தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்குதல் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது, ஆயினும் நாளொன்றுக்கு சுமார் (அக்டோபர் 1 நிலவரப்படி) 1,597 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்படுகிறது. அதோடு தமிழ்நாடு இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. நிலைமை இப்படி இருக்க, வாரத்தின் அனைத்து நாட்களிலும் அனைவரையும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டுமென, வரும் அக்டோபர் 7ம் தேதி காலை முக்கிய கோவில்களுக்கு முன்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மேலும், இந்த ஆர்ப்பாட்டங்களை எச்.ராஜா ஒருங்கிணைப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சினைகள் எதற்காவது இந்த எச்.ராஜாவின் பார்ப்பனிய கும்பல் போராட்டம் நடத்தியது உண்டா? ஆண்டாள் பிரச்சினை, வேல் யாத்திரை, பிள்ளையார் சதுர்த்தி, தற்போது கோவில் திறப்பு இதுதான் இவர்களுக்கு தீர்க்கப்பட வேண்டிய தலையாய பிரச்சினைகளா? இதற்கு மட்டும் தான் போராடுவார்கள் என்றால் இவர்களின் நோக்கம் தான் என்ன?
தினமும் போராட நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. இந்தியா விற்பனைக்கு என்று எழுதாத குறையாக நாட்டின் பொது சொத்துகள் அனைத்தையும் தனியாரிடம் விற்கும் அவலம் தொடர்கிறது. தமிழகத்திற்கு தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கித் தொகை தராமல் இழுத்தடிக்கப் படுகிறது. பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
விலைவாசி ஏற்றம் ஒருபுறம், மறுபுறம் மோடியின் நல்லாட்சி பொருளாதாரத்தை அதள பாதாளத்திற்கு தள்ளி உள்ளது. நீட் தேர்வில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளது. அதோடு கொரோனா காலத்தில் மூடப்பட்ட பல்வேறு தொழிற்கூடங்கள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. மேலும் கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பு, வறுமை மக்களை வாட்டி வதைக்கிறது. மேகதாது அணை, கூடங்குளம் அணுக் கழிவு ஆலை போன்ற மோடி அரசின் தமிழின வெறுப்பால் என்னற்ற பிரச்சினைகளை தினந்தினம் சந்தித்து வருகிறோம். ஆனால் அதையெல்லாம் ஒன்றிய பாஜக அரசிடம் கேட்க துப்பில்லாத இந்த தமிழ்நாடு பாஜக கலவர கும்பல் கோவிலை திறக்க போராட்டம் நடத்தப் போகிறார்களாம்.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதே தவிர முற்றிலும் நின்றபாடில்லை. எனவே தான் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் தமிழக அரசால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று வார இறுதி நாளான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோயில்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப் படுவதில்லை. அதோடு நகரங்களிலுள்ள முக்கிய பெரிய கோயில்களில் தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. மற்ற சிறிய கோயில்களுக்கு மக்கள் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் இது புரட்டாசி மாதம் என்பதால் சனிக்கிழமை தோறும் அனைத்து ஊர்களிலும் உள்ள அனைத்து கோவில்களிலும் பூசைகள் நடக்கத்தானே செய்கிறது.
இப்படி தான் கும்பமேளா நிகழ்வை நடத்தியே தீர வேண்டும் பல அரசியல் சித்து விளையாட்டு நடத்தி, கடும் எதிர்ப்பையும் மீறி அதை இந்துத்துவ கும்பல் நடத்தியது. இதனால் கொரோனா 2-ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வட மாநிலங்கள் எங்கும் பிணக்குவியலாக காட்சியளித்தது. இவர்களின் மதவெறிக்கு அப்பாவி மக்கள் லட்சக்கணக்கில் பலியானது தான் மிச்சம் .
இங்கு வழிபாடு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாக இருக்கும் வரை யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை அரசியலாக்கி அதில் குளிர் காயும் நோக்கோடு இந்துத்துவ RSS-BJP கலவரக் கும்பல் உள்ளே நுழையும் பொழுது தான் பிரச்சனைகள் எழுகின்றன.
இதேபோன்றே மகாராஷ்டிராவில் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதிக்காகதைக் கண்டித்து அம்மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே “கோயில்களைத் திறக்கச் சொல்லி போராடுவதற்கு பதிலாக கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள்” என்று சாடியது குறிப்பிடத்தக்கது.
மக்கள் இவர்களை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்தது மக்களின் வாழ்வாதாரங்களை காக்க வேண்டும் என்பதற்காகத் தான் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், இது போன்ற மதக் கலவரங்களை தூண்டும் விதமான வேலைகளில்தான் அதிக கவனம் செலுத்துகின்றனர். அதற்கு உதாரணம் தான் இங்கு தடையை மீறி நடந்த வேல் யாத்திரை, விநாயகர் சதுர்த்தி அலப்பறைகள், தற்போது கோவில் திறப்பு எனும் நாடகம்.
இந்துத்துவ-பாஜகவின் நோக்கம்
பாஜகவின் செயல்திட்டங்களை தீர்மானிப்பது ஆர்எஸ்எஸ் தான். எல்லா மாநிலங்களிலும் பாஜக தான் ஆள வேண்டும் என்பது அவர்களது பெரும் கனவு. ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்பதும், மாநில கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதும் தான் பாஜகவின் நோக்கம். அதற்காக குறுக்கு வழியில் எத்தகைய முறைகேடுகள் செய்தேனும் ஆட்சியைக் கைப்பற்றுவது என காய் நகர்த்தி வருகின்றனர். இதற்காக தேர்தலுக்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு விதத்தில் செயல்பட பாஜகவினர் பயிற்றுவிக்க பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப் பட்ட பாஜக அவர் மறைவுக்குப் பிறகு அவரின் அதிமுக மீதேறி தன்னை வளர்த்து வருகிறது. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் கட்சிகளை பிரிப்பது, எம்.எல்.ஏக்களை விலைக்குவாங்கி ஆட்சியமைப்பது போன்ற கேவலமான செயல்கள் மூலம் பாஜக அரசியல் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் விரட்டியடிக்க பட்ட இந்துத்துவ கும்பல், அதிமுக தயவில் 4 இடங்களை வென்றது. இதனால் இக்கும்பல் தமிழ்நாட்டினை முழுவதுமாக ஆக்ரமிக்கும் முனைப்போடு பல்வேறு சாதி சங்கங்கள், மற்றும் மதவெறி அமைப்புகளை வளர்த்து வருகிறது. இந்த சூழ்ச்சி புரியாமல் இங்கு சிலர் அவர்களுக்கு உதவி வருகின்றனர்.
மோடி தமிழ்நாட்டில் மேடை தோறும் வள்ளுவரையும், ஔவையாரையும் பற்றிப் பேசுவது தமிழ் இனத்தை நம்பவைத்து ஏமாற்றும் மோசடிகளில் ஒன்று. இல்லையேல் தமிழ் மொழியை அழிக்க இந்தி புகுத்தப்படுமா? யாருமே பேசாத சமஸ்கிருதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதேனும் தமிழுக்கு கொடுப்பார்கள் தானே?
தமிழ்நாட்டில் உள்ள சமூக நீதியை அழித்தொழித்து இந்து ராஜ்யத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ள பாஜகவினர், அதன் ஒரு பகுதியாக பெரியார் சிலையை அவமதிப்பது, உடைப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்கின்றனர். திமுக, அதிமுக இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற பாஜகவோடுதான் அதிமுக தற்போது கைகோர்த்து உள்ளது. கடைசியில் அதிமுக என்ற கட்சி மறைந்து அது பாஜக-வாக உருவெடுக்கும் போதுதான் அதனை அனுமதித்தது எவ்வளவு பெரிய தவறு என்று அதிமுகவினர் உணருவார்கள்.
சமீபத்தில் அமெரிக்க நாளிதழ், இந்தியாவில் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது. அதை சுட்டிக் காட்டி பேசிய உபி பாஜக கூட்டணி கட்சி SBSP (Suheldev Bharatiya Samaj Party) தலைவரும், மாநில அமைச்சருமான ராஜ்பர், பாஜக கட்சிதான் இத்தகைய கலவரத்தை தூண்டி விட வாய்ப்புள்ளது என்று கூறியிருப்பது பாஜகவினர் பற்றிய அனைவரின் அபிப்பிராயமும் ஒன்றுதான் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஏனெனில் இதுவரை இந்தியாவில் பாஜகவினரை தவிர வேறு யாரும் மதக் கலவரத்தை ஏற்படுத்தியது இல்லை.
இந்துத்துவவாதிகளின் கருத்துகள்
தங்கள் கருத்துக்கு மாற்று கருத்தே இருக்ககூடாது என்பது தான் பாசிச பாஜகவின் சிந்தனை. மதவாத பேச்சும், அடிப்படைவாதமும் தான் பாஜகவினர் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான குணம். எச்.ராஜா போன்று பாஜகவின் மதச் சார்பு பீரங்கிகளாக ஒவ்வொரு மாநிலத்திலும் நிறைய பேர்கள் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போது பாஜகவின் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசியபோது, செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்து இல்லாவிட்டால் தமிழ் எங்கிருந்து வந்தது? என்ன பேசுறீங்க எல்லாரும், இதுக்குதான் சொல்றேன், you all media people Presstitutes (பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் ஒருபக்க சார்பு உடையவர்கள்). தமிழ் வேற இந்து வேறன்னு பேசக்கூடிய அளவுக்கு நீங்க வேணும்னே மத மாற்றத்திற்கு துணை போக வேண்டாம்னு நான் உங்களைக் கேட்டுக்கிறேன் (Don’t become addict to conversion)” என்று ஆவேசமாக கூறியது குறிப்பிடத்தக்கது. இந்துத்துவ அமைப்பின் கட்டளைகளை நிறைவேற்ற தான் எச்.ராஜா போன்ற பாஜகவினர் நாடு முழுவதும் பல இடங்களில் வெளிப்படையாக இந்துமதம் சார்ந்து பேசி வருகின்றனர். அதற்கு சில உதாரணங்களை பார்ப்போம்.
1.சாத்வி நிரஞ்சன் ஜோதி என்பவர் தேர்தலின் போது வாக்காளர்களை பார்த்து “எங்களுக்கு (பாஜக) ஓட்டு போடுபவர்கள் ராமரின் குழந்தைகள் மற்றவர்கள் தவறாகப் பிறந்த குழந்தை” என்று வெளிப்படையாக வாக்கு சேகரித்தார் என்றால் பார்த்து கொள்ளுங்கள் அவருக்கு எந்த மாதிரியான கருத்துக்கள் போதிக்கப் பட்டுள்ளது என்று.
2. உபி முதல்வர் யோகி, ‘இந்து ஆண்கள் 100 இசுலாமிய பெண்களை திருமணம் செய்ய வேண்டும்’ என்று லவ்ஜிகாத்துக்கு எதிராகப் பேசும்போது கூறினார். ‘லவ்ஜிகாத்’ என்பது இசுலாமிய ஆண்கள் இந்து பெண்களை காதலித்து மதம் மாற வைப்பது என்று பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல் விளக்கம் கொடுக்கின்றன. இவர் தான் நடிகர் ஷாருக்கானை பாகிஸ்தானுக்கு போ என்றவர். இவர்களின் தர்மப்படி முஸ்லிம்கள் என்றால் பாகிஸ்தான் போக வேண்டும்.
3. உபி அமைச்சர் சாக்ஷி மஹராஜ், ‘இந்தியாவில் இந்து மதம் வளர வேண்டும் என்றால், இந்து பெண்கள் ஒவ்வொருவரும் 4 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்’ ஏனெனில் ‘இந்தியாவின் அதிகப்படியான மக்கள் தொகைக்கு முஸ்லிம்களே காரணம், அவர்கள்தான் 4 மனைவி 40 குழந்தைகள் என இந்தியாவின் மக்கள் தொகையை வளர்த்து விட்டனர்’ என்று பேசியுள்ளார்.
4. உபி பாஜகவின் மகளிர் பிரிவு தலைவர் ஸ்வதந்திரா தேவ் சிங், ‘கோயில்களுக்கு செல்லாத சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, மற்றும் காங்கிரசு கட்சிக்கு வாக்களிப்பது பாவம்’ என்று பேசியுள்ளார். இதை பார்க்கும் போது கோவிலுக்கு இந்துத்துவ பாஜக கும்பல் மட்டுமே போவது போன்ற கட்டமைப்பை உருவாக்க முயல்வது புரியும்.
பொதுவாக தேர்தல் பிரச்சாரங்களில் மத ரீதியான பேச்சுக்கள் இடம்பெறுவது அதன் விதிமுறைகளை மீறுவதாக கருதப்படும். ஆனாலும் பாஜக தலைவர்கள் பலரும் தேர்தல் பிரசாரத்தின் போதும் கூட தைரியமாக இத்தகைய மத ரீதியான கருத்துக்களை பேசுவது வாடிக்கையாகி விட்டது. ஏனெனில் சட்டம் அவர்களது சட்டைப்பைக்குள் வந்து விட்டது.
கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் இருந்தாலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சிறிது அதிகரித்து உள்ளது. நாம் கூட்டத்தை தவிர்க்க வேண்டும். இது பொறுமையாக இருக்க வேண்டிய காலகட்டம். இப்போது திறக்கப்பட்டுள்ள இடங்களை மீண்டும் மூட வேண்டிய அவசியம் ஏற்படாத வரை நமக்கு நன்மை. ஏனெனில் கொரோனா எனும் எதிரியை நாம் முற்றிலுமாக ஒழிக்கவில்லை. எனவே மக்கள் அனைவரும் இந்நிலையை உணர்ந்து இந்துத்துவ பார்ப்பனிய பாஜக கும்பலின் சதியை புரிந்து கொண்டு, ஒருபோதும் அவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.
இந்துத்துவா நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு!
இதற்கெல்லாம் தீர்வு ‘தமிழர்கள் இந்துக்கள் இல்லை’ எனத் தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வருவதுதான். தமிழர்களை இந்துக்கள் எனப் பொய் புளுகித்தான் மற்ற மாநிலங்களைப் போல் இங்கும் மதக் கலவரங்களைத் தூண்ட பா.ச.க., முயல்கிறது. தமிழர்கள் இந்துக்கள் இல்லை எனும் உண்மையைச் சட்டப்படி அரங்கேற்றி விட்டால் அவர்களின் அடிவேரையே பிடுங்கி எறிந்தது போலாகும். தமிழ்நாடு அரசு இதைச் செய்ய முன் வர வேண்டும். அனைத்து சாதியினரும் பூசாரியாகும் சட்டத்தைத் துணிவுடன் அமல்படுத்திய முதல்வர் தாலின் அவர்கள் இதையும் செய்ய முன்வர வேண்டும். அதற்கு மே பதினேழு போன்ற இயக்கங்கள் அழுத்தம் தர வேண்டும்.