிறார். அவரது ஒவ்வொரு உரையையும் நான் கேட்டிருக்கின்றேன். அது அறிக்கையாகவும் எங்கள் தோழர்களிடத்தில் வெளியிட்டுருக்கின்றோம். எங்களது இயக்கத்தின் சார்பாகவே அதை ஆதரித்து வெளியிட்டுருக்கிறோம். மிக முக்கியமான ஒரு கவனத்திற்குரிய ஒரு பகுதியினை தமிழ்நாடு சட்டசபையிலே தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கக்கூடிய தோழர் ஜெகன்மூர்த்தியார் அவர்கள். ஏனெனில் இது பட்டியலின மக்களுக்கு உரிய ஒரு பொருளாதார சமூக வளர்ச்சிக்கு ஒரு அரசு உரிய கவனத்தை கொடுக்கவில்லை என்றால், தமிழ்நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி என்பதே தடைபட்டு போகும். இன்றைக்கு நிதிநிலை அறிக்கையில் இந்த நிழல் நிதிநிலை அறிக்கை பல்வேறு அம்சங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு சமர்ப்பித்திருக்கிறார்கள். மிக முக்கியமாக கவனப்படுத்த வேண்டிய பல்வேறு பகுதிகள் இதில் இருக்கிறது.

நான் ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகின்றேன். என்னவெனில் 13 வது பக்கத்திலே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்திற்கு 170 கோடி கடந்த காலத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அந்த 170 கோடி ரூபாயை வைத்துக்கொண்டு ஒரு தொழில் முனைவோரை நாம் வளர்த்து எடுப்பது என்பது சாத்தியமில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். இது மிக முக்கியமான கருத்து. ஏனென்றால் ஒரு பொருளாதார வளர்ச்சி இருந்தால் மட்டும்தான், அவர்கள் சுயமரியாதையோடு இந்த சமூகத்தில் வாழ்வதற்கான சாத்தியப்பாடு இருக்கும். அந்த 170 கோடி ரூபாயை 1000 கோடி ரூபாயாக உயர்த்தி அதற்கான ஒரு மதிப்பீட்டு தொகையை தோழர்ஜெகன்மூர்த்தியார் அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள். இது மிக முக்கியமாக கவனத்தில் எடுக்கக்கூடிய ஒன்றாக நான் பார்க்கின்றேன்.

அதேபோல கல்விக்கு உயர்கல்வி குறித்து பல்வேறு கவனத்தில் கொண்டு வர வேண்டும். உதாரணமாக முதல் தலைமுறை பட்டதாரிகள் பட்டியலினத்தில் இருக்கக்கூடிய கல்வி கட்டணத்தை திருப்பிக் கொடுத்தல் என்பதற்கே ஆறரைக் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள். இந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுடைய கல்வி கடன் சுமை என்பது, அவர்கள் மீண்டெழுவதற்கு சாத்தியமில்லாத நிலையில் இருக்கிறது. அதனால்தான் அவர்கள் அன்றாட கூலிகளை சார்ந்த வேலைகளுக்கு செல்வதும், பல்வேறு இடத்துக்கு போகிறார்கள். இதையெல்லாம் கவனத்தில் எடுத்து இந்த நிழல் நிதி அறிக்கை முன்வைக்கப்பட்டிருப்பது என்பது கவனத்திற்குரியது வரவேற்புக்குரியது.

இதேபோல பல்வேறு அம்சங்களை குறித்தான ஆய்வுகளை கொடுப்பதற்கான முழு தகுதியும் தோழர்களுக்கு இருக்கிறது என்பதை நான் சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இது குறித்து நீண்ட காலமாக போராட்ட காலத்தில் இருக்கக்கூடியவர்கள். சமூக வாழ்வியல், பொருளியல் வாழ்வியல், கல்வி வளர்ச்சி அவை அனைத்தையுமே கவனத்தில் எடுத்துக்கொண்ட ஒரு அறிக்கையாக வந்திருக்கிறது.

கடந்த காலத்தில் திமுக அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த சமயத்திலும் இதற்கான ஊடக சந்திப்புகள் வைத்து சொல்லப்பட்ட பொழுதும், சட்டமன்றத்திலே தோழர் எழுப்பிய பொழுதும் அதற்கான விடை எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு முன்பும் இதே நிலைதான் இருந்தது. இப்பொழுது ஒரு நிதி நிழல் அறிக்கையாக இது வெளியில் வைக்கப்பட்ட என்பது வந்து அனைத்து கட்சிகளுக்கும் இது குறித்தான ஒரு பார்வையை கொடுக்கிறது. அந்த வகையில இந்த அறிக்கையை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம், ஆதரிக்கின்றோம்.

உடனடியாக ஆட்சியில் இருக்கக்கூடிய தவெக அரசு, இந்த நிழல் நிதிநிலை அறிக்கையை கவனத்தில் எடுத்துக்கொண்டு, இந்த நடந்து கொண்டிருக்கக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரிலே அதற்குரிய திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால் திருத்தம் என்று சொல்கிறோம் எனில், ஏற்கனவே அங்கே ஒரு நிதிநிலை அறிக்கையை முன் வைக்கிறார்கள். அதில் இதெல்லாம் கவனம் எடுக்கப்படுவதில்லை. அரசு உயர் அதிகாரிகளும் இதே போன்ற ஒரு  பொறுப்பட்ட நிலையிலே பட்டியல் சமூக மக்களுக்கான எதிரான நிலையில் இருப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். ஆகவே அவற்றை எல்லாம் போக்குகின்ற வகையிலே இந்த திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதரவு அளித்திருக்கக்கூடிய அனைத்து ஆளுமைகளுக்கும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நன்றிகளை இச்சமயத்தில் தெரிவித்து நிறைவு செய்கிறேன். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »