தோன்றின் புகழொடு தோன்றச் செய்த தந்தை பெரியார்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 

தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் 236)

இத்திருக்குறளுக்கு  நேரடி பொருள் கூறினால் திருக்குறளின் அடிப்படைக்கே முரணாகத் தோன்றும். ‘உலகத்தார் முன்பாக ஒருவன் தோன்றினால் புகழோடுதான் தோன்ற வேண்டும்; புகழ் இல்லாதவர் தோன்றுவதை விடத் தோன்றாமற் போவதே நல்லது’ என்று நேரடிப் பொருள் கூறப்படுகிறது.  ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்லும் திருக்குறள் பிறந்தால் புகழோடு மட்டுமே பிறக்க வேண்டும் என்று சொல்ல விழையுமா?  பிறந்து விட்ட ஒருவரை கண்டு ‘நீ புகழோடு மட்டுமே பிறக்க வேண்டும்’ என்று கூறுவது தர்க்கமா?

இல்லை.  இந்த குறள் பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு இல்லை.  “இனி தன் குடும்பத்தில் பிறக்கப் போகும் ஒரு குழந்தை புகழோடு பிறக்கும் நிலையை தற்போது வாழும் அனைவரும் உருவாக்க வேண்டும்” என்பதே இதன் பொருளாக இருக்க முடியும் அல்லவா! அதற்கேற்றார்போல் அறமோடு வாழ் என்பதுதானே நோக்கமாக இருக்க முடியும். 

இதுகுடும்பங்களுக்கு மட்டுமா அல்லாமல் இனத்திற்கும், சமூகத்திற்கும் பொருந்தும்.  ஒவ்வொரு இனமும் அந்த சமூகத்தில் பிறந்த ஒருவன் “இந்த இனத்தில் பிறந்தவர் அறம் வாய்ந்தவராகத் தான் இருப்பார்” என்று உலகோர் புகழும் தன்மையில்தான் சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும்.  அப்படியோர் பெயரை  தமிழினத்தில், திராவிட சமூகத்தில் பிறந்தவர்களுக்கு உருவாக்கியவர் தந்தை பெரியார். 

தமிழ்நாட்டில் பெரியார் செய்த செயல்கள் அளப்பரியது.  ஆரிய இந்தியாவில் இன்றும் திராவிட அரசியல் அடையாளம் எஞ்சி இருப்பது தமிழ்நாட்டில் மட்டுமே.  அதுவும் ஏறத்தாழ பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட போதிலும் ஆரிய பார்ப்பன அதிகார வர்க்கத்தால் பெரியார் இட்ட அடித்தளத்தை அசைத்துப் பார்க்க முடியவில்லை. 

பெரியாரிய கொள்கைகளின் அடித்தளம் இரண்டு. ஒன்று சுயமரியாதை மற்றொன்று ஆதிக்கத்தை உடைப்பது.  இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்று இல்லாமல் மற்றொன்று கிடைக்காது, கிடைத்தாலும் நிலைக்காது.  எனவேதான் இந்தியாவில் திலகர் “சுயராஜியம் எங்கள் பிறப்புரிமை” என்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக முழக்கத்தை முன்வைத்தபோது, பெரியார் “சுயமரியாதை எங்கள் பிறப்புரிமை” என்று பார்ப்பனர்களுக்கு எதிராக முழங்கினார்.  மேலும் “சுயமரியாதை கண்டவிடம்தான் சுயராஜ்யமே தவிர, சுயராஜ்யம் என்பது ஒரு தனி வஸ்து இல்லை என்பதை உணர வேண்டும்.” என்று 1927ம் ஆண்டு குடிஅரசிலேயே எழுதினார். 

இந்த இரு தூண்களின் மேல் கட்டப்பட்டதே திராவிட அரசியல் கோட்டை. யார் மீது யார் அதிகாரம் செலுத்தினாலும் அதை எதிர்ப்பதே திராவிடம்.  எந்தச் சூழலிலும் சுயமரியாதை இழுக்கை ஏற்க மறுப்பதே பெரியாரியம். இவை இரண்டும் அரசியலாய், சமூகமாய், தேசமாய் இணையும் புள்ளியே தமிழ்த்தேசியம்.  அதனால்தான் பெரியாரை தமிழ்த்தேசியத்தின் தொடக்கம் என்று முன்நிறுத்துகிறோம்.

இன்றளவும் இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாடு என்றால் ‘சமூகநீதி மண்’ என்றும் ‘போராட்ட குணமுடைய மண்’ என்றும் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது.  இது பெரியாரால் கிடைத்தப் புகழ்.  இந்தியாவில் முதல் சட்டத்திருத்தம் பெரியாரால் நடந்தது.  தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர்கள் ஒட்டாமல் இருப்பது பெரியாரால் நடந்தது.  தமிழ்நாட்டில் பார்ப்பன சடங்குகள் இல்லாமல் ‘சுயமரியாதை திருமணம்’ என்ற வழிவகை உருவாகியது பெரியாரால் நடந்தது.  தமிழ்மொழியின்பால் இலக்கிய பட்டு மட்டுமே கொண்டிருந்த தமிழர்களை மொழி அரசியல் பற்று கொள்ளச் செய்தது பெரியாரால் நடந்தது. இந்திய ஒன்றியம் முழுவதும் பார்ப்பன அதிகார மையங்கள் அரசியலை தீர்மானிக்கும் தருணத்தில் தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாத மக்கள் தீர்மானிக்கும் நிலை பெரியாரால் நடந்தது.

மொத்ததில் தமிழர் தலை நிமிர்ந்து நடக்க, சுயமரியாதை மிக்க மனிதராய் வாழ்ந்திட ‘பெரியார் மண்ணில் பிறந்தேன்’ என்று புகழுரை பேசிட வழி செய்தவர் தந்தை பெரியார். 

தந்தை பெரியார் ஓர் வியப்புக்குறிய மனிதர். பெரும் பணக்காரராய் பிறந்தார், ஆனால் ஏழையின் சிரமத்தை உணர்ந்து போராடினார்.  அதீத பக்தி கொண்ட குடும்பத்தில் பிறந்தார், ஆனால் பகுத்தறிவுவாதியாய், நாத்திகராய், இறை மறுப்பாளராய் வாழ்ந்தார்.  பெரிதாய் கல்வி பெறவில்லை, ஆயினும் திராவிடத் தத்துவப் பேராசிரியராய் வரலாற்றில் இடம் பெற்றார்.

பெரியார் ஏற்காத பொறுப்புகள் ஏதேனும் உண்டா? பெரியார் கோயில்களில் தர்மகர்த்தவாக இருந்திருக்கிறார். ஆனால் கோயில் சொத்தை கொள்ளையடித்ததில்லை. வியாபரியாக வாழ்ந்திருக்கிறார். ஆனால் செல்வத்தைத் தேடி ஓடியதில்லை.  ஈரோடு நகரசபையின் தலைவராக இருந்திருக்கிறார்.  ஆனால் எந்த இடத்திலும் அதிகார மீறளில் ஈடுபட்டதில்லை.  காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பு வகித்திருக்கிறார்.  ஆனால் சநாதனத்தை ஏற்றுக் கொண்டதில்லை. ஆம், பெரியார் எங்கிருந்தாலும் பெரியாராகவே இருந்திருக்கிறார். 

 பெரியாரின் வாழ்வில் எந்த ஒரு செயலிலும் தோல்வி கண்டவர் இல்லை. சட்ட எரிப்புக் போராட்டம் வெற்றி. கள்ளுக்கடை மறியல் போராட்டம் வெற்றி. இட ஒதுக்கீடு போராட்டம் வெற்றி. திராவிட விவசாய தொழிலாளர் சங்கப் போராட்டம் வெற்றி. வைக்கம் போராட்டம் வெற்றி. ‘பிராமனாள் கபே’ பெயர் எதிர்ப்புப் போராட்டம் வெற்றி. இப்படி எடுத்த கொள்கைகள் அனைத்திலும், தொடுத்தப் போராட்டங்கள் அனைத்திலும் வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

இத்தகைய வரலாறு காணாத வெற்றிச் சரித்திரமே தமிழர்களை இன்றும் ஆதிக்கத்திற்கு எதிராக, அடக்குமுறைகளுக்கு எதிராக வீறு கொண்டு எழச்செய்கிறது.  ஒரு நூற்றாண்டு கடந்தும், பெரியாரை பார்த்திராத தலைமுறையை பெரியாரின் பெயர் தலை நிமிரச் செய்கிறது என்றால் அது அவரது சோர்வடையாத விடா முயற்சிகளுக்கும், தமிழ்ச் சமூகத்தின் மேல் கொண்டிருந்த அன்புக்கும்  கிடைக்கும் விருது என்றே கூறலாம்.

சாதி ஒழிப்பாகட்டும், சமூக நீதியாகட்டும், பெண் உரிமையாகட்டும், இன ஒற்றுமையாகட்டும் – இவற்றிற்கு பெரியாரை தாண்டி உழைத்தவர்கள் எவரும் இலர்.  அதனால்தான் ஆரிய சனாதன அடிமைகளுக்கு பெரியார் முதல் எதிரியாகத் திகழ்கிறார்.

திக்கெட்டும் ஒலிக்கும் பெரியார் புகழ், அவர்தம் தனிமனிதத் துதி அல்ல.  இது தமிழ்ச் சமூகத்தின் பெருமிதக் குரல்.  அதிகாரத்தை,  ஆதிக்கத்தை முறிக்கும் ஒலி. “என்னுடைய உரிமையைக் கொடுக்கின்றாயா, அதற்காக உயிர் விடட்டுமா? என்கின்ற கொள்கையுடைய மக்கள்தான் எங்கும் வெற்றிபெற்றிருக்கின்றார்கள்” என்றார் பெரியார். அதன்படியே எவர்க்கும் அஞ்சாமல் வாழ்ந்தும் காட்டினார்.

பெருமை கொள்வோம் தமிழர்களே, பெரியார் மண்ணில் பிறந்ததற்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »