தொழிலாளர் சட்டங்கள் எதனையும் மதிக்காமல் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதில் இன்று முன்னணியில் இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய துறை, ஸ்விகி, சோமோட்டோ, ஊபேர் போன்ற உணவு விநியோகிக்கும் நிறுவனங்களே. ஊதியம், பணி நேரம், பணி பாதுகாப்பு போன்ற எதனையும் முறையாக பின்பற்றாத இந்த நிறுவனங்கள், தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையில் அவ்வப்போது விதிகளை மாற்றிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்விகி நிறுவனம் கொண்டுவந்துள்ள விதிமுறைகள், சென்னை தொழிலாளர்களை விரக்தியின் விளிம்பிற்கே தள்ளுயுள்ளது. இதனால் அவர்கள் தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 30, 2020அன்று மே பதினேழு இயக்கம் அறிக்கையில் ஸ்விகி, சோமொட்டோ போன்ற நிறுவனங்களில் உணவு கொண்டு செல்லும் பணியில் இருக்கும் தொழிலாளர்களின் நிலை பற்றியும், அவர்களுக்கான உழைப்பிற்கு ஏற்ற ஊதியம், வேலை நேரம், வேலைப்பளு உள்ளிட்ட பல கோரிக்கைகளை விரிவாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. மேலும், அவற்றை முறைப்படுத்தி சரியான முடிவெடுக்காவிட்டால் அத்தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குளாவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அன்றைய அரசு இவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்ளாததன் விளைவாக இன்று ஸ்விகி நிறுவனம் இவ்வளவு நாள் தங்களுக்காக உழைத்துக் கொட்டிய உழைப்பாளர்களின் ஊதியத்தை குறைப்பதுடன், வேலை நேரத்தையும் அதிகரித்துள்ளதாக அத்தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஊக்கத்தொகை வழங்கப்படுவதும் நிறுத்தப்படுகிறது. இதனால், வாரம் ரூ. 5000 அளவிற்கு வருமானம் பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர். ஆகையால், இத்தொழிலை முழு நேர வேலையாக பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்ற நிலையில், கடந்த செப்டம்பர் 20 முதல் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய விதிகளின் படி, இதுவரை இருந்து விநியோகத்தின் எண்ணிக்கையை பொறுத்து வழங்கப்பட்ட ஊதியம் விநியோகிக்க எண்ணிக்கை அடுக்கு அடிப்படையில் வழங்கப்படும் என்கிறது. அதாவது, ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக 180 முறை விநியோகம் செய்தால் அதிகபட்சம் ரூ. 11,500 ஊதியமாக பெற முடியும். இதற்கு ஒரு நாளைக்கு 26 முறை விநியோகிக்க வேண்டும். அதுவும் 16 மணி நேரம் வேலை பார்த்தால் மட்டுமே. இது சாத்தியமில்லாத ஒன்று என கூறுகின்றனர்.
ஏனைய ஊதிய அடுக்குமுறையில் ரூ.7,000, ரூ.7,500, ரூ.8,500, ரூ.9,750 முறையே 110, 125, 140, 160 என விநியோகங்களை முடித்தால் மட்டுமே பெற முடியும். 179 முறை விநியோகித்தாலும் ரூ.9,750 மட்டுமே பெற முடியும். இதன்மூலம், இதுவரை வாரம் ரூ.12,000 சம்பாதித்தவர்கள், புதிய முறையில் ரூ.7,000 மட்டுமே சம்பாதிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
மேலும், புதிய முறையில் காலை 5:30 மணிக்கு துவங்கி இரவு 11 மணி வரை பணியில் இருக்க வேண்டும். இது அப்பட்டமான உழைப்பு சுரண்டல். அண்ணல் அம்பேத்கர் பெற்றுத் தந்த 8 மணி நேரம் வேலை என்பதை அடியோடு புறக்கணிக்கும் செயலாகும்.
மேலும், பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால் ஒரு நாளைக்கு 200-250 ரூபாய் அதற்காகவே செலவிடும் நிலையில் பெட்ரோலுக்கான அகவிலைப்படி நாளொன்றுக்கு ரூ.24 மட்டுமே வழங்குகிறது. இதுவரை, வாரம் ரூ.3,500 சம்பாதித்தால் ஊக்கத்தொகையாக ரூ.1,500 வழங்கி வந்ததையும் புதிய முறையில் நிறுத்துகிறது.
முக்கியமாக பிரச்சனையாக இருப்பது ஊக்கத் தொகை தொடர்பான மாறுதலே. கொரோனா காலத்திற்கு முன் வரை உணவு விநியோகிக்கும் ஊழியர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை தரப்பட்டு வந்துள்ளது. கொரோனா காலத்தில் இந்த ஊக்கத் தொகை நிறுத்தப்பட்டு ஊரடங்கு முடிந்தவுடன் சேர்த்து தருவதாக வாக்களிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது மட்டுமல்லாமல், இந்த ஊக்கத்தொகை முறையும் கைவிடப்படுவதாக ஸ்விகி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இவ்வூழியர்களுக்கு இது நாள்வரை கொடுக்கப்பட்டுவந்த வார ஊக்கத்தொகையும் நிறுத்தப்பட போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்தே ஊழியர்கள் போராட முடிவெடுத்து தங்கள் சார்பில் ஸ்விகி நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வந்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு சென்ற தொழிலாளிகளிடம் அவர்களின் கோரிக்கைக்கு செவி கொடுக்காமல் “பழைய ஊதிய முறை (Pay Slab) பற்றி பேசாதீர்கள். புதிய முறையில் ஏதேனும் கருத்து தெரிவிக்க விருப்பம் இருந்தால் தெரிவியுங்கள்” என்று கூறும் காணொளி வெளியாகியுள்ளது. மேலும், “இந்த புதிய ஊதிய முறை உங்கள் நன்மைக்காகவே (?)” என்று நிர்வாகத்தின் சார்பில் பேசியவர்கள் கூறவே, ஊழியர்கள் பலரும் “இந்த புதிய முறை எங்கள் நன்மைக்காக என்று தொடர்ச்சியாக கூறுவதை நிறுத்துங்கள். இது உங்கள் நன்மைக்காக மட்டும்தான் உருவாக்கப்பட்டுள்ளது” என்று ஆதங்கத்துடன் பேசுவதும் தெரிகிறது. இது குறித்து ஊழியர் சிலரிடம் கேட்டபோது ‘விருப்பம் இல்லை என்றால் வேலையை விட்டு சென்று விடவும்’ என்று நிர்வாகம் கூறியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இப்பிரச்சனை இன்று சென்னையில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. சென்ற அக்டோபர் 22, 2020 அன்று சம்பளம் கோரிக்கைகளுக்காக டெல்லியில் ஸ்விகி ஊழியர்கள் போராடியுள்ளனர். அவர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக ஸ்விகி நிறுவனம் மிரட்டியதும் செய்திகளில் வெளியாகின.
இதே கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அசாம் மாநிலம் கவுகாத்தி நகரின் ஊழியர்கள் மனு ஒன்றை ஸ்விகி நிறுவனத்திற்கு அனுப்பி இருந்தனர். கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் நவம்பர் 30, 2021 முதல் போராட்டம் தொடங்கும் என்றும் வலியுறுத்தி இருந்தனர்.
கடந்த ஜூலை 21, 2022 முதல் பெங்களூரு மாநகரில் இதே கோரிக்கைக்காக வேலை நிறுத்தங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. குறிப்பாக ‘முகமில்லா நிர்வாகத்துடன் (Faceless Management)’ ஊழியர்கள் போராட வேண்டியுள்ளதாக கூறி வருகின்றனர். குறிப்பாக கொரோனா தோற்றுக்கு பின், நிறுவன அதிகாரிகளை நேரில் சந்திக்க முடியாமலும், ஸ்விகி செயலி மூலம் மட்டுமே உரையாடல் நடப்பதால் தங்கள் கோரிக்கைகள் சரியாக போய் சேர்வதில்லை என்றுகூறியுள்ளனர்.
தற்போது சென்னை மாநகர ஸ்விகி உணவு விநியோக ஊழியர்களும் வேலைநேரம், சம்பளம், ஊக்கத்த தொகை குறித்த கோரிக்கைகளை முன்வைத்து போராடத் தொடங்கியுள்ளனர். சென்னையில் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 22-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது கோரிக்கை, slot booking முறையை மாற்றி ஏற்கனவே உள்ள slab booking முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே. பழைய ஊதிய முறையே தொடர வேண்டும் எனவும், ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்தக்கூடாது என்றும் கோருகின்றனர். சென்னை மட்டுமல்லாமல், இந்திய ஒன்றியத்தின் வடக்கு முனையான ஜம்முவிலும் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தனியார்மயமாக்கல், வேலைவாய்ப்பின்மை, துறை சார்ந்த போட்டி என பலவும் இணைந்து பட்டதாரி இளைஞர்களையும் இந்த கடுமையான உடலுழைப்பு பணிக்கு தள்ளுகிறது. சில இடங்களில் கைக்குழந்தையுடன் பெண்களும், மாற்றுத்திறனாளிகளும் இப்பணியில் ஈடுபவதை பார்க்க முடிகிறது. வருங்கால வாய்ப்பு நிதி, காப்பீடு, பணி நேரம், பணி பாதுகாப்பு என தொழிலாளர் நலன் சட்டங்கள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு, தொழிலாளர்களின் உழைப்பை ஸ்விகி போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் சுரண்டுகின்றனர்.
இதை அனைத்தையும் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல், இத்தகைய விநியோகத்திற்கும் ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு விதித்து தன் பங்கிற்கு தொழிலாளர்களை சுரண்டுகிறது.
உழைப்பே மனிதர்களை மிருகங்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. ஆனால் உழைப்பாளிகள் தனியார் முதலாளிகளின் கண்களில் பணமாவே தெரிக்கின்றனர். முதலாளித்துவம் என்றுமே உழைப்பையோ, உழைப்பின் மதிப்பையோ கண்டுகொண்டதில்லை. இலாபம் என்ற ஒற்றை சொல் மட்டுமே முதலாளித்துவத்தின் அகராதில் இருக்கும் ஒரே சொல் ஆகும். இதை ஸ்விகி நிறுவனம் நிரூபித்துள்ளது. ஆனால் இது தடுக்கப்படவேண்டும்.
தற்போது சென்னை ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை பதிய வைக்க முடிவெடுத்து உள்ளனர். ஸ்விகி செயலியில் ‘log off’ செய்ய அனைத்து ஊழியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் போராட்டம் நடத்த முடிவெடுத்து சென்னை வேப்பேரி காவல் ஆணையரிடம் அனுமதி விண்ணப்பமும் கொடுத்துள்ளனர்.
உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு, ஸ்விகி நிறுவனத்தின் இப்போக்கை கண்டிக்க வேண்டும். மேலும் ஸ்விகி நிறுவனத்தின் ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், சட்டப்படியான விலை நேரம் முதலிய அடிப்படை உரிமைகள் நிலை நிறுத்தப்படவேண்டும். இதுவரை ஸ்விகி முதலான ஆன்லைன் உணவு விநியோக செயலி நிறுவனங்கள் செய்துள்ள உழைப்புச் சுரண்டல்களை கண்டறிந்து அது சார்ந்த ஊழியர்களுக்கு உரிமையான நிலுவைத் தொகையை பெற்றுத்தரவேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சார்பாக ஸ்விகி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டியது அரசின் கடமை. அரசு இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமே தொழிலாளர் நலன்களை காக்க முடியும். இதனால் இத்தொழிலை நம்பியுள்ள எண்ணற்ற சிறு வணிக நிறுவனங்களும், அதன் பயனாளிகளும் பாதிப்பை தவிர்க்க முடியும்.
மே பதினேழு இயக்கத்தின் அறிக்கை: