‘தி கிரே மேன்’ படமும் மெர்சினரிகளும்

நடிகர் தனுஷ் நடிப்பில் க்ரே மேன் (The Gray man) எனும் ஹாலிவுட் திரைப்படம் சமீபத்தில் நெட்ஃப்லிக்ஸில் (Netflix) வெளியாகியிருக்கிறது. அதில் அவர் மெர்சினரியாக (Mercenary) சிறிய கதாப்பத்திரம் ஒன்றை ஏற்று நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாது, அப்படத்தில் கதாநாயகன், வில்லன் என அனைவரும் மெர்சினரிகள். அவர்களுக்கும் அவர்களை ஏவிவிடும் அமெரிக்க அரசின் புலனாய்வு அமைப்பான சிஐஏ விற்கும் (CIA) இடைப்பட்ட மோதல்களே கதைக்களமாகும்.

இந்நிலையில் மெர்சினரிகளைப் பற்றியும் திரைப்படங்களில் மையக் கதாபாத்திரம் மெர்சினரிகளாக இருப்பதில் உள்ள சிக்கல்கள், அதன் பின்னணி அரசியல், அவற்றின் இன்றைய பொருத்தப்பாடுகள் ஆகியவற்றை கவனிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

ஹாலிவுட் திரைப்படங்களில் மெர்சினரி பாணியிலான திரைப்படங்கள் நிறைய வெளிவந்திருக்கின்றன. எடுத்துக்காட்டுகளாக, மிகப் பிரபலமான எக்ஸ்பெண்டபிள்ஸ் (Expendables), ஜானி விக் (Johnny Wick), ராம்போ (Rambo) ஆகிய திரைப்படங்களைச் சொல்லலாம். தமிழிலும் கூட இத்தகைய பாணியிலான சில படங்கள் வெளிவந்திருக்கின்றன. பேராண்மை திரைப்படத்தில் வில்லன்களாக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் மெர்சினரிகளாக இருப்பர். சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஃபகத் பாசில் ஏற்ற கதாபாத்திரம் உள்ளூரில் மட்டும் இயங்கும் ஒரு மெர்சினரிதான். மெர்சினரி வகை திரைப்படங்கள் எடுக்கப்படுவதற்கு அரசியல் பின்னணியும் நோக்கமும் இருக்கின்றன.

மெர்சினரிகள் முன்னாள் குற்றவாளிகளாக, அரசின் (அ) சிஐஏ போன்ற -ஏகாதிபத்திய நாடுகளின் – புலனாய்வுக் குழுக்களின் ஏவலாளிகளாக, அரசுக்குப் பிடிக்காத / பிரச்சனைக்குரியவர்களாக இருப்பவர்களைக் கொலை செய்ய ஏவப்பட்டவர்களாக, எந்த நாடுகளுக்கும் எல்லை வரையறையின்றி சென்று வர இயன்றவர்களாக, அடையாளமில்லாதவர்களாக, பராக்கிரமசாலிகளாக, திறமையானவர்களாக, மிக முக்கியமாக அதிநவீன ஆயுதங்களைக் கையாள திறம் வாய்ந்தவர்களாக திரைப்படங்களில் வலம் வருவார்கள்.

மெர்சினரிகள் யார்?

மெர்சினரிகள் என்பவர்கள் தனியார் ராணுவ ஒப்பந்ததாரர்கள் / நிறுவனங்கள்; கொலை செய்யவோ சதிவேலைகளை செய்யவோ ஒப்பந்தம் செய்யப்பட்டால் அரசியல் நோக்கங்கள் பாராமல் அவற்றைச் செய்பவர்கள். அரசியல் நோக்கத்தில் ஏவிவிடப்படும் இவர்கள் அரசியல் நோக்கமற்றவர்களாகவே இருப்பர். ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலைகளை மட்டும் செய்துவர பணிக்கப்பட்டவர்கள் மெர்சினரிகள். இவர்கள் (பெரும்பாலும்) பிற நாடுகளுக்குச் சென்று ராணுவ பணிகளைச் செய்து முடிக்க ஆயுதப்பயிற்சியுடன் தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் இவையே மெர்சினரிகளின் பணியாக இருக்கிறது. சுறுக்கமாக சொன்னால் மெர்சினரிகள் என்பவர்கள் அரச கூலிப்படைகள்.

ஸ்டான்லி குப்ரிக் (Stanley Kubrick) அவர்கள் இயக்கிய ஃபுல் மெட்டல் ஜாக்கெட் (Full Metal Jacket) திரைப்படம்  வியட்நாம் போரிற்காகத் தயார் செய்யப்படும் மரைன் கார்ப்ஸ் (United States Marines Corps) படையைப் பற்றியதாகும். அதில், பயிற்சி முடிந்து  வியட்நாம் அனுப்பப்பட்ட படை வீரர்கள் வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருக்கும் பொது மக்களின் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்துவதைப் போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அமெரிக்க ராணுவப் பயிற்சியின் குரூரங்களையும், அதனால் ராணுவ வீரர்களுக்கு உண்டாகும் அக சிக்கல்களையும் பேசும் இத்திரைப்படத்தில், காட்டப்பட்டிருப்பதைக் காட்டிலும் பல மடங்கு வெறியாட்டங்களை நிகழ்த்தியிருக்கின்றன அமெரி்க்கப் படைகள்.  வியட்நாம் மண்ணிலும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கப் படைகள் நடத்திய வெறியாட்டங்கள் கணக்கற்றவை. இவை மிகப்பெரிய வரலாற்றுக் கறையை அமெரிக்காவிற்குப் பெற்றுக் கொடுத்தது. ஆகவே, அவர்கள் செய்து முடிக்க முடியாத வேலைகளை செய்து முடிப்பதற்கும், அதே சமயம், தாம் செய்யும் வரம்புமீறல்களுக்கான உலக நாடுகளின் பழியினையும் பொறுப்பையும் ஏற்காமல் இருப்பதற்கும் மெர்சினரிகள் போன்ற தனியார் துணை ராணுவ கூலிப் படைகள் மிகுந்த உதவியாக இருந்தன.

இவர்கள் பெரும்பாலும் அந்நிய மண்ணில் வேலை செய்ய அனுப்பப்படுவதற்கு உளவியல் காரணங்கள் இருக்கின்றன. அந்நிய மண்ணையும் மக்களையும் தனது மண்ணாக, தன்மக்களாகப் பார்த்திட வாய்ப்பில்லாததால், அவர்கள் அம்மண்ணில் சென்று வெறியாட்டங்களை நிகழ்த்த மனத்தடை ஏதும் இருக்காது. அதுவும் குறிப்பாக மேற்குலக நாடுகளிலிருந்து கீழைய நாடுகளுக்கு அனுப்பப்படுவதால் இவர்களிடம் கடுமையான இனவாத போக்கும் இருக்கும்.

உலகப் புகழ்பெற்ற வியட்நாம் சிறுமி புகைப்படம்

இத்தகைய தனியார் துணை ராணுவப்படைகள், போர் பயன்பாட்டிற்காக வரலாறு நெடுகிலும் இருந்திருப்பதாகச் சொல்கிறார் வரலாற்று அறிஞரும் மொழியியலாளருமான நோம் சாம்ஸ்கி (Noam Chomsky). உலகப் போர்க் காலங்களில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் மெர்சினரிகளுக்கு புத்துயிர் கொடுக்க ஆரம்பித்தன. அன்றைய மெர்சினரி படைகள் ஐரோப்பியக் காலனியத்தின் தேவைக்காக உருவாக்கப்பட்டன. காலனிய நாட்டு மக்களை தங்களது வல்லாதிக்க போரில் பயன்படுத்திக் கொண்டன ஐரோப்பிய நாடுகள். இந்தியாவிலிருந்து தனக்குத் தேவையான மெர்சினரிப் படைகளை ஆசியாவின் பிற நாடுகளுக்குக் கொண்டு சென்று போருக்குப் பயன்படுத்தியது இங்கிலாந்து. அன்று, ஒரு நாட்டிலிருந்து படைகளைப் பிற நாடுகளுக்குக் கொண்டு சென்று அந்நாட்டு மக்களைக் கொலை செய்தலே ஏகாதிபத்திய போரினை கொண்டு செல்ல வழிவகையாய் இருந்தது. இவ்வாறு அந்நிய மண்ணில் இறக்கப்பட்டவர்கள் மிகவும் கொடூரமான கொலைகாரர்களாக இருந்தனர் என்கிறார் சாம்ஸ்கி.

காலனிய காலத்தின் மெர்சினரிகள் இன்று தனியார் நிறுவனமாக மாறியிருக்கின்றன. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பெருமளவு இத்தகைய மெர்சினரிகளை அனுப்பியே அழித்தொழிப்புகளைச் செய்தது அமெரிக்கா. அமெரிக்கா, ஈராக்குக்கு அனுப்பிய படைகளில் கிட்டத்தட்ட 50 சதவிகிதமும், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிய படைகளில் 70 சதவிகிதமும் மெர்சினரிகளாக இருந்திருக்கின்றனர். இன்றைய நிலைமையில், அமெரிக்கா இத்தகைய மெரிசினரிகளின் உற்பத்தி இடமாக மாறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மேற்குலக நாடுகள் தங்களது நேரடி நலன்களுக்காக மட்டுமின்றி தனது பிராந்திய நலனைப் பாதுகாக்கவும் கூட தனது ஆதரவு நாடுகளுக்காகப் படைகளை அனுப்புகிறது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ரஷிய-உக்ரைன் போரிலும் கூட உக்ரைன் சார்பாகக் களம் இறக்கப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் மெர்சினரிகளாகவே இருக்கின்றனர். உலகம் முழுவதுமிருந்து இளைஞர்களை இப்போரிற்காக பணியில் அமர்த்தியிருக்கிறது அமெரிக்கத் தனியார் ராணுவ நிறுவனங்கள். இதே போன்று, தனது பிராந்திய நலனைக் காப்பதற்காக, 1980-களில் இலங்கைக்குத் தனது தனியார் படைகளை அனுப்பி தமிழர்களை கொன்றொழித்தது இங்கிலாந்து. இது பற்றி ‘தமிழினப் படுகொலையில் இங்கிலாந்தின் பங்கு’ என்னும் நிமிர் பதிப்பக வெளியீட்டு நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

கீனி மீனீ சர்வீசஸ் (Keenie Meenie Services – KMS)

1984ஆம் ஆண்டு, இலங்கைக்கு ராணுவப் பயிற்சி அளிப்பது எனும் கொள்கை முடிவை எடுத்தது இங்கிலாந்து அரசு. ஆனால் தமிழர்களின் நன்மதிப்பை இழக்க நேரிடும் என்பதால் கீனி மீனி சர்வீசஸ் என்னும் தனியார் ராணுவப்படையை அனுப்பினர். இவர்களைக் கொண்டு ஆயுதப் பயிற்சி, தேடுதல் வேட்டை, வெடிகுண்டுகளைக் கையாளுதல், அமெரிக்கத் தானியங்கி துப்பக்கியான M16-ஐ இயக்கும் பயிற்சி, விமானங்களை இயக்குதல் ஆகியவற்றில் இலங்கை ராணுவத்திற்கான பயிற்சி அளித்தல், கட்டுகுருண்டா காவல்துறையை தொழில்நுட்ப ரீதியில் மெருகேற்றுதல் ஆகிய வேலைத் திட்டங்களைச் செய்து முடித்தது.

அப்படி அனுப்பப்பட்ட கீனி மீனி சர்வீசஸின் ஹெலிகாப்டர் பைலட் பயிற்சியாளர்களில் ஒருவனான டிம் ஸ்மித் (Tim Smith), இலங்கையில் தனது 1986-87 ஆண்டிற்குள்ளான அனுபவத்தை The Reluctant Mercenary எனும் நூலில் எழுதியுள்ளான். அதில் அவன் குறிப்பிடும் மிகக் கொடூரமான சில வரிகள் “விமானம் ஓட்டும் பயிற்சியாளனாக மட்டுமல்லாமல் நேரடியாகக் களத்தில் இறங்கித் தாக்கவும் செய்தேன்…” “ஐந்து மாதத்தில் நான் 152 தமிழர்களை விமானத்திலிருந்து சுட்டு வீழ்த்தியிருக்கிறேன், இன்னும் சொல்வதென்றால் 152 எண்ணிக்கை வரைதான் கணக்கில் வைத்துக்கொண்டேன், அதன் பின் எண்ணுவது சலிப்பைத் தந்தது” எனப் பதிவு செய்கிறான். இப்படி விமானப் பயிற்சியாளர்களாக மட்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டவர்கள் மொத்தம் 35 பேர். மேலும், ஒயின் அருந்தும் கண்ணாடி கிளாசில் கிரெனேடு என்னும் கையெறி குண்டை வைத்து ஹெலிகாப்டரிலிருந்து மக்கள் மீது வீசிக் கொல்லும் கொடூர செயலையும் செய்துள்ளனர். இப்படி ஒவ்வொருவரும் தமிழர்களைக் கொன்று குவித்திருந்தார்களென்றால் சில மாதங்களிலேயே ஐயாயிரத்துக்கும் அதிகமான தமிழர்களை இவ்விமான ஓட்டிகள் மட்டுமே கொன்றிருக்க முடியும்.

இவர்கள் அனைவரும் விமானம் ஓட்ட பயிற்சி அளிப்பதற்காக மட்டுமே கொண்டு செல்லப்பட்டவர்கள். அந்த விமான ஓட்டிகளில் ஒருவராக இருந்த ராபின் ஹார்ஸ்ஃபால் (Robin Horsfall) என்பவர் 1986ல் தனது பணியை ராஜினாமா செய்தவுடன் இவ்வாறு பதிவு செய்கிறார். “நாங்கள் போராளிகளை மட்டுமல்ல மக்களையும் பிடித்துச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தோம், சில நாட்களிலேயே நான் தவறான பக்கம் நின்று சண்டை இடுவது எனக்குத் தெரிந்துவிட்டது. நாஜிக்கள் எப்படி யூதர்களை நடத்தினார்களோ அப்படி ஒரு வன்மத்துடன் தமிழர்கள் அங்கே நடத்தப்பட்டனர்”

பொறுப்பு துறத்தல் / கட்டுக்கடங்காத தன்மை

வல்லாதிக்க அரசுகள், அந்நிய மண்ணில், இது போன்ற கணக்கற்ற படுகொலைகளை செய்தாலும் அவற்றிற்கான பொறுப்புகளை எடுத்துக் கொள்ளாது. “அமெரிக்கா நடத்தும் வல்லாதிக்க போர்களில் ஏதேனும் வெளிச்சத்திற்கு வரும்பட்சத்தில், சிஐஏ தங்களை மீறிச் செயல்பட்டு விட்டதாகக் கூறி நழுவுவார்கள். இவ்வரசுகளின் அட்டூழியங்கள், இனப்படுகொலைகள், போர்க் குற்றங்கள் ஆகியவை குற்ற விமர்சனங்களாக தங்கள் மேல் வராமல் தடுப்பதற்காக மெர்சினரிகளும், அவர்களை இயக்கும் அமெரிக்காவின் சிஐஏ போன்ற, இங்கிலாந்தின் புலனாய்வு துறைகளைப் போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தங்கள் மேல் விழவேண்டிய இனப்படுகொலை, போர்க்குற்ற விமர்சனங்கள் / விசாரணைகள் இந்நிறுவனங்கள் மேல் விழுவதையே வல்லாதிக்க அரசுகள் விரும்புகின்றன. இவை அரசின் பொறுப்பு துறத்தலுக்கான நிறுவனங்கள். இவர்கள் செய்யும் இனப்படுகொலையும் போர்க்குற்றங்களும் கணக்கிற்கொள்ளப்படாமல் (Unaccountable) கரைந்து விடுகின்றன. சிஐஏ எனும் நிறுவனம் அரசின் ஒரு நிர்வாக கிளையைச் சேர்ந்தது. அரசின் நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதை சிஐஏ செய்யும். அதே வேளை அரசின் கைகளைக் கறைபடியாமலும் காப்பாற்றும் என்கிறார் சாம்ஸ்கி.

கீனி மீனி சர்வீசஸை உருவாக்கியவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டேவிட் வால்கர் என்ற ஓய்வு பெற்ற விமானப்படை உயர் தளபதி. இந்நிறுவனம் தாலிபான்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இந்திய அமைதிப் படைகளுக்குப் பின்புலமாக இருந்தது இங்கிலாந்து நாட்டின் சிறப்பு விமானப்படை (SAS) அதிகாரி என்ற தகவல் வெளியானது. இதே அதிகாரியின் தலைமையில் செயல்பட்டவர்கள்தான் 1984ல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் சீக்கியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் பின்னாலிருந்தனர். இத்தகவல் 30 ஆண்டுகள் கழித்து ஜனவரி 14, 2014-ல் வெளியானது. இதையடுத்து லண்டனில் சீக்கியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இவை அனைத்திற்கும் இங்கிலாந்து தரப்பிலிருந்து எவ்வித பொறுப்பேற்றலும் இன்று வரை இல்லை. அவர்களது அதிகாரப்பூர்வ ராணுவப்படை இத்தகைய கொன்றொழித்தலில் ஈடுபடவில்லை என்பதுதான் அவர்களது அதிகபட்ச எதிர்வினை.

மெர்சினரி திரைப்படங்கள் ஏன் ஆபத்தானவை?

மெர்சினரிகளை மையப் பாத்திரமாகக் கொண்டு வெளிவரும் திரைப்படங்கள் ஏன் ஆபத்தானவையாக இருக்கின்றன? அந்த திரைப்படங்களில் வரும் நாயகன் ஒற்றை ஆளாகவோ, ஒரு குழுவாகவோ சென்று பிற நாடுகளில் நடக்கும் அநீதிக்கு முடிவு கட்டுகிறான்; அநியாயக்காரர்களை கொன்றொழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான். அக்கதாப்பத்திரங்கள் மூலம், நம்மைப் போல் சீருடை அணியாத, எளிய மனிதர்களின் தியாகமும், நாட்டிற்கான தேசப்பற்றும் கட்டமைக்கப்படுகின்றன. சிஐஏ போன்ற புலனாய்வுக் குழுக்களின் ஒப்பந்தத்தின் பேரில் ஒரு படையை நகர்த்திச் சென்று பிற நாட்டில் நடக்கும் சதி வேலையை முறியடித்து, தனது படையில் பலரை இழந்து திரும்பும் ஒரு மெர்சினரி, தியாகமே உறுவானவனாக, தேசப்பற்றாளனாக கட்டமைக்கப்படுகிறான். ஆனால் மேலே சொல்லப்பட்ட விடயங்களைப் போல, உன்மையில் அங்கே நிகழ்த்தப்படும் குரூரங்கள் காட்சிப்படுத்தப்படுவதில்லை.

விக்ரம் திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலும், க்ரேமேன் திரைப்படத்தில் தனுஷும் ஏற்று நடித்திருக்கிற கதாபாத்திரங்கள் கட்டற்று செயல்படுகின்றன; அதிகார மீறல்களை செய்கின்றன; கணக்கீடு இல்லாமல் ஆயுதங்களை பயன்படுத்துகின்றன. அநாமதேயமாக (Anonymous) தங்களை வைத்துக் கொள்கின்றன. ஆனால் இவை அனைத்தும் எதிர்மறை கதாபாத்திரமாக (Villain) இருந்து செய்யாமல் கதாநாயகத்தனத்தோடு செய்யப்படுகிறது. ஃபகத் ஃபாசில் ஏற்ற கதாப்பாத்திரம் ஒரு பெண்ணைக் காதலிக்கிறது; அவருக்காக உருகுகிறது. அவ்வேளைகளில் மனிதத்தன்மையான மென்மையான ஆளாக மாறுகிறது. க்ரேமேனில் கதாநாயகன் பாத்திரம் எல்லை வரையறை இன்றி பல நாடுகளுக்கு அநாமதேயமாக சென்று வருகிறது; போகிற போக்கில் கொலைகளை செய்கிறது. ஆனால் அதேவேளை, ஒரு குழந்தையை காக்க கடுமையான சண்டையில் ஈடுபடுகிறது. தனுஷ் ஏற்ற கதாப்பாத்திரம் கூட அக்குழந்தைக்காக இறக்கம் கொள்கிறது. இத்தகைய கதாபாத்திர வடிவமைப்புகள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு நிற்பதில்லை. மக்கள் தங்களோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. மெர்சினரிகள் கெட்டவர்களை(?) மட்டும் அழிக்க கூடிய, நல்லுள்ளம் கொண்ட, நம்மைப் போன்றவர்கள் என பதியவைக்கப்படுகிறது. இவை மிக ஆபத்தானவையான ஒன்று.

வியட்நாம் போரில் அமெரிக்கா நடத்திய போர்க்குற்றங்களை மறைக்க ராம்போ போன்ற பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு அமெரிக்கத் தேசப்பற்று கட்டமைக்கப்பட்டது. ஒவ்வொரு மெர்சினரி திரைப்படங்களுக்கு பின்னணியிலும் வல்லாதிக்க நாடுகளின் மிகப்பெரிய அழித்தொழிப்பும், ஆட்சிக் கவிழ்ப்புகளும், இனப்படுகொலை வரலாறும் இருக்கின்றன. அவற்றை ஒரு கதாநாயக பிம்பம் துடைத்தெறிந்து கைத்தட்டல்களாக மாற்றுகிறது.

முடிவுரை

புரட்சியாளர் லெனின் தனது ‘அரசும் புரட்சியும்’ (The State and Revolution) என்கிற நூலில் “அரசு எனப்படும் சக்தி சமுதாயத்திலிருந்து உதித்தது. ஆனால் சமுதாயத்துக்கு மேலானதாய் தன்னை இருத்திக் கொள்கிறது. இந்த சக்தி பிரதானமாக எவற்றால் ஆனது? சிறைக்கூடங்களையும் இன்ன பிறவற்றையும் தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனி வகைப் படைகளால் ஆனது அது” என்கிறார்.

அரசு, அதிகாரம், ஆயுதங்கள், மக்கள் ஒழுங்கு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. யார் ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் உலக ஒழுங்கை நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள். மூலதனமும் ஆயுத உடைமையும் உலக ஒழுங்கு மற்றும் அரசு அமைப்புகளில் மிகப்பெரிய பங்கு செலுத்துபவை. முதலாளித்துவ சமூகத்தில் தனியார் நிறுவனத்தின் மூலதனம் அரசை உருவாக்கவும் கீழிறக்கவும் பயன்படுகிறது. அதனுடன் ஆயுதமும் சேருமெனில் உலக ஒழுங்கு எத்தகைய திசைப் போக்கையும் நோக்கிச் செல்லும்!

ஒரு அரசின் ராணுவம் அரசிற்கு ஏவலாள்; அடக்குமுறை கருவி. இருப்பினும் ராணுவத்துக்கோ ராணுவ வீரர்களுக்கோ போரை வணிகமாகவும் சந்தை வாய்ப்பாகவும் பார்க்கவேண்டியத் தேவை இருக்காது. ஆனால் தனியார் ராணுவத்திற்கு போரை வணிகமாகவும் சந்தை வாய்ப்பாகவும் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. பணத்தைக் கொண்டு பேராயுதங்களை வாங்கவும் அதனைப் போருக்காகப் பயன்படுத்தவும் முடியுமெனில் போர்கள் கார்பரேட்டுகளின் பணத்தேவைக்காகப் பெருமளவில் உருவாக்கப்படும். வல்லாதிக்க அரசுகளுக்குள் நடக்கும் போரினால் பெருமுதலாளிகள் லாபமடையும் நிலையிலிருந்து போரையே தங்களது லாபத்திற்காகத் துவங்கும் நிலையை நோக்கி அவை நகரும்.

சமீபத்தில் ரஷியா-உக்ரைன் போரைப் பற்றிய ஒரு பேட்டியில் “உக்ரைனில் சந்தை வாய்ப்புகள் தனியார் ராணுவ நிறுவனங்களுக்குச் சாதகமாக இருப்பதாகத் தெரிவித்தார், அமெரிக்கத் தனியார் ராணுவ நிறுவன நிபுணர் ராபர்ட் யங் பெல்டன் (Robert Young Pelton). ரஷியா உக்ரைனுக்கு இடையிலான போர் இன்றுவரை நீடித்து நிலைத்திருக்க பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று போரைச் சந்தை வாய்ப்பாகப் பார்க்கும் இத்தகைய தனியார் நிறுவனங்களும்தான். போர் இந்நிறுவனங்களுக்கான லாபம் கொழிக்கும் இடம்.

மேலே கூறப்பட்டதைப் போல, ராணுவப்பயிற்சி பெற்ற நபர்களை ஆயுதம் ஏந்திய அமைப்பாக தனியார் நிருவனங்கள் ஒருங்கிணைப்பது உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்துத்துவ அடியாட்களைத் தயார் செய்யும் பொருட்டு, மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அக்னிபாத் திட்டத்தைச் செயல் படுத்தியிருக்கிறது. மற்றொருபுறம் ராணுவத் தளவாடங்கள், ஆயுத உற்பத்தி நிறுவனங்கள், துறைமுகங்கள் ஆகியவை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கிறது. இதனுடன் சேர்த்து ஒன்றிய அரசின் அதீத மார்வாடி பனியா விசுவாச போக்கையும் சேர்த்துப் பார்த்தோமெனில் வருங்காலத்தில் நாம் சந்திக்கக் கூடிய மிகப்பெரிய ஆபத்தை உணரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »