தலையங்கம் – ஆகஸ்ட் 8, 2022
நடந்து முடிந்த சனாதிபதி தேர்தல் 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பான எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைவிற்கான முன்னோட்டமாக அமைந்திருந்தது. இத்தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் அனைத்து எதிர்க்கட்சிகளிடத்தில் தென்பட்டன. பாஜகவின் அடையாள அரசியல் எதிர்க்கட்சிகளை மேலும் பல சிக்கல்களுக்குள் தள்ளிவிட்டது. ஒரு பழங்குடி வேட்பாளரை பாஜக நிறுத்துவதை எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கவில்லை. பாஜகவின் திருமதி திரெளபதி முர்முவிற்கு எதிர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு. யஷ்வந்த் சின்கா சில காலத்திற்கு முன்பு வரை பாஜகவின் பிரதான தலைவர்களில் ஒருவராக இருந்தவர். உயர்சாதி சமூகத்தைச் சேர்ந்த சின்ஹாவிற்கு எதிராக பழங்குடி வேட்பாளராக பாஜக அறிவித்த பொழுது எதிர்க்கட்சிகளின் முகாம் நிலைகுலைந்தது.
2014 முதல் பாஜக மேற்கொள்ளும் அடையாள அரசியலை எதிர்கொள்ளும் எவ்வித செயல்யுக்திகளற்று எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் இருந்து வருகிறது. இந்தியாவின் பன்மைத்தன்மையை தனது வேட்பாளர்கள் மூலம் அங்கீகரிப்பதாகவும், காங்கிரஸால் இதுவரை புறக்கணிக்கப்பட்ட சமூகங்களில் இருந்து வேட்பாளர்களை அலங்கரிக்கப்பட்ட பதவிகளுக்கு கொண்டு செல்வதன் வழியாக காங்கிரஸின் உயர்சாதி அரசியலை அம்பலப்படுத்தியது. மோடியின் ஒன்றிய அரசில் 89 செயலாளர்களில் ஒருவர் பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவராகவும், மூவர் பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவராகவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவர்கூட அமர்த்தப்படாத அளவிற்கு உயர்சாதி ஆதிக்கம் மிகுந்த அதிகார வர்க்கத்தை உருவாக்கினார். அமைச்சர்களில் முக்கியமான பதவிகளான வெளியுறவு, பாதுகாப்பு, நிதித்துறைகள் பார்ப்பனர்களுக்கே அளிக்கப்பட்டது. பிற அதிகாரமில்லாத பதவிகளில் பெரும்பான்மையாக பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி பிரதிநிதிகள் அமைச்சர்களானார்கள். குறிப்பாக எந்தெந்த மாநிலங்களில் தேர்தல் வர இருக்கிறதோ, அம்மாநிலத்தின் பெரும்பான்மை சமூகத்தினர் அமைச்சர்களாக்கப்பட்டனர். உத்திரபிரதேச தேர்தலுக்கு முன்பாக அம்மாநிலத்திலிருந்து 7 பேர் அமைச்சர்களானார்கள். அதே போல வரவிருக்கும் குஜராத் தேர்தலையொட்டி 6 பேர் குஜராத்திலிருந்து ஒன்றிய அமைச்சர்களாக்கப் பட்டிருக்கின்றனர்.
அதிகாரம் மிக்க பதவிகளில் தனது சனாதன கோட்பாடுகளின் படி ஆரிய உயர்சாதிகளை நியமிப்பதும், பிற அலங்காரப் பதவிகளில் விளிம்புநிலை புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை அமர்த்தும் யுக்தியை திரு.வாஜ்பாய் காலத்திலிருந்தே பாஜக மேற்கொள்கிறது. இந்த யுக்திகளை எதிர்கொள்ளும் நிலையில் இதுவரை எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாயதது அவர்களுக்கிடையே இருக்கும் இடைவெளியை அம்பலப்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் இந்த சோசியல் எஞ்சினியரிங் எனும் அனைத்து சமூகத்தினரையும் இந்துத்துவ அரசியலின் அங்கமாக மாற்றவும், ஆரிய பார்ப்பன இந்துச் சமூகத்தின் அங்கங்களாகவும், அதிக பிரதிநிதித்துவம், அதிகபட்ச அங்கீகாரம் ஆகியவற்றுடன் குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வினை ஏற்கும் சமூகங்களாக ஆரியரல்லாத சமூகங்களை இணைக்கும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன தந்திரத்தை கையாளும் சூட்சுமம் புரிந்திருந்தால் யஷ்வந்த் சின்ஹா சனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருக்கமாட்டார்.
இவ்வாறான யுக்தியற்ற எதிர்ப்பு சூழலில் களம் இறக்கப்பட்ட முர்மு அவர்களுக்கு எதிர்க்கட்சி கூட்டணியை சார்ந்தவர்கள் பெருமளவில் ஆதரிக்கும் நிலையை பாஜக உருவாக்கியது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பிஜு சனதாதளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளும், பாஜகவினால் கடுமையான சிதைவிற்குள்ளான சிவசேனையும் திருமதி.முர்முவிற்கு ஆதரவளித்தன. கேரளாவிலிருந்து ஒரு ஓட்டு அவருக்கு சென்றது. வட கிழக்கு மாகாணங்களில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஒரு சிலர் கூட திருமதி.முர்முவிற்கு ஆதரவளிக்கும் நிலை ஏற்பட்டது. பெண் வேட்பாளராகவும், பழங்குடி வேட்பாளராகவும் திருமதி.முர்முவை நிறுத்தி வெற்றிகண்டது பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டணி. தென்னிந்தியாவில் இருந்து எவரையும் பிரதான பொறுப்புகளுக்கு கொண்டு செல்லாமல், மக்கள் செல்வாக்கற்ற திரு.ஜெய்சங்கர், திருமதி.நிர்மலா சீதாராமன் போன்ற தமிழக பார்ப்பனர்களை அதிகாரத்தின் உச்சத்தில் வைத்து தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவத்தை கொச்சைப்படுத்துகிறது. இருந்த போதிலும் இது தேசிய அளவில் எதிர்கொள்ளப்படாமல், கேள்வி எழுப்பப்படாமல் இருக்கிறது.
பாஜக தனது அதிகாரத்தை வட இந்திய இந்திபேசும் மாநிலங்களின் வழியே ஈட்டிக்கொள்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் தென்னிந்தியாவை சாராத ஆட்சி அமைத்தது பாஜக. நேரு காலத்திற்கு பின்பாக இம்மாதிரியான பெரும்பான்மையை பாஜக பெற்றிருக்கிறது. தென்னிந்திய மக்களை கணக்கில் எடுக்காமலேயே, அவர்களுக்குரிய முக்கியத்துவத்தை அளிக்காமல் ஆரிய வட இந்திய நலன்களுக்கு ஏற்ப ஆட்சியை அமைத்துகொள்ளும் வலிமையை பாஜக பெற்றிருக்கிறது. தென்னிந்திய திராவிட மக்களுக்கும், இந்திய அளவிலான பட்டியலின-பழங்குடி திராவிட இனமக்களுக்கும் நிகழ்கின்ற அடக்குமுறைகள், புறக்கணிப்புகள் அரசியல் கோரிக்கையாக வலுப்பெறாமல் நேர்கோட்டில் பாஜகவை எதிர்கொள்கிறது வட இந்திய கட்சிகள். இக்கட்சிகள் இந்தி பேசும் மாநிலங்களுக்குள்ளான போட்டியாக இந்திய பாராளுமன்றத் தேர்தலை அணுகுவதால் ஏற்படும் பின்னடைவுகள் பாஜகவை தொடர்ந்து வெற்றிக்கு திரையாக்குகிறது. பாஜக-ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் ஆற்றலாக இயங்கும் பார்ப்பன-பனியா அரசியலை வெளிப்படையாக அம்பலப்படுத்தும் நிலைப்பாடுகள் வட இந்திய எதிர்க்கட்சிகளிடத்திலும், கம்யூனிஸ்டு கட்சிகளிடத்திலும் இல்லாத நிலை இன்றளவும் உள்ளது.
மேலும் பாஜகவினால் பனியாக்கள், பெருமுதலாளிகளிடத்தில் ஏற்படும் நிதிமூலதன குவிப்பு பற்றிய கோட்பாட்டு அரசியலை அனைத்து கட்சிகளுக்குமானதாக எவரும் மாற்றவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக அறிக்கையாக திரு.ராகுல் காந்தி பேசுகிறாரே ஒழிய அதை கோட்பாடாக அறிவிக்க அவர்கள் தயாரில்லை. சாதி சந்தர்ப்பவாத இந்துத்துவ அரசியலை பேசுவதன் மூலம் பாஜகவை தனிமைப்படுத்தலாமென காங்கிரஸ் எண்ணுகிறது. இதனாலேயே தாமும் ஒரு பார்ப்பனர் என்றும், தாமும் இந்து என்றும், இந்து வேறு இந்துத்துவா வேறு என்றும் காங்கிரஸ் பேசுகிறது. மத்திய பிரதேச தேர்தலின் பொழுது ஆர்.எஸ்.எஸ் சாகா பயிற்சிகள் மாநில அரசு அலுவலகங்களில் நடத்தப்படுவது நிறுத்தப்படுமென காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் கமல்நாத் அறிவித்த உடனே கடுமையான எதிர்ப்பை உயர்சாதிகளிடத்தில் எழுந்தது. இதையடுத்து தனது முடிவை மாற்றிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் இயங்க அனுமதிப்பதாக அவர் அறிவித்தே தேர்தலை எதிர்கொண்டார். உத்திரப்பிரதேசத்தில் பார்ப்பனர்கள் யோகி ஆட்சியில் கொல்லப்படுகிறார்கள் என்று அம்மாநில காங்கிரஸ் தலைமை முழங்கியது.
இந்தியா முழுவதும் பாஜக-ஆர்.எஸ்.எஸ். கும்பலினால் நெருக்கடியை சந்திக்கும் திராவிடர் இன மக்கள், பட்டியலின பழங்குடிகள், இசுலாமியர், கிருத்துவர் முக்கியமாக தேசிய இனத்தவர்கள் என்று விரிவான கூட்டணியை, உழைக்கும் மக்களுக்கான விடுதலை எனும் கோட்பாட்டளவில் உருவாக்கும் நிலையை இக்கட்சிகள் கொண்டுவராமல் வலுவான கூட்டணியை 2024 தேர்தலில் எதிர்கட்சிகளால் உருவாக்க இயலாது. பாஜகவின் தனியார்மயம், தாரளமயக்கொள்கையை எதிர்கொள்ளும் வலிமை காங்கிரஸுக்கு இல்லை. இக்கொள்கையின் பிதாமகனான முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன்சிங்கை இன்றும் தனது சிறந்த பிரதமராக முன்னிறுத்தி மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் கேலிக்கூத்தானவை. ஒருவேளை இக்கூட்டணி கோட்பாட்டு ஒற்றுமையை மேற்கொள்ளாமல் வெற்றிபெற்று ஆட்சி அமைக்குமெனில் அது எந்த வகையிலும் பாஜகவின் பொருளாதாரக்கொள்கையை மாற்றி அமைக்கும் வலிமை பெற்றதாக அமையாது. மேலும் பாஜக-ஆர்.எஸ்.எஸ்.சின் மதவெறி அரசியலை எதிர்கொள்ளும் திராணியும் இதற்கு இருக்காது. அப்படியான வெற்றி பாஜகவை மேலும் வலிமையாக்கி ஆட்சிக்கு மீண்டும் கொண்டுவரச் செய்யும்.
இன்றைய அரசியல் சூழல் பற்றிய தெளிவான பார்வை