சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வு உள்ளதா? – திருமுருகன் காந்தி

சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வு உள்ளதா? – திருமுருகன் காந்தி

தொண்டை மண்டலத்தின் மழை ஆதாரமான கிழக்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாப்போம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் உள்ள பாலியப்பட்டு கிராம மக்கள் தமிழக அரசின் சிப்காட் திட்டத்திற்கு தங்கள் குடியிருப்பு மற்றும் விவசாய விளை நிலங்களை தர மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொடர் போராட்டம் 09.02.2022 அன்று 50வது நாளை எட்டியதையொட்டி ஆட்சியர் அலுவலகம் முன் தொடர்முழக்க போராட்டத்தை மக்கள் நடத்தினர். அதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கெடுத்து உரையாற்றினார். பாகம் – 2. (பாகம் – 1 வாசிக்க)

தமிழ்நாட்டில் எட்டுவழிச்சாலை போராட்டம் மிகவும் முக்கியமான போராட்டம். தோழர் அபிராமன் (எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்கம்) அவர்கள் இடையறாது இந்த போராட்டத்தில் பங்கேற்கக் கூடியவர். கடந்த ஆண்டு, போராட்ட அமைப்புகளின் மீது ஏவப்பட்ட வழக்குகளை எல்லாம் திரும்பப்பெற வேண்டும் என்று நாங்கள் திருச்சியில் மாநாடு நடத்தினோம். அதில் உணர்ச்சிகரமாக எட்டு வழிச்சாலை போராட்டம் பற்றி தோழர் பதிவு செய்திருந்தார். எட்டுவழிச்சாலை போராட்டம் என்பது ஒரு பகுதிக்கான போராட்டமல்ல. 300 கிலோ மீட்டர் இருக்கக்கூடிய மக்களின் நிலத்தை எடுப்பதை எதிர்த்து நடந்த போராட்டம். சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் பயணம் செய்தால் 5 மணி நேரத்தில் போய் சேர்ந்துவிட முடியும் என்பதற்காக தான் இந்த சாலை அமைப்பதாக கூறுகிறார்கள். அதற்காக அந்த பகுதி மக்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். இதற்கு சென்னையிலிருந்து சேலத்திற்கு ஒரு ரயில் தடம் கூடுதலாக அமைத்து அதிகமாக ரயில் விட்டால் போதுமே.  ஒரு காரில் கூட 4 பேர் தான் போகலாம். ஆனால் ஒரு ரயில் தடம் அமைத்தால் 1600 நபர்கள் வரை போகலாம். ஒரு நாளுக்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் நபர்கள் செல்ல வழி இருக்கிறது எனும் போது அறிவுள்ளவர்கள் அதைத் தானே செய்திருக்க வேண்டும்? ஆனால், கொள்ளையடிக்க வேண்டிய விருப்பம் இருப்பதால் தான் அதை விடுத்து எட்டுவழிச்சாலை அமைக்க முனைந்தார்கள். சாதாரண ரயில் ஐந்து மணி நேரத்தில் சேலம் சென்று சேர்ந்து விடுகிறது. இன்னும் விரைவாக மூன்று மணி நேரத்திலேயே செல்ல வேண்டும் என்றால் அதிகமாக ஒரு அதிவேக ரயிலை விட்டாலே போதும்.

நீங்கள் உங்கள் வாதங்களை கொண்டு வந்து வையுங்கள். நாங்கள் கேள்வி கேட்கிறோம். நீங்கள் சொல்லும் நியாயமாக இருந்தால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், ஒருவரும் இந்த வாதத்திற்கு வர மறுக்கிறார்கள். 200 பேர் சென்று நின்றால் 10 பேரிடம் மட்டும் கருத்து கேட்பது எந்த வகையில் நியாயம்?

மிரட்டும் மாவட்ட ஆட்சியர்
ஸ்டெர்லைட்டில் நடந்தது போன்று நடக்கும் என்று மக்களிடம் கூறியிருக்கிறீர்கள். மாவட்ட ஆட்சியாளர் அவர்களே, ஸ்டெர்லைட்டில் நடந்தது ஒரு பயங்கரவாதம். உங்களைப் போன்ற அதிகாரியால் வழிநடத்தப்பட்ட பயங்கரவாதம். அந்த பயங்கரவாதத்தை சொல்லி மக்களை மிரட்டுகிறீர்கள் என்றால் அது வழக்கு பதிவு செய்யக்கூடிய குற்றம் ஆகும். இன்றுவரை ஸ்டெர்லைட்டில் சுடுவதற்கு உத்தரவு யார் கொடுத்தார்கள் என்பதே தெரியவில்லை. ஏதோ எல்லையிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்தை சுடுவது போல சொந்த மக்களை சுட்ட அயோக்கியத்தனம் அது. லண்டனைச் சேர்ந்த அந்நிறுவனத்தின் பணக்கார முதலாளிக்காக, தூத்துக்குடி மக்களை பலியிட்ட பயங்கரவாதம். அந்த  பயங்கரவாதத்தை கொண்டு வந்து மக்களை மிரட்டிய இந்த ஆட்சியாளர் மீது வழக்கை பதிவு செய்ய வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. மனிதர்களைக் கொல்லக்கூடிய துப்பாக்கி குண்டுகளை போர்களில் தான் பயன்படுத்த வேண்டும், சொந்த மக்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது என்று சர்வதேச விதி இருக்கிறது. ஆனால், இந்தியாவில் மட்டுமே சொந்த மக்களுக்கு எதிராக, வரி கட்டக்கூடிய மக்களை சுட்டுக் கொல்வதற்கு காவல் துறையின் கையிலே இந்த துப்பாக்கி தோட்டாக்களை கொடுக்கிறார்கள் என்று பேசியதற்கு தான் என் மீது தேசத்துரோக வழக்கை பதிவு செய்தனர். ஐ.நாவில் பேசிவிட்டு வந்ததும் வேலூரில் தனிமைச் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார்கள்.இன்றும் என் மீது 48 வழக்குகள் இருக்கிறது. சிறைக் கொடுமையெல்லாம் எங்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால், ஸ்டெர்லைட் படுகொலை அயோக்கியத்தனம் என்று உலகத்திற்கு அம்பலப்படுத்திய பிறகு உலகம் முழுவதும் ஸ்டெர்லைட் குறித்தான விவாதம் நடைபெற்றது. இன்றுவரை, ஸ்டெர்லைட்டை திறக்க முடியவில்லை.

சட்டம் அனைவருக்கும் சமம், மாவட்ட ஆட்சியாளர் அவர்களே! யாரோ சிப்காட்டில் நிறுவனம் நடத்த வேண்டும் என்பதற்காக ஸ்டெர்லைட் போல நடக்கும் என்று சாமானிய மக்களை மிரட்டியதை துணிச்சலாக பத்திரிக்கையில் பேசுங்கள். உங்கள் மீது வழக்கு பாய்வதை பிறகு பாருங்கள். கலெக்டரும் நம்மைப் போன்ற வரி கட்டக்கூடிய அரசியல் சாசனத்திற்கு, சட்டத்திற்கு உட்பட்ட சாமானிய குடிமகன் தான். சட்டம் அனைவருக்கும் சமமென்றால் அது உங்கள் மீதும் பாயும். போராடுகின்ற மக்களைப் பார்த்து இப்படி (ஆட்சியர்) ஒருவர் பேசியது உண்மையென்றால் ஆளுகின்ற திமுக அரசு உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரைப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கி அவர் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.

இந்த மக்கள் யாரும் இல்லாத அனாதைகள் என்று நினைத்து விட்டீர்களா? ஒரு ஆட்சியாளர் அவரது அதிகாரத்தை உணர்ந்து, அதன் எல்லையில் இருந்து பேச வேண்டும். மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தான் ஆட்சியாளர் உள்ளார். அவர் ஒன்றும் காலனிய காலத்தில், வெள்ளையர் காலத்தில் இருந்து வந்த ஆட்சியாளர் அல்ல. குடியரசு காலத்தின் ஆட்சியாளர்.  ஆகவே, ஸ்டெர்லைட் போல துப்பாக்கியால் சுடுவோம் என்று சொல்லி பயமுறுத்துவது, குண்டர் சட்டம் போடுவோம் என்று பயமுறுத்துவதை ஏற்க முடியாது. நானும் குண்டர் சட்டத்தில் சிறைக்கு போயிருக்கிறேன். தேசத்துரோக வழக்கு, உபா வழக்கு என எல்லா வழக்கும்  போட்டிருக்கிறார்கள். எதற்கும் எனக்கு பயம் கிடையாது. நாங்கள் இந்த களத்தின் முன் வரிசையில் நிற்கிறோம். எத்தனை குண்டர் சட்டங்களை போடுவீர்கள்?  இந்த போராட்டத்திற்காக குண்டர் சட்டம் போடுவீர்களென்றால், அது நிற்குமா? குண்டர் சட்டத்தில் இதற்கு இடம் இருக்கிறதா? போராடுகிற மக்கள் மீது குண்டர் சட்டம் போட்டால் எந்த நீதிமன்றத்திலும் நிற்காது. நீங்கள் (ஆட்சியர்) அதிகாரம் கையில் இருப்பதாக நினைத்துக் கொண்டு எளிய மக்களை மிரட்டாதீர்கள்.

48 வழக்கு என் மேல் இருக்கிறது. இன்னும் 40 வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராகவே இருக்கிறேன். ஒரு முறை வழக்கு போட்டால் பயப்படலாம், ஒவ்வொரு முறையும் வழக்கு போட்டால் பயம் வருமா? ஒருமுறை சிறைக்கு சென்றால் பயப்படலாம், ஒவ்வொரு முறையும் சிறைக்கு சென்றால் பயம் வருமா?  அதனால், நீங்கள் போடுகின்ற வழக்குக்கு, குண்டர் சட்டத்திற்கு அச்சப்படுகின்ற மக்கள் இங்கு எவரும் இல்லை. மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுக்கு என்ன சட்டம் இருக்கவேண்டும் என்று தாங்களே கூடி உருவாக்கியது தான் அரசியல் சாசன சட்டம். நமக்கு என்ன தேவையோ அது தான் சட்டமாக இருக்க வேண்டும். அந்த காலத்தில் அரசர்கள் உத்தரவு போட்டால் சட்டம். ஆனால், குடியரசு காலத்தில் குடிமக்கள் போடுவது தான் சட்டம். அது தான் அரசியல் சாசனம்.

நாம் அமைதியான முறையில் ஒன்று கூடி நமது கருத்துக்களை தெரிவிப்பதற்கும், போராடுவதற்கும் அரசியல் சாசனம் நமக்கு முழுமையான அதிகாரத்தையும் உரிமையையும் வழங்கியிருக்கிறது. இந்தியாவின் எந்த அதிகாரிகளுக்கும் இந்த அதிகாரத்தையும் உரிமையும் தடுப்பதற்கு அதிகாரம் இல்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் ஒன்று கூடி போராடுவதற்கு வழி முறைகள் இருப்பதாக இந்திய  அரசியல் சாசனத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கொண்டு வந்த சட்டம் இது. மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை தெரிவிப்பது என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஒரு அரசாங்கத்திடம் மக்களின் கருத்தை எப்படி சொல்ல முடியும்? மக்கள் ஒன்று கூடி 50 நாட்களாக எதிர்ப்பை சொல்லுகிறோம். இந்த அரசாங்கத்திற்கு தான் காதே வளரவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் காதே  இல்லை.ஆனால், ஸ்டெர்லைட் போல சுடுவோம், குண்டாஸ் போடுவோம் என்று சொல்லும் அளவிற்கு வாய் மட்டுமே வளர்ந்திருக்கிறது.

சிப்காட் கொண்டு வரும் அதிகாரிகளே ஒரு “Impact Study” (பாதிப்பு ஆய்வறிக்கை) வெளியிடுங்கள். நிலத்தில் என்ன பாதிப்பு, வாழ்வாதாரத்திற்கு என்ன பிரச்சனை வரும் என்று எல்லாவற்றையும் ஆய்வு செய்து சொல்ல வேண்டுமே தவிர ஸ்டெர்லைட் போல சுடுவோம், குண்டாஸ் போடுவோம் என்றெல்லாம் சொல்லக் கூடாது. சட்ட வழிமுறையை பின்பற்றி மாவட்ட ஆட்சியாளர் மக்களுடைய கருத்துக்களை அவர்களின் பகுதிகளுக்கு சென்று கேட்டு, உடனடியாக இந்தப் பகுதியில் சிப்காட் நடைமுறைப்படுத்துவதை நிறுத்த வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ, அமைச்சர்களோ ஆட்சிக்கு வந்தவுடன் 50 ஆண்டுகளுக்கு தாங்கள் தான் முதலமைச்சர் என்று திரு.எடப்பாடி பழனிச்சாமி கூறியது போல நினைத்திருக்கக்கூடாது. அவர் எப்படி வெளியேற்றப்பட்டாரோ அதே போல் நீங்களும் வெளியே போவதற்குரிய கதவினை திறந்தே தான் வைத்திருப்போம். நான்கு வருடம் கழித்து மறுபடியும் தேர்தல் வரத் தான் போகிறது. மக்கள் ஓட்டு போடத் தான் போகிறார்கள். மக்கள் மீது விழுகின்ற அடியையும், மிரட்டலையும், அடக்குமுறையையும் மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். சிப்காட் எங்களுக்குத் தேவையில்லை என்பதற்குரிய பல ஆதாரங்களை, எடுத்துக்காட்டுகளை, தரவுகளை எங்களால் தரமுடியும். நாங்கள் அறிவுப்பூர்வமான விவாதத்திற்கு தயாராகவே இருக்கிறோம். ஆனால், மிரட்டல் அரசியலுக்கு அடிபணிந்து போக ஒருநாளும் தயாரில்லை.

போராட்டக்களத்தில் பெண்கள்
தமிழர்களே, உங்கள் 50 நாட்கள் வீரியமிக்க போராட்டம் என்பது சாதாரணமல்ல. இந்தப் போராட்டம் வெற்றி பெறும் என்பதற்கு ஒரே சாட்சி பெண்கள் பெருமளவில் திரண்டு இருப்பது தான். எங்கெல்லாம் பெண்கள் போராட்டத்திற்குத் திரள்கிறார்களோ, அந்த போராட்டங்களெல்லாம் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரியில் இது போன்றே துறைமுகம் கொண்டு வரப் போவதாக பேசினார்கள். அந்த பகுதி மக்களோடு பெண்கள் பெருந்திரளாக திரண்டதால் துறைமுகம் வரவில்லை. கூடங்குளத்தில் அணுஉலை கொண்டு வருவதாகச் சொன்னார்கள்.ஒரு நாள், இரு நாள் அல்ல மூன்று வருடம் போராட்ட களத்தில் பெண்கள் பெருந்திரளாக திரண்டு இருந்தார்கள். காலையில் குழந்தைகளுக்கு உணவு கொடுத்து பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு போராட்ட களத்தில் வந்து உட்கார்ந்தார்கள். அங்கு முழக்கம் போடுவது, மக்களிடம் பேசுவது, போராட்டத்தில் வரக்கூடியவர்களிடம் பேசுவது போன்ற செயல்பாடுகளே அவர்களின் வேலையாக இருந்தது. மூன்று ஆண்டு போராட்டத்தின் போதும் இந்த அரசாங்கம் அந்த மக்களிடத்தில் ஒழுங்காக சென்று பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தண்ணீரை நிறுத்திவிடுவோம், பால் போடுவதை நிறுத்திவிடுவோம், மின்சாரத்தை நிறுத்த விடுவோம் என்று மிரட்டினார்கள்.

சுமார், 10 ஆயிரம் காவல்துறையினரை அங்கு கொண்டு போய் நிறுத்தினார்கள். விமானத்தை கொண்டு வந்து கலைக்க முயற்சித்தார்கள். கப்பல் படையை கொண்டு வர முயற்சி செய்தார்கள். அனைத்தும் செய்தும் அந்த மக்கள் அசரவேயில்லை. அந்த மக்கள் மீது ஒரு வழக்கு, இரு வழக்கு அல்ல, 50 ஆயிரம் வழக்குகள் போடப்பட்டது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எல்லாம் ரத்து செய்யுங்கள் என்று கூறிவிட்டது. ஏனென்றால், இவர்கள் போட்ட வழக்கின் தன்மை  நகைச்சுவையானதாக இருந்தது.  இந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிற்காது. அனுமதியின்றி ஒன்று கூடினார்கள் என்று வழக்கு போடுவார்கள். ஆனால் அனுமதி வாங்கி மட்டுமே ஒன்று கூட வேண்டுமென்று அவசியமில்லை. அனுமதியின்றி ஒன்று கூடினாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தான் ஒரு அரசின் பணி. கூடங்குளத்தில் நடந்த போராட்டம் என்பது நமக்கு எல்லாம் ஒரு படிப்பினை.

உலகம் முழுவதும் எப்படிப் போராட வேண்டும் என்று போராட்ட முறையை கூடங்குளத்தில் உள்ள இடிந்தகரை என்னும் கிராமத்துப் பெண்கள் உலகிற்கு கற்றுக் கொடுத்தார்கள். பெண்களை கைது செய்து சிறையில் போட்டார்கள். அந்த மக்கள் அசரவில்லை. துப்பாக்கி சூடு நடத்தியும் அம்மக்கள் கலையவில்லை. உறுதியுடன் போராட்டக்களத்தில் நின்று அரசை அச்சுறுத்தினார்கள். அமைதி வழி தான் அரசு பயப்படும் வழி. நாம் அமைதியாக உட்கார்ந்து விட்டோம் என்றால் அரசாங்கம் பயப்படும். அதைப் போலத் தான் ராஜிவ் கொலை வழக்கில் மூன்று தமிழர்களை தூக்கில் போடுவோம் என்று சொன்னார்கள். மூன்று பெண் வழக்கறிஞர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். செங்கொடி என்கிற இளம்பெண் தீக்குளித்து அந்தப் போராட்டத்தை முன்னகர்த்தினாள். பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் அந்த போராட்டக் களத்திற்கு வந்து நின்றார்கள். பெண்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது.  மூவர் தூக்கு நிறுத்தப்பட்டது மட்டுமல்ல, ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் அளவிற்கு  பெண்களின் போராட்டம் காரணமானது.

அதைப் போலவே மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்திலும் பெண்கள் தான் முன்னணியில் நின்றார்கள். பெண்கள் போராட்டத்தில் இறங்கினார்கள் என்றால் அவ்வளவு சீக்கிரத்தில் பின்வாங்க மாட்டார்கள். ஒரு போராட்டத்தின் கோரிக்கையை பெண்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றால் அது வெற்றி பெறும் வரை அந்த இடத்தில் இருந்து நகர மாட்டார்கள். இது அரசாங்கத்திற்கும் தெரியும். இத்தனை போராட்டங்களிலும் நானும் பங்கெடுத்து இருக்கிறேன். அந்தப் போராட்டங்களில் நானும் அந்த தோழர்களோடு இருந்திருக்கிறேன். இங்கு இருக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களும் இருந்திருக்கிறார்கள். மிக நீண்டகால போராட்ட வரலாறு கொண்டவர்கள் பெண்கள். இந்த சிவப்பு துண்டும், பச்சை துண்டும் ஒன்று சேர்ந்தால் வெற்றி பெறாத கோரிக்கையே கிடையாது. இந்தியாவிலேயே அமைதிப் போராட்டம் நடத்தி வெற்றி பெறலாம் என்று காட்டியது தமிழ் நிலம் தான். அப்படியென்றால் பாலியப்பட்டு மக்களுடைய போராட்டம் மட்டும் எப்படி வெற்றி பெறாமல் போக்கும்? நிச்சயம் வெற்றி பெறும்!

இந்த கிராம மக்களை அதட்டி விரட்டி விடலாம் என்று இந்த அரசு நினைக்கிறது என்றால், தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய போராட்ட சக்திகள் ஒன்று திரண்டு உங்கள் பின்னால் வந்து நிற்போம். நீங்கள் தனியாக இல்லை. பாலியப்பட்டு கிராம மக்களாகிய உங்களுக்குப் பின்னால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வரும். நாங்களும் வருவோம். அவரால் தான் சட்டத்தை கூற முடியும் என்று கலெக்டர் நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் சட்டத்தை கொண்டு வரட்டும். நாம் மக்களைக் கொண்டு வருவோம். யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பிறகு பார்ப்போம். ஆகவே, கட்சியைக் கடந்து, சாதியைக் கடந்து, மதத்தைக் கடந்து  நாமெல்லாம் ஒரு தாய் மக்களாக இந்த பாலியப்பட்டை காப்பதற்காக நிற்கிறோம். நம் சொந்த நலத்திற்காக நிற்கவில்லை. நமது  அடுத்த தலைமுறையினர் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக இந்த போராட்டக்களத்தில் வந்து நின்று கொண்டிருக்கின்றோம். ஆகையால் இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்.

சிப்காட் பாதிப்புகள் ஆய்வு
இந்த சிப்காட் குறித்தான வெளிப்படையான விவாதம் தேவை. சிப்காட்டினால் தமிழ்நாட்டில் எவ்வளவு வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளீர்கள்? எவ்வளவு நிலத்தை பாழ்படுத்தி உள்ளீர்கள்? யார் அதில் லாபம் அடைந்தவர்கள்? போன்றவை குறித்த விவாதம் தேவை. சிப்காட்டை ஆரம்பிக்கிறோம், சிறுகுறு தொழிலுக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்று பேசி வருகிறார்கள். சிறு குறு தொழில்களை வைத்தால் டெல்லியில் இருக்கும் அதிபர் (ஒன்றிய அரசு) வந்து ஜிஎஸ்டி வரியை போட்டு தொழில்களை இழுத்து மூடிவிடுவார். கோயம்புத்தூரில் கிட்டத்தட்ட 50,000 நிறுவனங்களை மூடிவிட்டார்கள். தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க சிப்காட்டை கொண்டு வருகிறோம் என்று சொல்பவர்கள் இங்கிருந்த சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டதை குறித்து  அரசை ஆராய சொல்லட்டும். அவை மூடப்பட்டதற்கான காரணம் ஜிஎஸ்டி என்கின்ற வரி முறையாகும். அந்த வரியை மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசிற்கு முடிந்ததென்றால் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிப்காட்டைக் கொண்டு வந்து வேலை வாய்ப்பு தருவோம் என்று கதை விடாதீர்கள். அப்படியான எந்த ஆதாரமும் இல்லை. இந்த சிப்காட்டில் 12,000 பேருக்கு வேலை தருவோம் என்று பட்டியல் போடுகிறார்கள். ஏற்கனவே, 12000 பேர் இந்த விவசாய விளை நிலத்தில் வேலை செய்கிறார்கள். அவர்களையெல்லாம் இந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு வேறு எங்கிருந்து 12000 பேரை கொண்டு வந்து பணியமர்த்த போகிறீர்கள்? உத்தரபிரதேசத்தில் இருந்தா? அல்லது, ஒரிசா, குஜராத்தில் இருந்ததா?

மேலும், ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். 1972-ம் ஆண்டில் செங்கையில் விதைப் பண்ணை அமைப்பதாக கிட்டத்தட்ட 11,000 ஏக்கர் நிலத்தை எடுத்தார்கள். சுமார், 10,000 பேர் அதில் வேலை பார்த்து வந்த நிலையில் 2002-ல் அதை மூடி விட்டார்கள். இதனால், 10,000 தொழிலாளர்களும் உடனடியாக வேலையிழந்தார்கள். தமிழ்நாடு அரசு அதில் வேறு திட்டங்கள் கொண்டு வரப் போவதாக திட்ட வரையறையை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசு இதுவரை அந்த நிலத்தை மாநில அரசிடம் வழங்கவில்லை. அந்த நிலம் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருப்போமே தவிர தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க மாட்டோம் என்கிறது ஒன்றிய அரசு. பயன்படுத்தாத நிலத்தை ஒன்றிய அரசாங்கம் தர மறுத்திடும்போது, பயன்படுத்திடும் நிலத்தை விவசாயிகள் ஏன் தர வேண்டும்? ஒன்றிய அரசை எதிர்த்துக் கொண்டிருக்கிற, மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிற, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வர மாட்டோம் என்று துணிச்சலாக சொல்லுகின்ற திமுக அரசு, இயன்றால் 11,000 ஏக்கரை கையகப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரட்டும். அதில் அந்த 10,000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கட்டும். அதற்கு நாங்கள் வாழ்த்தி உதவிகள் செய்கிறோம். ஆனால் ஏற்கனவே 10,000 பேருக்கு வாழ்வை வழங்கி கொண்டிருக்கிற 1500 ஏக்கர் விவசாய நிலத்தை, பொன் விளைகின்ற பூமியை, கிழக்கு தொடர்ச்சி மலையின் தாழ்வாரத்தில் இருக்கக்கூடிய இந்த நிலத்தை விவசாயிகளால் தர முடியாது.

கிழக்கு தொடர்ச்சி மலை
ஆகவே தோழர்களே, நீங்கள் சில பொதுவான விஷயத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில்  கிழக்கு தொடர்ச்சி மலை என்பது முக்கியமானது. இங்கே மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி இருக்கிறார். அவர் மூலமாகத் தான் இந்தப் போராட்டம் குறித்து அறிய முடிந்தது. மேலும், கிழக்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலையை விட கிழக்கு தொடர்ச்சி மலை தமிழ் நாட்டிற்கு மிக முக்கியமானது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மழை வருவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது கிழக்கு தொடர்ச்சி மலை தான். தமிழ்நாட்டில் விவசாயம் செழிப்பாக நடக்கக்கூடிய காவிரி டெல்டா, தாமிரபரணி டெல்டாவிற்கு நிகராக தொண்டை மண்டலப் பகுதிகளில் விவசாயம் நடக்கிறது. இங்கு காவிரியோ, தாமிரபரணி ஆறுகள் இல்லை. வற்றாத வண்டல் மண், டெல்டா மண்ணும் இல்லை. இந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய மலைகளிலிருந்து வரக்கூடிய சிற்றோடைகள், ஓடைகள், கிழக்கு தொடர்ச்சி மலைகளால் வரும் மழை போன்றவையே தொண்டை மண்டலப் பகுதிகளில் விவசாயம் நடப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

கடலிலிருந்து வரக்கூடிய மேகங்களை கிழக்கு தொடர்ச்சி மலைகள் தடுத்து அற்புதமான நீர் வளத்தை உருவாக்கிக் கொடுக்கின்றன. வேடியப்பன் மலை, கவுந்தியப்பன் மலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை என்று சொல்லக்கூடிய இந்த மலைத்தொடர்கள் தான் இம்மாவட்டங்களின் வாழ்வாதாரம். இந்த மலையை ஒட்டி முதலில் சாலையை அமைத்து சிப்காட்டை கொண்டு வருவார்கள். பிறகு ஒட்டு மொத்த மலையையும் கொள்ளையடித்து விடுவார்கள். இதனையடுத்து, தமிழ்நாடு மழையில்லாமல் போகும். ஆறு, குளம், ஓடை எதுவும் இல்லாமல் போகும். அதைத் தடுப்பதற்காகத் தான் இங்கு வந்து அமர்ந்திருக்கின்றோம். கிழக்கு தொடர்ச்சி மலை இல்லாமல் போகும் என்றால் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் பிள்ளைகளுக்கு தண்ணீர் இல்லாமல் போகும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம். அதிகாரிகளின் பிள்ளைகள் ஆரோக்கியமான காற்றை சுவாசிக்க முடியாது என்ற கவலையோடு நாம் பேசுகின்றோம். அந்த குழந்தைகள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றே நாம் இங்கு அமர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, ஆட்சியாளர்களிடம் சொல்வது இது தான். நாங்கள் எங்களுக்காக மட்டுமே போராடவில்லை. உங்கள் குழந்தைகளுக்காக சேர்த்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம் என்பதைத் தான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.

இந்த கிழக்கு தொடர்ச்சி மலை, இந்தப் பகுதியின் இயற்கை வளம், இங்கு ஆண்டுதோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விவசாயம் என இவை எல்லாவற்றையும் பாதுகாக்கக்கூடிய ஒரு பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இந்த போராட்டம் வரலாற்று சிறப்புமிக்க போராட்டம். இந்த தமிழ் நிலத்திலே மக்களின் அனுமதி இல்லாமல் நிலத்தை கையகப்படுத்த முடியாது என்பதை இந்த போராட்டத்தின் வழியாக தமிழ்நாடு உணர்ந்திருக்கிறது.

உயிரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், எங்கள் நிலத்தை தரமுடியாது என்று களத்தில் அமர்ந்திருக்கின்ற  மக்களுக்கும் போராட்டத் தலைவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு விடை பெறுகின்றேன்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »