“நாம் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது” – திருமுருகன் காந்தி.

“நாம் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது” – திருமுருகன் காந்தி.

பாலியப்பட்டு விவசாய உற்பத்தி சார்ந்த தொழில் வளர்ச்சியை அமைத்திட வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் உள்ள பாலியப்பட்டு கிராம மக்கள் தமிழக அரசின் சிப்காட் திட்டத்திற்கு தங்கள் குடியிருப்பு மற்றும் விவசாய விளை நிலங்களை தர மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொடர் போராட்டம் 09.02.2022 அன்று 50வது நாளை எட்டியதையொட்டி ஆட்சியர் அலுவலகம் முன் தொடர்முழக்க போராட்டத்தை மக்கள் நடத்தினர். அதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கெடுத்து உரையாற்றினார். (பாகம் – 1)

திருவண்ணாமலையில் இருந்து ஊருக்கு வெளியே மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனை உள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், மருத்துவமனையும் ஊருக்கு நடுவில் வீடுகளை எல்லாம் இடித்துவிட்டு வைப்பீர்களா? ஊருக்குள் வாழ்கின்ற மக்களை தொந்தரவு செய்யக்கூடாது மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்க ஊருக்கு வெளியே வைத்திருக்கிறீர்கள். ஒரு சுகாதார வசதி கொண்டு வர வேண்டும், மாவட்டத்திற்கு தேவையான நிர்வாகத்தைக் கொண்டு வர வேண்டுமென்றால் அந்த மக்களை பாதிக்காத வகையில் தான் கொண்டு வர வேண்டும். அதைப் போலத் தான் சிப்காட் என்கிற தொழில் வளாகத்தை கொண்டு வர விரும்பினாலும் மக்களை பாதிக்காத வகையில் தான் இருக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களை சிப்காட் அமைக்கப்பட்டுள்ளது. நாம் நிறுவனம் துவங்குவதற்கு எதிரானவர்கள் கிடையாது. நீங்கள் நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டாம், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டாம் என்று யாருமே சொல்லவில்லை. வேலை வாய்ப்பை யாருக்காக, யாருடைய லாபத்திற்காக  உருவாக்குகிறீர்கள் என்பது தான் எங்களுடைய கேள்வி. இங்கு கொண்டு வரக்கூடிய  சிப்காட்டினால் எங்களுக்கு லாபமா, முதலாளிகளுக்கு லாபமா என்று கேட்கிறோம். முதலாளிக்கு  தான் லாபம், எங்களுக்கு நட்டம் என்றால் அந்தத் திட்டமே வேண்டாம் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. பாதிக்கப்படக்கூடிய மக்களாக இருக்கக்கூடிய  நாங்கள் கேட்கக்கூடிய  கோரிக்கையை நிறைவேற்றுவது தான் ஒரு அரசாங்கத்தின் வேலை.

சிப்காட் உருவாக்கும் பாதிப்புகள்
கடலூரில் சிப்காட் இருக்கிறது. புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் வழியில் சாலையோரங்களில் நிறைய தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிக அளவிற்கு நிலம், நீர் பாதிக்கப்பட்ட பகுதி என்றால் அது கடலூர் தான்.  தமிழ்நாட்டில் உள்ள மற்ற பகுதிகளைக் காட்டிலும் 120 மடங்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட பகுதி கடலூர். உச்ச நீதிமன்றத்தில் இதற்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதனால் ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டுமென சொல்லியிருக்கிறார்கள். இந்த அரசாங்கம் தொழிற்சாலைகளை கட்டி முடித்த பின்னர், அங்கு இருக்கக்கூடிய மக்களை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்கியனவா என்பதை கண்காணிக்காமல் போனதால் தான் இவ்வளவு பிரச்சினைகளும் நடந்துள்ளது.

அதே போல தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையும் இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக நடக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையினால் மாசு படிந்த காற்றை சுவாசிக்கிறோம், நிலத்தடி நீரும் மாசடைந்துவிட்டது, அதனால் அந்த ஆலையை மூட வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கையாக இருந்தது. குமாரரெட்டியாபுரம் என்கின்ற சின்னஞ்சிறு ஊரில் அந்த மக்கள் போராடுவதற்காக ஒன்று திரண்டார்கள். நீரும், காற்றும் மாசு ஏற்பட்ட பாதிப்பால் அந்த பகுதி பெண்களின் வயிற்றில் கரு தங்கவில்லை. குழந்தைகளுக்கு எந்த வகை புற்றுநோய் உருவாகிறது என்று புரியாமல் கடந்த 25 வருடங்களாக அவதிப்பட்ட பிறகு ஸ்டெர்லைட்டை மூடுவது தான் ஒரே வழி என்று மக்கள் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்கள். அந்தப் போராட்டத்திற்கு மீனவர்கள், வியாபாரிகள், மாணவர்கள், விவசாயிகள் எனப் பலரும் திரண்டு சென்று இழுத்து மூட கோரிக்கை வைக்கிறார்கள்.

அதுபோல், ஈரோடு அருகிலுள்ள பெருந்துறையில் உள்ள சிப்காட் பகுதியில் 10 அடியில் தோன்றும் நிலத்தடி நீரின் நிறம் குளிர்பானம் போன்று மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அங்கு  மேற்புறத்தில் இருக்கும் சிப்காட் வளாகத்தின் சாயப்பட்டறையிலிருந்து நிலத்தில் விடக்கூடிய சாயம் முழுவதும் நிலத்தடியில் கலக்கிறது. அதனால், அங்கிருந்து அரை கிலோமீட்டர் தள்ளி கிணறு தோண்டினாலும் இந்நிறங்களில் தான் தண்ணீர் உள்ளது. இந்த ரசாயனம் கலந்த தண்ணீரை எப்படி குடிக்க முடியும்? இந்த தண்ணீர் அப்படியே சென்று நொய்யல் ஆற்றில் கலக்கிறது. அங்கேயும் இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் செய்தார்கள். அதைப்போல திருநெல்வேலியின் கங்கைகொண்டான் என்ற பகுதியில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுத்து பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பான நிறுவனங்கள் வியாபாரம் செய்கின்றன. அங்கும் மக்கள் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

சென்னை திருப்பெரும்புதூரில் உள்ள சிப்காட் வளாகத்தில் சமீபத்தில் பெண் தொழிலாளர்கள் அனைவரும் வீதிக்கு வந்து அமர்ந்து போராட்டம் நடத்தியதை பார்த்தோம். அங்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நிறுவனத்தின் விடுதியில் சாப்பாடு சரியில்லாமல் சில பெண்கள் மயக்கமடைந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்களின் உடல்நிலை குறித்த விவரம் அறிவிக்காததால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களெல்லாம் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்கிறார்கள். அந்தப் பெண் பிள்ளைகள் குடும்ப வறுமையின் காரணமாக அந்தப் நிறுவன விடுதிகளில் தங்கி வேலை செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கு ஒழுங்கான சாப்பாடு கூட போடாத அந்த நிறுவனத்தை அரசாங்கத்தால் கேள்வி கேட்க முடியவில்லை. இது ஏதோ புதிதாக நடக்கவில்லை. 2008-லிருந்து அந்த நிறுவனத்தில் இதே போன்று தான் ஒழுங்காக உணவு, தண்ணீர், முறையான மருத்துவம் வழங்கப்படுவதில்லை. விடுமுறை சரியாக தரப்படுவதில்லை. வேலைக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. பணி  நிரந்தரம்  செய்யப்படுவதில்லை.

சிப்காட் (SIPCOT), சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) இருக்கும் இடங்களில் எல்லாம் இதே நிலை தான் உள்ளது. இவை இருக்கும் இடங்களிலெல்லாம் மனிதர்களே வாழமுடியாத அளவுக்கு நிலம், நீர், காற்று போன்றவை மாசடைந்திருக்கின்றன. சிப்காட் தொழில் வளாகங்களை பெரும்பாலும் வேலைவாய்ப்பு தருகிறோம் என்று மக்களிடம் நம்பிக்கையளித்தே கொண்டு வருகிறார்கள். இந்த தொழில் வளாகங்களில் வேலை பார்க்கக்கூடிய பணியாளர்களுக்கு எவ்வளவு ஊதியம் கிடைக்கிறது என்று கேட்டுப் பார்த்தால் அவர்கள் கொடுத்த நம்பிக்கையின் உண்மை நிலை புரிந்துவிடும்.

உதாரணமாக, திருப்பெரும்புதூரில் மொபைல் போன், கார் உற்பத்தி ஆலைகள் தொடங்குவதால் வேலைவாய்ப்பு பெருகும் என்று பேசி நிலத்தையெல்லாம் அந்நிறுவனங்களுக்கு வாங்கிக் கொடுத்தார்கள். மக்களும், அந்த நிறுவனங்கள் வந்ததும் அந்த மக்கள் மிகவும் அடிமட்ட வேலைகளை செய்யும் நிலைக்கே தள்ளப்பட்டார்கள். அந்த நிறுவனங்கள் பணிக்குரிய படிப்பும், அனுபவமும் இல்லை என்று கூறி வாட்ச்மேன் வேலை, துப்புரவு வேலை, தோட்ட வேலை போன்றவையே வழங்கினார்கள். அதைத் தவிர 10,12, ஐடிஐ போன்று படித்த இளைஞர்களுக்கு ரூ.7000 என்கிற அளவில் குறைவான ஊதியம் கொடுத்தார்கள். தொழில் வளாகம் அமைவதற்கு முன்பு ரூ.500 இருந்த வீட்டு வாடகை ரூ.5000 உயர்ந்துவிட்டது. அந்த ஊதியத்தைக் கொண்டு எப்படி வாழ முடியும்? வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக  மக்கள் நிலத்தை எடுத்து தனியார் நிறுவனங்களுக்கு அரசு கொடுக்கிறதென்றால், அந்த நிறுவனம் வந்த பிறகு வேலை கிடைத்தவர், கிடைக்காதவர் வாழ்க்கை நிலை  எந்த அளவுக்கு மாறி இருக்கிறது என்று பார்க்க வேண்டியது அரசின் கடமை.

செயலற்ற அரசுத்துறைகள்
ஆனால், அரசின் அடிப்படை பணிகளை எதையுமே அரசுத்துறைகள் செய்வதில்லை. திருப்பெரும்புதூரில் நிறுவனங்கள் வந்தால் கிட்டத்தட்ட 40,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால் அவைகளெல்லாம் நிரந்தரமற்ற வேலைகள். நிரந்தரமற்ற வேலை என்பதனால் அந்த நிறுவனங்கள் எந்த வேலையை கூறினாலும் எதிர்க்க முடியாமல் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு அங்கு பணிபுரியும் பிள்ளைகள் தள்ளப்பட்டுள்ளார்கள். எட்டு மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டுமென்றாலும், தரமற்ற உணவையே தந்தாலும், உணவு உண்பதற்கு போதுமான நேரம் தர மறுத்தாலும் கூட எந்தக் கேள்வியும் இல்லாமல் நமது பிள்ளைகள் பணி செய்ய வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டார்கள். பெண்கள் கர்ப்பமடைந்தாலும் பிரசவத்திற்கு விடுமுறை தர மறுக்கிறார்கள். இவ்வளவு நிர்ப்பந்தங்களுக்கிடையில் தான் அவர்கள் வேலை செய்தாக வேண்டும். இப்படி நிரந்தரமற்ற வேலைகளை தான் சிப்காட் போன்றவை உருவாக்குகின்றன.

ஆகையால், நாம் கேட்பது என்னவென்றால் முதலில் தொழிலாளர் சட்டங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்தும் பணியை அரசு கவனிக்க வேண்டும். அங்கு வேலை செய்பவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்குரிய வழிகளை செய்ய வேண்டும். முறையான ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை மேற்பார்வையிட வேண்டும். நிலம், நீர், காற்று மாசுபாடு அடைத்திருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். இதையெல்லாம் செய்வது தான் அரசாங்கத்தின் வேலை. தொழிலாளர் நலனை பாதுகாப்பதற்கென்று தான் தொழிலாளர் துறை அமைச்சர் இருக்கிறார். நிலம், நீர், காற்று மாசு அடையாமல் இருக்கிறதா என்று பார்ப்பதற்கு தான் அதிகாரிகள் இருக்கிறார்கள். இந்த அமைச்சகம் எல்லாம் ஒழுங்காக வேலை செய்திருந்தால் சிப்காட்டில் வழங்கப்படும் ஊதியம், பணி நேர ஒழுங்குமுறை போன்றவை கிடைத்திருக்கக்கூடும். இவை எதுவும் கடந்த  30 ஆண்டுகளில் நடக்கவில்லை எனும்போது அரசு கூறும் சிப்காட்டை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

நாங்கள் கோபப்பட்டோ, உணர்ச்சிவசப்பட்டோ பேசவில்லை. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும். கடலூரில் நிலத்தடி நீர் மாசுபட்டு இருப்பதற்கு என்ன காரணம்? அதற்குரிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை. அதனால் தான்  நீர் கெட்டுப் போய்விட்டது. இப்படித் தான் அனைத்து இடங்களிலும் சுற்றுச்சூழல் நாசப்படுத்தப்படுகிறது. இதே போல ஒவ்வொரு சிப்காட்டிலும் நடக்கிறது என்றால் அரசு நிர்வாகம் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றுதானே அர்த்தம். நம் நிலங்களை கையகப்படுத்தி தொழில் நிறுவனங்களிடம் கொடுப்பது தான் அரசாங்கத்தின் வேலையா?  தனியார் நிறுவனங்களுக்கு நிலங்கள் வேண்டும் என்றால் அவர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும். அதை விடுத்து அரசே நிலத்தை பிடுங்குவது எந்த வகை நியாயம்? அரசாங்கம் நிலத்தை பிடுங்க முடியாது. நிலங்கள் நமது வாழ்வுரிமை. அதனை எந்த காலத்திலும் விட்டுத்தர முடியாது.

தொழிற்சாலைகளை எல்லாம் இந்த லட்சணத்தில் நடத்திவிட்டு சிப்காட்டை வைத்து வேலை தருவதாகச் சொன்னால், அதை நம்புவதற்கு மக்கள் முட்டாள்கள் இல்லை. வெறும் நான்கு சிப்காட்டுகளைத் தான் கூறியிருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் 28 சிப்காட்டுகளை எடுத்து பட்டியல் போட்டால் இன்னும் எவ்வளவோ பேசலாம். அதனால், அரசுடைய தொழிற்கொள்கை என்பது ஒழுங்காக நிர்வகிக்கப்படாமல் மக்களின் நிலங்களை எல்லாம் பிடுங்கி தனியாருக்கு கொடுப்பதாகவே இருக்கிறது. இதனால் தான் வேண்டாமென்று மறுக்கிறோம்.

யாருக்கான வளர்ச்சி திட்டங்கள்?
சிப்காட்டை கொண்டுவருவதற்கு எங்களுக்கும் விருப்பம் இருக்கிறது. ஆனால் மக்களின் பயன்பாட்டுக்கு இல்லாத இடங்களில், விளை நிலம், நீர்வளம் இல்லாத ஒரு பகுதியில் சிப்காட் கொண்டு வந்தால் யாரும்  மறுப்பு சொல்லப் போவதில்லை. மகிழ்ச்சியாக மக்கள் எல்லோரும் சேர்ந்தே உதவி செய்வார்கள். ஆனால் இரண்டு போகம், மூன்று போகும் விளையக்கூடிய ஒரு நிலத்தில் சிப்காட்டைக் கொண்டு வந்து அங்கு விவசாயக் கூலியாக இருக்கக்கூடியவர்களை அல்லது விவசாயிகளை தொழிற்சாலைகளில் வேலை செய்யக்கூடிய கூலி ஆட்களாக மாற்றுவதற்கான வேலை தான் நடக்கிறது. தங்களுக்கென சில ஏக்கர் நிலம் வைத்திருந்து, அதில் திறமையாக விவசாயம் செய்து, பயிரை விளைவித்து, வெற்றிகரமாக இருக்கக்கூடிய ஒரு விவசாயியை, நீங்கள் கொண்டு வரும் நிறுவனத்தில் சூப்பர்வைசராக மாற்ற முடியுமா? இந்த தொழில் வேறு, அந்தத் தொழில் வேறு. அதனால் தான் சிப்காட்டின் எல்லா நிறுவனங்களிலும் வாட்ச்மேன் வேலை, புல்வெட்டும் வேலை, கண்ணாடி துடைக்கும் வேலை, தரை துடைக்கும் வேலை என்று தருகிறார்கள். கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளை வேலைக்கு சேர்த்துவிட முடியுமா? அந்தப் படிப்பு வேறு, அதற்கான பயிற்சி வேறு, அனுபவம் வேறு. விளை நிலத்தை தொழில் நிலமாக மாற்றுவதை எந்த புத்திசாலியும் செய்யமாட்டார்கள். ஆகவே இந்த விவசாய நிலத்தில் நீங்கள் தொழில் வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டுமென்று விரும்பினால், எந்த விவசாயம் அங்கு நடக்கிறதோ அதற்கு சார்பான தொழில் வளர்ச்சியை கொண்டு வர வேண்டும். அதனை யோசித்து அதற்குரிய தொழிலைக் கொண்டு வருமா, இந்த அரசு?

காவிரி டெல்டா பகுதியில் சென்று பார்த்தோமென்றால் தஞ்சாவூர் பகுதிகளில், கீழத் தஞ்சை பகுதிகளில், மயிலாடுதுறை பகுதியில், திருவாரூர் பகுதியில் மீத்தேன் திட்டம் கொண்டு வரப்படும் போது அங்கிருக்கும் விவசாயிகள் இப்படித்தான் நிலத்தில் ஊன்றி நின்று இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் கொண்டு வரும் தொழில்களில் மக்களுக்கு எந்த லாபமும் கிடையாது. ஆனால், நட்டத்தில் மட்டுமே பங்கு உண்டு. மாசுபட்ட  அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இது தான் நமக்கு நட்டத்தில் கிடைத்த பங்கு. சிப்காட்டில் நிறுவனம் வைத்திருக்கும் முதலாளி அந்த தண்ணீரை குடிக்க மாட்டார். இங்குள்ள மாவட்ட கலெக்டர் குடிக்க மாட்டார். அந்த தண்ணீரை மனிதர்களுக்கு கொடுக்க முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் நம் தலையில் கட்டுகிறார்கள். இப்படியான ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விவசாயிகள் தலையில் கட்டுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இது தான் பாலியப்பட்டு மக்களுடைய நியாயமான, ஜனநாயகமான கோரிக்கை. இதைவிட தெளிவாக வேறு என்ன சொல்ல முடியும்?

காவிரி டெல்டாவில் இந்த பிரச்சனையென்றால், மேற்கு மண்டலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் போடுகிறார்கள். கெயில் குழாய் போடுகிறார்கள். கேரளாவில் கெயில் குழாயை சாலை ஓரத்தில் நிலத்திற்கடியில் அமைத்து இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டுக்கு வந்தவுடன் தலை முளைத்து வெளியே வந்து விளைநிலத்திற்கு மேலே தான் போடுவேன் என்கிறார்கள். ஏனென்றால் தமிழர்கள் தானே இளிச்சவாயர்கள். மேற்கு மண்டலத்தில் இந்த நிலைமையைன்றால், இங்கு சிப்காட்டை கொண்டு வருவதாகப் பேசுகிறார்கள். வடதமிழகத்தில் தொழிற்சாலைகள் வருவதில் அனைவருக்கும் விருப்பம் இருக்கிறது. அதில் மாற்றுக் கருத்து என்றைக்கும் கிடையாது. ஆனால் அந்த தொழிற்சாலைகள் உருவானால் அதில் விவசாயிகளுக்கு என்ன பங்கு என்பதை கேட்க விரும்புகிறோம். விவசாயிகளின் நிலத்தை பிடுங்கிவிட்டு விவசாயிகளை விரட்டிவிட்டு ஒரு தொழிற்சாலை வருகிறது என்றால், அது விவசாயிகளுக்கு எதிரானது. வெள்ளைக்காரனை விரட்டியது போல இந்தக் கொள்ளைக்காரன்களையும் விரட்ட ஒன்றாக நிற்போம்.

(பாகம் – 2 வாசிக்க )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »