பெரியார், அம்பேத்கர் கொளுத்திய மனுதர்ம நூல்

தந்தை பெரியார் தென்னாட்டில் மனுதர்மத்தை கொளுத்தினார். அண்ணல் அம்பேத்கர் வடநாட்டில் மனுதர்மத்தை கொளுத்தினார். ஏன் இருவரும் மனுதர்ம நூலை கொளுத்த வேண்டும்? ஈராயிரமாண்டுகளாய் இந்திய துணைக்கண்ட சமூகங்களில் இந்த நூல் உருவாக்கிய தாக்கம் என்ன? மானுடத்தை நேசித்த ஒடுக்கப்பட்ட சமூகங்களின் இரு பெரும் தலைவர்கள் முன்வந்து ஒரு நூலைக் கொளுத்துமளவுக்கு அதில் இருந்த வஞ்சகம் என்னவாக இருக்க முடியும்?

இவ்வளவும் விவாதமாகியிருக்க வேண்டும். ஆனால் தட்டையான வாதங்களால் இந்திய சமூகங்கள் இந்துத்துவவாதிகளால் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு சான்றே, சமீபத்தில் நடந்த நிகழ்வொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள் ஆற்றிய உரைக்கு, பார்ப்பனீய, இந்துத்துவ கும்பல்களால் நிகழ்த்தப்படும் எதிர்வினைகள்.

நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.இராசா அவர்கள் ஒரு மெத்தப் படித்த வழக்கறிஞர். எனவே இந்து என்பதற்கான விளக்கம் நீதிமன்றத்தில் என்னவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது என்பதை பிறர் அறியும் வண்ணம் தனது உரையின் வாயிலாகக் கூறுகிறார். “எவர் ஒருவர் இஸ்லாமியர் இல்லையோ, கிறித்தவர் இல்லையோ, பார்சி இல்லையோ, யூதர் இல்லையோ அவர் இந்துவாகக் கருதப்படுவர்” என்று சட்டம் கூறுவதாக எடுத்துரைத்து, “யார் இந்து? நான் இந்துவாக இருக்க விரும்பவில்லை. என்னை ஏன் இந்துவாக வைத்திருக்கிறாய் என்று கேட்கின்ற உரிமை நமக்கு வர வேண்டும்” என்று கேட்கச் சொல்கிறார்.

நீதிமன்ற தீர்ப்புகள் விவாதமாக வேண்டும், அது குறித்து மக்கள் கேள்விகள் எழுப்ப வேண்டும் என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை. இதைத் தான் ஆ.இராசா அவர்களும் கேட்டிருக்கிறார். இந்துவாக மாற்றப்பட்டதால் தான் வர்ணாசிரமத்தின் நான்கு வர்ணத்திற்கு கீழான நிலையில் சூத்திரர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன் என்றே இந்து சட்டமாக இருந்த மனுதர்மத்தில் கூறப்பட்டிருக்கிறது. மனுதர்மம வரையறுத்த 8-வது அத்தியாயம் 415-வது சுலோகத்தின்படி, சூத்திரன் என்பவர்கள் ஏழு வகைப்படுவார்கள்.

 1. புறங்காட்டி ஓடுபவன்
 2. யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன்
 3. பார்ப்பனன் இடத்தில் பக்தியினால் ஊழியம் செய்கிறவன்
 4. விபச்சாரி மகன்
 5. விலைக்கு வாங்கப்பட்டவன்
 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
 7. தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்

இவையெல்லாம் இந்து மத சட்டமான மனுதர்மம் சூத்திரனாக வரையறுக்கும் நமக்கு அருளிய பட்டங்கள். இதைத் தான் கேள்விக்குட்படுத்தினார் ஆ.இராசா. இந்த மனுதர்மத்தைக் காத்து நிற்கும் சனாதனத்தைத் தான் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.இரவி அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, சனாதனக் கொள்கைப் பரப்பு செயலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அப்படியானவர், தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் மக்கள் நல சட்டங்களுக்கு கையொப்பமிடாமல் காலம் தாழ்த்துகிறார் என்னும் போது ஏற்பட்ட கோபமே ஆ.இராசாவின் இந்த உரைக்கான காரணம்.

மனுதர்மம் சமூக சமத்துவக் கொள்கையின் நேரெதிர் தன்மை கொண்டது. பிறப்பினால் உயர் தன்மையை பார்ப்பனர்களுக்கு வழங்கக்கூடியது. மற்றவர்களுக்கு இழிதன்மையை கற்பிக்கக் கூடியது என்பதை மனுதர்மத்தை படிப்பவர்கள் எவரும் அறிந்து கொள்ளலாம்.

மனுதர்மத்தில் முதலாவது அத்தியாயத்தில் உள்ள சுலோகங்கள் பார்ப்பனர்களின் மேன்மை குறித்து பின்வருமாறு கூறுகிறது.

1:96 – படைப்பு பொருள்களில் உயிருடையவை சிறந்தவை. உயிருள்ளவற்றுள் அறிவுள்ளவை சிறந்தவை. அறிவுள்ளவற்றிலும் மானுடர் சிறந்தவர்கள். மானுடருள் பார்ப்பனர் சிறந்து விளங்குகின்றனர்.

1:99 – உலகப் படைப்புகளில் பார்ப்பனன் உயர்ந்த பிறவியாக பிறந்து பிற உயிர்கள் அனைத்துக்கும் தலைவனாக இருப்பதற்கு அவன் சட்டம் எனும் கருவூலத்தை காப்பவனாக இருப்பதே காரணம்.

1:100 – பிறவியின் மேன்மையினால் படைப்புலகில் காணப்படும் பொருள்கள் அனைத்தையும் தனக்குரிய செல்வமாக பெறுவதற்கு பார்ப்பனன் உரிமை பெற்றிருக்கின்றான்.

மேலும், அரசர்களுக்கும் மேம்பட்டவனாக பார்ப்பனன் இருக்கிறான் என்கிறது மனு.

7:73 – அரசன் காலையில் துயிலெழுந்து மூன்று வேதங்களையும் அறநூல்களையும் ஆய்ந்துணர்த்து பார்ப்பனரை வழங்கி வழிபட்டு அவர் அறிவுரையை பின்பற்றி நடப்பானாக.

கொலை குற்றமே செய்திருந்தாலும் பார்ப்பனனுக்கு தூக்கு தண்டனை கூடாது என்கிறது மனுதர்மம்.

8.379பார்ப்பனன் எத்தகைய ஒழுக்கம் கெட்டவனாக, பிறர் மனை நயப்பவனாக இருந்த போதிலும் அவனைக் கொல்லக்கூடாது; அவனது தலையை முடித்து அவமானப்படுத்துவதோடு நின்று விட வேண்டும்.

11:130 – ஒழுக்கமுடைய ஒரு வைசியனை பார்ப்பனன் பகைமை நோக்கமின்றிக் கொன்றால், ஓராண்டு விரதமோ அல்லது புரோகிதருக்கு ஒரு எருதும், நூறு பசுக்களும் தானமும் செய்ய வேண்டும்.

11:131 – வன்ம எண்ணம் இன்றி சூத்திரனைக் கொன்றால், ஆறு மாதம் பிராயச்சித்தமோ, புரோகிதருக்கு ஒரு எருதுடன் 10 பசுக்களை தானமோ செய்ய வேண்டும்.

இவையெல்லாம் 1837-ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்திற்கு முன்பு வரை பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள். இந்திய சமஸ்தானங்களில் பார்ப்பனருக்கு மரண தண்டனை இல்லை என்ற பாதுகாப்பே நீடித்தது. இந்தச் சலுகை அளிப்பதை பொதுமக்கள் எதிர்த்தபோது அவர்களை சமாதானப்படுத்த திருவாங்கூர் சமஸ்தானத்தின் பார்ப்பனரான திவான், ஒரு சாமர்த்தியமான வழியை கண்டார். பார்ப்பனர்களுக்கு தூக்குத் தண்டனை அளிப்பதை தவிர்ப்பதற்காக தூக்கு தண்டனையை ஒழித்து விட்டார்.

இவ்வாறு பார்ப்பனியத்திற்கு இன்னும் பல சலுகைகளை வழங்குகிறார் மனு. இங்கு கூறப்பட்டவை சிறிதளவே.

இவ்வாறு அரசர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு பார்ப்பனர்கள் தங்களுக்கு சலுகைகளை எழுதிக் கொண்டனர். தனக்கு கீழ்ப் படிநிலையில் இருப்பவர்களாக மனுதர்மத்தில் எழுதி வைத்த சத்திரியர், வைசியர், சூத்திரர்களுக்கு தண்டனைகளையும் சட்டமாக எழுதி அதனை அரசர்களை ஏற்றுக் கொள்ள வைத்தனர் பார்ப்பனர்கள்.

இதில் கொடுமை என்னவென்றால், வட நாடுகளில் இருப்பவர்கள் தான் பார்ப்பனனுக்கு கீழ் நிலையில் உள்ள சத்திரியன், வைசியன், சூத்திரன் பிரிவுகளெல்லாம். தென்னாடுகளில் இருப்பவர்கள் அனைவரையும், அதாவது திராவிடர்களை (தமிழர்களை) சூத்திரர்கள் என்றே குறித்தனர். மனுதர்மத்தின் படி நாமனைவரும் சூத்திரர்களே. ஆனால் இங்கு சத்திரிய வம்சம் என்று வாள் சுழற்றிக் கொண்டிருக்கின்றனர் ஆண்ட சாதிப் பெருமை பேசும் சூத்திரர்கள்.

மனுதர்மத்தின்படி பார்ப்பனர்களால் சூத்திரர்களான நமக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகளாக மனு கூறுவது,

10:122பார்ப்பனன் தன்னிடம் பணி செய்யும் சூத்திரனுக்கு, ‘ தான் உண்டு எஞ்சிய உணவு, உடுக்கை கிழிந்த பழைய உடைகள், தானியங்களை சலித்து எஞ்சியவை, வீட்டு பழைய பாத்திரங்கள் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.

10:121 – சூத்திரன் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் பார்ப்பனருக்கு பணிவிடை செய்து தக்க ஊதியம் பெற இயலாத போது சத்திரியரை சார்ந்து பிழைக்கலாம், அதனாலும் வாழ முடியாத போது செல்வ வளம் உள்ள வணிகனுக்கு பணிகள் செய்து பிழைக்கலாம்.

1:121 – சூத்திரன் அடக்க ஒடுக்கமாக பணி புரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ள கடவுள் விதித்திருக்கிறார்.

3:4 – சூத்திரன் வேதங்களை மனப்பாடம் செய்யும் நோக்கத்தோடு அவற்றை விரும்பி கேட்பானாகின் அவன் காதுகளில் காய்ச்சி உருக்கிய ஈயத்தையும், அரக்கையும் ஊற்ற வேண்டும். அவன் வேதம் ஓதினால் அவனது நாக்கை அறுத்தெறிய வேண்டும். அவன் வேதங்களைக் கற்றறிந்து அவற்றில் புலமை பெற்றால் அவனது உடலை கண்டதுண்டமாக வெட்டி எறிய வேண்டும்.

8:271 – சூத்திரன் பார்ப்பனர்களின் பெயர், சாதி இவற்றைச் சொல்லித்திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.

10:129 – சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக்கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பார்ப்பனருக்குத் துன்பமாய் முடியும்.

இவ்வாறு 12 அத்தியாயங்கள் 2552 ஸ்லோகங்களும் அடங்கிய, மனுதர்ம நூலில், பாதிக்கும் மேற்பட்டவை பார்ப்பனர்களை உயர்த்தியும், மற்ற வர்ணத்தவரை தாழ்த்தியும், குறிப்பாக சூத்திரர்களையும் – பெண்களையும் அடிமைகளாகவும் நிலை நிறுத்துவதையே நீதியாக போதித்திருக்கிறது. இதற்காகவே பெரியார், அம்பேத்கர் மனுதர்ம நூலை கொளுத்தினார்கள்.

இந்த மனுவை எரிக்காமல் அதனைக் காத்து நிற்கும் பார்ப்பனியத்தை எதிர்க்காமல் சுயமரியாதை கொண்டவர்களால் எப்படி இருக்க முடியும்? இதைத் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் எதிர்த்து நின்றார். சனாதனவாதிகள் அளித்த கடும் நெருக்கடியிலும் பணிந்து கொடுக்காமல் அவர் துணிந்து நின்றார். தற்போது ஆ.இராசாவும் துணிந்து நிற்கிறார். முற்போக்காளர்கள் அனைவரும் அவர்களின் கருத்துக்களுடன் இணைந்து நிற்கிறார்கள்.

இப்படி நம்மை இழிவுபடுத்திய மனுதர்மத்தைத் தான் கொளுத்தினார்கள் சமூகநீதிக் காவலர்களான, இரு பெருந்தலைவர்கள் பெரியார், அம்பேத்கர். 1928-ம் ஆண்டு “மனுசாஸ்திரத்தை எரிக்க வேண்டும், ஏன்?” என்ற குடியரசு இதழ் கட்டுரையில்,

“தமிழ்நாட்டில் தற்காலம் தோன்றியிருக்கும் சுயமரியாதைக் கிளர்ச்சியின் பலனாக இந்துமதமென்பதைப் பற்றியும், அதற்கு ஆதாரமாகவும் உள்ள வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் என்பனவற்றைப் பற்றியும், வருணம், தர்மம் என்பனவற்றைப் பற்றியும் மக்களுக்குள் பரபரப்புண்டாகி அவற்றைப் பற்றித் தீவிரமாக ஆராய்ச்சி செய்தலும், அவற்றின் புரட்டுகளை வெளியாக்கி தைரியமாய் கண்டித்தலும், அவற்றால் ஏற்பட்ட கொடுமைகளை ஒழிக்க ஆங்காங்கு தீவிரப் பிரசாரம் செய்தலும், கொடுமைக்கு ஆதரவளிக்கும் ஆதாரங்களைத் தீயிட்டுக் கொளுத்துதலுமான பிரச்சாரங்கள் மும்முரமாய் நடப்பதைக் கண்டு பார்ப்பனர்கள் தங்கள் வாழ்வுக்கே ஆபத்து வந்தெனக் கருதி இவைகளுக்கு விரோதமாக எதிர் பிரசாரம் செய்வதும், பார்ப்பனரல்லாதாரிலேயே சிலரை ஏவிவிட்டு இடையூறு செய்விப்பதும், வேறு மார்க்கத்தில் வாழ முடியாதவர்கள் இவ்வெதிர்ப் பிரசாரத்திற்கு ஆதரவளித்து வாழ்வதுமான காரியங்கள் நடை பெற்று வருவதும் யாவரும் அறிந்த விசயமேயாகும்.”

என்று பெரியார் எழுதுகிறார். இன்றளவும் இதைத் தான் பார்ப்பனர்கள் செய்து வருகிறார்கள். பார்ப்பனல்லாதவர்களை தூண்டி இந்துக்களின் மனம் புண்பட்டு விட்டதாக கூறி கலவரத்தில் ஈடுபட வைக்கின்றனர்

1927-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் நாள் மகாத் (சாவதர்) பொதுக்குளத்தில் தலித்துகள் நீர் அருந்தும் உரிமைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகாத் அமைதி வழி கிளர்ச்சி போராட்டத்தில், அம்பேத்கர் அவர்கள் போராட்டக்காரர்களுடன் மனுதர்மத்தை எரித்தார். “பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சதுர்வர்ணாவை (வர்ணாசிரமம்) நான் நம்பவில்லை, சாதி வேறுபாடுகளை நான் நம்பவில்லை, தீண்டாமை என்பது இந்து மதத்திற்கு ஒரு களங்கம் என்று நான் நம்புகிறேன், அதை முற்றிலுமாக அழிக்க நான் நேர்மையாக முயற்சிப்பேன்” போன்ற பல உறுதிமொழிகளை எடுத்து மனுதர்மம் எரிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில்,

 1. “மனு ஸ்மிருதி தஹான் பூமி” (மனுஸ்மிருதிக்கான தகனம்).
 2. தீண்டாமையை அழியுங்கள்.
 3. பார்ப்பனியத்தை அடக்கம் செய்யுங்கள்.

போன்ற பதாதைகளை வைத்திருந்தனர். “மனுஸ்மிருதியைப் படித்ததன் மூலம் சமூக சமத்துவம் என்ற கருத்தை தொலைதூரத்தில் கூட அது ஆதரிக்கவில்லை என்பது எனக்கு உறுதியானது” என தனது இதழில் எழுதி மனுதர்மம் எரித்ததற்கான நியாயங்களை அண்ணல் அம்பேத்கர் எடுத்துரைத்தார்.

தந்தை பெரியார் அவர்களோ, “நம் மக்களில் அனேகர் எவர் எப்படி செய்தாலென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைத் தேடுவோம் என்று இழிவையும் சகித்துக் கொண்டு உணர்ச்சியில்லா வாழ்க்கையில் ஈடுபட்டிருந்ததால் தான் ஆயிரக்கணக்கான வருடங்களாய் இத்கொடுமைகள் ஒழிய வழியில்லாது இருந்து வந்திருக்கின்றது. இதற்கு முன்னால் பல பெரியவர்கள் தோன்றி சாதிக் கொடுமைகளையும், வித்தியாசங்களையும் ஒழிக்க பாடுபட்ட போதிலும், அவர்களும் மதத்தின் பெயராலும் வேறு சூழ்ச்சிகளாலும் அடக்கி துன்புறுத்தப்பட்டு இருக்கின்றனர். ஒவ்வொருவரும் நமக்கு என்ன? நம் ஜீவனத்துக்கு வழியைப் பார்ப்போம் என்று இழிவுக்கு இடம் கொடுத்து கொண்டு போகும் வரை சமூகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. சாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்கம் ஏற்படாது என்பது திண்ணம்.” என சூத்திரப் பட்டத்தை தாங்கியும் நம்முடைய அலட்சியமான போக்கினைக் கண்டு கொதித்தெழுந்தார்.

இந்த காரணங்களால், பெரியார், அம்பேத்கர் மனுதர்ம நூலை கொளுத்தினர். பெரியார் அம்பேத்கரை பின்பற்றுபவர்கள் இந்து மதம், அதைத் தாங்கும் மனுதர்மம், சனாதனத்தைப் பற்றி மக்கள் விழிப்படையும் வரை கேள்வி எழுப்பிக் கொண்டு தானிருப்பார்கள். இந்த இழிவு நீக்கப்படும் வரை சுயமரியாதைக்காரர்கள் மனுதர்மத்தையும், அதைக் காக்கும் இந்து மதத்தையும் பற்றி விமர்சிப்பதிலிருந்து ஓய மாட்டார்கள்.

தேசிய இனங்களின் அடையாளச் சிதைவு துவங்கும் புள்ளி இந்து என்ற அடையாளத்திலிருந்து தான் துவங்குகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்புகள் விவாதமாக்கப்படாததன் விளைவே இதற்கு காரணம். இந்து என்ற சொல் நம்மிடம் வந்து புகுந்ததன் காரணமாக மனுதர்மம் கட்டமைத்த சனாதனமும் நமது வாழ்க்கை முறையில் நுழைந்துவிட்டது. அதனால் தான் இன்னமும் சாதிப்படிநிலையில் இருந்து அகல முடியாத வண்ணம் சிக்கியிருக்கிறோம்.

ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மேலெழுவதற்கே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த சமூகநீதிக் காவலர்களான பெரியாரும், அம்பேத்கரும் இயற்கை விதிகளுக்கு மாறாக மனித குலத்தை பல்லாண்டுகளாக அடிமைப்படுத்தி சுரண்டிய ஒரு தத்துவமே மனுதர்மம் என்பதை உணர்ந்ததால் உள்ளம் கொதித்து அதனை எரித்தார்கள்.

இந்து என்ற அடையாளத்தை சுமந்து கொண்டு இருப்பதனாலேயே மக்களைப் பிளவுபடுத்தி இன்னமும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் பார்ப்பனியப் புரட்டுக்கு இலக்காகி, மனுதர்மம் வகுத்து வைத்த சூத்திரப் பட்டத்தை ஏற்றுக் கொண்டு, சூத்திர இழிவை ஒழித்து உரிமைகள் பெற உழைத்த தலைவர்களைப் புறந்தள்ளினால், விரைவில் மோடி அரசு அமைக்கப் போகும் இந்து ராச்சியத்தில் மனுதர்மமே சட்டமாக்கப்படும்.

அதனால் “அறியாமை என்னும் முரட்டுக் குதிரைமீது ஏறிக்கொண்டு, கொடுமை எனும் வேல் பிடித்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக பாய்ந்து வருவர்” என அண்ணா அவர்கள், அறியாமையால் அறிவுடையவர் சொல்லும் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்காதவர்களைக் கூறுவது போல, அறியாமை நோய் தாக்கி பார்ப்பனியத்திற்கு வால் பிடித்து தொங்கும் இந்துத்துவ சூத்திர சங்கிகள் திருந்த வேண்டும். அவர்கள் திருந்தும் வரை ஆ.இராசா போன்றவர்களின் மனுதர்ம எதிர்ப்பு ஓயாது.

One thought on “பெரியார், அம்பேத்கர் கொளுத்திய மனுதர்ம நூல்

 1. பெரியாரையும் அம்பேத்கரையும் வசைபாடத் துவங்கிவிட்டது ஆண்ட சாதி அவர்கள் சிலைகளை உடைப்பதை பெருமையாய் எண்ணுகிறது சூத்திர சங்கி கூட்டம்..இவர்கள் இந்த உண்மையை அறிய முற்படவில்லை என்பதை விட காதுகளை மூடிக்கொண்டு இந்து மதத்தை புண்படுத்தி விட்டார்கள் என்று கத்துகின்றனர்.எப்பொழுதும் பார்ப்பனியம் சூழ்ச்சியால் வெற்றியடைந்து கொண்டே இருக்கிறது.நாம் வாழும் நாளில் இந்த கூட்டம் திருந்துவதை பார்க்க முடியுமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »